ரெகுலரா செய்யனும்னு நினைச்சு ரெகுலரா செய்ற மிகச் சில காரியங்களில் ஒன்று பார்லர் போவது. ஆண்களுக்குப் பார்லர் என்றால் வெறும் ஹேர்டிரஸ் மட்டும்தான்!நான் வழக்கமாகச் செல்லும் பார்லருக்கு ஃபோன் அடித்தேன். அதன் உரிமையாளர், பணியாளர், விருந்தினர் உபசரிப்பாளர், கடை திறப்பாளர் எல்லாம் ஒரே ஆள்தான் - முருகன் அண்ணன்.
7 மணிக்கு ஃபோன் அடித்து, '7:10 க்கு வருகிறேன்' என்றேன். 'வாங்க!' என்றார்.
போய்ப்பார்த்தால் 4 பேர் வெயட்டிங். அந்த 4 பேரில் ஒருவருக்கு 'டை' அடிக்க அப்போதுதான் பவுடரைக் கொட்டிக் கொண்டிருந்தார். ஆளுக்கு 10 நிமிடம் என்றாலும் 40 நிமிடங்கள் ஆகிவிடும். இங்கேயே நின்றாhல் செபத்திற்கு செல்ல முடியாது. போய்விட்டு வந்தால் கடை மூடிவிடுவார். ரொம்பவும் யோசித்துக்கொண்டே, 'அண்ணன், போய்ட்டு 8 மணிக்கு வர்றேன்!' என்று சொல்லிவிட்டு திரும்பினேன்.
8 மணிக்குத்தான் என் அறையை விட்டு புறப்பட்டேன். பார்லர் போய் சேர்ந்தபோது 8:12 ஆகியிருந்தது. என்னை அழைப்பதற்காக தன் மொபைலை கையில் எடுக்க, நான் அங்கே போய் இறங்கினேன்.
போவதற்கு முன்பாகவே தூரத்தில் அவர் நிற்பதையும், அவரோடு உரையாடும் ஒருவரையும் கண்டேன். அருகில் வந்தபோது அவர் வட்டிக்கடைக்காரர் எனக் கண்டேன். வட்டிப்பணம் வசூலிக்க வந்திருந்தார் அவர். இவர் பார்லரின் கண்ணாடிக்குக் கீழிருந்த, கைப்பிடி ஒரு பக்கம் ஒடிந்து போயிருந்த டிராயரை இழுத்து அதில் இன்று விழுந்த அனைத்து பணத்தையும் எடுத்து அப்படியே வட்டியாக கொடுத்துக்கொண்டிருந்தார்.
இருக்கையில் அமர்ந்தேன்.
'எங்கே நீங்க வராமா போயிடுவீங்களோ!' என்றார்.
நான் அப்போது ஞானம் பெற்றேன்.
8 மணிக்கு இல்லத்திலிருந்து புறப்படும்போது எனக்குள்ளே ஒரு தயக்கம். 'நாளைக்கு போய் கொள்ளலாம்!' 'அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம்!' என என் மூளை சொன்னது. ஃபோன் அடிச்சு, 'அண்ணன் எனக்கு வேலையிருக்கு. இன்னொரு நாள் வர்றேன்' என சொல்லலாம் என நினைத்தேன்.
அப்படி ஒரு வேளை நான் சொல்லியிருந்தால் என்ன நடக்கும்?
தன் டிராயரின் இறுதி பணத்தையும் கொடுத்துவிட்டு வெறும் கையராகத்தானே அவர் வீடு சென்றிருப்பார்! ஆக, நான் சொல்லும் சொல்லும், சொல்லைக் காப்பாற்றுவதும், காப்பாற்றாமல் விடுவதும் என்னை பாதிக்கிறதோ, இல்லையோ, அடுத்தவரை அதிகமாகவே பாதிக்கிறது.
குறைத்தே சொல்வதும், அதை நிறைத்தே காப்பாற்றுவதும் என்றும் நலம் எனக் கண்டேன்!