Saturday, March 29, 2014

ஐஃபோன் கேட்டால் கேலக்ஸி கொடுப்பாரா?

நேற்று அருட்பணி. பால்பிரிட்டோ அவர்களோடு ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சின் இறுதியில் 'எழுதுவதற்கு ஏதாவது ஐடியா கொடுங்க!' என்று சொன்னேன். 'உவமைகள் பற்றியும், திருப்பாடல்கள் பற்றியும், தேம்பாவணி பற்றியும் எழுதலாம்!' என நினைத்தபோது புதியதாக எழுது! என்றார். 'விவிலியத்தை அதன் மூல மொழியில் படிக்கும் பாக்கியம் உரோமையில் நீ படிக்கும் பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் கிடைக்கும். மூல மொழிக்கும், மொழிபெயர்ப்பிற்கும் உள்ள இடைவெளியைப் பற்றி எழுது!' எனச் சொன்னார்.

நான் நேற்று முழுவதும் இதைப் பற்றி யோசித்தேன். ஒவ்வொரு மொழி பெயர்ப்பும் ஒரு விளக்கவுரைதான். எடுத்துக்காட்டாக, 'நானே உண்மையும், வாழ்வும், வழியும்' என இயேசு சொல்வதாக இருக்கும் பகுதி கிரேக்க மொழியில் 'நானே எதார்த்தமும், வாழ்க்கையும், பாதையும்' என இருக்கிறது. இரண்டிற்கும் இடைவெளி இருக்கத்தானே செய்கிறது. இந்த இடைவெளி ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் விவிலியத்தின் எழுத்துக்களுக்கும், வார்த்தைகளுக்கும் இடைவெளி இருக்கத்தான் செய்கின்றது. இந்த இடைவெளிகளையெல்லாம் பற்றி எழுதலாமே! என முடிவும் செய்தேன்.

இன்று முதல் நாம் தொடங்கும் இந்தப் பயணத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்? தற்காலிகமாக, 'சொன்னதும் - சொல்லாததும்!' என வைப்போம்.

இதற்கு முன் 'கேள்விகள்' என்று நாம் தொடங்கினோம். விவிலியத்தில் ஒருவர் மற்றவரைப் பற்றிக் கேட்ட 101 கேள்விகளை நாம் சிந்தித்துள்ளோம்.

இன்று முதல் நாம் தொடங்குவது: 'சொன்னதும்! சொல்லாததும்!'

எதில் தொடங்குவது?

இடைவெளிகள் என்ற அடிப்படையில் பார்த்தால் விவிலியத்தில் அவைகளை மூன்றுவகைகளாகப் பிரிக்கலாம்:

1. கதைமாந்தர்கள்.
2. கதையாடல்கள்.
3. கதைமாற்றங்கள்.

1. கதைமாந்தர்கள். கதைமாந்தர்கள் இரண்டு குழுக்களாக இருக்கின்றனர். உண்மையான கதைமாந்தர்கள். கதையின் கதைமாந்தர்கள். உண்மையான கதைமாந்தர்கள் உண்மையானவர்களா என்பதை நாம் நிரூபிக்க முடியாது. ஆனாலும் அவர்களை உண்மை என எடுத்துக்கொள்வோம். இவர்களுக்கு உதாரணம்: ஆபிரகாம், சாரா, ஈசாக்கு, ரெபேக்கா, யாக்கோபு, லெயா, ரேச்சல், மோசே, தாவீது, சக்கேயு, இயேசு, மரியா, யோசேப்பு, தோமா போன்றவர்கள். கதையின் கதைமாந்தர்கள் என்பவர்கள் உருவகங்களாக வருபவர்கள். எடுத்துக்காட்டாக, நற்பேறு பெற்றவர், ஞானி, நல்ல சமாரியன், ஊதாரி மகன்.

இந்தக் கதைமாந்தர்கள் வாழ்விலும் 'சொன்னதும் இருக்கின்றது. சொல்லாததும் இருக்கின்றது!:

எரியும் முட்புதரில் யாவே இறைவனைக் காணும் மோசேயிடம் 'உன் காலணிகளைக் கழற்று!' என்கிறார் இறைவன். மோசே காலணிகளை மீண்டும் அணிந்து கொண்டாரா?

தன் தந்தை ஆபிரகாமோடு மொரியா மலைக்குப் பலி செலுத்துச் சென்ற ஈசாக்கு வீடு திரும்பவில்லை. ஆபிரகாமும், அவரது வேலையாட்கள் மட்டுமே திரும்புகின்றனர்.

ஊதாரி மகன் எடுத்துக்காட்டில் வரும் மூத்த மகன் வீட்டிற்குள் சென்றானா?

சக்கேயு இயேசுவை அனுப்பிவிட்டு வீடு திரும்பியவுடன் அவரது மனைவியும், பிள்ளைகளும் அவரிடம் என்ன சொன்னார்கள்?

நல்ல சமாரியன் மீண்டும் சாவடிக்கு வந்து பணத்தைச் செலுத்தினாரா?

கானாவூரில் திருமணம் நடந்ததா?

2. கதையாடல்கள். மற்றொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால்...உருவகங்கள் மற்றும் உவமைகள். பழைய ஏற்பாட்டிலும் இறைவாக்கினர்கள் உருவகங்களைப் பயன்படுத்துகின்றனர். புதிய ஏற்பாட்டில் இயேசுவும், தூய பவுலும் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இந்த உருவகங்களில் சொன்னவையும் உள்ளன, சொல்லாதவையும் உள்ளன. உருவகங்களுக்கும், நமக்கும் நிறைய 'தலைமுறை' இடைவெளி இருக்கின்றது.

'பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாக பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?'... 'தீயோராகிய நீங்களே...'

இந்த உருவகத்தை இன்றைய மொழியில் எப்படிச் சொல்லலாம்?

'பிள்ளை ஐஃபோன் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது கேலக்ஸி கொடுப்பாரா? மெடிக்கல் கல்லூரியில் சேர்க்கச் சொன்னால் ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ப்பாரா?'... 'தீயோராகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால்...விண்ணகத்தந்தை...

3. கதைமாற்றங்கள். ஒரு கதை மற்றொரு கதையாக மாறுகிறது. விவிலியத்தில் நடந்த புதுமைகள். 'கழுதையைத் தேடி வந்த சவுல் அரசனாகத் திரும்புகிறார்.' 'ஆடு மேய்க்க வந்த மோசே இஸ்ரயேலின் தலைவராகின்றார்'. 'தண்ணீர் எடுக்க வந்த பெண் மணம் முடிக்கிறாள்'. 'கண் தெரியாதவர் பார்வை பெறுகின்றார்'. 'இறந்தவர் உயிர்பெற்றெழுகின்றார்!'

ஆனால்...

கழுதைகளுக்கு என்ன ஆயிற்று? ஆடுகள் எங்கே போயின? தண்ணீர் எடுத்தாரா? பார்வை பெற்றவர் தன் சாப்பாட்டிற்கு என்ன செய்தார்? லாசர் தன் இறப்பு பற்றி என்ன சொன்னார்?

இந்த இடைவெளிகள் நம் மூன்றாம் வகை.

சரி...

சொல்லியாச்சு...

இதையெல்லாம் எழுதிடலாமா?

கஷ்டம் தான். ஆனால் இயலும். கொஞ்சம் கொஞ்சமாக...

இதில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும்:

முதலில் மொழி. எபிரேய மற்றும் கிரேக்கக் கலாச்சாரத்தையும் பின்புலத்தையும் தமிழில் கொணர்வது. ஆனால் தமிழின் இனிமையும், எளிமையும், செறிவும் இதைச் சாத்தியமாக்கும்.

இரண்டாவது கற்பனைத் திறன். இன்னைக்கு மைன்ட் நல்லா வேலை செய்கிறது. நாளைக்கு டல்லா இருந்தால் என்ன செய்வது? 'எதுவரை எழுத்து அழைக்கிறதோ அதுவரை நானும் செல்ல முயல்கிறேன்.'

மூன்றாவது அகல உழுவதை விட ஆழ உழ வேண்டும். 'உனக்கு புது பிரண்ட்ஸ் கிடைச்சாங்களான்னு!' என் பழைய பிரண்ட்ஸ் அடிக்கடி கேட்பாங்க. அவங்களுக்கு நான் சொல்வது இதுதான்: 'கிடைச்ச பிரண்ட்சிடம் தெரிந்து கொள்ள வேண்டியது, கற்றுக் கொள்ள வேண்டியது, அனுபவிக்க வேண்டியது இன்னும் இந்தியப் பெருங்கடல் போல ஆழமாக இருக்க 'மாற்றான் தோட்டம்' எதற்கு? நான் இதுவரை படித்தது, கேட்டதை விவிலியத்தின் கண் கொண்டு பார்க்க இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன்.

இதெல்லாம் முடியுமா ஃபாதர் என்கிறீர்களா?

கமாலியேலின் வார்த்தைகளைத் தான் உங்களுக்கும் சொல்வேன்:

'இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது.' (திப 5:38-39)


2 comments:

  1. Anonymous3/29/2014

    இதுநாள் வரை தாங்கள் தந்த படைப்புகளுக்கு பாராட்டும் நன்றியும் உரித்தாகட்டும்.கல்லையும் கவிதையாக்கும் மந்திரவாதி தாங்கள்.எதைக்கொடுத்தாலும் எந்த வடிவில் கொடுத்தாலும் அது தன் பலனைத் தராமல் போகாது.ஏனெனில் அது 'கடவுளைச் சார்ந்தது'.ஆனால் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்...நீங்கள் எழுதுவது 5-10 வருடங்கள் குருமடத்தில் பயின்றவர்களுக்கல்ல..எங்களைப் போன்று விவிலியத்தை வாழ்வாக்க நினைக்கும் சாமான்யர்களுக்காக.தங்களது அனைத்து முயற்சிகளும் அதன் பலனைத்தர வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.நன்றிகள்...இறைவனின் திருக்கரம் என்றென்றும் தங்களில் செயல்பட்ட்டும்.

    ReplyDelete
  2. தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்!!!

    ReplyDelete