14 ஜனவரி 2018 ஆண்டின் பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு
I. 1 சாமுவேல் 3:3-10,19
II. 1 கொரிந்தியர் 6:13-15,17-20
III. யோவான் 1:35-42
தங்குதல் - அவருக்காக, அவரில், அவரோடு
நாம் இன்று கொண்டாடும் பொங்கல் மற்றும் இன்றைய இறைவாக்கு வழிபாட்டையும் நாம் இணைத்துப் பார்க்கும்போது 'தங்குதல்' என்ற வார்த்தை இரண்டிற்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது. பானையில் தங்குகின்ற அரிசி தன் உடன் இருக்கும் சர்க்கரை, முந்திரி, தேங்காய், மற்றும் சுக்கோடு இணைந்து பொங்கலாகின்றது. ஆண்டவரின் அடியார்கள் அவருக்காக, அவரில், அவரோடு தங்கும்போது புதிய மனிதர்களாக உருப்பெறுகின்றனர்.
'தங்குதல்' - நம் வாழ்வின் இன்பம், துன்பம் அனைத்திற்கும் காரணம் இந்த ஒற்றைச்சொல்லே.
மனிதர்கள் நாடோடிகளாக நடமாடிக்கொண்டிருந்தபோது நாகரீகமும், கலாச்சாரமும் வளரவில்லை. என்று ஒரே இடத்தில் அவர்கள் தங்கத் தொடங்கினார்களோ அன்றுதான் எல்லாம் பிறந்தது. தங்குவதற்கு நமக்கு இடம் தேவை. இடம் வந்தவுடன் வீடு தேவை. வீடு வந்தவுடன் பொருள்கள் தேவை. பொருள்கள் வந்தவுடன் பாதுகாப்பு தேவை. பாதுகாப்பு வந்தவுடன் காவலர் தேவை. காவலர் வந்;தவுடன் கண்காணிப்பு கேமரா தேவை. கேமராவைப் பொருத்த கணிணி தேவை. கணிணியின் தகவலை கைகளில் பார்க்க ஸ்மார்ட்ஃபோன் தேவை. தகவல் தடையின்றி கிடைக்க 4ஜி தேவை. 4ஜிக்கு நெட்வொர்க் நிறுவனம் தேவை. நிறுவனத்திற்கு அரசு தேவை. இப்படி மனிதன் என்று பாயை விரித்து ஒரே இடத்தில் படுக்கத் தொடங்கினானோ அன்று எல்லாம் தொடங்கிவிட்டது. அன்று அந்த ஒற்றை மனிதன் கண்ட கனவுதான் இன்று நாம் பெற்றுள்ள எல்லா வளர்ச்சிக்கும்கூட காரணமாக இருக்கிறது.
மனிதர்கள் சக மனிதர்களோடு தங்குதலே இவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது என்றால் அவர்கள் கடவுளோடு அல்லது இறைவனோடு அல்லது ஆண்டவரோடு தங்கும்போது இன்னும் எவ்வளவு பெரிய மாற்றங்கள் அங்கே பிறக்கும். அப்படிப்பட்ட நிகழ்வுதான் இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் நடக்கின்றது.
முதல் வாசகம்: 'அவருக்காக தங்குதல்'
இன்றைய முதல் வாசகம் (காண். 1 சாமு 3:3-10,19) நமக்கு மிகவும் பரிச்சயமான வாசகப் பகுதி: 'ஆண்டவராகிய இறைவன் சாமுவேலை அழைக்கும் நிகழ்வு.' எல்கானா - அன்னா தம்பதியினருக்கு பிறக்கின்ற சாமுவேல் தம் தாய் அன்னாவால் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறார். (வாழ்க்கையில் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய முடிவுகளை விவிலியத்தில் பெண்கள்தாம் எடுக்கின்றனர்!) 'நான் ஆண்டவரிடமிருந்து கேட்டேன்' (எபிரேயத்தில் 'ஷெமு'-'ஏல்') என்று அவரிடமே தான் கேட்டதைக் கொடுத்துவிடுகின்றார் இந்த துறவித்தாய். சாமுவேல் இறைவாக்கினர் காலத்தில் பிள்ளைகளை ஆலயத்திற்கு நேர்ந்துவிடுவது புழக்கத்தில் இருந்தது. இப்படி விடப்படும் பிள்ளைகள் ஆண்டவரின் இல்லத்தில் பணியாற்றும் குருவோடு 'தங்க'வேண்டும். குருக்கள் தங்கள் பணிக்கான உதவியாள்களாக வைத்திருந்து காலப்போக்கில் அவர்களையும் குருக்களாக்கி ஆலயப்பணியில் இணைத்துவிடுவர்.
இப்படி பிள்ளைகளோடு பிள்ளைகளாக சாமுவேல் படுத்திருக்க, 'சாமுவேல்' என்று கடவுள் அவரை அழைக்கின்றார். 'அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை' என்கிறார் ஆசிரியர். ஆக, ஆண்டவரின் குரலை அறியாத சாமுவேல் உடனடியாக தன் குருவான ஏலியிடம் ஓடுகின்றார். 'இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?' என்று கேட்கின்றார். இப்படி மூன்று முறை நடக்க, மூன்றாம் முறைதான் ஏலியே இது கடவுளின் செயல் என்று உணர்ந்துகொள்கின்றார். 'உன்னை அவர் மீண்டும் அழைத்தால், 'ஆண்டவரே பேசும். உம் அடியான் கேட்கிறேன்' என்று பதில் சொல்ல' என்று சொல்லி அனுப்ப, சாமுவேல், 'பேசும், உம் அடியான் கேட்கிறேன்!' - இங்கே நன்றாகக் கவனிக்க வேண்டும். சாமுவேல் கடவுளை ஒருபோதும் 'ஆண்டவர்' என்று அழைக்கவில்லை. எந்தவொரு விளிச்சொல்லும் இன்றி மொட்டையாக, 'பேசும்' என்கிறார் சாமுவேல். ஆனால் அன்று முதல் 'ஆண்டவர் அவனோடு இருந்தார். சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை' என பதிவு செய்கின்றார் ஆசிரியர்.
இங்கே, சாமுவேல் ஆண்டவருக்காக, அவருக்காக, அவருடைய பணிக்காக ஆண்டவரின் ஆலயத்தில் தங்கியிருக்கின்றார். இந்த தங்கியிருத்தலின் விளைவாக ஆண்டவர் சாமுவேலோடு 'உடனிருக்க' ஆரம்பிக்கின்றார். 'அவருடைய வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை' என்றால், அன்று முதல் அவர் சொன்ன அனைத்தும் இறைவனின் வாக்காக மாறின என்பதே பொருள்.
ஆக, ஓர் இரவில் ஆண்டவருக்காக தூக்கம் கலைத்தது சாமுவேல் என்ற சிறுவனை ஓர் இறைவாக்கினராக - இஸ்ரNயுலின் முதல் இறைவாக்கினராக - மாற்றுகிறது.
இரண்டாம் வாசகம்: 'அவரில் தங்குதல்'
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 6:13-15, 17-20) கொரிந்து நகர திருச்சபையில் மலிந்திருந்த பரத்தமைக்கு எதிராக இறைமக்களை அறிவுறுத்தும் பவுலடியார் 'உடல்' என்பதை உருவகமாகக் கையாளுகின்றார். பரத்தைமையில் ஒருவரின் உடல் மற்றவரின் உடலோடு இணைகிறது. திருமுழுக்கு பெறுகின்ற நம்பிக்கையாளர் ஒருவர் அந்த நாள் முதல் ஆண்டவருக்கு உரியவராகிறார். ஆக, அவருடைய உடல் ஆண்டவரில் தங்குவதால் அவருடைய உடலும் ஆண்டவருக்கு உரியவராகின்றது. ஆக, ஒருவரில் இருக்கும் உடல் இன்னொருவரோடு இணைவது சால்பன்று. ஏனெனில், ஆண்டவரோடு இணைந்திருப்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல. அது உள்ளம் சார்ந்தது. ஆக, உள்ளத்தால் இணைந்திருக்கும் அவர் மற்ற ஒருவரோடு உடலால் இணையும்போது தன் உடலுக்கு எதிராக, தன் ஆண்டவருக்கு எதிராகவே பாவம் செய்கின்றார். மேலும், தன் உரிமையாளரை அவர் மறுதலிக்கின்றார். ஏனெனில் கடவுள் அவரை விலைகொடுத்து வாங்கியுள்ளார்.
'விலைகொடுத்து வாங்குதல்' என்பது பவுலின் காலத்தில் நிலவிய அடிமையை விலைக்கு வாங்கும் பொருளாதார பின்புலத்தில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். 'விலைகொடுத்து வாங்கப்படும் ஒருவர்' தன்னை வாங்கியவருக்கு மட்மே பிரமாணிக்கமாக இருக்க வேண்டும். எப்போது அவர் மற்ற ஒருவருக்குத் தலைவணங்கத் தொடங்குகிறாரோ, அப்போதே அவரின் பிரமாணிக்கம் பிளவுபடத் தொடங்குகிறது.
ஆக, ஆண்டவரில் தங்கும் ஒருவர் அவருக்காக, அவருடையவர் ஆகிவிடுகிறார்.
'ஆண்டவரில் தங்குதலுக்கு' கிடைக்கும் நன்மை இதுதான். நாம் ஆண்டவருக்கு உரியவர் ஆகிவிடுகின்றோம். மேலும், இந்த உடல் உயிர்த்தெழ வைக்கப்படும்.
நற்செய்தி வாசகம்: 'அவரோடு தங்குதல்'
தம் இரு சீடர்களுடன் ஒரு மாலை நேரம் நின்றுகொண்டிருக்கின்ற திருமுழுக்கு யோவான் அவ்வழியே கடந்து சென்ற இயேசுவைப் பார்த்து, தம் சீடர்களிடம் காட்டி, 'இதோ, கடவுளின் செம்மறி!' என்கிறார். 'அப்படி என்றால் என்ன?' என்றோ, 'அதுக்கு என்ன இப்போ?' என்றோ, 'நாங்க இப்ப என்ன செய்யணும்?' என்றோ கேட்காமல், அந்தச் செம்மறியாம் இயேசுவைப் பின்தொடர்கின்றனர் இரு சீடர்கள். அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு, 'என்ன தேடுகிறீர்கள்?' என்று கேட்கின்றார் இயேசு. கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழி உலகில் யாரெல்லாம் சும்மா அல்லது மெதுவா நடந்துகொண்டிருக்கிறார்களோ, அவர்களைப் பார்த்து மற்றவர்கள் கேட்கும் கேள்வி, 'எதைத் தொலைத்துவிட்டாய்? என்ன தேடுகிறாய்?' என்பதுதான். யோவான் நற்செய்தியில் இயேசு பேசும் முதல் வார்த்தையே இதுதான்: 'என்ன தேடுகிறாய்?' இது முதல் ஏற்பாட்டில் கடவுள் ஆதாமைப் பார்த்துக் கேட்ட முதல் கேள்வியோடு ஒத்திருக்கிறது. மரங்களுக்கிடையே ஒளிந்திருக்கும் மனிதனைத் தேடி வருகின்ற கடவுள், ஆதாமைப் பார்த்து, 'நீ எங்கே இருக்கிறாய்?' என்கிறார். இங்கே சீடர்களின் பதிலும் கேள்வியாகவே இருக்கின்றது: 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' இயேசுவை அவர்கள் செம்மறி என அறிந்திருந்தாலும், 'ரபி' (போதகர்) என்றே அழைக்கின்றனர். இது அவர்களுடைய தங்குதலின் முதற்படி. இரண்டாவதாக, 'நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' என்ற அவர்களின் கேள்வியிலேயே, 'நாங்களும் உம்மோடு தங்க வேண்டும்' என்ற ஆசை ஒளிந்திருக்கிறது. 'அதோ, அங்கே' என்று பதில் சொல்லாமல், 'வந்து பாருங்கள்' என்று சொல்லி தம்மோடு அவர்களையும் சேர்த்துக்கொள்கின்றார். அவர் அழைத்த அந்த நொடியே இவர்கள் இயேசுவோடு தங்கத் தொடங்கிவிடுகின்றனர்.
அவர்கள் பெற்ற அனுபவம் என்ன என்பதை நற்செய்தியாளர் பதிவு செய்யவில்லை. ஆனால், 'மெசியாவைக் கண்டோம்' என்ற அந்த இரட்டைச் சொற்கள் அவர்களின் அனுபவம் முழுவதையும் பதிவு செய்கின்றது. 'அவரோடு' தங்குவதால், தங்கியதால் அவர்கள் பெற்ற அனுபவம் 'மெசியாவைக் காணுதல்.'
இவர்களின் 'மெசியாவைக் காணுதல்' அனுபவம் உடனடியாக அவர்களை அடுத்தவர்களை நோக்கி அனுப்புகிறது. அந்திரேயா தன் சகோதரர் பேதுருவைத் தேடிச் செல்கின்றார். தேடிச் சென்று தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அந்த அனுபவத்தின் ஆற்றல் என்னவென்றால் உடனடியாக அவரும் இயேசுவைத் தேடி வருகின்றார். உடனடியாக இயேசுவை நோக்கி அவர் வருவதற்கு அந்திரேயா எப்படிப்பட்ட அனுபவப் பகிர்வை செய்திருக்க வேண்டும்?
இவ்வாறாக,
முதல் வாசகத்தில், 'அவருக்காக தங்குதல்'. இதன் பலன், 'ஆண்டவரின் உடனிருப்பை பெறுதல்'
இரண்டாம் வாசகத்தில், 'அவரில் தங்குதல்'. இதன் பலன், 'ஆண்டவருக்கு உரியவராதல்'
மூன்றாம் வாசகத்தில், 'அவரோடு தங்குதல்.' இதன் பலன், 'ஆண்டவரின் மெசியாவைக் காணுதல்'
இந்த மூன்று 'தங்குதல்' நிகழ்வுகளும் இயல்பாக அல்லது தாமாக நடந்தேறவில்லை.
எப்படி ஒவ்வொரு பொங்குதலுக்கும் ஒரு விலை இருக்கிறதோ,
அப்படியே ஒவ்வொரு தங்குதலுக்கும் ஒரு விலை இருக்கிறது. எப்படி?
பானைக்குள் விழுகின்ற அரிசி தன்னோடு சேர்க்கப்படும் தண்ணீரின் கொதிநிலைக்குத் தன்னையே கையளிக்க வேண்டும். தன் இயல்பை சர்க்கரை, தேங்காய், மற்றும் சுக்கு ஆகியவற்றின் அனைத்து இயல்போடும் தன்னையே கரைத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் அது பொங்கலாக உருவாக முடியும்.
மேற்காணும் மூன்று தங்குதலுக்கும் கொடுக்கப்படும் விலை என்ன?
முதல் வாசகத்தில், 'அவருக்காக தங்குவதற்கு' சாமுவேல் 'தூக்கம் கலைதல் வேண்டும்.'
இரண்டாம் வாசகத்தில், 'அவரில் தங்குவதற்கு' நம்பிக்கையாளர் 'பரத்தைமை (பிரமாணிக்கமின்மை) கலைதல் வேண்டும்'
மூன்றாம் வாசகத்தில், 'அவரோடு தங்குவதற்கு' முதற்சீடர்கள் தங்களின் 'சொகுசான கூடுகளை விட்டு வெளியேற வேண்டும்'
இந்த மூன்று விலைகளை அவர்கள் கொடுத்தபின்தான் 'தங்குதல்' அனுபவம் பெறுகின்றனர்.
பானையில் அரிசி பொங்குதலோடு இணைந்து நம் மனங்களும், நம் தொழுவத்தின் மாடுகளும், காணும் பொங்கலில் நம் உறவுகளும் துள்ளும் இந்நன்னாளில்,
அவருக்காக,
அவரில்,
அவரோடு தங்குதலும் நடக்கட்டும்!