Thursday, October 11, 2018

பின்னைய நிலைமை

நாளைய (12 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 11:15-26)

பின்னைய நிலைமை

உருவகங்களை, வார்த்தைப் படங்களைக் கையாளுவதில் இயேசுவுக்கு நிகர் அவரே.

நாளைய நற்செய்தி வாசகத்தில் தீய ஆவி செய்யும் செயல் ஒன்றை உருவகமாகத் தருகின்றார் இயேசு: 'ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், 'நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்' எனச் சொல்லும். திரும்பி வந்து அந்த வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் கண்டு, மீண்டும் சென்று தன்னைவிட பொல்லாத வேறு ஆவிகளை அழைத்துவந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னையை நிலைமையை விடக் கேடுள்ளதாகும்.'

இNயுசு பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் பொருள் நிறைந்ததாக உள்ளது. தீய ஆவி முதலில் அந்த நபரை விட்டு ஏன் வெளியேறியது என்பது கொடுக்கப்படவில்லை. தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிகிறது. யூதர்கள் தீய ஆவி வறண்ட பாலைநிலத்தில் இருப்பதாக நம்பினர். இளைப்பாற இடம் கிடைக்காத ஆவி திரும்பியபோது வீடு அழகுபடுத்தப்பட்டிருப்பது அதற்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஆக, வீடு தூய்மை ஆகிவிட்டது. இனி தீமைக்கு அங்கே இடமில்லை. இருந்தாலும், தீய ஆவிக்கு இப்போது வாழ்வா, சாவா என்ற ஒரு நிலை. ஆக, அது வேறொரு அணுகுமுறையைக் கையாளுகின்றது. போய் தன்னைவிட பொல்லாத - தீமையில் முதுகலை, முனைவர் பட்டம் பெற்ற - ஆவிகளைக் கூட்டி வருகிறது. இப்போது அந்த மனிதனின் நிலை என்ன ஆகும்?

அந்த மனிதன் நிலை இன்னும் கேடுள்ளதாக என்ன காரணம்?

அந்த மனிதன் தூய்மை நிலையில் அல்லது தீமையை எதிர்க்கும் நிலையில் இருந்தாலும், தீமைக்கு மேல் தீமை வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்ற தயார்நிலையில் இல்லை. ஆக, தீமைக்கு எதிரான போராட்டம், 'இனி ஒன்றும் நடக்காது' என்ற அடிப்படையில் இருக்கக்கூடாது. மாறாக, 'நடந்தால் அதை நான் எப்படி எதிர்கொள்வேன்?' என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். இது ஒரு நல்ல மேலாண்மை பாடமும்கூட. வீடு அழகாயிருக்கிறது என்று ஓய்ந்துவிடக்கூடாது. மாறாக, அழகான வீட்டிற்குத் தேவையான பாதுகாப்பு அரண் இருக்கிறதா என்றும் கவனிக்க வேண்டும்.

இரண்டாவதாக, தீய ஆவியிடமும் நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். அதாவது, விடாமுயற்சியுடன் கூடிய படைப்பாற்றல். ஒரு கதவு அடைக்கப்பட்டால், மறு கதவு திறக்கும் என்று காத்திருக்காமல், மறு கதவை தானே திறக்க நமக்குக் கற்றுக்கொடுக்கிறது இந்தக் குட்டி தீய ஆவி.

3 comments:

  1. திருந்திவாழ வேண்டுமென நினைக்கும் யாருக்கும் ஒரு சவாலாக இருக்கக்கூடிய விஷயத்தை முன்வைக்கிறது இன்றையப் பதிவு. "! வீடு அழகாயிருக்கிறது என்று ஓய்ந்துவிடக்கூடாது; மாறாக அழகான வீட்டிற்குத் தேவையான பாதுகாப்பு அரண் இருக்கிறதா என்றும் கவனிக்க வேண்டும்"....அழகான சிந்தனை.எந்தக் கதவு அல்லது எந்த ஜன்னல் வழியே நம் அகத்துக்குள் நுழையலாம் எனத் திரிந்தலையும் தீய ஆவிக்காக ...அதன் கூட்டாளிகளுக்காக திடமான உள்ளத்தைத் தீட்டி வைத்திருப்போம் செபம் எனும் ஆயுதத்தால்." சோதனைக்கு உட்படுத்தாதேயும் " என்று கற்றுக்கொடுத்த ஒரே நாளில் " சோதனையை முறியடிக்கும்" வழிமுறைகளையும் சொல்லிக்கொடுக்கும் தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!!! " "உருவகங்களை,வார்த்தைப்படங்களைக் கையாளுவதில் இயேசுவுக்கு நிகர் அவரே" உண்மைதான்.ஆனால் இவற்றை வாசகர்களின் உள்ளத்திற்குப் புரியும்படி எடுத்து வைக்கும் தந்தையும் சிறிதும் சளைத்தவரல்ல. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. "வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை எதிர்கொள்ளும் நிலையில் நாம் இருக்கவேண்டும்"
    என்ற அரிய படிப்பினையை அளித்த
    Yesu வுக்கு நிகர் அவரே..

    ReplyDelete
  3. புரியல Yesu. Good night.

    ReplyDelete