Monday, January 29, 2018

அவர் தொட வருகின்றார்!

நாளைய (30 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 5:21-43)

அவர் தொட வருகின்றார்!

'இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்பெற்றெழுதலும்' என்னும் நிகழ்வை மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் (மத் 9:18-26, மாற் 5:21-43, லூக் 8:40-56) பதிவு செய்கின்றனர். ஆனால், இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்த யோவான் (காண். மாற் 5:37) இதை பதிவு செய்யவில்லை.

மாற்கு நற்செய்தியாளரின் பதிவைத்தான் இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கின்றோம்.

இந்த நற்செய்திப் பகுதியை மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. யாயிர் தன் மகளைக் காப்பாற்ற இயேசுவை அழைத்தல் (5:21-23)
ஆ. இயேசுவின் பயணம் - பயணத்தின்போது நடைபெறும் முதல் புதுமை (5:24-34)
இ. சுகம் பெற வேண்டிய மகள், உயிர் பெறுதல் (5:35-43)

மத்தேயு நற்செய்தியாளர் யாயிரின் மகள் முதலிலேயே இறந்துவிடுவதாக எழுதுகின்றார் (மத் 9:18-19). சிறுமிக்கு பன்னிரண்டு வயது என்பது மாற்கு இறுதியில் சொல்கின்றார் (5:42). ஆனால், லூக்கா அதை முதலில் சொல்கின்றார் (8:42). மாற்கு நற்செய்தியில் இயேசு உயிர்பெற்ற குழந்தைக்கு கடைசியாக சாப்பாடு கொடுக்கச் சொல்கின்றார் (8:43). ஆனால் லூக்காவில் அவள் உயிர்பெற்றவுடன் சாப்பாடு கொடுக்கச் சொல்கின்றார் (8:55). ஆக, ஒத்தமவு நற்செய்தியாளர்களின் பதிவு ஒன்றுக்கொன்று மாறுபடுகிறது.

2. இந்த நற்செய்திப் பகுதியை வெறும் இலக்கியப் பகுதியாக வாசித்தாலும் அங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது. என்ன பிரச்சினை? இயேசுவின் இரண்டு புதுமைகள் (பெண் நலம் பெறுதல், சிறுமி உயிர்பெறுதல்) வௌ;வேறு இடத்தில் சொல்லப்பட்டவை, பிற்காலத்தில் பிரதி எடுப்பவர்களின் தவற்றால் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டதா? அல்லது வேறு வேறு வாய்மொழியாக வந்த கதைகளை நற்செய்தியாளர்கள் ஒன்றாக இணைத்துவிட்டனரா? இயேசுவோடு பயணம் செய்த பெரிய கூட்டம், யாயிரின் வீடு வரவர குறைந்து போவதன் காரணம் என்ன? கதைத்தளமும், அந்தத் தளத்தில் பிரசன்னமாகியிருக்கும் நபர்களும்கூட மாறுபடுகின்றனர். சாலை, கூட்டம், நெரிசல் என இருந்த கதைதளம், திடீரென வீடு, மூன்று சீடர்கள், சிறுமி என மாறிவிடுவதன் பொருள் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?

அ. மாற்கு நற்செய்தியாளரின் இலக்கிய உத்தி. என்ன இலக்கிய உத்தி? ஒப்புமை. அதாவது, ஒற்றுமை-வேற்றுமையின் வழியாக ஒரு பொருளை உணர்த்துவது. இந்த நற்செய்திப் பகுதியில் இரண்டு அறிகுறிகள் அல்லது புதுமைகள் நடக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை - ஒருவர் நலம் பெறுகிறார். மற்றவர் உயிர் பெறுகிறார். இரண்டு பேரும் பெண்கள். ஒருவர் வறுமையில் வாடியவர். மற்றவர் செல்வச் செழிப்பில் திளைத்தவர். இருவருக்குமே பொதுவாக இருப்பவை 12 ஆண்டுகள் - முதல் பெண்ணுக்கு 12 ஆண்டுகள் துன்பம், இரண்டாம் பெண்ணுக்கு 12 ஆண்டுகள் மகிழ்ச்சி. முதல் பெண்ணுக்கு பரிந்து பேச எவரும் இல்லை. ஆனால் இரண்டாம் பெண்ணுக்கு பரிந்து பேச தந்தை, இறந்த நிலையில் அழ வந்திருந்த நண்பர்கள், உறவினர்கள். இருவரையும் குணமாக்குவது இயேசுவின் தொடுதல்: முதல் நிகழ்வில் பெண் இயேசுவைத் தொடுகின்றார். இரண்டாம் நிகழ்வில் இயேசு சிறுமியைத் தொடுகின்றார். முதல் நிகழ்வில் கூட்டம் மௌனம் காக்கிறது. இரண்டாம் நிகழ்வில் கூட்டம் மலைத்துப் போகிறது.

ஆ. இரண்டாம் நிகழ்வு நடப்பதற்கு முதல் நிகழ்வு தளத்தைத் தயாரிக்கிறது. அல்லது முதல் நிகழ்வின் தாமதம்தான் இரண்டாம் நிகழ்வு நடக்க காரணமாக அமைகிறது. முதல் நிகழ்வு நடப்பதற்கு முன் சிறுமி உடல்நலம் இல்லாமல் இருக்கிறாள். ஆனால், அந்தச் சிறுமி இறக்கவும், இறப்பு செய்தி அவளின் அப்பாவைத் தேடி வருவதற்கும், இறந்தவுடன் அழுவதுற்கு அவளின் குடும்பத்தார் கூடி வருவதற்கும் நேரம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தை உருவாக்கிக்கொடுக்கிறது முதல் நிகழ்வு. ஆக, முதல் நிகழ்வில் வரும் இரத்தப்போக்குடைய பெண், கூட்டம், நெரிசல் அனைத்தும் கதையின் கரு வளர்ச்சிக்கு உதவி செய்கின்றன.

இ. பயணநடை இலக்கிய உத்தி. நற்செய்தியாளர்கள் பயன்படுத்தும் மற்றொரு உத்தி 'பயணநடை'. அதாவது, இயேசுவின் வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் அவரின் பயணத்தில் நடப்பதாக எழுதுவது. மிக நல்ல உதாரணம், இயேசுவின் எம்மாவு பயணம். இந்த நடையின் உட்கூறுகள் என்ன? பயணத்தின் தொடக்கம், பயணம், மற்றும் பயணத்தின் முடிவு. இன்றைய நற்செய்தியில் இயேசு மறுகரையிலிருந்து யாயிரின் இல்லத்திற்குப் பயணம் செய்கிறார். பயணத்தின் தொடக்கத்தில் சீடர்கள் அல்லது கூட்டம் இயேசுவின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றது. பயணத்தின் இறுதியில் கூட்டம் இயேசுவைக்கண்டு மலைத்துப்போய் அவரில் மேல் நம்பிக்கை கொள்கிறது. ஆக, நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு இயேசு மக்களை பயணம் செய்ய வைக்கின்றார். இந்தப் பயணத்தின் மையமாக இருப்பது நம்பிக்கை பற்றிய இயேசுவின் வார்த்தைகள்: குணம்பெற்ற பெண்ணிடம் இயேசு, 'மகளே, உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று!' என்கிறார் (5:34). உயிர்பெற வேண்டிய மகளின் தந்தையிடம், 'அஞ்சாதீர். நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' என்று கூறுகிறார் (5:36). ஆக, இந்த மையம் தெளிவானால், பயணநடை தெளிவாக விளங்குகிறது.

ஆக, இலக்கிய அடிப்படையில் அல்லது கதையியல் அடிப்படையில் பார்த்தால் ஒரே நிகழ்வுதான் இரண்டு தளங்களில் வளர்ச்சி பெறுகின்றது. ஆக, இவைகள் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.

3. முதல் புதுமை. இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதல் (5:24-34). யாயிரின் வேண்டுதலுக்கு இணங்கிய இயேசு அவரின் இல்லம் நோக்கிப் புறப்படுகிறார். வாசகரின் மனம் யாயிரின் மகளுக்கு என்ன ஆகுமோ என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், புதிய கதாபாத்திரத்தை உள்நுழைக்கின்றார் மாற்கு. இரத்தப்போக்கினால் வருந்திய பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவில்லை. கூட்டத்தில் ஒருவராக அவர் நிற்கிறார். கூட்டத்தில் நிற்கும்போது நமக்கு பெயர் தேவைப்படுவதில்லைதானே. அவரைப் பற்றி மூன்று விடயங்களைக் குறிப்பிடுகிறார் மாற்கு: அவள் பன்னிரண்டு ஆண்டுகளாய் அவதிப்படுகிறாள், மருத்துவரிடம் தன் பணத்தையெல்லாம் இழந்துவிட்டாள், இப்போது இன்னும் கேடுற்ற நிலையில் இருக்கிறாள். இப்படிப்பட்ட ஒரு பெண் மற்றவர்களைத் தொடுவது தீட்டு என்று சொன்னது லேவியர்நூல் 15:19-33. 'இயேசுவைத் தொட்டால் நலம் பெறுவேன்!' என அவள் சொல்லிக்கொள்கிறாள். ஒருவரின் தொடுதல்கூட குணமாக்க முடியும் என அக்காலத்தவர் நம்பினர். ஏன் ஒருவரின் நிழல் பட்டால்கூட நலம் பெற முடியும் என அவர்கள் நம்பியதால் தான் பேதுருவும், யோவானும் சாலையில் செல்லும்போது நோயுற்றவர்களை கட்டிலில் கொண்டுவந்து கிடத்துகின்றனர் (காண். திப 5:15). கூட்டத்தின் நடுவே வந்து தொடும் அவளின் துணிச்சல் அவள் எந்தவிதத் தடைகளையும் தாண்டத் தயாராக இருந்தாள் என்பதையும், எந்த அளவிற்கு தன் நோயினால் கஷ்டம் அனுபவித்திருப்பாள் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. இயேசு தன் உடலிலிருந்து ஆற்றல் வெளியேறுவதை உணர்கிறார். வழக்கமாக, மற்றவர்களின் மனதில் இருப்பவற்றை இயேசு உணர்வார் என்று சொல்லும் மாற்கு, இங்கு இயேசு தன்னில் நடப்பதை தான் உணர்வதாகச் சொல்கின்றார். 'யார் என்னைத் தொட்டது?' என்ற இயேசுவின் கேள்விக்கு, சீடர்கள், 'இவ்வளவு கூட்டம் நெரிசலாக இருக்கிறது! இங்க போய் யார் தொட்டது? யார் இடிச்சதுன்னு? கேட்குறீங்களே?' என்று பதில் சொல்கின்றனர் சீடர்கள். இது ஒரு 'முரண்பாடு' - என்ன முரண்பாடு? இயேசுவுக்கு அருகில் இருக்கும் சீடர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், தூரத்தில் இருக்கும் ஒரு பெண் அவரைக் கண்டுகொள்கின்றார். பயம் தொற்றிக்கொள்கிறது அந்தப் பெண்ணை. இரண்டு வகை பயம்: ஒன்று, தான் 'திருடியது' கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பது. மற்றொன்று, தான் இயேசுவைத் தீட்டாக்கிவிட்டோம் என்பது. ஆனால், இயேசு தூய்மை-தீட்டு பற்றி கவலைப்படுபவர் அல்லர். இயேசு அந்தப் பெண்ணை இப்போது அடுத்தநிலை குணமாக்குதலுக்கு அழைத்துச் செல்கின்றார். அவரின் நம்பிக்கையைப் பாராட்டுகின்றார். 'மகளே' என்று அவரை அழைப்பதன் வழியாக தன் இறையரசுக் குடும்பத்தில் உறுப்பினராக்குகின்றார் இயேசு.

4. இரண்டாம் புதுமை. யாயிரின் மகள் உயிர் பெறுதல். தன் மகளுக்கு சுகம் வேண்டி வந்தவர், தன் மகளின் உயிர் பெறுகிறார். இரத்தப்போக்குடைய பெண்ணின் எதிர்ப்பதமாக நிற்கிறார் யாயிர். தொழுகைக்கூடத் தலைவர். ஆக, கடவுளை யார் பார்க்கலாம், பார்க்கக்கூடாது என்று சொல்லக்கூடியவர் இவர். நிறைய பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர். தனக்கென வேலையாட்களையும் வைத்திருக்கின்றார். ஆனாலும், எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு தன் மகளுக்கு நலம் கேட்டு இயேசுவின் காலடியில் கிடக்கின்றார். தொழுகைக்கூடத்தலைவர் இயேசுவின் காலில் விழுகிறார் - இயேசு உயிர்த்த சில ஆண்டுகள் கழித்து, புதிய நம்பிக்கை கொண்டவர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் யூதர்களின் தொழுகைக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மாற்கு நற்செய்தியாளரின் திருச்சபையும் இப்படி வெளியேற்றப்பட்டிருக்கலாம். ஆனால், தொழுகைக்கூட தலைவரையே இயேசுவின் காலில் விழ வைப்பதன் வழியாக இயேசுவை தொழுகைக்கூடத்தை விட மேலானவர் என்றும், இயேசுவைச் சந்திக்கு தொழுகைக்கூடம் தேவையில்லை, சாலையோரம் கூட அவரைச் சந்திக்கலாம் என்ற மாற்று சிந்தனையை விதைக்கின்றார் மாற்கு. முதல் புதுமை இரண்டாம் புதுமையின் இடையில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் யாயிரின் மகள் இறந்து, அந்த இறப்பு செய்தி யாயிரின் காதுகளையும், இயேசுவின் காதுகளையும் எட்டுகிறது. 'துணிவோடிரும்! நம்பிக்கை கொள்ளும்!' என தைரியம் தருகிறார் இயேசு. யாயிரின் வீடு வருகிறது. தன் நெருக்கமான மூன்று சீடர்களுடன் (காண். 9:2, 14:33) உள் நுழைகிறார். இடையில் கூட்டத்தினரின் தடை - அதாவது, அவர்களின் கிண்டல். சிறுமியைத் தொட்டு எழுப்புகிறார். மக்கள் வியக்கின்றனர்.

5. இந்த நிகழ்வுகள் சொல்லும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

அ. துணிச்சல். 'இதற்கு மேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது!' என்று தன் நோயின் பாரம் தாங்க முடியாத பெண் இயேசுவைத் தொடும் துணிச்சல் பெறுகின்றார். தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு நபருக்கு அந்த நேரத்தில் தேவை நல்ல ஆடையோ, கையில் மோதிரமோ, காலில் செருப்போ அல்ல. மாறாக, மூச்சு. மூச்சு ஒன்றுதான். இயேசுவை நாம் தேடுவது 'நாம் செய்யும் பத்து வேலைகளில் ஒன்றாக இருக்கக் கூடாது!' அது ஒன்றே நம் தேடலாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் நலம் பெற முடியும். 'கேட்போம்! கிடைச்சா கிடைக்கட்டும்!' என்ற மனநிலையில் கடவுளை நாடிச் சென்றால் நாம் நலம்பெறுதல் இயலாது. ஆக, நம் உள்ளத்திலிருக்கும் தடையைக் களையும் துணிச்சலும், நம் வெளியில் இருக்கும் கூட்டம் அல்லது தூரம் என்னும் தடையைத் தாண்டும் துணிச்சலும் நமக்குத் தேவை.

ஆ. மாய மந்திரமா அல்லது நம்பிக்கையா? 'உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று!' என்று சொல்வதன் வழியாக இயேசு தன் உடலில் அல்லது ஆடையில் நலம்தரும் சக்தி இல்லை என்று கூறவில்லை. மாறாக, மாய மந்திரம் தான் நலம்தருகிறது என்ற நம்பிக்கையிலிருந்து அந்தப் பெண்ணை விடுதலை செய்கின்றார். ஆக, தீர்த்தம் என் மேல் விழுந்தால் நான் நலம் பெறுவேன், எண்ணெய் தடவினால் நலம் பெறுவேன், இயேசுவின் கல்லறையில் வைக்கப்பட்ட துணியைத் தொட்டத்தால் நலம் பெறுவேன் என்று சொல்வது மூட நம்பிக்கை. அவைகள் நமக்கு விடுதலை தருவதில்லை. நம் உள்ளத்தில் இருக்கும் நம்பிக்கைதான் விடுதலை தருகிறது. ஆக, கடவுளின் ஆற்றலை 'வெளியில்' இருந்து 'உள்ளுக்குள்' இழுத்துக்கொண்டு வருகிறார் இயேசு. நாம் கடவுளின் ஆற்றலை வெளியில் பார்க்கும்போது என்ன ஆபத்து வரும் என்றால், நாம் மனிதர்களை கடவுளாக்கி விடுகிறோம்? எப்படி? அந்த ஃபாதர் செபம் பண்ணுனாதான் நலம் கிடைக்கும், அல்லது அவர் சொல்றதெல்லாம் நடக்கும், அவர் கைவெச்சி செபிச்சா பிரச்சினை தீரும் என்று நாம் மனிதர்கள்பின் ஓடும்போது, நாம் அவரைக் கடவுளாக்கிவிடுகிறோம். ஆனா, அவரு நம்ம தலைமேல கைவைப்பது போல நம்ம பர்சுலயும் கைவைக்கிறார் என்பதை மறந்துவிடுகிறோம். இதில் சிலர் அருட்பணியாளர்களை ஒப்பீடும் செய்யத் தொடங்குவார்கள். அவர் நலம் தருகிறார். அவர் நல்ல ஃபாதர். இவரிடம் ஒன்றுமில்லை. இப்படியாக, ஒருவரை மற்றவர்மேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் நிலை வந்துவிடுகிறது.

இ. நோயுற்றவரும், மருத்துவ உலகமும். இரத்தப்போக்குடைய பெண் தன் சொத்துக்களையெல்லாம் மருத்துவர்களிடம் இழந்து விடுகின்றாள். அரசு மருத்துவமனையிலோ, அப்பல்லோ மருத்துவமனையிலோ கொஞ்சநேரம் சென்று நின்று பாருங்கள். பணம் இருந்தால் நலம். பணம் இருந்தால் மட்டுமே நலம். மக்களின் அவசரத்தையும், உறவினர்களின் பதற்றத்தையும் மருத்துவமனைகள் காசாக்கி விடுகின்றன. காசை வாங்கிவிட்டு ஒரு கையெழுத்தும் வாங்கிவிடுவார்கள். எதற்காக? ஒருவேளை அவர் நலம்பெறவில்லையென்றால், அல்லது இறக்க நேரிட்டால் அதற்கும், மருத்துவமனைக்கும் சம்பந்தமில்லையாம். என்ன ஒரு ஏமாற்றுவித்தை? எப்படியாவது என் வீட்டுக்காரர் பிழைக்க வேண்டும் என்று நினைக்கின்ற ஏழை மனைவி (யாயிரைப் போல) தன் ஒற்றை வடத் தாலியையும் விற்கத் துணிகின்றாள். உடல்நலனை உறுதி செய்ய வேண்டிய அரசும், காப்பீடு, ஊழல், தரமற்ற மருத்துவம் என மக்களின் உயிரோடு விளையாடி, அதில் வியாபாரம் செய்கிறது. காசிருப்பவர்கள் மட்டும்தான் உயிர்வாழ தகுதியுள்ளவர்கள் என்ற ஒரு புதிய விதியை நாம் நமக்குத் தெரியாமலேயே எழுதிக்கொண்டிருக்கிறோம்.


ஈ. தொடுதிரை உலகம். இன்று நம் செல்ஃபோன்கள் எல்லாம் ஸ்மார்ட்ஃபோன்கள் ஆகிவிட்டன. பொத்தான்கள் எல்லாம் தொடுதிரைகளாகிவிட்டன. நாம் தொட்டால் போதும், நினைப்பது நடக்கின்றது. இந்த தொடுதிரைஉலகின் முன்னோடி இரத்தப்போக்குடைய பெண்தான். தொடுகிறாள் இயேசுவை. அவள் நினைப்பது நடந்தேறுகிறது. இன்று நாம் நம் கையில் இருக்கும் தொடுதிரைகளைத் தொடும் அளவிற்கு மற்றவர்களைத் தொடுவதில்லை. நம் செல்ஃபோனோடு நெருக்கமாக இருக்கும் நாம், நம் பக்கத்துவீட்டுக்காரரோடு தூரத்தில் இருக்கிறோம். மேலும், யாரும் நம்மைத் தொடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கின்றோம். தூய்மை-தீட்டு என்றும் நாம் மற்றவர்களைத் தொட மறுக்கின்றோம். ஆனால், ஒவ்வொரு தொடுதலிலும் ஒரு குணமாதல் இருக்கின்றது என்பதை நினைவில் கொள்ள இன்றைய நற்செய்தி அழைக்கின்றது.

உ. சுகம் கேட்டவருக்கு உயிர் கிடைக்கிறது. கடவுளின் முன் ஒன்றை இழக்கும்போது நாம் பலவற்றைப் பெற்றுக்கொள்கின்றோம். நாம் கொஞ்சம் என கடவுளிடம் கேட்டு நின்றால், அவர் நம் கைநிறைய திணித்துவிடுகிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் கொஞ்சம் இழக்க வேண்டும். யாயிர் தன் அதிகாரத்தையும், பணபலத்தையும் இழந்து இயேசுவின் முன் முழந்தாளிடுகின்றார். உன் மகளுக்கு சுகம் என்ன, புதிய உயிரையே தருகின்றேன் என்று கைநிறையக் கொடுக்கின்றார் இயேசு.

ஊ. இறப்பு என்பது தூக்கம். 'சிறுமி இறக்கவில்லை. உறங்குகிறாள்!' (5:39) என்று இறப்புக்கு புதிய விளக்கம் தருகின்றார் இயேசு. 'தூக்கம் ஒரு சிறிய இறப்பு, இறப்பு ஒரு நீண்ட தூக்கம்' என்பார் ஷேக்ஸ்பியர். தூக்கம் நமக்கு புத்துணர்ச்சி தருவதுபோல, ஓய்வு தருவதுபோல உறக்கமும் நமக்கு புத்துணர்ச்சியும், ஓய்வும் தருகின்றது. தூங்கி விழிப்பது போல நாம் புதிய வாழ்விற்கு உயிர்த்துவிடுகிறோம். ஆக, இறப்பு பற்றிய பயம் நமக்கு தேவையில்லை.

எ. 'போ' மற்றும் 'உணவு கொடு!' இரண்டு அற்புதங்களின் நிறைவிலும் இயேசு இரண்டு கட்டளைகள் இடுகின்றார். பெண்ணிடம் 'போ' என்கிறார். சிறுமியின் தாயிடம், '(குழந்தைக்கு) உணவு கொடு!' என்கிறார். இயேசுவால் தொடப்பட்டவுடன் நாம் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். இயேசுவைப் பற்றிக்கொள்வதல்ல ஆன்மீகம். நாம் தொட்ட இயேசுவை அடுத்தவர்களுக்கு எடுத்துச்செல்வதே இயேசு விரும்பும் ஆன்மீகம். பற்றிக்கொள்ளும்போதுதான் 'நான் சரி – அடுத்தவர் தவறு' என்ற பாகுபடுத்தும் மனம் பிறக்கின்றது. பற்றிக்கொள்ளும்போதுதான் கடவுள் ஒரு மயக்கமருந்தாக மாறுகின்றார். தொடுதலும், விடுதலும், பிறரை விடுவித்தலும்தான் ஆன்மீகம். இதுதான் இறைநம்பிக்கையின் அடுத்த கட்டம். ஆக, இயேசுவைத் தொட்ட நாம் பிறரைத் தொடப் புறப்பட வேண்டும். இரண்டாவதாக, உணவு கொடுத்தல் என்பது இரண்டாவது உயிர் கொடுத்தல் போன்றது. நாம் பசியால் வாடும் ஒருவருக்கு உணவு கொடுக்கும்போது அவருக்கு உயிரைக் கொடுப்பவர்களாகிவிடுகின்றோம்.

அவரைத் தொட நெருங்கிச் செல்லும் உங்களை, அவர் தொட வருகின்றார்!

1 comment:

  1. இன்றையப் பதிவைப்பார்த்தவுடன் 'ஆ' என்றது என் மனம் அதன் நீளம் கருதி. ஆயினும் தந்தையின் முயற்சியைப் போற்றும் நல்லெண்ணத்தில் பதிவைப் படித்து முடித்த எனக்கு மூச்சு முட்டியது உண்மை.தனக்குத் தெரிந்த அத்தனையையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவருக்கு.ஆனால் என்னைப்போன்ற " people of simple faith"க்கு அத்தனையையும் மனத்தில் ஏற்றிக்கொள்வது கொஞ்சம் கடினமே! ஆகவே என் மனத்தைத்தொட்ட வார்த்தைகளை மட்டுமே இங்கே குறிப்பிட விழைகிறேன்." மகளே! உன் நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று", மற்றும் " அஞ்சாதீர்! நம்பிக்கையை மட்டும் விடாதீர்!" என்பவையே அவை. யாயிர் போன்று கடவுளின் முன் நாம் "ஒன்றை" இழக்கும் போது அவர் நம் கையில் பலவற்றைத் திணித்து விடுகிறார் என்பது உண்மை எனில் அந்த "ஒன்றை" இழக்க நாம் ஏன் தயங்க வேண்டும்?அவரைத் தொட நெருங்கிச் செல்லும் நம்மை அவர் தொட விரும்புகிறார் என்பதும்,அப்படி அவரால் தொடப்பட்ட நாம் பிறரைத்தொடப் புறப்பட வேண்டும் என்பதும் இன்றையப் பதிவு எனக்குச் சொல்லும் பாடம்.இதோ! நானும் புறப்பட்டு விட்டேன் என்னைச் சுற்றியுள்ளோரைத்தொட.இதற்கொரு தூண்டுகோலான தந்தைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!!!

    ReplyDelete