வெள்ளி, 5 மே 2023
உயிர்ப்புக்காலம் நான்காம் வாரம்
திப 13:26-33. யோவா 14:1-6.
வழி-உண்மை-வாழ்வு
இயேசுவின் இறுதி இராவுணவுப் பேருரையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த வாசகம் 'இல்லம்' அல்லது 'வாழ்விடம்' என்னும் பொருளை மையமாக வைத்துச் சுழல்கிறது.
(அ) இல்லம் அல்லது வாழ்விடம் அற்ற நிலை
தம் சீடர்களிடம், 'உள்ளம் கலங்க வேண்டாம்' என்றும், 'கடவுளிடமும் என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்' என்றும் அறிவுறுத்துகிறார் இயேசு. இயேசு தங்களைவிட்டு நீங்கிவிடுவார் என்னும் செய்தி சீடர்களின் உள்ளத்தில் கலக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. அதாவது, தாங்கள் ஆயன் இல்லாத ஆடுகள் போல, திசை தெரியாதவர்களாக ஆகிவிடுவோம் என்னும் எண்ணம் அவர்களுக்குப் பயம் தருகிறது. இத்தகைய கலக்கம் எழுந்தாலும் சீடர்களின் உள்ளம் சலனமற்றதாக இருக்க வேண்டும் என்பது இயேசுவின் விருப்பமாக இருக்கிறது. மேலும், துன்பத்தைக் கடவுள் மாற்றுவார் என்ற நம்பிக்கை அல்ல, மாறாக, துன்பத்தில் கடவுள் உடனிருக்கிறார் என்னும் நம்பிக்கையை அவர்கள் பெற்றுக்கொள்ளுமாறு கூறுகிறார்.
(ஆ) உறைவிடம் ஏற்பாடு செய்கிறேன்
தம் சீடர்களுக்கு உறைவிடம் ஏற்பாடு செய்யச் செல்வதாகவும், திரும்பி வந்து அவர்களை அழைத்துச் செல்வதாகவும் உறுதி கூறுகிறார் இயேசு. உறைவிடம் ஏற்பாடு செய்தலில் அவருடைய அன்பு, தியாகம், தற்கையளிப்பு, துன்பம் ஏற்றல், தாராள உள்ளம் ஆகிய அனைத்தும் புலப்படுகிறது.
(இ) உறைவிடத்தை அடையும் வழி
'நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?' என்னும் தோமாவின் கேள்விக்கு, 'நானே வழியும் உண்மையும் வாழ்வும்' என மொழிகிறார் இயேசு. இது யோவான் நற்செய்தியில் இயேசு பயன்படுத்தும் ஆறாவது 'நானே' வாக்கியம். இந்த வாக்கியத்தில் மூன்று கூறுகள் உள்ளன: 'வழி' (கிரேக்கத்தில், 'ஹோடோஸ்'), 'உண்மை' (கிரேக்கத்தில், 'அலேத்தேயா'), 'வாழ்வு' (கிரேக்கத்தில், 'ஸ்ஷோயே').
வழி என்றால் பாதை மட்டும் அல்ல, மாறாக, வாய்ப்பும் தீர்வும்கூட. நம் நடத்தலை நெறிப்படுத்துகிறார் இயேசு.
உண்மை என்றால் இருத்தல் மற்றும் அறிதல். நம் இருத்தலையும் அறிதலையும் நெறிப்படுத்துகிறார் இயேசு.
வாழ்வு என்றால் இயங்குதல் மற்றும் வளர்தல். நம் இயக்கத்தையும் வளர்ச்சியையும் நெறிப்படுத்துகிறார் இயேசு.
'வழி' என்பதை 'இலக்குக்கான பாதை' என்றும், 'உண்மை' என்பதை 'இலக்கு' என்றும், 'வாழ்வு' என்பது 'இலக்கை அடைவதன் பலன்' என்றும் புரிந்துகொள்ளலாம்.
நாம் எந்த வாழ்வியல் நிலையில் இருந்தாலும் நம் வாழ்வின் இலக்கு என்னவோ 'உண்மை' என்பதுதான். அந்த உண்மையை நாம் இயேசு வழியாகவே அடைகிறோம். நம் வாழ்க்கையில் இயக்கமும் வளர்ச்சியும் இருக்கும்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
சிந்திப்போம்.
இன்று நான் நிர்கதியராக அல்லது திசையற்று அல்லது இல்லிடமற்று உணர்கிறேனா? நான் செய்யும் பணியும், என் குடும்பமும் எனக்கு இல்லிடம் அல்லது உறைவிட உணர்வைத் தருகின்றனவா? அல்லது நான் அந்நியராக உணர்கிறேனா?
என் உறைவிடம் இறைவனோடு என்றால் எனக்கு எத்துணை மகிழ்ச்சி. அந்த உறைவிடத்தை, இல்லிட அனுபவத்தைப் பெற இயேசுவை வழியாகத் தெரிந்துகொள்தல் நலம்.
இன்றைய முதல் வாசகத்தில், இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்று பகர்கிறார் பவுல். இயேசு கல்லறையில் இல்லை எனில், நாம் மட்டும் ஏன் கல்லறைகளை உறைவிடமாக்கிக்கொள்ள வேண்டும்?
No comments:
Post a Comment