சனி, 27 மே 2023
உயிர்ப்புக்காலம் ஏழாம் வாரம்
திப 28:16-20, 30-31. யோவா 21:20-25.
இவருக்கு என்ன ஆகும்?
யோவான் நற்செய்தியின் இறுதிப் பகுதிக்கும், உயிர்ப்புக் காலத்தின் இறுதி நாளுக்கும் வந்துவிட்டோம். யோவான் தன் நற்செய்தியை மிக அழகாக நிறைவு செய்கிறார்: 'இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.'
இது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியமா? அல்லது நேரிடையான கூற்றா?
இறையனுபவம் அல்லது இயேசு அனுபவம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவம். ஆக, உண்மையாகவே அனைத்து அனுபவங்களும் எழுதப்பட்டால் இந்த உலகமே கொள்ளாது.
யோவான் ஓர் அழகான நிகழ்வோடு நிறைவு செய்கிறார். அது அவரைப் பற்றியதே. அதாவது, இயேசு அன்பு செய்த சீடர் பற்றியது.
பேதுரு இயேசுவிடம் அவரைச் சுட்டிக்காட்டி, 'இவருக்கு என்ன ஆகும்?' அல்லது 'இவருக்கு என்ன நிகழும்?' எனக் கேட்கின்றார்.
இயேசுவோ, 'உனக்கு என்ன?' என்று கேட்டுவிட்டு, 'என்னைப் பின்தொடர்' என்கிறார்.
இந்த நிகழ்வின் பொருள் என்ன?
இது பேதுருவின் ஆளுமை பற்றியது அல்ல. மாறாக, நம் ஒவ்வொருவரையும் பற்றியது.
அதாவது, இறையனுபவம் பெறும்போது நம்மில் எழுகின்ற ஒரு கேள்வி என்னவென்றால், 'எனக்கு அனுபவம் கிடைத்துவிட்டது. நான் இறைவனைப் பின்பற்றுகிறேன். ஆனால், இவருக்கு என்ன ஆகும்?' என்று அடுத்திருப்பவரோடு ஒப்பிடும் மனநிலை.
என் நம்பிக்கைப் போராட்டத்தில் நான் கடவுளிடம் அடிக்கடி கேட்டதும் இதுதான். 'இந்து சகோதரருக்கு என்ன ஆகும்?' 'இசுலாம் சகோதரிக்கு என்ன ஆகும்?' 'கடவுளை நம்பாத ஒருவருக்கு என்ன ஆகும்?' 'திருப்பலிக்கு வராதவருக்கு என்ன ஆகும்?' 'செபமாலை செபிக்காதவருக்கு என்ன ஆகும்?'
இந்தக் கேள்விகள் இரண்டு காரணங்களால் எழுகின்றன:
ஒன்று, இயேசுவைப் பின்பற்றுவதில் எனக்குள்ள தயக்கத்தால்.
இரண்டு, என்னை அவர்களோடு ஒப்பிட்டு நான் அவர்களைவிட பெரியவன் என்று இறுமாப்பு கொள்வதால்.
இறைவனைப் பின்பற்றுவதில், இவை இரண்டுமே தவறு. தயக்கமும், இறுமாப்பும் சீடத்துவத்தின் பெரிய எதிரிகள்.
பேதுருவுக்கும் இதே தயக்கமும் இறுமாப்பும் இருந்திருக்கலாம். பேதுருவை நெறிப்படுத்துகின்ற இயேசு, 'உனக்கு என்ன? என்னைப் பின்தொடர்!' என்கிறார்.
இன்று நாம் இறையனுபவம் பெற்றுவிட்டால், நம் கண்கள் இயேசுவின்மீது மட்டும் இருக்கட்டும். அப்போது தயக்கமும் இறுமாப்பும் மறைந்துவிடும்.
இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பணிகள் நூல் நிறைவு பெறுகிறது. பவுல் உரோமைக்குச் சென்றவுடன் தன் நூலை நிறைவு செய்கின்றார் லூக்கா. ஏனெனில், அன்றைய கருத்துப்படி, உலகின் எல்லை என்பது உரோமை. ஆக, பவுலுடன் இணைந்து நற்செய்தி உலகின் எல்லையை அடைந்துவிடுகிறது.
'உரோமையில் தனி வீட்டில் தங்கியிருக்க பவுல் அனுமதி பெற்றுக்கொண்டார்' என்று எழுதுகின்றார் பவுல்.
பவுலின் ஆளுமை நம்மை வியக்க வைக்கிறது. அவர் என்னதான் சிறைப்பட்டவராக இருந்தாலும், தன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதையும், தான் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தானே நிர்ணயிக்கின்றார். இது ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடம். பல நேரங்களில் நம் வாழ்க்கையை நாம் பிறருக்காக வாழ்கின்றோம். மற்றவர்களுக்காக, அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என நினைத்துக்கொண்டே நம் வாழ்க்கையை நாம் அவர்களின் கைகளில் கொடுத்துவிடுகிறோம். தனக்கு எது தேவை என்பதை அறிந்தவராகவும், தான் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்பவராகவும் இருக்கிறார் பவுல்.
மேலும், பவுலின் பழகும் திறனுக்கும் இந்நிகழ்வு சான்றாக அமைகிறது. மிகவும் எளிதாகவும் இயல்பாகவும் மற்றவர்களுடன் பழகுகின்றார்.
பவுல் இரண்டு ஆண்டுகள் வாடகை வீட்டில் இருந்ததாகப் பதிவு செய்கிறார் லூக்கா. அங்கே பவுல் பெறும் ஞானம் நம்மை வியக்க வைக்கிறது.
தன்னை அழிக்கத் துடிக்க நினைத்த யூதர்களை அழைத்துப் பேசுகிறார்.
'யூதர்களை எதிரிகள் என்றும், உறுப்பு சிதைப்பவர்கள் என்றும், வயிறே அவர்கள் தெய்வம் என்றும், மானக்கேடே அவர்களுடைய வாழ்க்கை' என்றும் சாபமிட்டவர், அவர்களை வரவழைத்துப் பேசுகின்றார். அதாவது, தன் வாழ்நாள் குறுகியது. இனி சண்டையிட்டு என்ன பயன்? என எண்ணுகின்ற பவுல், அவர்களை அழைத்து மிகவும் சாந்தமாக, 'என் இனத்தாருக்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை. இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேச அழைத்தேன். நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்' என்கிறார். அவருடைய பேச்சில் வெறுப்போ, கோபமோ இல்லை.
வாடகை வீடு தந்த வாழ்க்கைப்பாடம்தான் இது.
வாடகை வீட்டில் இருக்கிறோம் என்ற நினைப்பு நம்மை அடுத்தவர்களோடு அட்ஜஸ்ட் செய்துகொள்ள நம்மைப் பழக்கும். 'இது நிரந்தரமல்ல' என்ற உணர்வு இருப்பதால் நாம் யாரையும் கண்டிக்கவோ, வெறுக்கவோ மாட்டோம்.
'ஒன்றும் ஒன்றும் ஐந்து என்று என்னிடம் யாராவது சொன்னால், அப்படியா என்று கேட்டுவிட்டு நகரும் மனப்பான்மை' தருவதுதான் வாடகை வீடு. 'இல்லை. அது இரண்டு' என்று வாதிடுவது நேரத்தையும், ஆற்றலையும் வீணாக்கும் செயலாகும்.
நிரந்தரமான இறைவனைப் போல, நிரந்தரமற்ற வாடகை வீடும் நமக்கு வாழ்க்கைப்பாடங்களைக் கற்றுத்தரும் - பவுலுக்குப் போல!
வாழ்வின் நிலையாமையை அறிந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை மட்டுமே வாழ்வர். அதை இனிதாக வாழ்வர். 'இவருக்கு என்ன ஆகும்?' 'அவருக்கு என்ன ஆகும்?' என்னும் பேராவலும், 'சண்டை சச்சரவும், கோபமும், பகைமை உணர்வும்' அவரிடம் இருக்காது.
No comments:
Post a Comment