Tuesday, October 16, 2018

தாங்க முடியாத சுமைகள்

நாளைய (17 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 11:42-46)

தாங்க முடியாத சுமைகள்

எளிதானதைச் செய்வதா? அல்லது நன்மையானதைச் செய்வதா?

இந்த இரண்டு கேள்விகளை முன்வைத்து நாளைய நற்செய்தி வாசகமும், முதல் வாசகமும் (கலா 5:18-25) சுழல்கின்றன.

ஒரு காரில் செல்கிறோம். டிராஃபிக் சிக்னல் வருகிறது. பச்சை விளக்கு எரிகிறது. நாம் நம் காரை முன்னோக்கி நகர்த்தலாம். ஆனால், நம் கண்முன்னே முதியவர் ஒரு நடந்துவருகிறார். அவர் சாலையை அந்த நேரத்தில் கடப்பது தவறு எனத் தெரியாமல் அவர் நடந்துவருகிறார். நாம் இப்போது பச்சை சிக்னல் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு நம் காரை தொடர்ந்து நகர்த்தினால் நாம் எளிதானதைச் செய்கிறோம். ஆனால், காரை நிறுத்தி, முதியவர் கடக்கும் வரை காத்திருந்து அதன் பின் தொடர்ந்தால் நாம் நன்மையானதைச் செய்கிறோம். இங்கே, நன்மையானதைச் செய்வது கடினம். ஏனெனில், நம் வேகம் குறைக்க வேண்டும். அல்லது காரை முழுவதும் நிறுத்த வேண்டும். நமக்குப் பின்னால் வேகமாக வரும் வாகன ஓட்டிகளின் கோபத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும். நாம் வழிவிட்டுக்கொண்டிருக்கும் நேரம் திரும்பவும் சிகப்பு சிக்னல் விழுந்தால் நாம் இன்னும் சில மணித்துளிகள் காத்திருக்க வேண்டும். ஆனால், இவ்வளவு கடினமானதாக இந்தச் செயல் இருந்தாலும், இறுதியில் அங்கே ஒரு மனித உயிர் காக்கப்படுகிறது என்ற நன்மை நடந்தேறுகிறது.

'பத்தில் ஒரு பங்கு காணிக்கை' என்று எளிமையானதைச் செய்யும் பரிசேயர்கள், 'நீதி மற்றும் கடவுளின் அன்ப' என்னும் நன்மையை விட்டுவிடுகின்றனர்.

'தொழுகைக்கூடங்களில் முதல் இருக்கை, சந்தைகளில் வணக்கம்' என்று எளிமையானதை விரும்பும் பரிசேயர்கள், 'வெளிவேடம் களைந்த உண்iயான வாழ்வு' என்னும் நன்மையைச் செய்ய மறுக்கின்றனர்.

'பயமுறுத்தும், குற்ற உணர்வைத் தூண்டும் மறையுரை விளக்கங்கள்' என்று எளிமையானதை தேர்ந்துகொள்ளும் மறைநூல் அறிஞர்கள், 'கடவுளின் இரக்கம், கருணை' என்னும் நன்மையை போதிக்க மறுக்கின்றனர்.

ஆகையால், இயேசு இவர்களைச் சாடுகின்றார்.

நாளைய முதல் வாசகத்தில், ஊனியல்பு, தூய ஆவி இயல்பு என இரண்டு இயல்புகளைப் பற்றிப் பேசும் பவுலடியார், 'எளிமையான' ஊனியல்பை விடுத்து, 'நன்மையான' தூய ஆவி இயல்பை அணிந்துகொள்ள கலாத்தியரையும், நம்மையும் அழைக்கிறார்.

எளிமையானவை என அவர் முன்வைப்பது, 'பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்.'

நன்மையானவை என அவர் முன்வைப்பது, 'அன்பு, மகிழ்ச்சி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்'


எளிமையானவற்றை நாம் எந்தவொரு வலியும் இன்றி எடுத்துக்கொள்ளலாம். மேலும் இவற்றை எடுத்துக்கொள்ளும் இன்பமும் நமக்கு உண்டு.

ஆனால், நன்மையானதைத் தேர்ந்துகொள்ள ஒருவர் சிலுவையின் மேல் ஏறி தன் ஊனியல்பை இயேசுவோடு சேர்த்து அதில் அறைய வேண்டும். அதாவது, முற்றிலும் துறக்க வேண்டும். இப்படிச் செய்யும் போது நமக்கு வலிக்கும். ஆனால், நீடித்த மகிழ்ச்சி பிறக்கும்.

எளிமையானதா? நன்மையானதா?

தெரிவு நமதே.

2 comments:

  1. நன்மையானதே! நிச்சயமாக!
    Well explained Rev.Yesu.
    Symbolic pic: suits well

    ReplyDelete
  2. நன்மையானதா? ...எளிமையானதா? மயிரிழை வித்தியாசமே இரு வார்த்தைகளுக்கிடையிலும்! நன்மையானவைகளைச் செய்ய எந்த நேரமும் நல்ல நேரம் என அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பேர் நினைக்கலாம்.ஆனால் நம்மில் பலருக்கு நன்மையான விஷயங்களைச் செய்வதென்றால் எந்த நேரமும் நல்ல நேரமல்ல எனும் எண்ண ஓட்டமே விஞ்சி நிற்கும்.காரணம் நமக்கு உகந்தது எதுவோ... நம்மைக் கவர்ந்திழுப்பது எதுவோ அதுவே நமக்கு எளிதான விஷயமாகிப்போகிறது.கடவுளின் அன்பை விடக் காணிக்கை செலுத்துவதை எளிதாக நினைக்கும் பரிசேயர்கள்; இறைவனின் கருணையைவிடகுற்ற உணர்வு மற்றும்பயம் பற்றிய மறையுரைகளைத்தேடும் மறைநூல் அறிஞர்கள்...இவர்களை இயேசு மட்டுமல்ல..தந்தையும் சேர்ந்தே சாடுகிறார்.இவர்களுக்கிடையே நாம் தெரிந்துகொள்ளப்போவது எது? " எளிமையான" ஊனியல்பா இல்லை " நன்மையான" தூய ஆவியின் இயல்பா? தேர்ந்து எடுக்க வேண்டியது நம் பொறுப்பு.சிலுவை நாயகனுக்காக எதையும் துறந்துவிடத் துடிக்கும் ஒருவரால் எளிமையானதும் நாளடைவில் நன்மையானதாகும். நாம் சார்ந்திருக்க வேண்டிய " தெரிவை" த் தெளிவாக்கும் தந்தைக்கு ஒரு 'சல்யூட்!'

    ReplyDelete