Wednesday, October 31, 2018

புனிதர் அனைவர்

புனிதர் அனைவர் பெருவிழா

யார் புனிதர்கள்?

நாம் எல்லாருமே புனிதர்கள், இப்போது வரை. ஆனால் இன்னும் நாம் புனிதர்களாக நம்மை முழுமையாக வெளிப்படுத்தவில்லை - நமக்கு, பிறருக்கு, இந்த உலகத்திற்கு. ஆனால் கடவுளுக்குத் தெரியும் நாம் எந்த சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்று. அவருக்குத் தெரியும் நாம் யாரைப்போல உருப்பெற்றவர்கள் என்று. அவருக்குத் தெரியும். அவருக்குத் தெரியும் நாம் புனிதர்களென்று!

இதோ! கொஞ்சம் கொஞ்சமாக நாம் புனிதர்களாக வளர்கிறோம். நம்மிலிருந்து நாம் வெளியே வருகிறோம். நம்  கூட்டை நாமே கொத்திக் கொத்தி உடைத்துக் கொள்கிறோம். நம்மை நாமே படைத்துக் கொண்டிருக்கிறோம். கடவுளே நம் உள்ளிருந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார். இது எப்படி நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால் நம்மால் மட்டும் தான் அதை உணர முடியும் - கொஞ்சம் கொஞ்சமாக, நம் இயல்பு நிறைவு பெறும் போது!

அப்படியென்றால், யார் புனிதர்?

புனிதர் என்பவர் மனச்சுதந்திரம் பெற்றவர். தன் வாழ்வின் ஆதாரத்தோடு தொடர்பு கொண்டிருப்பவர். தன் மையம் எது என்ன என்பதைக் கண்டுகொண்டவர்.

புனிதருக்குத் தெரியும் தான் எங்கிருந்து வந்தோம் என்பதும் எங்கே செல்கிறோம் என்பதும்! தான் வலுவற்றவன் தான் என்றாலும், தான் படைக்கப்பட்டது நிரந்திரத்திற்கு என்பதை அவருக்குத் தெரியும்!

புனிதர் என்பவர் ஒரு சுதந்திரப் பறவை!

அவர் தன் வேர்களிலிருந்தும், தன் குணாதிசயத்திலிருந்தும், தன் வரையறைகளிலிருந்தும், தன் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர் அல்ல - இவைகளிலிருந்து விடுவிக்கப்பட்டால் தான் அவர் புனிதரா? - புனிதர் என்பவர் இவைகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர் அல்ல. மாறாக, இவைகள் வழியாகவும், இவைகளிலும் சுதந்திரமாகக் கடந்து செல்பவர்.

புனிதர் தன் உள்ளார்ந்த போராட்டங்களை வென்று வெற்றிகரமாக வெளியே வந்தவர்!

புனிதர் எந்த நிலையிலும் தன்னை மட்டும் காத்துக் கொள்ள வேண்டும் என்று நினையாதவர்!

புனிதர் கடவுளை நோக்கி கதறியழத் தெரிந்தவர். சின்னக் குழந்தை போல எல்லாவற்றையும் நம்பத் தெரிந்தவர்.

ஆனால் புனிதர் எதார்த்தமானவர். வாழ்வின் எதார்த்தங்கள் அவருக்குப் பிடிக்கும். வாழ்வின் மாயைகளையும், பதின்பருவத்துக் கனவுகளையும், இலக்குகளையும் அறவே விலக்கியவர். தன்னோடும், தன் அருகில் இருப்பவரோடும் சமாதானம் செய்து கொள்பவர். புனிதர் தன்னிடம் இல்லாததை நினைத்து வருந்துபவர் அல்ல. இருப்பதை வைத்து மகிழ்பவர்.

புனிதருக்கு நடிக்கத் தெரியாது. முகமூடி அணியத் தெரியாது. மற்றவரின் வாழ்வைப் போல தன் வாழ்வை அவர் அமைத்துக் கொள்ள ஒருபோதும் அவர் நினைப்பதில்லை. மற்றவரைப் போல வாழ வேண்டும் என்றும் எண்ணுவதில்லை. தன்னைப் போல இருப்பதே தனக்குப் போதும் என்று உறுதியாக நம்புபவர்.

புனிதருக்கு தன் உண்மை என்ன என்று தெரியும்!

தான் யாரென்று தெரியும்!

காற்று நிரப்பப்பட்ட பலூன் அல்ல அவர். காற்றே இல்லாத பலூனும் அல்ல அவர். ஆற்றலோ, ஆசைகளோ, ஆண்மையோ இல்லாதவர் அல்ல அவர்.

புனிதர் ஒரே கடவுள் இருப்பதாக நம்புபவர். விதியின் மேலும், மற்றொரு உயர்ந்த சக்தி மேலும் அவருக்கு நம்பிக்கை இல்லை. வாழ்வில் நடக்கும் அனைத்தும் கடவுளின் பொம்மலாட்டம் என்பதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, தானே உலகைப் படைத்து அதை பரிசாக தன் கடவுளுக்குப் படைப்பவர் அவர். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், சந்திக்கும் ஒவ்வொரு நபரிலும், சிந்தும் ஒவ்வொரு துளிக் கண்ணீரிலும், வியர்வையிலும் கடவுள் ஒளிந்திருப்பது அவருக்குத் தெரியும்.

புனிதர் பொருட்களையும், உடலையும், உடலின் மணத்தையும், சுகத்தையும், அதன் நிறத்தையும், வழுவழுப்பையும் அன்பு செய்பவர். வாழ்வின் எதார்த்தங்கள் ஒரு இசை போல ஒழுங்கானவை என்றும் அதே நேரத்தில் கடினமானவை என்பதையும் உணர்ந்தவர்.

புனிதர் எல்லாரையும் விட்டு ஒதுங்கி நிற்பவர் அல்ல. சாதாரணமானவர்களோடு சாதாரணமாக நிற்பவர்.

வாழ்வோடு முழுமையாகக் கலந்தவர். தன் உடலின் உணர்வுகளோடு வாழத் தெரிந்தவர்.

ஆனால் அவர் எதையும் மிகைப்படுத்துவதில்லை.

புனிதர் சாந்தமானவர். ஆகையால் தான் இந்த உலகை அவர் உரிமையாக்கிக் கொள்கிறார். அங்கே மகிழ்ச்சியாக அவர் வாழ்கிறார்.

புனிதர் தனக்குத் தானே சிரிக்கத் தெரிந்தவர். தன்னைப் பார்த்தும் சிரிக்கத் தயங்காதவர்.

புனிதர் தன்னால் இயன்றவற்றை முழுமையாகச் செய்பவர் - தன் முழு ஆற்றலோடு செய்பவர். தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பார். இந்த உலகத்தைத் தான் ஒருவர் தான் மாற்ற முடியும் என்றும் மீட்க முடியும் என்றும் அவர் நினைப்பதில்லை. புனிதர் தன்னைக் கடவுளாக எண்ணிக்கொள்வதில்லை.

புனிதர் மனிதர்களை மட்டுமல்ல, மனிதர்கள் அல்லாதவரையும் அன்பு செய்பவர். அவைகளோடு தான் இணைக்கப்பட்டுள்ளதை அறிந்தவர் அவர்.

புனிதர் உண்மையானவர்.

புனிதர் சில நேரங்களில் கடவுளை அறிவதில்லை! அவர்கள் கடவுளை மறந்து விடுவார்கள்! அவர்கள் கடவுளை திட்டுவார்கள்! அவர்கள் கடவுளிடம் சண்டை போடுவார்கள்! ஆனால் அவர்களுக்குத் தெரியும் கடவுள் நம்பிக்கைக்குரியவர் என்று. ஏனெனில் அவரும் ஒரு கடவுளே!

இனிய திருநாள் வாழ்த்துக்கள்!

புனிதர்களாகிய உங்கள் அனைவருக்கும்!

Tuesday, October 30, 2018

நெ ரு க் க ம்

நாளைய (31 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 13:22-30)

நெ ரு க் க ம்

'நான்' என்று நான் என்னைச் சொல்ல வேண்டுமென்றால், அதற்கு 'நீ' என்ற மற்றொரு குழு தேவைப்படுகிறது. இந்த இரண்டும் நேருக்கு நேர் நிற்கும்போது அங்கே பேசுபொருளாக 'அவர்' என்ற மூன்றாம் நபர் வருகிறார். ஆக, 'நான்' நானாக இருப்பதற்கு, 'நீ' மற்றும் 'அவர்' தேவைப்படுகின்றனர். இந்த 'நான்-நீ-அவர்' முக்கோணத்தில் நாம் சிலரோடு அருகிருக்கிறோம், சிலரிடமிருந்து அருகாமையில் இருக்கிறோம். அருகையும், அருகாமையையும் நிர்ணயம் செய்வது 'நெருக்கம்.' 'அறிமுகம்' - இதுதான் நெருக்கத்தின் முதற்படி. ஒருவர் மற்றவரோடு அறிமுகம் கிடைத்தபின் அங்கே வருவது 'அவா' அல்லது 'ஆவல்'. நாம் அறிமுகம் ஆகும் எல்லாரோடும் அல்லது எல்லார்மேலும் நமக்கு 'ஆவல்' வருவதில்லை. சிலரிடம் வரும் அந்த ஆவல், 'இணக்கமாக' மலர்கிறது. 'இணக்கம்' நெருக்கத்திற்கு அருகில் உள்ள வார்த்தை. 'இணக்கத்தில்' ஒருவர் மற்றவரின் சொல், செயல், உணர்வு ஆகியவற்றிற்கு இணங்குகின்றார்.

'அறிமுகம்' - 'ஆவல்' - 'இணக்கம்' - இந்த மூன்றும் வந்தவுடன் மனித உறவுகளில் நெருக்கம் வந்துவிடுகிறது.

ஆனால், இறை-மனித உறவில், 'அறிமுகம்,' 'ஆவல்,' 'இணக்கம்' ஆகிய மூன்றையும் தாண்டி நெருக்கத்திற்கு, மற்றொரு 'நெருக்கம்' தேவைப்படுகிறது என்பதை நாளைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்கிறது.

எப்படி?

'எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்!' என்று தன்னிடம் சொல்பவர்கள் ஆண்டவரிடம், 'நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீர்' என்று தாங்கள் ஆண்டவரோடு கொண்டிருந்த 'அறிமுகம்,' 'ஆவல்,' 'இணக்கம்' ஆகியவற்றை முன்வைக்கின்றனர்.

ஆனால், ஆண்டவரோ, 'இடுக்கமான வாயில் வழியே உங்களையே நெருக்கி நுழையுங்கள்' என 'நெருக்கத்தை' முன்னிறுத்துகின்றார்.

இவ்வாறாக, 'நெ ரு க் க ம்' வளர 'நெருக்கம்' தேவை.

நாம் படிப்பு அல்லது வேலைக்குச் செல்லும்போது சில நேரங்களில் குறிப்பு நபர்கள் அல்லது சிபாரிசு கடிதங்களைக் கொண்டு செல்கிறோம். சில இடங்களில் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பல இடங்களில் இவற்றோடு சேர்த்து நம் செயலும் திறனும் முக்கியமாகக் கருதப்படுகின்றன.

இதையொட்டியே, வெறும் குறிப்பு நபர் அல்லது சிபாரிசு கொண்டு விண்ணகத்தை உரிமையாக்கிக்கொள்ள முடியாது என்கிறார் இயேசு. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, இறைவாக்கினர் வழிவந்தோர் தங்கள் முன்னோரின் நற்செயல்களால், அவர்கள் வழியாக மீட்பை உரிமையாக்கிக்கொள்ளலாம் என்ற 'ஆட்டோமேடிக்' மனநிலையில் இருக்கின்றனர். அதை இயேசு 'மேனுவல் மனநிலைக்கு' மாற்றுகின்றார். சிபாரிசு இல்லாத புறவினத்தார் பந்தியில் அமர, நீங்கள் புறம்பே தள்ளப்படலாம் என எச்சரிக்கின்றார்.

எனக்கும் இறைவனுக்குமான உறவில், அறிமுகம், ஆவல், இணக்கம் தாண்டி என்னால் என் செயல்களால் - ஏனெனில், செயல்கள் செய்யும்போது நம்மை நாமே நெருக்க வேண்டி இருக்கிறது. செயல்கள் இல்லாமல் ஓய்ந்திருக்கும் இடத்தில் நெருக்கம் தேவையில்லை - நெருங்க முடிகிறதா?

Monday, October 29, 2018

அதை ஒருவர் எடுத்து

நாளைய (30 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 13:18-21)

அதை ஒருவர் எடுத்து

'இருநூறு கோடி மக்களுக்கு மேல் இன்னும் நற்செய்தியைக் கேட்கவில்லை.
ஒருமுறைகூட கேட்கவில்லை. நாம் அதை மாற்றுவோம்.'

- இந்த வார்த்தைகளோடு ஒரு இணையதளத்தின் முதல்பக்கம் திறந்தால் நம் எதிர்வினை எப்படி இருக்கும்?

அ. 'ஓ அப்படியா...மாற்ற ஏதாவது செய்யலாமே? நாமும் நற்செய்தி அறிவிக்கலாமே!'

ஆ. 'இது சும்மா வெட்டிவேலை! ஏன்? எல்லா செய்தியும் நற்செய்திதானே! இயேசுவின் செய்திதான் நற்செய்தியா? இருக்கிற நிலையில நம்ம நற்செய்தியை காப்பாத்துறதே பெருசு! இதைப் போய் எப்படி அறிவிப்பது?

இ. இணையதளத்தின் முகப்பைப் பார்த்து, மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு, 'இதை வேறு யாராவது செய்யட்டும். எனக்கு வேறு வேலை இருக்கிறது' என்று அடுத்த இணையதளத்திற்கு கடந்து போவது.

நம் ஒவ்வொருவரின் எதிர்வினை இந்த மூன்று செயல்களுக்குள் அடங்கிவிடும் என நினைக்கிறேன்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சிக்கான உவமைகளாக, 'கடுகு,' மற்றும் 'புளிப்புமாவை' முன்வைக்கிறார். பல நேரங்களில் 'கடுகு' பற்றியும், 'புளிப்புமாவு' பற்றியும், 'இறையாட்சி' பற்றியும் சிந்தித்த எனக்கு இன்றைய நற்செய்தியில் வரும் மற்றொரு சொல்லாடல் கண்ணுக்குப் பட்டது: 'அதை எடுத்து அவர்.'

'ஒருவர் அதை எடுத்து'

'கடுகை எடுத்து அவர்'

'புளிப்புமாவை எடுத்து அவர்'

கடுகு தானாக நிலத்திற்குள் செல்லாது. புளிப்பு மாவு தானாக மாவுக்குள் இறங்காது.

இரண்டிற்கும் ஒரு மனித கை தேவை.

ஆக, மனித ஒருங்கியக்கம் இல்லாமல் இறையாட்சி கடுகு விதையாக விதைக்கப்படுவதும், புளிப்புமாவாக கரைக்கப்படுவதும் இல்லை.

நான் என் மாணவர்களோடு சில நேரங்களில் சிறைப்பணிக்குச் செல்வதுண்டு. சிறைப்பணிக்குச் சென்று திரும்பும்போதெல்லாம், 'இறையரசும் கிடையாது ... எதுவும் கிடையாது ... எல்லாம் நாமாக பேசிக்கொள்கிற ஒரு ரொமான்டிக் வார்த்தைதான் இது' என நினைத்துச் சோர்ந்ததுண்டு.

செய்யாத தவறுக்குத் தண்டனை, செய்யாத தவறை செய்ததாக ஒத்துக்கொள்ள அடி, தவறு செய்தவரை தப்புவிக்க மாற்றுக் கைதி, 100 ரூபாய் திருடினால் சிறை 1000 கோடி திருடினால் அரசு மரியாதை என பார்ப்பது, கேட்பது அனைத்தும் இறையரசு இருப்பதற்கான அறிகுறியை இல்லாமல் செய்துவிடுகிறது.

இந்தப் பின்புலத்தில், கடுகு, கொத்தமல்லி, உளுந்தம் பருப்பு, மாவு, எனச் சொல்லிக்கொண்டிருப்பது சரியா?

இந்தக் கேள்விக்கு விடை மேலே நாம் காணும் மனித கையின் தேவையில்தான் இருக்கிறது.

இறையாட்சி என்னும் கடுகுவிதையை நான் கையில் எடுக்கின்றேனா?

கடுகைக் கையில் எடுக்க மிகவும் கவனம் தேவை. அது என் விரல் இடுக்குகளுக்குள் ஓடிவிடலாம்.

புளிப்பு மாவைக் கையில் எடுத்து என் கையை நான் அழுக்காக்க வேண்டும். அதையும் நான் சரியாகக் கையாளாவிட்டால் அது என் விரல் இடுக்குகளுக்குள் பாய்ந்து சிந்தி விடும்.

இவ்வளவு மென்மையான இறையாட்சியை நான் முதலில் கவனமுடன் கைதாங்க வேண்டும். பின் இன்னும் கவனத்துடன் அடுத்தவரின் கரத்திற்கு மாற்ற வேண்டும். இதைச் செய்யாமல் வெறும் கேள்விகள் எழுப்புவது சார்பன்று.

ஆக, இன்று இறையாட்சி என்னும் கடுகை, மாவை நான் கைதாங்கி தூக்குகின்றேனா?

இதுவே என் கேள்வியாகவும், தேடலாகவும் இருக்கட்டும்.

Sunday, October 28, 2018

ஆபிரகாமின் மகள்

நாளைய (29 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 13:10-17)

ஆபிரகாமின் மகள்

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பதினெட்டு ஆண்டுகளாய் தீய ஆவி பிடித்திருந்த ஒரு பெண்ணுக்கு குணம் தருகின்றார்.

இயேசுவின் சமகாலத்து யூதர்களுக்கு மூன்று விடயங்கள் இங்கே இடறலாக இருக்கின்றன:

அ. ஓய்வுநாளில் இயேசு நலம் தந்தது

ஆ. ஓய்வுநாளில் பெண்ணுக்கு நலம் தந்தது

இ. அப்பெண்ணை 'ஆபிரகாமின் மகள்' என அழைத்தது

இயேசுவின் சமகாலத்து யூதர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதில் மிகவும் ஓயாமல் இருந்தனர். 'நலம் தருவது' ஓய்வுநாளில் செய்யக்கூடாது ஒரு செயலாக இருந்தது. மேலும், அவசரத்திற்காக ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதாக இருந்தாலும், அதை ஒரு பெண்ணுக்காக மீறுவது இன்னும் இடறலாகக் கருதப்பட்டது. '18 ஆண்டுகள் பொறுத்துக்கொண்டாள். இன்னும் ஒரு நாள் பொறுக்க மாட்டாளா?' என்பதுதான் மற்றவர்களின் கேள்வியாக இருக்கிறது.

ஆனால், இயேசு அவர்களின் வெளிவேடத்தைக் கடிந்துகொள்கின்றார். மாடு, கழுதை போன்றவற்றிற்கே தேவையானதை ஓய்வுநாளில் செய்வதுபோல மனிதர்களுக்குச் செய்யக்கூடாதா? எனக் கேட்கின்றார்.

இன்னும் ஒரு படி போய், அப்பெண்ணை, 'ஆபிரகாமின் மகள்' என அழைக்கிறார் இயேசு.

'ஆபிரகாமின் மகன்' என்ற சொல்லாடல் இயேசுவால் சக்கேயுவைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது: 'இவரும் ஆபிரகாமின் மகன்தானே!' (காண். லூக் 19:9). மேலும், யோவான் நற்செய்தியில் இயேசுவுக்கும் யூதர்களுக்குமான வார்த்தைப் போரில் 'ஆபிரகாமின் மக்கள் அல்லது பிள்ளைகள்' என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது: 'அவர்கள் அவரைப் பார்த்து, 'ஆபிரகாமே எங்கள் தந்தை' என்றார்கள். இயேசு அவர்களிடம், 'நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போல செயல்படுவீர்கள்' என்றார்.' (யோவா 8:39)

'ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு  ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான்' என்ற இயேசுவின் வார்த்தைகள், 'ஆபிரகாமின் பிள்ளைகள்' யாருக்கும் அடிமைகளாக இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கிறது. 'அடிமையாக' இருப்பவர்களைத்தான் கயிற்றால் அல்லது சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள். மேலும், அடிமையாக இருந்த இந்தப் பெண் 'கூன் விழுந்த நிலைக்குப் போய்விடுகின்றார்.' கூன் விழுந்தால் நம் பார்வை சுருங்கிவிடும். 'இவ்வளவுதான் உலகம்' என நினைக்க ஆரம்பித்துவிடுவோம். ஆனால், இயேசு நலம் தந்தவுடன் அனைவரையும் அனைத்தையும் நிமிர்ந்து பார்க்கிறார். மேலும், 'நிமிர்தல்' தன்மானத்தின், சுதந்திரத்தின் அடையாளமாகவும் இருக்கிறது.

இன்று, நாம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்: நான் யாருக்கு அல்லது எதற்கு அடிமை? என் பார்வையைச் சுருக்கும் என் அடிமை நிலை என்ன? நான் நிமிர்ந்து பார்க்கத் தயாரா?

நிற்க.

நாளைய நற்செய்தியில் வரும் தொழுகைக்கூடத் தலைவரின் வார்த்தைகளில் மிக அழகான நேர மேலாண்மை ஒளிந்திருக்கிறது.

'வேலை செய்வதற்கு ஆறு நாள்கள் உண்டே!' என்கிறார் அவர்.

அதாவது, அந்தந்த நாளுக்குரிய அந்தந்த நாளில் செய்வது.

'ஆறு நாள்களில்' வேலை என்றால் வேலை செய்துவிட்டு, ஏழாம் நாளில் ஓய்ந்திருப்பது. ஏழாம் நாளில் உழைப்பது அல்ல.

ஆக, நான் செய்யும் வேலையை, நான் எடுக்கும் ஓய்வை மறுஆய்வை செய்ய வைக்கிறது இத்தலைவரின் வார்த்தைகள்.

Thursday, October 25, 2018

தீர்மானிக்காமல் இருப்பதேன்?

நாளைய (26 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 12:54-59)

தீர்மானிக்காமல் இருப்பதேன்?

'நாம் ஐந்து வருடங்களுக்குப் பின் எப்படி இருப்போம்?' என்பதை நம்மால் தீர்மானிக்க முடியுமா?

உங்கள் பதில் 'இல்லை' என்றால்,

'இன்று நாம் இருக்கும் இடத்தில் இருப்பது நாம் ஐந்து வருடங்களுக்கு முன் செய்த தெரிவுகளால்தான் என்றால், அது சரியா?'

நாளைய நற்செய்தி வாசகத்தில், 'நிலத்தின் தோற்றத்தையும், வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?' எனக் கேட்கும் இயேசு, 'நேர்மையானது எது என நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பது ஏன்?' என மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கேட்கிறார்.

ஆக, காலத்தின் அறிகுறிகளைக் கண்டுணர வேண்டும். பின் அதற்கேற்ற தீர்மானத்தை - நேர்மையானதை - எடுக்க வேண்டும்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் எடுத்த எல்லா முடிவுகளுமே - கல்வி, குடும்பம், வேலை, நிதி, சேமிப்பு, உறவுநிலை - இன்று நான் இருப்பதை பாதிக்கின்றன. நான் மேற்கொண்ட தெரிவுகளால்தான் இன்று என் வாழ்க்கை இப்படி இருக்கிறது என்றால், நான் இன்று எடுக்கும் தெரிவுகள் நாளை என் வாழ்வை நிர்ணயிக்கும். இல்லையா?

தெரிவு செய்வது மட்டுமல்ல.

தெரிவு செய்வதைச் சரியாகச் செய்ய வேண்டும்.

அதைவிட, தெரிவு செய்வதை விரைவாகச் செய்ய வேண்டும்.

அதற்கு எடுத்துக்காட்டாக இயேசு ஒரு எடுத்துக்காட்டும் தருகின்றார்.

'நடுவரிடம் ஒருவர் நம்மை இழுத்துச் செல்லும்போது வழியில் வழக்கை தீர்த்துக்கொள்ளும் ஆர்வமும் அவசரமும் வேண்டும்.'

வழக்கை தீர்த்துக்கொள்வதாக நீதிமன்றத்தில் அவர் சம்மதித்தால் அந்த சம்மதத்தால் ஒரு பயனும் இல்லை. ஆக, வழியில் - அதாவது, இப்போதே - தெரிவு செய்ய வேண்டும்.

நாளைய முதல் வாசகத்தில் (காண். எபே 4:1-6), 'ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான்' என்று எபேசு நகரத் திருச்சபைக்குத் தன் அறிவுரையைத் தொடங்கும் பவுல், ஒவ்வொருவரும் தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கேற்ப - அதாவது, தாங்கள் மேற்கொண்ட தெரிவுகளுக்கு ஏற்ப - வாழுங்கள் என்கிறார்.

தெரிவுகளே நம் அழைப்பை முடிவு செய்கின்றன.

நல்ல தெரிவுகள் நல்ல தெளிவுகளே.

Wednesday, October 24, 2018

மனநெருக்கடி

நாளைய (25 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 12:49-53)

மனநெருக்கடி

'பணநெருக்கடி' கேள்விப்பட்டிருப்போம்.

அது என்னங்க 'மனநெருக்கடி'?

'ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்' என்கிறார் இயேசு.

நான்கு நாள்களுக்கு முன்னதாக பஞ்சாபின் அமிர்தசரஸில் இராவணன் வதை பார்த்துக்கொண்டிருந்த ஒரு கூட்டத்தின்மேல் இரயில் மோதி 51 பேர் இறந்தனர். இன்னும் பலர் கவலைக்கிடமாகி உள்ளனர். இறந்தவர்கள் அல்லது காயம்பட்டவர்களில் பெரும்பாலும் இரயில் மோதியபின் ஏற்பட்ட ஜனநெருக்கடியில் இறந்தவர்கள்தாம்.

இலவச வேஷ்டி சட்டை வழங்கும் விழா, திரைப்பட நடிகர்களின் வருகை, அரசியல் கூட்டம், ஆபத்து போன்ற நேரங்களில் ஏற்படும் ஜனநெருக்கடிகள் நமக்குப் பரிச்சயமானவை. ஒருவரின் மேல் ஒருவர் ஏறுவதுதான் ஜனநெருக்கடி.

அதே போல, நம் உள்ளத்தில் எழும் எண்ணங்கள் கூட்டமாக ஒன்றின்மேல் ஒன்று ஏறினால் அது மனநெருக்கடி. இந்த மாதிரியான நேரங்களில் நம் மனம் கலைந்துபோய் இருக்கும். மண்ணும், தூசியுமாக இருக்கும். ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பார்க்க நம்மால் இயலாத ஒரு நிலை ஏற்படும்.

இயேசு தன் பணி முடிவுறும் காலத்தில் தன் இறப்ப அல்லது முடிவு நெருங்க நெருங்க பல மனக்குழப்பங்களைச் சந்தித்திருப்பார். 'எது என் உளம்?' 'எது கடவுளின் திருவுளம்?' 'ஏன் இப்படி?' 'எனக்கு மட்டும் ஏன் இப்படி?' என நிறைய குழப்பங்கள் அவரின் மனதில் எழுந்திருக்கும். இந்த நிலையைத்தான் 'அமைதியற்ற நிலை' அல்லது 'தீ' என்கிறார் இயேசு.

ஆனால், குழப்பங்களின் இறுதியில் அமைதி வரும் என்பது இயேசுவின் பாடமாக இருக்கிறது.

'முடிவு இனிதாக இல்லையெனில் அது இன்னும் முடிவு இல்லை' என்பது ஆங்கிலப் பழமொழி.

நாளைய முதல் வாசகத்தில், 'அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!' என எபேசு நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்துகிறார் பவுல். இந்த அன்பிற்கு அடித்தளமாய் இருப்பது கிறிஸ்துவின் அன்பு. அந்த அன்பை அறியும்போது அனைத்தும் தெளிவாகிறது. அந்த அன்பை அறிதல் நமக்கு மனநெருக்கடியையும் தரலாம். ஆனால், அறிந்தபின் வரும் அமைதி நிலையானது.

Tuesday, October 23, 2018

எஜமானனே

நாளைய (24 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 12:39-48)

எஜமானனே

நானும் என் நண்பர் அருள்திரு. அகஸ்டினும் அடிக்கடி சேர்ந்து இரசிக்கும் ஒரு பாடல், 'எஜமானனே' என்பது. அருள்திரு. பெர்க்மான்ஸ் அவர்கள் எழுதி இசையமைத்த 'எஜமானனே' என்ற இந்தப் பாடலில், அவர் தரும் முன்னுரையில், 'தம் ஊழியருக்கு வேளா வேளைக்கு படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?' என்று கேட்டு, அந்தப் பொறுப்பாளர் தான் எனக் குறிப்பிடுவார்.

'பொறுப்பாளர்' - அருள்பணியாளர்களுக்கு இது ஒரு நல்ல உருவகம் என நினைக்கிறேன்.

முதலில் இந்த உருவகத்தைப் புரிந்துகொள்வோம்.

இன்று மேலான்மையியலில் அதிகம் பேசப்படும் ஒரு வார்த்தை 'திறன்'. ஆனால், இந்தத் திறன் வருவதற்கு முன், 'மதிப்பீடு,' 'அறிவு' என்ற இரண்டு அவசியம்.

மேற்காணும் சொற்றொடரில், 'நம்பிக்கைக்கு உரியவர்' என்பது மதிப்பீடு. 'அறிவாளி' என்பது 'அறிவு.' இந்த இரண்டும் இணையும்போது, 'பொறுப்பாளர்' என்ற ஒரு திறன் பிறக்கிறது. மதிப்பீடும், அறிவும் இருந்தால் மட்டும் போதாது. இந்த இரண்டையும் வெளிப்படுத்தும் திறன் இருந்தால்தான் அவை இருப்பதால் பலனுண்டு.

இன்று அருள்பணியாளர் நிலையில் சோர்வு அல்லது விரக்தி வரக் காரணம், அருள்பணியாளர் தலைவராக இருக்க நினைப்பதுதான். ஆனால், 'பொறுப்பாளர்' நிலையில் இருந்தால் சோர்வும், விரக்தியும் வராது. மாறாக, சுறுசுறுப்பும், ஆர்வமும், விடாமுயற்சியும்தான் இருக்கும். ஆகையால்தான், அருள்திரு. பெர்க்மான்ஸ் அவர்கள் தன்னை 'பொறுப்பாளரோடு' இணைத்துப் பார்க்கிறார்.

இந்தப் பொறுப்பாளரின் வேலை என்ன?

'ஊழியருக்கு வேளா வேளைக்குப் படி அளக்க வேண்டும்'

ஊழியவர்கள் தலைவரின் ஊழியர்களே அன்றி, பொறுப்பாளரின் ஊழியர்கள் அல்ல. ஆகவே, பணித்தளத்தில் என்னால் பயன்பெறுபவர்கள் என் ஊழியர்கள் அல்ல. மாறாக, அவர்கள் இறைவனின் ஊழியர்கள். இந்த நிலையில் நான் அணுகும்போது எல்லாரையும் மதிப்புடனும், பக்தியுடனும் நடத்துவேன். மேலும், யார்மேலும் அளவுக்கு மீறிய உரிமையும், உரிமைமீறலும் கொள்ளமாட்டேன்.

மேலும், இப்பொறுப்பாளரைப் பொறுத்தே அந்த வீட்டின் இருப்புநிலையும், இயங்குநிலையும் இருக்கும். ஆக, இவரின் பொறுப்புணர்வு இன்னும் அவசியமானதொன்றாக இருக்கிறது.

இறுதியாக, 'மிகுதியாக கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும், மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் மிகுதியாக கேட்கப்படும்' என்கிறார் இயேசு. ஆக,பொறுப்பாளர் இருப்பதை பயன்படுத்துவதோடு, இருப்பதை வைத்து இன்னும் அதிகமாக பெருக்க வேண்டும்.

இவ்வுருவகத்தை நாம் தனிப்பட்ட உறவு அல்லது வேலை வாழ்வில் பார்த்தால், வாழ்வு என்ற கொடைக்கு நாம் பொறுப்பாளர்களே தவிர, உரிமையாளர்கள் அல்லர். ஆக, அந்த நிலையில் நாம் வாழ்வை இனிமையாகவும், முழுமையாகவும் வாழ இன்று அழைக்கப்படுகிறோம்.

இதைத்தான் நாளைய முதல் வாசகத்தில் (காண். எபே 3:2-12) தூய பவுலும், 'உங்கள் நலுனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்டுள்ள பொறுப்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள்' எனத் தன்னை ஒரு பொறுப்பாளராக அடையாளப்படுத்துகிறார்.

To listen to the Song 'Ejamanane' please click the following link:

Ejamanane Rev. Fr. J. Berchmans

Monday, October 22, 2018

எரியும் விளக்குகள்

நாளைய (23 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 12:35-38)

எரியும் விளக்குகள்

'விழிப்பாயிருங்கள், தயாராக இருங்கள்' என்ற அறிவுரைப் பகுதியில் இயேசு வித்தியாசமானதொரு உருவகத்தைக் கையாளுகின்றார்: 'விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும்.'

'மறுசுழற்சி மின்சாரம்,' 'மாற்று எரிசக்தி,' 'தீங்கற்ற எரிசக்தி,' 'சூரிய எரிசக்தி' என்று பேசப்படும் இக்காலத்தில், 'விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும்' என்று இயேசு சொன்னால், அவர் ஒரு சுற்றுச்சூழல் எதிரியாகவே பார்க்கப்படுவார். திடீர் திடீரென உயரும் மின்கட்டணம், அடிக்கடி கட்-ஆகும் மின்சாரத்தின் பின்புலத்தில் 'விளக்குகள் எந்நேரம் எரிந்துகொண்டிருப்பது' சாத்தியமல்ல.

ஆனால், நம் கைகளில் இன்று ஒரு விளக்கு எப்போதும் எரிந்துகொண்டே இருக்கிறது. அதுதான் ஸ்மார்ட்ஃபோனில் திரை விளக்கு அல்லது திரை வெளிச்சம். நமக்கு அழைப்பு வரும்போது, குறுஞ்செய்தி வரும்போது எனத் தொடங்கி, நாமாகவே அதை எடுத்து, எடுத்து பார்க்கும் நேரமும் அது எரிந்துகொண்டேதான் இருக்கிறது. ஸ்மார்ட்ஃபோன் திரையின் வெளிச்சம் அது தயாராக இருப்பதை உணர்த்துகின்றது.

கிராமங்களில் வீட்டில் எரியும் விளக்குகளை வைத்து வழிசொல்வார்கள்.

'வெளியில் குண்டு பல்பு எரியும் வீடு,' 'டியுப் லைட்ட எரியும் வீடு,' 'இருட்டான வீடு,' 'மாடியில் விளக்கெரியும் வீடு,' 'தெருவிளக்கின்முன் உள்ள வீடு,' 'திண்ணையில் பல்ப் எரியும் வீடு' என்றெல்லாம் அங்கே அடையாளங்கள் சொல்லப்படும். மேலும், 'விளக்கெல்லாம் அணைஞ்சிடுச்சே, அவங்க தூங்கியிருப்பாங்க, நாளைக்கு வாங்க' என விளக்கு வெளிச்சத்தின் மறைவும் அடையாளமாக பயன்படுத்தப்பட்டது.

இவ்வாறாக, விளக்கு உறங்காநிலையின் அடையாளமாக இருக்கிறது.

இயேசுவின் சமகாலத்தில் வீட்டில் விளக்கு எரிதல் வீட்டுத் தலைவருக்கு தன் வீட்டை அடையாளம் காணவும் உதவியது - கலங்கரை விளக்கம் போல.

நாளைய நற்செய்தி நமக்கு விடுக்கும் அழைப்பு 'உறங்காநிலை' அல்லது 'விழிப்புநிலை.'

பல நேரங்களில் நம் கண்கள் விழித்திருந்தாலும் நம் எண்ணங்கள் உறங்குகின்றன. அல்லது நாம் முழு தயார்நிலையில் வேலைகள் செய்வதில்லை. நம் களைப்பு, கவலை, ஏக்கம், எதிர்பார்ப்பு இவை அனைத்தும் நம் எண்ணங்கள் என்னும் விளக்கை மங்கவைக்க அல்லது அணைக்கக் கூடியவை.

இரண்டாம் காவல் வேளை, மூன்றாம் காவல் வேளை என எந்நேரமும் விழித்திருக்கும் ஒரு நிலை இருந்தால் எத்துணை நலம்.

கிறிஸ்துவோடு கொண்டிருக்கும் இணைந்திருத்தல் நம்மை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவரும் என்றும், அங்கே நாம் இசைவாகப் பொருந்தி இருப்போம் என்றும் எபேசு நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்துகின்றார் பவுல் (காண். 2:12-22).

அவரோடு இணைந்துள்ள நிலையில் நாம் அவர்போல் ஒளிர்வோம்.

ஆக, இன்று ஸ்மார்ட்ஃபோனை எடுத்து அதன் வெளிச்சத்தில் என் கண்களைப் பதிக்கும்போதெல்லாம், 'என் உள்ளத்து விளக்கு எரிந்துகொண்டிருக்கிறதா?' என்று நான் கேட்பேனாக!


Sunday, October 21, 2018

தனக்குள் சொல்லிக்கொண்டான்

நாளைய (22 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 12:13-21)

தனக்குள் சொல்லிக்கொண்டான்

உளவியலில் 'தன்ஆலோசனை' ('ஆட்டோஸஜஷன்') என்றொரு சொல்லாடல் உண்டு. அதாவது, இது ஒரு நேர்முகமான சொல்லாடல். எடுத்துக்காட்டாக, 'நான் நன்றாக இருக்கிறேன்,' 'நான் அழகாக இருக்கிறேன்,' 'என்னால் இதைச் செய்ய முடியும்' என்று நான் எனக்கு நானே 'தன்ஆலோசனை' கொடுக்கும்போது என்னுள் இவை நேர்முக ஆற்றலை உருவாக்குகின்றன. இதிலிருந்து, 'நம் எண்ணங்கள் நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை' என்பது விளங்குகிறது.

'விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்.
ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதி செய்யும்' (நீமொ 4:23) என்கிறார் நீதிமொழிகள் நூல் ஆசிரியர்.

இப்படி விழிப்பாயிருந்து இதயத்தைக் காவல் செய்ய மறுத்த ஒருவரைத்தான் நாளைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம்.

'செல்வனாயிருந்த ஒருவர்' பற்றி உவமை ஒன்றைச் சொல்கிறார் இயேசு.

அவருடைய நிலம் நன்றாக விளைகிறது. விளைச்சலை சேகரிக்க முடியாத அவர், தன் களஞ்சியங்களை இடித்து விரிவுபடுத்துவதாகவும், தான் மகிழ்ந்திருக்க இதுபோதும் என தனக்குள் சொல்லிக்கொள்கிறார்.

இவர் இப்படிச் சொன்னதில் என்ன தப்பு இருக்கிறது?

இவர் யாரையும் ஏமாற்றவில்லை. இவரின் உழைப்புக்கு ஏற்ற பலனை இவருடைய நிலம் தந்துள்ளது. இவருடைய களஞ்சியத்தை இவர் இடித்துக்கட்ட விளைகின்றார். இதற்காக இவர் யாரையும், யாருடைய உழைப்பையும் சுரண்டவில்லை.

ஆனால் கடவுள், 'இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் போய்விடும்' என்கிறார்.

இது அந்த நபரை அழிப்பதற்காக அல்ல. மாறாக, அவரின் செல்வத்தையும் மிஞ்சியவை உலகில் உள்ளது என்று காட்டவே இயேசு இந்த எடுத்துக்காட்டைச் சொல்கின்றார்.

'எவ்வகை பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது' என்கிறார் இயேசு.

இரண்டு விடயங்கள்: (அ) பேராசை தவிர்க்க வேண்டும், (ஆ) செல்வம் நம் வாழ்வை ஒருபோதும் கூட்டுவதில்லை.

செல்வங்கள் நம் வாழ்வின் வசதிகளைக் கூட்டலாமே தவிர, அவை நம் வாழ்வைக் கூட்டுவதில்லை. செல்வங்கள் தம்மிலே நிலையற்றவை. அவை ஒவ்வொன்றுக்கும் எக்ஸ்பைரி டேட் உண்டு. நிலையற்றவை ஒருபோதும் நிலையானதைத் தர முடியாது.

ஆக, இன்று நமக்கு நாமே பயன்படுத்தும் வார்த்தைகள் குறித்து மிகவும் கவனமாக இருப்போம். மேற்காணும் செல்வந்தன்போல் அதீத நம்பிக்கை கொண்ட வார்த்தைகள் ஆபத்தை மறைப்பனவையாக இருக்கலாம்.

நாளைய முதல் வாசகம் சொல்வதுபோல, நாம் அவரின் கைவேலைப்பாடு என்ற நிலையில் நம் வாழ்வை ஏற்று, அதை வாழத் தொடங்கினால், அவரின் கைகளில் நாம் நிறைவை பெறுவோம். ஏனெனில் அவர் என்றென்றும் நிலைத்திருப்பவர்.

Friday, October 19, 2018

கவலைப்பட வேண்டாம்

நாளைய (20 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 12:8-12)

கவலைப்பட வேண்டாம்

'எப்படி பதில் அளிப்பது?
என்ன பதில் அளிப்பது?
என்ன பேசுவது?'

- 'இதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்று தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு.

இந்த வரிகளை திபா 139:1-4-உடன் பொருத்திப் பார்ப்போம்:

'ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்.
நான் அமர்வதையும் எழுவதையும் அறிந்திருக்கின்றீர்.
என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.
நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்.
என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே.
ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகுமுன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.'

நம் எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன?

எங்கிருந்தோ வருகின்றன - இல்லையா?

வரலாற்றைப் புரட்டிப்போட்ட யோசனைகள், பாடல்கள், காவியங்கள், கண்டுபிடிப்புகள், ஓவியங்கள், நாடகங்கள், திரைப்படங்கள், முடிவுகள் என மனிதகுலத்தை முன்னேற்றிய மனித படைப்பாற்றல் எண்ணங்கள் மனிதர்களிலிருந்து தோன்றினாலும், பிரபஞ்சத்தோடு அவர்கள் கொண்டிருந்த இணைப்பே, இவ்வெண்ணங்களை ஊற்றெடுக்கிறது என்று சொல்கிறது உளவியல் ஆய்வு.

ஆக, எண்ணங்கள் நம்மைச் சுற்றிக் கிடக்கின்றன. நம் ஆழ்மனம் இந்த பிரபஞ்சத்தோடு இணையும்போது அவை நம் எண்ணங்கள் ஆகின்றன.

இதையே நாளைய முதல் வாசகத்தில் (காண். எபே 1:15-23), 'இவற்றை நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப்பெறுவனாக' என்று அகக்கண்கள் ஒளிபெறுவதை விரும்புகின்றார் பவுல்.

ஒரு வை-ஃபை ரவுட்டரோடு நாம் நம் மொபைலை இணைக்கும்போது எப்படி ஒட்டுமொத்த இணைய உலகத்தோடு இணைப்பு பெற்று, இணையத்தின் தகவல்கள் நம் தகவல்கள் ஆகின்றனவோ, அப்படியே நாம் இறைவனோடு இணையும்போது அவரின் ஆவியின் சொற்கள் நம் ஆவியின் சொற்கள் ஆகின்றன.

இதை அடைவதற்கான சின்ன பாஸ்வேர்ட், 'அமைதி.'

Thursday, October 18, 2018

என் நண்பர்களாகிய உங்களுக்கு

நாளைய (19 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 12:1-7)

என் நண்பர்களாகிய உங்களுக்கு

நற்செய்தி நூல்களில் இயேசு தன் சீடர்களை இரண்டுமுறை 'நண்பர்கள்' என அழைக்கிறார்:

'என் நண்பர்களாகிய உங்களுக்குச் சொல்கிறேன்...' (லூக் 12:4)

'உங்களை நான் நண்பர்கள் என்றேன்...' (யோவா 15:15)

யோவானின் பதிவைவிட லூக்காவின் பதிவு அதிக பொருள் பொதிந்ததாக இருக்கிறேன். 'உங்களை நான் நண்பர்கள் என்றேன்' என்று சொல்லாமல், 'என் நண்பர்களே' என நேரிடையாகச் சொல்கின்றார். இங்கே 'பிஃலயோ' என்ற வினைச்சொல்லிலிருந்து வரும், 'ஃபிலோய்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

கிரேக்க மொழியில் மனிதர்கள் மனிதர்களை அன்பு செய்வதை மூன்று சொற்கள் வழியாகக் குறிக்கின்றனர்:

அ. 'ஸ்தோர்கே' - இது பெற்றோர்-பிள்ளைகள், பிள்ளைகள்-பெற்றோர், உடன்பிறந்தோர் ஆகியோருக்கு இடையேயான அன்பு. இந்த உறவு இரத்த உறவு.

ஆ. 'ஈரோஸ்' - இது காதலர்கள், கணவன்-மனைவி இடையே திகழும் உறவு. இந்த உறவு திருமண உறவு.

இ. 'ஃபிலியா' - இது நண்பர்களுக்கிடையே நிலவும் அன்பு. வயது ஒத்திருக்கும், அல்லது எண்ணங்கள் ஒத்திருக்கும் நபர்களிடையே உள்ள அன்பு.

இயேசு பயன்படுத்தும் கிரேக்க வார்த்தை மூன்றாவது வார்த்தையாகிய 'ஃபிலியா' என்பது.

பல நேரங்களில் இரத்தம், திருமண உறவுகளைவிட, நட்பு உறவு மேலோங்கி இருக்கும் என்பது நாம் அறிந்ததே.

ஃபிலியா என்ற வார்த்தையை மையமாக வைத்து அரிஸ்டாடில் மூன்றுவகை நட்பைப் பற்றி எழுதுகின்றார்:

அ. பயன்பாட்டு நட்பு
ஆ. இன்பமைய நட்பு
இ. நற்குண நட்பு

இவற்றில் முதல் மற்றும் இரண்டாம் வகை நட்பு தீயவர்களிடமும் இருக்கலாம் என்று சொல்லும் அவர், மூன்றாம் வகை அன்பு நல்லவர்களிடம் மட்டும் இருக்கும் என்கிறார்.

இயேசு தன் சீடர்களை நண்பர்கள் என்று அழைப்பது இந்த மூன்றாம் நிலையில்தான். ஏனெனில், இயேசுவால் பயன்பெற்றவர்கள் அவரிடம் பயன்பாட்டு நட்பு கொண்டிருந்தனர். அவரை எதிர்த்தவர்கள் இன்பமைய (துன்பமைய) நட்பு கொண்டிருந்தனர். அவரோடு இருந்த திருத்தூதர்கள் நற்குண நட்பில் அவரோடு இணைந்திருக்கின்றனர்.

நட்பின் இரண்டு குணங்களை நாளைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம்:

அ. நட்பில் ஒவ்வொருவரும் மதிப்பு பெறுவர் - 'இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்பதில்லையா?' ஐந்தாம் குருவி இலவசக் குருவி. நட்பில் இலவசக் குருவிக்கும் மதிப்பு உண்டு.

ஆ. நட்பில் அனைவருக்கும் முகம் இருக்கும் - 'தலைமுடி எல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது' கூட்டத்தில் ஒன்று அல்ல. தனித்தனியே ஒன்று.

இயேசுவின் நட்பு என்பது நாம் அவரின் நற்குணத்தால் பெற்றிருக்கின்ற உரிமைப்பேறு என்கிறார் பவுல் (முதல் வாசகம், எபே 1:11-14).

Wednesday, October 17, 2018

லூக்கா மட்டுமே

நாளைய (18 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 10:1-9)

லூக்கா மட்டுமே

நாளைய புனிதரோடு (புனித லூக்கா) சேர்த்து நாளைய நற்செய்தி வாசகத்தை சிந்திப்போம்.

டேய்லர் கால்ட்வெல் அவர்கள் எழுதிய, 'டியர் அன்ட் க்ளோரியஸ் ஃபிஸிஷியன்' என்ற நூல் புனித லூக்கா பற்றிய ஒரு வரலாற்றுப் புதினம். மூன்றாம் நற்செய்தியின், திருத்தூதர் பணிக் நூலின் ஆசிரியராக அறியப்பெறும் லூக்கா, ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு கிரேக்க, அறிவியலாளர், மருத்துவர் 'லூக்கானுஸ்' என்று அறியப்பட்டார். மற்ற எல்லாரையும்போல் நட்பு, காதல், தேடல் என நகர்ந்த லூக்கானுஸ் வாழ்வில் ஒரு நாள் அவர், 'என் ஆண்டவர் எப்படிப்பட்டவர்?' என்ற கேள்வியை எழுப்புகின்றார். தன் மருத்துவப் பணியில், பயணத்தில் இயேசுவின் வாழ்வு, பணி, மற்றும் இறப்பு பற்றிக் கேட்டறிந்த லூக்கா, தான் தேடும் கடவுளை இயேசுவில் காண்கிறார். இயேசுவை நேருக்கு நேர் பார்க்காத லூக்கானுஸ் இயேசுவைச் சந்தித்த அனைவரையும் - அவரின் தாய் மரியாள் உள்பட - சந்திக்கின்றார். தான் சந்தித்தவர்கள் பகிர்ந்துகொண்ட தரவுகளின் பின்புலத்தில் தன் நற்செய்தி நூலைப் படைக்கின்றார். இந்நூல் ஒரு புதினமாக இருந்தாலும் லூக்காவின் சமகால சமய, வரலாற்று, அரசியல், பண்பாட்டு சூழலைப் புரிந்துககொள்ள நமக்கு உதவுகிறது.

லூக்காவைப் பற்றிய ஒரு குறிப்பை நாளைய முதல் வாசகத்தில் (காண். 2 திமொத்தேயு 4:9-17) வாசிக்கின்றோம்: 'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கின்றார்.'

இந்த ஒற்றை வாக்கியம் லூக்காவின் பல பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது.

அ. லூக்கா அனைவருக்கும் பரிச்சயமானவர்

நம்பிக்கையில் தான் பெற்றெடுத்து தன் அன்புப் பிள்ளைக்கு கடிதம் எழுதுகின்ற பவுல், அதில் லூக்காவைப் பற்றி குறிப்பிடுகின்றார். ஆக, லூக்கா திமொத்தேயுவுக்கும் அறிமுகமானவராக இருக்கின்றார். இன்று. அறிமுகம் மிகப்பெரிய சொத்து. அறிவை விட அறிமுகம் பெரிய சொத்து என நான் நிறைய முறை நினைத்ததுண்டு. லூக்காவின் ஆளுமை எப்படிப்பட்டதாக இருக்கிறதென்றால், அவரால் பவுலோடும் உறவு கொள்ள முடிகிறது. இளவலான திமொத்தேயுடனும் உறவு கொள்ள முடிகிறது. ஆக, பெரியவர், சிறியவர் என எல்லாரோடும் எல்லாமாக இணைந்துகொள்ள லூக்காவின் ஆளுமை நமக்கு அழைப்பு விடுக்கிறது.

ஆ. நீங்காத நண்பர்

தன் உடன் இருந்த 'தேமா இன்றைய உலகப்போக்கை விரும்பி, என்னைவிட்டு அகன்று, தெசலோனிக்கா சென்றுவிட்டார். கிரேஸ்கு கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்றுவிட்டனர்' என, தன் உடன்பணியாளர்களின் நீக்கத்தை எழுதும் பவுல், 'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கின்றார்' என எழுதுவது, லூக்காவின் நீங்காத உடனிருப்பைக் காட்டுகிறது. சின்னச் சின்ன புரிதல்சிக்கல்கள் வந்தால் பல நேரங்களில் உறவுகள் பிரிந்துவிடுகின்றன. அப்படியான நேரத்தில், நாம் சிக்கல்களைப் பார்க்கிறோமே தவிர, உறவைப் பார்ப்பதில்லை. சின்னக் கல்லை கண்ணுக்கு அருகில் வைத்துப் பார்த்தால் அது உலகத்தையே மறைத்துவிடுகிறது இல்லையா? தனக்கும் பவுலுக்கும் சில நேரங்களில் புரிதல்சிக்கல்கள் வந்தாலும், மற்றவரைப் போல இல்லாமல், உறவை மேன்மையானதாக நினைத்து, தான் செய்ய வேண்டிய வேலையை மேன்மையானதாக நினைத்து தொடர்ந்து உடனிருக்கிறார் லூக்கா. இது லூக்கா நமக்குக் கற்றுத்தரும் இரண்டாம் பாடம்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் திருத்தூதர்களுக்கு அறிவுறுத்தியதை தன் வாழ்வில் செய்துகாட்டினார் லூக்கா.

தான் இருக்குமிடத்தில் தங்கி, அதைவிட்டு நீங்காது, மருத்துவராக உடல்நலம் குன்றியவரைக் குணமாக்கி, நற்செய்தியை இறையாட்சியின் செய்தியாக எழுதுகின்றார் லூக்கா.

லூக்காவின் கிரேக்கமே புதிய ஏற்பாட்டின் மேன்மையான கிரேக்கம் என கருதப்படுகிறது. அவர் கதைகளை, உவமைகளைக் கையாளும் விதம், திருத்தூதர்பணிகளில் பவுல் மற்றும் பேதுருவின் உரைகளை எழுதும் விதம் ஆகியவற்றிலிருந்து அவரின் இலக்கியத்திறத்தை நாம் புரிந்துகொள்கிறோம்.

தன்னிடம் உள்ளதை தான் தேடிய தன் இறைவனுக்கு முழுவதுமாகக் கொடுக்கிறார் லூக்கா.

இதுவே உயர்ந்த திருத்தூதுப்பணி.

Tuesday, October 16, 2018

தாங்க முடியாத சுமைகள்

நாளைய (17 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 11:42-46)

தாங்க முடியாத சுமைகள்

எளிதானதைச் செய்வதா? அல்லது நன்மையானதைச் செய்வதா?

இந்த இரண்டு கேள்விகளை முன்வைத்து நாளைய நற்செய்தி வாசகமும், முதல் வாசகமும் (கலா 5:18-25) சுழல்கின்றன.

ஒரு காரில் செல்கிறோம். டிராஃபிக் சிக்னல் வருகிறது. பச்சை விளக்கு எரிகிறது. நாம் நம் காரை முன்னோக்கி நகர்த்தலாம். ஆனால், நம் கண்முன்னே முதியவர் ஒரு நடந்துவருகிறார். அவர் சாலையை அந்த நேரத்தில் கடப்பது தவறு எனத் தெரியாமல் அவர் நடந்துவருகிறார். நாம் இப்போது பச்சை சிக்னல் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு நம் காரை தொடர்ந்து நகர்த்தினால் நாம் எளிதானதைச் செய்கிறோம். ஆனால், காரை நிறுத்தி, முதியவர் கடக்கும் வரை காத்திருந்து அதன் பின் தொடர்ந்தால் நாம் நன்மையானதைச் செய்கிறோம். இங்கே, நன்மையானதைச் செய்வது கடினம். ஏனெனில், நம் வேகம் குறைக்க வேண்டும். அல்லது காரை முழுவதும் நிறுத்த வேண்டும். நமக்குப் பின்னால் வேகமாக வரும் வாகன ஓட்டிகளின் கோபத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும். நாம் வழிவிட்டுக்கொண்டிருக்கும் நேரம் திரும்பவும் சிகப்பு சிக்னல் விழுந்தால் நாம் இன்னும் சில மணித்துளிகள் காத்திருக்க வேண்டும். ஆனால், இவ்வளவு கடினமானதாக இந்தச் செயல் இருந்தாலும், இறுதியில் அங்கே ஒரு மனித உயிர் காக்கப்படுகிறது என்ற நன்மை நடந்தேறுகிறது.

'பத்தில் ஒரு பங்கு காணிக்கை' என்று எளிமையானதைச் செய்யும் பரிசேயர்கள், 'நீதி மற்றும் கடவுளின் அன்ப' என்னும் நன்மையை விட்டுவிடுகின்றனர்.

'தொழுகைக்கூடங்களில் முதல் இருக்கை, சந்தைகளில் வணக்கம்' என்று எளிமையானதை விரும்பும் பரிசேயர்கள், 'வெளிவேடம் களைந்த உண்iயான வாழ்வு' என்னும் நன்மையைச் செய்ய மறுக்கின்றனர்.

'பயமுறுத்தும், குற்ற உணர்வைத் தூண்டும் மறையுரை விளக்கங்கள்' என்று எளிமையானதை தேர்ந்துகொள்ளும் மறைநூல் அறிஞர்கள், 'கடவுளின் இரக்கம், கருணை' என்னும் நன்மையை போதிக்க மறுக்கின்றனர்.

ஆகையால், இயேசு இவர்களைச் சாடுகின்றார்.

நாளைய முதல் வாசகத்தில், ஊனியல்பு, தூய ஆவி இயல்பு என இரண்டு இயல்புகளைப் பற்றிப் பேசும் பவுலடியார், 'எளிமையான' ஊனியல்பை விடுத்து, 'நன்மையான' தூய ஆவி இயல்பை அணிந்துகொள்ள கலாத்தியரையும், நம்மையும் அழைக்கிறார்.

எளிமையானவை என அவர் முன்வைப்பது, 'பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்.'

நன்மையானவை என அவர் முன்வைப்பது, 'அன்பு, மகிழ்ச்சி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்'


எளிமையானவற்றை நாம் எந்தவொரு வலியும் இன்றி எடுத்துக்கொள்ளலாம். மேலும் இவற்றை எடுத்துக்கொள்ளும் இன்பமும் நமக்கு உண்டு.

ஆனால், நன்மையானதைத் தேர்ந்துகொள்ள ஒருவர் சிலுவையின் மேல் ஏறி தன் ஊனியல்பை இயேசுவோடு சேர்த்து அதில் அறைய வேண்டும். அதாவது, முற்றிலும் துறக்க வேண்டும். இப்படிச் செய்யும் போது நமக்கு வலிக்கும். ஆனால், நீடித்த மகிழ்ச்சி பிறக்கும்.

எளிமையானதா? நன்மையானதா?

தெரிவு நமதே.

Monday, October 15, 2018

கழுவாத கைகள்

நாளைய (16 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக்கா 11:37-41)

கழுவாத கைகள்

'கைகளில் உண்பது நல்லதா?' அல்லது 'கரண்டி மற்றும் முள்கரண்டியில் உண்பது நல்லதா?' என்ற விவாதம் பற்றிய செய்திகள் சில நேரங்களில் வாட்ஸ்ஆப்பில் வலம வருவதுண்டு.

'டெட்டாலு டெட்டாலுதான்' போன்ற நிறுவனங்கள் இப்போது கைகழுவப் பயன்படுத்தப்படும் நீர்ம சோப்பு பற்றி அதிக விளம்பரங்கள் வெளியிடுகின்றன. இது போன்ற நீர்ம சோப்புகளின் பயன்பாடு நம் கைகளில் உள்ள நல்ல பாக்டீரியாக்களைக் - அதாவது, உணவு செரிமானத்துக்கு உதவுபவை - கொன்றுவிடுவதாகவும் பேசப்படுகின்றன.

இயேசுவின் சமகாலத்தில் உணவு அருந்துமுன் கைகளைக் கழுவுவது தூய்மைக்காக இல்லாமல், அது தூய்மை பற்றிய சடங்காக மாறியிருந்தது. மேலும், இந்தச் சடங்கினால், தாங்கள் தூய்மையானவர்கள் எனவும், தாங்கள் சந்திக்கும், தொடும் புறவினத்தார்கள், சமாரியர்கள், பெண்கள், குழந்தைகள், விலங்குகள், வரிதண்டுவோர் ஆகியோர் பாவிகள் எனவும் அவர்கள் கருதத் தொடங்கினர்.

பரிசேயர் ஒருவர் நாளைய நற்செய்தியில் இயேசுவை தன் இல்லத்திற்கு விருந்துண்ண அழைக்கிறார். விருந்துண்ண வந்த இயேசுவைப் பற்றி அக்கறைப்படாமல் அவர் செய்யும் தூய்மைச் சடங்குகள் பற்றி அக்கறைப்படுகின்றார் அவர். இயேசு ஒரு யூத ஆணாக இருந்தும், ஒரு யூத ஆண் செய்ய வேண்டிய தூய்மைச் சடங்கை இயேசு செய்யாததுபற்றி பரிசேயர் வியப்படைகின்றார். இந்த வியப்பில் ஒருவகையான வெறுப்பும் ஒளிந்திருக்கிறது.

ஆனால், இயேசு வெளிப்புறம் என்னும் கையைத் தூய்மையாக்கிவிட்டு, உள்புறத்தில் - மனத்தில் - தீமையை வளர்த்தெடுப்பது இன்னும் மோசமானது என்று கடிந்துகொள்கின்றார்.

இன்று நாம் தூய்மை இந்தியா, தூய்மை உலகம், தூய்மை இல்லம் என நிறைய பேசுகின்றோம். தூய்மை இந்தியாவைத் தொடர்ந்து, தொலைக்காட்சிகளில் வரும் ஹார்பிக் விளம்பரங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, 'தூய்மை இந்தியா' பிரச்சாரமும் கார்ப்பரெட் நிறுவனத்தின் சதியோ என்று எண்ணத் தோன்றுகிறது.

'தூய்மை என்பது இறைமைக்கு அடுத்தது' என்று நாம் பள்ளியில் படித்திருக்கிறோம். ஆனால், தூய்மை எல்லா நேரமும் நல்லதல்ல. ஏனெனில், தெருவோரங்களில் வாழும் குறவன் குறத்தி இனப் பெண்கள், தூய்மையாக இருப்பதை வெறுக்கின்றனர். தூய்மையாக இருப்பதும், தங்களையே அழகுபடுத்திக்கொள்வதும் மற்றவர்கள் தங்களை எடுத்துக்கொள்ள பயன்படுவதால் தூய்மையற்ற நிலையிலேயே இருக்கப் பழகிக்கொள்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரையில் தூய்மை என்பது ஆபத்து. 'தூய்மை-தீட்டு' என்ற பாகுபாட்டினாலேயே நம் மண்ணில் சமூகம், மதம், இனம் சார்ந்த தீண்டாமையினால் இந்த உலகில் எவ்வளவு கண்ணீரும், செந்நீரும் நாம் பார்க்கின்றோம்.

வெளிப்புறத் தூய்மையை விட உள்புறத் தூய்மை - நம் மனம், எண்ணம் தூய்மையாக இருத்தல் - இன்று அவசியமாகிறது.

நாளைய முதல் வாசகத்தில் (காண். கலா 5:1-6) இறைவனுக்கு ஏற்புடையவர் ஆவது வெளிப்புறத்தில் நாம் செய்யும் திருச்சட்டம் சார்ந்த செயல்களாலா அல்லது தூய ஆவியாராலா என்ற கேள்வி எழுகிறது. வெளிப்படையான செயல்களால் அல்ல - அதாவது, வெளிப்புறத்தால் அல்ல - மாறாக, உள்ளிருக்கும் இயல்பான தூய ஆவியாரல்தான் ஏற்புடைய நிலை வருகிறது என பவுல், புறத்திலிருந்து அகத்திற்கு கலாத்திய நகர திருச்சபையினரை அழைத்துச் செல்கிறார்.

ஆக, புறத்திலிருந்து அகம் நோக்கிய தூய்மை பயணமே இனிய பயணம்.

Thursday, October 11, 2018

பின்னைய நிலைமை

நாளைய (12 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 11:15-26)

பின்னைய நிலைமை

உருவகங்களை, வார்த்தைப் படங்களைக் கையாளுவதில் இயேசுவுக்கு நிகர் அவரே.

நாளைய நற்செய்தி வாசகத்தில் தீய ஆவி செய்யும் செயல் ஒன்றை உருவகமாகத் தருகின்றார் இயேசு: 'ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், 'நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்' எனச் சொல்லும். திரும்பி வந்து அந்த வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் கண்டு, மீண்டும் சென்று தன்னைவிட பொல்லாத வேறு ஆவிகளை அழைத்துவந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னையை நிலைமையை விடக் கேடுள்ளதாகும்.'

இNயுசு பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் பொருள் நிறைந்ததாக உள்ளது. தீய ஆவி முதலில் அந்த நபரை விட்டு ஏன் வெளியேறியது என்பது கொடுக்கப்படவில்லை. தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிகிறது. யூதர்கள் தீய ஆவி வறண்ட பாலைநிலத்தில் இருப்பதாக நம்பினர். இளைப்பாற இடம் கிடைக்காத ஆவி திரும்பியபோது வீடு அழகுபடுத்தப்பட்டிருப்பது அதற்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஆக, வீடு தூய்மை ஆகிவிட்டது. இனி தீமைக்கு அங்கே இடமில்லை. இருந்தாலும், தீய ஆவிக்கு இப்போது வாழ்வா, சாவா என்ற ஒரு நிலை. ஆக, அது வேறொரு அணுகுமுறையைக் கையாளுகின்றது. போய் தன்னைவிட பொல்லாத - தீமையில் முதுகலை, முனைவர் பட்டம் பெற்ற - ஆவிகளைக் கூட்டி வருகிறது. இப்போது அந்த மனிதனின் நிலை என்ன ஆகும்?

அந்த மனிதன் நிலை இன்னும் கேடுள்ளதாக என்ன காரணம்?

அந்த மனிதன் தூய்மை நிலையில் அல்லது தீமையை எதிர்க்கும் நிலையில் இருந்தாலும், தீமைக்கு மேல் தீமை வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்ற தயார்நிலையில் இல்லை. ஆக, தீமைக்கு எதிரான போராட்டம், 'இனி ஒன்றும் நடக்காது' என்ற அடிப்படையில் இருக்கக்கூடாது. மாறாக, 'நடந்தால் அதை நான் எப்படி எதிர்கொள்வேன்?' என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். இது ஒரு நல்ல மேலாண்மை பாடமும்கூட. வீடு அழகாயிருக்கிறது என்று ஓய்ந்துவிடக்கூடாது. மாறாக, அழகான வீட்டிற்குத் தேவையான பாதுகாப்பு அரண் இருக்கிறதா என்றும் கவனிக்க வேண்டும்.

இரண்டாவதாக, தீய ஆவியிடமும் நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். அதாவது, விடாமுயற்சியுடன் கூடிய படைப்பாற்றல். ஒரு கதவு அடைக்கப்பட்டால், மறு கதவு திறக்கும் என்று காத்திருக்காமல், மறு கதவை தானே திறக்க நமக்குக் கற்றுக்கொடுக்கிறது இந்தக் குட்டி தீய ஆவி.

Wednesday, October 10, 2018

கேளுங்கள் கொடுக்கப்படும்

நாளைய (11 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 11:5-13)

கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறைவேண்டலில் இருக்கவேண்டிய அணுகுமுறை பற்றி அறிவுறுத்துகின்றார். தன் நண்பரிடம் நள்ளிரவில் அப்பம் வாங்கச் செல்லும் மற்றொரு நண்பரை எடுத்துக்காட்டி, 'தொந்தரவின் பொருட்டாவது கொடுக்கும்' அவரின் மனநிலையைச் சொல்கின்றார். மேலும், கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் என இறைவேண்டலில் இருக்க வேண்டிய விடாமுயற்சியையும், பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்கும் தந்தையின் அன்பையும் பற்றிச் சொல்கின்றார்.

இயேசு தரும் எடுத்துக்காட்டிலிருந்து தொடங்குவோம்.

நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரின் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வருகின்றார். 'அந்தக் காலத்தில் விருந்தினர்கள் எப்போது வருவார்கள் என்று காத்திருந்தோம். இந்தக் காலத்தில் விருந்தினர்கள் எப்போது போவார்கள் என்று காத்திருக்கிறோம்.' காத்திருக்காத விருந்தினர் ஒருவர் வருகிறார். அவரின் பசியாற்ற வேண்டும். பாலஸ்தீனம் போன்ற பாலைநிலச் சமுதாயத்தில் விருந்தோம்பல் தலைசிறந்த பண்பாகப் போற்றப்பட்டது. ஏனெனில், 'இன்று நான் விருந்தோம்பினால் இதே பாலைநிலத்தில் எனக்கு வேறொருவர் விருந்தோம்பல் செய்வார்' என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. விருந்தினர் வந்தவுடன் இவர் தன் வீட்டு அலமாரியைத் திறக்கின்றார். அங்கே ரொட்டி இல்லை. உடனடியாக இவருக்கு தன் நண்பரின் நினைவு வருகிறது. 'அவர் வீட்டில் ரொட்டி இருக்கும்' என நினைத்து அங்கே ஓடுகிறார். கதவைத் தட்டுகிறார். நண்பரின் குரல் கேட்டு அந்த நண்பர் எழுந்தாலும், படுக்கையை விட்டு எழ அவருக்கு மனமில்லை. அவரிடம் ரொட்டி இருக்கிறது. ஆனால், எழுந்து கொடுக்க அவரின் சோம்பல் தடுக்கிறது. 'நான் எழுந்தால் என் பிள்ளைகளும் எழுவார்கள்' என்று சொல்கிறார். இன்றுபோல, கணவன்-மனைவி ஒரு அறை, பிள்ளைகள் மறு அறை என்றல்ல அன்று. எல்லாரும் சேர்ந்துதான் தூங்கியிருப்பார்கள். எழுந்து, தீப்பந்தம் கொளுத்தி, அலமாரியைத் திறந்து, பாத்திரத்தை திறந்து, ரொட்டியை எடுத்து, கதவைத் திறந்து கொடுப்பது பெரிய வேலைதான். இவர் இப்படி செய்யும்போது வீட்டில் உள்ள எல்லாரின் தூக்கமும் கலையும். நட்பிற்காக எழாத அவரை நண்பரின் தொல்லை எழுப்பிவிடுகிறது. அதாவது, 'இவன் இப்படி தட்டிக்கொண்டே இருந்தாலும் பிள்ளைகள் எழுந்துவிடுவார்கள்' என்ற நிலையில் நண்பர் ரொட்டி கொடுக்கின்றார்.

ஆனால், கடவுள் அப்படியல்ல என்பதே இயேசுவின் செய்தியாக இருக்கிறது.

தட்டுகின்ற நண்பரின் விடாமுயற்சி நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு. நாம் கேட்கிறோம், தேடுகிறோம், தட்டுகிறோம். ஆனால், ஒருமுறை அல்லது இருமுறைதான் அப்படிச் செய்கிறோம். பின் சோர்ந்துவிடுகிறோம். வாழ்வில் பலவற்றை நாம் விடாமுயற்சியின்மையால் இழந்திருக்கிறோம். 'எறும்பு ஊற கல்லும் தேயும்' என்பது பழமொழி.

இரண்டாவதாக, 'மீன் கேட்டால் பாம்பு,' 'முட்டை கேட்டால் தேள்' என்ற மிகச்சாதாரண எடுத்துக்காட்டை தருகிறார். சில நேரங்களில் சில வீடுகளில் இப்படித்தான் கிடைக்கும். கேட்பது அனைத்தையும் கொடுத்துவிடும் தந்தையர் குழந்தைகளைக் கெடுத்துவிடுகின்றனர் என்பது வாழ்வியல் உண்மையாக இருக்கிறது. சில நேரங்களில் நம் அப்பாக்கள் இப்படித்தான் நமக்கு கொடுத்தார்கள். ஆனால், நம் கையில் கிடைத்த பாம்பை மீனாகவும், தேளை முட்டையாகவும் எடுத்துக்கொண்டு அமைதி காத்தோம். ஏன், கடவுளே சில நேரங்களில் அப்படித்தானே தருகின்றார். 'நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்றை நினைக்கத்தானே' செய்கின்றது.

இறுதியில் இயேசு சொல்லும் வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும்:

'தம்மிடம் கேட்கிற எல்லாருக்கும், கேட்கின்ற எல்லாவற்றையும் விண்ணகத் தந்தை கொடுத்துவிடுவது கிடையாது.' பின் எதைக் கொடுக்கிறார் அவர்? 'தூய ஆவியை.'

ஆக, தூய ஆவியைப் பெற்றுக்கொண்டவர்கள் தாங்கள் விரும்பியது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் நிறைவு கொள்வர்.

இதையே நாளைய முதல் வாசகத்தில் (கலா 3:1-5) தூய பவுலடியார், 'தூய ஆவியால் தொடங்கிய வாழ்க்கையை வெறும் மனித முயற்சிகளால் ஏன் முடித்துக்கொள்கிறீர்கள்?' என்று சாடுகின்றார்.

நாம் ஒன்று கேட்க, அவர் தூய ஆவியை நமக்கு கொடுக்கிறார் எனில், 'பாம்புக்கு பதில் மீனையும்,' 'தேளுக்குப் பதில் முட்டையையும்' கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம்.

இறுதியாக,

'கேளுங்கள்' என்பதை 'கையை நீட்டி கேளுங்கள்' என எடுத்துக்கொள்ளாமல், 'காது கொடுத்துக் கேளுங்கள்' என எடுத்துக்கொண்டால், 'அவர் சொல்வதை நாம் கேட்டால்,' 'நாம் விரும்பியதை அவர் கொடுப்பார்.'

'கேளுங்கள்' - 'காது கொடுத்து' - 'உங்களுக்கு கொடுக்கப்படும்'

Tuesday, October 9, 2018

சோதனைக்கு உட்படுத்தாதேயும்

நாளைய (10 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 11:1-4)

சோதனைக்கு உட்படுத்தாதேயும்

'ஆண்டவர் கற்றுக் கொடுத்த செபம்' என்று சொல்லப்படும் 'பரலோகத்திலிருக்கிற எங்கள் தந்தையே' என்பது வழிபாட்டிலும், விவிலியத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்படும்போது, மொழிபெயர்ப்பாளர்கள் அதிகமாக கஷ்டப்படும் ஒரு வாக்கியம்:

'எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்!'

இதை நாம், 'எங்களை சோதனையிலிருந்து விடுவித்தருளும்!' என்றும் மொழிபெயர்க்கிறோம்.

'சோதனை வரக்கூடாது' என்று செபிக்க வேண்டுமா? அல்லது 'சோதனையில் விழுந்துவிடக்கூடாது' என்று செபிக்க வேண்டுமா? என்ற குழப்பம் இதன் பின்புலத்தில் இருக்கின்றது.

'எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்' என்று நாளைய நற்செய்தி வாசகத்தில் உள்ளதால் அப்படியே எடுத்துக்கொள்வோம்.

'சோதனை' - முதல் ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனுக்கு எதிராக முணுமுணுத்தபோது அவர்கள் இறைவனை சோதிக்கின்றனர். மேலும் அவர், நாற்பது ஆண்டுகளாக பாலைநிலத்தில் அவர்களை நடக்கச் செய்து அவர்களைச் சோதிக்கின்றார். சாலமோன் அரசரின் ஞானத்தை சேபா நாட்டு அரசி சோதிக்கின்றார். புதிய ஏற்பாட்டில் இயேசு அலகையால் சோதிக்கப்படுகின்றார்.

இவ்வாறாக, 'சோதனை' பற்றிய பல புரிதல்கள் விவிலியத்தில் காணக்கிடக்கின்றன.

'நாம் பாவத்தில் விழுவதற்காக கடவுள் நம்மை சோதிப்பதில்லை' என்கிறார் யாக்கோபு (1:13). 'அவர் நம் தகுதிக்குமேல் நம்மை சோதிப்பதில்லை' என்கிறார் பவுல் (1 கொரி 10:13).

மிட்டாய்கள் நிரம்பி வழியும் கடைக்குள் ஒரு தாய் தன் குழந்தையை அழைத்துச் செல்கிறார் என வைத்துக்கொள்வோம். அந்தத் தாய் செய்வது என்ன? அவளின் குழந்தையை சோதனைக்கு அழைத்துச் செல்கிறாள். இல்லையா?

தவறுவதற்கான (தவறு என்று ஒன்றை நினைப்பதே தவறு!) எல்லா வாய்ப்புகளையும் நம்மைச் சுற்றி உருவாக்கி இருக்கும் கடவுளிடம், 'என்னை சோதனைக்கு உட்படுத்தாதேயும்' என்று சொல்வது மேற்காணும் உதாரணம் போல இருக்கிறது. ஆனல், இதற்கு அடுத்து வரும் வரியையும் இணைத்துப் பார்க்க வேண்டும்: 'தீமையிலிருந்து விடுவித்தருளும்'

சோதனையிலிருந்து தப்பிக்க, அல்லது சோதனையில் விழுந்தவிடாமல் இருக்க நாளைய முதல் வாசகம் (கலா 2:1-2,7-14) இரண்டு வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித் தருகின்றது:

அ. இலக்குத் தெளிவு

பவுலின் இலக்குத் தெளிவு. தன் பணி புறவினத்தாருக்கு என்று உறுதி செய்கின்ற பவுல் அந்த இலக்கில் தெளிவாக இருக்கின்றார். அதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் தன் தடம் மாறாமல் செல்கின்றார். பல நேரங்களில் இலக்கு தெளிவில்லாதபோது நாம் சோதனையில் எளிதாக விழுகின்றோம்.

ஆ. அடுத்தவர்களை திருப்திப்படுத்தாமல் இருத்தல்

பேதுரு தன் உடன் இருக்கும் யூதர்களை திருப்திப்படுத்துவதற்காக வெளிவேடம் கொண்டிருந்ததை பவுல் தன் திருமடலில் எழுதுகின்றார். பவுலின் தைரியம் என்னைக் கவர்கிறது. 'நீ எல்லாரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்றால் ஜஸ்க்ரிம்தான் விற்க வேண்டும்' என்பார் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். 'அடுத்தவர்கள் வருத்தப்படுவார்கள்' என நினைத்து தங்களுக்குத் தேவையற்றதை, தங்கள் உடலுக்கு ஒவ்வாததை உண்டு கஷ்டப்பட்டவர்களை நான் பார்த்துள்ளேன். 'அடுத்தவங்க மனசு கஷ்டப்படும்' என்று நினைத்து, அடுத்தவர்களை திருப்திப்படுத்திக்கொண்டே இருந்தால் நாம் தான் இறுதியில் கஷ்டப்படுவோம். ஏனெனில், அடுத்தவர்களை நாம் ஒருபோதும் திருப்திப்படுத்தவே முடியாது. பல நேரங்களில் நாம் அப்படி முனையும்போது, அவர்களை திருப்திப்படுத்துவதைவிட அவர்களை காயப்படுத்துகின்ற நிலைக்கும் ஆளாவோம். ஆக, 'நினைப்பது சரியா' அதைத் தெளிவாக - அடுத்தவர் திருப்திபட்டாலும், படவில்லையென்றாலும் - செய்து முடிக்கும்போது நாம் சோதனையில் விழ வாய்ப்பில்லை. பாவம், பேதுரு. யாக்கோபு வந்தபோது யாக்கோபை திருப்திப்படுத்த நினைக்கிறார். புறவினத்தார் வந்தபோது அவர்களைத் திருப்திப்படுத்த நினைக்கிறார். ஆனால், சில நேரங்களில் இப்படிப்பட்டவர்கள்தாம் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். 'எது தேவையோ அதுவே தர்மம்' என்பது இவர்களின் மந்திரமாக இருக்கும்.

நாளையும், என்றும் இயேசு கற்பித்த இறைவேண்டலை செபிக்கும்போது,

'சோதனைக்கு உட்படுத்தாதேயும்' என்று செபிக்கும் நேரத்தில், 'சோதனையில் விழுந்தவர்களை நாங்கள் தீர்ப்பிடாதேயும்' என்ற பரந்த மனமும் வேண்டுவோம்.


Monday, October 8, 2018

தேவையானது ஒன்றே

நாளைய (9 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 10:38-42)

தேவையானது ஒன்றே

'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக' என்று 'இறையன்பு' பற்றிய கட்டளையை முதலாகவும், 'உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக' என்று 'பிறரன்பு' பற்றிய கட்டளையை இரண்டாகவும் முன்வைக்கும் லூக்கா நற்செய்தியாளர், 'பிறரன்பிற்கு' எடுத்துக்காட்டாக 'நல்ல சமாரியன் எடுத்துக்காட்டை' முதலாகவும், 'இறையன்பிற்கு' எடுத்துக்காடடாக 'மார்த்தா-மரியா-இயேசு நிகழ்வை' இரண்டாவதாகவும் எழுதுகின்றார். இவ்வாறாக, இறையன்பும், பிறரன்பும் சமநிலையில் வைக்கப்படுகின்றன.

'நாம் நல்லதொரு வாழ்வை வாழ்வதையே கடவுள் விரும்புகிறார். நன்மைகள் நிறைந்த வாழ்வே நாம் அவருக்குத் தரும் காணிக்கை. அத்தகைய வாழ்வு எளிமை, தாழ்ச்சி, கனிவு, பரிவிரக்கம் ஆகிய மதிப்பீடுகளால் அலங்கரிக்கப்பட வேண்டும். இவை தவிர்த்த வாழ்வு வெறும் பரபரப்பான பேச்சே' என்கிறார் டால்ஸ்டாய்.

மார்த்தா-மரியா இல்லத்திற்குச் செல்கின்றார் இயேசு. மார்த்தா இயேசுவை வரவேற்கின்றார். இயேசு உள்ளே வந்தவுடன் அவருடைய காலடிகளில் அமர்கின்றார் மரியா. சற்று நேரத்தில் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகிவிடுகின்றார். அத்தோடு, 'என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்கு கவலையில்லையா?' என்று முறையிடுகின்றார்.

'நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்...ஆனால்...தேவையானது ஒன்றே (unum necessarium)' என்கிறார் இயேசு.

இங்கே, 'ஆனால்' என்ற வார்த்தை மிகவும் முக்கியமானது. 'ஆனால்' என்ற இந்த வார்த்தை அதற்கு முன் சென்ற அனைத்து வார்த்தைகளின் பொய்யை தோலுரிக்கின்றது.

'தேவையானது ஒன்றே' - இதைக் கண்டுபிடிப்பவர் மிகவும் புத்திசாலி.
கொஞ்சம் அமர்ந்து நம் வாழ்வை ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தால், அந்த வாழ்வில் எத்தனை ஓட்டங்கள் இருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்வோம். 'நான் நானாக இருக்க ஒரு ஓட்டம்,' 'நான் அடுத்தவருக்கு பிடித்தமாக இருக்க ஒரு ஓட்டம்,' 'ஓட்டத்தின்போதே அவன் எப்படி, இவள் எப்படி என்ற ஒப்புமை ஓட்டம்,' 'படிப்பு,' 'பட்டம்,' 'நண்பர்கள்,' 'உறவுகள்,' 'புதிய ஊர்,' 'புதிய உணவு,' 'அங்கே,' 'இங்கே' என ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, கடைசியில் இவை எதிலும் நம் மனம் இலயிக்காமல் இருப்பது கண்டு, 'ஆண்டவரின் காலடிகளை - இல்லை, அமைதியாகவாவது - தேடி அமர்கிறோம்.' நம்மைச் சுற்றி இருப்பவர்களும், இருப்பவைகளும் நம்மைப் போலவே குறைவானவர்கள். ஆக, குறைவு எப்படி இன்னொரு குறைவை நிரப்ப முடியும்? நிறைவான இறைவனே நம்மை நிரப்ப முடியும்.

நாளைய முதல் வாசகத்தில் (காண். கலா 1:13-24) நாம் காணும் தூய பவுலும் இதே மனநிலையைத்தான் கொண்டிருக்கின்றார். ஆண்டவரால் ஆட்கொண்ட பவுல் அதன்பின் தான் என்ன செய்தார் என்பதை கலாத்திய நகர திருச்சபைக்கு பதிவு செய்கின்றார். ஆண்டவரைக் கண்ட பவுல், 'நான் ஆண்டவரைக் கண்டேன்' என ஒவ்வொருவரிடம் சென்று தன்னை நிரூபித்துக்கொண்டிராமல், தனியே பாலைவனம் நோக்கி புறப்படுகின்றார். தன் வாழ்வின் ஓட்டம் அனைத்தும் வீண் என உணர்கிறார்.'எந்த விசுவாசத்தை அழிக்க முயன்றாரோ அதே விசுவாசத்தை அவர் அறிவிக்க தொடங்குகின்றார்.'

இவ்வாறாக, அவரின் காலடிகளில் அமர்வது அனைத்தையும் புரட்டிப்போட்டுவிடுகிறது.

இப்படி நமக்குக் கிடைக்கும் அனுபவம் ஓர் உயரிய அனுபவம்.

ஆகையால்தான், இயேசுவும், 'அவள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது' என்கிறார். நாம் வைத்திருக்கும் மற்ற அனைத்தும் நம்மிடமிருந்து எடுக்கப்படலாம். அல்லது அதை மற்றவர் ஓவர்டேக் செய்துவிடலாம்.

இம்மேலான அனுபவத்தையே, திருப்பாடல் ஆசிரியர், 'என்றும் உள்ள வழியில் என்னை நடத்தியருளும் ஆண்டவரே' (காண். திபா 139) இறைவேண்டல செய்கிறார்.

Sunday, October 7, 2018

அப்படியே செய்யும்

நாளைய (8 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 10:25-37)

அப்படியே செய்யும்

'டிட்டோ' - என்ற வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருப்போம். 'டிட்டோ' என்ற இலத்தீன் வார்த்தைக்கு 'அப்படியே' அல்லது 'ஏற்கனவே சொன்னதுபோல' என்பது பொருள்.

'நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்ற திருச்சட்ட நூல் ஆசிரியரின் கேள்விக்கு, 'திருச்சட்ட நூலில் என்ன வாசிக்கிறீர்?' என்று கேள்வியை விடையாகச் சொல்கிறார் இயேசு.

அவர் இறையன்பு மற்றும் பிறரன்பு பற்றிய கட்டளைகளைச் சொல்ல, இயேசு, 'சரியாய்ச் சொன்னீர். அப்படியே செய்யும்' என்கிறார்.

அவர் விடுவதாக இல்லை. 'எனக்கு அடுத்திருப்பவர் யார்?' என்கிறார். நல்ல வேளை, 'என் கடவுள் யார்?' அவர் கேட்கவில்லை. ஒருவேளை அவர் கேட்டிருந்தால் இயேசு என்ன நிகழ்வு சொல்லியிருப்பார்? அவரின் கேள்விக்கு 'நல்ல சமாரியன்' எடுத்துக்காட்டை சொல்கிறார் இயேசு. இறுதியில், 'நீரும் போய். அப்படியே செய்யும்!' என்கிறார்.

அப்படி அந்த சமாரியன் என்ன செய்தான்?

1. 'மெதுவாக பயணம் செய்தான்' - ஆக, வாழ்வில் வேகம் குறைக்க வேண்டும்.

2. 'அடிபட்டவரைக் கண்டான்' - ஆக, உனக்குச் சுற்றி நிகழ்வதைப் பார்க்க வேண்டும்.

3. 'அவர் மீது பரிவு கொண்டான்' - ஆக, 'நான் இவருக்கு உதவினால் எனக்கு என்ன கிடைக்கும்?' என்று கேட்காதே. மாறாக, 'நான் இவருக்கு உதவாவிட்டால் இவர் என்ன ஆவார்?' என்று கேட்க வேண்டும்.

4. 'அவன் அவரை அணுகினான்' - ஆக, இணைப்பு என்பது அணுகுவதில் ஆரம்பமாகிறது.

5. 'காயங்களில் எண்ணெயும், மதுவும் வார்த்தான்' - ஆக, எந்த நேரத்தில், எந்த இடத்தில், எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

6. 'அவற்றைக் கட்டி' - ஆக, பிளவைக் கட்டி சரிசெய்தலே அன்பின் இயல்பு.

7. 'தன் விலங்கின்மீது ஏற்றி' - ஆக, தான் நடந்து, தன் விலங்கின்மேல் அவருக்கு இடம் கொடுத்தல். அதாவது, என் சுமை ஏற்று பிறருக்கு சுகம் தருதல்.

8. 'சாவடிக்குக் கொண்டுபோய்' - ஆக, நலம் தரும் பயணம் இறுதிவரை அமைதல் வேண்டும்.

9. 'இருதெனாரியத்தை எடுத்து' - ஆக, 'என் வாழ்வின் இரண்டு நாள் சம்பளம் போனாலும் பரவாயில்லை. அதை உனக்குக் கொடுக்கிறேன். மேலும், உனக்காக இன்னும் உழைக்கிறேன்' என்ற மனநிலை பெறுதல்.

'அடுத்தவரை அன்பு செய்வதை' இயேசு 9 எளிதான படிநிலைகளாக மாற்றித் தருகின்றார் இயேசு.

சில நேரங்களில் டிட்டோவாகச் செய்வதும் நலம்.


Wednesday, October 3, 2018

மீட்பர் வாழ்கிறார்

நாளைய (4 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 10:1-2)

மீட்பர் வாழ்கிறார்

இயேசு தனக்கு முன் எழுபத்திரண்டு சீடர்களை நியமித்து, அவர்களை இருவர் இருவராக பணிக்கு அனுப்பும் நிகழ்வை நாம் நாளைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம்.மற்ற நற்செய்தியாளர்கள் இந்நிகழ்வை பதிவு செய்வதற்கும், லூக்கா பதிவு செய்வதற்கும் உள்ள பெரிய வித்தியாசம் இயேசுவின் அறிவுரைப் பகுதியின் முதல் வரியில் அடங்கியிருக்கிறது:

'...அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.'

இங்கே அறுவடையின் உரிமையாளர் கடவுள். ஆக, அனுப்பப்படுபவர் 'பணியாளருக்குரிய' நிலையில் இருக்கிறார். அவர் ஒருபோதும் உரிமையாளர் என்று தன்னை ஆக்கிக்கொள்ளக்கூடாது.

இரண்டாவதாக, 'மன்றாடுவது' அல்லது 'செபிப்பது.' நாம் நம் மொபைல் ஃபோனை சார்ஜ் செய்தால் அடுத்தவரோடு பேச முடியும். என்னதான் அழகான ஃபோனாக, ஸ்மார்ட்ஃபோனாக இருந்தாலும், அதன் பேட்டரி சார்ஜ் ஆகவில்லை என்றால், அது வெறும் பேப்பர் வெயிட்தான். ஆக, பணிக்குச் செல்பவர் முதலில் தன் உரிமையாளரோடு தொடர்பில் இருக்க வேண்டும். அவர் தன் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ள வேண்டும். இது ஒன்று இருந்தது என்றால், மற்றவை தானாகவே நிகழ்ந்துவிடும்.

ஏனெனில், தான் பணிக்குச் செல்லும் இடத்தில் உள்ள நெருக்கடி மற்றும் வசதியின்மையை அணுகுவதற்கு, தான் எதிர்கொள்ளும் வெறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு இந்த இறைவேண்டல் துணைநிற்கும்.

இதே சிந்தனைதான் நாளைய முதல் வாசகத்திலும் (காண். யோபு 19:21-27) மிளிர்கிறது.

தன் துன்பம் ஒருபுறம். தன் நண்பர்களின் குற்றம் சுமத்துதல் மறுபுறம். இப்படி அமர்ந்திருக்கும் யோபு, மிகவும் நம்பிக்கை தரும் நல்வார்த்தைகளை மொழிகின்றார்:

'என் மீட்பர் வாழ்கின்றார். என்றும் இறுதியில் மண்மேல் எழுவார்.'

அதாவது, தான் இப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், தன் மீட்பர் வாழ்கின்றார் என்ற நம்பிக்கையை யோபு இழந்துவிடவில்லை.

'இது வெறும் மண்தான்' என பல நேரங்களில் ஒன்றுமில்லாமையை உருவகப்படுத்துகிறோம். நாம் சாப்பிடும் உணவில் சுவை இல்லை என்றால், 'சாப்பாடு மண்ணு மாதிரி இருக்கு!' என்கிறோம். நாம் பேசிக்கொண்டிருக்கும் நபர் எந்தவித பதிலுணர்வும் காட்டாமல் இருந்தால், 'என்ன மண்ணு மாதிரி இருக்க!' என்கிறோம். நாம் பாடம் எடுக்க, படிக்கும் மாணவர் ஒன்றும் படிக்காமல் வந்தால், 'என்ன மண்ணு மாதிரி உட்கார்ந்திருக்க!' என்று சாடுகிறோம். இவ்வாறாக, 'மண்' என்பது 'வெறுமை' அல்லது 'ஒன்றுமில்லாமையின்' உருவகமாக இருக்கிறது.

வெறுமை அல்லது ஒன்றுமில்லாமை இருந்தாலும் அதிலிருந்து தன் மீட்பர் எழுவார் என்ற எதிர்நோக்கு கொண்டிருக்கிறார் யோபு.

இந்த எதிர்நோக்கு அவரில் உருவாகக் காரணம் அவர் கொண்டிருந்த இறை அனுபவமே.

ஆகவே, 'மீட்பர் வாழ்கிறார்' என்ற நம்பிக்கை செய்தியை, இறைவாக்காக அறிவிக்க அனுப்பப்படுபவர்கள் தாங்கள் முதலில் அந்த அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும். அந்த அனுபவம் பெற்றவர்கள் எந்தவொரு வாழ்க்கை நிலையையும் எதிர்கொள்வர்.

Tuesday, October 2, 2018

திரும்பிப் பார்ப்பவர்

நாளைய (3 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 9:57-62)

திரும்பிப் பார்ப்பவர்

'நீர் எங்கு சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்' என்று தன்னிடம் சொன்ன ஒரு இளவலிடம், சீடத்துவத்தின் சவால்களை முன்வைக்கிறார் இயேசு.

மற்ற இரு இளவல்களிடம், 'என்னைப் பின்பற்றி வாரும்,' என இயேசுவே சொல்ல, அவர்களில் ஒருவர் தன் தந்தையை அடக்கம் செய்வதிலும், மற்றவர் தன் வீட்டில் பிரியாவிடை பெறுவதையும் முன்வைக்கின்றனர்.

'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் உழுவதற்கு தகுதியற்றவர்' என்ற தன் சமகால பழமொழியால் அவர்களுக்கு விடை பகர்கின்றார் இயேசு.

இது ஒரு விவசாய உருவகம். கலப்பை என்பது இன்றைய நவீன டிராக்டர் கலப்பை, சட்டி கலப்பை, ஜே.சி.பி, பொக்லைன் என மாறிவிட்டது.

கலப்பையில் கை வைத்து உழுதுகொண்டிருக்கும்போது திரும்பிப் பார்த்தால் என்ன நடக்கும்?

அ. கலப்பை நேர் கோட்டில் செல்லாது
ஆ. உழுத இடத்தையே உழுது கொண்டிருக்கும் நிலை வரும்
இ. உழுகின்ற நபரின் காலையே கலப்பை நோகச் செய்துவிடும்

இது இயேசுவைப் பின்பற்றும் சீடத்துவத்திற்கும் பொருந்தும்.

அ. வாழ்க்கை நேர் கோட்டில் செல்லாது.
ஆ. புதியதாக எதுவும் செய்யாமல் செய்ததையே திரும்ப செய்வதில் இன்பம் காண வைக்கும்.
இ. சீடருக்கே அது ஆபத்தாக முடியும்.

மேலும், திரும்பிப் பார்க்கும்போது நாம் இறந்த காலத்திற்குள் மீண்டும் செல்கின்றோம். நாம் பழையவற்றில் இன்பம் காண எத்தனிக்கிறோம். ஆனால், வாழ்வு என்பது நிகழ்காலத்திலும், புதியது தரும் சவாலை எதிர்கொள்வதிலும் இருக்கிறது என்கிறார் இயேசு.

நாளைய முதல் வாசகத்தில் (காண். யோபு 9:1-12,14-16) யோபு கடவுள்முன் மனிதரின் இயலாமை அல்லது கையறுநிலை பற்றி முறையிடுகின்றார். அவரோடு ஒப்பிடப்பட மனிதர்கள் தகுதியற்றவர்கள் எனவும், அவரின் இரக்கம் நம்மை அவர் அருகில் அழைத்துச் செல்கிறது என்றும் சொல்கிறார்.

தூரமாக இருக்கும் கடவுள் இயேசுவில் நமக்கு அருகில் வருகிறார். அவரோடு பேசவும், அவரைப் பின்பற்றவும் நம்மால் முடிகிறது.

அவரோடு செல்லும் சீடத்துவப் பயணம் அவர்மேல் மையம் கொண்டதாக இருந்தால் நம் கலப்பை நேராக உழும்.


Monday, October 1, 2018

காவல் தூதர்கள்

நாளைய (2 அக்டோபர் 2018) நற்செய்தி (மத் 18:1-5,10)

நாளை தூய காவல் தூதர்களின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இவர்கள் யார்?

காவல் தூதர்கள் பற்றிய புரிதல் தமிழ் மரபிற்கு எளிதானது. ஏனெனில், நம் ஊர்க் கிராமங்களில், 'எல்லை தெய்வங்கள்' என்ற ஒரு சொல்லாடல் உண்டு. ஊரில் இறந்தவர்களின் நினைவாக, ஊருக்கு வெளியே சின்னச் சின்ன தூண்கள் நடப்பட்டு, இத்தூண்களுக்கு எல்லை தெய்வங்கள் என்ற பெயரும் உண்டு. சில இடங்களில் ஒட்டுமொத்த ஆண் முன்னோர்களின் அடையாளமாக, 'கருப்பசாமியும்,' பெண் முன்னோர்களின் அடையாளமாக, 'எல்லை அம்மன்', அல்லது 'அம்மன்' இருப்பர்.

இவர்களின் வேலை என்னவென்றால், ஊரைத் தீமையிலிருந்து காப்பாற்றுவது.

எங்கள் ஊராகிய நத்தம்பட்டியில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி கருப்பசாமியும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாரியம்மனும் வீற்றிருக்கின்றனர். இறந்தவர்களின் கல்லறைகள் எங்கள் ஊரின் வடக்கு-கிழக்கு பகுதியில் இருப்பதால், தீய ஆவிகளின் வழியாக ஊருக்கு எந்தவொரு தீங்கும் வரக்கூடாது என்பதற்காக இப்படி செய்தார்களா என்று தெரியவில்லை. மற்றபடி ஊருக்கு தெற்கேயும், மேற்கேயும் தெய்வங்கள் இல்லை.

கிறிஸ்தவர்களின் கல்லறைகளில் சிலுவைகள் நடப்படுவது கூட, 'எல்லை தெய்வ தூண்களின்' மரூஉவாக இருக்கலாம்.

ஆக, இருப்பவர்களை இருந்தவர்கள் காப்பாற்ற வேண்டும் என்பது இந்நம்பிக்கையின் பின்புலத்தில் இருக்கிறது. ஏற்கனவே நம்மோடு இருந்தவர்கள் இன்று நம்மோடு இல்லாதபோது அவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். ஆக, நம் கண்களுக்குக் காணாமல் நிற்கும் இவர்கள், நாம் காணாமல் இருக்கும் அனைத்து நல்லது மற்றும் கெட்டது ஆகியவற்றின் தொடர்பில் இருக்கிறார்கள். இவர்கள், இருப்பவர்களை தீமையிலிருந்து காப்பாற்றி நன்மை நோக்கி வழிநடத்திச் செல்பவர்கள்.

இன்றும் செல்டிக் என்ற சமய மரபில் இறந்தவர்கள் எல்லாரும் நட்சத்திரங்களாக மாறிவிடுகிறார்கள் என்பதும், அல்லது அவர்கள் நாம் குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று, அமரும் மண், பயன்படுத்தும் நெருப்பு என இவற்றின் மூலக்கூறுகள் ஆகிவிடுகிறார்கள் என்பதும் நம்பிக்கை.

யூத மரபில் வானதூதர் நம்பிக்கை பாபிலோனிய அடிமைத்தனத்தின்போதுதான் வந்தது. இயேசுவுக்கும் இந்த நம்பிக்கை இருப்பதை நாம் நாளைய நற்செய்தியில் பார்க்க முடிகிறது: 'இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம். கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள்'.

திருப்பாடல்களிலும் இந்த எண்ணம் சில இடங்களில் மின்னுவதை நாம் பார்க்க முடிகிறது:

'நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். உம் கால் கல்லின்மேல் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்' (திபா 91:11-12)

இதை உருவகம் செய்து பார்த்தாலே நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

நாம் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் குட்டி குட்டி வானதூதர்கள் தம் பிஞ்சுக் கைகளால் நம் உள்ளங்கால்களைத் தாங்குகின்றனர்.

கல்லின் மேல் மோதுதல் என்பது நம் கவனக் குறைவின், மூளைக்கும் காலுக்கும் உள்ள செயல்திறன் இணைப்பு குறைவின் விளைவு. மூளை தவறாகக் கணக்கிட்டாலும், நம் கவனம் சிதறுண்டாலும் இந்தக் குட்டிப்பூக்கள் நம் விரல்களை, கால்களைத் தாங்கிப் பிடித்துக்கொள்கின்றனர்.

இந்த உருவகம் நமக்குச் சொல்லும் பாடம் மிகவும் முக்கியமானது. என்ன?

நாம் கால் வைக்கும் இடத்தை, நாம் தேர்ந்தெடுக்கும் பாதையைப் பற்றி மிகக் கவனமாக நாம் இருக்க வேண்டும்.

தேவையற்ற இடங்களில், தேவையற்ற செயல்களில் நாம் ஈடுபடும்போது, நாம் இந்த குட்டி தேவதைகளையும் காயப்படுத்துவிடுகிறோம்.

நாளைய முதல் வாசகத்தில் (காண். விப 23:20-23) யாவே இறைவன் மோசேக்குத் தரும் செய்தியும் இதுவே:

'இதோ, நான் உனக்கு முன் என் தூதரை அனுப்புகிறேன். அவர்முன் எச்சரிக்கையாயிரு. அவர் சொற்கேட்டு நட. அவரை எதிர்ப்பவனாய் இராதே.'

நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கு முன்னும், காவல் தூதர்களின் பிஞ்சுக் கரங்கள் இருப்பதாக நினைத்து எடுத்து வைத்தால், எந்தப் பாதையும் நல்ல பாதையே.

நம் வீட்டில் இறந்த நம் முன்னோர்களே தங்கள் கரங்களால் நம்மைத் தாங்குகிறார்கள் என்பதும் நல்ல புரிதலே.