Tuesday, April 8, 2014

உனக்கு என்னோடு பங்கில்லை

சீமோன் பேதுருவிடம் அவர் வரவே, 'ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?' என்றார். 

'நான் உன் பாதங்களைக் கழுவாவிடில் உனக்கு என்னோடு பங்கில்லை' என்றார்.

'அப்படியென்றால் பாதங்களை மட்டுமல்ல...என் உடல் முழுவதையும் கழுவும்!' என்றார்.

'குளித்துவிட்டவன் பாதங்களைக் கழுவினால் மட்டும் போதும். அவன் தூய்மையாவான்' என்றார்.

இன்று காலை புனித வாரப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பெரிய வியாழன் அன்று பாதம் கழுவும் சடங்கின் போது பாடப்படும் இந்த வரிகள் என்னை மிகவும் தொட்டன. எவ்வளவோ நாட்கள் இதைக் கேட்டிருந்தாலும் இன்று இந்தப் பாடலின் அர்த்தம் வித்தியாசமாக இருந்தது.

'தண்ணீர்!'

உலகில் மூன்றாம் உலகப் போர் வந்தால் அது தண்ணீருக்காகத் தான் வரும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்து. இன்னும் கொஞ்ச நாளில் நம் ஊரில் தங்கம் திருடு போவதற்குப் பதில் தண்ணீர் திருடுபோகத் தொடங்கினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இயேசுவின் பாடுகளில் 'தண்ணீர்' இரண்டு இடங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது:

தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி அவர்களோடு 'பங்கை' ஏற்படுத்த உதவியதும் தண்ணீர்தான்.

இவனுக்கும் எனக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை என பிலாத்து 'பங்கை' ஒதுக்கிக் கொள்ள உதவியதும் தண்ணீர்தான்.

என் இன்றைய கேள்வி என்ன?

யூதாசின் பாதங்களை இயேசு கழுவியிருப்பாரா? பாதங்களை இயேசு கழுவும் போது யூதாசின் மனதில் என்ன சிந்தனை ஓட்டம் இருந்திருக்கும்?

'உமக்கு என்னோடு பங்கு வேண்டாம்!' என யூதாசு இயேசுவை ஒதுக்க நினைத்தாலும். தேடி வந்து ஒட்டிக் கொள்கின்றார் இயேசு. இதுதான் இறைவன் நம்மேல் ஏற்படுத்திக் கொள்ளும் பங்கு.

எம்எச் 370 நிகழ்விற்குப் பின் தண்ணீர் இன்னும் பயமாக மாறியிருக்கிறது. விமானம் மறைந்து இன்றோடு மாதம் ஒன்றாகி விட்டது. வருகின்ற செய்திகள் எல்லாம் வெறும் ஊகங்களாக இருக்கின்றனவே தவிர உறுதியாக எதுவும் இல்லை.

கொலை, தற்கொலை, கடத்தல், தீவிரவாதம், விபத்து, கோளாறு, கவனக்குறைவு என எவ்வளவோ காரணம் சொல்லப்படுகின்றது.

ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த விமானம் இன்று இல்லை.
ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த 239 பேர் இன்று இல்லை.

இந்த இரண்டு மட்டும்தான் உண்மை.

கண்ணீரும் தண்ணீரும் கலந்து விட்ட நிலையில் இன்னும் அதிசயம் நடக்கும் என்று காத்திருக்கின்றோம். எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. அதிசயம் நடக்கும்!

தன் பாதங்களில் தண்ணீர்த் துளிகள் விழுந்த போது சீடர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? அந்த இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம்? 'ஆண்டவரே! நன்றாகக் கழுவும்!' என்று சொல்லியிருப்போமா? அல்லது வேண்டாம்! என்று சொல்லியிருப்போமா?

இயேசுவின் பாதம் கழுவும் நிகழ்விற்கும் அவரின் மண்ணகப் பிறப்பிற்கும் நிறைய ஒருமைப்பாடு இருக்கின்றது:

பந்தியிலிருந்து எழுந்து - விண்ணிலிருந்து எழுந்து
மேலாடையை அகற்றி - கடவுள் தன்மையை அகற்றி
ஒரு துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு - மனித உருவம் ஏற்று
குணிந்து - பிறந்து
தண்ணீரை ஊற்றி - கண்ணீரைச் சிந்தி
ஒரு துண்டால் துடைத்தார் - துணிகளில் பொதிந்து

பாதம் கழுவுதலும் அப்பம் பிட்குதலும் ஒன்றே. தண்ணீரும் துண்டும் இன்று நமக்குச் சொல்வது 'நாம் இயேசுவின் பங்காளிகள்!'

நாமும் ஒருவர் மற்றவரின் பாதங்களைக் கழுவ வேண்டும்.

எனக்கு நிறைய நாளா ஒரு ஆசை...

'கொலுசு அணிந்த கால்களை முத்தமிட வேண்டும்' என்று...

ரொம்ப ஓவரா இருக்கு என்கிறீர்களா!

என் ஆசையைத் தானே சொன்னேன்...

முத்தமிட்டேன் என்றா சொன்னேன்...

ஒருவரின் காலை நாம் தொடும்போது அவரின் வேர்களைத் தொடுகிறோம்.

உன் வேரில் என் விழுதுகளை இணைக்கிறேன் என்று சொல்லாமல் சொல்கிறோம்...

இயேசு நம் வேர்களைப் பற்றிக் கொண்டார்...

நாம் ஒருவர் மற்றவரின் வேர்களைக் பற்றிக் கொள்வோம்...

3 comments:

  1. Anonymous4/09/2014

    இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி முத்தமிட்டார்.ஒரு தலைவன் தன் சீடர்களிடம் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ள எடுக்கும் உச்ச கட்ட பிரயத்தனம்.ஆனால் இன்று நம் கோவில்களில் இந்த ஞாபகார்த்த நிகழ்ச்சியைக் கொண்டாடுவதில் கூட 'அரசியல்' நுழைந்து விட்டது ஒரு வெட்கக்கேடான விஷயம்.மானிட மகன் நமக்கு விட்டுச் சென்ற வழித்தடத்தின் பொருள் உணர்வோம்.வெறும் சாஸ்திரங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட்டு 'மானுடத்தை' மதிக்கக் முயற்சிப்போம்.

    ReplyDelete
  2. Anonymous4/13/2014

    தந்தையே! அருமையான வரிகள்...பாதம் கழுவும் நிகழ்விற்கும் மண்ணகப் பிறப்பிற்கும் இடையே இருந்த ஒருமைப்டை அழகாக கூறினீர்கள். வாசிக்கும் போது ஒரு நிமிடம் நின்றுவிட்டேன். உங்கள் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  3. Congrats and all the best.

    ReplyDelete