Thursday, April 3, 2014

கழுதைகளைத் தேடி

'மூன்று நாட்களுக்குமுன் காணாமற்போன கழுதைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அவை அகப்பட்டுவிட்டன. இஸ்ரயேலின் முழு விருப்பமும் யார் மீது? உன் மீதும் உன் தந்தையின் வீட்டார் அனைவர் மீதும் அன்றோ?' சவுல் மறுமொழியாகக் கூறியது: 'இஸ்ரயேலில் மிகச் சிறிதான பென்யமின் குலத்தைச் சார்ந்தவனன்றோ நான்? பென்யமின் குலத்தில் அனைத்துக் குடும்பங்களிலும் என்னுடையது மிகச் சிறியதன்றோ! பின்பு, நீர் ஏன் என்னிடம் இவ்வாறு பேசுகிறீர்?' (1 சாமுவேல் 9:20-21)

இன்று எபிரேய மொழித் தேர்வு எழுதினேன். வினாத்தாளில் வந்த ஒரு கேள்வி மேற்காணும் பகுதியை எபிரேய மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்ப்பு செய்வது.

படிக்கும் போது வராத சிந்தனை தேர்வில் பதில் எழுதும் போது வந்தது.

சவுலின் வார்த்தைகளில் இருந்து அவரது பின்புலத்தை அறிந்து கொள்ளலாம். சிறிய குலம். சிறிய குடும்பம். கழுதைகளைத் தேடிப் போகிற குடும்பம். அதாவது தங்கள் வாழ்வில் எல்லாமாய் இருந்த கழுதைகள் தொலைந்து போய் தேடுகின்ற சாதாரண குடும்பம்.

ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும். விவிலிய வரலாற்றுக் காலத்தில் ஒருவரின் எருதோ, கழுதையோ தொலைந்தால் அது பகைவருடையதாய் இருந்தால் கூட அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். எருது விவசாயத்திற்கும், கழுதை போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. இந்த இரண்டும் இல்லாமல் ஒருவரிடமிருந்து களவு செய்வது மிகப் பெரிய குற்றம். மேலும் அவைகள் வழி தவறி வந்திருந்தால் கூட உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். இன்று நம் கார், பைக்கிற்கு நம்பர் பிளேட் இருந்தது போல அவைகளுக்கும் இருந்திருக்குமா? பின் எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள்?

சரி நம் நிகழ்விற்கு வருவோம்.

கழுதை தேடி வந்தவர் அரசனாகிறார்.

ஆனால் சவுலின் எண்ணமெல்லாம் இன்னும் கழுதையின் மேலே இருக்கின்றது.

'கழுதையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்!'

சாமுவேலின் வார்த்தைகள் தாம் இன்று நாம் சிந்திப்பவை.

அரசனாகி விட்டால் கழுதைகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது.

அதாவது, வாழ்வில் நாம் மேலானவற்றை அடையும் போது கீழானவைகளே பற்றிப் பிடித்துக் கொண்டே இருக்கக் கூடாது.

ஏணியில் ஏறுகிறோம். கீழே உள்ள படி ரொம்பவும் பிடித்திருக்கிறது என்பதற்காக அங்கேயே நின்று கொண்டிருந்தால் நாம் மேலே ஏற முடியாது. வாழ்வில் மேலானவை வரும் போது கீழானவைகளை விட்டு விடும் மனப்பக்குவம் வேண்டும்.

ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக சமூக அறிவியல் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தேன். அதில் வந்த ஒரு பிரின்சிபல்: 'பிரின்சிபல் ஆஃப் சப்சிடியாரிட்டி'. இதன் பொருள் என்னவென்றால் அவருக்குரிய வேலையை அவரவர் செய்ய வேண்டும். அன்று நான் கற்ற உதாரணம்: மைக்கேல் ஜாக்சனின் வேலை தன் ஷோவிற்கு டிக்கெட் கொடுப்பது அன்று. நடனம் நன்றாக ஆடுவது. அந்த வேலையை அவர் செய்ய வேண்டும். அவர் மட்டும் தான் செய்ய முடியும். டிக்கெட் விற்பனையைப் பற்றி அவர் கவலைப்படக் கூடாது.

சவுலின் வேலை இனி அரசனாய் இருப்பது. கழுதைகளைத் தேடிக் கொண்டிருப்பது அல்ல.

நம்ம வாழ்க்கையில பல நேரங்களில் நாம் கழுதைகளைத் தேடிக் கொண்டே இருந்து விடுகிறோம். இத்தகைய தேடுதல் நம்மைக் கடந்த காலத்தோடே கட்டி வைத்து விடுகிறது.

உடல் சார்ந்த தேவைகள் பூர்த்தியாகிவிட்டதா அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். உள்ளம் சார்ந்த தேவைகள். பின் மதிப்பீடு சார்ந்த தேவைகள். பின் சுயநிர்ணயம் சார்ந்த தேவைகள். பின் மேன்மைக்கான தேவைகள். மதிப்பீடுகளைப் பற்றிய தேவைக்கு வளர்ந்து விட்டு மீண்டும் உடல் சார்ந்த தேவைகளுக்கு இறங்கி வரக் கூடாது.

தூய பவுலடியாரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், 'நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம்' (1 கொரி 13:10).

சரி...ஃபாதர்...உடல் சார்ந்த தேவைகளுக்கு இறங்கி வரக்கூடாதுதான்...ஆனால் உடல் சார்ந்த தேவையே நிறைவேறாத போது என்ன செய்வீங்க...?

பசிக்கு சாப்பாடு இல்லாதவங்ககிட்ட பரலோகம் பத்திப் பேசுவோம்னா எப்படி வருவாங்க...? படிச்சவங்களாச்சே நீங்க. பசிக்கு ஏதாவது செய்யுங்க. அப்புறம் நாங்க பரலோகம் பத்திப் பேச வர்றோம்...

சிந்திக்க வேண்டிய கேள்வி...நாம் அன்றாடம் சந்திக்கும் கேள்வி...

பல வீடுகளில் இன்று தேடுவதற்குக் கழுதைகளே இல்லை...பின் எப்படி...அவைகளைத் தேடி...அரசனாவது என நினைக்கிறீங்களா...?

கழுதைகள் வரும் ... நீங்களும் அரசனாவீர்கள்!

1 comment:

  1. Anonymous4/03/2014

    என்னதான் நாம் அடைய நினைத்ததில்லாம் நமக்கு கைகூடினும் விரிந்து கொண்டே போக்க் கூடியவை தான் நம் தேவைகள்.தேவைகள் சுருங்கும் போது மனதுக்கு திருப்தி கிடைப்பது மட்டுமன்றி அடுத்தக் கட்டத்திற்குத் தாவ நம் மனதும் தயாராகிவிடுகிறது.நாம் குழந்தைப்பருவத்திலிருந்து அடுத்தடுத்த பருவங்களுக்குச் செல்கையில் பெற்றவர்களையே மறந்து போகவில்லையா? பின் நிறைவானவற்றை அடைய குறையானவற்றை விடுவதில் மட்டும் என்ன சிரம்ம்? ஒன்று அழிந்தாலன்றி மற்றொன்று பிறக்க வழியில்லையே,..யோசிப்போம்!

    ReplyDelete