Tuesday, April 1, 2014

ஜன்னல் சலனங்கள்

நேற்றைய தினத்திலிருந்து நாங்கள் ஒரு மணி நேரம் மீண்டும் முன்னால் வந்து விட்டோம். அக்டோபர் 26ஆம் தேதி பின்னால் சென்றோம். இந்த நேரம் மாறுவது ரொம்ப விநோதமான ஒன்று. ஒரு இரவில் எல்லாருமே மாறிவிடுகிறார்கள். உடல்தான் தூங்கவும், சாப்பிடவும் மறுக்கிறது. நேற்றிலிருந்து தான் நாங்கள் ஜன்னலைத் திறந்தும் வைக்கத் தொடங்கிவிட்டோம்.

இவ்வளவு நாள் ஜன்னல் பூட்டியே கிடந்து நேற்று திறந்தவுடன் மனமெல்லாம் ஒரு புத்துணர்ச்சி.

என் சின்ன வயதில் எனக்கு ஜன்னலில் அமர்வது என்றால் ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கும் தானே?

ஒரு ஜன்னலில் நானும், மறு ஜன்னலில் என் தங்கையும் ஏறி ரயில் விளையாடுவோம்.

கதவிற்கும், ஜன்னலுக்கும் என்ன வித்தியாசம்?

ஒன்று பெரிதாய் இருக்கும். மற்றொன்று சிறிதாய் இருக்கும். அவ்வளவுதானா?

கதவைப் போல ஜன்னலும் ஒரு பாஸிபிளிட்டி. கதவு என்பது சுவரில் இருக்கும் வெறும் ஓட்டை அன்று. அது ஒரு பாஸிபிளிட்டி. அதன் வழியாகவே நாம் உள்ளே செல்கிறோம். அதன் வழியாகவே நாம் வெளியே வருகிறோம். வருவதையும், போவதையும் சாத்தியமாக்குவது கதவு. ஜன்னல் அதிலிருந்து வித்தியாசப்படுகிறது. ஜன்னல் வழி எவரும் போவதுமில்லை. வருவதுமில்லை. ஆபத்துக் காலம் தவிர!

ஆனால் ஒரு வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல்கள் அதிகம் வருவது ஜன்னல்கள் வழியாகவே.

பக்கத்து வீட்டில் நடக்கும் சண்டை.

தெருவில் செல்வோரின் பேச்சு.

எங்கோ சிறுவர்கள் இடும் கூச்சல்.

வெடிச் சத்தம்.

கார் ஹார்ன்.

என நிறைய சத்தங்கள் ஜன்னல் வழியே தான் வருகின்றன. 

ஜன்னல்கள் சில நேரம் ஆபத்தானவை. பேருந்தில் ஜன்னல் வழி கையை நீட்டி கை இழந்தவர்கள். ரயிலின் ஜன்னல் வழி தவறி விழுந்த மொபைல். சோலார்பேட்டையில் இன்றும் ஜன்னல் வழி நடக்கும் நகைத் திருட்டு. 

ஜன்னல் நம்மைப் பாதி தைரியசாலிகளாக மாற்றுகிறது. கதவில் லென்சு பொறுத்தும் வசதி வராத நிலையில் யாராவது கதவைத் தட்டினால் அல்லது காலிங் பெல் அடித்தால் முதலில் ஜன்னலைத் திறந்து அவர் யாரென்று பார்ப்போம். 

மற்றவர்களுக்குத் தெரியாமல் நமக்கு மட்டும் தெரியும்படி பார்க்க ஜன்னல் இடைவெளிகளைப் பயன்படுத்துகிறோம். 

ஜன்னல் நமக்கு எல்லாவற்றையும் காட்டிவிட்டு சலனமில்லாமல் இருக்கும். 

நம்மைச் சுற்றி இருக்கும் நம் உறவுகளும் ஒரு வகையில் ஜன்னல்களே. அவர்கள் வழியே நாம் உலகைப் பார்க்கிறோம். கேட்கிறோம். நுகர்கிறோம். சுவைக்கிறோம். தொடுகிறோம். 

'எங்கே என் கையைத் தொடு பார்ப்போம்' என்று ஒரு குழந்தை ஜன்னலின் வழியே கையை நீட்டிக் கொண்டிருந்தது. 

'எங்கே நீங்களும் தொடுங்கள் பார்ப்போம்!'

2 comments:

  1. Anonymous4/02/2014

    பல நேரங்களில் நாம் இலகுவாக மூச்சு விட உதவி செய்வதும் இந்த ஜன்னல்கள்தான். ஜன்னல்கள் இல்லாத வீடுகளும் உண்டு.நாமும் கூட நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு 'உந்துசக்தி'(motivation) தரும் ஜன்னல்களாக இருக்கலாம்...'ஐய்யய்யோ,காலங்கார்த்தால இவங்கள பாத்துட்டோமே' என்று எண்ணாதவரை.

    ReplyDelete