Tuesday, May 23, 2023

கடவுளுக்கு அர்ப்பணமாக்குதல்

இன்றைய இறைமொழி

புதன், 24 மே 2023

உயிர்ப்புக்காலம் ஏழாம் வாரம்

திப 20:28-38. யோவா 17:11-19

கடவுளுக்கு அர்ப்பணமாக்குதல்

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் எபேசின் மூப்பர்களுக்கு வழங்கும் பிரியாவிடையும், நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்களுக்கு வழங்கும் பிரியாவிடையும் தொடர்கின்றது. இரண்டு தொடர்நிகழ்வுகளும் இரண்டு புதிய செய்திகளை நமக்குத் தருகின்றன.

'உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை. ... உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்' என்கிறார் இயேசு.

முதலில், சீடர்களை அர்ப்பணம் ஆக்குமாறு கடவுளை வேண்டுகிறார்.

இரண்டு, தானே அர்ப்பணம் ஆகின்றார்.

'அர்ப்பணம் செய்தல்' அல்லது 'அர்ப்பணித்தல்' என்பது நாம் அடிக்கடிப் பயன்படுத்தும் வார்த்தை அல்ல. மாறாக, ஆலய அர்ப்பணிப்பு, அருள்பணியாளர்கள் அர்ப்பணிப்பு போன்ற நிகழ்வுகளுக்கு மட்டுமே இதை நாம் ஒதுக்கி வைக்கின்றோம். 'இறைவனுக்கென ஒன்றை ஒதுக்கி வைத்தலே' அர்ப்பணம் செய்தல் என்று ஓரளவுக்கு நாம் புரிந்துகொள்ளலாம். இதை இறைவன்தான் செய்ய முடியும். அவர் தனக்கென மனிதர்களையும் இடங்களையும் அர்ப்பணம் ஆக்கிக்கொள்கின்றார். இறைவனுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட ஒன்று மற்ற விடயங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால், அதன் தூய்மை கெடுவதாகக் கருதப்பட்டு அந்த இடம் மீண்டும் புனிதப்படுத்தப்படுகிறது. ஆக, அர்ப்பணத்தில் நிறைய பொறுப்புணர்வு உண்டு.

மேலும், இறைவனுக்கென ஒருவர் அர்ப்பணம் ஆகும்போது அவர் அனைவருக்கும் பொதுவானவர் ஆகின்றார். அனைவரையும் இறைவனுடன் இணைப்பவராக மாறுகின்றார்.

ஆகையால்தான் இன்றைய முதல் வாசகத்தில், 'நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்' என்கிறார் பவுல். அதாவது, இப்போது பவுல் எபேசு நகர மூப்பர்களிடமிருந்து விடைபெறுகின்றார். இனி அவருக்கும் அவர்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இருக்காது. ஆனால், பவுல் எங்கிருந்தாலும் கடவுளோடு இணைந்திருப்பார். அந்தக் கடவுளோடு அவர்களையும் இணைத்துவிட்டால் கடவுள் வழியாக அவர் அனைவரோடும் இணைந்திருக்க முடியும்.

இதையே புனித அகுஸ்தினாரும், 'நாம் அன்பு செய்கின்ற அனைவரையும் இறைவனில் அன்பு செய்தால் அந்த அன்பு முடிவற்ற அன்பாக இருக்கும், ஏனெனில் இறைவன் முடிவில்லாதவர்' என்கிறார்.

ஆக, உண்மை வழியாக, அதாவது நம் இருத்தல் வழியாக, நம்மையே இறைவனுக்கு அர்ப்பணம் செய்தல் முதல் பாடம்.

இரண்டாவதாக, 'பெற்றுக்கொள்வதை விடக் கொடுத்தலே பேறுடைமை' என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவில்கொள்ளுங்கள் என்கிறார் பவுல். ஆண்டவர் இப்படி எங்கும் குறிப்பிட்டதாக நற்செய்தி நூல்களில் பதிவு இல்லை. அல்லது இவ்வார்த்தைகள் வாய்மொழிப் பாரம்பரியத்தில் ஆண்டவரின் வார்த்தைகளாக வலம் வந்திருக்கலாம்.

வாழ்க்கையின் இரண்டு நிலைகளை நாம் பார்க்கிறோம்: 'பெற்றுக்கொள்தல்' 'கொடுத்தல்.'

கொடுத்தல்தான் முதன்மையானதாக, மேன்மையானதாக இருக்கின்றது. இதைப் பவுல், 'உழைப்பு' பற்றிய பகுதியில் குறிப்பிடுகின்றார். உழைக்கின்ற போது நாம் உண்மையில் நம்மையே கொடுக்கின்றோம்.

இறைவனுக்கு அர்ப்பணம் செய்து, அந்த அர்ப்பணத்தை நம் உழைப்பின் வழியாகக் கொடுத்தல் நலம்.


No comments:

Post a Comment