Wednesday, May 31, 2023

எல்லாம் இரட்டையாய்

இன்றைய இறைமொழி

வியாழன், 1 ஜூன் 2023

பொதுக்காலம் 8-ஆம் வாரம்

சீஞா 42:15-25. மாற் 10:46-52.

எல்லாம் இரட்டையாய்

'எல்லாம் இரட்டையாய் உள்ளன. ஒன்று மற்றொன்றுக்கு எதிராய் இருக்கிறது. யாதொன்றையும் அவர் குறைபடச் செய்யவில்லை. ஒன்று மற்றொன்றின் நன்மையை நிறைவு செய்கிறது.'

இயற்கையில் காணப்படும் கடவுளின் மாட்சிக்குப் புகழ்பாடும் சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் மேற்காணும் வார்த்தைகளோடு புகழ்ச்சியை நிறைவு செய்கிறார்.

நாம் காணும் யாவும் இரட்டையாய் உள்ளன. அல்லது இரட்டைத்தன்மையை நாம் கண்டு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதையே சபை உரையாளர், 'ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிட்டுவிடாதீர்' என்கிறார் (காண். சஉ 7:18). ஏனெனில், சபை உரையாளரைப் பொருத்தவரையில் வாழ்வில் அனைத்தும் இரட்டையாகவே உள்ளன: பிறப்பு-இறப்பு, நடவு-அறுவடை, கொல்தல்-குணப்படுத்துதல், இடித்தல்-கட்டுதல், அழுகை-சிரிப்பு, அன்பு-வெறுப்பு, போர்-அமைதி (காண். சஉ 3:1-8).

பல நேரங்களில் நாம் ஒற்றையாகப் பார்க்கவும், ஒற்றையாக்கிப் பார்க்கவும் விரும்புகிறோம். அல்லது இரட்டைத்தன்மையை மறுக்கிறோம். எடுத்துக்காட்டாக, ஒளியை நாம் உயர்த்திப் பேசுகிறோம். ஆனால், இருள் இருந்தால்தான் ஒளியை அறிய முடியும் என்பதை மறந்துவிடுகிறோம். உண்மையை நாம் உயர்த்திப் பேசுகிறோம். ஆனால், பொய்மை இருந்தால்தான் உண்மைக்குப் பொருள் இருக்கிறது. உடல்நலத்தை உயர்த்திப் பேசுகிறோம். ஆனால், உடல்நலமின்மையும் நம் வாழ்வின் அன்றாட எதார்த்தம் என்பதை மறந்துவிடுகிறோம்.

மனிதர்களாகிய நாமும் எப்போதும் இரட்டை மனிதர்களே.

இன்றைய நற்செய்தியில் மனிதர்களின் இரட்டைத் தன்மை மூன்று விடயங்களில் காட்டப்படுகிறது. இயேசு பார்வையற்ற ஒரு நபருக்குப் பார்வை தருகின்றார்.

(அ) பார்வையற்ற ஒரு நபர் பார்வை பெறுகின்றார். ஒளி இழந்த நிலையிலிருந்து ஒளி பெற்ற நிலைக்குக் கடந்து போகின்றார் பார்த்திமேயு. நம் அனைவருக்குமே இது பொருந்தும். நாமும் பல நேரங்களில் ஒளி இழந்த நிலையில் இருக்கின்றோம். பின் தெளிவு பெற்றவர்களாக ஒளி அடைந்த நிலைக்குக் கடந்து செல்கின்றோம்.

(ஆ) பார்வையற்ற நபரை அதட்டிய மனிதர்கள் சற்று நேரத்தில், 'துணிவுடன் எழுந்து வாரும். இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்' என்று அழைக்கின்றனர். இவர்கள் பொய்யர்களா? முரண்பட்டுச் செயல்படுபவர்களா? இல்லை! இரண்டும் எதார்த்தம். முதலில் அதட்டியதும் இவர்கள்தாம். பின் ஆறுதல் சொல்லியதும் இவர்கள்தாம். நம்மிலும் குணத்தில் இரட்டைத்தன்மை உண்டு.

(இ) 'உமது நம்பிக்கை நலமாக்கிற்று'  என்று இயேசு அனுப்ப, அவர் மீண்டும் பார்வை பெறுகிறார். அது என்ன இரண்டாவது பார்வை? அதுதான் இயேசுவை இறைமகன் என்று பார்ப்பது. நம்பிக்கையில்லாத நிலையும் உண்டு, நம்பிக்கை அடைந்த நிலையும் நம்மில் உண்டு.

மகிழ்ச்சி, நேர்முக எண்ணம், வெற்றி ஆகியவற்றை மட்டுமே நாம் எண்ண வேண்டும் என்று நமக்குப் பல நேரங்களில் கற்பிக்கப்படுகின்றன. இவற்றையே நாம் நாடித்தேட வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இவற்றின் முரண்களான துயரம், எதிர்மறை எண்ணம், தோல்வி ஆகியவையும் எதார்த்தங்களே.

வாழ்வின் இரட்டைத்தன்மையைக் காணும் எவரும் ஞானியரே என்கிறது முதல் வாசகம். அப்படி என்றால், மூடராக இருக்கக் கூடாதா? இருக்கலாம். ஞானமும் மூடத்தனமும் இரட்டைத்தன்மை தானே.


Sunday, May 28, 2023

மரியா திருஅவையின் தாய்

இன்றைய இறைமொழி

திங்கள், 29 மே 2023

தொநூ 3:9-15,20. திப 1:12-14. யோவா 19:25-27.

மரியா திருஅவையின் தாய்

நம் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018-ஆம் ஆண்டில், 'அன்னை கன்னி மரியா திருஅவையின் தாய்' என்ற திருநாள், பெந்தகோஸ்தே பெருநாளுக்கு அடுத்த திங்கள் கிழமை கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அதன் பின்புலத்தில் இன்றைய நாளில் நாம் அன்னை கன்னி மரியாவை, 'திருஅவையின் தாய்' எனக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

இன்று இரண்டு முதல் வாசகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன: தொநூ 3:9-15,20, மற்றும் திப 1:12-14. இவற்றில் ஏதாவது ஒன்றை இன்றைய திருப்பலியின் வாசகமாக எடுத்துக்கொள்ளலாம். தொநூ வாசகத்தில், 'மனிதன் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான். ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்' என்று கொடுக்கப்பட்டுள்ளது. திப வாசகத்தில், 'இயேசுவின் தாய் மரியாவோடு இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாசகங்களுமே அன்னை கன்னி மரியாவை மறைமுகமாகவும், நேரிடையாகவும், 'திருஅவையின் தாய்' என அழைக்கின்றன.

திப வாசகத்தை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பின்னர் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்கின்ற லூக்கா இயேசுவின் தாய் பற்றிக் குறிப்பிடுவதில் அக்கறை காட்டுகின்றார். தொடக்கத் திருஅவை தொடங்கி, இன்று வரை நம்மிடையே எழும் கேள்வி அன்னை கன்னி மரியா பற்றியதுதான். சிலுவையின் அடியில் இயேசுவின் தாய் நின்றதாக (நற்செய்தி வாசகம்) யோவான் தன் நற்செய்தியில் பதிவு செய்கின்றார். மாற்கு நற்செய்தியாளரின் பதிவின்படி இயேசு அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வில் சில பெண்கள் இருக்கின்றனர். அவர்களின் அன்னை கன்னி மரியாவும் இருந்திருப்பார். ஆனால், இயேசுவின் உயிர்ப்பு மற்றும் விண்ணேற்ற நிகழ்வுகளில் அன்னை கன்னி மரியா பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. விண்ணேற்றத்திற்குப் பின்னர் மரியா திருத்தூதர்களோடு இணைந்து இறைவேண்டல் செய்கின்றார்.

'இயேசுவே திருஅவை' என்பதை அன்னை கன்னி மரியா அறிந்திருந்தார்.

திப 9-இல் தமஸ்கு நகர் நோக்கி வாளேந்திச் செல்கின்ற சவுலை (பவுலை) தடுத்தாட்கொள்கின்ற ஆண்டவர், 'நீ துன்புறுத்தும் இயேசு நான்தான்!' என்கிறார். அதாவது, அங்கே இயேசு தன்னைத் திருஅவையோடு ஒன்றித்துக்கொள்கின்றார். ஆக, திருஅவைதான் இயேசு, இயேசுதான் திருஅவை.

இந்த நிகழ்வின் முன்னோடியாக இருக்கிறது மரியா திருத்தூதர்களோடு இணைகின்ற நிகழ்வு.

சிலுவையின் அடியில், இயேசு, 'இதோ! உம் மகன்!' என்று யோவானை அர்ப்பணித்த அந்த நொடியில், அனைத்துத் திருத்தூதர்களையும், அனைத்து நம்பிக்கையாளர்களையும், ஒட்டுமொத்தத் திருஅவையையும் தன் பிள்ளையாக ஏற்றுக்கொள்கின்றார் அன்னை கன்னி மரியா. இவ்வாறாக, இயேசுவின் தாய் என்று இருந்தவர், திருஅவையின் தாயாக மாறுகின்றார்.

மரியா ஏன் திருஅவையைத் தன் தாயாக எடுத்துக்கொண்டார்?

தன் தனிமை போக்கவா?

தன் மகனை இழந்த துயரம் போக்கவா?

தன் மகனின் இறப்பு தந்த வெறுமையை நீக்கிக் கொள்ளவா?

திருத்தூதர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதற்காகவா?

இல்லை!

'நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்!' (காண். லூக் 1:38) என்று வானதூதர் கபிரியேல் வழியாக இறைவனிடம் சராணகதி அடைந்த அந்த நொடியே, அவர் தன்னை யாதுமாக இறைவனின் திட்டத்திற்கு ஒப்புக்கொடுத்ததால், இறைவனின் திட்டமான திருஅவைக்குத் தாயாக, தன்னையே கையளிக்கின்றார்.

மேலறையில்தான் இயேசு தன் இறுதி இராவுணவைக் கொண்டாடினார். புதிய உடன்படிக்கையின் இரத்தம் என்று சொல்லி, அப்பம் மற்றும் இரசத்தை அவர் தன் சீடர்களோடு பகிர்ந்துகொண்டது இந்த அறையில்தான். புதிய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட இடத்திலேயே தொடங்குகிறது திருஅவையின் பயணம். இயேசுவின் மகிழ்ச்சியான பொழுதாக இறுதி இராவுணவு இருந்தது என்பதை அவருடைய பிரியாவிடை உரை (யோவான் நற்செய்தி) நமக்குச் சொல்கிறது. ஆக, கல்வாரியில் அல்ல, வெற்றுக் கல்லறையில் அல்ல. மாறாக, மேலறையில் தொடங்குகிறது மரியாவின் தாய்மைப் பயணம்.

இரண்டாவதாக, அன்னை கன்னி மரியா திருத்தூதர்களோடு இணைந்திருக்கின்றார். இணைந்திருத்தல் இல்லாமல் தாய்மை இல்லை. ஒரு தாய் தன் குழந்தைகளோடு இணைந்திருந்தால் மட்டுமே அவரின் தாய்மையை நாம் கொண்டாடுகிறோம். உடலளவில் முதலில் அவர் குழந்தையோடு இணைந்திருக்கின்றார். பின் உள்ளத்தளவில் இணைந்திருக்கின்றார். இறந்த பின்னும் நினைவாக இணைந்திருக்கின்றார். இணைந்திருத்தலில் இல்லாமல் அவர் தன் தாய்மையை நிலைநிறுத்த முடியாது. அன்னை கன்னி மரியா, இயேசுவின் இடத்தில் நின்று, திருத்தூதர்களை ஒருவர் மற்றவர்களோடு இணைக்கின்றார்.

மூன்றாவதாக, இணைந்திருத்தல் இறைவேண்டலாகக் கனிகிறது. தன் தாய் மோனிக்கா பற்றி எழுதுகின்ற புனித அகுஸ்தினார், 'இறைவேண்டலில் எந்நேரமும் என்னை நினைவில்கொள்.அதன் வழியாகவே நான் உன்னுடன் இணைந்திருப்பேன்' என்று அவர் சொன்னதாகப் பதிவு செய்கின்றார். இறைவேண்டல் இறைவனையும் நம்மையும் அன்றி, நம்மை ஒருவர் மற்றவரோடும் இணைக்கின்றது. 'ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்' என்று மிக அழகாகப் பதிவு செய்கின்றார் லூக்கா. திருத்தூதர்களும் அன்னை கன்னி மரியாவும் வெள்வேறு நபர்களாக இருந்தாலும், அவர்கள் உள்ளம் ஒன்றாக இருக்கின்றது. இதுவே இயேசுவின் இறைவேண்டலாக இருந்தது. ஏனெனில், 'எல்லாரும் ஒன்றாக இருப்பார்களாக' என்று வேண்டினார் இயேசு.

இன்று அன்னை கன்னி மரியாவை, திருஅவையின் தாய் எனக் கொண்டாடி மகிழும் நாம், அத்தாயின் வழியாக இறைவனுக்கு நன்றி கூறுவோம். திருஅவையில் உள்ள நம் அனைவருக்கும் அவர் தாய் என்ற நிலையில், அவரோடு இணைந்து நம்மையும் இறைத்திட்டத்திற்குச் சரணாகதியாக்க முன்வருவோம்.


Friday, May 26, 2023

இவருக்கு என்ன ஆகும்?

இன்றைய இறைமொழி

சனி, 27 மே 2023

உயிர்ப்புக்காலம் ஏழாம் வாரம்

திப 28:16-20, 30-31. யோவா 21:20-25.

இவருக்கு என்ன ஆகும்?

யோவான் நற்செய்தியின் இறுதிப் பகுதிக்கும், உயிர்ப்புக் காலத்தின் இறுதி நாளுக்கும் வந்துவிட்டோம். யோவான் தன் நற்செய்தியை மிக அழகாக நிறைவு செய்கிறார்: 'இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.'

இது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியமா? அல்லது நேரிடையான கூற்றா?

இறையனுபவம் அல்லது இயேசு அனுபவம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவம். ஆக, உண்மையாகவே அனைத்து அனுபவங்களும் எழுதப்பட்டால் இந்த உலகமே கொள்ளாது.

யோவான் ஓர் அழகான நிகழ்வோடு நிறைவு செய்கிறார். அது அவரைப் பற்றியதே. அதாவது, இயேசு அன்பு செய்த சீடர் பற்றியது. 

பேதுரு இயேசுவிடம் அவரைச் சுட்டிக்காட்டி, 'இவருக்கு என்ன ஆகும்?' அல்லது 'இவருக்கு என்ன நிகழும்?' எனக் கேட்கின்றார்.

இயேசுவோ, 'உனக்கு என்ன?' என்று கேட்டுவிட்டு, 'என்னைப் பின்தொடர்' என்கிறார்.

இந்த நிகழ்வின் பொருள் என்ன?

இது பேதுருவின் ஆளுமை பற்றியது அல்ல. மாறாக, நம் ஒவ்வொருவரையும் பற்றியது.

அதாவது, இறையனுபவம் பெறும்போது நம்மில் எழுகின்ற ஒரு கேள்வி என்னவென்றால், 'எனக்கு அனுபவம் கிடைத்துவிட்டது. நான் இறைவனைப் பின்பற்றுகிறேன். ஆனால், இவருக்கு என்ன ஆகும்?' என்று அடுத்திருப்பவரோடு ஒப்பிடும் மனநிலை.

என் நம்பிக்கைப் போராட்டத்தில் நான் கடவுளிடம் அடிக்கடி கேட்டதும் இதுதான். 'இந்து சகோதரருக்கு என்ன ஆகும்?' 'இசுலாம் சகோதரிக்கு என்ன ஆகும்?' 'கடவுளை நம்பாத ஒருவருக்கு என்ன ஆகும்?' 'திருப்பலிக்கு வராதவருக்கு என்ன ஆகும்?' 'செபமாலை செபிக்காதவருக்கு என்ன ஆகும்?' 

இந்தக் கேள்விகள் இரண்டு காரணங்களால் எழுகின்றன:

ஒன்று, இயேசுவைப் பின்பற்றுவதில் எனக்குள்ள தயக்கத்தால்.

இரண்டு, என்னை அவர்களோடு ஒப்பிட்டு நான் அவர்களைவிட பெரியவன் என்று இறுமாப்பு கொள்வதால்.

இறைவனைப் பின்பற்றுவதில், இவை இரண்டுமே தவறு. தயக்கமும், இறுமாப்பும் சீடத்துவத்தின் பெரிய எதிரிகள்.

பேதுருவுக்கும் இதே தயக்கமும் இறுமாப்பும் இருந்திருக்கலாம். பேதுருவை நெறிப்படுத்துகின்ற இயேசு, 'உனக்கு என்ன? என்னைப் பின்தொடர்!' என்கிறார்.

இன்று நாம் இறையனுபவம் பெற்றுவிட்டால், நம் கண்கள் இயேசுவின்மீது மட்டும் இருக்கட்டும். அப்போது தயக்கமும் இறுமாப்பும் மறைந்துவிடும்.

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பணிகள் நூல் நிறைவு பெறுகிறது. பவுல் உரோமைக்குச் சென்றவுடன் தன் நூலை நிறைவு செய்கின்றார் லூக்கா. ஏனெனில், அன்றைய கருத்துப்படி, உலகின் எல்லை என்பது உரோமை. ஆக, பவுலுடன் இணைந்து நற்செய்தி உலகின் எல்லையை அடைந்துவிடுகிறது. 

'உரோமையில் தனி வீட்டில் தங்கியிருக்க பவுல் அனுமதி பெற்றுக்கொண்டார்' என்று எழுதுகின்றார் பவுல்.

பவுலின் ஆளுமை நம்மை வியக்க வைக்கிறது. அவர் என்னதான் சிறைப்பட்டவராக இருந்தாலும், தன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதையும், தான் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தானே நிர்ணயிக்கின்றார். இது ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடம். பல நேரங்களில் நம் வாழ்க்கையை நாம் பிறருக்காக வாழ்கின்றோம். மற்றவர்களுக்காக, அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என நினைத்துக்கொண்டே நம் வாழ்க்கையை நாம் அவர்களின் கைகளில் கொடுத்துவிடுகிறோம். தனக்கு எது தேவை என்பதை அறிந்தவராகவும், தான் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்பவராகவும் இருக்கிறார் பவுல்.

மேலும், பவுலின் பழகும் திறனுக்கும் இந்நிகழ்வு சான்றாக அமைகிறது. மிகவும் எளிதாகவும் இயல்பாகவும் மற்றவர்களுடன் பழகுகின்றார்.

பவுல் இரண்டு ஆண்டுகள் வாடகை வீட்டில் இருந்ததாகப் பதிவு செய்கிறார் லூக்கா. அங்கே பவுல் பெறும் ஞானம் நம்மை வியக்க வைக்கிறது.

தன்னை அழிக்கத் துடிக்க நினைத்த யூதர்களை அழைத்துப் பேசுகிறார்.

'யூதர்களை எதிரிகள் என்றும், உறுப்பு சிதைப்பவர்கள் என்றும், வயிறே அவர்கள் தெய்வம் என்றும், மானக்கேடே அவர்களுடைய வாழ்க்கை' என்றும் சாபமிட்டவர், அவர்களை வரவழைத்துப் பேசுகின்றார். அதாவது, தன் வாழ்நாள் குறுகியது. இனி சண்டையிட்டு என்ன பயன்? என எண்ணுகின்ற பவுல், அவர்களை அழைத்து மிகவும் சாந்தமாக, 'என் இனத்தாருக்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை. இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேச அழைத்தேன். நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்' என்கிறார். அவருடைய பேச்சில் வெறுப்போ, கோபமோ இல்லை.

வாடகை வீடு தந்த வாழ்க்கைப்பாடம்தான் இது.

வாடகை வீட்டில் இருக்கிறோம் என்ற நினைப்பு நம்மை அடுத்தவர்களோடு அட்ஜஸ்ட் செய்துகொள்ள நம்மைப் பழக்கும். 'இது நிரந்தரமல்ல' என்ற உணர்வு இருப்பதால் நாம் யாரையும் கண்டிக்கவோ, வெறுக்கவோ மாட்டோம்.

'ஒன்றும் ஒன்றும் ஐந்து என்று என்னிடம் யாராவது சொன்னால், அப்படியா என்று கேட்டுவிட்டு நகரும் மனப்பான்மை' தருவதுதான் வாடகை வீடு. 'இல்லை. அது இரண்டு' என்று வாதிடுவது நேரத்தையும், ஆற்றலையும் வீணாக்கும் செயலாகும்.

நிரந்தரமான இறைவனைப் போல, நிரந்தரமற்ற வாடகை வீடும் நமக்கு வாழ்க்கைப்பாடங்களைக் கற்றுத்தரும் - பவுலுக்குப் போல!

வாழ்வின் நிலையாமையை அறிந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை மட்டுமே வாழ்வர். அதை இனிதாக வாழ்வர். 'இவருக்கு என்ன ஆகும்?' 'அவருக்கு என்ன ஆகும்?' என்னும் பேராவலும், 'சண்டை சச்சரவும், கோபமும், பகைமை உணர்வும்' அவரிடம் இருக்காது.


Thursday, May 25, 2023

உமக்கு எல்லாம் தெரியுமே!

இன்றைய இறைமொழி

வெள்ளி, 26 மே 2023

உயிர்ப்புக்காலம் ஏழாம் வாரம்

திப 25:13-21. யோவா 21:15-19.

உமக்கு எல்லாம் தெரியுமே!

இயேசுவின் இறுதிச் சொற்கள் என்று நாம் நினைக்கும்போதெல்லாம் பெரும்பாலும் சிலுவையில் அவர் மொழிந்த ஏழு சொற்களையே நாம் நினைவுகூருகிறோம். ஆனால், உயிர்ப்புக்குப் பின் அவர் மொழியும் சொற்களும் நினைவுகூரத்தக்கவை.

உயிர்ப்புக் காலம் நிறைவுபெற இரண்டு நாள்களே இருக்கின்ற வேளையில், யோவான் நற்செய்தியில் இயேசு மொழியும் இறுதிச் சொற்களை இன்றும் நாமும் கேட்கிறோம். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் நடைபெறும் உரையாடலே இயேசுவின் இறுதி உரையாடலாக இருக்கிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) 'நீ என்னை அன்பு செய்கிறாயா?' என்று இயேசு பேதுருவிடம் மூன்று முறை கேட்டல். (ஆ) பேதுருவின் இறுதி நாள்கள் பற்றிய முன்னறிவிப்பு. (இ) பேதுருவின் இரண்டாம் அழைப்பு.

அ. நீ என்னை அன்பு செய்கிறாயா?

கலிலேயக் கடல் அருகே சீடர்கள் உணவருந்தி முடித்தவுடன், பேதுருவைத் தனியாக அழைத்துச் செல்கின்ற இயேசு, 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என மூன்றுமுறை கேட்கின்றார். இந்த நிகழ்வு யோவான் நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இது ஏன் எழுதப்பட்டது? என்பதற்கு இப்படியாகப் பதில் தரப்படுகிறது. பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலிக்கின்றார். இப்போது, அவர் திருஅவையின் தலைவராக இருப்பது தொடக்கத்திருஅவைக்கு நெருடலாக இருக்கும். ஆண்டவரை மூன்றுமுறை மறுதலித்த ஒருவர் எப்படி திருஅவையின் தலைவராக இருக்க முடியும்? என்ற கேள்வி தொடக்கத் திருஅவையில் எழுந்திருக்கலாம். இந்தக் கேள்விக்கு விடை தரும் விதமாக, மூன்று முறை இயேசுவை பேதுரு மற்ற எல்லாரையும் விட அதிகமாக அன்பு செய்வதாக பதிவு செய்கின்றார். இங்கே, 'அன்பு' என்ற வார்த்தை, கிரேக்கத்தில் இரண்டு வார்த்தைகளாக உள்ளது: முதல் மற்றும் இரண்டாம் கேள்வியில் இயேசு, 'அகாப்பாவோ' (தன்னலமற்ற அன்பு) என்ற வினைச்சொல்லையும், மூன்றாம் கேள்வியில், 'ஃபிலயோ' (நட்பு அல்லது உறவுசார் அன்பு) என்ற வினைச்சொல்லையும் பயன்படுத்துகின்றார். மூன்றாம் கேள்வியில், இயேசு, பேதுரு தனக்குக் காட்டும் இயல்பான நட்பு அல்லது அன்பு பற்றி விசாரிக்கின்றார். மூன்றாம் கேள்விக்கு விடை அளிக்கின்ற பேதுரு, 'ஆண்டவரே! உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சரணடைகின்றார். இந்த நட்பில்தான் நான் உம்மை மறுதலித்தேனே என்று தன்னுடைய வலுவின்மையையும் ஏற்றுக்கொள்கிறார் பேதுரு. மேலும், 'உங்களை நான் நண்பர்கள் என்றேன்' (காண். யோவா 15:15) என்னும் இயேசுவின் முந்தைய சொற்களோடு இணைந்து செல்வதாகவும் இருக்கிறது இச்சொல்.

ஆ. நீ கைகளை விரித்துக் கொடுப்பாய்

இரண்டாவதாக, பேதுருவின் இறுதி நாள்கள் எப்படி இருக்கும் என்பதை இயேசு அவருக்கு முன்மொழிகின்றார்: 'உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வார்.' இது பேதுருவின் இறுதிநாள்கள் மட்டுமல்ல. மாறாக, நம் ஒவ்வொருவரின் இறுதிநாள்களும் கூட. கைகளை விரித்துக் கொடுக்க நிறைய துணிச்சல் வேண்டும். 'என்னால் இது இயலாது' என்று தன் வலுவின்மையை ஏற்றுக்கொள்ளும் ஒருவர்தான் கைகளை விரித்துக் கொடுக்க முடியும்.

இ. 'என்னைப் பின்தொடர்'

இறுதியாக, இயேசு, 'என்னைப் பின்தொடர்' என்று பேதுருவை அழைக்கின்றார். முதல் சீடர்களை ஒத்தமைவு நற்செய்திகளில் அழைத்த அதே வார்த்தையைக் கொண்டு இயேசு அழைக்கின்றார். பின்தொடர்தல் என்பது பேதுரு இனி தன் வேலைகளை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு, இயேசுவின் வேலைகளைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஒரு நாள், இரு நாள் அல்ல. இறக்கும் வரையிலும்!

இந்த நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?

(அ) ஒவ்வொரு நாளும் இயேசு நம் ஒவ்வொருவரையும் பார்த்து, 'நீ என்னை அன்பு செய்கிறாயா?' 'நீ என்னோடு நட்பு பாராட்டுகிறாயா?' எனக் கேட்கிறார். இந்தக் கேள்விக்கு நாம் ஒவ்வொருவரும் பதில் தர வேண்டும். 'ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே' என்னும் சரணாகதியே சிறப்பானது.

(ஆ) கைகளை இறுக்கி மூடிக்கொண்டே பிறக்கும் நாம், வாழ்க்கை முழுவதும் கைகளைத் திறந்து கொடுக்க மிகவும் கஷ்டப்படுகிறோம். கைகளைத் திறந்து கொடுக்க, அல்லது விரித்துக்கொடுக்க நிறையத் துணிச்சல் தேவை. துணிச்சலைவிட வாழ்க்கையை விளையாட்டு போல எடுத்துக்கொள்ளும் பக்குவம் தேவை. 

(இ) பின்தொடர்பவரின் பார்வை முழுவதும் அவருக்கு முன்செல்பவர்மேல்தான் இருக்கிறது. நம் பார்வையை மற்றவற்றிலிருந்து திருப்பி இயேசுவின்மேல் வைத்தலும், கவனச்சிதறல்கள் குறைத்தலும் பின்தொடர்வதை எளிமையாக்கும்.


Tuesday, May 23, 2023

கடவுளுக்கு அர்ப்பணமாக்குதல்

இன்றைய இறைமொழி

புதன், 24 மே 2023

உயிர்ப்புக்காலம் ஏழாம் வாரம்

திப 20:28-38. யோவா 17:11-19

கடவுளுக்கு அர்ப்பணமாக்குதல்

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் எபேசின் மூப்பர்களுக்கு வழங்கும் பிரியாவிடையும், நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்களுக்கு வழங்கும் பிரியாவிடையும் தொடர்கின்றது. இரண்டு தொடர்நிகழ்வுகளும் இரண்டு புதிய செய்திகளை நமக்குத் தருகின்றன.

'உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை. ... உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்' என்கிறார் இயேசு.

முதலில், சீடர்களை அர்ப்பணம் ஆக்குமாறு கடவுளை வேண்டுகிறார்.

இரண்டு, தானே அர்ப்பணம் ஆகின்றார்.

'அர்ப்பணம் செய்தல்' அல்லது 'அர்ப்பணித்தல்' என்பது நாம் அடிக்கடிப் பயன்படுத்தும் வார்த்தை அல்ல. மாறாக, ஆலய அர்ப்பணிப்பு, அருள்பணியாளர்கள் அர்ப்பணிப்பு போன்ற நிகழ்வுகளுக்கு மட்டுமே இதை நாம் ஒதுக்கி வைக்கின்றோம். 'இறைவனுக்கென ஒன்றை ஒதுக்கி வைத்தலே' அர்ப்பணம் செய்தல் என்று ஓரளவுக்கு நாம் புரிந்துகொள்ளலாம். இதை இறைவன்தான் செய்ய முடியும். அவர் தனக்கென மனிதர்களையும் இடங்களையும் அர்ப்பணம் ஆக்கிக்கொள்கின்றார். இறைவனுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட ஒன்று மற்ற விடயங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால், அதன் தூய்மை கெடுவதாகக் கருதப்பட்டு அந்த இடம் மீண்டும் புனிதப்படுத்தப்படுகிறது. ஆக, அர்ப்பணத்தில் நிறைய பொறுப்புணர்வு உண்டு.

மேலும், இறைவனுக்கென ஒருவர் அர்ப்பணம் ஆகும்போது அவர் அனைவருக்கும் பொதுவானவர் ஆகின்றார். அனைவரையும் இறைவனுடன் இணைப்பவராக மாறுகின்றார்.

ஆகையால்தான் இன்றைய முதல் வாசகத்தில், 'நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்' என்கிறார் பவுல். அதாவது, இப்போது பவுல் எபேசு நகர மூப்பர்களிடமிருந்து விடைபெறுகின்றார். இனி அவருக்கும் அவர்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இருக்காது. ஆனால், பவுல் எங்கிருந்தாலும் கடவுளோடு இணைந்திருப்பார். அந்தக் கடவுளோடு அவர்களையும் இணைத்துவிட்டால் கடவுள் வழியாக அவர் அனைவரோடும் இணைந்திருக்க முடியும்.

இதையே புனித அகுஸ்தினாரும், 'நாம் அன்பு செய்கின்ற அனைவரையும் இறைவனில் அன்பு செய்தால் அந்த அன்பு முடிவற்ற அன்பாக இருக்கும், ஏனெனில் இறைவன் முடிவில்லாதவர்' என்கிறார்.

ஆக, உண்மை வழியாக, அதாவது நம் இருத்தல் வழியாக, நம்மையே இறைவனுக்கு அர்ப்பணம் செய்தல் முதல் பாடம்.

இரண்டாவதாக, 'பெற்றுக்கொள்வதை விடக் கொடுத்தலே பேறுடைமை' என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவில்கொள்ளுங்கள் என்கிறார் பவுல். ஆண்டவர் இப்படி எங்கும் குறிப்பிட்டதாக நற்செய்தி நூல்களில் பதிவு இல்லை. அல்லது இவ்வார்த்தைகள் வாய்மொழிப் பாரம்பரியத்தில் ஆண்டவரின் வார்த்தைகளாக வலம் வந்திருக்கலாம்.

வாழ்க்கையின் இரண்டு நிலைகளை நாம் பார்க்கிறோம்: 'பெற்றுக்கொள்தல்' 'கொடுத்தல்.'

கொடுத்தல்தான் முதன்மையானதாக, மேன்மையானதாக இருக்கின்றது. இதைப் பவுல், 'உழைப்பு' பற்றிய பகுதியில் குறிப்பிடுகின்றார். உழைக்கின்ற போது நாம் உண்மையில் நம்மையே கொடுக்கின்றோம்.

இறைவனுக்கு அர்ப்பணம் செய்து, அந்த அர்ப்பணத்தை நம் உழைப்பின் வழியாகக் கொடுத்தல் நலம்.


Monday, May 22, 2023

இருக்கப் போவதில்லை

இன்றைய இறைமொழி

செவ்வாய், 23 மே 2023

உயிர்ப்புக்காலம் ஏழாம் வாரம்

திப 20:17-27. யோவா 17:1-11அ.

இருக்கப் போவதில்லை

இன்றைய முதல் வாசகத்தில், பவுல் எபேசு நகர மூப்பர்களிடமிருந்து விடைபெறுகின்றார்: 'ஆனால் இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை என்று நான் அறிவேன்.' தான் விடைபெறுமுன் மூப்பர்களைக் கூட்டி அவர்களோடு உரையாடுகிறார் பவுல்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் திருத்தூதர்களிடமிருந்து விடைபெறுகின்றார்: 'இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் இருக்கிறேன்.' தாம் விடைபெறுமுன் தம் வானகத் தந்தையிடம் சீடர்களுக்காக இறைவேண்டல் செய்கிறார் இயேசு.

இன்று தொடங்கி மூன்று நாள்கள் இயேசுவின் இறைவேண்டலை வாசிக்கிறோம். இந்த இறைவேண்டல் 'தலைமைக்குருவின் இறைவேண்டல்' என்றும் அழைக்கப்படுகிறது. இயேசு ஒரு தலைமைக்குரு போல தம் தந்தைக்கும், சீடர்களுக்கும் இடையே நின்று இறைவேண்டல் செய்கிறார். இருவருக்கும் இடையே நிற்பதற்கு இரு குணங்கள் தேவை: ஒன்று, கடவுள்மேல் நம்பிக்கை. இரண்டு, மனிதர்கள்மேல் இரக்கம். மேலும், இருவரையும் அறிந்தவராகவும் இருத்தல் வேண்டும். இயேசு தந்தையையும் தம் சீடர்களையும் அறிந்தவராக இருக்கிறார். 

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியில் தம் சீடர்கள் பற்றிய மூன்று விடயங்களைப் பதிவு செய்கிறார் இயேசு: (அ) 'அவர்கள் இயேசுவை நம்பினார்கள்.' (ஆ) 'அவர்கள் தந்தைக்கு (கடவுளுக்கு) உரியவர்கள்.' (இ) 'அவர்கள் உலகில் இருப்பார்கள்.'

இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கை வழியாகத் திருத்தூதர்கள் கடவுளுக்கு உரியவர்கள் ஆகிறார்கள். இயேசு இந்த உலகை விட்டுச் சென்றாலும், அவர்களுடைய பணி இந்த உலகத்தில் தொடர வேண்டும்.

இயேசுவின் இச்சொற்கள் தந்தையை நோக்கிச் சொல்லப்பட்டாலும், இவற்றை நேரடியாகக் கேட்கிறவர்கள் சீடர்கள்தாம். இச்சொற்களால் அவர்கள் தங்கள் தான்மை என்ன என்பதை உணர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் உலகில் இருந்தாலும், உலகுக்கு உரியவர்கள் அல்லர், மாறாக, கடவுளுக்கு உரியவர்கள் என்பதும், அந்த உயர்ந்த நிலைக்குத் தகுந்தாற்போல தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் மறைமுகமான செய்தியாக இருக்கிறது.

இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?

(அ) பவுல் போல, இயேசு போல, எந்த நேரத்தில் நாம் விடைபெற வேண்டும் என்பதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். நம் இருத்தல் விரும்பப்படுகிறது என்பதற்காக அதிக நேரம் ஒரே இடத்தில் இருந்தாலும் மற்றவர்களின் அதிருப்தியைச் சந்திக்க நேரிடும். தெளிவான நோக்கம், வாழ்க்கையின்மேல் பொறுப்புணர்வு, மறுப்புச் சொல்லும் பக்குவம் உள்ளவர்களே சரியான நேரத்தில் பந்தியிலிருந்து எழுந்து புறப்பட முடியும்.

(ஆ) அடிக்கடி வானத்தை நோக்கியும், ஒருவர் மற்றவர்களை நோக்கியும் நாம் பேச வேண்டும். பல நேரங்களில் இவ்விரண்டையும் செய்வதற்குப் பதிலாக நமக்கு நாமே பேசிக்கொண்டே இருக்கிறோம். அதாவது, மனத்தில் எண்ணங்களை ஓடவிடுகிறோம். எண்ணங்கள் மெதுவாக நம் மனத்தில் எழுகின்றன. நாம் அவற்றுக்கு இடம் கொடுக்கத் தொடங்கும்போது அவை குதிரை வேகத்திலும் ஓடத் தொடங்குகின்றன. ஓர் எண்ணத்திலிருந்து இன்னொன்று என ஓடிக்கொண்டே இருந்தால் மிஞ்சுவது சோர்வே.

(இ) இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கை வழியாக நாம் கடவுளுக்கு உரியவர்கள் என்றால், அந்த மேன்மையான நிலையைத் தக்கவைத்துக்கொள்ள நம் வாழ்வை அதற்கேற்றாற்போலத் தகவமைத்துக்கொள்தல் நலம்.


Sunday, May 21, 2023

துன்பம் உண்டு

இன்றைய இறைமொழி

திங்கள், 22 மே 2023

உயிர்ப்புக்காலம் ஏழாம் வாரம்

திப 19:1-8. யோவா 16:29-33.

துன்பம் உண்டு

நேற்றைய நாளில் நாம் ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடினோம். இந்த வார வாசகங்கள் அனைத்தும் விண்ணேற்றம் அடைந்த ஆண்டவர் நமக்கு அனுப்பப் போகின்ற தூய ஆவியார் பற்றிப் பேசுகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 19:1-8), மலைப்பாங்கான பகுதியாகத் திகழ்ந்த எபேசு நகரத்துக்கு வருகின்றனர் புனித பவுலும் அவருடைய உடனுழைப்பாளர்களும். சீடர்களைக் கண்டு, 'நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?' எனக் கேட்க, அவர்களோ, 'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே' என்கின்றனர். பல நேரங்களில், உறுதிப்பூசுதல் அருளடையாளத்தின் போதும், அருங்கொடை இயக்க இறைவேண்டல்களின்போது மட்டுமே நாமும் தூய ஆவியார் பற்றி நினைக்கின்றோம். இவர் ஒரு மறக்கப்பட்ட மனிதராகவே இன்றும் நம்மோடு இருக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தன்னுடைய பிரியாவிடை உரையில், 'உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்' என்கிறார்.

இதில் மூன்று விடயங்கள் உள்ளன:

அ. உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு

'துன்பம்' என்ற வார்த்தைக்கு இங்கே கிரேக்கத்தில் 'த்லிப்ஸிஸ்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. 'த்லிப்ஸிஸ்' என்ற பெயர்ச்சொல் 'த்லிபோ' என்ற வினைச்சொல்லிலிருந்து வருகிறது. 'கசக்குவது,' 'பிழிவது,' 'நெருக்குவது,' 'அமிழ்த்துவது' என்பது இதன் பொருள். தானியங்களைக் கசக்குதல், துணியை அல்லது பழங்களைப் பிழிதல், கட்டகளை நெருக்கி அடுக்குதல், தண்ணீருக்குள் ஒன்றைக் கடினப்பட்டு அமிழ்த்துதல் போன்றவற்றைக் குறிக்க இவ்வினைச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்தில் அழுத்தம் பார்க்கும் கருவியில் த்லிப்ஸிஸ் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தின் பழைய சட்டப்படி, குற்றத்தை ஒத்துக்கொள்ளாத ஒருவர் மேல் பெரிய கனத்தை அழுத்திக் கொல்வது வழக்கம். அந்த வழக்கத்தின் பெயரும் 'த்லிப்ஸிஸ்.'

ஆக, இயேசு இங்கே சொல்வது உள்ளம் சார்ந்த ஓர் அழுத்தம். அல்லது அந்த அழுத்தம் தரும் துன்பம். பாம்பாட்டிச் சித்தர் துன்பத்தை இப்படி வரையறுக்கிறார்: 'உன் மனம் உனக்கு வெளியே இருந்தால் அது துன்பம். உனக்கு உள்ளே இருந்தால் அது இன்பம்.' எடுத்துக்காட்டாக, நான் யாரிடமாவது கோபம் கொண்டால், அல்லது யாரையாவது நான் மன்னியாமல் இருந்தால் என் மனம் அவரைப் பற்றி எண்ணிக்கொண்டே இருக்கிறது. இதுதான் துன்பம். இதுதான் அழுத்தம். மாறாக, என் மனம் என்மேல் மையம் கொண்டிருந்தால் துன்பத்திற்கு இடமில்லை.

இந்த வாக்கியத்தில், 'உலகம்' என்பது நம் பொதுவான இல்லம். யோவான் நற்செய்தியில், 'உலகு' என்ற வார்த்தைக்கு இரண்டு பொருள்கள் உண்டு: ஒன்று, கடவுளுக்கு எதிராகச் செயல்படும் எதிராளிதான் உலகு. இரண்டு, மனிதர்களின் இயங்குதளம் உலகு. இங்கே இந்த வார்த்தை இரண்டாவது பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது.

ஆ. எனினும், துணிவுடன் இருங்கள்

துன்பம் போய்விட்டதால் அல்ல, மாறாக, துன்பம் இருந்தாலும் துணிவுடன் இருத்தல் வேண்டும். நம்மில் எழும் துன்பத்தை எதிர்கொள்வதற்காக நம் மனம் இயல்பாக எழுப்பும் ஒரு பாதுகாப்பு உணர்வுதான் துணிவு. துணிவின் எதிரி பயம். துணிவு என்பது பயமற்ற நிலை.

இ. நான் உலகின்மேல் வெற்றிகொண்டுவிட்டேன்

இந்தச் செயல் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகச் சொல்கிறார் இயேசு. 'நிக்காவோ' என்றால் வெற்றி. அந்த வெற்றியில் எதிராளி முற்றிலும் தோற்கடிக்கப்படுவான். ஆனால், திரும்ப வரமாட்டான் என்பது பொருள் அல்ல. இயேசு தான் ஏற்கனவே உலகை வென்றுவிட்டதாக சீடர்களுக்கு முன்மொழிகின்றார்.

துன்பம் என்ற எதார்த்தத்தை இயேசு முழுமையாக அழித்துவிட்டதாகப் பொருள் இல்லை. அப்படிச் சொன்னால் அவர் தன்னையே முரண்படுத்துவதாக இருக்கும். ஏனெனில், இன்னும் சில நாள்களில் அவரே சிலுவையில் துன்புறுவார். துன்பம் தனக்கு வந்தாலும் அத்துன்பம் வெற்றிகொள்ளப்படும். ஏனெனில், தம்மைத் தாண்டி எதுவும் தம்மை வருத்திவிடாது என்பது இயேசுவின் புரிதல்.

தூய ஆவியார் பெருவிழாவுக்காக நம்மையே தயாரிக்கும் நாம் இன்றைய நாளில் பின்வரும் கொடைக்காக மன்றாடுவோம்: நம் வாழ்க்கைமேல் நாம் வெற்றி கொண்டவர்களாக வாழ்தல். அதாவது, நமக்கு வெளியே நடக்கும் எதுவும், வெளியே இருக்கும் எவரும் நம்மை வெற்றிகொள்ளாமல் பார்த்துக்கொள்தல். நம் மனத்தை நமக்குள்ளேயே வைத்திருத்தல் என்னும் கொடை!


Saturday, May 20, 2023

இணைப்பாளர்-எந்நாளும்-வானம்

இன்றைய இறைமொழி

ஞாயிறு, 21 மே 2023

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 

திப 1:1-11. எபே 1:17-23. மத் 28:16-20.

இணைப்பாளர்-எந்நாளும்-வானம்

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவை, 'இணைப்பாளர்,' 'எந்நாளும்,' 'வானம்' என்னும் மூன்று சொற்களால் புரிந்துகொள்வோம்.

அ. இயேசு கிறிஸ்து கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இணைப்பாளர்.

ஆ. 'இதோ! உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்.'

இ. வானத்தைப் பாருங்கள்! ஆனால், கால்கள் மண்ணில் பதிந்திருக்கட்டும்!

அ. இயேசு கிறிஸ்து கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இணைப்பாளர்

ஆண்டவரின் விண்ணேற்ற நிகழ்வுடன், கிறிஸ்தியல் வட்டம் நிறைவுக்கு வருகிறது. மூவொரு இறைவனின் நெஞ்சில் நிறைந்திருந்த வார்த்தையானவர் மனுவுருவாகி, பிறந்து, விண்ணக அரசை அறிவித்தார். தம் பணிகள், வல்ல செயல்கள், மற்றும் போதனைகள் வழியாக விண்ணரசு இம்மண்ணுலகில் இப்போதே வந்தது என இயேசு முழக்கமிட்டார். பாடுகள் பட்டு, இறந்து, உயிர்த்து, இன்று விண்ணேற்றம் அடைகிறார். இந்த வட்டம் கிறிஸ்துவின் மனுவுருவாதலை நிறைவு செய்வதோடு, நம் வாழ்வுக்கும் பொருள் சேர்க்கிறது. மனித உடல் ஏற்றுள்ள நாமும் உயிர்த்து விண்ணேறிச் செல்வோம் என்னும் எதிர்நோக்கை நமக்கு வழங்குகிறது. இன்றைய திருப்பலித் தொடக்கவுரையில், 'இயேசு கிறிஸ்து இணைப்பாளர்' என வாசிக்கிறோம். இயேசுவின் மனுவுருவாதலே அவரைக் கடவுளோடும் மனிதர்களோடும் இணைக்கிறது. கடவுளே மானிடர்களின் இணைப்பாளராக விளங்குவதன் வழியாக மானுடத்தின் மாண்பு மேன்மையடைகிறது. 'கடவுள் நம்மோடு' என இறங்கி வந்த இயேசு, இன்று, 'கடவுள் நமக்காக' என ஏறிச் செல்கிறார். 

இன்று நான் எந்த வாழ்வியல் நிலையில் - குழந்தை, பதின்மம், இளமை, முதிர்ச்சி, முதுமை - இருக்கிறேன்? எந்த வாழ்வியல் நிலையில் நான் இருந்தாலும் அதை முழுமையாக ஏற்று வாழ்கிறேனா? கடவுள் மனித உடலை ஏற்று அதை மாட்சிப்படுத்தியிருக்கிறார் எனில், நான் என் உடலையும் மற்றவர்களின் உடலையும் எப்படிப் பார்க்கிறேன்? உடல் என்பது பாவம் செய்வதற்கான கருவி என எதிர்மறையாக எண்ணுகிறேனா? அல்லது இந்த உடல் கடவுளின் ஆலயம் என அதை நேர்முகமாக ஏற்று அன்பு செய்கிறேனா? இயேசு தம் மனுவுருவாதல் வழியாக மனுக்குலத்தை மாற்றினார் எனில், நான் என் குடும்பம், நண்பர்கள், சுற்றுச்சூழல், உலகம் ஆகியவற்றின்மேல் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறேன்? என் நம்பிக்கை அனுபவத்தில் விண்ணகத்தையும் மண்ணகத்தையும் என்னால் இணைத்துப் பார்க்க முடிகிறதா? இறைவேண்டல் மற்றும் அன்றாட வாழ்க்கை, ஆன்மிக வாழ்க்கை மற்றும் உடல்சார் வாழ்க்கை என இரண்டையும் இணைத்துப் பார்க்க முடிகிறதா? இயேசு விண்ணுக்கும் மண்ணுக்கும் இணைப்பாளர் எனில், அவரோடு இணைந்து இணைப்பாளர் நிலையில் இருக்கும் நான் என் பொதுக்குருத்துவம் மற்றும் பணிக்குருத்துவத்தை நினைவுகூர்ந்து, ஒருவர் மற்றவருக்கான இணைப்பாளராகச் செயல்படுகிறேனா? அல்லது பிரிவினைகளை வளர்க்கிறேனா?

ஆ. 'இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்!'

மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் விண்ணேற்றம் பற்றிய குறிப்பு இல்லை. தம் திருத்தூதர்களுக்கு இயேசு வழங்கும் மறைத்தூதுக் கட்டளையோடும், அவருடைய உடனிருப்புச் சொற்களோடும் தன் நற்செய்தியை நிறைவு செய்கிறார் மத்தேயு. இறையியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை, 'கடவுள் நம்மோடு' (இம்மானுவேல், மத் 1:23) என அறிமுகம் செய்கிறார். கடவுள் நம்மோடு என வந்த இயேசு, நம்மை விட்டு அகல இயலாது. 'நான் எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்' என்னும் இயேசுவின் சொற்கள் கடவுள் மனுக்குலத்தோடு ஏற்படுத்திக்கொண்ட நீங்காத உடனிருப்பை உறுதி செய்வதுடன், கடவுளின் நீடித்த திருமுன்னிலையை (பிரசன்னத்தை) நமக்கு நினைவூட்டுகிறது. 'எனக்கென யாரும் இல்லையே?' என்று தனிமையில், விரக்தியில், சோர்வில் நாம் உதிர்க்கும் சொற்களுக்கு, மாற்றாக இருக்கின்றன இயேசுவின் சொற்கள். 'வார்த்தை மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவா 1:14) என வாசிக்கிறோம். 'குடிகொண்டார்' எனில் அவர் தொடர்ந்து நம்முடன் குடியிருந்துகொண்டே இருக்கிறார். ஏனெனில், கடவுளைப் பொருத்தவரையில் அவருக்கு அனைத்தும் 'இன்று' தான். 'உலக முடிவு' என்னும் சொல்லாடல் உலகின் இறுதி அல்லது அழிவை நமக்கு நினைவூட்டவில்லை. மாறாக, 'நீடித்த நிலையான நேரத்தை' இது குறிக்கிறது. 'கதிரவனும் நிலாவும் உள்ளவரையில், உம் மக்கள் தலைமுறை தலைமுறையாக உமக்கு அஞ்சி நடப்பார்களாக' (காண். திபா 72:5) என்னும் அருள்வாக்கியத்தில், 'கதிரவனும் நிலாவும் உள்ளவரை' என்னும் சொல்லாடல் 'கதிரவனும் நிலாவும் இல்லாமல் போய்விடும்' என்று உணர்த்தவில்லை, மாறாக, 'நீடித்த நிலையான நேரத்தையே' உணர்த்துகிறது. 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' (திபா 136:1) என்னும் முதல் ஏற்பாட்டுச் சொற்கள் இயேசுவின் சொற்களில் நீட்சி அடைந்து இறைவனின் நீடித்த உடனிருப்பை நமக்கு உணர்த்துகின்றன.

தம் வாக்குறுதிக்குப் பிரமாணிக்கமாக இருக்கும் நம் ஆண்டவரின் சொற்கள் என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நிறைவேறுகின்றன என்பதை நான் உணர்கிறேனா? 'எந்நாளும் உன்னுடன் இருக்கிறேன்' என்னும் அவருடைய சொற்கள் எனக்கு ஆறுதலைத் தருகின்றனவா? என் வாழ்வின் துன்பமான நேரங்களில் இயேசுவின் சொற்கள் என் நம்பிக்கைக்கு வலிமை தருகின்றனவா? இயேசுவின் உடனிருப்பு தரும் சொற்களை, என் வாழ்க்கை அனுபவமாக மாற்றும் நான், தனிமை, நோய், சோர்வு என வருந்தும் சகோதர, சகோதரிகளுக்கு நம்பிக்கை தரும் சொற்களை நான் மொழிகின்றேனா?

இ. வானத்தைப் பாருங்கள்! ஆனால், கால்கள் மண்ணில் பதிந்திருக்கட்டும்!

இயேசு விண்ணேறிச் செல்வதைக் காண்கின்ற திருத்தூதர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது தோன்றுகிற வெண்ணிற ஆடை அணிந்த இருவர், 'நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?' எனக் கேட்கின்றனர். மறைப்பணிஆர்வம் நிறை சீடர்கள் (ஆங்கிலத்தில், 'மிஷனரி டிஷைப்ள்ல்') தங்கள் பார்வையை வானத்தை நோக்கிச் செலுத்தினாலும், பாதங்களை அழுத்தமாகத் தரையில் பதித்திருக்க வேண்டும். மண்ணின் அழுக்கு தங்கள்மேல் படத் தங்களை அனுமதிக்க வேண்டும். மனித வரலாறு முழுமை பெறும் இடம் விண்ணகம். அந்த விண்ணகம் பற்றிய சிந்தனை மண்ணகம் பற்றிய நம் கவனத்தைச் சிதறடிக்கக் கூடாது. மண்ணக வாழ்வை நன்றாக வாழ்வதை விடுத்து, விண்ணகம் நோக்கி தப்பிச் செல்லக் கூடாது. ஆக, ஒவ்வொரு நாளும் இந்த மண்ணக வாழ்வுக்கான அர்ப்பணம் நம்மில் வளர வேண்டும். பொறுப்புணர்வு கூட வேண்டும். 'நம் விண்ணகம் தாய்நாடு' (காண். பிலி 3:20) என்றாலும், நாம் சார்ந்திருக்கும் மண்ணின்மேலும் நமக்கு பொறுப்பு உண்டு. 

நான் என் வாழ்வையும், மற்றவர்களின் வாழ்வையும் தொடுகிறேனா? இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா எனக்குத் தரும் செய்தி என்ன? என் வாழ்க்கை, எனக்கு நெருங்கியவர்களின் வாழ்க்கை ஆகியவற்றைத் தாண்டி வலுவற்றவர்களின், விளிம்புநிலையில் இருப்பவர்களின், ஒதுக்கப்பட்டவர்களின் வாழ்க்கைமேல் எனக்கு பொறுப்பு இருக்கிறது ன்பதை உணர்கிறேனா? இறப்புக்குப் பின் உள்ள வாழ்வு பற்றியே கவலைப்படும் நான், இறப்புக்கு முன் உள்ள வாழ்வை எப்படி வாழ்கிறேன்? மகிழ்ச்சி, அமைதி, கட்டின்மை போன்ற மதிப்பீடுகளைப் போற்றி என் தனிநபர் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறேனா?

நிற்க.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், 'எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகிற அவரால் திருஅவை நிறைவுபெறுகிறது' என எழுதுகிறார் பவுல். இயேசு தம் விண்ணேற்றத்தின் வழியாக எங்கும் எல்லாவற்றையும் நிரப்பி நிற்கிறார். 

'எக்காளம் முழங்கிடவே உயிரே ஏறுகின்றார் ஆண்டவர்' எனப் பதிலுரைப்பாடலில் அக்களிக்கும் நாம், இணைப்பாளராக வானகம் ஏறிச்செல்லும் அவர், நம்மோடு எந்நாளும் இங்கேயே இருக்கிறார் என்னும் நம்பிக்கையில் நம் கால்களை உறுதியாக மண்ணில் பதித்துக்கொள்வோம்.


Thursday, May 18, 2023

துயரம் மகிழ்ச்சியாக

இன்றைய இறைமொழி

வெள்ளி, 19 மே 2023

உயிர்ப்புக்காலம் ஆறாம் வாரம்

திப 18:9-18. யோவா 16:20-23.

துயரம் மகிழ்ச்சியாக

நேற்றைய நற்செய்தி வாசகத்தில், 'உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்' என மொழிந்த இயேசு, தம் சொற்களை ஓர் உருவகம் வழியாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் விளக்கிச் சொல்கிறார்.

பிள்ளையைப் பெற்றெடுக்கிற தாய் பேறுகால வேதனை அடைகிறார். ஆனால், குழந்தை பிறந்தவுடன் இந்த உலகில் புதிய உயிர் வந்ததை நினைத்து மகிழ்கிறார். அவருடைய வேதனை அவருக்கு மறந்துவிடுகிறது. மேலும், தான் அடைந்த வேதனையின்போது அது அகல வேண்டும் என்று மன்றாடிய அவர், வேதனை மறைந்தவுடன் மன்றாட்டையும் மறந்துவிடுகிறார்.

இயேசு இந்த உலகத்தை விட்டு மறைதல் வேதனை தந்தாலும், அவரை மீண்டும் காணும்போது சீடர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என உரைக்கிறார் இயேசு.

மேற்காணும் உருவகம் நமக்குச் சொல்வது என்ன?

(அ) வேதனை என்பது சில நிமிடங்கள்தாம். அது மறைந்துவிடும்.

(ஆ) வேதனையைத் தொடர்ந்து வருகிற மகிழ்ச்சியை நாம் மனத்தில் கொள்வது நலம்.

(இ) எதிர்மறையான நிகழ்வு ஒன்றை நாம் பார்க்கும் விதத்தைப் பொருத்தே நம் பதிலுணர்வு அமைகிறது.

தொடர்ந்து இயேசு, இரண்டு வாக்குறுதிகள் தருகிறார்:

(அ) உங்கள் மகிழ்ச்சியை எவரும் உங்களிடமிருந்து பறித்துவிட முடியாது.

அதாவது, அதை எவரும் குறையுள்ளதாக ஆக்கிவிட முடியாது.

(ஆ) அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்.

'எனக்கு ஒன்றும் வேண்டாம்' என்று மற்றவரைப் பார்த்து நான் சொல்லும்போது, அங்கே என் மனச்சுதந்திரத்தை வெளிப்படுத்துகிறேன். மகிழ்ச்சியும் மனநிறைவும் மனச்சுதந்திரமும் இணைந்தே செல்கின்றன. இயேசுவின் உடனிருப்பு நமக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் மனச்சுதந்திரமும் தருகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி அவரைத் திடப்படுத்துகிறார்.

துன்புறும் உள்ளத்தைத் திடப்படுத்த இறைவன் என்றும் துணைநிற்கிறார்.


Wednesday, May 17, 2023

தடையே பாதையாக

இன்றைய இறைமொழி

வியாழன், 18 மே 2023

உயிர்ப்புக்காலம் ஆறாம் வாரம்

திப 18:1-8. யோவா 16:16-20.

தடையே பாதையாக

கடந்த வாரத்தில் ரியன் ஹாலிடே என்பவர் எழுதிய 'தி ஆப்ஸ்டக்ல் இஸ் தெ வே' ('தடையே பாதையாக') என்னும் நூலை வாசித்தேன். ஸ்டாய்க்ஸ் என்னும் ஞானக் கோட்பாட்டாளர்களின் கருத்துகளின் பின்புலத்தில் இந்நூலை எழுதியுள்ளார் ஆசிரியர். நமக்குத் தடையாக இருக்கும் ஒன்றையே நம் வாழ்க்கைப் பாதையாக மாற்றிக்கொள்ள முடியும் என்று முன்மொழியும் ஆசிரியர் அதற்காக மூன்று வழிமுறைகளைத் தருகிறார்: (அ) பார்வை (perception), (ஆ) செயல் (action), (இ) விருப்பம் (will).

(அ) பார்வை. ஒரு பிரச்சினையை அதன் சூழலோடு இணைத்துப் பார்ப்பது, மற்றும் அதன் கோணத்தை மாற்றிப் பார்க்கும்போது நமக்குப் புதிய பார்வை கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, பெருந்தொற்றுக் காலத்தில் ஒருவர் மற்றவரைச் சந்திக்க இயலாத நிலை எழுந்தபோது, நேரடியாகச் சந்திக்க இயலவில்லை என்றால் காணொலி வழியாகச் சந்திக்கலாம் என்னும் புதிய பார்வை கிடைத்தது.

(ஆ) செயல். சிந்தித்துக்கொண்டே இருப்பதை விடுத்து செயல்பாட்டில் ஈடுபடுவது. தொடர்ந்து செயல்படுவது. நம் சிந்தனை செயல்பாடாக மாறத் தொடங்கும்போது பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்குகிறது.

(இ) விருப்பம். விருப்பம்தான் நம் சிந்தனையை நெறிப்படுத்துகிறது. விருப்பம் உறுதியாக இருக்கும்போது மூளை நம் கட்டுக்குள் வந்துவிடும். 

இன்றைய முதல் வாசகத்தில் இருவர் தங்களுடைய வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை வாழ்க்கைப் பாதைகளாக மாற்றிக்கொள்கிறார்கள். ஒன்று, அக்கிலா மற்றும் பிரிஸ்கில்லா தம்பதியர். இவர்கள் இத்தாலி நாட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார்கள். கொரிந்து நகரத்தில் வந்து குடியேறும் இவர்கள் தங்களுக்கென புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள்.

சீலாவும் திமொத்தேயுவும் மாசிதோனியாவிலிருந்து திரும்பி வரும்போது பழிப்புரையை எதிர்கொள்கிறார்கள். அந்தப் பழிப்புரை என்னும் தடையை பாதையாக மாற்றிக்கொள்கிறார்கள். புதிய மறைத்தளத்தைக் கண்டுபிடிக்கிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், தம் சீடர்களோடு உரையாடுகிற இயேசு, 'நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள். அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள். ஆனால், உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்' என்கிறார் இயேசு. தம் சீடர்கள் அழுகை மற்றும் துயரத்திலிருந்து விடுபடுவார்கள் என்னும் போலியான வாக்குறுதியை இயேசு தரவில்லை. மாறாக, அழுகை மற்றும் துயரத்தை அவர்கள் எதிர்கொண்டாலும் அவற்றை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்வர் என்றே கூறுகின்றார்.

நம் வாழ்வின் தடைகள் அனைத்தையும் பாதையாக மாற்றிக்கொள்ள முடியும் நம்மால்!


Tuesday, May 16, 2023

ஏதென்சில் பவுல்

இன்றைய இறைமொழி

புதன், 17 மே 2023

உயிர்ப்புக்காலம் ஆறாம் வாரம்

திப 17:15,22-18:1. யோவா 16:12-15.

ஏதென்சில் பவுல்

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் ஏதென்ஸ் நகரில் ஆற்றிய உரையை வாசிக்கின்றோம்.

ஏதென்ஸ் நகர மக்கள் எப்படிப்பட்டவர்கள்?

திப 17:19-20 அவர்களைப் பற்றிச் சொல்கிறது: பின்பு, அவர்கள் பவுலை அரயோப்பாகு என்னும் மன்றத்துக்கு அழைத்துக்கொண்டு போய், 'நீர் அளிக்கும் இந்தப் புதிய போதனையைப் பற்றி நாங்கள் அறியலாமா? நீர் எங்களுக்குச் சொல்வது கேட்கப் புதுமையாய் உள்ளதே! அவற்றின் பொருள் என்னவென்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்' என்றனர்.

மேலும், சிலர், 'இதைப் பற்றி நீர் மீண்டும் வந்து பேசும். கேட்போம்' என்றனர் (காண். திப 17:32).

கிரேக்க மெய்யியலின் தொட்டில் ஏதென்ஸ். சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்னும் மேற்கத்திய மெய்யியலின் பிதாமகன்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, உரையாற்றிய ஊர் ஏதென்ஸ்.

ஆக, ஏதென்ஸ் மக்கள் (1) நிறையக் கற்றவர்கள், (2) புதிய கருத்துக்களை வரவேற்பவர்கள், (3) ஆழ்ந்து கேட்பவர்கள், (4) நன்றாகப் பேசுபவர்களை உற்சாகப்படுத்தக்கூடியவர்கள், (5) மீண்டும் வரவேற்றுக் கேட்கும் எண்ணம் உடையவர்கள், மற்றும் (6) மாற்றத்தை அறிவுசார்நிலையில் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள். 

நாம் முதலில் ஏதென்ஸ் நகர மக்களிடமிருந்து மேற்காணும் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். 

தொடர்ந்து, பவுல் இன்று நமக்கு நிறைய பாடங்களைச் சொல்லித் தருகின்றார்:

(1) பவுலின் அறிவுத்திறன்

பவுலுக்கு எபிரேயம், அரமேயம், கிரேக்கம், சிரியம், மற்றும் இலத்தீன் தெரிந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், பவுலுக்குத் திருச்சட்டமும் யூத இறையியலும் அவரின் சம காலத்து மெய்யியல் சிந்தனைகளைகளும் நன்றாகத் தெரியும். இந்த அறிவுத்திறன் அவருக்கு நிறைய தன்மதிப்பையும் தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்கும். நாம் வாழ்வில் அறிந்துகொள்ளும் ஒவ்வொன்றும் இன்னொரு நாள் எங்கேயோ பயன்படும். ஆக, நமக்கு நடக்கும் அனைத்தும் ஏதோ ஒரு நோக்கத்திற்காகவே நடக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

(2) பவுலின் துணிச்சல்

பவுல் இங்கே தனிநபராக மக்கள் கூட்டத்தை, புதிய மக்கள் கூட்டத்தை எதிர்கொள்கின்றார். கடவுளின் துணை உள்ள ஒருவருக்கே இத்துணிச்சல் வரும். ஒவ்வொரு முறையும் நமக்கு இந்த அனுபவம் உண்டு. பேருந்தில் செல்லும்போது, திருமண விழாவிற்குச் செல்லும்போது, பணி மாற்றம் அடைந்து செல்லும்போது என நாம் ஒவ்வொரு முறையும் புதிய புதிய நபர்களைப் பார்க்கிறோம். பழகுகிறோம். உறவுகளை உருவாக்குகிறோம். பணிகளைச் சிறந்த முறையில் செய்கிறோம். காரணம், கடவுளின் உடனிருப்பு. இதை நாம் உணர்தல் அவசியம்.

(3) சமயோசிதப் புத்தி

எந்த நேரத்தில் எதை எப்படிச் சொல்ல வேண்டுமோ, செய்ய வேண்டுமோ, அந்த நேரத்தில் அதை அப்படிச் சொல்லும் பக்குவம். கூட்டத்தைப் பற்றிய அச்சமோ, புதிய இடத்தைப் பற்றிய கலக்கமோ இல்லாத பவுல், தன் கண்முன் நடக்கின்ற ஒன்றை அப்படியே எடுத்துப் பேசுகிறார். 'நீங்கள் அறியாத தெய்வத்துக்கு' என்று அங்கே இருந்த ஒரு பீடத்தை மையமாக வைத்து தொடங்குகிறார். என்ன ஆச்சர்யம்!

விளைவு,

மக்களின் மனத்தைக் கவர்கின்றார் பவுல்.

புதிய இடம், புதிய நபர், புதிய வேலை போன்ற எதார்த்தங்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? தன் இலக்கு, இருத்தல், மற்றும் இயக்கம் பற்றி அறிந்த பவுல் போன்றவர்களுக்கு எல்லா இடமும், எல்லா நபர்களும், எல்லா வேலையும் ஒன்றே.


Monday, May 15, 2023

சூழ்நிலைக் கைதிகள் அல்லர்

இன்றைய இறைமொழி

செவ்வாய், 16 மே 2023

உயிர்ப்புக்காலம் ஆறாம் வாரம்

திப 16:22-34. யோவா 16:5-11.

சூழ்நிலைக் கைதிகள் அல்லர்

பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிறையின் குளிரும் தனிமையும் இருளும் அவர்களுடைய உள்ளத்திலிருந்த நற்செய்தி ஆர்வத்தைக் கட்டுக்குள் வைக்கவில்லை. அவர்கள் இறைவனைப் புகழ்ந்து பாடுகிறார்கள். மற்ற கைதிகள் இவர்களுடைய பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறாக, சிறையிலும் நற்செய்தி அறிவிப்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு அனைத்துச் சிறைக் கதவுகளும் திறக்கின்றன. அனைவருடைய விலங்குகளும் சங்கிலிகளும் கழன்று விழுகின்றன. 

இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு தப்பித்துச் சென்றிருக்கலாம். 'இது இறைவன் அருளிய விடுதலை' என மகிழ்ந்திருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்ய மறுக்கிறார்கள். அனைத்துக் கைதிகளும் பேராண்மை போற்றுகின்றனர். தவறு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தும் தவறு செய்யாமல் நன்னயம் காக்கிறார்கள். 

இதைக் காண்கிற சிறைக்காவலர், முதலில் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என நினைத்தவர், பின்னர், பவுல் மற்றும் சீலாவின் காலடிகளில் விழுந்து வணங்குகின்றார். 'பெரியோரே, மீட்படைய நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்டு, அவர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறார். அவரும் அவரோடிருந்த அனைவரும் திருமுழுக்கு பெறுகிறார்கள்.

பவுல் சிறைக்காவலரை மனமாற்றம் அடையச் செய்கிறார். தன்னுடைய நற்செய்தி அறிவிப்பால் மட்டுமல்ல, மாறாக, நாணயமான வாழ்வால் மற்றவர்கள்மேல் நேர்முகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

இதையே வாழ்வின் வழியாக நற்செய்தி அறிவித்தல் என்கிறோம்.

'நான் சூழ்நிலைக் கைதி' என்னும் சொல்லாடலைப் பயன்படுத்திப் பல நேரங்களில் நம் தவறுகளை நியாயப்படுத்துகிறோம். ஆனால், தவறு செய்வதற்கான சூழ்நிலை இருந்தாலும் நம்மால் தவறு செய்யாமல் இருக்க முடியும் என்ற நிலையை உருவாக்கிக்கொள்ளும்போது சூழ்நிலையை நாம் மேற்கொள்ள முடியும்.


Sunday, May 14, 2023

லீதியா

இன்றைய இறைமொழி

திங்கள், 15 மே 2023

உயிர்ப்புக்காலம் ஆறாம் வாரம்

திப 16:11-15. யோவா 15:26-16:4.

லீதியா

திருத்தூதர்களின் பணி ஒரு பக்கம் தொழுகைக்கூடங்களிலும், பிறசமய ஆலய வளாகங்களிலும் நடந்தாலும், மற்றொரு பக்கம் ஆற்றங்கரைகளிலும், காற்றின் தூசியிலும் நடந்தேறுகிறது.

பிலிப்பி நகருக்கு வெளியே இருந்த ஆற்றங்கரை ஒன்றில் பவுல் போதிக்கும் நிகழ்வை நாம் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். ஆற்றங்கரையில் இருந்த பெண்கள் கூட்டம் அவரின் போதனைக்குச் செவிகொடுக்கிறது. துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள், குளித்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் குழந்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தவர்கள், ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் வீட்டின் பெரிய பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தவர்கள், குளிக்கவா-வேண்டமா என ஆற்றையும், கரையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் என எல்லாரும் பவுலின் குரலுக்குச் செவிகொடுத்திருப்பார்கள்.

இவர்களில் 'லீதியா' என்ற பெண்ணைப் பற்றி எழுதுகின்றார் லூக்கா.

இவர் ஒரு வியாபாரி. 'செந்நிற ஆடைகளை விற்றுக்கொண்டிருந்தவர்' என லூக்கா எழுதுகிறார். நம்ம ஊர் நல்லி சில்க்ஸ் உரிமையாளர் என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், செந்நிற அல்லது பிங்க் நிற ஆடைகள் செல்வந்தர்களாலும், அரசவை உறுப்பினர்களாலும், மேட்டுக்குடி மக்களாலும் அணியப்பட்டன. இவர் செய்கிற இந்த வேலையிலிருந்து, பெண்கள் அக்கால சமுதாயத்தில் பெற்றிருந்த அங்கீகாரம், மதிப்பு மற்றும் தன்மதிப்பையும் அறிந்துகொள்ள முடிகிறது. 

லீதியா வைத்த கண் வாங்காமல் பவுலையே பார்த்துக்கொண்டிருக்கிறார். திறந்த உள்ளம் கொண்ட இவரை கடவுள் மனம் மாற்றுகிறார். வீட்டோடு திருமுழுக்கு பெறுகின்றார். திருமுழுக்கு அவர் இருந்த ஆற்றங்கரையில்தான் நடந்திருக்க வேண்டும். மெழுகுதிரி, ஞானப்பெற்றோர், கிறிஸ்மா, ஆயத்த எண்ணெய், வெள்ளை ஆடை, ஃபோட்டோகிராஃபர் என எதுவும் ஆடம்பரமும் இல்லாமல் நடந்தேறுகிறது லீதியாவின் திருமுழுக்கு.

ஆக, ஆற்றங்கரையும் கூட இறைவனை அறிந்து கொள்ளும், அறிவிக்கும் தளமாக இருக்கிறது.

இறைவனின் வார்த்தையைத் தன் உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட லீதியா, திருத்தூதர்களைத் தன் இல்லத்தில் ஏற்றுக்கொள்கின்றார். லூக்கா அழகாக எழுதுகின்றார்: 'அதன் பின் லீதியா எங்களிடம், 'நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்' என்று கெஞ்சிக் கேட்டு எங்களை இணங்க வைத்தார்.'

இங்கே இவரின் இன்னொரு பண்பையும் பார்க்க முடிகிறது. 

தாராள உள்ளம். லீதியாவுக்கு வயது ஏறக்குயை 20 முதல் 25-க்குள் தான் இருந்திருக்க வேண்டும். தனியாக வாழ்பவராக இருக்கலாம். அல்லது திருமணம் முடித்தவராக இருக்கலாம். அல்லது திருமணம் முடிக்கத் தயார்நிலையில் இருக்கலாம். பவுலைத் தன் இல்லத்தில் ஏற்கின்றார். தான் பெற்ற நம்பிக்கைக்கு உடனடியாகக் கைம்மாறு செய்கின்றார் லீதியா. இதுதான் இவரின் பண்பு. நாம் செய்வது நமக்கே திரும்பி வரும் என்பது பிரபஞ்சத்தின் விதி. ஆக, மீட்பையும் நம்பிக்கைiயும் இலவசமாக வாங்காமல் அதற்கு ஒரு விலை கொடுக்கத் தயாராகின்றார் லீதியா.

இந்த இளவல் நமக்குத் தரும் பாடங்கள் மூன்று:

அ. தன்மதிப்பு மற்றும் தன்னம்பிக்கை - இது அவருடைய தொழிலில் வெளிப்பட்டது.

ஆ. புதியவற்றை ஏற்றுக்கொள்ளும் திறந்த உள்ளம் - இது அவருடைய மனமாற்றத்தில் வெளிப்பட்டது.

இ. அந்நியரை வரவேற்கும் பரந்த மனம் - இது திருத்தூதர்களை ஏற்றுக்கொண்டதில் வெளிப்பட்டது.


Friday, May 12, 2023

இரவில் காட்சி

இன்றைய இறைமொழி

சனி, 13 மே 2023

உயிர்ப்புக்காலம் ஐந்தாம் வாரம்

திப 16:1-10. யோவா 15:18-21.

இரவில் காட்சி

திருத்தூதர் பணிகள் நூலை வாசிக்கும்போதெல்லாம் தொடக்கத் திருஅவையில் இருந்த உயிரோட்டத்தை மிக எளிதாக நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்று, எபேசு திருஅவையின் முதல் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட திமொத்தேயு என்னும் இளவல் பவுலோடு பணியில் கைகோர்க்கின்றார். அவருடைய தாய் யூதப் பெண், தந்தையோ கிரேக்கர். இருந்தாலும், மற்ற யூதர்களை மனத்தில் கொண்டு அவருக்கு விருத்தசேதனம் செய்விக்கின்றார். இங்கே நாம் ஒரு கேள்வியைக் கேட்கலாம். புறவினத்தார் விருத்தசேதனம் செய்துகொள்ளத் தேவையில்லை என எருசலேம் வரை சென்று வாதிட்ட பவுல், இங்கே திமொத்தேயுவுக்கு ஏன் விருத்தசேதனம் செய்விக்கின்றார்? மிகவும் எளிதான பதில். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதற்காக பவுல் இந்த முடிவு எடுக்கின்றார். இதுதான் மனம் சார்ந்த முடிவு. பவுல் தன் பணியில் அறிவுசார்ந்த விதத்தில் மட்டுமே செயல்படவில்லை. தேவையற்ற விவாதங்களையும் சொற்போர்களையும் தவிர்ப்பதற்காக தன் உறுதிப்பாட்டோடு சமரசம் செய்துகொள்ளவும் தயாராக இருக்கின்றார். இதுதான் மேய்ப்புப் பணி அறிவு. பணிக்கும் பணியின் மக்களுக்கும் ஏற்றவாறு தன் திட்டங்களையும் செயல்களையும் மாற்றிக்கொள்வது.

இரண்டாவது நிகழ்வு, பவுல் காண்கின்ற காட்சி.

- பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, 'நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்' என்று வேண்டினார். இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம் -

இந்நிகழ்வை இப்படித்தான் பதிவு செய்கின்றார் லூக்கா. இதற்கு முன்னதாக, 'ஆசியாவில் (ஆசியாக் கண்டம் அல்ல!) இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே' என்றும் பதிவிடுகின்றார் லூக்கா.

திருத்தூதர்களும் தொடக்கத் திருஅவை நம்பிக்கையாளர்களும் தூய ஆவியாரால் முழுவதுமாக இயக்கப்படுகின்றனர். ஆவியின் செயல்பாட்டை எளிதாக உணர்ந்துகொண்டு அதற்கேற்ப செயலாற்றுகிறார்கள். பவுல் காட்சி கண்டாலும் அந்தக் காட்சியைக் கடவுளின் கண் கொண்டே பார்க்கின்றார். 

திருத்தூதர் பணிகள் நூலில் கடவுள் தன்னைப் பல்வேறு நிலைகளில் நம்பிக்கையாளர்களுக்கு வெளிப்படுத்துகின்றார்: காட்சி, கனவு, உள்ளுணர்வு, உருவகம், மற்றவர்களின் வார்த்தைகள். கடவுள் எப்படித் தன்னை வெளிப்படுத்தினாலும் அவற்றில் கடவுளைக் காண அவர்கள் கற்றிருந்தனர். இதுதான் முக்கியம்.

இன்று இந்தப் பிரபஞ்ச உள்ளுணர்வு நம்மில் வேகமாக மறைந்து வருகின்றது. அமைதியிலும், சலனமற்ற நிலையிலும்தான் பிரபஞ்சத்தோடு நம் உள்ளுணர்வை இணைத்துக்கொள்ள முடியும். இன்று நம்மைச் சுற்றி எழும் சத்தங்கள், நம் உள்ளத்தின் பயங்கள், கோபம், குற்றவுணர்வு, தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை உணர்வுகள் ஆகியவை உள்ளுணர்விலிருந்து நம்மைத் தள்ளி வைக்கின்றன. அல்லது உள்ளுணர்வை நாம் அறியாத வண்ணம் செய்துவிடுகின்றன.

கடவுள் இன்றும் நம் உள்ளுணர்வு வழியாக நம்மைத் தொடர்ந்து உந்தித் தள்ளிக்கொண்டிருக்கின்றார். அதைச் சரியாகக் கண்டுகொள்ள சலனங்கள் தவிர்க்க வேண்டும்.

பவுல் தன்னுடைய விருப்பு மற்றும் வெறுப்புகள் அனைத்தையும் கடந்தவராகவும், கடவுள் மற்றும் கடவுள் பணி மட்டுமே தன் இலக்கு என்று உணர்ந்தவராகவும் இருக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'பணியாளர் தலைவரை விடப் பெரியவர் அல்லர்' என எச்சரிக்கின்றார் இயேசு.

பவுல் தன்னை ஒரு பணியாளர் என்றும், கடவுளைத் தலைவர் என்றும் எப்போதும் மனத்தில் இருத்தி, அந்த வரையறையில் உறுதியாக இருந்தார். வரையறை தெளிவானால் சலனம் குறையும். சலனம் குறைய உள்ளுணர்வு உரைக்கும்.


Wednesday, May 10, 2023

அன்பில் நிலைத்திருங்கள்

இன்றைய இறைமொழி

வியாழன், 11 மே 2023

உயிர்ப்புக்காலம் ஐந்தாம் வாரம்

திப 15:7-21. யோவா 15:9-11.

அன்பில் நிலைத்திருங்கள்

யோவான் நற்செய்தியில் இயேசு மொழியும் 'நானே' வாக்கியங்களிலும் ஏழாவதும் இறுதியான வாக்கியத்தை நேற்றைய நற்செய்தி வாசகத்தில் கேட்டோம்: 'நானே உண்மையான திராட்சைக் கொடி.' தம்மைத் திராட்சைக் கொடியாக முன்மொழிகின்ற இயேசு, தம்மோடு இணைந்திருக்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

'என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நான் உங்கள்மேல் அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்' என்கிறார் இயேசு. இயேசு தம் சீடர்கள்மேல் கொண்டிருந்த அன்பு காலடிகளைக் கழுவுதலில் தொடர்ந்து, சிலுவையில் உயிர்விடுதலில் நிறைவுபெறுகிறது. இப்படிப்பட்ட தற்கையளிப்பு நிறைந்த அன்பில் தம் சீடர்களும் நிலைத்திருக்க அழைக்கிறார். யோவான் நற்செய்தியில், 'நிலைத்திருந்தல்' என்னும் சொல் 'நீடித்திருத்தல், தங்குதல், வாழ்வு பெறுதல்' என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இயேசுவின் அன்பில் எப்படி நிலைத்திருப்பது? இக்கேள்விக்கான விடையை இயேசுவே தருகிறார்: 'நீங்கள் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.' கட்டளைகள் என்பது பத்துக் கட்டளைகளை அல்ல, மாறாக, இயேசு மொழியும் அனைத்துச் சொற்களையும் குறிக்கின்றன. இயேசுவின் சொற்களைக் கேட்பதோடல்லாமல் ஒருவர் அவற்றை வாழ்வாக்கும்போது அவர் இயேசுவின் அன்பில் நிலைத்திருக்க முடியும்.

இயேசுவின் அன்பில் நாம் நிலைத்திருக்கிறோம் என்பதை எப்படி அறிந்துகொள்வது? 'நிறைவான மகிழ்ச்சியே' அதன் அளவுகோல். 

இன்றைய முதல் வாசகத்தில், எருசலேம் சங்கத்தில் திருத்தூதர்கள் பேதுரு மற்றும் யாக்கோபு மொழியும் சொற்களைக் கேட்கிறோம். புறவினத்தார்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டுமா என்னும் கேள்வி எழுகின்ற வேளையில், 'கடவுள் அவர்களுக்கும் நமக்கும் எந்த வேறுபாடும் காட்டவில்லை' என்றும், 'சுமக்க இயலாத சுமையை அவர்கள்மேல் சுமத்திக் கடவுளைச் சோதிக்கவும் கூடாது' என்றும் கூறுகிறார் பேதுரு. புறவினத்தார்களையும் யூதர்களையும் பிரித்துப் பார்ப்பதை விடுத்து, இவர்கள் இருவரையும் இணைக்கிற இறைநம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ள அழைக்கிறார் பேதுரு. தொடர்கின்ற யாக்கோபும், 'பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுத்தலாகாது!' என்கிறார். 

இவ்வாறாக, திருத்தூதர்கள் பரந்த பார்வை கொண்டிருப்பதுடன் மற்றவர்களுக்குத் தொல்லையும் சுமையும் தரக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள்.

இயேசுவின் அன்பில் அவர்கள் ஏற்கெனவே இணைந்திருந்ததால், தாங்கள் அன்பில் பெற்ற மகிழ்ச்சியின் பின்புலத்திலேயே அனைத்தையும் காண்கிறார்கள்.

இயேசுவின் அன்பில் நாம் இணைந்திருப்பதன் அளவுகோல் மகிழ்ச்சி. மகிழ்ச்சியால் நிறைவுபெறும் ஒருவர் அதைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறார்.


Monday, May 8, 2023

காயம்பட்ட மருத்துவர்

இன்றைய இறைமொழி

செவ்வாய், 9 புதன் 2023

உயிர்ப்புக்காலம் ஐந்தாம் வாரம்

திப 14:19-28. யோவா 14:27-31.

காயம்பட்ட மருத்துவர்

ஆன்மிகவியலில், 'காயம்பட்ட மருத்துவர்' ('wounded healer') என்ற ஒரு சொல்லாடல் உண்டு. இச்சொல்லாடலை அறிமுகம் செய்தவர் ஹென்றி நுமென் என்ற அருள்பணியாளர். அதாவது, ஒவ்வோர் அருள்பணியாளரும் தானே காயம்பட்ட ஒரு நிலையில் இருந்தாலும், மற்றவர்களுக்கு நலம் தர அவர் மிகவே முயற்சி செய்கின்றார். அல்லது அடுத்தவர்களுக்கு நலம் தரும் அவருடைய உள்ளத்திலும் காயங்களும் இருக்கின்றன. இதில் என்ன அழகு என்றால், அவர் தானே காயம் பட்டவராக இருப்பதால் மற்றவர்களுடைய காயங்களை அவரால் எளிதில் கண்டுகொண்டு நலமாக்க முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில், நற்செய்தி அறிவித்துக்கொண்டிருந்த பவுல்மேல் வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது. கல்லால் அடிபட்டு ஊருக்கு வெளியே தூக்கி வீசப்படுகின்றார் அவர். அவர் இறந்துவிட்டதாக நினைத்து மக்கள் கலைந்து செல்ல, அவரோ பர்னபாவுடன் இணைந்து தெருபைக்குச் செல்கின்றார். 

தெருபையில் அவர்கள் செய்யும் செயல் நமக்கு வியப்பாக இருக்கிறது: 'நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்' என்று கூறி அங்கிருந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றனர். இவர்களே வேதனையுடன் புறப்பட்டுச் செல்கின்றனர். ஆனால், அங்கிருந்த மக்களின் வேதனை இவர்களுடைய வேதனையை விட அதிகமாக இருந்தது. ஆகவே தங்கள் வேதனையை ஒதுக்கி வைத்துவிட்டு அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லத் தொடங்குகின்றனர். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்' எனத் தன் சீடர்களிடம் சொல்கிறார் இயேசு. ஆனால், வாழ்க்கை முழுவதும் இயேசு கலக்கத்தை மட்டுமே அனுபவித்துள்ளார். பிறக்கும்போதே சத்திரத்தில் இடம் இல்லை. பிறந்தபின் பெத்லகேமில் இடம் இல்லை. வளர்ந்தபின் நாசரேத்து மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவராகவே தம்மோடு இருக்குமாறு விரும்பி அழைத்த அவருடைய திருத்தூதர்கள் அவரைப் புரிந்துகொள்ளவில்லை, அல்லது தவறாகப் புரிந்துகொண்டனர், அல்லது மறுதலித்தனர், அல்லது காட்டிக் கொடுத்தனர். இப்படியாக, தன் வாழ்நாள் முழுவதும் கலக்கத்தையே அனுபவித்த ஒருவர் எப்படி அமைதியை அருள முடியும்?

அவர் கலக்கத்தை அனுபவித்தவர் என்பதால், அவர் அமைதியையும் அனுபவித்தவராக இருக்கிறார். ஆகையால்தான் அமைதியை அவர் வாக்களிக்கின்றார். தானே வலுவற்ற நிலையை அனுபவித்திருந்ததால் வலுவற்ற நிலையின் வலியை அறிந்தவராக இருக்கின்றார்.

நாம் அனைவரும் காயம்பட்ட மருத்துவர்கள்தாம். நம் காயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்தவரின் காயம் இன்னும் பெரிதாக இருப்பதால் குணமாக்குவது இன்னும் அதிகக் கட்டாயமாக இருக்கிறது.



Sunday, May 7, 2023

துணையாளர்

இன்றைய இறைமொழி

திங்கள், 8 மே 2023

உயிர்ப்புக்காலம் ஐந்தாம் வாரம்

திப 14:5-18. யோவா 14:21-26.

துணையாளர்

இயேசுவின் இறுதி இராவுணவுப் பேருரை தொடர்கிறது. பேருரை சில இடங்களில் புரிந்துகொள்வதற்குக் கடினமாக இருக்கிறது. 'நான் போய் உங்களுக்கு உறைவிடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்' என்று சொல்கிற இயேசு, சற்று நேரத்தில், 'நானும் தந்தையும் வந்து உங்களிடம் குடிகொள்வோம்' என்கிறார். இயேசு நம்மைவிட்டுப் போகப் போகிறாரா? அல்லது நம்மிடம் வரப் போகிறாரா? என்று சீடர்களுடன் சேர்ந்து நாமும் சற்றே குழப்பம் அடைகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் யூதா கேள்வி ஒன்றைக் கேட்க, அதற்குச் சற்றே தொடர்பில்லாமல் இயேசு பதிலுரைக்கிறார். 

நற்செய்தி வாசகத்தின் இறுதிப் பகுதியை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'என் பெயரால் தந்தை அனுப்பப் போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார். நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்' என்கிறார் இயேசு.

உயிர்ப்புக் காலத்தின் பாதியை நாம் கடந்த நிலையில் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு நம்மையே தயாரிக்கத் தொடங்குகிறது இறைவார்த்தை வழிபாடு.

இயேசுவின் சொற்களில் இரண்டு விடயங்கள் தெளிவாக இருக்கின்றன: ஒன்று, தூய ஆவியாருடைய பெயர் 'துணையாளர்' என்பதாகும். இரண்டு, தூய ஆவியாரின் பணிகள் நமக்குக் கற்றுத் தருவதும், நினைவூட்டுவதும் ஆகும். இவ்வாறாக, தூய ஆவியார் நம் அறிவுக்கு வெளிச்சம் தருகிறவராக முன்மொழியப்படுகிறார்.

'துணையாளர்' என்னும் சொல் நமக்கு ஆறுதலாக இருக்கிறது. இயேசு இன்னும் சற்று நேரத்தில் தம் சீடர்களை விட்டுப் பிரியப் போகிறார். இந்த நேரத்தில் தூய ஆவியார் பற்றிய அறிவிப்பு அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

தந்தை-இயேசு-தூய ஆவியார் என்னும் மூவொரு கடவுள் மறைபொருளும் இங்கே மிளிர்கிறது. நம் வாழ்வின் அன்றாட எதார்த்தங்கள் புரியாத நிலையில் இருக்கும்போது, குறிப்பாக, இயேசுவின் சொற்களை புரிய இயலாத நிலையில் இருக்கின்ற வேளையில் தூய ஆவியாரின் துணையை வேண்டுவோம். அவர்தாமே நமக்குக் கற்றுத் தருவார்.

இன்றைய முதல் வாசகத்தில் லிஸ்திராவில் கால் ஊனமுற்றவருக்கு நலம் தருகிற நிகழ்வில், பவுல் மற்றும் பர்னபாவைக் காண்கிற மக்கள் கூட்டம், 'தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன' என்று கூறுகின்றனர். அவர்களுக்குக் கடவுள் பற்றிய மறையுண்மையை அறிவிக்கிறார் பவுல். அந்த ஊராரின் எளிய நம்பிக்கை நமக்கு ஆச்சர்யம் தருகிறது. 


Saturday, May 6, 2023

பரிமாறுவதா பந்தியா? இறைவார்த்தையா?

இன்றைய இறைமொழி

ஞாயிறு, 7 மே 2023

உயிர்ப்புக் காலம் ஐந்தாம் ஞாயிறு

திப 6:1-7. 1 பேது 2:4-9. யோவா 14:1-12.

பரிமாறுவதா பந்தியா? இறைவார்த்தையா?

தொடக்கக் கிறிஸ்தவர்கள் வாழ்வு பற்றி வாசிக்கும்போதெல்லாம், 'அவர்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். தேவையில் இருந்தவர்கள் யாருமில்லை. எல்லாம் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது' என ரொம்ப ரொமான்டிக்காகவே வாசிக்கின்றோம். ஆனால், தொடக்கக் கிறிஸ்தவர்களின் தேனிலவு முடிந்தது என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது.

அமைதியான குளமாக இருந்த அவர்களுடைய வாழ்வின் நடுவில் கூழாங்கல் ஒன்று வந்து விழுகிறது. யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை. முதல் முதலாக குழுமத்தில் குழப்பம் வருகிறது. சீடர்கள் எண்ணிக்கை பெருகியதால் பிரச்சினையும் பெரிதாக ஆரம்பிக்கிறது:

'கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.'

இதுதான் பிரச்சினை. இந்தப் பிரச்சினையில் மூன்று கூறுகள் இருக்கின்றன:

(அ) உணவு பரிமாறப்படுவதில் பாரபட்சம். நம் இல்லங்களில் நடக்கும் திருமணம் மற்றும் நல்ல நிகழ்வுகளில் பந்தியில்தான் நிறையப் பிரச்சினைகள் வருவதுண்டு. குடும்பத்திலும் உணவு எல்லாருக்கும் கிடைத்துவிட்டால், நல்ல உணவை மனைவி சமைத்துவிட்டால் அங்கே பிரச்சினை இல்லை. அது போலவே, அருள்பணியாளர் மற்றும் துறவற இல்லங்களில் வருகின்ற முதல் பிரச்சினை சாப்பாட்டில்தான் இருக்கும்.

(ஆ) மொழிப் பிரச்சினை. இந்த நிகழ்வு எருசலேமில் நடக்கிறது. எருசலேமில் இருந்தவர்கள் பெரும்பாலும் யூதர்கள்தாம். ஆக, பந்தியில் உணவுண்டவர்கள் அனைவரும் யூதர்கள்தாம். அப்புறம் எப்படி மொழிப் பிரச்சினை? சில யூதர்கள் கிரேக்க மொழி பேசும் நாடுகளில் குடியேறியதால் எபிரேயத்தை மறந்து கிரேக்கம் பேசினர். எபிரேய மொழி பேசுவோர் தங்களையே மேன்மையானவர்கள் என நினைத்து கிரேக்க மொழி பேசுவோரைத் தாழ்வாக நடத்துகின்றனர்.

(இ) முணுமுணுத்தல். ஏன் முணுமுணுத்தல்? பிரச்சினையை சொல்வதற்கு எங்கெல்லாம் வடிகால் இல்லையோ அங்கெல்லாம் மக்கள் முணுமுணுப்பார்கள். எடுத்துக்காட்டாக, சாப்பாடு சரியாக வேகவில்லை என்றால் யாரிடம் சொல்ல வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்தால் நாம் அவரிடம் சென்று முறையிடலாம். யாரிடம் போவது என்று தெரியாத பட்சத்தில் நாம் முணுமுணுக்கத்தான் வேண்டும். 

இந்தப் பிரச்சினையைப் பற்றிக் கேள்விப்படுகின்ற திருத்தூதர்கள் உடனடியாக அதற்குத் தீர்வுகாண முயல்கின்றார்கள். இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியது. 

முதலில், திருத்தூதர்கள் தங்களையே ஆய்வு செய்து பார்க்கின்றனர். எங்கே தவறு நடந்தது? என்று யோசிக்கின்றனர். அப்போதுதான் அவர்கள் தங்கள் முதன்மைகளில் கோட்டை விட்டதை எண்ணிப் பார்க்கின்றனர்:

'நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டு பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறையல்ல!'

ஞானமிகு வார்த்தைகள் இவை.

நான் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் வேறொன்றைச் செய்து கொண்டிருக்கின்றேனே என எண்ணிப் பார்க்கிறார்கள்.

இன்று நாம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்: என்னுடைய முதன்மைகளை நான் சரியாக வரையறுத்துள்ளேனா? என் முதன்மைகளைச் சரி செய்ய நான் என்ன செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, திருத்தூதர்கள் தங்கள் பணிகளைப் பகிர்ந்து கொள்ள முன்வருகின்றனர். இது அவர்களின் பரந்த உள்ளத்திற்கான சான்று. எல்லாவற்றையும் நானே செய்வேன் என்று நினைக்காமல், மிகவும் எதார்த்தமாக, அடுத்தவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கின்றனர். இது ஒரு சிறந்த தலைமைத்துவப் பண்பு:

'உங்களிடமிருந்து நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவியின் வல்லமையும் ஞானமும் கொண்டவர்களுமான எழுவரைத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் நாம் இந்தப் பணியில் நியமிப்போம்.'

ஆக, பணியாளர்கள் மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு இரண்டு தகுதிகள் இருக்க வேண்டும்: (அ) நற்சான்று பெற்றவர்கள் - மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்க வேண்டும், நாலு பேரைத் தெரிந்திருக்க வேண்டும், நாலு பேரு வாழ்க்கையில ஏதாவது நல்லது செய்திருக்க வேண்டும். (ஆ) ஆவியின் வல்லமையும் ஞானமும் பெற்றிருக்க வேண்டும் - கடவுளோடு உள்ள உறவிலும் நன்றாக இருக்க வேண்டும்.

இன்றைய அருள்பணியாளர்களும் இந்த இரண்டு நிலைத் தகுதிகளைப் பெற்றிருத்தல் அவசியம். மக்களின் உறவைப் பிடித்துக்கொண்டு இறை உறவைக் கைவிடுவதும், இறைஉறவைப் பிடித்துக் கொண்டு மக்கள் உறவைக் கைவிடுதலும் ஆபத்தே.

மூன்றாவதாக, திருத்தூதர்கள் தங்களுடைய பணியை மறுவரையறை செய்கின்றனர்:

'நாங்களோ இறைவேண்டலிலும் இறைவார்த்தைப் பணியிலும் நிலைத்திருப்போம்'

இங்கே, 'நிலைத்திருப்போம்' என்ற வார்த்தை முக்கியமானது. அதாவது, விடாமுயற்சியுடன் ஒன்றைப் பற்றிக்கொள்ளுதல். இன்னைக்கு ஒன்னு, நாளைக்கு இன்னொன்னு என்று தங்களுடைய பணியின் போக்கை மாற்றிக் கொண்டே இராமல், 'இதுதான்! இது ஒன்றுதான்!' என்று நிலைத்திருத்தல். 

நான்காவதாக, தங்கள் கைகளை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்மேல் வைத்து இறைவனிடம் வேண்டுகின்றனர்.

அவ்வளவுதான். பிரச்சினை தீர்ந்தாயிற்று.

எந்த ஒரு பேப்பர் ஒர்க்கும் இல்லாமல், எந்த ஒரு மீட்டிங்கும் இல்லாமல், எந்த ஒரு அவைக்குறிப்பும் இல்லாமல் இனிதே நடந்தேறுகிறது கூட்டம். தீர்வு கண்டாயிற்று.

இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

பிரச்சினைகள் தயிர் போல. உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும். நாளை, நாளை என்று தள்ளிப்போட்டால் புளித்துவிடும். அப்புறம் ஒன்றும் செய்ய முடியாது. இதை நன்றாக அறிந்திருக்கிறார்கள் திருத்தூதர்கள்.

இந்த நிகழ்வு திருத்தூதர்கள் வாழ்விலும், தொடக்கத் திருஅவை வாழ்விலும் ஒரு சறுக்கலாக அல்லது, ஒரு சிறிய இறப்பாக இருந்திருக்க வேண்டும். இருந்தாலும் புத்துயிர் பெற்று எழுகிறார்கள். ஏனெனில் அவர்கள், இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 பேது 2:4-9), அவர்கள், 'தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தார், அவரது உரிமைச் சொத்தான மக்கள்.' 

நம் வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் நம்முடைய தற்காலிக இறப்புக்களே. இவற்றை நாம் எப்படி எதிர்கொள்வது?

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே' என அறிக்கையிடுகிறார் இயேசு. இம்மூன்றும் நம் முதன்மைகளாக இருத்தல் நலம். இந்த மூன்றும் இயேசுவையே மையமாகக் கொண்டுள்ளன.

'நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?' என்னும் தோமாவின் கேள்விக்கு, 'நானே வழியும் உண்மையும் வாழ்வும்' என மொழிகிறார் இயேசு. இது யோவான் நற்செய்தியில் இயேசு பயன்படுத்தும் ஆறாவது 'நானே' வாக்கியம். இந்த வாக்கியத்தில் மூன்று கூறுகள் உள்ளன: 'வழி' (கிரேக்கத்தில், 'ஹோடோஸ்'), 'உண்மை' (கிரேக்கத்தில், 'அலேத்தேயா'), 'வாழ்வு' (கிரேக்கத்தில், 'ஸ்ஷோயே'). 

வழி என்றால் பாதை மட்டும் அல்ல, மாறாக, வாய்ப்பும் தீர்வும்கூட. நம் நடத்தலை நெறிப்படுத்துகிறார் இயேசு.

உண்மை என்றால் இருத்தல் மற்றும் அறிதல். நம் இருத்தலையும் அறிதலையும் நெறிப்படுத்துகிறார் இயேசு.

வாழ்வு என்றால் இயங்குதல் மற்றும் வளர்தல். நம் இயக்கத்தையும் வளர்ச்சியையும் நெறிப்படுத்துகிறார் இயேசு.

'வழி' என்பதை 'இலக்குக்கான பாதை' என்றும், 'உண்மை' என்பதை 'இலக்கு' என்றும், 'வாழ்வு' என்பது 'இலக்கை அடைவதன் பலன்' என்றும் புரிந்துகொள்ளலாம்.

நாம் எந்த வாழ்வியல் நிலையில் இருந்தாலும் நம் வாழ்வின் இலக்கு என்னவோ 'உண்மை' என்பதுதான். அந்த உண்மையை நாம் இயேசு வழியாகவே அடைகிறோம். நம் வாழ்க்கையில் இயக்கமும் வளர்ச்சியும் இருக்கும்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

தொடக்கத் திருஅவை தன்னில் எழுந்த விருந்துப் பிரச்சினையால் இறந்து மீண்டும் உயிர் பெற்றது.

பிரச்சினைகள் தீர்ந்ததால் ஆழமான அமைதி வந்தது. 

இதையே திருப்பாடல் ஆசிரியர்,

'ஆண்டவரின் பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது' (காண். திபா 33:5) எனப் பாடுகிறார்.


Friday, May 5, 2023

அதுவே போதும்!

இன்றைய இறைமொழி

சனி, 6 மே 2023

உயிர்ப்புக்காலம் நான்காம் வாரம்

திப 13:44-52. யோவா 14:7-14.

அதுவே போதும்!

இயேசுவின் இறுதி இராவுணப் பேருரை இன்றைய நற்செய்தியிலும் தொடர்கிறது. 'நானே வழியும் உண்மையும் வாழ்வும்' என அறிக்கையிடுகிறார் இயேசு. தொடர்ந்து தம் தந்தையைப் பற்றிய அவர்களோடு உரையாடுகிறார். உரையாடலின் நடுவே பிலிப்பு இயேசுவிடம், 'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும்' என்கிறார். 'இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்' எனப் பதிலிறுக்கிறார் இயேசு.

பிலிப்பின் சொற்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'அதுவே போதும்!'

இயேசு முன்மொழிய வருகின்ற நீண்ட மறையுண்மையைச் சுருக்கி அறிந்துகொள்ள விரும்புகிறார் பிலிப்பு. பிலிப்புவின் சொற்கள் அவருடைய அவசரத்தையும், பொறுமையின்மையையும், எல்லாவற்றையும் எளிமைப்படுத்திவிட வேண்டும் என்னும் ஆர்வத்தையும் காட்டுகிறது.

இதை ஆன்மிக அவசரம் என்றும் சொல்லலாம். பிலிப்புவின் நோக்கம் ஆன்மிகம் சார்ந்ததாக, உயர்ந்ததாக, மேன்மையானதாக இருக்கிறது. அவர் இறையனுபவம் பெற விரும்புகிறார். 'தந்தையைக் காட்டும்' என இயேசுவிடம் கேட்கிறார். 

பிலிப்பு செய்த தவறு என்ன?

இயேசுவுக்கும் தந்தைக்கும் உள்ள நெருக்கத்தைக் காணாததும், இயேசு வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் செல்வதில்லை என்பதை அறியாததும்தான்.

இயேசுவின் சீடர்கள் அவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இயலாத நிலையிலேயே இருந்தார்கள். 

பிலிப்புவின் இச்சொற்களை நாமும் நம் ஆன்மிகத் தளத்தில் பயன்படுத்துகிறோம். நம் இறைவேண்டலும் இறையனுபவமும் அவசரம் கலந்ததாக இருக்கிறது. இறையனுபவம் என்பது நீடித்த நிலையான அனுபவம். பேருந்தில் ஏறி இன்னொரு பக்கம் இறங்கிவிடும் குறுகிய அனுபவம் அல்ல.

இன்றைய முதல் வாசகத்தில் இரு வகையான குழுவினரைப் பார்க்கிறோம்: யூதர்கள் மற்றும் புறவினத்தார்கள். யூதர்கள் குறுகிய மனம் கொண்டதாலும், மீட்பு தங்களுக்கு மட்டுமே என்று இறுமாந்து இருந்ததாலும் திருத்தூதர்களின் செய்தியை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. கடவுளின் வார்த்தையையும் அதை அறிவிப்பவர்களையும் நிராகரிக்கிறார்கள். ஆனால், புறவினத்தார்கள் திறந்த மனத்துடன் அவர்களை வரவேற்கிறார்கள். திருத்தூதர்களும் மற்றவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறுகிறார்கள்.

சிந்திப்போம்.

இறைவனுக்கும் நமக்குமான உறவில், இறையனுபவத்தில், அல்லது வாழ்வியல் நிலை நமக்குப் புரிபடாமல் இருக்கும்போது நம் மனநிலை என்ன? பொறுமையோடு இருக்கிறோமா? அல்லது 'எனக்கு இதைச் செய்யும்! அதுவே போதும்!' என்று அவசரப்படுகிறோமா?

ஆழ்ந்த அமைதியும் நீடித்த பொறுமையும் முழுமையான சரணாகதியுமே இறையனுபவத்தின் தொடக்கப் புள்ளிகள்.


Thursday, May 4, 2023

வழி-உண்மை-வாழ்வு

இன்றைய இறைமொழி

வெள்ளி, 5 மே 2023

உயிர்ப்புக்காலம் நான்காம் வாரம்

திப 13:26-33. யோவா 14:1-6.

வழி-உண்மை-வாழ்வு

இயேசுவின் இறுதி இராவுணவுப் பேருரையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த வாசகம் 'இல்லம்' அல்லது 'வாழ்விடம்' என்னும் பொருளை மையமாக வைத்துச் சுழல்கிறது.

(அ) இல்லம் அல்லது வாழ்விடம் அற்ற நிலை

தம் சீடர்களிடம், 'உள்ளம் கலங்க வேண்டாம்' என்றும், 'கடவுளிடமும் என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்' என்றும் அறிவுறுத்துகிறார் இயேசு. இயேசு தங்களைவிட்டு நீங்கிவிடுவார் என்னும் செய்தி சீடர்களின் உள்ளத்தில் கலக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. அதாவது, தாங்கள் ஆயன் இல்லாத ஆடுகள் போல, திசை தெரியாதவர்களாக ஆகிவிடுவோம் என்னும் எண்ணம் அவர்களுக்குப் பயம் தருகிறது. இத்தகைய கலக்கம் எழுந்தாலும் சீடர்களின் உள்ளம் சலனமற்றதாக இருக்க வேண்டும் என்பது இயேசுவின் விருப்பமாக இருக்கிறது. மேலும், துன்பத்தைக் கடவுள் மாற்றுவார் என்ற நம்பிக்கை அல்ல, மாறாக, துன்பத்தில் கடவுள் உடனிருக்கிறார் என்னும் நம்பிக்கையை அவர்கள் பெற்றுக்கொள்ளுமாறு கூறுகிறார்.

(ஆ) உறைவிடம் ஏற்பாடு செய்கிறேன்

தம் சீடர்களுக்கு உறைவிடம் ஏற்பாடு செய்யச் செல்வதாகவும், திரும்பி வந்து அவர்களை அழைத்துச் செல்வதாகவும் உறுதி கூறுகிறார் இயேசு. உறைவிடம் ஏற்பாடு செய்தலில் அவருடைய அன்பு, தியாகம், தற்கையளிப்பு, துன்பம் ஏற்றல், தாராள உள்ளம் ஆகிய அனைத்தும் புலப்படுகிறது.

(இ) உறைவிடத்தை அடையும் வழி

'நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?' என்னும் தோமாவின் கேள்விக்கு, 'நானே வழியும் உண்மையும் வாழ்வும்' என மொழிகிறார் இயேசு. இது யோவான் நற்செய்தியில் இயேசு பயன்படுத்தும் ஆறாவது 'நானே' வாக்கியம். இந்த வாக்கியத்தில் மூன்று கூறுகள் உள்ளன: 'வழி' (கிரேக்கத்தில், 'ஹோடோஸ்'), 'உண்மை' (கிரேக்கத்தில், 'அலேத்தேயா'), 'வாழ்வு' (கிரேக்கத்தில், 'ஸ்ஷோயே'). 

வழி என்றால் பாதை மட்டும் அல்ல, மாறாக, வாய்ப்பும் தீர்வும்கூட. நம் நடத்தலை நெறிப்படுத்துகிறார் இயேசு.

உண்மை என்றால் இருத்தல் மற்றும் அறிதல். நம் இருத்தலையும் அறிதலையும் நெறிப்படுத்துகிறார் இயேசு.

வாழ்வு என்றால் இயங்குதல் மற்றும் வளர்தல். நம் இயக்கத்தையும் வளர்ச்சியையும் நெறிப்படுத்துகிறார் இயேசு.

'வழி' என்பதை 'இலக்குக்கான பாதை' என்றும், 'உண்மை' என்பதை 'இலக்கு' என்றும், 'வாழ்வு' என்பது 'இலக்கை அடைவதன் பலன்' என்றும் புரிந்துகொள்ளலாம்.

நாம் எந்த வாழ்வியல் நிலையில் இருந்தாலும் நம் வாழ்வின் இலக்கு என்னவோ 'உண்மை' என்பதுதான். அந்த உண்மையை நாம் இயேசு வழியாகவே அடைகிறோம். நம் வாழ்க்கையில் இயக்கமும் வளர்ச்சியும் இருக்கும்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 

சிந்திப்போம்.

இன்று நான் நிர்கதியராக அல்லது திசையற்று அல்லது இல்லிடமற்று உணர்கிறேனா? நான் செய்யும் பணியும், என் குடும்பமும் எனக்கு இல்லிடம் அல்லது உறைவிட உணர்வைத் தருகின்றனவா? அல்லது நான் அந்நியராக உணர்கிறேனா?

என் உறைவிடம் இறைவனோடு என்றால் எனக்கு எத்துணை மகிழ்ச்சி. அந்த உறைவிடத்தை, இல்லிட அனுபவத்தைப் பெற இயேசுவை வழியாகத் தெரிந்துகொள்தல் நலம்.

இன்றைய முதல் வாசகத்தில், இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்று பகர்கிறார் பவுல். இயேசு கல்லறையில் இல்லை எனில், நாம் மட்டும் ஏன் கல்லறைகளை உறைவிடமாக்கிக்கொள்ள வேண்டும்?


Wednesday, May 3, 2023

பெரியவர் அல்ல!

இன்றைய இறைமொழி

வியாழன், 4 மே 2023

உயிர்ப்புக் காலம் நான்காம் வாரம்

திப 13:13-25. யோவா 13:16-20.

பெரியவர் அல்ல!

இறுதி இராவுணவில் சீடர்களின் பாதங்களைக் கழுவியபின் அவர்களோடு உரையாடுகிற இயேசு இரு அறிவுரைகளை அவர்களுக்கு வழங்குகிறார்: (அ) ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். (ஆ) பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல. தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல ... இவற்றை அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள். 

இவ்விரண்டு அறிவுரைகளும் ஒன்றுக்குப் பின் இன்னொன்று என வந்தாலும், முதல் அறிவுரை அதற்கு முந்தைய பகுதியோடும், இரண்டாவது அறிவுரை அதற்குப் பிந்தையதோடும் பொருந்துவதாக இருக்கிறது. இயேசு சீடர்களின் காலடிகளைக் கழுவியதுபோல அவர்கள் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவ வேண்டும். சீடர்கள், குறிப்பாக இயேசுவைக் காட்டிக்கொடுப்பவர், அவர்களுடைய வரையறை அறிந்து அதற்கேற்றாற்போலச் செயல்பட வேண்டும்.

'பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல ... தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல' - இவ்வாக்கியத்தை இயேசுவின் சொற்கள் என்றோ, அல்லது இயேசுவின் சமகாலத்தில் நிலவிய பழமொழி என்றோ, அல்லது இஸ்ரயேலின் ஞானக்கூற்று என்றோ எடுத்துக்கொள்ளலாம். ஏறக்குறைய இதே பொருள்கொண்ட வாக்கியத்தை மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் பதிவுசெய்கிறார்கள் (காண். மத் 10:24, லூக் 6:40). இவ்வாக்கியத்தின் பொருள் என்ன?

(அ) பணியாளர் தலைவரின் உரிமைப்பொருள். எனவே, அவர் தன்விருப்பம்போலச் செயல்பட இயலாது, தலைவரின் விருப்பப்படி மட்டுமே செயல்பட வேண்டும். தூது அனுப்பப்பட்டவரும் அவ்வாறே!

(ஆ) பணியாளர் தான் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்பதை அறிந்தவராக இருக்க வேண்டும். அதாவது, இதுதான் தன் எல்கை அல்லது வரையறை என்பதை அறிந்தவராகவும் அதை மீறாதவராகவும் இருத்தல் வேண்டும்.

(இ) பணியாளர் தன் உரிமையாளரின் நீட்சியாகச் செயல்பட வேண்டுமே அன்றி, தன்னிச்சையாகச் செயல்பட இயலாது.

இந்த இடத்தில் 'தன்னைக் காட்டிக்கொடுப்பவரைப் பற்றி' இயேசு பேசுகிறார். இவ்வாறாக, தன்னைக் காட்டிக்கொடுப்பவர் அவருடைய வரையறையை மீறுகிறார் என எச்சரிக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் மிக அழகானதொரு நிகழ்வு நடக்கிறது. பவுல் தன் முதல் தூதுரைப் பயணத்தைத் தொடங்குகிறார். பவுலும், பர்னபாவும், அவரோடு இருந்தவர்களும் பெருகை நகர் வந்து, அங்கிருந்து பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியா வருகிறார்கள். ஓய்வுநாளன்று தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு 'அமர்ந்திருக்கிறார்கள்.'

இங்கே ஒரு விடயம்.

'நாங்கதான் நற்செய்தி அறிவிப்பாளர்கள். எங்களுக்கு எல்லாம் தெரியும். நாங்க கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட திருத்தூதர்கள்' என்று சொல்லிக்கொண்டு எல்லாருக்கும் முன்னால் அவர்கள் நிற்கவில்லை. மாறாக, கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருக்கிறார்கள்.

'கூட்டத்தோடு கூட்டமாக அமர்வதற்கு' நிறைய தாழ்ச்சியும் எளிமையும் அவசியம்.

தொடர்ந்து, அமர்ந்திருந்த திருத்தூதர்களிடம் ஆளனுப்புகின்ற தொழுகைக்கூடத் தலைவன், 'சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்!' எனக் கேட்கிறார்.

இன்று யாராவது என்னிடம் ஆளனுப்பி, 'ஏதாவது அறிவுரை கூற விரும்பினால் கூறலாம்' என்று சொன்னால், நான் என்ன சொல்வேன்? நான் தயாராக இருக்கிறேனா? வாழ்வில் நாம் கற்கும் ஒவ்வொரு பாடத்தையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம். மேலும், பிறர் கேட்காமல் நாம் எந்த அறிவுரையும் கூறக் கூடாது. அது எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும்!

இறுதியாக, பவுல் உடனடியாக தனக்கு வந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார். எப்போதும் தயார்நிலையில் இருக்கிற ஒருவரே வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும், மிக அழகான உரையையும் ஆற்றுகிறார் பவுல். பவுலின் தயார்நிலையும் அறிவும் நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எபிரேயம் பேசுகின்ற ஒருவர் கிரேக்க மொழியில், புதிய மக்கள் நடுவில், புதிய கருத்து ஒன்றைப் பேசுவதற்கு நிறைய துணிச்சல் தேவைதானே!

நம் வரையறையை அறிந்திருப்பதும், அழைக்கப்படும்போது தேவையானதைச் சொல்வதும் செய்வதும் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்.


Tuesday, May 2, 2023

தந்தையை எங்களுக்குக் காட்டும்!

இன்றைய இறைமொழி

புதன், 3 மே 2023

உயிர்ப்புக் காலம் நான்காம் வாரம்

புனித பிலிப்பு மற்றும் சிறிய யாக்கோபு

1 கொரி 15:1-8. யோவா 14:6-14.

தந்தையை எங்களுக்குக் காட்டும்!

இன்று நம் தாய்த் திருஅவை புனித பிலிப்பு மற்றும் புனித சிறிய யாக்கோபு என்னும் இரு திருத்தூதர்களின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறது.

புனித பிலிப்பு கிரேக்க, சிரியா, மற்றும் ஃபிர்கியா நாடுகளில் மறைபரப்பு பணி செய்ததாக பாரம்பரியம் குறிப்பிடுகின்றது. யோவான் நற்செய்தியில் பிலிப்பு அழைக்கப்படும் நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருடைய சொந்த ஊர் பெத்சாய்தா. அந்திரேயா மற்றும் பேதுருவும் இதே ஊரைச் சார்ந்தவர்கள் என யோவான் தொடர்பை ஏற்படுத்துகின்றார். திருமுழுக்கு யோவான் இயேசுவைச் சுட்டிக்காட்டி, 'இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி!' என்று சொல்லும் நிகழ்வில் பிலிப்பு திருமுழுக்கு யோவானின் சீடராக இருக்கின்றார். நத்தனியேல் என அழைக்கப்படும் பார்த்தலோமேயுவை இயேசுவிடம் அழைத்து வந்தவர் பிலிப்பு. ஐயாயிரம் பேருக்கு எப்படி உணவு அளிப்பது என்ற கேள்வியை இயேசுவிடம் கேட்பவரும், நம்மிடம் இரண்டு அப்பங்கள் மட்டுமே உள்ளன என்று சொன்னவரும் பிலிப்பே. மேலும், இயேசுவைக் காண விரும்பிய கிரேக்கர்களை அந்திரேயாவிடம் அழைத்துச் சென்றவர் இவரே (காண். யோவா 12:21). மேலும், இறுதி இராவுணவில், 'தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும்!' என்று இயேசுவிடம் சொன்னவர் பிலிப்பு. ஆக, யோவான் நற்செய்தியில் பிலிப்பு ஒரு முதன்மையான கதைமாந்தராக விளங்குகின்றார். 

'பிலிப்புவின் நற்செய்தி' என்ற ஒரு நூல் தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், 'பிலிப்புவுக்கு பேதுரு எழுதிய கடிதம்' என்னும் ஏற்றுக்கொள்ளப்படாத நூலில், திருத்தூதர்கள் அனைவருடனும் வந்து இணைந்துகொள்ளுமாறு ஒலிவ மலைக்கு வாரும் என்று பேதுரு பிலிப்புவுக்கு எழுதுகிறார். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர் பிலிப்பு தானாக மறைபரப்புப் பணியைத் தொடங்கியிருக்கிறார். இந்த நேரத்தில் பேதுரு அவரைத் திரும்ப அழைப்பது போல இருக்கிறது இக்கடிதம். 'பிலிப்புவின் பணிகள்' என்னும் இன்னொரு நூலில் பிலிப்பு ஆற்றிய பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிலிப்பு சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என ஒரு மரபும், அவர் தலை வெட்டுண்டு இறந்தார் என இன்னொரு மரபும் சொல்கின்றது.

நாம் இலத்தீன் திருஅவையில் பயன்படுத்தும் சிலுவையை வடிவமைத்தவர் பிலிப்பு. பிலிப்பு கையில் ஏந்தியிருக்கும் சிலுவையில், இரண்டு அப்பங்களும் உருவங்களாக சில இடங்களில் வரையப்பட்டுள்ளன.

புனித சின்ன யாக்கோபு என்பவர் பெரிய யாக்கோபிலிருந்து வித்தியாசப்படுத்துவதற்காக அவ்வாறு அழைக்கப்படுகின்றார். பெரிய யாக்கோபுவை செபதேயுவின் மகன் என்றும், சின்ன யாக்கோபுவை அல்பேயுவின் மகன் என்றும் நற்செய்தி நூல்கள் அழைக்கின்றனர். அல்பேயுவின் மகன் யாக்கோபு என்னும் சின்ன யாக்கோபை, 'இயேசுவின் சகோதரர்' என அடையாளப்படுத்துகின்றார் புனித ஜெரோம். இவரை மத்தேயுவின் சகோதரர் என்றும் சிலர் அழைப்பதுண்டு. ஏனெனில், மத்தேயுவின் தந்தை பெயரும் அல்பேயு என வழங்கப்பட்டுள்ளது (காண். மாற் 2:14, 3:18)

இன்று நாம் கொண்டாடும் புனிதர்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) திருத்தூதர்கள் இயேசுவையும் நம்மையும் இணைக்கும் பாலங்கள். இயேசுவை நாம் இவர்கள் கண்கள் வழியாகவே பார்க்கின்றோம், இவர்களின் கரங்கள் வழியாகவே தொடுகின்றோம். நமக்குப் பின் வரும் நம் தலைமுறைகளுக்கு நம் வழியாக பாலங்கள் நீள்கின்றன. நாமும் திருத்தூதர்களின் நம்பிக்கையின் நீட்சிகளே.

(ஆ) உரையாடும் பிலிப்பு. பிலிப்பு எதார்த்தமாகப் பேசுபவராகவும், தன் பேச்சுக்கலையால் பலரின் நல்லெண்ணத்தை வென்றவராகவும் நமக்குத் தெரிகிறார். உரையாடல் என்பது ஒரு கலை. குறைவாகப் பேசி, நிறைவாகக் கேட்பவரே உரையாடலில் சிறக்க முடியும். இன்று நாம் ஒருவர் மற்றவருடன் உரையாட பிலிப்பு நம்மைத் தூண்டுகிறார்.

(இ) திரும்பாத திடம். திருத்தூதர்கள் தங்களின் நம்பிக்கைக்காக, தாங்கள் பெற்ற இயேசு அனுபவத்திற்காக உயிர் துறக்கவும் துணிகின்றனர். ஒருபோதும் தங்களின் முந்தைய வாழ்க்கை நோக்கித் திரும்பவில்லை அவர்கள். நம்பிக்கைப் பயணத்திலும், இறையழைத்தல் பயணத்திலும் திரும்பாத திடம் நல்லது.