'அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது
இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது'
(லூக்கா 2:24)
இன்று காலை கல்லூரிக்குச் செல்ல மெட்ரோ ஏறினேன்.
மெட்ரோ கதவு மூடியும் மெட்ரோ நகராமல் சில மணித்துளிகள் நின்றுகொண்டிருந்தது.
மெட்ரோவுக்கு வெளியே ப்ளாட்ஃபார்மில் டியூட்டியில் இருந்த ஒரு பெண் ஆர்மி இளவல் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள். உயரம் எப்படியும் ஆறடி இரண்டு அங்குலம் இருக்கும். நல்ல முகத் தோற்றம். செந்நிற முடி. அதன் மேல் ஒரு தொப்பி. கையில் நீண்ட துப்பாக்கி. வலது தொடையில் தொங்கிக் கொண்டிருந்த மற்றொரு கைத்துப்பாக்கி. காதில் வயர்லெஸ் குச்சி. நடந்து கொண்டே இருந்தவள் சட்டென மெட்ரோ நோக்கி திரும்பினாள். மெட்ரோவின் கண்ணாடி ஜன்னலில் தன் முகம் பார்த்துக் கொண்டே கலைந்திருந்த இரண்டு முடிகளை அப்படியே மேல்நோக்கி கோதிவிட்டு சரி செய்தாள்.
நிற்க.
மற்றவர் பார்க்குமாறு நாம் இருப்பதற்கு ரொம்பவே ஆசைப்படுகிறோம். இல்லையா?
நாளை ஆண்டவர் இயேசு எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட திருநாளைக் கொண்டாடுகிறோம்.
உலகத்தையே மீட்க வந்த தங்கள் மகனைக் கைகளில் ஏந்திய இளம் தம்பதியினர் யோசேப்பு-மரியா, இரு மாடப்புறாக்களை மறு கையில் ஏந்தி நிற்கின்றனர்.
அலட்டிக்கொள்ளாத அர்ப்பணம் இதுதான்.
இன்று காலையிலிருந்து என் மனம் என் தேவ அழைத்தல் முகாம் நாட்களை யோசித்துக்கொண்டிருந்தது.
ஒரு மே மாதம். நானும் என் அம்மாவும் ராஜபாளையத்திலிருந்து புறப்பட்டு மதுரை ஞானஒளிவுபுரம் வருகிறோம். மதுரைக்கு வருவது அதுதான் முதல்முறை. முகவரி கண்டுபிடித்து பிரிட்டோ பள்ளிக்கு வந்து சேர்ந்தோம். ஏறக்குறைய 40 பேர் முகாமிற்கு வந்திருந்தார்கள். எட்டாம் வகுப்பு முடித்திருந்தேன். கலர் ஆடைகளைக் களை எடுத்து, 'அணியலாம்' என்று சொன்ன நான்கு ஆடைகளை மடித்து வைத்து, ஒரு தட்டு, டம்ளர் என வந்திருந்தேன். எல்லாமே புதியதாக இருந்தது. அன்றிரவு நாங்கள் தங்கியிருந்த ஹாஸ்டல் மாடியில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தோம். சுற்றிலும் லைட் வெளிச்சம். 'மதுரை இவ்ளோ பெரிசா!' என்று வாய்பிளந்து நின்றேன். அருட்திரு. ஏஞ்சல்தான் இறையழைத்தல் ஊக்குநர். அவருக்கு உதவியாக அன்று அருட்சகோதரராக இருந்த மரிய லூயிஸ் இருந்தார். அந்த முதல் இரவில் நான் தூங்கவே இல்லை.
முதல் அமர்வில் எல்லாரும் வட்டமாக அமர்ந்து ஒருவர் மற்றவரை அறிமுகப்படுத்தினோம். நிறைய ஊர்களின் பெயரை அன்றுதான் கேள்விப்பட்டேன். எனக்குத் தெரிந்த ஒரே ஊர் சுந்தரநாட்சியாபுரம். அங்கிருந்து பிரின்ஸ், மலையப்பன், இஞ்ஞாசி ஆகியோர் வந்திருந்தனர். என் முதல் தோழன் திருத்துவராஜ்.
யாரை எப்படிக் கூப்பிட வேண்டும், எப்படி பாட வேண்டும், எப்படி பேச வேண்டும் - எதுவுமே தெரியாது.
நிறைய போட்டிகள் வைத்தார்கள்.
'மறைமாவட்டம்,' 'திருத்தந்தை' என பெரிய பெரிய கேள்விகள் எல்லாம் கேட்டார்கள்.
விருதுநகரா இருக்குமோ என்று பார்த்தால், விருதுநகர் மாவட்டமாம்.
பங்குத்தந்தையாக இருக்குமோ என்று பக்கத்தில் எட்டிப் பார்த்தால் அந்த மாணவன் 'போப்' என எழுதியிருந்தான். நானும் கொஞ்சம் இனிசியல் போட்டு, ஜி.யு. போப் என எழுதி வைத்தேன்.
கடைசி நாள்.
ஏறக்குறைய யார் செலக்ட், யார் இல்லை என்பது தெரிந்துவிட்டது.
'வீட்டுக்கு ஒரே பையனை நாங்கள் எடுக்கமாட்டோம்!' என்றார் அருட்தந்தை.
முதல் சுற்றிலேயே நான் வெளியேற்றப்பட்டேன்.
வீட்டிற்கு வந்து 15 நாட்கள் கழித்து, நான் தேர்வு செய்யப்பட்டதாக கடிதம் வந்தது. ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. அந்த மஞ்சள் கலர் கார்டு இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு தீப்பெட்டி ஆபிசில் அட்டைப்பெட்டி ஒட்டிக்கொண்டிருந்த என் அம்மாவிடம் ஓடினேன்.
அவர்களுக்கும் மகிழ்ச்சி.
இரவு என் அப்பாவிடம் சொன்னோம்.
அவர் ஒன்றுமே சொல்லவில்லை.
'இந்த வயசுல இவனுக்கு துறவறம்னா என்ன தெரியும்?' என்று மட்டும் கோபித்துக்கொண்டார்.
சரி...போகட்டும்...ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்றார்.
பெட்டி, போர்வை, புதிய யூனிஃபார்ம் என விறுவிறுப்பானது நாட்கள்.
இந்த ஒருவருடமாக நாம் கொண்டாடிய அர்ப்பண ஆண்டின் இறுதிநாளாகிய இன்று நான் என் அருள்நிலை வாழ்வு அர்ப்பணத்தை ஒருநிமிடம் எண்ணிப்பார்க்கின்றேன்.
'தான் போவது எங்கே என்று தெரியாமலேயே புறப்பட்டுப்போனார்' - இப்படித்தான் ஆபிராகமைப் பற்றிச் சொல்கிறார் எபிரேயர் திருமடலின் ஆசிரியர்.
எளிமை, கன்னிமை, கீழ்ப்படிதல் என்ற பெரிய பெரிய வார்த்தைகளில் இன்று வார்த்தைப்பாடுகள் எடுத்தாலும், அருள்நிலை இனியவர் தன் அழைத்தலில் நிலைக்கவும், நல்ல முறையில் வாழவும் வேண்டுமென்றால், தான் தேவ அழைத்தல் முகாமிற்கு சென்ற அந்த முதல் நாளை நினைத்துப்பார்த்தாலே போதும் என நினைக்கிறேன்.
அன்று என்னிலிருந்த யாரையும் இம்ப்ரஸ் பண்ண நினைக்காத எளிய உள்ளம், எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், எதையும் எதிர்நோக்காமல், எதிர்பார்க்காமல் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இன்றும் என்னில் இருக்க வேண்டும் என்பதே என் செபமாக இருக்கிறது.
