Thursday, January 11, 2018

நாலு பேரும், நாற்பது பேரும்

நாளைய (12 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 2:1-12)

நாலு பேரும், நாற்பது பேரும்

'நாலு பேரு நம்மள என்ன நினைப்பாங்க?'

'நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்க! கவனமாக இரு!'

என்னும் சொல்லாடல்கள் நம் வழக்கில் உண்டு. இந்த நான்கு பேர் யார் என்பதற்கு விளக்கம் சொல்லும் கவியரசு கண்ணதாசன், நாம் இறந்தபின் நம்மைச் சுமந்து செல்லும் நாலு பேரே அவர்கள் என்கிறார். அதாவது, நம் இறுதியை நினைத்து ஒவ்வொரு நாளும் வாழ்ந்தால் நாம் நன்றாக வாழ்வோம் என்பது கண்ணதாசன் தரும் பொருள்.

நாளைய நற்செய்தியிலும் (காண். மாற்கு 2:1-12) ஒரு நாலு பேரை நாம் பார்க்கிறோம்.

முடக்குவாதமுற்ற ஒருவரை இந்த நான்கு பேர் இயேசுவிடம் தூக்கிக்கொண்டு வருகின்றனர். இவர்கள் என்னை ஆச்சர்யப்பட வைக்கிறார்கள். எப்படி?

முடக்குவாதமுற்ற நபர் விண்ணப்பம் செய்யாமலேயே இவர்கள் அவர்மேல் அக்கறை கொண்டு அவரைத் தூக்கி வருகின்றனர். கட்டிலில் நான்கு பேர் சுமந்து வருவதைப் பார்த்தவர்கள் கண்டிப்பாக இவர்களைக் கேலி செய்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.

மேலும், இயேசுவைச் சுற்றி கூட்டம் அமர்ந்திருந்தாலும் ஒரு மாற்று வழியை யோசிக்கின்றனர். யார் வீட்டுக் கூரையோ, இவர்கள் வேகமாக பிரித்து விடுகின்றனர். இயேசு போதனையை முடிக்கும் வரை காத்திருக்கும் பொறுமையும் இவர்களிடம் இல்லை. தாங்கள் நினைத்ததை தெளிவாகவும், வேகமாகவும் செய்து முடிக்கின்றனர்.

இந்த நான்கு பேருக்கு எதர்பதமாக அந்த வீட்டில் நாற்பது பேர் இருக்கின்றனர்.

முணுமுணுக்கின்றனர். கேள்வி கேட்கின்றனர். கடின உள்ளம் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் இயேசுவையோ, முடக்குவாதமுற்றவரையோ, தூக்கி வந்தவர்களையோ பாராட்டவில்லை. இவர்கள் பார்வை எல்லாம் எதிர்மறையாகவே இருக்கின்றது.

ஆக, ஒரே ஊரில், ஒரே குழுமத்தில், ஒரே சமூகத்தில் இரண்டு வகையான மக்களும் நம்மைச் சுற்றி இருக்கின்றார்கள்.

நாம் கூப்பிடாமலேயே நமக்கு உதவி செய்பவர்களும் இருக்கிறார்கள்.

நாம் கூப்பிடாமலேயே நமக்கு எதிரிகளாக வருபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், தனி மனிதர் என்ன செய்ய வேண்டும்?

'தன் கட்டிலைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு நடக்க வேண்டும்'

ஆக, குழுமம் என்பது நாம் உயரம் தாண்டுதல் விளையாட்டில் பிடித்திருக்கும் குச்சி போன்றது. குச்சியைப் பிடித்துக்கொண்டே இருந்தால் நாம் அந்தப் பக்கம் தாண்ட முடியாது. குச்சியை விட வேண்டிய இடத்தில் விட்டு அடுத்த கட்டத்திற்கு நகல வேண்டும்.

இன்று நான் என் குச்சியை விட்டுவிட தயரா?

குழுமத்தில் நான் யார்? நான்கில் ஒருவரா? நாற்பதில் ஒருவரா?

1 comment:

  1. கேட்காமலே உதவச் சென்ற நாலுபேர்; இவர்களைக் கேலிப்பொருளாக்கிய நானூறு பேர்....இவர்களில் நான் எந்த குழுமத்தைச்சேர்ந்தவள்? தந்தையின் வரிகள் என்னுள் எழுப்பும் கேள்வி இது.வாழ்ந்தாலும்,தாழ்ந்தாலும் பேசும் சமூகத்தில் தான் நாமிருக்கிறோம். நமக்கு உதவ வரும் குச்சியாக வரும் சமூகம் நம் காலை வாரவும் செய்யலாம். அப்படிப்பட்ட தருணங்களில் அந்தக்குச்சியைத்தூர எறிந்துவிட்டு அந்த 'நான்கில்' ஒருவராகப் பயணிப்பதே ,சுய'புத்தியுள்ள மனிதனுக்கு அழகு. கண்ணதாசனின் வரிகளாகத் தந்தை தரும் அந்தக் கொசுறு செய்தி..." இறுதியை நினைத்து ஒவ்வொரு நாளும் வாழ்ந்தால் நாம் நன்றாக வாழ்வோம்." ஆம்! காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வதுதானே அழகு! தந்தைக்கு என் காலை வணக்கம்!!!

    ReplyDelete