ஞாயிறு, 7 மே 2023
உயிர்ப்புக் காலம் ஐந்தாம் ஞாயிறு
திப 6:1-7. 1 பேது 2:4-9. யோவா 14:1-12.
பரிமாறுவதா பந்தியா? இறைவார்த்தையா?
தொடக்கக் கிறிஸ்தவர்கள் வாழ்வு பற்றி வாசிக்கும்போதெல்லாம், 'அவர்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். தேவையில் இருந்தவர்கள் யாருமில்லை. எல்லாம் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது' என ரொம்ப ரொமான்டிக்காகவே வாசிக்கின்றோம். ஆனால், தொடக்கக் கிறிஸ்தவர்களின் தேனிலவு முடிந்தது என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது.
அமைதியான குளமாக இருந்த அவர்களுடைய வாழ்வின் நடுவில் கூழாங்கல் ஒன்று வந்து விழுகிறது. யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை. முதல் முதலாக குழுமத்தில் குழப்பம் வருகிறது. சீடர்கள் எண்ணிக்கை பெருகியதால் பிரச்சினையும் பெரிதாக ஆரம்பிக்கிறது:
'கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.'
இதுதான் பிரச்சினை. இந்தப் பிரச்சினையில் மூன்று கூறுகள் இருக்கின்றன:
(அ) உணவு பரிமாறப்படுவதில் பாரபட்சம். நம் இல்லங்களில் நடக்கும் திருமணம் மற்றும் நல்ல நிகழ்வுகளில் பந்தியில்தான் நிறையப் பிரச்சினைகள் வருவதுண்டு. குடும்பத்திலும் உணவு எல்லாருக்கும் கிடைத்துவிட்டால், நல்ல உணவை மனைவி சமைத்துவிட்டால் அங்கே பிரச்சினை இல்லை. அது போலவே, அருள்பணியாளர் மற்றும் துறவற இல்லங்களில் வருகின்ற முதல் பிரச்சினை சாப்பாட்டில்தான் இருக்கும்.
(ஆ) மொழிப் பிரச்சினை. இந்த நிகழ்வு எருசலேமில் நடக்கிறது. எருசலேமில் இருந்தவர்கள் பெரும்பாலும் யூதர்கள்தாம். ஆக, பந்தியில் உணவுண்டவர்கள் அனைவரும் யூதர்கள்தாம். அப்புறம் எப்படி மொழிப் பிரச்சினை? சில யூதர்கள் கிரேக்க மொழி பேசும் நாடுகளில் குடியேறியதால் எபிரேயத்தை மறந்து கிரேக்கம் பேசினர். எபிரேய மொழி பேசுவோர் தங்களையே மேன்மையானவர்கள் என நினைத்து கிரேக்க மொழி பேசுவோரைத் தாழ்வாக நடத்துகின்றனர்.
(இ) முணுமுணுத்தல். ஏன் முணுமுணுத்தல்? பிரச்சினையை சொல்வதற்கு எங்கெல்லாம் வடிகால் இல்லையோ அங்கெல்லாம் மக்கள் முணுமுணுப்பார்கள். எடுத்துக்காட்டாக, சாப்பாடு சரியாக வேகவில்லை என்றால் யாரிடம் சொல்ல வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்தால் நாம் அவரிடம் சென்று முறையிடலாம். யாரிடம் போவது என்று தெரியாத பட்சத்தில் நாம் முணுமுணுக்கத்தான் வேண்டும்.
இந்தப் பிரச்சினையைப் பற்றிக் கேள்விப்படுகின்ற திருத்தூதர்கள் உடனடியாக அதற்குத் தீர்வுகாண முயல்கின்றார்கள். இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியது.
முதலில், திருத்தூதர்கள் தங்களையே ஆய்வு செய்து பார்க்கின்றனர். எங்கே தவறு நடந்தது? என்று யோசிக்கின்றனர். அப்போதுதான் அவர்கள் தங்கள் முதன்மைகளில் கோட்டை விட்டதை எண்ணிப் பார்க்கின்றனர்:
'நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டு பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறையல்ல!'
ஞானமிகு வார்த்தைகள் இவை.
நான் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் வேறொன்றைச் செய்து கொண்டிருக்கின்றேனே என எண்ணிப் பார்க்கிறார்கள்.
இன்று நாம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்: என்னுடைய முதன்மைகளை நான் சரியாக வரையறுத்துள்ளேனா? என் முதன்மைகளைச் சரி செய்ய நான் என்ன செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, திருத்தூதர்கள் தங்கள் பணிகளைப் பகிர்ந்து கொள்ள முன்வருகின்றனர். இது அவர்களின் பரந்த உள்ளத்திற்கான சான்று. எல்லாவற்றையும் நானே செய்வேன் என்று நினைக்காமல், மிகவும் எதார்த்தமாக, அடுத்தவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கின்றனர். இது ஒரு சிறந்த தலைமைத்துவப் பண்பு:
'உங்களிடமிருந்து நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவியின் வல்லமையும் ஞானமும் கொண்டவர்களுமான எழுவரைத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் நாம் இந்தப் பணியில் நியமிப்போம்.'
ஆக, பணியாளர்கள் மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு இரண்டு தகுதிகள் இருக்க வேண்டும்: (அ) நற்சான்று பெற்றவர்கள் - மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்க வேண்டும், நாலு பேரைத் தெரிந்திருக்க வேண்டும், நாலு பேரு வாழ்க்கையில ஏதாவது நல்லது செய்திருக்க வேண்டும். (ஆ) ஆவியின் வல்லமையும் ஞானமும் பெற்றிருக்க வேண்டும் - கடவுளோடு உள்ள உறவிலும் நன்றாக இருக்க வேண்டும்.
இன்றைய அருள்பணியாளர்களும் இந்த இரண்டு நிலைத் தகுதிகளைப் பெற்றிருத்தல் அவசியம். மக்களின் உறவைப் பிடித்துக்கொண்டு இறை உறவைக் கைவிடுவதும், இறைஉறவைப் பிடித்துக் கொண்டு மக்கள் உறவைக் கைவிடுதலும் ஆபத்தே.
மூன்றாவதாக, திருத்தூதர்கள் தங்களுடைய பணியை மறுவரையறை செய்கின்றனர்:
'நாங்களோ இறைவேண்டலிலும் இறைவார்த்தைப் பணியிலும் நிலைத்திருப்போம்'
இங்கே, 'நிலைத்திருப்போம்' என்ற வார்த்தை முக்கியமானது. அதாவது, விடாமுயற்சியுடன் ஒன்றைப் பற்றிக்கொள்ளுதல். இன்னைக்கு ஒன்னு, நாளைக்கு இன்னொன்னு என்று தங்களுடைய பணியின் போக்கை மாற்றிக் கொண்டே இராமல், 'இதுதான்! இது ஒன்றுதான்!' என்று நிலைத்திருத்தல்.
நான்காவதாக, தங்கள் கைகளை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்மேல் வைத்து இறைவனிடம் வேண்டுகின்றனர்.
அவ்வளவுதான். பிரச்சினை தீர்ந்தாயிற்று.
எந்த ஒரு பேப்பர் ஒர்க்கும் இல்லாமல், எந்த ஒரு மீட்டிங்கும் இல்லாமல், எந்த ஒரு அவைக்குறிப்பும் இல்லாமல் இனிதே நடந்தேறுகிறது கூட்டம். தீர்வு கண்டாயிற்று.
இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் பாடம் என்ன?
பிரச்சினைகள் தயிர் போல. உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும். நாளை, நாளை என்று தள்ளிப்போட்டால் புளித்துவிடும். அப்புறம் ஒன்றும் செய்ய முடியாது. இதை நன்றாக அறிந்திருக்கிறார்கள் திருத்தூதர்கள்.
இந்த நிகழ்வு திருத்தூதர்கள் வாழ்விலும், தொடக்கத் திருஅவை வாழ்விலும் ஒரு சறுக்கலாக அல்லது, ஒரு சிறிய இறப்பாக இருந்திருக்க வேண்டும். இருந்தாலும் புத்துயிர் பெற்று எழுகிறார்கள். ஏனெனில் அவர்கள், இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 பேது 2:4-9), அவர்கள், 'தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தார், அவரது உரிமைச் சொத்தான மக்கள்.'
நம் வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் நம்முடைய தற்காலிக இறப்புக்களே. இவற்றை நாம் எப்படி எதிர்கொள்வது?
இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே' என அறிக்கையிடுகிறார் இயேசு. இம்மூன்றும் நம் முதன்மைகளாக இருத்தல் நலம். இந்த மூன்றும் இயேசுவையே மையமாகக் கொண்டுள்ளன.
'நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?' என்னும் தோமாவின் கேள்விக்கு, 'நானே வழியும் உண்மையும் வாழ்வும்' என மொழிகிறார் இயேசு. இது யோவான் நற்செய்தியில் இயேசு பயன்படுத்தும் ஆறாவது 'நானே' வாக்கியம். இந்த வாக்கியத்தில் மூன்று கூறுகள் உள்ளன: 'வழி' (கிரேக்கத்தில், 'ஹோடோஸ்'), 'உண்மை' (கிரேக்கத்தில், 'அலேத்தேயா'), 'வாழ்வு' (கிரேக்கத்தில், 'ஸ்ஷோயே').
வழி என்றால் பாதை மட்டும் அல்ல, மாறாக, வாய்ப்பும் தீர்வும்கூட. நம் நடத்தலை நெறிப்படுத்துகிறார் இயேசு.
உண்மை என்றால் இருத்தல் மற்றும் அறிதல். நம் இருத்தலையும் அறிதலையும் நெறிப்படுத்துகிறார் இயேசு.
வாழ்வு என்றால் இயங்குதல் மற்றும் வளர்தல். நம் இயக்கத்தையும் வளர்ச்சியையும் நெறிப்படுத்துகிறார் இயேசு.
'வழி' என்பதை 'இலக்குக்கான பாதை' என்றும், 'உண்மை' என்பதை 'இலக்கு' என்றும், 'வாழ்வு' என்பது 'இலக்கை அடைவதன் பலன்' என்றும் புரிந்துகொள்ளலாம்.
நாம் எந்த வாழ்வியல் நிலையில் இருந்தாலும் நம் வாழ்வின் இலக்கு என்னவோ 'உண்மை' என்பதுதான். அந்த உண்மையை நாம் இயேசு வழியாகவே அடைகிறோம். நம் வாழ்க்கையில் இயக்கமும் வளர்ச்சியும் இருக்கும்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
தொடக்கத் திருஅவை தன்னில் எழுந்த விருந்துப் பிரச்சினையால் இறந்து மீண்டும் உயிர் பெற்றது.
பிரச்சினைகள் தீர்ந்ததால் ஆழமான அமைதி வந்தது.
இதையே திருப்பாடல் ஆசிரியர்,
'ஆண்டவரின் பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது' (காண். திபா 33:5) எனப் பாடுகிறார்.
Excellent writing
ReplyDelete