நேற்று எங்கள் கோவிலில் 'கார்னிவல் திருவிழா' கொண்டாடினோம். எங்கள் பங்கின் இளைஞர்களும், இளம்பெண்களும் கலக்கி விட்டார்கள். இந்த ஆண்டு நாங்கள் எடுத்த தலைப்பு: 'உலக நாடுகள்'. இந்திய நாட்டின் மாடலுக்கு நான் பொறுப்பு எடுத்துக்கொண்டேன்.
என்ன நடந்தது நேற்று?
கார்னிவல் என்றால் என்ன? கார்னிவல் என்பது திருநீற்றுப்புதனுக்கு முன் அல்லது தவக்காலம் தொடங்குவதற்கு முன் வரும் ஒரு திருவிழா. இத்தாலி நாட்டின் வெனிசு நகரமும், தென்னமெரிக்காவின் பிரேசில் நாடும், ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரமும் பாரம்பரியாக இந்தத் திருவிழாவிற்கு பெயர் பெற்றவை.
கார்னிவல் என்ற வார்த்தையின் தொடக்கத்திற்கு மூன்று இலத்தீன் வார்த்தைகள் காரணமாக இருக்கின்றன. முதலில், 'கார்னே லெவாரெ' (carne levare). 'கார்னே' (carne) என்றால் இறைச்சி. 'லெவாரெ' (levare) என்றால் 'விலக்குவது'. தவக்காலத்தில் இறைச்சியை விலக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. இரண்டாவதாக, 'கார்னே வாலே' (carne vale). இதன் பொருள் 'இறைக்சிக்கு குட்-பை (good-bye)'. இனி நாற்பது நாட்களுக்கு இறைச்சி வேண்டாம் என்று இறைச்சிக்கு விடை கொடுப்பது. மூன்றாவதாக, 'கார்ருஸ் நாவலிஸ்' (carrus navalis). பண்டைக் காலத்தில் உரோமை நகரில் 'நாவிகும் இசிடிஸ்' (navigium isidis) என்ற ஒரு கப்பல் இருந்தது. இந்தக் கப்பலில் 'இசிடிஸ்' என்ற தேவதை இருந்தது. இந்தத் தேவதை வசந்த காலத்தின் தேவதை. பனிக்காலம் முடிந்து விட்டது என்று அறிவிக்கவும் இனி கடல் பயணம் மற்றும் மீன்பிடி செய்யலாம் என்று அறிவிக்கும் விதமாக இந்தக் கப்பல் இத்தாலி நாட்டைச் சுற்றி வலம் வரும். இன்றும் வெனிசு நகரில் இந்த விழாவன்று இந்தக் கப்பலின் மாதிரியைச் செய்து தெருக்களில் இழுத்து வருவர்.
கார்னிவல் திருவிழாவிற்கு 'முகமூடித் திருவிழா' என்றும் 'மாற்றுடைத் திருவிழா' என்றும் பெயர்கள் உண்டு.
கார்னிவல் திருவிழா சொல்வது இதுதான்: மாற்றம். ஆண்டின் தட்பவெட்பநிலை மாறுகிறது. நாமும் மாற வேண்டும். நம் உடைகளும் மாற வேண்டும்.
அமெரிக்காவில் உள்ள ஒரு சில அடிப்படைவாதமுள்ள கிறித்தவ சபைகள் இந்தக் கொண்டாட்டம் மற்ற சமயத்தவரின் (கிரேக்க-உரோமை) திருவிழா என்பதால் இதை 'சாத்தானின் திருநாள்' என்று அர்த்தம் கொடுக்க, இன்று அதன் தாக்கம் அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் பரவிவிட்டது. இன்றைய நாளில் கறுப்பு அணிந்து, பேய் போல முகமூடி அணிந்து ஒருவரையொருவர் பயமுறுத்திக் கொள்வர்.
என்னைப் பொறுத்தவரையில் இது மாற்றத்திற்கான கொண்டாட்டம். பேய் போல ஒருவரை ஒருவர் பயமுறுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
இந்தத் திருவிழா நமக்குச் சொல்லும் பாடங்கள் என்ன?
1. மாற்றம். மாற்றம் ஒன்றே மாறாதது. எல்லாம் மாறும். 'நாம் இன்று நம் உலகம்' என நினைக்கும் ஒன்று நொடிப்பொழுது மாறிவிடலாம். அந்த மாற்றத்திற்கு நாம் தயாரா?
2. மற்றவர்கள் போல இருக்க ஒரு வாய்ப்பு. இன்றைய நாளில் தாங்கள் இருக்க விரும்பும் ஒன்று போல நாம் உடை உடுத்திக் கொள்ளலாம். ஆண்கள் பெண்கள் போல, பெண்கள் ஆண்கள் போல, இத்தாலியர்கள் இந்தியர்கள் போல. மாற்று வாழ்க்கை வாய்ப்பை அளிக்கிறது இந்த நாள்.
3. முகமூடி. பல நேரங்களில் நம் வாழ்க்கை முகமூடி வாழ்க்கையாகத்தான் இருக்கின்றது. நம் பெற்றோருக்காக, நண்பர்களுக்காக, காதலிக்காக, கணவனுக்காக, சமூகத்திற்காக என்று ஒரே நாளில் நாம் எத்தனையோ முகமூடிகள் அணிகின்றோம். நமக்கு எல்லா நாளும் கார்னிவலா?
எங்கள் பங்கில் என்ன நடந்தது?
நான்கு சேலைகள். இரண்டு சுடிதார்கள். ஒரு வேஷ்டி சட்டை. இந்திய மாடல்கள் ரெடி. ஜோர்ஜா, ஃபெதரிக்கா, ஃபப்ரிசியா மற்றும் வலண்டினா சேலைகள் கட்டினர். எப்படிக் கட்டினார்கள்? என நினைக்கிறார்களா? விக்கிஹொவ் (wikihow) என்ற இணைய தளத்தைப் பாருங்கள். அங்கே படம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். நான் யாருக்கும் கட்டி விடவில்லை. அந்தப் பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை! அலெசாந்திரா மற்றும் மார்த்தா சுடிதார் அணிந்தனர். கிளவுதியோ வேஷ்டி கட்டினான்.
சேலை நங்கையர் எந்திரன் படத்தின் 'கிளிமாஞ்சாரோ' பாட்டிற்கு நன்றாகவே ஆடினார்கள். பாடலின் இறுதியில் சுடிதாரும், வேஷ்டியும் சேர்ந்து கொண்டது.
இத்தாலிய உடைகள், இங்கிலாந்து உடைகள், இசுலாமிய உடைகள், இந்திய உடைகள், ஆஸ்திரேலிய பாரம்பரிய உடைகள், ஆப்பிரிக்காவின் பலவண்ண உடைகள், பிரேசில், மெக்சிகோ உடைகள், மாடர்ன் உடைகள் என ஒரே கலர்புல்லாக இருந்தது.
இத்தாலி ஒரு ஃபேஷன் நாடு. எஃப்டிவி இங்கிருந்து தான் ஒளிபரப்பப்படுகிறது. எங்கள் பங்கு மக்கள் நம் ஆடைகளை நிறையவே ரசித்தனர்.
'கார்னிவல் திருவிழா' விளக்கம் நன்றாக இருந்தது.So உங்க ஊர்லயும் Unity in diversityயைக் கொண்டாட ஆரம்பித்து விட்டீர்கள் போல் தெரிகிறது.முயற்சி தங்களது எனில் வாழ்த்துக்கள்.ஆண்கள் பெண்களாகவும்,பெண்கள் ஆண்களாகவும் முகமூடி அணிய முயற்சிக்கலாம்.ஆனால்அது நிரந்தரமானதாக இருக்க முடியாது."Bloom where you are planted& how you are planted".....எங்கோ கேட்ட வரிகள்.ஏன் இப்போது ஞாபகத்திற்கு வருகின்றன என்றுதான் தெரியவில்லை.
ReplyDelete