Sunday, January 28, 2018

நீ வர வேண்டாம்!

நாளைய (29 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 5:1-20)

நீ வர வேண்டாம்!

இயேசு படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமால், அவரைப் பார்த்து, 'உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம் மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்' என்றார். (மாற்கு 5:18-19)

கெரசேனர் பகுதியில் இயேசு பேய்பிடித்தவர் ஒருவரை நலமாக்குகின்றார். பேயின் பெயர் 'லெகியோன்' - அதாவது படை (உரோமைப் படைவீரர்கள் 1000 பேர் குழுவாக இருப்பதற்குப் பெயர் லெகியோன்'. ஒரு மனிதருக்குள் ஆயிரம் பேர் இருந்தால் எப்படி இருக்கும்? பாவம் அவர் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார்?

இந்த நற்செய்திப் பகுதியில் எனக்கு மூன்று நிகழ்வுகள் வியப்பைத் தருகின்றன:

1) இயேசு பேயை பன்றிகள் கூட்டத்திற்குள் அனுப்புகின்றார். ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அழிந்து போகின்றன. எதற்காக ஒரு அழிவிலிருந்து இன்னொரு அழிவு? பன்றிகளை அழிக்காமல் இயேசு பேய் பிடித்தவருக்கு நலம் தந்திருக்கக் கூடாதா? அல்லது இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தால் ஏன் அவர் பேயை தன்மேல் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது? நம்மூர் முனி திரைப்படம் போல! நம்ம வீட்டில தீ எறிகிறதென்றால் அடுத்த கூரையையும் பற்ற வைத்தால் நம் தீ அனைந்து விடுமா என்ன?
2) கெரசனேர் மக்கள் இயேசுவை தங்கள் ஊரைவிட்டு அகலுமாறு சொல்கின்றனர். நம்மூர் என்றாலும் நாமும் அதைத்தான் செய்திருப்போம். அந்த மக்களுக்கு பன்றிகள்தாம் அதிக மதிப்பாகத் தெரிந்திருக்கின்றன. நலம் பெற்ற மனிதரின் மதிப்பு தெரியவில்லை. இது நமக்கும் நடக்கும். இல்லாதவர் நம்மூரில் என்றும் இல்லாதவர்தான். இருக்கின்றவர் மனநிலை சரியில்லாதவராக இருந்தாலும் அவரை உலகம் மதிக்கும். வாழ்வின் அளவுகோல்கள் அப்படித்தான். நாம் அவைகளை மாற்ற முடியாது.
3) நலம்பெற்றவர் இயேசுவைப் பின்பற்றி விழைகின்றார். ஆனால் இயேசு அவரைத் தன்னோடு வர அனுமதிக்கவில்லை. 'வர்றேன்' சொல்றவரை இயேசு ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்?

இந்த மூன்றாவது கேள்வியை மட்டும் சிந்திப்போம்.

'நீ வர வேண்டாம்!'

இதைப் புரிந்த கொள்ள வேண்டுமென்றால் இந்த நற்செய்தியில் பேய் பிடித்தவரைப் பற்றிச் சொல்லப்பட்டவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவரைப் பற்றி மூன்று வர்ணனைகள் கொடுக்கப்பட்டுள்ளன:

அ. கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம்.

ஆ. அவரை எவராலும் கட்ட இயலாது.

இ. இரவும் பகலும் கூச்சலிட்டுக் கொண்டும் தன்னையே காயப்படுத்திக் கொண்டும் இருந்தார்.

கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். தாஜ்மகாலக்குப் போயிருக்கிறீர்களா? ஒரு கல்லறையைப் பார்க்க ஏன் கூட்டம் அலைமோதுகிறது? கல்லறை மற்றும் அன்பு இணைந்ததுதான் தாஜ்மகால். அன்பு இருந்தால் கல்லறையும் தாஜ்மகாலும். அன்பு இல்லையென்றால் தாஜ்மகாலும் கல்லறைதான். இந்த மனிதர் அன்பு இல்லாத இடத்தில் இருந்தார். கல்லறையில் ஒரு நாள் சும்மா இருப்பதே எவ்வளவு கஷ்டம்? அதில் அங்கேயே வாழ்வது என்றால் எப்படி? இந்த மனிதருக்கு நண்பர்கள் இல்லை. இவரைக் கண்டு கொள்வார் யாருமில்லை. பேய் பிடித்ததால் அவருக்கு இந்த நிலையா? அல்லது இந்த நிலையால் அவருக்கு பேய்பிடித்ததா?

அவரை எவராலும் கட்ட இயலாது. இதை வாசிக்கும் போது நம் கோவை மாவட்டத்தில் நடமாடிக் கொண்டிருக்கும் புலி மற்றும் சிறுத்தைகள்தாம் நினைவிற்கு வருகிறது. புறநானூற்றுக் காலத்தில் முறத்தால் பெண் புலி விரட்டிய நம் மண்ணில் இன்று ஒரு புலியைப் பிடிக்க எத்தனையோ கமாண்டோக்கள், ரகசிய கேமராக்கள். நம் வீரம் போய்விட்டதா? அல்லது நாம் வளர்ந்து விட்டோமோ? எதற்காக புலி நம் ஊருக்குள் வருகிறது? உண்மையில் புலி இருக்கும் இடத்தில் தான் நாம் இருக்கின்றோம். காடுகளை அழித்து பிளாட் போட்டுவிட்டால் அவைகள் எங்கே போகும்? ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கா போகும்? வீடுகளுக்குத் தான் வரும். இந்த மனிதர் கண்டிப்பாக ஊருக்குள் சென்றிருப்பார். எதற்காக? உணவிற்காக. அதைப் பிடிக்காத நாலு பேர் அவரிடம் வீரத்தைக் காட்டி அவரைக் கட்ட முயற்சி செய்திருப்பார்கள். பாவம் அவருக்குப் பசி? பசி வந்தால் பத்துச் சங்கிலியையும் அறுத்து விடலாம். ஆகையால் பசி வந்தால் பத்தும் பறந்து விடும் என்கிறார்கள். அவருக்கு அவர்களே உணவு கொடுத்திருந்தால் அவரைக் கட்ட வேண்டிய தேவையே இருக்காது. பல நேரங்களில் உறவுகளில் பிரச்சினைகள் வருவதற்குக் காரணம் இதுதான். என் மனைவியை சமாளிக்கவே முடியவில்லை என்றும் என் கணவரைச் சமாளிக்கவே முடியவில்லை என்றும் புலம்புவார்கள். இரண்டிலும் அவர்களுக்கு ஏதோ குறை வைத்துள்ளோம் என்று தான் அர்த்தம். அந்தக் குறையை நிவர்த்தி செய்தால் உறவுச் சிக்கல் அவிழ்ந்து விடும். அதை விடுத்து நான் ஃபோன் செய்ய மாட்டேன், பேச மாட்டேன் என முரண்டு பிடித்தால் பிரச்சினைகள் அதிகமாகவே செய்யும்.

கூச்சலிட்டுக் கொண்டு இருந்தார். நம் காரில் ஹார்ன் வைத்திருப்பது எதற்காக? மனிதர்கள் மாட்டு வண்டி காலத்திலிருந்து மாருதி கார் காலத்திற்கு எப்படி கடந்து போயிருப்பார்கள்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன். மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டு போகிறோம். வழியில் குறுக்கே ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். என்ன செய்வோம்? 'டேய்...கொஞ்சம் ஓரமா போடா. வண்டி வருது' என்று சொல்வோம். அவர் அதைக் கண்டு கொள்ளவில்லையென்றால் கொஞ்சம் சப்தமாகச் சொல்வோம். மாருதி காரில் கத்த முடியாது. அதற்குப் பதிலாக ஹார்ன் வைத்துக் கத்துகிறோம். நாம் அணியும் ஆடை, நாம் செய்யும் மேக்கப் என அனைத்துமே நாம் மற்றவர்களைப் பார்த்துப் போடும் சத்தம்தான்: 'ஏய்...என்னைப் பார்!' என்று நம் ஆடைகள் மற்றவர்களைப் பார்த்து மௌனமாகச் சத்தம் போடுகின்றன. யாரும் நம்மைக் கண்டுகொள்ளவில்லையென்றால் நாம் சத்தம் போடுகிறோம். குழந்தை அழுவது எதற்காக? தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லையே என்பதற்காகத் தான்.

இந்த மனிதரிடம் இருந்த மூன்று பண்புகளும் நம்மிடமும், மன்னி;க்கவும், என்னிடமும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கின்றன.

இந்த மூன்றிலிமிருந்து நலம்பெற்ற ஒரு மனிதரை இயேசு அவரின் உறவினர்களிடமே திரும்பி அனுப்புகின்றார். 'வர வேண்டாம்' என்று இயேசு சொல்வதும் ஒரு இறையழைத்தல்தான். எனக்கு ஒரு குட்டி ஆசை. 'நான் வருகிறேன்' என்று சொன்னபோது இயேசு என்னையும் பார்த்துச் சொல்லியிருக்கலாமே: 'நீ வர வேண்டாம்!' என்று.

இறையழைத்தல் பற்றிய ஒரு சிந்தனையை மாற்றுகின்றது இன்றைய நற்செய்திப் பகுதி. ஒருவேளை இயேசுவோடு செல்வது கல்லறைகள் மத்தியில் வாழ்வது போலவா? அதற்காகத்தான் இயேசு, 'நீ ஏற்கனவே கல்லறைகளில்தான் இருக்கிறாய். இனியாவது வீட்டுக்குப் போ!' என்று சொன்னாரோ?

அல்லது அழைத்தல் என்பது இயேசுவோடு இருப்பது மட்டுமல்ல, மாறாக, உலகில் அவரின் அன்பிற்குச் சான்றாக இருப்பது என்று அழைத்தல் குறித்த சிந்தனையை விரிவுபடுத்துகிறாரோ இயேசு?

'நீ வர வேண்டாம்!'


2 comments:

  1. வழக்கம்போல தந்தையின் பகுத்தறிவு மூளை எல்லாவற்றையும் பகுத்துப்பார்த்தே யோசிக்கிறது.ஆனாலும் ரொம்ப யோசிப்பதும் எத்தனை ஆபத்தில் கொண்டு போய் சேர்க்கிறது பார்த்தீர்களா? " நான் வருகிறேன்" என்று சொன்ன தந்தையைப்பார்த்து " நீ வரவேண்டாம்" என்று அவர் சொல்லியிருக்கலாமே என நினைக்கும் அளவிற்கு.அப்படி அவர் சொல்லியிருந்தால் எப்பேர்ப்பட்ட ஒரு 'குருவை', ஒரு' விவிலிய அகராதியை' திருச்சபை இழந்திருக்குமென்று அவருக்குத் தெரியாதா என்ன? ஆயினும் தந்தை தன் இறுதி வரிகளில் தன் அழைத்தலின் மகிமையை மேடை போட்டு உரக்கச்சொல்கிறார்.....ஆம்! 'அழைத்தல்' என்பது இயேசுவோடு இருப்பது மட்டுமல்ல, மாறாக, உலகில் அவரின் அன்பிற்குச் சான்றாக இருப்பதும் தான் என்று.குட்டை குழம்பினாலும் பரவாயில்லை...இறுதியில் ஒரு ருசியானை மீனைப் பிடிக்க உதவும் தந்தையே! தாங்கள் என்றென்றும் ஒரு புடமிட்ட குருவாக வலம்வர தங்களுக்காக நாளும் செபிக்கிறேன்! அன்புடன்!!

    ReplyDelete
  2. இல்லாதவர் நம்மூரில் என்றும் இல்லாதவர்தான். இருக்கின்றவர் மனநிலை சரியில்லாதவராக இருந்தாலும் அவரை உலகம் மதிக்கும். இன்றைய ஏதார்த்ததை அழகாக படம் பிடித்து காண்பித்துள்ளீர். நாமும் ஊருக்குள் செல்வோம் இறையரசை அறிவிக்க! அழைக்கின்றார் இயேசு.....

    ReplyDelete