Monday, May 22, 2023

இருக்கப் போவதில்லை

இன்றைய இறைமொழி

செவ்வாய், 23 மே 2023

உயிர்ப்புக்காலம் ஏழாம் வாரம்

திப 20:17-27. யோவா 17:1-11அ.

இருக்கப் போவதில்லை

இன்றைய முதல் வாசகத்தில், பவுல் எபேசு நகர மூப்பர்களிடமிருந்து விடைபெறுகின்றார்: 'ஆனால் இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை என்று நான் அறிவேன்.' தான் விடைபெறுமுன் மூப்பர்களைக் கூட்டி அவர்களோடு உரையாடுகிறார் பவுல்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் திருத்தூதர்களிடமிருந்து விடைபெறுகின்றார்: 'இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் இருக்கிறேன்.' தாம் விடைபெறுமுன் தம் வானகத் தந்தையிடம் சீடர்களுக்காக இறைவேண்டல் செய்கிறார் இயேசு.

இன்று தொடங்கி மூன்று நாள்கள் இயேசுவின் இறைவேண்டலை வாசிக்கிறோம். இந்த இறைவேண்டல் 'தலைமைக்குருவின் இறைவேண்டல்' என்றும் அழைக்கப்படுகிறது. இயேசு ஒரு தலைமைக்குரு போல தம் தந்தைக்கும், சீடர்களுக்கும் இடையே நின்று இறைவேண்டல் செய்கிறார். இருவருக்கும் இடையே நிற்பதற்கு இரு குணங்கள் தேவை: ஒன்று, கடவுள்மேல் நம்பிக்கை. இரண்டு, மனிதர்கள்மேல் இரக்கம். மேலும், இருவரையும் அறிந்தவராகவும் இருத்தல் வேண்டும். இயேசு தந்தையையும் தம் சீடர்களையும் அறிந்தவராக இருக்கிறார். 

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியில் தம் சீடர்கள் பற்றிய மூன்று விடயங்களைப் பதிவு செய்கிறார் இயேசு: (அ) 'அவர்கள் இயேசுவை நம்பினார்கள்.' (ஆ) 'அவர்கள் தந்தைக்கு (கடவுளுக்கு) உரியவர்கள்.' (இ) 'அவர்கள் உலகில் இருப்பார்கள்.'

இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கை வழியாகத் திருத்தூதர்கள் கடவுளுக்கு உரியவர்கள் ஆகிறார்கள். இயேசு இந்த உலகை விட்டுச் சென்றாலும், அவர்களுடைய பணி இந்த உலகத்தில் தொடர வேண்டும்.

இயேசுவின் இச்சொற்கள் தந்தையை நோக்கிச் சொல்லப்பட்டாலும், இவற்றை நேரடியாகக் கேட்கிறவர்கள் சீடர்கள்தாம். இச்சொற்களால் அவர்கள் தங்கள் தான்மை என்ன என்பதை உணர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் உலகில் இருந்தாலும், உலகுக்கு உரியவர்கள் அல்லர், மாறாக, கடவுளுக்கு உரியவர்கள் என்பதும், அந்த உயர்ந்த நிலைக்குத் தகுந்தாற்போல தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் மறைமுகமான செய்தியாக இருக்கிறது.

இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?

(அ) பவுல் போல, இயேசு போல, எந்த நேரத்தில் நாம் விடைபெற வேண்டும் என்பதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். நம் இருத்தல் விரும்பப்படுகிறது என்பதற்காக அதிக நேரம் ஒரே இடத்தில் இருந்தாலும் மற்றவர்களின் அதிருப்தியைச் சந்திக்க நேரிடும். தெளிவான நோக்கம், வாழ்க்கையின்மேல் பொறுப்புணர்வு, மறுப்புச் சொல்லும் பக்குவம் உள்ளவர்களே சரியான நேரத்தில் பந்தியிலிருந்து எழுந்து புறப்பட முடியும்.

(ஆ) அடிக்கடி வானத்தை நோக்கியும், ஒருவர் மற்றவர்களை நோக்கியும் நாம் பேச வேண்டும். பல நேரங்களில் இவ்விரண்டையும் செய்வதற்குப் பதிலாக நமக்கு நாமே பேசிக்கொண்டே இருக்கிறோம். அதாவது, மனத்தில் எண்ணங்களை ஓடவிடுகிறோம். எண்ணங்கள் மெதுவாக நம் மனத்தில் எழுகின்றன. நாம் அவற்றுக்கு இடம் கொடுக்கத் தொடங்கும்போது அவை குதிரை வேகத்திலும் ஓடத் தொடங்குகின்றன. ஓர் எண்ணத்திலிருந்து இன்னொன்று என ஓடிக்கொண்டே இருந்தால் மிஞ்சுவது சோர்வே.

(இ) இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கை வழியாக நாம் கடவுளுக்கு உரியவர்கள் என்றால், அந்த மேன்மையான நிலையைத் தக்கவைத்துக்கொள்ள நம் வாழ்வை அதற்கேற்றாற்போலத் தகவமைத்துக்கொள்தல் நலம்.


No comments:

Post a Comment