வியாழன், 4 மே 2023
உயிர்ப்புக் காலம் நான்காம் வாரம்
திப 13:13-25. யோவா 13:16-20.
பெரியவர் அல்ல!
இறுதி இராவுணவில் சீடர்களின் பாதங்களைக் கழுவியபின் அவர்களோடு உரையாடுகிற இயேசு இரு அறிவுரைகளை அவர்களுக்கு வழங்குகிறார்: (அ) ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். (ஆ) பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல. தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல ... இவற்றை அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்.
இவ்விரண்டு அறிவுரைகளும் ஒன்றுக்குப் பின் இன்னொன்று என வந்தாலும், முதல் அறிவுரை அதற்கு முந்தைய பகுதியோடும், இரண்டாவது அறிவுரை அதற்குப் பிந்தையதோடும் பொருந்துவதாக இருக்கிறது. இயேசு சீடர்களின் காலடிகளைக் கழுவியதுபோல அவர்கள் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவ வேண்டும். சீடர்கள், குறிப்பாக இயேசுவைக் காட்டிக்கொடுப்பவர், அவர்களுடைய வரையறை அறிந்து அதற்கேற்றாற்போலச் செயல்பட வேண்டும்.
'பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல ... தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல' - இவ்வாக்கியத்தை இயேசுவின் சொற்கள் என்றோ, அல்லது இயேசுவின் சமகாலத்தில் நிலவிய பழமொழி என்றோ, அல்லது இஸ்ரயேலின் ஞானக்கூற்று என்றோ எடுத்துக்கொள்ளலாம். ஏறக்குறைய இதே பொருள்கொண்ட வாக்கியத்தை மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் பதிவுசெய்கிறார்கள் (காண். மத் 10:24, லூக் 6:40). இவ்வாக்கியத்தின் பொருள் என்ன?
(அ) பணியாளர் தலைவரின் உரிமைப்பொருள். எனவே, அவர் தன்விருப்பம்போலச் செயல்பட இயலாது, தலைவரின் விருப்பப்படி மட்டுமே செயல்பட வேண்டும். தூது அனுப்பப்பட்டவரும் அவ்வாறே!
(ஆ) பணியாளர் தான் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்பதை அறிந்தவராக இருக்க வேண்டும். அதாவது, இதுதான் தன் எல்கை அல்லது வரையறை என்பதை அறிந்தவராகவும் அதை மீறாதவராகவும் இருத்தல் வேண்டும்.
(இ) பணியாளர் தன் உரிமையாளரின் நீட்சியாகச் செயல்பட வேண்டுமே அன்றி, தன்னிச்சையாகச் செயல்பட இயலாது.
இந்த இடத்தில் 'தன்னைக் காட்டிக்கொடுப்பவரைப் பற்றி' இயேசு பேசுகிறார். இவ்வாறாக, தன்னைக் காட்டிக்கொடுப்பவர் அவருடைய வரையறையை மீறுகிறார் என எச்சரிக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் மிக அழகானதொரு நிகழ்வு நடக்கிறது. பவுல் தன் முதல் தூதுரைப் பயணத்தைத் தொடங்குகிறார். பவுலும், பர்னபாவும், அவரோடு இருந்தவர்களும் பெருகை நகர் வந்து, அங்கிருந்து பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியா வருகிறார்கள். ஓய்வுநாளன்று தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு 'அமர்ந்திருக்கிறார்கள்.'
இங்கே ஒரு விடயம்.
'நாங்கதான் நற்செய்தி அறிவிப்பாளர்கள். எங்களுக்கு எல்லாம் தெரியும். நாங்க கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட திருத்தூதர்கள்' என்று சொல்லிக்கொண்டு எல்லாருக்கும் முன்னால் அவர்கள் நிற்கவில்லை. மாறாக, கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருக்கிறார்கள்.
'கூட்டத்தோடு கூட்டமாக அமர்வதற்கு' நிறைய தாழ்ச்சியும் எளிமையும் அவசியம்.
தொடர்ந்து, அமர்ந்திருந்த திருத்தூதர்களிடம் ஆளனுப்புகின்ற தொழுகைக்கூடத் தலைவன், 'சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்!' எனக் கேட்கிறார்.
இன்று யாராவது என்னிடம் ஆளனுப்பி, 'ஏதாவது அறிவுரை கூற விரும்பினால் கூறலாம்' என்று சொன்னால், நான் என்ன சொல்வேன்? நான் தயாராக இருக்கிறேனா? வாழ்வில் நாம் கற்கும் ஒவ்வொரு பாடத்தையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம். மேலும், பிறர் கேட்காமல் நாம் எந்த அறிவுரையும் கூறக் கூடாது. அது எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும்!
இறுதியாக, பவுல் உடனடியாக தனக்கு வந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார். எப்போதும் தயார்நிலையில் இருக்கிற ஒருவரே வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும், மிக அழகான உரையையும் ஆற்றுகிறார் பவுல். பவுலின் தயார்நிலையும் அறிவும் நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எபிரேயம் பேசுகின்ற ஒருவர் கிரேக்க மொழியில், புதிய மக்கள் நடுவில், புதிய கருத்து ஒன்றைப் பேசுவதற்கு நிறைய துணிச்சல் தேவைதானே!
நம் வரையறையை அறிந்திருப்பதும், அழைக்கப்படும்போது தேவையானதைச் சொல்வதும் செய்வதும் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்.
No comments:
Post a Comment