Tuesday, March 18, 2014

வித்தியாசமான அடக்கச் சடங்கு

இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறைச்சாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்...அவர் மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார். அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார். அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். (மாற்கு 15:42-47)

இன்று இயேசுவின் அடக்கம் பற்றிய மாற்கு நற்செய்தியாளரின் வர்ணனையைப் பற்றிய ஒரு ஆய்வுத்தாள் எழுதினேன். அதை எழுதிய போது என்னுள் எழுந்த சிந்தனைகளை இன்று பகிர்கிறேன்.
இரவுகளிலேயே நீண்ட இரவு எது தெரியுமா? நமக்கு மிக நெருக்கமானவர்களின் உயிர் பிரிந்து அவர்களின் இறந்த உடலோடு நாம் கழிக்கும் இரவுதான். சீக்கிரம் விடியாதா என்று நாம் ஏங்குவதும் இந்த இரவு தான். சீக்கிரம் விடிய மாட்டேன் என அடம்பிடித்து விடிவதும் இந்த இரவு தான். நெஞ்சம் நிறை சோகம், கண்கள் நிறை கண்ணீர் என நாம் பிரிவின் துயரைத் துடைத்துக் கொண்டிருப்போம். நம் உற்றவர்களும், நண்பர்களும் 'உடனிருக்கிறோம்' என்று நம் அருகில் இருக்கும் ஒரு இரவு இது. நம் வீட்டில் நாம் அழுது கொண்டிருக்க எதிர்வீட்டில் 'காமெடி புரோகிராம்' ஓடிக்கொண்டிருக்கும். இதுதான் வாழ்வின் எதார்த்தம். 'நமக்கு நடக்கும் வரை நடப்பதெல்லாம் வேடிக்கை' என்பார் கண்ணதாசன்.

இயேசுவின் வாழ்வில் அவரின் முதல் இரவும் அவருக்குத் தனிமை தான். இறுதி இரவும் தனிமைதான். மூன்று ஆண்டுகள் உடனிருந்தவர்கள் ஓடிப்போயினர். அவரை அடக்கம் செய்ய வந்தவர் ஒரு புதியவர்: அரிமத்தியா நகர் யோசேப்பு.

இவர் வருகிறார். பிலாத்திடம் செல்கிறார். உடலைக் கேட்கிறார். புதிய துணியை வாங்குகிறார். உடலை சிலுவையிலிருந்து இறக்குகிறார். துணியால் சுற்றுகிறார். கல்லறையில் வைக்கிறார். கல்லை உருட்டி வைக்கிறார். இவரின் செயல்களை அடுத்தடுத்த வினைச்சொற்களால் ஒரே மூச்சாகச் சொல்லி முடிக்கின்றார் மாற்கு.

இயேசுவின் அடக்கம் நமக்கு நான்கு பாடங்களை முன்வைக்கின்றது:

1. கடவுள் இறந்துவிட்டார். இயேசு இறந்த வெள்ளி இரவும், சனிக்கிழமையும் இந்த உலகை யார் காப்பாற்றினார்? என்று கேள்வி கேட்பார் ஹேகல் என்ற ஜெர்மானிய மெய்யியலாளர். இயேசு மனுவுருவானபோதே கடவுள் இறந்து விட்டார் எனவும், இனி கடவுள் இந்த உலகிற்குத் தேவையில்லை எனவும் சொல்லத் தொடங்கினர் இவரின் ஆதரவாளர்கள். இன்றைய அறிவியல் உலகம் கடவுள் என்ற ஒன்றைப் பூமிப்பந்திலிருந்து துடைத்துவிடத் துணிகின்றது. 'கடவுள் இருக்கிறாரா? இறந்து விட்டாரா?' என்பது ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் கேட்க Nவுண்டிய கேள்வி. இந்த உலகின் பார்வைக்கு என் அப்பா இறந்துவிட்டார்தான். ஆனால் என் பார்வைக்கு அவர் இன்றும் என்னோடு வாழ்கிறார். அது போலத்தான் கடவுளும்.

2. மனிதன் எதுவரை மனிதனாக இருக்கிறான்? இறப்பின் போது நம் மனிதத்தன்மை அழிந்து விடுகிறதா? உடல்தானம் செய்யுங்கள் என்றும் வாழுங்கள் என்று முழக்கம் செய்கிறார்கள். நாம் இறந்தும் இருக்க முடியும். மனிதனை மனிதன் என்பதற்காக மதிக்கும் பக்குவம் வரவேண்டும். அரிமத்தியா நகர் யோசேப்புக்கு இயேசுவின் மனிதத்தன்மை மேன்மையாகப் பட்டது. 'இவரால் எனக்கு என்ன ஆகும்?' என்று அவர் கேட்கவில்லை. 'இவருக்கு இதை நான் செய்யா விட்டால் அவர் என்ன ஆவார்?' என்று தான் கேட்கின்றார். இதுதான் அறம். இதுதான் பொறுப்புணர்வு.

3. திருச்சபையை கிறிஸ்துவின் உடல் என்கிறோம். அது உயிருள்ள உடலாகவோ, அவரின் இறந்த உடலாகவோ இருப்பது நம் கைகளில்தான் இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் உயிரோட்டமான மதிப்பீடுகளைக் கொண்டிருக்கும் போதுதான் திருச்சபையும் வாழ்கின்றது.

4. சீடத்துவம் என்பது இயேசுவின் மேல் கண்களைப் பதிப்பது. கல்லறைக்கு எதிரில் நிற்கும் மகதலா மரியாவும் மற்ற மரியாவும் இயேசுவின் மேல் தங்கள் கண்களைப் பதிய வைக்கின்றனர். இதுதான் சீடத்துவம். இறப்பும் கூட எங்களைப் பிரித்துவிட முடியாது என்று துணிச்சலோடு நிற்கின்றனர் இந்த இளவல்கள்.

'ஒரு வித்தியாசமான அடக்கச் சடங்கு இது!'

1 comment:

  1. Anonymous3/18/2014

    இத்தரணியையே படைத்த ஆண்டவன் தனக்கென்று ஒரு இடமின்றி இரவல் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார்.இறந்த இவரின் உடலோடு பயணிக்கின்றன சில நல்ல உள்ளங்கள்.யார எப்படிப் போனால் எனக்கென்ன என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் தமக்கு நல்லதெனப்பட்டதொரு செயலுக்குத் துணிவோடு துணைநின்ற இம்மூவரும் என்னைப் கவர்ந்த கதாபாத்திரங்கள்.எனக்கும் வருமா அந்தத் துணிவு? வரவேண்டும்.......

    ReplyDelete