கிறிஸ்தவர்கள் இன்று நாம் தவக்காலத்தைத் தொடங்குகின்றனர். தவக்காலம் என்றால் என்ன? கத்தோலிக்கத் திருச்சபையின் வழிபாட்டு ஆண்டானது நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது: 1) திருவருகைக்காலம் மற்றும் கிறிஸ்து பிறப்புக் காலம், 2) தவக்காலம், 3) பாஸ்கா காலம் மற்றும் 4) பொதுக்காலம். தவக்காலம் என்பது இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடுவதற்கான தயாரிப்பின் காலம்.
இந்தத் தவக்காலம் மொத்தம் 40 நாட்கள் (சரியாக எண்ணினால் 45 நாட்கள் வரும். ஒரு சிலர் 49 நாட்கள் என்றும் கணக்கிடுவர்). விவிலிய மரபில் 40 என்றால் முழுமை. நாற்பது முக்கியத்துவம் வாய்ந்த எண். இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தைக் கடந்து பாலும் தேனும் பொழியும் நாட்டிற்குள் நுழைந்த ஆண்டுகள் நாற்பது. இயேசு சோதிக்கப்பட்டது 40 நாட்கள். நாற்பது நாட்கள் நோவா காலத்துப் பெருவெள்ளம்.
தவக்காலத்தின் தொடக்கமாக இன்று சாம்பல் புதன் கொண்டாடப்பட்டது.
மனித வாழ்வின் நிலையாமை, நமக்குத் தேவையான தூய்மை ஆகியவற்றை உணர்த்தும் ஒரு அடையாளம் சாம்பல்.
தவக்காலத்தை ஒரு பயணத்திற்கு ஒப்பிடலாம். வாழ்க்கை என்ற பயணத்தின் நம் பாதையை ஒரு நிமிடம் அலசிப் பார்க்கும் தருணம் இது. பல நேரங்களில் பயணத்தின் இறுதியில் தான் மகிழ்ச்சி உள்ளது என நினைத்துப் பல நேரங்களில் பயணத்தை நாம் மறந்து விடுகிறோம். வேகமாக வாழ்ந்து விட நினைக்கிறோம். பயணத்தின் ஒவ்வொரு அடியும் நாம் ரசிக்க வேண்டிய ஒன்று. ஒவ்வொரு அடியையும் பொருளுணர்ந்து வாழ்ந்தால் இனிமைதான் வாழ்க்கை.
மற்றொரு பக்கம் நாம் பயணத்தைப் பல நேரங்களில் மேற்கொள்வதே கிடையாது.
டி.எஸ். எலியட் சொல்வார்: 'அவ்வளவு தூரம் பயணம் செய்த ஒருவரால் தான் அவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியும் எனச் சொல்ல முடியும்!'
ஐயோ! அவ்வளவு தூரமா? ஐயோ! அந்த வேலையா? ஐயோ! அந்தப் படிப்பா? ஐயோ! அவரா? முடியவே முடியாது என நாமே முடிவு கட்டிக் கொள்கிறோம்.
ஐயோ! நாற்பது நாள் விரதமா?
ஐயோ! நாற்பது நாள் குடிக்கக் கூடாதா?
ஐயோ! நாற்பது நாள் திருடக் கூடாதா?
ஐயோ! நாற்பது நாள் பொய் சொல்லக் கூடாதா?
ஐயோ! நாற்பது நாள் கோயிலுக்குப் போகனுமா?
ஐயோ! நாற்பது நாளா?
தொடங்கித்தான் பார்ப்போமே!
ஏன் காத்திருக்க வேண்டும்?
ஏன் தள்ளிப் போட வேண்டும்?
ஏன் சாக்குப் போக்கு சொல்ல வேண்டும்?
ஏன் நமக்கு நாமே வேலி போட வேண்டும்?
ஏன் நம்மையே ரொம்ப சீரியசா எடுக்க வேண்டும்?
போய்த்தான் பார்ப்போமே...நம்மால் எவ்வளவு தூரம் முடியும் என்று!
தொடங்கியுள்ள தவக்காலத்துக்கு உத்வேகம் கொடுக்கும் வார்த்தைகள்.நானும் கூட இந்தப் பயணத்தை அர்த்தமுள்ளதாக்க சில விஷயங்களை செய்தாக வேண்டும் என்ற உறுதியோடு உள்ளேன்.இப்பொழுது " செய்துதான் பார்ப்போமே" ன்னு இலகுவாக சொல்லத் தோன்றுகிறது.நன்றிகள்.
ReplyDeleteA travel towards purity
ReplyDelete