பின் அமட்சியா ஆமோசைப் பார்த்து, 'காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு. யூதாவின் நாட்டிற்கு ஓடிவிடு. அங்கே போய் இறைவாக்குரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே. ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்' என்று சொன்னான். ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: 'நான் இறைவாக்கினன் அல்ல. இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை. நான் ஆடு மாடு மேய்ப்பவன். காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக் கொண்டிருந்த என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, 'என் மக்களாகிய இஸ்ராயேலிடம் சென்று இறைவாக்குரைத்திடு' என்று அனுப்பினார். (ஆமோஸ் 7:12-15)
நேற்றைய தினம் வீடு சந்திப்பைப் பற்றிப் பார்த்தோம். என் அறைக்கு வந்தவுடன் எனக்குள் ஒரு கேள்வி: 'இன்னும் இங்கிருக்க வேண்டுமா? இன்னும் அருட்பணி நிலையில் இருக்க வேண்டுமா? என் பணிதான் யாருக்கும் தேவையில்லையே? 'இங்கிருந்து போய்விடு!' என்று மறைமுகமாக அவர்கள் சொல்கிறார்களே? ஏன் நான் மட்டும் கஷ்டப்பட வேண்டும்?'
இந்தக் குழப்பத்தோடே இன்று வகுப்பிற்கும் சென்றேன். மோசேயின் அழைப்பை பற்றி இன்று படித்தோம். மோசே ஏன் கடவுளைப் பார்த்துக் கேள்விகள் கேட்டார்? என்ற கேள்வியுடன் வகுப்பு தொடங்கியது.
நமக்கு மேல் இருக்கும் ஒருவர் நம்மை எங்காவது போக அனுப்பினால் உடனடியாக நாம் 'சரி' என்போம். அல்லது நம் பயோடேட்டாவை எடுத்து, 'போவதற்கு நான் தான் சரியான ஆள். நான் இவ்வளவு படித்துள்ளேன். என்னிடம் நிறைய டேலன்டுகள் இருக்கின்றன. நானே செல்வேன்!' என்று கூட சொல்லியிருப்போம். ஆனால் மோசே கடவுள் அழைத்தும் மறுக்கின்றார். ஏன்?
இறைவாக்கினர்கள் தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்பினாலோ, தங்களின் உயர்ந்த நோக்கங்களுக்காகவோ இறைவாக்குப் பணியைத் தெரிந்து கொள்வதில்லை. மாறாக, அது அவர்கள் மேல் கடவுள் சுமத்துகின்ற பணி. கடவுளின் முன்னிலையில் பயோடேட்டாவிற்கும், விசிட்டிங் கார்டிற்கும் வேலைகள் இல்லை.
தங்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை முன்வைக்கும் இறைவாக்கினர் ஒரு தோல்வியாகவே மாறிவிடுகிறார்.
எனக்கு இந்த மக்களைப் பிடிக்கும் எனவும், பிடிக்காது எனவும் ஒரு இறைவாக்கினர் சொல்ல முடியாது. 'இவர்கள் இப்படி இருந்தால் தான் நான் இங்கு இருப்பேன்!' எனவும், 'அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் இருக்க மாட்டேன்!' என்று சொல்லவும் உரிமை இல்லை.
திருமணத்தில் இணையும் கணவன் மனைவிக்கு இடையேயான அன்பு கனிந்து ஒரு வருடத்தில் குழந்தை என்ற உயிராக, காணாத அன்பின் காண்கின்ற அடையாளமாக மாறுகின்றது. அவ்வளவு சீக்கிரத்தில் அருட்பணி நிலையில் அன்பு கனிந்து விடுவதில்லை. ஆகையால் தான் 'உடனடியாக!' எதுவும் பலன் இருப்பதாகத் தெரிவதில்லை.
'நான் படித்து என்ன பயன்?' 'நான் மறையுரை வைத்து என்ன பயன்?' 'நான் வீடு சந்தித்து என்ன பயன்?' என்று மூளை வேகமாகக் கேள்விகள் கேட்கின்றது. இந்த மூளை இப்படிக் கேட்கும்போதெல்லாம் கடவுள் 'ஏனப்பா இவ்வளவு அவசரம்! நானே உலகைப் படைக்க ஆறு நாள் ஆயிற்றே! நீ ஏன் இவ்வளவு குதிக்கிறாய்?' என்று மெல்லிய புன்னகை செய்வார்.
ஆமோசின் வார்த்தைகளையே இன்று என் வார்த்தைகளாக எடுத்துக் கொள்கிறேன்:
'நான் ஒரு ஆடு மேய்ப்பவன்.
நான் அத்திமரத் தோட்டக்காரன்.
அருட்பணி என் தொழில் அல்ல.
வேறு தொழிலில் தான் நான் இருந்தேன்.
என்னை அழைத்தவரே இங்கு அனுப்பினார்.
நீ விரும்புகிறாயோ... இல்லையோ இறைவாக்குரைப்பேன்!'
கடந்த ஞாயிறு 'மாலினி 22 பாளையங்கோட்டை' திரைப்படம் பார்த்தேன். அந்தத் திரைப்படத்தில் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக மாலினி சிறையில் அடைக்கப்படுவார். அவருக்கு கடிதம் எழுதுகின்ற அவரின் நலவிரும்பி இப்படி எழுதுவார்:
'சிறையின் தனிமையில் அழுதுகொண்டோ, வருத்தப்பட்டுக்கொண்டோ நாட்களை வீணாக்கி விடாதே. அந்தத் தனிமையில் உன்னோடு பேசு. உன்னையே முழுவதுமாக அறிந்து கொள். சிறையிலிருந்து வெளிவந்த பலர் இரும்பு மனிதர்களாக மாறியிருக்கின்றனர். நீயும் அப்படியே வா!'
வெளிநாட்டின் தனிமையில் அழுதுகொண்டும், வருத்தப்பட்டுக்கொண்டும் நாட்களை வீணாக்கி விடாதே கண்ணா!
தந்தையே நான் புனித பவுலின் வாழ்க்கையில் கற்றது. நல்ல "போராட்டத்தை" போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், "விசுவாசத்தை" காத்து கொண்டேன் என்று பவுல் தன் மரணத்திற்கு முன் முழங்குகிறார். நான் வாழ்க்கையை வாழ்ந்தேன், கடவுள் தான் கேட்டதை எல்லாம் செய்தார் என்று பவுல் குறிப்படவில்லை. வாழ்க்கையை போராட்டம் என்று குறிப்பிடுகிறார்.. வாழ்க்கை என்பது போராட்டம் நிறைந்தது. சாகும் வரை அதனோடு போராட வேண்டியது எல்லோருக்கும் உரியது. அது புரியாமல் சில வேலைகளில் நாம் கண்ணீர் விட்டு கடவுள் என்னை ஏன் கைவிட்டார் என்று புலம்புகிறோம். நம் ஆண்டவர் ஓட்டத்தை பொறுமையோடு ஓட கற்று கொடுத்திருக்கிறார் அல்லவா?
ReplyDeleteThanks for the encouraging words. Good day.
Deleteவிரக்தியின் உச்சிக்கே போகவிட்டு ஆமோசின் வார்த்தைகள் வழியே தங்களிடம் பேசியுள்ளார் இறைவன்.நாம் அவருக்காக மேற்கொள்ளும் எந்த முயற்சியும்,அதற்காக நாம் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் அதன் பலனைத் தராமல் போகாது.திடம் கொள்ளுங்கள் தந்தையே,தனக்கு மிக நெருக்கமானவர்களைத் தானே இறைவன் புடமிடுகிறார்.
ReplyDelete