Sunday, January 7, 2018

ஆண்டவரின் திருமுழுக்கு

ஆண்டவரின் திருமுழுக்கு

நாளை ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

பாஸ்டர் எக்ஸ் மற்றும் பாஸ்டர் ஒய், நம்மைக் குழப்பும் பல கேள்விகளில் ஒன்று: 'நீங்க முழுக்கு ஞானஸ்நானம் பெற்றவரா?' அல்லது 'நீங்க ஆவி அபிஷேகம் செய்யப்பெற்றவரா?' 'இல்லை. நாங்க குழந்தைகளா இருக்கும்போதே எங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துட்டாங்க!' என்று நாம் குழந்தைத்தனமா பதில் சொன்னாலும், அவர்கள் நம்மை விட மாட்டார்கள். இயேசுவே 30 வயதில்தான் திருமுழுக்கு பெறுகிறார் என்றால், நாம் ஏன் குழந்தைகளாக இருக்கும்போதே திருமுழுக்கு பெறுகின்றோம்? மேலும், நீரில் அமிழ்த்துவதற்குப் பதிலாக, ஏன் நீர் நம் தலைமேல் ஊற்றப்படுகிறது? எந்த திருமுழுக்கு சரியானது?

மூன்று காரணங்கள்:

அ. இயேசுவின் காலத்தில் திருமுழுக்கு யோவான் கொடுத்த திருமுழுக்கு மனமாற்றத்திற்கான திருமுழுக்கு. அத்திருமுழுக்கு இயேசுவிற்கு தேவையில்லை. பாவம் இல்லாத ஒருவருக்கு பாவமன்னிப்பிற்கான திருமுழுக்கு எதற்கு? இயேசுவைப் பொறுத்த அளவில் திருமுழுக்கு என்பது தொடக்கம். எதற்கான தொடக்கம்? பணிவாழ்வுக்கான தொடக்கம். ஒன்று, யோர்தான் நதியை கடந்ததால் தான் பழைய இஸ்ரயேல், வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைந்தது. அதேபோல, புதிய இஸ்ரயேலின் தலைமகனாம் இயேசுவும் யோர்தானுக்குள் இறங்கித்தான் வாக்களிக்கப்பட்ட நாடாம் விண்ணரசின் செய்தியை அறிவிக்க முடியும். பழைய இஸ்ரயேலின் தலைவர் யோசுவா. புதிய இஸ்ரயேலின் தலைவரின் பெயரும் அதுவே. இரண்டு, திருமுழுக்கின்போது தந்தையின் குரல் கேட்கிறது. லூக்கா நற்செய்தியில் இது இயேசுவுக்கு மட்டுமே கேட்கும். இயேசுவின் பணிவாழ்வை தந்தையாகிய கடவுளே தொடங்கி வைக்கிறார்.

ஆ. விருத்தசேதனமா? திருமுழுக்கா? இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் திருத்தூதர்களின் போதனையால் வேகமாக வளர்ந்த திருஅவையில் ஒரு பெரிய அடையாள சிக்கல் வருகிறது. புதிய நம்பிக்கையை ஏற்றுக்கொள்பவர்களை அடையாளப்படுத்துவது விருத்தசேதனமா? அல்லது திருமுழுக்கா? யூத மதத்திலிருந்து தங்களை முற்றிலும் வேறுபடுத்திக் காட்ட விழைந்த தொடக்க கிறித்தவர்கள் திருமுழுக்கை அடையாளமாக ஏற்றுக்கொள்கின்றனர்.
இ. சமய சடங்கு. ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தையை, ஒரு சமூகத்தில் அங்கமாக மாற்றும் தொடக்கச் சடங்கே திருமுழுக்கு. பிராமண மரபில் பூணூல் அணிதல், நாட்டார் வழக்கியல் மரபில் மொட்டை எடுத்தல் போன்ற சடங்குகள் வழியே, குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டு, அந்த குழந்தை ஒரு சமயத்தின், சமூகத்தின் அங்கமாக மாறுகிறார். திருமுழுக்கின் வழியாக நாம் திருச்சபையின் உறுப்பினராகின்றோம். குழந்தை திருமுழுக்கின் அவசியம் பற்றி எழுதுகின்ற அகுஸ்தினாரும், ஒரு குழந்தை திருமுழுக்கின் வழியாக கடவுளின் குடும்பத்தில் மறுபிறப்பு எடுக்கிறது என எழுதுகின்றார். மேலும், திருமுழுக்கு சடங்கின்போது நம்மேல் பூசப்படும் கிறிஸ்மா தைலத்தால் நாமும் தூய ஆவியானவரைப் பெற்றுக்கொள்கிறோம்.

நிற்க.

திருமுழுக்கு அனுபவம் ஆண்டவர் நம்மை ஒரு நிமிடம் நிறுத்தி நம் வாழ்வின் போக்கை மாற்றும் அனுபவம்.

எப்படி?

தான் புதிதாக வாங்கிய ஆடி காரின் மேல் அந்த இளைஞனுக்கு மிகவும் விருப்பம். அதைத் தன் குழந்தைபோலப் பாதுகாத்து வந்தான். ஒரு சிறு கோடு கூட அதில் விழுந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தான். ஒரு விடுமுறை நாள் அன்று காட்டுப்பகுதிக்குச் சென்று வரலாம் என்று காரில் புறப்படுகிறான். நகரத்தை விட்டு வெளியே வந்தவுடன் பாதை அகலமாகவும், போக்குவரத்து இன்றியும் இருக்கின்றது. தன் காரின் முழு வேகத்தையும் இன்று அனுபவிக்கலாம் என்று எண்ணி மிக வேகமாகப் பயணமாகிறான். திடீரென்று 'டமார்' என்று சத்தம். யாரோ காரில் எதையோ எறிந்தது போலத் தெரிய காரை நிறுத்திவிட்டு இறங்கிப் பார்க்கிறான். அங்கே ஒரு சிறுவன் நின்று கொண்டிருக்கிறான். 'அந்தச் சிறுவன் தான் செங்கலால் எறிந்திருக்க வேண்டும்' என்று எண்ணிக் கோபத்துடன் அவனை அடிக்க ஓடுகிறான். சிறுவன் இளைஞனின் காலைப் பிடித்துக் கொண்டு 'அண்ணா! மன்னித்து விடுங்கள். உங்கள் காரைச் சேதப்படுத்த வேண்டும் என எண்ணி நான் செங்கல் எறியவில்லை. கால் நடக்க முடியாத என் தம்பியை வீல் சேரில் வைத்துத் தள்ளிக்கொண்டு பள்ளிக்குச் செல்கின்றேன். இந்தப் பள்ளம் தட்டி வீல்சேர் கவிழ்ந்து விட்டது. என்னால் தூக்க முடியவில்லை. வலி தாங்காமல் என் தம்பியும் அழுதுகொண்டிருக்கிறான். எத்தனையோ கார்களை நிறுத்திப் பார்த்தேன். யாருமே நிற்கவில்;லை. ஆகையால் தான் செங்கலால் எறிந்தேன்.' அந்த இளைஞன் விழுந்து கிடந்த வீல் சேரைத் தூக்கிநிறுத்தி தம்பியைiயும் அமரச் செய்கின்றான். அவர்களைத் தன் காரிலேயே அமரச் செய்து அவர்களின் பள்ளிக்கூடத்தில் அவர்களை விட்டுவிட்டுத் தன் வீடு திரும்புகிறான். செங்கல் பட்டு கோடு விழுந்த காரின் முன்பகுதியை அப்படியே விட்டுவிடுகிறான். ஒவ்வொரு முறை அதைப் பார்க்கும்போதும் தான் தன் வேகத்தைக் குறைத்து மற்றவர்களைப் பார்க்க வேண்டும் என நினைத்துக் கொள்கிறான். வாழ்க்கை ஓட்டத்தில் நாம் வேகமாகச் செல்லும்போது நாம் நின்று நம்மைச் சுற்றிப் பார்க்காவிட்டால் கடவுள்தான் செங்கல் எறிந்து நம்மை நிறுத்த வேண்டும்!


3 comments:

  1. திருமுழுக்கு ஞானஸ்நானமா இல்லை ஆவியால் அபிஷேகமா?, விருத்தசேதனமா? இல்லைத் திருமுழுக்கா? இப்படிப்பட்ட கேள்விகளைத்தாண்டி நாம் குழந்தைப்பருவத்தில் பெறும் திருமுழுக்கு ஞானஸ்நானம் நம்மை இறைவனின் குடும்பத்தில். அங்கத்தினராக்குவதோடு,அப்பொழுது பூசப்படும் கிறிஸ்மா திருத்தைலத்தால் நாம் தூய ஆவியானவரைப்பெறுகிறோம் என்பதும் தூய அகுஸ்தினாரோடு இணைந்து நாமும் நம்பும் சத்தியம். ஆனால் இதையும் தாண்டி திருமுழுக்கு என்பது " ஆண்டவர் நம்மை ஒருநிமிடம் நிறுத்தி நம் வாழ்க்கையின் போக்கை மாற்றும் அனுபவம்" என்று கூறும் தந்தை அவரது கூற்றை ஒரு அழகான வாழ்க்கை நிகழ்வோடு புரிய வைக்கிறார்.வீல்சேரோடு இணைந்து விட்ட தன் தம்பிக்காகப் புத்தம் புதுக்காரை செங்கல்லை எறிந்து நிறுத்திய அண்ணனா?இல்லைத் தன் புத்தம் புதுக்காரின் சேத்த்தையும் ஒரு பொருட்டாக மதியாமல் அண்ணன்,தம்பி இருவரையும் தன் காரில் அழைத்துச்சென்ற இளவலா? ...ஒருவர் மற்றவரை மிஞ்சி நிற்கின்றனர்.ஆம்! நம் வாழ்க்கை ஓட்டத்தில் நாம் வேகமாகச் செல்லும்போது நம்மைச்சுற்றி நின்று பார்க்காவிட்டால் கடவுள் தான் செங்கல் எறிந்து நம்மை நிறுத்த வேண்டும்" தந்தையின் கூற்றுக்கு அப்பீல் ஏது? வாழ்க வளமுடன்!!!

    ReplyDelete