Wednesday, March 12, 2014

நீங்கள் ஒரு உருவகம்

'நாம் வாழும் உருவகங்கள்' (The Metaphors We Live By) என்ற ஒரு புத்தகத்தை வாசித்தேன். நாம் பயன்படுத்தும் மொழியில் பல உருவகங்கள் உள்ளன என்று சொல்லும் ஒரு புத்தகம். மொழி ஒரு விநோதமான மனிதப் படைப்பு. கடவுள் மொழியைப் படைக்கவில்லை. மனிதர்கள் தங்களுக்கென்று கட்டமைத்துக்கொண்ட ஒரு உன்னதமான ஊடகம் மொழி.

மொழி மனிதர்களுக்குத் தரப்பட்டது அவர்கள் வெளிப்படுத்த அல்ல, மறைத்துக்கொள்ளவே! என்பார் ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். மொழியால் வெளிப்படுத்தவும் முடியும், மறைக்கவும் முடியும். 'எனக்குத் தலைவலி!' என நீங்கள் என்னிடம் சொல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இந்த இரண்டு வார்த்தைகள் நீங்கள் இந்த நிமிடத்தில் அனுபவிக்கும் வலியை முழுமையாகச் சொல்லிவிடுமா? எனக்கு என்றோ ஏற்பட்ட தலைவலியை வைத்துத்தான் நான் 'தலைவலி' என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 'தலைவலி' என்ற வார்த்தை முழு தலைவலியையும் உணர்த்திவிடுவது இல்லை. அப்படியென்றால் மொழி மறைக்கத்தானே செய்கின்றது.

உருவகம் என்ற ஒன்றை மட்டும் இன்று நாம் சிந்திப்போம்.

'மேல்' என்பது உயர்ந்து என்றும், 'கீழ்' என்பது தாழ்ந்து என்றும் நாம் உருவகம் செய்கின்றோம். அவன் வாழ்வில் படிப்படியாய் மேலே சென்றான் எனவும் அவன் எண்ணங்கள் மிகவும் கீழாக இருக்கின்றன எனவும் சொல்கின்றோம். இதில் முதலில் வரும் 'மேலே' என்பது உயர்ந்தது எனவும், பின் வரும் 'கீழே' என்பது தாழ்ந்தது எனவும் அர்த்தம் தருகின்றது. இது இடம் சார்ந்த உருவகம்.

உருவகத்திற்கு இரண்டு உலகங்கள் உண்டு. ஒன்று அது நேரடியாக உணர்த்தும் பொருள். மற்றொன்று நேரடியைத் தாண்டிச் செல்லும் பொருள்.

'ஆண்டவர் என் ஆயன்!' என திருப்பாடல் ஆசிரியர் எழுதுகிறார். இதில் 'ஆயன்' என்பது உருவகம். இது உணர்த்தும் முதல் பொருள் 'ஆடுகளை மேய்க்கும் ஒரு நபர்'. இது காட்டும் இரண்டாவது பொருள்: 'ஆடுகளை மேய்ப்பவர் ஆடுகளைக் கண்காணிக்கின்றார். அதே போல இறைவன் நம்மைக் கண்காணிக்கின்றார்'. கண்காணிக்கும் அல்லது வழிநடத்தும் பணி ஆயனுக்கும், ஆண்டவருக்கும் பொதுவாக இருப்பதால் அந்த நிலையில் 'ஆண்டவர் என் ஆயன்' எனச் சொல்லுகின்றோம்.

உருவகங்களை அப்படியே திருப்பிப் போட்டால் பொருள் வராது. மேற்சொன்ன வார்த்தைகளையே திருப்பி 'ஆயன் என் ஆண்டவர்!' என்று சொல்ல முடியுமா? தமிழில் இலக்கிய நடையில் சொல்லலாம். ஆனால் உரைநடையில் இதைப் பொருள் கொண்டால் ஆடு மேய்க்கும் ஒருவர் தான் என் ஆண்டவர், மாடு மேய்ப்பவரோ, ஒட்டகம் மேய்ப்பவரோ அல்ல என மாறிவிடும். 

இந்த உருவகங்கள் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

ஒவ்வொரு மனிதரும் ஒரு உருவகம். நாம் பார்க்கும் ஒன்றைத் தாண்டி பார்க்காத ஒன்றை அவர் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார். அதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம். சில நேரங்களில் இதுதான் அர்த்தம் என நாம் சுருக்கிக் கொள்கின்றோம். சில நேரங்களில் 'இப்படி இருக்குமோ?' என்று பெரிதாக்கி விடுகிறோம். 

மொழி திரைப்படம் பார்த்திருப்பீர்கள். வார்த்தைதான் மொழி என்பது கிடையாது. மௌனம் கூட மொழிதான். நம் வாழ்வில் உள் நுழையும் வார்த்தைகளுக்கும் அர்த்தம் உண்டு. உள் நுழையாத மொளனங்களுக்கும் அர்த்தம் உண்டு.

நம்மால் மொழியின் சின்ன கட்டமைப்பையே புரிந்து கொள்ள முடியவில்லையே பின் எப்படி இதை உருவாக்கிய மனிதர்களையோ, அதற்குத் தூண்டிய கடவுளையோ புரிந்து கொள்ள முடியும்?

நம் வாழ்வில் உருவகங்களாக வரும் உன்னதர்களை வெறும் உருவங்களாகச் சுருக்கி விடாமல் இருந்தாலே போதும்!

5 comments:

  1. Anonymous3/12/2014

    நம் வாழ்வில் உள் நுழையும் வார்த்தைகளுக்கும்,உள் நுழையாத மௌனங்களுக்கும் அர்த்தம் உண்டு.பளிச்சென்ற உண்மை.புரிந்நு கொள்ளப்படாத 'உருவகங்கள்'....புரிந்து கொள்ள முடியாத 'மனிதர்கள்'...இறைவனுக்கு இன்னொரு மனித அவதாரம் தேவை என் எண்ணத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. Each one of us is a metaphor. There is a surprise in non-understanding. Ignorance is bliss.

      Delete
  2. Anonymous3/13/2014

    பல தடவைகள் எம் மௌனங்கள் தான் எம் அநேகமான பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. விவிலியத்தில் எனக்கு மிகவும் பிடித்த உருவகம் கடவுள் தம் மக்களைப் பாதுகாக்கிறார் என்னும் உண்மையை விளக்கிச் சொல்ல விவிலியம் பல உருவகங்களைப் பயன்படுத்துகிறது. ''ஆண்டவர் என் கற்பாறை என் கோட்டை, நான் புகலிடம் தேடும் மலை'', ''என் கற்பாறையும் கோட்டையும் நீரே'' போன்ற உருவகங்கள் உறுதியையும் திடமான நிலையையும் குறிப்பதால் கடவுள் தம் மக்களைக் கைவிடாமல் காத்து, அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் கண்காணிப்பதோடு, எதிரிகளின் தாக்குதலால் சேதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார் என்னும் அடிப்படையான உண்மையை உணர்த்துகின்றன.

    ReplyDelete
  3. Anonymous3/13/2014

    மொழியை நோக்கும் போது. எனக்கு நினைவுக்கு வருவது தொடக்நூல் 10ம் அதிகாரமே. மொழி உருவாக்கத்துக்கும் அதன் பிரிப்புக்கும் இறைவனின் தலையீடு இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. Yes. Genesis 10 initiates the birth of languages. Language is a human invention necessitated by the divine. Is it not?

      Delete