சனி, 6 மே 2023
உயிர்ப்புக்காலம் நான்காம் வாரம்
திப 13:44-52. யோவா 14:7-14.
அதுவே போதும்!
இயேசுவின் இறுதி இராவுணப் பேருரை இன்றைய நற்செய்தியிலும் தொடர்கிறது. 'நானே வழியும் உண்மையும் வாழ்வும்' என அறிக்கையிடுகிறார் இயேசு. தொடர்ந்து தம் தந்தையைப் பற்றிய அவர்களோடு உரையாடுகிறார். உரையாடலின் நடுவே பிலிப்பு இயேசுவிடம், 'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும்' என்கிறார். 'இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்' எனப் பதிலிறுக்கிறார் இயேசு.
பிலிப்பின் சொற்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
'அதுவே போதும்!'
இயேசு முன்மொழிய வருகின்ற நீண்ட மறையுண்மையைச் சுருக்கி அறிந்துகொள்ள விரும்புகிறார் பிலிப்பு. பிலிப்புவின் சொற்கள் அவருடைய அவசரத்தையும், பொறுமையின்மையையும், எல்லாவற்றையும் எளிமைப்படுத்திவிட வேண்டும் என்னும் ஆர்வத்தையும் காட்டுகிறது.
இதை ஆன்மிக அவசரம் என்றும் சொல்லலாம். பிலிப்புவின் நோக்கம் ஆன்மிகம் சார்ந்ததாக, உயர்ந்ததாக, மேன்மையானதாக இருக்கிறது. அவர் இறையனுபவம் பெற விரும்புகிறார். 'தந்தையைக் காட்டும்' என இயேசுவிடம் கேட்கிறார்.
பிலிப்பு செய்த தவறு என்ன?
இயேசுவுக்கும் தந்தைக்கும் உள்ள நெருக்கத்தைக் காணாததும், இயேசு வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் செல்வதில்லை என்பதை அறியாததும்தான்.
இயேசுவின் சீடர்கள் அவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இயலாத நிலையிலேயே இருந்தார்கள்.
பிலிப்புவின் இச்சொற்களை நாமும் நம் ஆன்மிகத் தளத்தில் பயன்படுத்துகிறோம். நம் இறைவேண்டலும் இறையனுபவமும் அவசரம் கலந்ததாக இருக்கிறது. இறையனுபவம் என்பது நீடித்த நிலையான அனுபவம். பேருந்தில் ஏறி இன்னொரு பக்கம் இறங்கிவிடும் குறுகிய அனுபவம் அல்ல.
இன்றைய முதல் வாசகத்தில் இரு வகையான குழுவினரைப் பார்க்கிறோம்: யூதர்கள் மற்றும் புறவினத்தார்கள். யூதர்கள் குறுகிய மனம் கொண்டதாலும், மீட்பு தங்களுக்கு மட்டுமே என்று இறுமாந்து இருந்ததாலும் திருத்தூதர்களின் செய்தியை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. கடவுளின் வார்த்தையையும் அதை அறிவிப்பவர்களையும் நிராகரிக்கிறார்கள். ஆனால், புறவினத்தார்கள் திறந்த மனத்துடன் அவர்களை வரவேற்கிறார்கள். திருத்தூதர்களும் மற்றவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறுகிறார்கள்.
சிந்திப்போம்.
இறைவனுக்கும் நமக்குமான உறவில், இறையனுபவத்தில், அல்லது வாழ்வியல் நிலை நமக்குப் புரிபடாமல் இருக்கும்போது நம் மனநிலை என்ன? பொறுமையோடு இருக்கிறோமா? அல்லது 'எனக்கு இதைச் செய்யும்! அதுவே போதும்!' என்று அவசரப்படுகிறோமா?
ஆழ்ந்த அமைதியும் நீடித்த பொறுமையும் முழுமையான சரணாகதியுமே இறையனுபவத்தின் தொடக்கப் புள்ளிகள்.
No comments:
Post a Comment