இயேசு பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: 'நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், 'நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே? என்று போதகர் கேட்கச் சொன்னார்' எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார்நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.' சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். (மாற்கு 14:13-16)
இயேசுவின் பாடுகள் தொடங்கும் நேரம் யூதர்களின் பாஸ்காக் கொண்டாட்ட நேரம். பாஸ்கா நிகழ்வு யூதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வு. இந்த நிகழ்வு அவர்களுக்கு விடுதலையின் நிகழ்வு. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மோசேயின் தலைமையில் யாவே இறைவன் இவர்களுக்கு விடுதலை தந்தார். அவர்கள் எகிப்தை விட்டுச் சென்ற அந்த இரவு ஓர் ஆட்டுக்குட்டியைப் பலியிட்டு விருந்து கொண்டாடினார்கள். இந்த நிகழ்வை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூர்ந்தனர். பாஸ்கா விழாவை எருசலேமின் மதில்களுக்குள் தான் கொண்டாட வேண்டும் என்பது இணைச்சட்ட நூல் முன்வைக்கும் ஒரு பரிந்துரை. ஆகையால் ஒவ்வொரு ஆண்டும் எல்லா ஊர்களிலிருக்கும் யூதர்களும் எருசலேம் நோக்கிச் செல்வார்கள். இந்த நாட்களில் எருசலேமில் இடம் கிடைப்பது கடினம். இந்த நிலையில் தாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இயேசுவைக் கேட்கின்றனர் சீடர். இயேசு மிகவும் விலாவாரியாக அவருக்கு வேண்டிய இடம் குறித்துச் சொல்லுகின்றார்.
இயேசு குறிப்பிடும் இந்த அறிகுறியை ஒருசில விவிலிய ஆய்வாளர்கள் இயேசுவின் புதுமை என்றே சொல்லுகின்றனர். 'தண்ணீர் குடம் சுமந்து ஒரு ஆள் வருவார்!' - இதுதான் இயேசுவின் அடையாளம். இன்றும் நாம் யாரையாவது வெளியூருக்கு அனுப்பினால் அடையாளம் சொல்லும்போது, 'கட்டம் போட்ட சட்டை போட்ட, கையில் மஞ்சள் பை வைத்த, பச்சைக் கலர் சுடிதார் அணிந்த' என்று சொல்கின்றோம். இயேசுவின் காலத்தில் ஆண்கள் தண்ணீர் சுமப்பது ஒன்றும் புதிதல்ல. ஏனெனில் நிறைய அடிமைகள் தண்ணீர் எடுக்கும் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். அப்படியிருக்க இயேசுவின் சீடர்கள் எப்படிச் சரியாகக் கண்டுபிடித்திருப்பார்கள்?
'மண்குடம்' எனக் குறிப்பிடுகின்றார் இயேசு. அதுதான் அறிகுறி. வழக்கமாக ஆண்கள் தோல்பையிலும், பெண்கள் மண்குடத்திலும்தான் நீர் சுமப்பார்கள். ஒரு ஆண் மண்குடம் சுமப்பது சற்று வித்தியாசமானதாக இருந்திருக்கும். ஆகையால் அதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
இன்றும் நம் கண்முன் வித்தியாசமானவைகள், வித்தியாசமானவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களைக் கண்டு சிரிக்கவோ, கேலி செய்யவோ வேண்டாம்.
நாம் விருந்துண்ணும் இடத்தைக் காட்டும் அறிகுறிகளாகக் கூட அவர்கள் இருக்கலாமே!
இன்றும்கூட சிறிய ஊர்களில் 'பாஸ்கா' என்ற சொல் மிக்பிரபலம்.இயேசுவின் பாடுகளையும் உயிர்ப்பையும் த்த்ரூபமாக நடித்துக் காட்டுவார்கள்.2 நாட்களுக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியை நகர்ப்புற மக்களும் வந்து கண்டு களிப்பார்கள் ஒரு பக்தி முயற்சியாக.இங்கு சொல்லப்பட்டிருக்கும் பாஸ்கா இயேசு சம்பந்தப்பட்ட ஒரு சாதாரண நிகழ்ச்சியைப்பற்றி இருப்பினும் அந்த இறுதி வரிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் செய்தி மிகப் பெரியது.நமக்கு நல்லது செய்யக்கூடிய கூடியவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.அவர்களின் 'புறத்தை'யல்ல 'அகத்தை' இனம் காண்போம்.
ReplyDelete