Sunday, October 21, 2018

தனக்குள் சொல்லிக்கொண்டான்

நாளைய (22 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 12:13-21)

தனக்குள் சொல்லிக்கொண்டான்

உளவியலில் 'தன்ஆலோசனை' ('ஆட்டோஸஜஷன்') என்றொரு சொல்லாடல் உண்டு. அதாவது, இது ஒரு நேர்முகமான சொல்லாடல். எடுத்துக்காட்டாக, 'நான் நன்றாக இருக்கிறேன்,' 'நான் அழகாக இருக்கிறேன்,' 'என்னால் இதைச் செய்ய முடியும்' என்று நான் எனக்கு நானே 'தன்ஆலோசனை' கொடுக்கும்போது என்னுள் இவை நேர்முக ஆற்றலை உருவாக்குகின்றன. இதிலிருந்து, 'நம் எண்ணங்கள் நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை' என்பது விளங்குகிறது.

'விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்.
ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதி செய்யும்' (நீமொ 4:23) என்கிறார் நீதிமொழிகள் நூல் ஆசிரியர்.

இப்படி விழிப்பாயிருந்து இதயத்தைக் காவல் செய்ய மறுத்த ஒருவரைத்தான் நாளைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம்.

'செல்வனாயிருந்த ஒருவர்' பற்றி உவமை ஒன்றைச் சொல்கிறார் இயேசு.

அவருடைய நிலம் நன்றாக விளைகிறது. விளைச்சலை சேகரிக்க முடியாத அவர், தன் களஞ்சியங்களை இடித்து விரிவுபடுத்துவதாகவும், தான் மகிழ்ந்திருக்க இதுபோதும் என தனக்குள் சொல்லிக்கொள்கிறார்.

இவர் இப்படிச் சொன்னதில் என்ன தப்பு இருக்கிறது?

இவர் யாரையும் ஏமாற்றவில்லை. இவரின் உழைப்புக்கு ஏற்ற பலனை இவருடைய நிலம் தந்துள்ளது. இவருடைய களஞ்சியத்தை இவர் இடித்துக்கட்ட விளைகின்றார். இதற்காக இவர் யாரையும், யாருடைய உழைப்பையும் சுரண்டவில்லை.

ஆனால் கடவுள், 'இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் போய்விடும்' என்கிறார்.

இது அந்த நபரை அழிப்பதற்காக அல்ல. மாறாக, அவரின் செல்வத்தையும் மிஞ்சியவை உலகில் உள்ளது என்று காட்டவே இயேசு இந்த எடுத்துக்காட்டைச் சொல்கின்றார்.

'எவ்வகை பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது' என்கிறார் இயேசு.

இரண்டு விடயங்கள்: (அ) பேராசை தவிர்க்க வேண்டும், (ஆ) செல்வம் நம் வாழ்வை ஒருபோதும் கூட்டுவதில்லை.

செல்வங்கள் நம் வாழ்வின் வசதிகளைக் கூட்டலாமே தவிர, அவை நம் வாழ்வைக் கூட்டுவதில்லை. செல்வங்கள் தம்மிலே நிலையற்றவை. அவை ஒவ்வொன்றுக்கும் எக்ஸ்பைரி டேட் உண்டு. நிலையற்றவை ஒருபோதும் நிலையானதைத் தர முடியாது.

ஆக, இன்று நமக்கு நாமே பயன்படுத்தும் வார்த்தைகள் குறித்து மிகவும் கவனமாக இருப்போம். மேற்காணும் செல்வந்தன்போல் அதீத நம்பிக்கை கொண்ட வார்த்தைகள் ஆபத்தை மறைப்பனவையாக இருக்கலாம்.

நாளைய முதல் வாசகம் சொல்வதுபோல, நாம் அவரின் கைவேலைப்பாடு என்ற நிலையில் நம் வாழ்வை ஏற்று, அதை வாழத் தொடங்கினால், அவரின் கைகளில் நாம் நிறைவை பெறுவோம். ஏனெனில் அவர் என்றென்றும் நிலைத்திருப்பவர்.

2 comments:

  1. "தன் ஆலோசனை" என ஆரம்பித்து,நீதிமொழிகளின் வரிகள்,செல்வந்தனின் பேராசை பற்றிக்கூறி முடித்து நம் இன்றைய வாழும் வாழ்க்கைக்குத் தேவையானதொன்றைக் குறிப்பிடுகிறார்கள் தந்தை." எவ்வகையான பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள்.மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது." உண்மையே! காலை மலர்ந்து மாலை வாடும் லீலி மலராக, இன்று என்ன,நாளை என்ன என்ற கவலையின்றிப் பறந்து திரியும் சிட்டுக்குருவிகளாக அவரின் கைகளில் நம்மை ஒப்புவித்து நிலை வாழ்வைப்பெறுவோம்.ஏனெனில் அவர் என்றென்றும் நிலைத்திருப்பவர்." வாரத்தின் துவக்க நாள்.நம்பிக்கையின் வார்த்தைகளோடு ஆரம்பிக்கத் துணை செய்யும் தந்தையை இறைவன் தன் இமையாய் நின்று காப்பாராக!

    ReplyDelete
  2. அவரின் கைகளில் நிறைவை பெறும் நேர்முக ஆற்றலை நான் எனக்குள் விதைப்பேனாக...
    Lord please grant me that positive energy to be instilled in me..

    ReplyDelete