Thanks for your visit to my blog. But I have upgraded to Web.
Take a step to reach my Website:
Thanks for your visit to my blog. But I have upgraded to Web.
Take a step to reach my Website:
புதன், 18 அக்டோபர் 2023
பொதுக்காலம் 28-ஆம் வாரத்தின் புதன்
2 திமொத்தேயு 4:9-17. லூக்கா 10:1-9
புனித லூக்கா
'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர்' (காண். 2 திமொ 4:9-17). மேற்காணும் சொற்களால் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தை நிறைவு செய்கிறார் பவுல். இந்த வாக்கியம் பவுலின் தனிமை, பணிச்சுமை, பணித்தேவை ஆகியவற்றை எடுத்துரைப்பதோடு, லூக்காவின் உடனிருப்பையும் மாற்குவின் தேவையையும் நமக்கு உணர்த்துகிறது.
நற்செய்தியாளரும் பவுலின் உடனுழைப்பாளருமான புனித லூக்காவின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கிறோம். இரண்டாம் ஏற்பாட்டில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியை இவர் எழுதியிருக்கிறார். நற்செய்தி மற்றும் திருத்தூதர் பணிகள் என நாம் இரண்டு நூல்களாக இவருடைய எழுத்துகளைக் கொண்டாலும், இவை இரண்டும் ஒரே நூலின் இரு பகுதிகள் என்பது ஆய்வாளர்களின் கருத்து. யூஸேபியுவின் கருத்துப்படி, சிரியாவில் உள்ள அந்தியோக்கியாவின் வளமான கிரேக்கக் குடும்பம் ஒன்றில் லூக்கா பிறந்தார்ளூ மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றினார். இவருடைய எழுத்துகளில் துலங்கும் இலக்கியத்திறமும் மொழிவளமும் கருத்துச் செறிவும் நம் கவனத்தை மிகவே ஈர்க்கின்றன. இயேசுவை உலகின் மீட்பர் என அறிவிக்கிறது இவருடைய நற்செய்தி.
பவுலின் இரண்டாம் தூதுரைப் பயணத்தில் அவரோடு பயணம் செய்த லூக்கா, அவருடைய தனிப்பட்ட மருத்துவராகவும் இருந்திருப்பார். பவுலின் மறைசாட்சிய இறப்பு வரை அவரோடு உடனிருக்கிற லூக்கா, பவுலின் இறப்புக்குப் பின்னர் கிரேக்க நாட்டிலுள்ள பொவோஷியா திரும்புகிறார். இவர் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தார் எனவும், இவர் வரைந்த மரியா-இயேசு ஓவியத்தை புனித தோமா தம்மோடு இந்தியாவுக்கு எடுத்து வந்தார் எனவும் மொழிகிறது மரபு. இந்த ஓவியம் தற்போது சென்னையில் உள்ள பரங்கிமலை ஆலயத்தில் உள்ளது. மருத்துவர்கள், ஓவியர்கள், கைவினைஞர்கள் ஆகியோரின் பாதுகாவலராகத் திகழ்கிறார் லூக்கா.
இறக்கைகள் கொண்ட காளை இவருடைய நற்செய்தியின் அடையாளமாக இருக்கிறது. 'காளை' லூக்கா அழுத்தம் தருகிற இயேசுவின் குருத்துவ, தியாகப் பலி வாழ்வையும், 'இறக்கைகள்' லூக்கா நற்செய்தி எல்லைகள் தாண்டிப் பறந்து சென்று அனைவரையும் தழுவிக்கொள்வதையும் குறிக்கிறது.
இயேசுவின் குழந்தைப் பருவம் முதல் விண்ணேற்றம் வரை உள்ள நிகழ்வுகளை 'பயணம்' என்னும் ஒற்றைக் கயிற்றில் கட்டுகிறார் லூக்கா. இவரே திருத்தூதுப் பயணத்தில் ஈடுபட்டிருந்தார் என்பதாலும், 'வாழ்க்கை என்பது ஒரு பயணம்' என உணர்ந்ததாலும் அவர் இப்படிப் பதிவுசெய்திருக்க வேண்டும். கடவுளின் இரக்கம், ஆவியார், இறைவேண்டல், பெண்கள் சமத்துவம், எளியோர்பால் அக்கறை, வரலாற்று உணர்வு போன்ற கருத்துருகள் லூக்கா நற்செய்தியில் காணப்படுகின்றன. இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளில் மரியா-மையக் கதையாடல்கள், மரியாவின் பாடல், சக்கரியாவின் பாடல், சிமியோன்-அன்னா, நல்ல சமாரியன், காணாமற்போன மகன் எடுத்துக்காட்டுகள், மார்த்தா-மரியா சக்கேயு நிகழ்வுகள், சிலுவையில் இயேசுவுடன் அறையப்பட்ட கள்வர்கள் போன்ற பாடங்கள் லூக்காவுக்கு மட்டுமே உரியவை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 10:1-9) இயேசு வேறு எழுபத்திரண்டு (சில பிரதிகளில் எழுபது) பேரை நியமித்து தமக்கு முன்பாக இருவர் இருவராக எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறார். 'வேறு எழுபத்திரண்டு' என்னும் சொல்லாடல், இவர்களைப் பன்னிருவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. பணித்தேவையின் பொருட்டு இவர்களை ஏற்படுத்துகிறார் இயேசு. இவர்களுடைய அழைத்தல் இயேசுவிடமிருந்து நேரடியாக அல்லது பிறர்வழியாக வருகிறது. இவர்கள் இருவர் இருவராகச் செல்ல வேண்டும். இவ்வாறு இயேசுவின் நற்செய்திக்குச் சான்றுபகர வேண்டும். இவர்கள் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும்.
இயேசுவிடமிருந்து திருத்தூதர் வழியாகப் பெற்ற அழைப்பு, திருத்தூதர்களுடன் பயணம், நற்செய்தி வழியாக சான்று பகர்தல், அனைத்து நாடுகளுக்கும் பயணம் என லூக்கா, 'அந்த வேறு எழுபத்திரண்டு பேரில்'ஒருவராகத் தெரிகிறார். நாம் அனைவரும் அந்த எழுபத்திரண்டு பேரில் ஒருவர் என்பது லூக்கா நமக்கு உணர்த்தும் பாடம். இயேசுவின் பணி இன்னும் முடிவுறவில்லை.
லூக்கா எழுதிய சில கதையாடல்கள் அவர் கொண்டிருந்த மதிப்பீடுகளை நமக்கு எடுத்துச் சொல்கின்றன: கடவுள் மைய வாழ்வு, நன்றியும் புகழ்ச்சியும் கலந்த வாழ்க்கை, இயேசுவை நாடிச் செல்தல், நீதியும் இரக்கமும் கடவுளின் கரங்கள், ஆனால் தேவையானது ஒன்றே என அவர் கொண்டிருந்த முதன்மைகள் நமக்கும் பாடங்களாக அமைகின்றன.
லூக்கா நற்செய்தியின் சில பகுதிகளையாவது வாசித்துத் தியானிக்க முயற்சி செய்வோம் - இன்று! 'இன்று மீட்பர் பிறந்துள்ளார்,' 'இன்று இந்த வீட்டுக்கு மீட்பு உண்டாயிற்று' என கடவுளின் நிகழ்காலத்தில் வாழ முயற்சி செய்வோம்.
லூக்கா மட்டுமே பவுலுடன் இருந்தார்! அவர் மட்டுமே செய்யக் கூடிய பணியை நிறைவாகச் செய்தார்!
நான் மட்டுமே என நான் எதைக் குறிப்பிடுகிறேன்? அதை எப்படி வாழ்கிறேன்?
செவ்வாய், 17 அக்டோபர் 2023
பொதுக்காலம் 28-ஆம் வாரத்தின் செவ்வாய்
உரோமையர் 1:16-25. லூக்கா 11:37-41
அனைத்தும் தூய்மையாய்!
'பிறருக்காகத் தம்மையே வெறுமையாக்கும் உள்ளம் அனைத்தையும் தூய்மையாக்கும்'
தூய்மை என்பதை தயார்நிலை என வரையறுக்கலாம். தூய்மையாக இருக்கிற பாத்திரம் உணவு பரிமாறுவதற்குத் தயாராக இருக்கிறது. தூய்மையாக இருக்கிற ஆடை அணிவதற்குத் தயாராக இருக்கிறது. தூய்மையாக இருக்கிற மனிதர் இறைவனை ஏற்பதற்குத் தயாராக இருக்கிறார்.
தூய்மை என்பது சார்புநிலைச் சொல். எனக்குத் தூய்மை எனத் தெரிவது இன்னொருவருக்கு அழுக்கு எனத் தெரியலாம். தூய்மையிலும் நிறைய படிநிலைகள் உள்ளன. முழுவதும் தூய்மை என்பது எட்டாத நிலையாகவே இருக்கிறது. டெ;டால் லைப்பாய் போன்றவை கூட 99.9 சதவிகத தூய்மையையே வாக்களிக்கின்றன. தூய்மை என்பது எல்லா இடத்துக்கும் நேரத்துக்கும் நபருக்கும் ஏற்புடைய மதிப்பீடும் அல்ல. சாலை ஓரங்களில் தூங்குகிற நரிக்குறவப் பெண்களுக்குத் தூய்மை என்பது ஆபத்து. எப்போதும் அழுக்காக இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.
பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவருந்தும்படி இயேசுவை அழைக்கிறார். பந்தியில் அமர்கிற இயேசு கை கழுவாததைத் கண்டு பரிசேயர் வியப்படைகிறார். அவருடைய வியப்பையே தூய்மை பற்றிய போதனைக்கான தளமாகப் பயன்படுத்துகிறார் இயேசு.
தூய்மையைப் பற்றிய புரிதலை பரிசேயரும் இயேசுவும் வேறு வேறு நிலைகளில் கொண்டிருந்தார்கள்.
'பரிசேயர்' என்னும் சொல் 'பரிஸ்ஸேய்ன்' ('ஒதுக்கிவைக்கப்பட்ட') மற்ற மக்களிடமிருந்து 'தூய்மையாக' ஒதுக்கிவைக்கப்பட்ட என்னும் மூலச் சொல்லிலிருந்து வருகிறது. தங்கள் வாழ்விடம், வழிபாட்டு இடம், ஆடைகள், உடல் ஆகியவற்றில் தூய்மை பேணுவதில் பரிசேயர்கள் மிகுந்த அக்கறை காட்டினார்கள். குறிப்பாக, உணவுக்குப் பயன்படும் காய்கறிகளைப் பயன்படுத்துவதிலும், உணவுப் பாத்திரங்களைக் கையாளுவதிலும் மிகுந்த கவனமாக இருந்தார்கள். சந்தைவெளிகளில் உள்ள புறவினத்தார்கள் கொண்டுவரும் காய்கறிகள் தீட்டானவை எனக் கருதினார்கள். தங்களுக்கு வெளியே உள்ள நபர்களால் தாங்கள் தீட்டாகிவிட்டதாக அவர்கள் எண்ணினார்கள். அவர்களுடைய தூய்மை வெளிப்புறம் சார்ந்ததாகவும் சமய அடிப்படையிலும் இருந்தது.
ஆனால், இயேசுவைப் பொருத்தவரையில் தூய்மை என்பது உள்ளம் சார்ந்தது. தனிநபருக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கிற உறவு சார்ந்தது. வெளிப்புறத்திலிருந்து உள்ளே செல்பவை அல்ல, மாறாக, உள்ளே இருந்து வெளியே வருபவையே ஒருவரைத் தீட்டாக மாற்றுகின்றன.
பரிசேயருக்கு இயேசு இரண்டு பாடங்களைக் கற்பிக்கிறார்: (அ) உள்ளத்தின் தீமை, குறிப்பாக, கொள்ளை உணர்வு நீக்கப்பட வேண்டும். (ஆ) தர்மம் செய்வதன் வழியாக ஒருவர் அனைத்தையும் தூய்மையாக்க முடியும்.
தர்மம் செய்தல் என்பது பரிசேயர்கள் கடைப்பிடித்த மூன்று வழக்கங்களில் (நோன்பிருத்தல், இறைவேண்டல் செய்வது மற்றவையாகும்) ஒன்று. தர்மம் செய்தல் என்பது செயலாக மாறுவதற்கு முன்னர், அது எண்ணமாக உதித்தல் வேண்டும். இது ஓர் உள்ளார்ந்த செயல். தமக்கு உரியதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும், போதும் என்று எண்ணும், ஆசைகளைக் குறைத்துக்கொள்ளும் உள்ளமே தர்மம் செய்ய முடியும்.
பாத்திரங்களையும் கைகளையும் கழுவித் தூய்மையாக்குதல் எளிது. சிறிது உடலுழைப்பும் தண்ணீரும் மட்டுமே போதும்.
தர்மம் செய்து உள்ளத்தைத் தூய்மையாக்குதல் எளிது அன்று. ஏனெனில், உள்ளத்து விருப்பமும் தொடர் செயலும் இதற்கு அவசியம்.
இன்றைய முதல் வாசகத்தில், 'நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்' என்னும் இறையியல் கருத்துருவைத் தம் வாசகருக்கு அறிமுகம் செய்கிற பவுல், படைப்பின் தொடக்கமுதல் மனிதர்களிடமிருந்த நேர்மையற்ற நிலையை எடுத்துரைக்கிறார்.
நம்மிடம் உள்ளதைப் பிறரோடு பகிரும் செயல் நம் உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக்கும்.
நிற்க.
தர்மம் செய்தல் பற்றி அறிவுறுத்துகிற 'கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி', 'ஏழைகளுக்கு இரங்கித் தர்மம் செய்தல் சகோதர அன்புக்குச் சான்று பகர்கிறது. நீதியான இச்செயல் கடவுளுக்கு உகந்ததாக இருக்கிறது' (எண். 2462).
ஞாயிறு, 15 அக்டோபர் 2023
ஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு
எசாயா 25:6-10. பிலிப்பியர் 4:12-14, 19-20. மத்தேயு 22:1-14
விருந்துக்கான அழைப்பும் பதிலிறுப்பும்
தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என அனைவருக்கும் பொதுவான ஓர் உணர்வு பசி. இந்தப் பசியைப் போக்குவது உணவு. தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என அனைவரும் உணவு உண்டாலும், மனிதர்களைப் பொறுத்தவரையில் உணவு என்பது வெறும் வயிற்றுப் பசி போக்குவது என்பதைத் தாண்டிய பொருள் கொண்டது. உணவு என்பது உறவின் அடையாளமாகவும் காணப்படுகிறது. உறவின் அடையாளமாகப் பரிமாறப்படும் உணவை நாம் விருந்து என்கிறோம்.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு விருந்துக்கான அழைப்பு மற்றும் பதிலிறுப்பை மையக்கருத்தாகக் கொண்டுள்ளது. நாம் பலரை அழைத்து விருந்து படைக்கிறோம். மற்றவர்களின் அழைப்புக்கு பதிலிறுப்பு செய்கிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா 25:6-10), ஆண்டவராகிய கடவுள் நிறைவுகாலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு வைக்கவிருக்கிற விருந்து பற்றி முன்னுரைக்கிறார் இறைவாக்கினர் எசாயா. நிறைவுகாலம் என்பது இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வருகிற நிகழ்வைக் குறிப்பதாகவும் பொருள்கொள்ளலாம். ஆண்டவராகிய கடவுளின் பெயர் 'படைகளின் ஆண்டவர்' என வழங்கப்பட்டுள்ளது. சீயோன் மலையில் படைகளின் ஆண்டவர் விருந்தினை ஏற்பாடு செய்கிறார். இந்த விருந்தின் மூன்று பண்புகளாக இறைவாக்கினர் குறிப்பிடுபவை: (அ) விருந்துக்கான அழைப்பு பொதுவானது - இஸ்ரயேல் மக்கள் மட்டுமல்லாமல் மக்களினங்கள் அனைவரையும் ஆண்டவராகிய கடவுள் அழைக்கிறார். (ஆ) விருந்து சுவைமிக்கது – பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசம். (இ) விருந்து நிறைந்து பெருகி வழிகிறது – வருகிற அனைவரும் உண்ணும் அளவுக்கு அபரிவிதமாக இருக்கிறது. இந்த விருந்தின் வழியாக துன்பம், சாவு, கண்ணீர், நிந்தை என்னும் நான்கு எதிர்மறையான நிலைகளைக் களைகிறார் கடவுள்.
இவற்றையெல்லாம் காண்கிற மக்கள், 'இவரே நம் கடவுள். இவருக்காகவே நாம் காத்திருந்தோம். இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்' என்று பாடுவார்கள்.
ஆண்டவராகிய கடவுள் இந்த உறவின் வழியாக, இஸ்ரயேல் மக்களுடன் மீண்டும் உறவைப் புதுப்பித்துக்கொள்கிறார். இஸ்ரயேல் மக்கள் தங்கள் மீட்பரை மீண்டும் கண்டுகொள்கிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமண விருந்து உவமை வாசிக்கிறோம். லூக்கா நற்செய்தியிலும் காணப்படுகிறது இந்த உவமை. தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களைப் பார்த்து இயேசு இந்த உவமையை உரைப்பதாக மத்தேயு பதிவு செய்கிறார். அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்துகிறார். யூத சமூகத்தில் திருமண நிகழ்வு என்பது மிக முக்கியமான ஒன்று. ஏழு நாள்கள் முதல் முப்பது நாள்கள் வரை நடக்கக் கூடியது திருமண நிகழ்வு. இங்கே இளவரசனுக்குத் திருமணம் நடக்கிறது. விருந்துக்கான அழைப்பு முதலில் குறிப்பிட்ட நபர்களுக்கும் குழுவினர்களுக்கும், இரண்டாவதாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது. முதலில் அழைக்கப்பட்டவர்கள் சாக்குப் போக்குச் சொல்லி அழைப்பை நிராகரிக்கிறார்கள். இரண்டாவது அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் பங்கேற்றாலும் அவர்களில் ஒருவர் திருமண உடை அணியாமல் வருவதால் நிராகரிக்கப்படுகிறார். 'அழைப்புப் பெற்றவர்கள் பலர், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சிலர்' என்னும் வாக்கியத்தோடு உவமை நிறைவு பெறுகிறது.
முதலில் அழைக்கப்பட்டவர்கள் நான்கு நிலைகளில் பதிலிறுப்பு செய்கிறார்கள்: (அ) விருப்பம் இல்லாமல் இருந்தார்கள் (மத் 22:3). (ஆ) அழைப்பைப் பொருட்படுத்தவில்லை (22:5). (இ) வேறு முதன்மைகளைக் கொண்டிருந்தார்கள் - வயலுக்கும் கடைக்கும் செல்தல் (22:5). (ஈ) பணியாளர்களை இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள் (22:6). இந்த நான்கு பதிலிறுப்புகளும் எதிர்மறையாக இருக்கின்றன.
இரண்டாவது அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் நேர்முகமாகப் பதிலிறுப்பு செய்து விருந்தில் பங்கேற்க வந்திருந்தாலும், வந்தவர்களில் ஒருவர் திருமண ஆடையின்றி வருகிறார். திருமண ஆடை என்பது விருந்துக்கான அழைப்பின்போது வழங்கப்படுகிற ஆடை. விருந்துக்குச் செல்பவர்கள் அவ்வாறு வழங்கப்பட்ட ஆடைகளை அணிந்துகொண்டே செல்வர். ஆடையை அணிய மறுப்பதன் வழியாக, ஒருவகையில் இந்த நபரும் எதிர்மறையாகவே பதிலிறுப்பு செய்கிறார்.
உவமையின் பொருளைப் பார்க்கும்போது, அரசர் என்பவர் வானகத் தந்தை, மகன் இயேசு கிறிஸ்து, திருமண விருந்து இறையாட்சி, பணியாளர்கள் இறைவாக்கினர்கள், முதலில் அழைக்கப்பட்டவர்கள் யூதர்கள், இரண்டாவது அழைக்கப்பட்டவர்கள் புறவினத்தார்கள் என்று புரிந்துகொள்ளலாம்.
இரண்டாவதாக அழைக்கப்பட்ட புறவினத்தார்கள் அனைவரும் திருமண விருந்துக்குள் நுழையும் தகுதி பெற்றிருந்தாலும், விருந்தில் தொடர்வது என்பது ஒவ்வொருவரும் தம்மையே தகுதியாக்கிக்கொள்வதைப் பொறுத்தே அமைகிறது.
இந்த உவமை இயேசுவின் வலை உவமையை நினைவுபடுத்துகிறது. விண்ணரசு வலை போல அனைத்து மீன்களையும் வாரிக்கொண்டு வந்தாலும் நல்ல மீன்களே பாத்திரத்தில் சேகரிக்கப்படுகின்றன. மற்ற மீன்கள் மீண்டும் கடலுக்குள் அல்லது குப்பையில் எறியப்படுகின்றன. வலையில் சிக்கியதால் மட்டுமே மீன்கள் சேகரிக்கப்படும் என்பது பொருள் அல்ல. மீன்கள் தங்களையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
முதல் வாசகத்தில் நாம் காணும் விருந்துக்கான அழைப்பு நேர்முகமான பதிலிறுப்பைப் பெறுகிறது. இரண்டாம் வாசகத்திலோ விருந்துக்கான அழைப்பு நிராகரிக்கப்படுகிறது.
விருந்துக்கான அழைப்பு நிராகரிக்கப்படுவதற்கான காரணம், அரசரின் மேன்மையையும் வல்லமையையும் மக்கள் அறியாததே. இதை வெறும் விருந்து என்று பார்த்தார்களே தவிர, அரசரோடு உறவாடக் கூடிய வாய்ப்பு என்று அவர்கள் பார்க்கவில்லை. மேலும், மேன்மையான விருந்தைத் தெரிவு செய்வதற்குப் பதிலாக தாழ்மையான தங்களுடைய முதன்மைகளைத் தேர்ந்துகொண்டார்கள்.
இந்த இரண்டு விருந்து அழைப்புகளும் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
முதலில், வாழ்க்கை என்பது ஒரு திருமண விருந்து. இந்த விருந்துக்கான அழைப்பை ஆண்டவராகிய கடவுள் நம் அனைவருக்கும் வழங்குகிறார். அவர்தாமே நமக்கு விருந்து பரிமாறுகிறார். அவர் நமக்கு விருந்து அளித்தாலன்றி நாம் பசியாற முடியாது. ஆனால், பல நேரங்களில் நம் காலிக் கோப்பைகளைத் தூக்கிக்கொண்டு மற்ற காலிக் கோப்பைகளைத் தேடிச் செல்கிறோம். காலிக் கோப்பைகள் ஒருபோதும் மற்ற காலிக் கோப்பைகளை நிரப்ப முயலாது என்பதை அறிந்துகொள்வோம்.
இரண்டாவது, அருளடையாளங்கள், குறிப்பாக, நற்கருணை என்பது ஒரு திருமண விருந்து. இந்த விருந்துக்கு நாம் எல்லாரும் அழைப்பு பெற்றிருந்தாலும், திருமண ஆடை அணியாதவர் விருந்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். திருமண ஆடை என்பது நாம் கொள்ள வேண்டிய தயார்நிலை. விருப்பம் மட்டும் போதாது. தயார்நிலையும் வேண்டும்.
மூன்றாவது, திருமண விருந்தின் நோக்கம் கடவுளோடு உள்ள உறவு. 'இவருக்காகவே நாங்கள் காத்திருந்தோம்' என்று படைகளின் ஆண்டவரைத் தேடி ஓடுகிறார்கள் இஸ்ரயேல் மக்கள். கடவுளோடு நாம் கொள்ள வேண்டிய உறவு அவரோடு நாம் அருந்தும் உணவின் வழியாகவே நிறைவு பெறுகிறது.
திருமண விருந்தில் பங்கேற்பதற்கான வழி முறைகளை இருவர் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள்:
ஒருவர், அரசர் தாவீது. இன்றைய பதிலுரைப் பாடலில் (காண். திபா 23) 'ஆண்டவரே, என் ஆயர். எனக்கேதும் குறையில்லை' எனப் பாடுகிற தாவீது, 'என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர். என் தலையில் நறுமணத் தைலம் பூசுகிறீர். எனது பாத்திரம் நிரம்பி வழிகிறது' என்று, ஆண்டவராகிய கடவுள் தரும் விருந்தால் தான் நிறைவு பெறுவதை எடுத்துரைக்கிறார்.
இரண்டு, திருத்தூதர் பவுல். இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 4:12-14, 19-20), பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தை நிறைவு செய்கிற பவுல், தன் பணி வாழ்வில் தான் அனுபவித்த எல்லா அனுபவங்களையும் நினைவுகூர்ந்தவராகத் தன் கடிதத்தை நிறைவு செய்கிறார். ஒருநாள் நிறைவான உணவு, மறுநாள் பட்டினி, ஒருநாள் பஞ்சுமெத்தையில் தூக்கம், மறுநாள் மண்தரையில் உறக்கம், ஒருநாள் வெதுவெதுப்பு மறுநாள் குளிர், ஒருநாள் பாதுகாப்பு, மறுநாள் அச்சுறுத்தல், ஒருநாள் சிரிப்பு, மறுநாள் அழுகை என மாறி மாறி தான் கடந்து வந்த பாதையை நினைவுகூர்கிறார். பவுல் இந்தக் கடிதத்தை எழுதும்போது சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார். அந்தச் சிறையிலிருந்து விடுதலை பெறுவோமோ அல்லது தலை துண்டிக்கப்படுவோமா என்பதே அவருக்கு உறுதியாக இல்லை. சிறையின் தனிமை, வருத்தும் முதுமை, நோய், இன்னும் நிறையப் பணிகள் பாக்கி இருக்கின்றனவோ என்ற ஏக்கம் தரும் சோர்வு, தரையின் குளிர், கசையடிகளின் காயம் என அனைத்தும் வருத்தினாலும், 'எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்' எனப் பெருமிதம் கொள்கிறார். இந்தப் பயிற்சியைக் கொடுத்தது யார்? அல்லது அந்தப் பயிற்சிக்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்தது யார்?
பவுலே தொடர்கிறார், 'எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.' தன் கடவுளை, 'வலுவூட்டுகிறவர்' என்ற தலைப்பு கொடுத்து அழைக்கிறார் பவுல். மேலும், தன் தேவையில் உடனிருந்த பிலிப்பி நகரத் திருஅவையினரைப் பாராட்டி, 'கடவுள் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்' என வாழ்த்துகிறார்.
தான் பெற்றுள்ள நிறைவைத் தன் இறைமக்களும் பெறுவார்கள் என எதிர்நோக்கு கொண்டிருக்கிறார் பவுல்.
உணவும் விருந்தும் விவிலியத்தில் முதன்மையான கருத்துருகளாகத் திகழ்கின்றன. நம் முதற்பெற்றோரின் பாவம் விலக்கப்பட்ட கனியை உண்டதில்தான் தொடங்குகிறது. நற்செய்தி நூல்கள் இயேசு பல விருந்துகளில் பங்கேற்கிறார். விருந்து பற்றிய எடுத்துக்காட்டுகளையும் தருகிறார். காணாமற்போன மகன் எடுத்துக்காட்டில் (காண். லூக் 15), இளைய மகன் திரும்பிவந்தபோது அனைவருக்கும் விருந்து படைக்கிறார் தந்தை. விருந்தில் கலந்துகொள்ள மணம் இல்லாமல் வெளியே நிற்கிறான் மூத்தமகன். தந்தையின் அழைப்பு அவன் காதுகளில் விழுகிறது. ஆனால், அவனோ மௌனமாக நகர்கிறான்.
விருந்துக்கான அழைப்பு நேர்முகமான பதிலிறுப்பு பெறாவிடில் உறவும் முறிந்துவிடுகிறது.
திங்கள், 16 அக்டோபர் 2023
பொதுக்காலம் 28-ஆம் வாரத்தின் ஞாயிறு
உரோமையர் 1:1-7. லூக்கா 11:29-32
யோனாவைவிடப் பெரியவர்!
'தன்அடையாளம் கொண்டிருக்கிற எவரும் பிறரிடமிருந்து அடையாளம் கேட்பதில்லை.'
இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுகிற அவர்களுடைய சமகாலத்து மக்கள் சிலர் அவரிடம் அடையாளம் ஒன்றைக் கேட்கிறார்கள். முதல் ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள், 'ஆண்டவர் நம்மோடு இருக்கிறாரா?' என்று அடையாளம் கேட்டுச் சோதிக்கிறார்கள் (காண். விப 17:7). இறைவாக்கினர்களின் செய்தி சரியானதா என்று அறிந்துகொள்ள அரசர்கள் அடையாளம் கேட்கிறார்கள் (காண். எசா 7:14). அடையாளம் கேட்பது ஆண்டவரைச் சோதிப்பது என்று கருதப்படுகிறது. அடையாளம் கேட்பது அடையாளம் கேட்பவரைப் பற்றிய மூன்று விடயங்களைச் சொல்கிறது: (அ) அடையாளம் கேட்பவரின் தயக்கம் அல்லது நம்பிக்கையின்மை. (ஆ) மற்றவர் பொய்யுரைக்கிறார் என்னும் ஐயம். (இ) மற்றவர் பற்றிய தாழ்வான மதிப்பீடு.
இயேசுவிடம் அடையாளம் கேட்பவர்கள் அவர்மேல் நம்பிக்கைகொள்ளத் தயக்கம் காட்டுகிறார்கள். அவர் உரைக்கும் செய்தி பொய் என எண்ணுகிறார்கள். தாழ்வான பின்புலம் கொண்ட இவர் விண்ணரசு பற்றி எப்படிப் போதிக்க முடியும் என்று எண்ணுகிறார்கள்.
தம்மிடம் அடையாளம் கேட்கும் சமகாலத்து மக்களை 'தீய தலைமுறையினர்' என அழைக்கிறார் இயேசு. அவர்களுடைய தீமை என மொழிவது அவர்களுடைய இரட்டை வேடம் அல்லது வெளிவேடத்தையே. 'தலைமுறையினர்' என்னும் சொல் அவர்களுடைய முன்னோர்களைக் குறிக்கிறது.
யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறொன்றும் தரப்படாது எனச் சொல்கிற இயேசு, சாலமோன் அடையாளத்தையும் முன்மொழிந்து, இறுதியாக, தாம் யோனாவைவிடப் பெரியவர் என்றும், சாலமோனைவிடப் பெரியவர் என்றும் அறிவிக்கிறார்.
யோனா நினிவே நகரில் மனமாற்றத்தின் நற்செய்தியை அறிவித்தவர். ஆண்டவராகிய கடவுள் அவரை அழைத்தபோது அவரிடமிருந்து தப்பி ஓடியவர். மீனின் வயிற்றில் மூன்று நாள்கள் தங்கியிருந்தவர். மூன்று நாள் நடக்க வேண்டிய தூரத்தை ஒரே நாளில் கடந்து ஏனோதானோ என்று நற்செய்தியை அறிவித்தவர். இருந்தாலும் மக்கள் அவருடைய நற்செய்தியைக் கேட்டு அதற்கேற்ற பதிலிறுப்பு செய்கிறார்கள்.
இயேசு யூதேயா, சமாரியா, கலிலேயா பகுதிகளில் நற்செய்தி அறிவிக்கிறார். தந்தையாகிய கடவுளின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து மனித உரு ஏற்கிறார். இறந்து உயிர்க்குமுன் மூன்று நாள்கள் நிலத்தின் வயிற்றில் இருப்பார். நற்செய்தி அறிவிப்புடன் இணைந்து வல்ல செயல்களும் ஆற்றினார். ஆனால், மக்கள் அவரையும் அவருடைய செய்தியையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆக, யோனாவைவிடப் பெரியவர் இயேசு.
தாவீதின் மகனாகிய சாலமோன் ஒருங்கிணைந்த இஸ்ரயேலின் அரசராக இருக்கிறார். கடவுளிடம் ஞானத்தை வேண்டிப் பெறுகிறார். ஞானத்துடன் ஆலயத்தைக் கட்டி எழுப்புகிறார், மக்களை அரசாள்கிறார். சாலமோனின் ஞானம் பற்றிக் கேள்விப்படுகிற சேபா நாட்டு அரசி அவரைத் தேடி வருகிறார். அவருடைய ஞானம் கண்டு வியந்து பாராட்டிப் பரிசுகள் வழங்குகிறார்.
தாவீதின் மகன் என அழைக்கப்பட்ட இயேசு இறையாட்சியை அறிவிக்கிறார். கடவுளின் ஞானமாக இருந்த அவர் மனுவுருவாகிறார். தாமே உயிருள்ள ஆலயம் என முன்மொழிகிறார். மக்களைத் தம் போதனையால் நெறிப்படுத்துகிறார். ஆனால், மக்கள் அவருடைய ஞானத்தைப் பாராட்டுவதற்குப் பதிலாக அவருடைய எளிய பின்புலம் கண்டு இடறல்படுகிறார்கள்.
ஆக, சாலமோனைவிடப் பெரியவர் இயேசு.
நினிவே நாட்டு மக்களும், சேபா நாட்டு அரசியும் இயேசுவின் சமகாலத்தவருடைய நம்பிக்கையின்மைகண்டு அவர்களைக் கடிந்துரைப்பர்.
இந்நிகழ்வு நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) 'அடையாளம் கேட்பவர் நம்புவதில்லை. நம்புகிறவருக்கு அடையாளம் தேவையில்லை' என்கிறார் அக்வினா நகர் புனித தோமா. இயேசுவின் சமகாலத்தவர் அவரை நம்பாதவர்களாகவே இருந்தனர். இன்று நாம் இயேசுவை ஏற்றுக்கொள்ள, பின்பற்றி வாழத் தேவையான நம்பிக்கையைப் பெற்றிருக்கிறோமா? அல்லது அவரிடமிருந்து அடையாளம் கேட்கிறோமா?
(ஆ) யோனா, சாலமோன், இயேசு ஆகியோர் தங்களுக்குக்குரிய பணிகளைச் சரியாகச் செய்தார்கள். மற்றவர்களின் ஏற்றுக்கொள்தலும் நிராகரிப்பும் அவர்களுடைய பணிகளைப் பாதிக்கவில்லை. ஆனால், பல நேரங்களில் நமக்கு வெளியிலிருந்து வரும் பதிலிறுப்பைப் பொறுத்தே, அல்லது மற்றவர்களின் நேர்முக, எதிர்மறை விமர்சனங்களைப் பொறுத்தே நம் வாழ்க்கையின் போக்கை மாற்றிக்கொள்கிறோம். இப்படிச் செய்வதால் நாம் நம் வாழ்க்கையின் கட்டுப்பாட்டை நமக்கு வெளியே இருப்பவர்களுக்குக் கொடுத்துவிடுகிறோம். இது தவறு.
இன்றைய முதல் வாசகத்தில், உரோமை நகரத் திருஅவைக்கான தன் மடலைத் திறக்கும் பவுல், 'கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கிவைக்கப்பட்டவனாகிய பவுல் எழுதுவது' என்று தன்அடையாளம் தருகிறார். தான் பெற்றிருக்கிற அழைப்பையும் தான் செய்கிற பணியையும் ஒன்றாகக் குறிப்பிட்டு, தன் அழைப்பு கடவுளிடமிருந்து வந்தது என்பதையும், தான் செய்கிற பணியும் அவருடையது என்பதையும் அறிவிக்கிறார்.
தன்அடையாளம் கொண்டிருக்கிற எவரும் பிறரிடமிருந்து அடையாளம் கேட்பதில்லை.
நிற்க.
ஞானம் பற்றிப் போதிக்கிற 'கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி,' 'ஞானம் என்பது கடவுளின் ஆற்றல். ஞானம் கதிரவனை விட ஒளி வீசக்கூடியது. ஞானம் தீமையை வென்றெடுக்கும். நான் அவளுடைய அழகால் ஈர்க்கப்பட்டேன்' (எண். 2500) என்கிறது.
சனி, 14 அக்டோபர் 2023
பொதுக்காலம் 27-ஆம் வாரத்தின் சனி
யோவேல் 3:12-21. லூக்கா 11:27-28
புதிய உறவுநிலை
'கண்களுக்குத் தெரிகிற உறவுநிலையை விட கண்களைக் கடந்த உறவுநிலை மேலானது'
நம் இருத்தல் மற்றும் இயக்கம் சிறப்பாக இருக்கக் காண்கிற உலகம், அது கண்டு நம்மைப் பெற்றவர்களைப் புகழ்வது இயல்பு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்தேறுகிறது. இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருந்தபோது, 'உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்' என வாழ்த்துகிறார். முந்தைய மொழிபெயர்ப்பில், 'உம்மைத் தாங்கிய வயிறும் நீர் பாலுண்ட கொங்கைகளும் பேறுபெற்றவை' என்று உள்ளது.
இயேசுவின் பணி வாழ்வு மக்களின் எதிர்ப்பு, ஏற்பு என்னும் இரு தளங்களில் நகர்ந்து சென்றது. 'இவன் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்' என்று அவருடைய எதிர்ப்பாளர்கள் மொழிய, இங்கே ஒரு பெண் அவருடைய பிறப்புக்காக அவரைப் புகழ்கிறார்.
அந்தப் பெண் இச்சொற்களை மொழிந்தபோது இயேசுவின் தாய் மரியா அவரோடு உடனிருந்திருக்கலாம். அல்லது மரியா தற்செயலாக அந்த இடத்திற்கு வந்திருக்கலாம். அல்லது மரியாவின் வருகையை இயேசுவுக்கு உணர்த்துவதற்காக அப்பெண் சொல்லியிருக்கலாம். அல்லது மரியா இல்லாதபோது எதார்த்தமாக அப்பெண் சொல்லியிருக்கலாம்.
இந்த வாழ்த்தின் பொருள் எளியதுதான்: 'நல்ல மரம் நல்ல கனியைக் கொடுக்கும். நீ நல்ல கனி. அப்படி என்றால் உன் அம்மாவும் அப்பாவும் நல்ல மரங்கள். மரங்கள் இனிதே வாழ்க!'
அப்பெண் இயேசுவுக்கும் மரியாவுக்கும் இருந்த உடல்சார் உறவு (இரத்த உறவு) பற்றிப் பேசுகிறார். ஆனால், இயேசுவா, அப்பெண்ணின் சொற்களை அடிப்படையாக வைத்து, தமக்கும் மரியாவுக்கும் இருக்கிற ஆவிசார் உறவு (ஆன்மிக உறவு) பற்றிப் பேசுகிறார்: 'இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்'
கண்களுக்குத் தெரிகிற உறவுநிலையிலிருந்து கண்களைக் கடந்த உறவுநிலைக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் செல்கிறார் இயேசு.
தமக்கும் மரியாவுக்கும் இருக்கிற ஆவிசார் உறவுபற்றிப் பேசுகிறார்: 'இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்.'
ஆக, இயேசு மட்டுமல்ல, மரியாவும் பேறுபெற்றவரே என்னும் கருத்து வாசகருக்கு வழங்கப்படுகிறது. இறைவனின் திட்டத்திற்கு 'ஆம்' எனச் சொன்னதால் மரியா பேறுபெற்றவர் ஆகிறார்.
இந்த நிகழ்வு நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) நம் கண்முன் நடக்கும் நன்மையைக் பார்க்கும்போது அந்த நன்மையைச் செய்தவரை மனுமுவந்து பாராட்டுதல் நலம். பல நேரங்களில் நாம் அவருடைய எளிய குடும்ப பின்புலத்தைக் கண்டு இடறல்படுகிறோம். பாராட்டுதல் அதிகரிக்கும்போது, இடறல்படுதல் குறையும்.
(ஆ) இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிக்கும் எவரும் பேறுபெற்ற நிலையை அடைய முடியும். நமக்கும் இயேசுவுக்கும் உடல்சார் உறவு சாத்தியமில்லை என்றாலும் ஆவிசார் உறவு சாத்தியம். ஆவிசார் உறவுக்கான வழி இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பது.
அந்தப் பெண் இச்சொற்களைச் சொன்னபோது இயேசு கண்டிப்பாகப் புன்முறுவல் பூத்திருப்பார். 'அப்படியா! அதெல்லாம் ஒன்னுமில்லங்க! என்று வெட்கப்பட்டிருப்பார்.
இயேசுவின் கவனத்தை ஈர்த்து, அவரின் முகத்தில் புன்முறுவல் ஏற்படக் காரணமாயிருந்த அந்தப் பெயரில்லாப் பெண்ணும் பேறுபெற்றவரே!
கடவுளின் கவனத்தை ஈர்க்கவும் அவரைச் சிரிக்க வைக்கவும் ஆயிரம் வழிகள் இருக்கின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் பாபிலோனுக்கு வழங்கும் தீர்ப்பு பற்றி யோவேல் முன்னுரைக்கிறார். பயிர்களை அறுவடை செய்தல் என்னும் உருவகம் இங்கே பயன்படுத்தப்படுகிறது. ஆண்டவராகிய கடவுள் சீயோன் நடுவே குடியிருப்பதாக வாக்களிக்கிறார்.
சீயோனின் நடுவே கடவுள் குடியிருக்கிறார்.
அந்தக் கடவுளைக் கருத்தாங்கிய தாயும், அவரின் சொற்களைத் தாங்குகிற நாமும் பேறுபெற்றவர்களே.
நிற்க.
மரியாவின் தாய்மை பற்றிப் பேசுகிற 'கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி', 'உம் சொற்படியே எனக்கு ஆகட்டும்' என்னும் சொற்கள் வழியாகவே, இறைத்தாய் என்னும் நிலையை அடைந்தார் எனச் சொல்கிறது (காண். எண் 963)
வெள்ளி, 13 அக்டோபர் 2023
பொதுக்காலம் 27-ஆம் வாரத்தின் வெள்ளி
யோவேல் 1:13-15; 2:1-2. லூக்கா 11:15-26
தீமையை நன்மையால் வெல்க!
'தீமையை வெல்பவரும் தீமையோடு தொடர்புடையவர் என்ற எண்ணம் மாற்றி, தீமையை நன்மையால் வெல்லக் கூடிய திடம் பெறுதல்'
போதிக்கிற, நலம் தருகிற, பேய்களை ஓட்டுகிற பணியைச் செய்துவருகிறார் இயேசு. அவருடைய பணிகள் பற்றிய கண்ணோட்டங்கள் வௌ;வேறாக இருக்கின்றன. சிலர் அவரை இறைமகன் என்றும் மெசியா என்றும் ஏற்றுக்கொள்கின்றனர். பலர் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதுடன், அவரைப் பற்றி இடறல்படுகிறார்கள் அல்லது அவரை எதிர்க்கிறார்கள். இயேசு சந்தித்த எதிர்ப்பையும் தயக்கத்தையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம்.
'இவர் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்' என்று இயேசுவின்மேல் குற்றம் சுமத்தி அவரை எதிர்க்கிறார்கள் சிலர். பெயல்செபூல் என்னும் சொல் முந்தைய மொழிபெயர்ப்பில் 'பெயல்செபூப்' என்று உள்ளது. 'பெயல் செபூப்' மற்றும் 'பெயல்செபூல்' என்னும் சொற்கள் இஸ்ரயேலின் சமகாலத்துக் கடவுளர்களான 'பாகால்-செபூப்' மற்றும் 'பாகால்-செபூல்' என்னும் பெயர்களிலிருந்து வந்திருக்கலாம். பெலிஸ்தியக் கடவுளான எக்ரோன் பெயல்செபூல் என அழைக்கப்பட்டார் (காண். 2 அர 1:2-16). புறவினத்துக் கடவுள் சாத்தானாகக் கருதப்பட்டு, காலப்போக்கில் அவரே சாத்தானின் தலைவராக வரையறுக்கப்படுகிறார். இன்று நம் ஊரிலும் பிற கடவுளர்களை பேய்க் கடவுள்கள் என்று சொல்லும் அறியாமை நிலவுகிறது. இன்னும் சிலர் இயேசுவிடமிருந்து அறிகுறி அல்லது அடையாளம் கேட்கிறார்கள். இவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்குத் தயக்கம் காட்டுகிறார்கள்.
தம்மேல் வந்த எதிர்ப்புக்கு உருவகம் வழியாகப் பதில் கூறுகிறார் இயேசு. 'தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும்' என்கிறார். அதாவது, இறையாட்சியைப் போதிக்க வந்த இயேசுவே இறையாட்சியிலிருந்து பிளவுபட்டவராக தீய ஆவியால் வழிநடத்தப்பட்டால் இறையாட்சி நிலைக்காது. ஆக, தாம் செய்வது கடவுளின் கரத்தால் என்றும், தம் செயல்கள் வழியாக இறையாட்சி இங்கே வருகிறது என்றும் கூறுகிறார்.
மேலும், வலியவன் ஒருவனைக் கட்டினாலன்றி, அவனுடைய வீட்டுப் பொருள்களைக் கொள்ளையடிக்க இயலாது என்று சொல்வதன் வழியாக, தாம் கடவுளின் வல்லமையால் சாத்தானைக் கட்டி விட்டதாக மொழிகிறார். இவ்வாறாக, வலியவனாகிய சாத்தானை விடத் தாம் உயர்ந்தவர் என எடுத்துச் சொல்கிறார்.
'என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்' என்னும் இயேசுவின் சொற்கள் இயேசுவுடைய எண்ணத்தோடு நம் எண்ணம் இணைந்திருக்க வேண்டும் என நமக்கு நினைவூட்டுகின்றன.
தொடர்ந்து, இயேசு இன்னொரு எடுத்துக்காட்டையும் சொல்கிறார். ஒருவரிடமிருந்து வெளியேறுகிற தீய ஆவி, மீண்டும் ஏழு பொல்லாத ஆவிகளுடன் அவரிடமே திரும்பி வருகிறது. தீய ஆவி நம்மிடமிருந்து போய்விட்டது எனச் சொல்லி, தம் வீட்டைக் கூட்டிப் பெருக்கி, அழகுபடுத்தி ஓய்ந்திருக்கிறார். ஓய்ந்திருந்த அந்த நேரத்தில் தீய ஆவி அவரை மீண்டும் வெற்றிகொள்கிறது. ஆக, தீமைக்கு எதிரான போராட்டம் ஒரே நாளில் முடியக் கூடியது அல்ல. அது ஒவ்வொரு நாளும் நடைபெற வேண்டும். தீய ஆவியின் செயல்களைத் தவிர்த்து தூய ஆவியாரின் அல்லது இறையாட்சியின் கனிகளை நாம் கைக்கொள்ள வேண்டும்.
இந்த எடுத்துக்காட்டைச் சொல்வதன் வழியாக, தம் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும், தீமையை நன்மையை மட்டுமே வெல்ல முடியும் எனவும் அறிவுறுத்துகிறார்.
இந்த வாசகம் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) நாம் இயேசுவோடு இணைந்திருக்கிறோமா? அல்லது தீமையுடன் இணைந்திருக்கிறோமா? நம் ஆன்மிக வாழ்வில் நமக்கு எதிராக நாமே பிளவுபட்டு நின்றால் நாம் வீழ்ந்துவிடுவோம். எதைத் தெரிந்துகொள்கிறோமோ அதை மட்டுமே பற்றிக்கொள்ள வேண்டும். தீமையை விடுத்து நன்மையைப் பற்றிக்கொள்ள வேண்டும்.
(ஆ) கடவுளின் எண்ணங்களிலிருந்து நம் எண்ணங்கள் முரண்பட்டதாக இருந்தாலும், நம் செயல்கள் கூட்டிச் சேர்க்கும் செயல்களாக அல்லாமல், சிதறிப்போகும் செயல்களாக இருக்கும். இதற்கு மாறாக, பவுல், கடவுளால் அன்பு செய்யப்படுபவர்கள் வாழ்வில் தூய ஆவியார்தாமே அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துகிறார் என மொழிகிறார்.
(இ) தீமைக்கு எதிரான தொடர் போரட்டத்தை வென்றெடுக்க வேண்டும் எனில், நன்மைச் செயல்கள் தொடர்ந்து செய்யப்பட வேண்டும். நன்மையால்தான் தீமையை வென்றெடுக்க முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவரின் நாளின் வருகை பற்றி முன்னுரைக்கிறார் யோவேல். ஆண்டவரின் நாளில் தீமை அழிக்கப்பட்டு, நன்மை நிலைநாட்டப்படும்.
நிற்க.
தீமை, தீமையின் தொடக்கம், தீமையின் வடிவங்கள் பற்றி விரித்துரைக்கிற 'கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி' (எண்கள். 385-421), இறந்து உயிர்த்த கிறிஸ்து இயேசு நன்மையால் தீமையை வென்றார் என மொழிகிறது.
வியாழன், 12 அக்டோபர் 2023
பொதுக்காலம் 27-ஆம் வாரத்தின் வியாழன்
மலாக்கி 3:13-4:2. லூக்கா 11:5-13.
விடாமுயற்சி – நோக்கம் - பரிவு
'இறைவேண்டலில் நாம் மேற்கொள்ள வேண்டிய விடாமுயற்சி; எதைக் கேட்கிறோம், தேடுகிறோம், தட்டுகிறோம் என்பது பற்றிய தெளிவான நோக்கம்; விண்ணகத் தந்தையின் பரிவு.'
தம் சீடர்களுக்கு இறைவேண்டல் செய்யக் கற்றுக்கொடுக்கிற இயேசு, இறைவேண்டலில் நாம் கொண்டிருக்க வேண்டிய விடாமுயற்சியை, உவமை வழியாக எடுத்துரைக்கிறார். நண்பரின் ஒருவருடைய கதவு நள்ளிரவில் தட்டப்படுகிறது. தன்னிடம் வந்திருக்கிற வழிப்போக்கரின் பசிக்காக அவர் தன் நண்பரின் கதவைத் தட்டுகிறார். நண்பரிடம் அப்பம் இருக்கிறது. ஆனால், எழுந்து தருவதற்கான மனம் இல்லை. ஆனால், கதவு தொடர்ந்து தட்டப்படும்போது, தொந்தரவின் பொருட்டாவது கதவு திறக்கப்படுகிறது.
மிகவும் எதார்த்தமான உறவுநிலை எடுத்துக்காட்டு இது. நாம் ஒருவர் மற்றவருக்கு பரிவு காட்ட வேண்டும் என்று நாம் கற்றறிந்தாலும், வாழ்வியல் நிலை என்று வரும்போது பரிவு காட்டுவதற்கு நாம் தயங்குகிறோம். ஆனால், பரிவு காட்டப்பட வேண்டிய நபர் தொடர்ந்து நமக்குத் தொந்தரவு கொடுக்கும்போது அவர் நம்மை விட்டு அகல வேண்டும் என்ற தன்னலத்தின் பொருட்டாவது நாம் பரிவு காட்டுகிறோம்.
உவமையில் காணும் நண்பரும் நாமும் ஒன்றுதான். இங்கே நம் பரிவுச் செயல்பாடு என்பதை நம் நட்பையோ, அல்லது நம் நண்பரின் தேவையோ, அல்லது அறநெறியின் எதிர்பார்ப்பையோ அல்ல, மாறாக, நம் தன்னலத்தை – தொந்தரவு நீங்க வேண்டும் என்ற தன்னலத்தை – மையமாக வைத்ததாக மட்டும் இருக்கிறது. மற்றொரு பக்கம், கதவு தட்டுகிற நபர் எப்படியாவது பரிவைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறார். ஏனெனில், தட்டுவதற்கு வேறு கதவுகள் இல்லை அவருக்கு. ஆக, விடாமுயற்சி அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தருகிறது.
இறைவேண்டல் சில நேரங்களில் விண்ணப்பங்கள் நிறைந்ததாக இருக்கிறது. நம் விண்ணப்பங்கள் நிறைவேறும் வரை நாம் விடாமுயற்சியுடன் கேட்க வேண்டும் என்பது பொருள். நாம் கேட்கிற அனைத்து விண்ணப்பங்களும் நிறைவேறி விடுமா? என்னும் கேள்வி அல்லது ஐயம் வேறு.
இரண்டாவதாக, 'கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்' என்று அறிவுறுத்துகிறார் இயேசு. இயேசுவின் இச்சொற்கள் மத்தேயு நற்செய்தியில் மலைப்பொழிவின் ஒரு பகுதியாக அமைந்துள்ளன. இங்கே, அவை இறைவேண்டல் பற்றிய பகுதியில் உள்ளன. இறைவேண்டலோடு மட்டுமல்ல, நம் வாழ்வின் நோக்கத்தோடும் இணைத்து இச்சொற்களைப் புரிந்துகொள்ளலாம். 'நாம் கேட்காத வரை நாம் பெறுகிற பதில் இல்லை என்பதே' என்பது நம் வாழ்வியல் அனுபவம். நாம் கேட்காத எதையும் நம்மால் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. இதுதான் எனக்கு வேண்டும் என்னும் நோக்கத் தெளிவு நம்மிடம் இருக்கிறதா? இதைத்தான் நான் தேடுகிறேன் என்ற தெளிவு இல்லாமல் இருக்கும்போது நாம் இங்கும் அங்கும் அலைபாய்ந்துகொண்டு இருக்கிறோம். நம் நேரமும் ஆற்றலும் வீணாகிறது. அல்லது முல்லா போல எங்கோ தொலைத்துவிட்டு, இங்குதான் வெளிச்சம் இருக்கிறது என்று இன்னொரு இடத்தில் தேடிக்கொண்டிருக்கிறோம். நாம் தட்டாத வரை கதவுகள் திறக்கப்படுவில்லை. ஆக, தெளிவான நோக்கம், அந்த நோக்கத்தால் உந்தப்படுகிற செயல், அச்செயலில் தேவையான விடாமுயற்சி ஆகியவை இருக்கும்போது நாம் வாழ்க்கை என்ற இறைவேண்டலில் வெற்றி பெறுகிறோம்.
மூன்றாவதாக, 'மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? முட்டை கேட்டால் தேளைக் கொடுப்பாரா?' எனக் கேட்கிறார் இயேசு. மத்தேயு நற்செய்தியில் 'அப்பம் கேட்டால் கல்லைக் கொடுப்பாரா?' (7:9) என்று உள்ளது. அதாவது, நன்மையைக் கேட்டால் தீமையைக் கொடுப்பாரா? என்பதே கேள்வி. மேலும், மண்ணில் வாழும் நாமே நன்மை-தீமை அறிந்து நன்மை செய்யக் கற்றிருக்கிறோம் என்றால், விண்ணில் வாழும் நம் தந்தை எந்த அளவுக்கு நம்மேல் பரிவு காட்டுவார். அவர் நாம் கேட்பதை விட அதிகமாக தூய ஆவியைக் கொடுக்கிறார் என்று சொல்கிறார் இயேசு. நாம் நம் தந்தையிடம் இறைவேண்டலில் கேட்பது தூய ஆவியாக மட்டுமே இருக்க வேண்டும். தூய ஆவி தம்மைவிட்டு அகன்றதால் சிம்சோனும் சவுலும் அழிவைக்காண்கிறார்கள். கடவுளின் பரிவுள்ளத்தை இயேசு இங்கே வெளிப்படுத்துகிறார். இதையே, 'நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கே மாட்சி' (எபே 3:20-21) என்கிறார் பவுல்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மலாக்கி ஓர் உருவகத்தைக் கையாளுகிறார்: 'நீதியின் கதிரவன் ... நலம் தரும் மருந்து.' படைகளின் ஆண்டவருக்குச் செவிமடுப்பதால் என்ன பயன்? என்று கேள்வி கேட்டு, செருக்குடன் வாழ்வோர் அழிக்கப்படுவதையும், கடவுளுக்குப் பணியாற்றுபவர்கள் வெற்றி பெறுவதையும் எடுத்துரைக்கிறார் இறைவாக்கினர். ஆண்டவராகிய கடவுள் ஒரே நேரத்தில் பரிவும் நீதியும் காட்டுபவராக இருக்கிறார்.
நிற்க.
'இறைவேண்டல் என்பது அனைத்து மாந்தர்களின் பொது அனுபவம்' என்னும் தலைப்பின்கீழ், கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி, 'வாழ்கிற மற்றும் உண்மையான கடவுளே ஒவ்வொருவரையும் இறைவேண்டலை நோக்கி அழைக்கிறார். அந்த இறைவேண்டல் ஒரு மறைநிகழ்வான சந்திப்பு' (எண். 2267) என்றும், கடவுளே நம்மில் இறைவேண்டலை முன்னெடுக்கிறார், 'நாம் செய்யும் இறைவேண்டல் அவருக்கான பதிலிறுப்பே' (எண். 2567) என்றும் மொழிகிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
புதன், 11 அக்டோபர் 2023
பொதுக்காலம் 27-ஆம் வாரத்தின் புதன்
யோனா 4:1-11. லூக்கா 11:1-4
கற்றுத்தாரும்!
'இயேசுவே கற்றுக்கொடுத்த இறைவேண்டல் வெறும் ஃபார்முலா செபம் அல்ல, மாறாக, செயல்களுக்கு இட்டுச்செல்லும் செபம்.'
இயேசுவின் போதனை மட்டுமல்ல, அவருடைய வாழ்வும் சீடர்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்துவதை நற்செய்தி நூல்களில் காண்கிறோம். இயேசு இறைவேண்டல் செய்பவராக லூக்கா நற்செய்தியாளர் அடிக்கடி பதிவு செய்கிறார். இயேசுவின் இறைவேண்டலின்போது அவரிடம் வருகிற சீடர்கள், 'எங்களுக்கும் கற்றுத்தாரும்!' எனச் சொல்கிறார்கள்.
இயேசுவின் சீடர்கள் ஏற்கெனவே யூத செப முறையை அறிந்தவர்களாக இருந்திருப்பார்கள். மேலும், அவர்களில் சிலர் திருமுழுக்கு யோவானின் சீடர்களாக இருந்ததால், அவரிடமிருந்தும் இறைவேண்டலைக் கற்றிருப்பார்கள். ஆனாலும், தங்கள் இறைவேண்டலில் ஏதோ குறைவுபடுவதை உணர்கிறார்கள்.
இயேசுவின் இறைவேண்டல் வெறும் சொற்களால் கட்டப்படாமல், உணர்வுகளாலும் செயல்களாலும் கட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
'தந்தையே' – கடவுளைத் தந்தையே என அழைப்பது இயேசுவின் சமகாலத்து யூதர்களுக்கு ஏற்புடையதாக இருந்திருக்காது. ஏனெனில், 'யாவே' என எழுதப்பட்ட கடவுளின் பெயரையே 'அதோனாய்' என்று வாசிப்பார்கள். கடவுளின் பெயரை உச்சரிப்பதே ஏற்புடையதல்ல என்று நினைத்தவர்கள் நடுவே, கடவுளை உறவாடுகிற நபராக, 'தந்தை' என முன்மொழிகிறார் இயேசு. கடவுளைத் தந்தை என அழைப்பதன் உட்பொருள் என்ன? நாம் அனைவரும் ஒருவர் மற்றவருடைய சகோதர, சகோதரிகளாக மாறுவதுதான்.
'உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக!' – யூத சமயத்தில் உள்ள மிட்ஸ்வாட் பெராகோத் என்னும் புகழ்ச்சிப் பாடல் அட்டவணையிலும், 'பெயர்', 'ஆட்சி' ஆகிய சொற்கள் வருகின்றன. கடவுளுக்குரிய புகழ்ச்சியை நாம் கொடுப்பதோடு, அவருடைய ஆட்சியின் வருகைக்கான எதிர்நோக்குடன் காத்திருப்பதும் இங்கே குறிக்கப்படுகிறது.
'எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்!' – கடவுளின் பராமரிப்பை அன்றாடம் நாம் வேண்டி நிற்க வேண்டும் என்பதை இவ்வாக்கியம் உணர்த்துவதுடன் நாம் ஆண்டவரை அன்றாடம் தேட வேண்டும் எனவும் மொழிகிறது. 'அன்றாட உணவு' என்பது பழைய ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குப் பாலைநிலத்தில் பொழிந்த அன்றாட மன்னாவை நினைவூட்டுகிறது.
'நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களை மன்னியும்' – பாவங்களை மன்னிக்க கடவுள் ஒருவரே வல்லவர் என்பது இயேசுவின் சமகாலத்துப் புரிதல். பாவம் என்பது இன்று நாம் மறைக்கல்வியில் கற்றுள்ளது போல சாவான பாவம், அற்பப் பாவம் அல்ல. மாறாக, பாவம் என்பது ஓர் உறவுப் பிறழ்வு. நாம் ஒருவர் மற்றவரை நம் உறவுப் பிறழ்வுகளில் மன்னிப்பது போல, கடவுள் நம்மையும் மன்னிக்க வேண்டும் என இறைவேண்டல் செய்கிறோம். மற்றவர்களை நாம் மன்னிப்பது என்பது கடவுளின் மன்னிப்பைப் பெறுவதற்கான முன்நிபந்தனையாக இருக்கிறது.
'எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்' – 'சோதனை' என்பது 'துன்பம்' என்றும் மொழிபெயர்க்கலாம். இவ்வாக்கியத்தைத் தனியாகப் பார்த்தால், சோதனைக்கு இழுக்கிற கூறுகளிடமிருந்து நாம் விலகியிருக்க இறைவன் துணைசெய்ய வேண்டும் எனப் பொருள்கொள்ளலாம். இதற்கு அடுத்த வாக்கியத்தோடு – 'தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்' - இணைத்துப் பார்த்தால் சோதனை தீயோனால் வருகிறது என்பதால் அந்தத் தீயோனிடமிருந்து நம்மைக் கடவுள் விடுவிக்க வேண்டும் என இறைவேண்டல் செய்வதாகப் புரிந்துகொள்ளலாம்.
இயேசு நமக்குக் கற்றுத்தந்த இறைவேண்டல் வெறும் ஃபார்முலாவாகச் சுருங்கிவிட்டால், இந்த இறைவேண்டல் நம்மில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் நினிவே மக்களுக்குக் காட்டிய கருணை கண்டு அவர்மேல் கோபம் கொள்கிறார் யோனா. 'வாழ்வதை விடச் சாவதே மேல்' என்கிறார். ஆமணக்குச் செடி வழியாக யோனாவுக்குக் கற்றுக்கொடுக்கிற கடவுள், தம் இரக்கம் அனைவருக்கும் உரியது என வெளிப்படுத்துகிறார்.
யோனாவுக்கு கற்றுக்கொடுக்கிறார் கடவுள்.
சீடர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு.
கற்றுக்கொள்பவரின் கற்றலில்தான் கற்றுக்கொடுத்தல் நிறைவுபெறுகிறது. இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டல் மொழியும் செயல்களை ஏற்று வாழ்தல் நலம்.
நிற்க.
கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி எண்கள் 2777 முதல் 2865, இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டலில் உள்ள ஏழு விண்ணப்பங்களை (ஆனால், லூக்கா நற்செய்தியில் ஆறு – உம் திருவுளம் நிறைவேறுவதாக என்ற விண்ணப்பம் இங்கே இல்லை) மிக விரிவாக எடுத்துரைக்கின்றன.
நம் கத்தோலிக்க நம்பிக்கை வாழ்வின் அடிப்படை செபங்களில் ஒன்றான இச்செபத்தைப் பொருளுணர்ந்து செபிக்க முயற்சி செய்வோம்.
செவ்வாய், 10 அக்டோபர் 2023
பொதுக்காலம் 27-ஆம் வாரத்தின் செவ்வாய்
யோனா 3:1-10. லூக்கா 10:38-42
ஆனால் தேவையானது ஒன்றே!
கடந்த ஓராண்டாகப் பயன்படுத்தி வந்த எனது ஐஃபோன் திடீரென நேற்றுச் செயலிழந்தது. பயன்பாடு அனைத்தையும் ஓரிரவுக்குள் என் ஆஃபிஸ் ஆன்ட்ராய்ட் ஃபோனுக்கு மாற்றினேன். இரண்டு ஃபோன் பயன்படுத்துதல் நலமே என்று நான் எண்ணிக்கொண்டிருந்தபோது, இயேசு மரியாவுக்கு பெத்தானியாவில் சொன்ன சொற்களை எனக்கும் சொல்வதாக உணர்கிறேன்: 'ஆனால், தேவையானது ஒன்றே!'
நிற்க.
இறையன்பு, பிறரன்பு ஆகிய கட்டளைகளை திருச்சட்டத்தின் முதன்மையான கட்டளைகளாக திருச்சட்ட அறிஞருக்கு முன்மொழிந்தார் இயேசு. பிறரன்புக் கட்டளையின் விளக்கமாக அமைந்தது 'எனக்கு அடுத்திருப்பவர் யார்?' என்னும் நல்ல சமாரியன் உவமை. இறையன்புக் கட்டளையின் விளக்கமாக அமைகிறது, 'ஆனால் தேவையானது ஒன்றே' என்னும் மார்த்தா-மரியா இயேசு நிகழ்வு.
இறையன்பு – பிறரன்பு – நல்ல சமாரியன் - மரியா எனப் பாடங்களைக் கட்டமைப்பதன் வழியாக, இறையன்பே வாழ்வின் தொடக்கமும் நிறைவுமாக இருக்கிறது என மிக அழகாகப் பதிவு செய்கிறார் லூக்கா. நல்ல சமாரியன் உவமையாகவும், பெத்தானியாவின் மரியா நேரடியான வாழ்வியல் நபராகவும் நம் முன் நிற்கிறார்கள்.
இயேசு பெத்தானியாவுக்குச் செல்கிறார். மார்த்தா அவரைத் தம் வீட்டில் வரவேற்கிறார். இல்லம் வந்த போதகரின் காலடிகளில் அமர்கிறார் மரியா. மார்த்தாவைப் பற்றி லூக்கா இப்படிப் பதிவு செய்கிறார்: 'மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி!'
இதை வாசிக்கும்போதே மார்த்தாவின் செயல்பாடுகளை நம்மால் கற்பனை செய்துகொள்ள முடிகிறது. மார்த்தா மற்ற இருவரிடமிருந்தும் - இயேசு, மரியா – தன்னையே தனிமைப்படுத்திக்கொள்கிறார். தன் வேலைகளுடன் தன்னை இணைத்துக்கொள்கிறார்.
இறைவனிடமிருந்து நம்மையே தனிமைப்படுத்தும்போது நிகழ்வன எவை? பரபரப்பு, தனிமை, வேலைப் பளு, புலம்பல், கவலை, கலக்கம். இவற்றை இயேசுவே மார்த்தாவுக்குச் சுட்டிக்காட்டுகிறார்: 'நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்?'
தொடர்ந்து, 'ஆனால் தேவையானது ஒன்றே' என்றும், அதுவே மரியா தேர்ந்துகொண்ட நல்ல பங்கு என்றும் சொல்கிறார் இயேசு. வயிற்றுத் தேவைகள் நிறைவேறினால்தான் நாம் இறைவனின் காலடிகளில் அமர முடியும் என்பது எதார்த்தம் என்றாலும், வயிற்றுத் தேவையைத் தாண்டிய இறைத்தேடல் அவசியம் என்பதை இங்கே பாடமாக வைக்கிறார் இயேசு.
நம் வாழ்வில், 'தேவையான அந்த ஒன்றை' நாம் கண்டுவிட்டோமா? அல்லது இன்னும் நமக்கு நாமே பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருக்கிறோமா? இன்று நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு பதற்றம் நம்மைப் பற்றிக்கொண்டுவிட்டது. நிறைய வேலைகள் செய்தால்தான் நாம் நன்றாக இருப்பதாக உணர்கிறோம். ஓய்ந்திருப்பவர்களைச் சோம்பேறிகள் என்றும், நேரத்தை வீணடிப்பவர்கள் என்றும் சொல்கிறோம். நிறைய வேலைகளுக்குப் பின்னர் அவை எந்த நேர்முகத்தைத் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் நம்மிடம் விடையில்லை.
கொஞ்சம் பரபரப்பு குறைத்து, தேவையான அந்த ஒன்றைப் பற்றிக்கொள்வோம்.
முதல் வாசகத்தில், யோனாவை இரண்டாம் முறை அழைத்து நினிவேக்கு அனுப்புகிறார் ஆண்டவராகிய கடவுள். மூன்று நாள் நடந்து கடக்க வேண்டிய நகரை, ஒரே நாளில் ஓட்டமும் நடையுமாகக் கடந்து மனமாற்றத்தின் நற்செய்தியை ஏனோ தானோ என்று அறிவிக்கிறார் யோனா. அந்த ஏனோ தானோ நற்செய்தியும் அவர்கள்மேல் நேர்முகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அனைவரும் மனம் மாறுகிறார்கள். விலங்குகளும் சாக்கு உடை அணிகின்றன. ஆண்டவரின் சினம் தணிகிறது.
பரபரப்பான யோனாவின் செய்தியும், தேவையான ஒன்றைப் பற்றிக்கொள்ள நினிவே மக்களைத் தூண்டுகிறது.
தேவையான ஒன்றைத் தேடிப் பற்றிக்கொண்டோர் பேறுபெற்றோர்!
திங்கள், 9 அக்டோபர் 2023
பொதுக்காலம் 27-ஆம் வாரத்தின் திங்கள்
யோனா 1:1-17. லூக்கா 10:25-37
திருச்சட்டம் கடந்த போதனை
இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவில், திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, 'நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்கிறார். திருச்சட்டத்தின் இருபெரும் கூறுகளான இறையன்பு மற்றும் பிறரன்பை முன்மொழிகிறார் இயேசு. இரண்டாம் பிரிவில், பிறரன்புக்கான எடுத்துக்காட்டாக நல்ல சமாரியனை முன்மொழிகிறார். இறுதியில், 'நீரும் போய் அவ்வாறே செய்யும்!' என்று சொல்லித் திருச்சட்ட அறிஞரை அனுப்புகிறார் இயேசு. திருச்சட்டத்தையும் கடந்த போதனை ஒன்றை சமாரியன் தருகிறார்.
குற்றுயிராகக் கிடந்த நபருக்கு அந்நியராகத் தெரிந்த மூவரில் - குரு, லேவியர், சமாரியர் – சமாரியர் மட்டுமே அடுத்திருப்பவராக மாறுகிறார். அந்நியராக இருப்பதிலிருந்து அடுத்திருப்பவராக மாறுவது என்பது ஓர் இயக்கம். அந்த இயக்கம் வலி மிகுந்தது. தன் பயணத்தை நிறுத்தி, தன் திட்டங்களை மாற்றி, தன் நலனை ஒதுக்கி வைத்து மற்றவர் நலனை முன்வைக்கிற ஒருவர்;தான் அடுத்திருப்பவராக மாற முடியும்.
பரிவு அல்லது இரக்கம் என்பது நாம் முன்பின் அறியாதவர்களுக்குக் காட்டப்பட வேண்டும். நம்மைச் சாராத ஒருவர்மேல் நமக்குப் பரிவு வருகிறது என்றால் நாம் அனைவரையும் இறைவனில் அன்பு செய்யக்கூடிய நபராகக் காணத்தொடங்குகிறோம் என்பது பொருள்.
'நீரும் போய் அவ்வாறே செய்யும்!' என்கிறார் இயேசு. திருச்சட்டத்தை அறிதலில் அல்ல, மாறாக, அதைக் கடைப்பிடிப்பதில்தான் நிலைவாழ்வு அடங்கியுள்ளது என்பதை இங்கே உணர்த்துகிறார் இயேசு. அறிவார்ந்த நம் எண்ணங்கள் அல்ல, மாறாக, நம் செயல்பாடுகளே நாம் யார் என்பதை மற்றவருக்கு எடுத்துரைக்கின்றன.
முதல் வாசகத்தில், இறைவாக்கினர் யோனாவின் அழைப்பு நிகழ்வையும் அவர் தப்பித்து ஓடுவதையும் காண்கிறோம். ஆண்டவராகிய கடவுள் யோனாவை அழைத்து, நினிவே நோக்கி அனுப்புகிறார். அசீரியா நாட்டின் தலைநகரம் நினிவே. அசீரியர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்மீது கிமு 722-இல் படையெடுத்து அவர்களை அடிமைப்படுத்தியவர்கள். அசீரியர்கள் மற்றும் இஸ்ரயேல் மக்களின் திருமணக் கலப்பால் வந்த இனமே சமாரியர்கள். இஸ்ரயேல் மக்கள் அசீரியர்கள்மேல் கொண்டிருந்த இன வெறுப்பை யோனா தப்பி ஓடுதல் நிகழ்வு நமக்குக் காட்டுகிறது.
யோனா நினிவேக்கு எதிர்திசையில் பயணம் செய்கிறார். தன் இருத்தல் மறந்து தூங்குகிறார். தன்னைக் கடலுக்குள் மக்கள் தள்ளிவிட்டு தான் இறந்துவிடவும் துணிகிறார். இம்மூன்று நிலைகளில் அவருடைய தப்பி ஓடுதல் அல்லது அழைத்தல் நிராகரிப்பைக் காண்கிறோம்.
இவருக்கு எதிர்மாறாக, கப்பலில் இருந்த நபர்கள் ஆண்டவராகிய கடவுளைக் கண்டுகொள்பவர்களாகவும், அவர்மேல் அச்சம் கொண்டு அவருக்குப் பலி செலுத்துகிற நம்பிக்கையாளர்களாகத் திகழ்கிறார்கள்.
யோனா கடவுளிடமிருந்து தப்பி ஓட முயன்றாலும், ஆண்டவராகிய கடவுள் தான் ஏற்பாடு செய்திருந்தபடி ஒரு பெரிய மீன் அவரை விழுங்குமாறு செய்கிறார்.
அசீரியர்களுக்கு அந்நியராகவே இருக்க விரும்பினார் யோனா.
எரிக்கோவுக்குப் பயணம் செய்த நல்ல சமாரியனோ முன்பின் தெரியாத அந்நியருக்கும் அடுத்தவராக மாறுகிறார்.
யோனா கண்டுகொள்ளாமல் செயலாற்றுகிறார்.
சமாரியன் பொறுப்புணர்வுடன் செயலாற்றுகிறார்.
ஞாயிறு, 8 அக்டோபர் 2023
பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு
எசாயா 5:1-7. பிலிப்பியர் 4:6-9. மத்தேயு 21:33-43
கைமாறிய திராட்சைத் தோட்டம்
அது ஓர் அழகிய தோட்டம். அந்தத் தோட்டத்தைப் பார்த்துக்கொள்ள ஓர் ஆணும் ஒரு பெண். தோட்டத்தின் உரிமையாளரின் உருவிலும் சாயலிலும் இருந்த அவர்கள் தோட்டத்தின் கண்காணிப்பாளர்களாகவும், அதைப் பண்படுத்தவும் நியமிக்கப்பட்டனர். தோட்டத்தில் இருந்த கனிகளைப் பறித்து உண்டு வாழ்ந்த அவர்களுடைய கண்கள் விலக்கப்பட்ட இரு மரங்கள்மேல் இருந்தன. பாம்பின் சூழ்ச்சியால் நன்மை தீமை அறியும் மரத்தின் கனியைப் பிடுங்கித் திண்கிற பெண், ஆணுக்கும் அதைக் கொடுக்கிறார். உரிமையாளர் மாலையில் வந்தபோது இவர்கள் இருவரும் ஒழிந்துகொள்கிறார்கள். மரத்தின் கனி குறைவுபடுவதை அறிவார் அவர். 'கனியை நீ உண்டாயா?' எனக் கேள்வி கேட்கிறார் உரிமையாளர். ஆண் பெண்ணையும், பெண் பாம்பையும் விரல் நீட்டிக் காட்டித் தப்பித்துக்கொள்ள நினைக்கிறார்கள். பாம்பு, பெண், ஆண் என மூன்று பேரும் சபிக்கப்பட்டு, ஆணும் பெண்ணும் தோட்டத்தைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். தோட்டம் மீண்டும் உரிமையாளரின் கைக்கு மாறுகிறது.
விலக்கப்பட்ட கனியின்மேல் ஆசை, கடவுளைப் போல ஆக வேண்டும் என்னும் செருக்கு, எதிரியின் சொல்லைத் தேர்ந்து தெளிந்து பார்க்காத மந்த உள்ளம் ஆகியவற்றால் தோட்டத்தை இழக்கிறார்கள் நம் முதற்பெற்றோர்.
திராட்சைத் தோட்டம் கைமாறிய இரு கதையாடல்களை இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் வாசிக்கிறோம்.
முதல் கதையாடல் எசாயா இறைவாக்கினர் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசாயா இறைவாக்கினரின் பணித்தளத்தை வரையறுக்கிறது கவிதைபோல அமைந்துள்ள இப்பாடம். ஏனெனில், இதன் தொடர்ச்சியாக வரும் பகுதியில்தான் எசாயா ஆண்டவராகிய கடவுளால் பணிக்கு அழைக்கப்படுகிறார்.
'படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே. அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே. நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார். ஆனால், விளைந்ததோ இரத்தப்பழி. நேர்மை தழைக்கும் எனக் காத்திருந்தார். ஆனால் தழைத்ததோ முறைப்பாடு' என்று பாடல் நிறைவுபெறுகிறது.
ஓர் உரிமையாளர் தோட்டத்துக்குக் களையெடுத்து, கன்றுகளை நட்டு, கோபுரம் அமைத்து அதைக் காத்து, திராட்சைப் பழம் பிழிய ஆலையும் அமைக்கிறார். அதுபோல, ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை மற்ற இனத்தாரிடமிருந்து தேர்ந்தெடுத்து, அவர்களைக் கால் நனையாமல் செங்கடலைக் கடக்கச் செய்து, சீனாய் மலையில் கூட்டி வந்து அவர்களோடு உடன்படிக்கை செய்துகொள்கிறார். 'நாம் உங்கள் கடவுளாக இருப்போம். நீங்கள் என் மக்களாக இருப்பீர்கள்' என அவர்களை அரவணைத்துக்கொள்கிறார். பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டை அவர்கள் உரிமையாக்குமாறு அளிக்கிறார். அவர்களும் தாங்கள் கட்டாத வீடுகளில் குடியிருக்கிறார்கள், நடாத மரங்களின் கனிகளை உண்கிறார்கள், தோண்டாத கிணறுகளில் நீர் பருகுகிறார்கள். ஆனால், கடவுளின் உடன்படிக்கையை மறந்துவிட்டு, சிலைவழிபாட்டின் வழியாக அவருக்கு எதிராகப் பாவம் செய்கிறார்கள்.
திராட்சைக் குலைகளை எதிர்பார்த்திருந்த உரிமையாளருக்குக் கிடைத்ததோ காட்டுப் பழங்களே!
'எனக்கும் என் திராட்சைத் தோட்டத்துக்கும் இடையே நீதி வழங்குங்கள்!' எனக் கேட்கிறார் உரிமையாளர். தோட்டம் உரிமையாளருக்கு அநீதி இழைத்தது. ஏனெனில், உரிமையாளரின் நேரம், ஆற்றல், பணம், வளம் அனைத்தும் விரயமாகிவிட்டது. விரயமாகிவிட்ட எதுவும் ஈடுசெய்யப்பட வேண்டும் என்பதே நீதி.
உரிமையாளர் கோபம் கொண்டு வேலிகளை பிய்த்தெறிந்து தோட்டத்தைத் தீக்கிரையாக்குகிறார்.
ஆண்டவராகிய கடவுளும் இஸ்ரயேல் மக்களை பாபிலோனிய அடிமைத்தனத்துக்கு விற்றுவிடுகிறார்.
உரிமையாளர் தான் விரும்பியதைத் தன் தோட்டத்துக்குச் செய்கிறார். உரிமையாளரின் நற்குணத்தை தோட்டம் உணரவில்லை. தான் உட்கொண்ட உணவுக்கு ஏற்ற ஊட்டத்தை அது தரவில்லை.
நற்செய்தி வாசகத்தில், இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கி ஓர் உவமையை மொழிகிறார். நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து, பிழிவுக் குழி வெட்டி, காவல் மாடமும் கட்டித் தோட்டத் தொழிலாளர்களிடம் குத்தகைக்கு விடுகின்றார். அவர் அப்படி குத்தகைக்கு விடும்போது அவர்கள் நல்லவர்களாகத் தெரிகின்றனர். அல்லது நல்லவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கென்று எந்தக் குறையும் இல்லாதவாறு தலைவர் பார்த்துக்கொள்கின்றார். ஆக, தலைவர் அளவுக்கு மீறி நல்லவராக இருக்கின்றார். அல்லது தாராளமாக இருக்கின்றார்.
அவரது தாராள குணத்தையும், நன்மைத்தனத்தையும் பணியாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். தங்கள் தலைவர் தங்களிடம் தாராளமாக இருக்கிறார், ஆகவே தாங்களும் தாராளமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அப்படியே அதற்கு எதிர்மாறாக நடக்கின்றனர்.
பழம் பறிக்கும் காலம் நெருங்கி வருகிறது. தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்றுவரும்படி தலைவர் தம் பணியாளர்களை அனுப்புகிறார்.
(அ) தலைவருக்கு உரிய கனிகளைக் கொடுக்க மறுத்தனர் பணியாளர்கள். இது அவர்களுடைய பேராசையின் வெளிப்பாடு. ஆக, 'என்னுடையதும் என்னுடையது, உன்னுடையதும் என்னுடையது' என்ற மனப்பான்மை அவர்களிடம் வளர ஆரம்பிக்கிறது. இந்த மனப்பாங்குதான் திருட்டு மனப்பான்மை.
(ஆ) தலைவரது பணியாளர்களுக்குத் தீங்கிழைக்கின்றனர். இது அவர்களுடைய தீய எண்ணத்தைக் காட்டுகிறது. அதாவது, தலைவன்மேல் உள்ள கோபத்தைத் தலைவன்மேல் காட்டுவதற்குப் பதிலாக, அப்பாவிகளான பணியாளர்கள்மேல் காட்டுகின்றனர். அவர்களது தீய எண்ணம் அவர்களுடைய கோபத்தைவிடக் கொடுமையானது.
(இ) தலைவரது ஒரே மகனைக் கொன்று போடுகின்றனர். இது அவர்களுடைய பொறாமை உணர்வைக் காட்டுகிறது. 'என்னிடம் இல்லாத ஒன்று அவனிடம் இருக்கிறது' என்று எண்ணுகின்ற அவர்கள், திராட்சைத் தோட்டத்தை உரிமையாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன், தலைவரது ஒரே மகனை அழிக்கத் துணிகின்றனர்.
(ஈ) இவை எல்லாம் செய்யக் காரணம் ஒருவேளை திராட்சைத் தோட்டத்தில் கனிகள் இல்லாமல் இருந்திருக்கலாம். அதாவது, குத்தகைக்குத் தோட்டத்தை எடுத்த இவர்கள் தங்கள் சோம்பல் மற்றும் கண்டுகொள்ளாத்தன்மையால் தோட்டத்தை மண்ணில் புதைத்த தாலந்துபோல வைத்திருந்தார்கள். தலைவர் தங்கள்மேல் கோபப்பட்டுத் தங்களை அழிப்பதற்கு முன்பாகவே, தாங்கள் தலைவருக்குரியவர்களை அழித்துவிட நினைக்கிறார்கள்.
தலைவருக்கு இப்போது நேரிட்டது அநீதி. ஏனெனில், ஓராண்டு முழுவதும் தோட்டம் பலனற்றுப் போய்விட்டது.
கோபம் கொள்கிற தலைவர் கொடிய குத்தகைதாரர்களை அழித்துவிட்டு, தோட்டத்தை நீதியோடு செயல்படுகிறவர்களுக்கு அளிக்க முன்வருகிறார்.
உருவகப் பொருளில் பார்க்கும்போது, தோட்டம் என்றால் இறையாட்சி, தோட்டத்தின் உரிமையாளர் கடவுள், குத்தகைதாரர்கள் இஸ்ரயேல் மக்கள் (தலைமைக்குருக்கள், பரிசேயர்கள், மூப்பர்கள்), பணியாளர்கள் இறைவாக்கினர்கள், மகன் இயேசு கிறிஸ்து. கட்டுவோரால் விலக்கப்பட்ட கல் புறவினத்து மக்கள். ஆக, யூதர்களுக்கு உரித்தான இறையாட்சி புறவினத்து மக்களுடைய கைக்குச் செல்லும் என்பது உருவகங்கள் மொழிகிற பொருள் ஆகும்.
இந்த உவமையைக் கேட்கிற தலைமைக் குருக்களும் மூப்பர்களும் இயேசுவின்மேல் மிகவே கோபம் கொள்கிறார்கள். ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களை, 'நிராகரிக்கப்பட்ட மக்கள்' என்று புரட்டிப் போடுகிறார் இயேசு.
இவ்விரு கதையாடல்களையும் இணைத்துப் பார்க்கும்போது, இரு கதையாடல்களிலும் உரிமையாளருக்கு நீதி மறுக்கப்படுகிறது, உரிமையாளர் ஏமாற்றம் அடைகிறார், உரிமையாளரின் நற்குணம் நிராகரிக்கப்படுகிறது, உரிமையாளர் தோட்டங்களைப் பணியாளர்களிடமிருந்து பறித்து வேறு கைகளுக்கு மாற்றுகிறார்.
திராட்சைத் தோட்ட உருவகம் நமக்கு மூன்று நிலைகளில் பொருந்துகிறது:
(அ) திராட்சைத் தோட்டம் என்பது நம் வாழ்க்கை
நம்மைப் படைத்தவராகிய கடவுள் நம் ஒவ்வொருவருடைய கையிலும் வாழ்க்கை என்னும் திராட்சைத் தோட்டத்தைக் கொடுத்துள்ளார். அத்தோட்டத்தை நாம் பராமரிக்குமாறு நமக்கு உயிரையும் ஆற்றலையும் திறன்களையும் வழங்குகிறார். தோட்டத்தின் கனிகளை அவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். நம் சோம்பல், கண்டுகொள்ளாத்தன்மை, பதற்றம், தள்ளிப்போடுதல், அவசரம் போன்றவற்றால் நாம் பலன்கள் தராமல் இருக்கிறோம். சில வேளைகளில் நிறைய வேலைகள் செய்கிறோம், எந்நேரமும் பரபரப்பாக இருக்கிறோம், பல்வேறு அலுவல்களில் ஈடுபடுகிறோம். ஆனாலும், இருக்கிற இடத்திலேயே இருக்கிறோம். ஆண்டவராகிய கடவுள் எசேக்கியா அரசருக்குச் சொன்னதுபோல, 'உன் நாள்கள் நெருங்கிவிட்டன. உன் இல்லத்தை ஒழுங்குபடுத்து' என்று நம்மிடமும் சொல்கிறார்.
(ஆ) திராட்சைத் தோட்டம் என்பது நம் கிறிஸ்தவ நம்பிக்கை
திருமுழுக்கின் வழியாக நாம் இறையாட்சி என்னும் தோட்டத்தின் உரிமையாளர்களாக மாறியிருக்கிறோம். நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு என்னும் இறையியல் மதிப்பீடுகளைப் பெற்றிருக்கிறோம். ஆளும் பணி, புனிதப்படுத்தும் பணி, கற்பிக்கும் பணி என்று இயேசுவின் மூன்று பணிகளைச் செய்ய அழைப்பு பெற்றிருக்கிறோம். இறையன்பு, பிறரன்பு என்னும் கட்டளைகளால் வழிநடத்தப்படுகிறோம். இருந்தாலும், நாம் பெற்றிருக்கிற அழைப்புக்கு ஏற்ற வாழ்க்கையை வாழாதபோது நம் கிறிஸ்தவ நம்பிக்கை பலன்தராத தோட்டமாக, அல்லது காட்டுப் பழங்களைத் தருகிற தோட்டமாக மாறுகிறது. இப்படி இருக்கிற தோட்டம் சீக்கிரம் கைமாறிவிடும். ஏனெனில், கிறிஸ்தவம் என்பது நமக்கு வெறும் தலைப்பாக மட்டுமே உள்ளது.
(இ) திராட்சைத் தோட்டம் என்பது நம் உறவுநிலை
மனிதர்களாகிய நாம் அனைவரும் சமூக நபர்கள். உறவுநிலைகள் வழியாகவே நாம் இந்த உலகில் நிலைபெறுகிறோம். உறவுநிலைகள் நீதி, இரக்கம் என்னும் இரு தண்டவாளங்களில்தாம் பயணம் செய்கின்றன. ஒருவர் மற்றவரை நீதியுடன் நடத்த நமக்குக் கடமை உண்டு. பொறாமை, கோபம், மற்றவர்களை இகழ்ச்சியுடன் நோக்குதல், வன்மம் போன்றவற்றால் உறவு என்னும் திராட்சைத் தோட்டத்தை நாம் பலன்தர இயலாததாக மாற்றிவிடுகிறோம்.
நம் திராட்சைத் தோட்டம் கைமாறிச் சென்றுவிடாமல் காப்பாற்றிக்கொள்ள இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு வழிகாட்டுகிறது.
'எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்' எனச் சொல்கிற பவுல், 'அறிவெல்லாம் கடந்த இறைஅமைதி அவர்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்' எனப் பிலிப்பி நகரத் திருஅவைக்கு எழுதுகிறார். தொடர்ந்து, 'உண்மையானவை, கண்ணியமானவை, நேர்மையானவை, தூய்மையானவை, பாராட்டுதற்கு உரியவை, நற்பண்புடையவை, போற்றுதற்குரியவை போன்றவற்றை அவர்கள் கைக்கொள்ள வேண்டும்' என அறிவுறுத்துகிறார்.
அறிவைக் கடந்த அமைதி வழியாகவும், மேற்காணும் நற்பண்புகள் வழியாகவும் நம் திராட்சைத் தோட்டத்தை பேணி வளர்த்துக் கனிகொடுக்க முயற்சி செய்வோம்.
இறுதியாக, இன்றைய பதிலுரைப்பாடலில் நாம் பாடுவது போல, 'இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!' (காண். திபா 80:14) என நாம் தோட்டத்தின் உரிமையாளரிடம் மன்றாடுவோம். ஏனெனில், நாளின் இறுதியில் அவரே நம்மைத் தீக்கிரையாக்கவும், நம்மைத் தழுவிக்கொள்ளவும் வல்லவர்.
சனி, 7 அக்டோபர் 2023
பொதுக்காலம் 26-ஆம் வாரத்தின் சனி
திருத்தூதர் பணிகள் 1:12-14. லூக்கா 1:26-38
தூய செபமாலை அன்னை
அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தூய செபமாலை அன்னையின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இந்த மாதம் முழுவதும் செபமாலை மாதம் என்றும் அழைக்கப்படுகின்றது. திருத்தந்தை ஆறாம் பவுல் 1974ஆம் ஆண்டு, 'மரியாள் வணக்கம்' என்னும் தன் ஏட்டில், 'செபமாலை தன்னகத்தே கொண்டிருக்கின்ற மறையுண்மைகள் நற்செய்திப் பகுதிகளால் தூண்டப்பட்டவை. ஆக, செபமாலை செபிக்கும்போது நாம் நற்செய்தியின் நிகழ்வுகள் வழியாகப் பயணம் செய்கின்றோம். எனவே, இது நற்செய்தியின் இறைவேண்டல்' என எழுதுகின்றார்.
மகிழ்ச்சி, ஒளி, துன்பம், மற்றும் மகிமை என்னும் மறையுண்மைகள் வழியாக நம் வாழ்வின் மறையுண்மைகளையும் செபமாலையில் செபிக்கின்றோம்.
செபமாலை பற்றிய நம் புரிதல் என்ன?
(அ) முதலில் இது ஒரு மாலை. தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருப்பது மாலை. அல்லது தொடக்கமாக இருக்கும் ஒன்றே முடிவாகவும் அமைகிறது. அல்லது முடிவாக இருக்கின்ற ஒன்று புதிய தொடக்கமாக மாறுகிறது. நம் வாழ்வின் நிகழ்வுகள் மாலை போலவே நகர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த மாலையை நம் விரல்களுக்கு இடையில் உருட்டிப் பயணம் செய்யும் நாம், இறையன்பில் முடிவில்லாமல் வளர இறைவேண்டல் செய்கின்றோம்.
(ஆ) இறைவேண்டலின் மாலை. மாலையை உருட்டிச் செபிக்கும் வழக்கம் பௌத்தம் மற்றும் இந்து சமயங்களிலும் உள்ளது. செபமாலை தோன்றுவதற்கு முன்பு, துறவியர் கயிற்றில் முடிச்சுகளை இட்டு, அல்லது கூழாங்கற்களை மணலில் உருட்டி செபங்களை எண்ணிக்கொள்வதுண்டு. இறைவேண்டலை நினைவூட்டும் முடிச்சுகளே காலப்போக்கில் மாலையாக உருவெடுக்கிறது. திருப்பாடல்கள் 150ஐயும் முடிச்சுகளை உருட்டிக்கொண்டே அவர்கள் செபித்தனர். விவிலியப் பகுதிகள் எல்லாராலும் வாசிக்க இயலாமல் இருந்த அக்காலத்தில், நற்செய்தி நூல்களின் மையக் கருத்துகள் மட்டும் மறையுண்மைகளாகத் தொகுக்கப்பட்டு செபமாலை உருவாகியது. இயேசு கற்பித்த இறைவேண்டல், மங்கள வார்த்தை மன்றாட்டு, மற்றும் தமதிருத்துவ மன்றாட்டு ஆகியவற்றை இணைத்து செபிப்பதால் இது இறைவேண்டலின் மாலை.
(இ) மறையுண்மைகளின் மாலை. மகிழ்ச்சி, துயரம், மாட்சி, ஒளி என்று நாம் செபிக்கும் மறையுண்மைகள் நம் வாழ்வின் வாழ்வியல் உணர்வுகளாகவும் உள்ளன. இவ்வுணர்வுகளை நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், நம் அன்னை கன்னி மரியாவும் அனுபவித்தவர்களாக இருப்பதால், நம் உணர்வுப் போராட்டங்களில் அவர்கள் நமக்குத் துணை நிற்கின்றனர்.
இன்று செபமாலை நமக்கு அணிகலனாகவும், மோதிரமாகவும், செயல்திறன் பேசியின் செயலியாகவும் நம்மோடு எப்போதும் இருக்கிறது. இச்செபமாலையுடன் நாம் உடனிருக்க முயற்சி செய்தல் நலம். நாம் நகர்த்தும் ஒவ்வொரு மணிகளும் நம் வாழ்க்கையை இறைவன் நோக்கி நகர்த்துவனவாக!
செபமாலை செபிக்கும் நாம் ஒவ்வொரு பத்து மணியிலும் 'மறையுண்மைகளை' தியானிக்கின்றோம். இம்மறையுண்மைகளின் பொருள் மற்றும் அமைப்பை முதலில் புரிந்துகொள்வோம். 'மிஸ்டரி' என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ்ப்பதமே 'மறையுண்மை'. 'மிஸ்டரி' என்பதை 'மறைந்திருக்கின்ற அல்லது ஒளிந்திருக்கின்ற பொருள்' என்றும், 'நம்மை உள்ளடக்கிய ஒன்று' என்றும் புரிந்துகொள்ளலாம். நாம் செபமாலையின்போது சிந்திக்கும் சில மறையுண்மைகளின் பொருள் நமக்கு மறைவாக இருக்கின்றது. சில மறையுண்மைகளில் நாமே பங்கேற்கிறோம். எடுத்துக்காட்டாக, துயர மறையுண்மைகள் பற்றித் தியானிக்கும்போது நம் வாழ்வின் துன்பங்களையும் நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம்.
திருஅவை பல நூற்றாண்டுகளாக மூன்று வகை மறையுண்மைகளைத் தியானித்து வந்தது. 2002ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 'ஒளியின் மறையுண்மைகள்' என்று மேலும் ஒரு குழுவை இணைத்தார். குழுவுக்கு ஐந்து என மொத்தம் நாம் இருபது மறையுண்மைகளைத் தியானிக்கின்றோம்.
இந்த நான்கு குழுக்களாவன: (அ) மகிழ்ச்சிநிறை மறையுண்மைகள், (ஆ) துயர்நிறை மறையுண்மைகள், (இ) மாட்சிநிறை மறையுண்மைகள், மற்றும் (ஈ) ஒளிநிறை மறையுண்மைகள்.
இம்மறையுண்மைகளில் சில விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டும் - எடுத்துக்காட்டாக, இயேசுவின் உயிர்ப்பு, சில திருஅவையின் மரபு மற்றும் போதனையை அடிப்படையாகக் கொண்டும் - எடுத்துக்காட்டாக, அன்னை கன்னி மரியாவின் விண்ணேற்பு, அமைந்துள்ளன. மகிழ்ச்சிநிறை மறையுண்மைகளை திங்கள் மற்றும் சனிக் கிழமைகளிலும், துயர்நிறை மறையுண்மைகளை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும், மாட்சிநிறை மறையுண்மைகளை புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், ஒளிநிறை மறையுண்மைகளை வியாழக் கிழமைகளிலும் நாம் தியானிக்கின்றோம்.
நம் வாழ்வின் தருணங்களை மகிழ்ச்சி, துயரம், மாட்சி என வரையறுக்கலாம். இந்த மூன்று உணர்வுகளையும் ஊடுருவிச் செல்லும் ஒளி போல இறைவன் இருக்கின்றார். ஒவ்வொரு வாரமும் வெள்வேறு கிழமைகள் வரிசையாக வருவது போல, நம் வாழ்விலும் மகிழ்ச்சி, துயரம், மாட்சி என நிகழ்அனுபவங்கள் தொடர்ந்து வருகின்றன. நாம் எதையும் பற்றிக்கொள்ளாமல் நகர்ந்துகொண்டே இருக்கின்றோம்.
இன்றைய திருவிழா நமக்கு முன்வைக்கும் பாடங்கள் எவை?
(அ) இறைவேண்டலின் தாய் மரியா. இன்றைய முதல் வாசகம் (திப 1:12-14), அன்னை கன்னி மரியாவை மேலறையில் இறைவேண்டல் செய்கின்ற அன்னையாக முன்வைக்கின்றது. 'இதோ! உம் தாய்' என்று கல்வாரியில் சிலுவையின் அடியில், இயேசு யோவானிடம் தன் அன்னையை ஒப்புவித்தார். யோவானைத் தன் மகனாக ஏற்றுக்கொள்கின்ற மரியா ஒட்டுமொத்த திருத்தூதர்கள் குழாமையும் தன் பிள்ளைகள் என ஆக்கிக்கொள்கின்றார். மரியாவின் உடனிருப்பு இறைவேண்டலாக இருக்கின்றது. ஆக, உடனிருத்தலே முதல் இறைவேண்டல்.
(ஆ) சரணாகதி என்னும் இறைவேண்டல். நற்செய்தி வாசகத்தில், 'நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்று சரணாகதி அடைகின்றார். இந்த நிகழ்வின் வழியாக, சரணாகதி அடைதலே இறைவேண்டல் எனக் கற்றுக்கொடுக்கின்றார் மரியா.
உடனிருப்பும் சரணாகதியும் நம் வாழ்வின் மாலைகளாக இருப்பனவாக!
வெள்ளி, 6 அக்டோபர் 2023
பொதுக்காலம் 26-ஆம் வாரத்தின் வெள்ளி
பாரூக்கு 1:15-22. லூக்கா 10:13-16
உங்களைப் புறக்கணிப்பவர்
இயேசு எழுபத்திரண்டு பேரை அனுப்பும் நிகழ்வுக்கும், அனுப்பப்பட்டவர்கள் இயேசுவிடம் திரும்பும் நிகழ்வும் இடையே உள்ளது இன்றைய பாடப் பகுதி. திருந்த மறுத்த நகரங்களை இயேசு சபிக்கிறார். இயேசு சபிக்கும் நிகழ்வை அவருடைய கோபத்தின் அல்லது கையறுநிலையின் வெளிப்பாடு என எடுத்துக்கொள்ளலாம். நற்செய்தி வழங்குபவர் என்னதான் முயற்சிகள் எடுத்தாலும், அதை ஏற்று அதற்கேற்றாற்போல வாழ்வது மற்றவரை, அதாவது, நமக்கு வெளியிலிருப்பவரைச் சார்ந்தே அமைகிறது என்பதே நிதர்சனமான உண்மை. இயேசு வழங்கும் சாபங்களை எப்படிப் புரிந்துகொள்வது?
(அ) கொராசின், பெத்சாய்தா, கப்பர்நகூம் ஆகிய நகரங்கள் தங்களுடைய வளர்ச்சியை மையப்படுத்தியதாக இருந்தனவே தவிர, தங்கள் நடுவில் இருந்த இயேசுவையும் அவரை அனுப்பிய கடவுளையும் கண்டுகொள்ளவில்லை. ஆக, கண்டுகொள்ளாத்தன்மை அவர்களுடைய முதல் தவறு.
(ஆ) அவர்கள் தங்கள் முதன்மைகளைச் சரிசெய்யவில்லை. கடவுளையும் அவருக்கு உரியதையும் நாடாமல் தங்களுக்குரியதை – பெயர், புகழ், வளர்ச்சி – மட்டுமே நாடினார்கள்.
(இ) அவர்கள் குறுகிய பார்வை கொண்டிருந்தார்கள். தங்கள் முன்பாக நற்செய்தியை அறிவித்தவர்கள் சாதாரண மனிதர்கள் என்று பார்த்தார்களே தவிர, அவர்களை அனுப்பிய இயேசுவையும், அந்த இயேசுவை அனுப்பிய கடவுளையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.
இன்றைய முதல் வாசகத்தில், பாரூக்கு நூலில் உள்ள புலம்பல் பாடல் ஒன்றை வாசிக்கிறோம். இறைவாக்கினர் எரேமயாவின் செயலராக இருந்தவர் பாரூக்கு. நெபுகத்னேசர் பேரரசர் எருசலேம் நகரையும் ஆலயத்தையும் தீக்கிரையாக்கி மக்களை அடிமைகளாக பாபிலோனியாவுக்கு எடுத்துச்சென்றபோது எரேமியாவுடன் சென்றவர் பாரூக்கு. மக்கள் தங்களுக்குள்ளே, 'ஒவ்வொருவரும் நம் தீய உள்ளத்தின்போக்கில் நடந்தோம். வேற்றுத் செய்வங்களுக்குப் பணி செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் தீயன புரிந்தோம்' எனப் புலம்புகிறார்கள். இந்தப் புலம்பல் அவர்களுடைய துன்பத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. இந்தப் புலம்பலை அவர்கள் முன்னதாகவே எண்ணியிருந்தால் ஒருவேளை மனம் திரும்பியிருப்பார்கள். நேரம் கடந்த புலம்பலால் எந்தப் பயனுமில்லை. நேரம் கடந்த புலம்பல் பல நேரங்களில் நம் இழப்பின் வலியை அதிகரிக்கிறது.
'நம் வழிகளை ஆய்ந்தறிவதும் நம்மைப் படைத்தவரிடம் திரும்பி வருவதும் மனமாற்றம்' என்கிறது விவிலியம் (காண். புல 3:40). நாம் செல்லும் வழி பற்றிய தெளிவான பார்வை, விழிப்புநிலை, நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பற்றிய விமர்சனப் பார்வை, அவை வழியாகக் கடவுள் வழங்கும் செய்தியைத் திறந்த மனநிலையோடு ஏற்றல் ஆகியவை இருந்தால், நாம் ஆண்டவரையும் அவரை அனுப்பிய தந்தையையும் புறக்கணிக்காத வாழ்க்கையை வாழ்வோம்.
வியாழன், 5 அக்டோபர் 2023
பொதுக்காலம் 26-ஆம் வாரத்தின் வியாழன்
நெகேமியா 8:1-6,7-12. லூக்கா 10:1-12
ஆண்டவரின் மகிழ்வு
சீடத்துவத்துக்கான மூன்று பாடங்களை – வசதியின்மை ஏற்றல், முதன்மைகளைச் சரிபடுத்துதல், முடிவு எடுத்து முன்னேறிச் செல்தல் - மொழிகிற இயேசு, தமக்கு முன்பாக எழுபத்திரண்டு (அல்லது எழுபது பேரை) அனுப்புகிறார். இவ்வாறாக, இயேசுவின் பணியின் வட்டம் விரிவதுடன் பணியாளர்கள் எண்ணிக்கையும் உயர்கிறது. இருவர் இருவராக அவர்களை அனுப்புவதன் வழியாக ஒருவர் மற்றவருடன் இணைந்து செயல்படுவதற்கும் கற்றுக்கொடுக்கிறார். அறுவடை மிகுதியாகவே இருக்கிறது.
குறைவான பொருள்கள் கொண்ட பயணம், நிலையாக ஒரே வீட்டில் தங்குதல், காண்பவர் அனைவருக்கும் அமைதி மொழிதல், நோய்கள் நீக்கி நலம் தருதல், பேய்களை ஓட்டி நற்செய்தி அறிவித்தல், எதிர்ப்புகளைக் கண்டால் எதிர்கொள்தல் என அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
இயேசுவின் பணியாளருடைய வாழ்வு இயேசுவின் வாழ்வை ஒத்ததாக இருக்கிறது. அவர்கள் செய்கிற பணியும் இயேசுவின் பணியாகவே இருக்கிறது. இவ்வாறாக, இயேசுவின் நீட்சிகளாகச் செல்கிறார்கள் அவருடைய சீடர்கள்.
திருமுழுக்கின் வழியாகவும், திருநிலைப்பாட்டின் வழியாகவும் நாம் அனைவரும் இயேசுவின் நீட்சிகளாகச் செயல்படுகிறோம் எனில், நம் வாழ்வு அவருடைய வாழ்வைப் போல இருக்கிறதா? நாம் செய்கிற பணிகள் இயேசு செய்த பணிகளைப் போல இருக்கின்றனவா?
முதல் வாசகத்தில், 'ஆண்டவரின் மகிழ்வே உங்களுடைய வலிமை' என்னும் அழகான வாக்கியத்தை வாசிக்கிறோம்.
பாபிலோனிய நகருக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார்கள். செருபாபேல், எஸ்ரா ஆகியோர் தலைமையில் எருசலேம் ஆலயம் கட்டிமுடிக்கப்படுகிறது. எருசலேம் நகரின் மதில்களைச் சரிசெய்து, வாயில்களை நிலைநிறுத்துகிறார் நெகேமியா. அனைவரையும் ஒரே ஆளெனக் கூட்டுகிற எஸ்ரா அவர்கள்முன் திருச்சட்டத்தை வாசிக்கிறார். மக்கள் அழத்தொடங்குகிறார்கள்.
இவ்வளவு நாள்கள் பகைவரின் வசைமொழி மட்டுமே கேட்ட காதுகள் இப்போது ஆண்டவரின் சொற்களைக் கேட்கின்றன என்னும் மகிழ்ச்சி ஒரு பக்கம்.
இவ்வளவு பிரமாணிக்கமுள்ள ஆண்டவருக்கு எதிராகச் செயல்பட்டதற்காக மனம் வருந்தி அவர்கள் வடிக்கும் அழுகை இன்னொரு பக்கம்.
அவர்களின் அழுகையை நிறுத்தச் சொல்கிற எஸ்ரா, இல்லம் திரும்பி மகிழ்ந்திருக்குமாறும், இல்லாதவரோடு உணவைப் பகிர்ந்துகொள்ளுமாறும் அறிவுறுத்துகிறார்.
ஓர் அருள்பணியாளரின் பணி இதுவே. மற்றவர்களின் அழுகையை நிறுத்துவது. மற்றவர்களின் குற்றவுணர்வு, பயம், அவமான உணர்வு ஆகியவற்றைக் களைவது.
திருமுழுக்கிலிருந்தே மறைப்பணியாளர்களாகவும், அருள்பணியாளர்களாகவும் இருக்கும் நாம் ஒருவர் மற்றவருக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருதல் நலம்.
இன்று உரோமையில் தொடங்குகிற மாமன்றம் கூட்டியக்கம் பற்றிச் சிந்திக்கிறது. மாமன்றத்தில் பங்கேற்கும் அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்கிற வேளையில், ஒட்டுமொத்தத் திருஅவையும் திருமுழுக்கின் அழைப்பை ஏற்றுப் பதிலிறுக்க வேண்டும் என முயற்சி செய்வோம்.
புதன், 4 அக்டோபர் 2023
பொதுக்காலம் 26-ஆம் வாரத்தின் புதன்
நெகேமியா 2:1-8. லூக்கா 9:57-62
அழைப்பின் மேன்மையும் விலையும்
இயேசுவைப் பின்பற்ற விரும்பிய மூவர் இயேசுவை எதிர்கொள்ளும் நிகழ்வே இன்றைய நற்செய்தி வாசகம். இயேசு இம்மூவருடனும் உரையாடுகிறார். ஒவ்வோர் உரையாடலும் சீடத்துவத்தின் மேன்மை மற்றும் அதற்கு ஒருவர் தர வேண்டிய விலையையும் முன்மொழிகிறது.
(அ) உரையாடல் ஒன்று: வசதி என்னும் விலை
'நான் உம்மைப் பின்பற்றுவேன்' என்று ஒருவர் இயேசுவிடம் கூறுகிறார். அவருக்கு விடையளிக்கிற இயேசு, மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை என்கிறார். வசதி வாய்ப்புகள், சௌகரியங்கள் போன்றவற்றை இழத்தல் ஒருவர் சீடத்துவத்துக்குக் கொடுக்க வேண்டிய விலையாக இருக்கிறது.
(ஆ) உரையாடல் இரண்டு: முதன்மைகள் என்னும் விலை
தம்மைப் பின்பற்றி வருமாறு இயேசு ஒருவரை அழைக்க, அவரோ, 'தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதி தாரும்!' என்கிறார். 'இறந்தோர் அடக்கம் செய்யப்படுவார்கள்' என மொழிகிற இயேசு, 'நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்' என்கிறார். சீடத்துவத்தில் முதன்மைகள் சரிசெய்யப்பட வேண்டும். மேலும், கவனச்சிதறல்கள் அறவே கூடாது.
(இ) உரையாடல் மூன்று: திரும்பிப் பார்த்தல் என்னும் விலை
தானாக இயேசுவைப் பின்பற்ற விழைகிற ஒருவர், 'நான் போய் முதலில் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர வேண்டும்!' என்கிறார். 'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்க்கிறவர் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல' எனப் பதில் கூறுகிறார் இயேசு. இந்த உரையாடல் எலியா-எலிசா உரையாடலை நமக்கு நினைவூட்டுகிறது. எலிசா தான் அழைக்கப்பட்டபோது வீட்டுக்குச் சென்று தான் பயன்படுத்திய கலப்பையை உடைத்து விறகாக்கி, தன் எருதுகளை விருந்தாகப் படைக்கிறார். ஆனால், இங்கே உழுபவர் திரும்பிப் பார்த்தல் என்னும் உருவகத்தைப் பயன்படுத்துகிறார் இயேசு. திரும்பிப் பார்த்துக்கொண்டே உழுபவரின் வேகம் குறையும். அவர் தன் கால்களையும் காயப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், உடனடியாக முடிவெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிடுகிறார் இயேசு.
நம் வாழ்வின் அழைத்தல் மேன்மையாக இருக்கும்போது, அதனுடன் வருகிற வலிகளும் அதிகமாகவே இருக்கின்றன. வசதிக்குறைவுகள் ஏற்றல், முதன்மைகளைச் சரிசெய்தல், உடனடியாக முடிவெடுத்து முன்னேறிச் செல்தல் என்பவை இயேசு தருகிற சீடத்துவப் பாடங்களாக அமைகின்றன.
இந்த மூன்று பாடங்களையும் தன் வாழ்வில் செயலாற்றுபவராக நம் முன் நிற்கிறார் நெகேமியா. இன்றைய முதல் வாசகம், நெகேமியா நூலின் தொடக்கப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாரசீக நாட்டு மன்னரின் அரண்மனையில் இருக்கிற நெகேமியா எருசலேமில் உள்ள தன் மூதாதையரின் கல்லறைகளைச் சரி செய்ய விழைகிறார். எருசலேம் நகரைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருக்கிறது. இந்தப் பணியை ஏற்றால் அவர் எருசலேம் பயணம் செய்ய வேண்டும், நிறைய வசதிக் குறைவுகளைச் சந்திக்க வேண்டும். இருந்தாலும் புறப்படுகிறார். தான் போவதற்கு முன்பாக அரசரின் அனுமதி பெறுதல், வழிகளைக் கடப்பதற்கான அனுமதி பெறுதல், மரங்கள் வெட்டுவதற்கான அனுமதி பெறுதல் என முதன்மைகளைச் சரிசெய்கிறார். உடனடியாக முடிவெடுத்து அவர் முன்னேறிச் செல்லாவிட்டால், அரண்மனையில் அடிமையாகவே இருந்து தன் வாழ்வை முடித்திருப்பார். உடனடிச் செயல்பாடு சிறந்த தலைவராக அவரை உயர்த்துகிறது.
இன்று நாம் கொண்டாடுகிற அசிசி நகர் புனித பிரான்சிஸ் அனைத்தையும் துறந்தவராக, இயேசுவைப் பின்பற்றுகிறார். சீடத்துவத்தின் சிறந்த முன்மாதிரி இவர்.
நம் வாழ்வில் வலிகள் அதிகமாக இருந்தால், நாம் பெற்றிருக்கிற அழைப்பு மேன்மையானது என்பது பொருள். ஏனெனில், அழைப்பின் மேன்மை கூடக் கூட வலிகளும் கூடும்!
இன்றைய இறைமொழி
செவ்வாய், 3 அக்டோபர் 2023
பொதுக்காலம் 26-ஆம் வாரத்தின் செவ்வாய்
செக்கரியா 8:20-23. லூக்கா 9:51-56
எதிர்வினை குறைத்தல்!
லூக்கா நற்செய்தியின் இரண்டாம் பகுதி ஒரு நீண்ட பயணம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. கலிலேயாவில் தொடங்குகிற இயேசுவின் பயணம் சமாரியா, யூதேயா எனக் கடந்து விண்ணகத்தில் நிறைவுபெறுகிறது. பயணத்தின் இலக்கு விண்ணகம் என்பதை இயேசு அறிந்தவராக இருந்தார். ஆனால், அவருடைய இலக்கு எருசலேம் (யூதேயா) என்று நினைக்கிற சமாரியக் கிராமத்து மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்களின் நிராகரிப்பைக் காண்கிற யாக்கோபும் யோவானும் அவர்கள்மேல் கோபம் கொண்டு அவர்களை எரித்துவிடத் துணிகிறார்கள். 'வானிலிருந்து நெருப்பு பொழியச் செய்யவா?' என்னும் சொற்கள் அவர்கள் தங்களையே எலியா போல நினைத்துக்கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது. ஏனெனில் முதல் ஏற்பாட்டில், அகசியா அனுப்பிய தூதரும் அவருடன் சென்ற ஐம்பதின்மர்மேலும் (இரு முறை, இரு குழுவினர்) வானிலிருந்து நெருப்பு பொழியச் செய்து சுட்டெரிக்கிறார் எலியா (காண். 2 அர 1). அங்கே, அவர்களுடைய நோக்கம் இறைவாக்கினரை நோக்கியதாக அல்லாமல், குறிசொல்பவர்களை நோக்கியதாக இருந்ததால் அவ்வாறு நிகழ்கிறது. சீடர்களின் அவசரத்தையும் கோபத்தையும் இயேசு கடிந்துகொள்வதோடு, தம் பயணத்தின் பாதையையும் மாற்றிக்கொள்கிறார்.
இயேசு இங்கே நேர்முகமாகச் செயலாற்றுகிறார், தெளிவான நோக்கம் கொண்டிருக்கிறார். அவருடைய நோக்கம் விண்ணகம் நோக்கியதாக இருக்கிறது. சமாரியக் கிராமத்து மக்கள் எதிர்வினை ஆற்றுகிறார்கள். ஏனெனில், அவர்களுடைய பார்வை குறுகியதாக இருந்தது. யாக்கோபும் யோவானும் கோபம் கொண்டு எதிர்வினை ஆற்றுகிறார்கள். அவர்களுடைய பார்வையும் குறுகியதாக இருக்கிறது. மேலும், இயேசு நெருப்பைக் கொணர்கிறவர் அல்லர், மாறாக, இரக்கம் கொணர்கிறவர் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.
முதல் வாசகத்தில், அழகான சொல்லோவியம் ஒன்றை வாசிக்கிறோம். பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் எருசலேம் திரும்புகிறார்கள். இப்போது ஆண்டவர்தாமே எருசலேமின் நெருப்பின் மதிலாகச் சூழ்ந்து நின்று நகரையும் மக்களையும் காப்பாற்றுகிறார். சுற்றுச்சுவர் இல்லாத எருசலேம் அனைவரையும் ஈர்க்கும் தளமாக இருக்கிறது.
மற்ற இனத்தார் ஒருவர் மற்றவரை நோக்கி, 'நாம் ஆண்டவருடைய அருளை மன்றாடச் செல்வோம்' என மொழிகிறார்கள். இஸ்ரயேல் மக்கள் ஒவ்வொருவருடைய மேலாடையைப் பற்றிக்கொள்கிற பத்துப்பேர் 'கடவுள் உங்களோடு இருக்கிறார்' என நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு இருக்கிறோம் என அவர்களோடு வருகிறார்கள். இந்த நிகழ்வைக் கற்பனை செய்து பாருங்களேன்! பத்துப் பேர் நம்முடைய ஆடைகளைப் பிடித்துக்கொண்டு, 'நாங்களும் உன்னோடு வருகிறோம். ஏனெனில் கடவுள் உன்னோடு இருக்கிறார்!' என்று சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்!
மற்றவர்கள் கடவுளை நோக்கி வருவதோடல்லாமல், நாம் மற்றவர்களுக்குக் கடவுளின் உடனிருப்பைக் காட்டுகிறோம் என்பது இன்னும் நமக்கு மகிழ்ச்சி தருகிறது.
கடவுளின் உடனிருப்பு அனைவரும் நெருங்கி வரச் செய்கிறது. எல்லா எதிர்வினைகளும் குறைந்து நேர்முகமான செயல்பாடுகள் மலர்கின்றன. சில நேரங்களில் இயேசுவின் சீடர்கள்போல கடவுளை அருகில் வைத்துக்கொண்டே நாம் எதிர்வினை ஆற்றுகிறோம்.
இன்று நம் வாழ்வில், நாம் எதிர்வினைகள் குறைத்து நேர்முகமான செயல்பாடுகளை அதிகரித்துக்கொள்தல் நலம். பொறுமை காத்து, நிகழ்வுகளை அலசி ஆராய்ந்து பதிலிறுப்பு செய்தால் எதிர்வினைகள் குறையும்.
ஞாயிறு, 1 அக்டோபர் 2023
பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு
எசேக்கியேல் 18:25-28. பிலிப்பியர் 2:1-11. மத்தேயு 21:28-32
எண்ணத்தை மாற்றிக்கொண்டு
இன்றைய முதல் வாசகம் (காண். எசே 18:25-28) எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசேக்கியேல் இறைவாக்கினர் எரேமியாவின் சம காலத்தவர். இவர் தன் எருசலேம் நகர மக்களோடு பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்படுகிறார். தங்களது நகரமும் ஆலயமும் தகர்க்கப்பட்டதை கண்முன்னே கண்டவர்களுள் இவரும் ஒருவர். நாடுகடத்தப்பட்டவர்கள் தங்களது இந்த நிலைக்குக் காரணம் தங்கள் முன்னோர்களின் பாவம் என்றும், கடவுள் தங்களை அநீதியாக நடத்துகிறார் என்றும் முறையிடுகின்றனர். அந்த முறையீட்டுக்கு ஆண்டவராகிய கடவுள், இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாகத் தரும் பதிலிறுப்பே முதல் வாசகம். அவர்களின் செயலுக்கு அவர்களே பொறுப்பு என்று எடுத்துரைக்கின்றார் எசேக்கியேல். மேலும், இந்தப் பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டு மனம்திரும்ப வேண்டும் எனவும் அழைக்கின்றார்.
இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 2:1-11), பவுல் தன் நெஞ்சுக்கு நெருக்கமான பிலிப்பி நகரத் திருஅவைக்கு சில அறிவுரைகளை வழங்குகின்றார். பிலிப்பி நகர மக்கள் தன்னல பேராவல்களாலும், இறுமாப்பு மற்றும் பெருமித உணர்வாலும் அலைக்கழிக்கப்பட்டு, பிரிவினைகள் மற்றும் சண்டை சச்சரவுகளை வளர்த்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு இரண்டு நிலைகளில் பவுல் அறிவுறுத்துகிறார்: (அ) தாழ்ச்சியோடு ஒருவர் மற்றவரோடு உறவாட வேண்டும். (ஆ) கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்து, தங்களுக்குள்ளே சாக்குப் போக்குகள் சொல்வதைக் கைவிட வேண்டும். இரண்டாம் ஏற்பாட்டில் காணப்படும் கிறிஸ்தியல் பாடல்களில் மிகவும் அழகானதாக இருக்கின்ற ஒரு பாடலை எடுத்தாளுகின்ற பவுல், கிறிஸ்து கடவுளுக்கு இணையாக இருக்கும் நிலையை எந்தவொரு சாக்குப் போக்கும் சொல்லிப் பற்றிக்கொள்ளவில்லை என்றும், தன் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி நம்மைப் போல ஒருவரானார் என்றும் நினைவுறுத்துகின்றார் பவுல்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'இரு புதல்வர்கள்' எடுத்துக்காட்டை இயேசு முன்வைக்கின்றார். இயேசுவின் உவமைகளில், இது 'தன்னாய்வு உவமை வகையை' சார்ந்தது. அதாவது, உவமையைக் கேட்கும் ஒருவர், அந்த உவமையின் கதைமாந்தருள் ஒருவரோடு தன்னைப் பொருத்திப் பார்த்தி ஆய்வு செய்து அதற்கேற்ற பதிலிறுப்பு செய்ய வேண்டும். இறைவாக்கினர் நாத்தான், தாவீது அரசரிடம் சொன்ன, 'குடியானவனும் ஆட்டுக்குட்டியும்' என்னும் உவமையும் இவ்வகை உவமையைச் சார்;ந்ததே. ஆகையால்தான் உவமையைக் கேட்டு முடித்தவுடன், 'இச்செயலைச் செய்தவன் உடனே சாக வேண்டும்!' எனத் துள்ளி எழுகின்றார் தாவீது.
மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கும் இந்த உவமைக்கும், மத்தேயு நற்செய்தியாளரின் சில கூறுகளுக்கும் முக்கியமான வித்தியாசங்கள் இருக்கின்றன:
(அ) இளையமகன் ஏற்பு
இஸ்ரயேல் மக்கள் தங்கள் இலக்கியங்களில் பேணி வளர்த்த ஓர் அழகிய வாழ்வியல் கூறு இது: இளைய மகன் ஏற்பு. இஸ்ரயேல் தன் சமகாலத்தில் தன்னைச் சுற்றியிருந்த நாடுகள் அல்லது மக்களினங்கள் நடுவே மிகவும் சிறியதாக இருந்தது. மிகவும் சிறியதாக இருக்கும் தன்னை மட்டுமே ஆண்டவராகிய கடவுள் தேர்ந்துகொண்டு உடன்படிக்கை செய்ததாக பெருமைப்பட்டுக் கொண்டது. விவிலியத்தின் கதையாடல்கள் அனைத்திலும் இந்தக் கூறு மிளிர்ந்தது: ஆபிரகாமின் இல்லத்தில் மூத்தவரான இஸ்மயேல் தள்ளப்படுகிறார், ஈசாக்கு அள்ளப்படுகிறார். ஈசாக்கின் வீட்டில் ஏசா தள்ளப்படுகிறார், யாக்கோபு அள்ளப்படுகிறார். யாக்கோபின் வீட்டில் மூத்தவர்கள் தள்ளப்பட 11-ஆவது மகனான யோசேப்பு அள்ளப்படுகிறார். லூக்கா நற்செய்தியாளரின் 'காணாமல் போன மகன்' எடுத்துக்காட்டிலும், 'இளையமகன் ஏற்புடையவராகி இல்லம் திரும்புகின்றார். மூத்த மகனோ முணுமுணுத்தவாறு நிற்கின்றார்.' மத்தேயு நற்செய்தியின் தலைமுறை அட்டவணையிலும் இளையமகன்களே அதிகம் தென்படுவர். ஆனால், இங்கே, இந்த உவமையில் தந்தைக்கு ஏற்புடையவராக மாறுபவர், 'இளைய மகன்' அல்ல, மாறாக, மூத்த மகன்.
(ஆ) இறையாட்சி
மத்தேயு நற்செய்தியாளர் பெரும்பாலும் 'விண்ணரசு' என்னும் சொல்லாட்சியையே பயன்படுத்துகிறார். இங்கே அவர், 'இறையாட்சி' என்று பயன்படுத்துவது நம் ஆர்வத்தை அதிகமாக்குகிறது. 'இறையாட்சி' அல்லது 'இறையரசு' என்பது மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாட்சி.
(இ) வரிதண்டுவோரும் விலைமகளிரும்
'வரிதண்டுவோரும் பாவிகளும்' என்னும் சொல்லாட்சியே பெரும்பாலும் நற்செய்தி நூல்களில் பயன்படுத்தப்பட்டிருக்க, இந்த இடத்தில் மட்டும், 'வரிதண்டுவோரும் விலைமகளிரும்' என்னும் சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. 'விலைமகளிர்' என்னும் வார்த்தை தனியாக, 'காணாமல் போன மகன்' எடுத்துக்காட்டில் வருகிறது. அங்கே, இளைய மகனைச் சுட்டிக்காட்டி மூத்த மகன் இந்த வார்த்தையைச் சொல்கிறார் (காண். லூக் 15:30). 'வரிதண்டுவோரும் விலைமகளிரும்' என்னும் சொல்லாடல் வழியாக, மத்தேயு நற்செய்தியாளர் தன்னையும், முதல் ஏற்பாட்டு இராகாபையும் குறிப்பிட்டிருக்கலாம் என்பது என் கருத்து. ஏனெனில், மத்தேயுவின் சமகாலத்தவர்கள் பலர் இயேசுவை ஏற்றுக்கொள்ளாதபோது அவரே இயேசுவை முதலில் ஏற்றுப் பின்தொடர்கிறார். எரிக்கோ நகரை உளவு பார்க்கச் சென்ற இஸ்ரயேல் மக்களின் ஒற்றர்களை வரவேற்ற கானானிய விலைமகள் இராகாபு ஆண்டவராகிய கடவுளைத் தன் கடவுளாக ஏற்றுக்கொள்கின்றார்.
மேற்காணும், மூன்று சொல்லாட்சிகளும் இயேசுவின் சமகாலத்தில் அவருடைய இந்த உவமையைக் கேட்ட தலைமைக்குருக்களுக்கும் மறைநூல் அறிஞர்களுக்கும் பெரிய இடறலாக இருந்திருக்க வேண்டும்.
'வரிதண்டுவோரையும் விலைமகளிரையும்' அவர்களைவிட மூத்தவர்கள் என அழைப்பதோடு, இளைய மகன் ஒதுக்கப்படுகிறான் என்று இயேசு சொன்னது அவர்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும்.
இளைய மகனிடம் சொல் இருந்தது, ஆனால், செயல் இல்லை.
மூத்த மகனிடம் சொல் இல்லை, ஆனால், செயல் இருந்தது.
'சொல் பெரிதல்ல' என்பதை இங்கே, மலைப்பொழிவின் பின்புலத்தில் புரிந்துகொண்டால், 'என்னை நோக்கி, 'ஆண்டவரே! ஆண்டவரே!' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் நுழைவதில்லை' (காண். மத் 7:21) என்னும் வாக்கியத்தின் வழியாக, சொல்லை விட செயலே முக்கியம் என்பது தெளிவாகிறது.
இந்த உவமை நமக்குச் சொல்வது என்ன?
இந்த உவமையில் வரும் இளைய மகன், தவறான வாக்குறுதி தருகிறான் அல்லது தந்த வாக்குறுதியை மீறுகிறான். முகதுதிக்காக, தன் தந்தையை, 'ஆண்டவரே!' என அழைக்கிறான். ஆனால், தான் விரும்பியதைச் செய்கிறான்.
மூத்த மகன் ஒன்றே ஒன்றைச் செய்தான்: 'தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்'
அதாவது, தன் விருப்பத்திற்கு முரணாக அப்பாவின் விருப்பம் இருந்தாலும், அப்பாவின் விருப்பம் நோக்கித் தன் மனத்தைத் திருப்புகிறான்.
இதையே எதிர்மறையாக இயேசு அவர்களிடம், 'நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை' என்று தன் உவமையைக் கேட்பவர்களிடம் சொல்கின்றார்.
இன்று, நான் என் எண்ணத்தை இறைவிருப்பம் நோக்கி மாற்றிக்கொள்ளத் தயரா?
இறைவிருப்பத்திற்கு நான் முதலில், 'நோ!' ('இல்லை') என்று சொன்னாலும் பரவாயில்லை. என் எண்ணத்தை மாற்றிக்கொள்ள கடவுள் எனக்கு நேரம் கொடுக்கிறார். புனித அகுஸ்தினார் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். இல்லையா?
நிற்க.
இன்று நம் தாய்த் திருஅவை கூட்டியக்கத்துக்கான மாமன்றத்தின் இறுதி கட்டத்திற்குள் (முதல் அமர்வு) நுழைகிறது. மாமன்றத்தின் செயல்பாடுகளை ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்து அவருடைய தூய ஆவியாரின் துணையை நாடுவோம்.
வெள்ளி, 29 செப்டம்பர் 2023
பொதுக்காலம் 25-ஆம் வாரத்தின் வெள்ளி
தானியேல் 7:9-10, 13-14. யோவான் 1:47-51.
அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல் - விழா
கடவுளின் உடனிருப்பு
அதற்கு இயேசு, 'இதைவிட பெரியவற்றைக் காண்பீர். வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று நத்தனியேலிடம் கூறினார். (யோவான் 1:51)
இன்று அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.
வானதூதர்கள் பற்றிய நம்பிக்கை எப்படி உருவானது?
முதல் ஏற்பாட்டு நூல்களில் விடுதலைப்பயணம், நீதித்தலைவர்கள், தானியேல் போன்ற நூல்களில் அடிக்கடி வரும் ஒரு நபர் 'மலாக் எலோகிம்' (கடவுளின் தூதர்). ஆனால் 'மலாக் எலோகிம்' வானதூதர் அல்ல. முதல் ஏற்பாட்டு நூலின் ஆசிரியர்கள் கடவுள் என்ற பெயரை பயன்படுத்தாமல் சில நேரங்களில் 'கடவுளின் பிரசன்னம்' மற்றும் 'கடவுளின் தூதர்' என்னும் வார்த்தைகளை மரியாதை நிமித்தமாகப் பயன்படுத்தினர்.
முதன்முதலாக முதல் ஏற்பாட்டில் வானதூதர் என்ற சிந்தனை இஸ்ரயேல் மக்களின் பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின்பே வந்தது. யூப்ரடிஸ், டைக்ரீஸ் நதியோரங்களில் வாழ்ந்த மக்கள் கடவுள் நம்பிக்கையை விட கடவுளின் தூதர்கள் மேல் நம்பிக்கை வைத்தனர். இறக்கும் நம் முன்னோர் அனைவரும் கடவுளி;ன் தூதர்களாக மாறிவிடுகிறார்கள் என்பதும் அவர்களின் நம்பிக்கை. இந்தக் கடவுளின் தூதர்கள் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையே தூது செல்பவர்கள். இவர்கள் மேலுலக்கும் மானிடர் உலகுக்கும் இடையே செல்பவர்கள், இரண்டையும் இணைப்பவர்கள்.
தூதர்கள் என்பவர்களின் தலைவர்களே அதிதூதர்கள்.
வானதூதர்களின் மேல் உள்ள நம்பிக்கை கிறித்தவ மதத்தில் மட்டுமல்ல, மத்திய கிழக்கில் பிறந்த அனைத்து மதங்களுமே வானதூதர்கள் இருப்பதாக நம்புகின்றன. கிறித்தவர்களுக்கு, அதுவும் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல் என்னும் மூன்று அதிதூதர்கள் இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால் 'ஆர்த்தடாக்ஸ்' எனப்படும் கிறித்தவர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல், உரியேல், செயால்தியேல், யெகுதியேல், பராக்கியேல் மற்றும் யெராமியேல் என்னும் எட்டு அதிதூதர்கள் இருப்பதாக நம்புகிறார்கள்.
யூத மரபில் ஏழும், இசுலாமில் நான்கும், ஸோராஸ்டிரியத்தில் ஏழும் கடவுளின் அதிதூதர்களின் எண்ணிக்கை.
மிக்கேல் என்றால் 'மிக்கா ஏல்', அதாவது 'கடவுளுக்கு நிகர் யார்?' என்பது பொருள். பாரம்பரியமாக வலது கையில் ஒரு அம்பை வைத்து லூசிஃபர் என்னும் சாத்தானின் தலைவனை தன் காலடியில் போட்டிருப்பவராகவும், மற்றொரு கையில் சில நேரங்களில் தராசும், சில நேரங்களில் ஒலிவக் கிளையும் ஏந்தியவராகச் சித்தரிக்கப்படுகிறார். யாக்கோபு 1:9, தானியேல் 10:13, 12:1 மற்றும் திவெ 12:7 ஆகிய இடங்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் உண்டு.
கபிரியேல் என்றால் 'கபார் ஏல்', அதாவது 'கடவுளின் வல்லமை'. 'கடவுள் வல்லமையானவர்' என்றும் மொழிபெயர்க்கலாம். மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் வரும் இயேசுவின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளில் சக்கரியாவுக்கு, மரியாவுக்கு, யோசேப்புக்கு மற்றும் வானதூதர்களுக்கு 'மங்கள வார்த்தை' சொல்பவர் இவரே.
ரபேல் என்றால் 'ரஃபா ஏல்', அதாவது 'கடவுள் குணமாக்குகிறார்' என்பது பொருள். தோபித்து நூலில் (3:17, 12:15) தோபியாவின் கண்ணுக்குப் பார்வை அளிப்பவராக, தோபித்தின் மனைவி சாராவைப் பிடித்திருந்த பேயை வெளியேற்றுபவராக வருகிறார். தோபித்தின் பயணத்தில் உடனிருப்பவர் இவரே.
நாம் அன்பு செய்யும் அனைவருமே நம்மைச் சுற்றியிருக்கும் தூதர்கள் தாம். நாம் முன்பின் பார்த்திராத கடவுளை நமக்குக் காட்டுபவர்கள் இவர்களே. இவர்களே நமக்கு கடவுளாகவும், கடவுளின் வல்லமையாகவும், குணமாக்குபவர்களாகவும் நம் அருகில் வருகிறார்கள்.
இறைவனுக்கும், மனிதருக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இரண்டு இயல்புகளையும் உடையவர்கள் இவர்கள்.
கடவுளைப் போல காலத்தையும், இடத்தையும் கடந்து நின்றாலும், மனிதர்களைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள் இவர்கள்.
என்னைப் பொறுத்தவரையில் நம் குடும்பங்களில் அல்லது நம் நண்பர்கள் வட்டத்தில் இறந்த நம் முன்னோர்களும் காவல்தூதர்களே. இவர்கள் எந்நேரமும் நம்மைச் சுற்றி சுற்றி வருகிறார்கள். நாம் நம் அறையில் தனியாக இருந்தாலும், நெடுந்தூரம் பயணம் செய்தாலும் இவர்கள் அருகில் இருக்கிறார்கள்.
ஆக, அதிதூதர்கள் தரும் முதல் செய்தி 'உடனிருப்பு.'
நாம் தனிமையில் இல்லை. அவர்கள் என்றும் நம் உடனிருக்கிறார்கள்.
இரண்டாவது, நாமும் இந்த அதிதூதர்கள் போல பிறர்வாழ்வில் உடனிருக்க நம்மை அழைக்கிறார்கள்.
இன்று பல நேரங்களில் நமக்கு எல்லாம் இருப்பது போல இருக்கும். ஆனால், ஏதோ ஒரு தனிமை கன்னத்தில் அறைந்துகொண்டே இருக்கும். நான் தனிமையாக இருக்கிறேன் என புலம்புவதை விட்டு, அடுத்தவரும் அப்படித்தானே நினைத்துக் கொண்டிருப்பார் என அவரின் அருகில் சென்றால் நாமும் அதிதூதர்களே.
'கடவுளின் தூதர் ஏறுவதையும் இறங்குவதையும்' காட்சியில் காண்கிறார் யாக்கோபு (காண். தொடக்கநூல் 28:12).
தன் அண்ணன் ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமை மற்றும் தந்தையின் ஆசியைப் பெற்றுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் யாக்கோபு பெத்தேலில் கனவு காண்கின்றார். அந்தக் கனவில்தான் இந்தக் காட்சியைக் காண்கிறார். அதாவது, தன் வாழ்வின் தனிமையில்தான் கடவுள் அனுபவம் பெறுகிறார் யாக்கோபு.
'நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு திரும்பிவரச் செய்வேன்' என்று கடவுள் அவருக்கு வாக்குறுதி கொடுப்பதும் இக்காட்சியில்தான்.
ஆக, முதல் ஏற்பாட்டிலும் இரண்டாம் ஏற்பாட்டிலும் கடவுளின் தூதர்கள் பற்றிய செய்தி 'கடவுளின் உடனிருப்பை' நமக்கு உறுதி செய்கிறது.
இன்று ஒட்டுமொத்தமாக நம் எண்ணத்தில் குறைவுபடுவது இந்த உடனிருப்பு உணர்வே. இதை இன்றைய திருநாள் நிறைவுசெய்வதாக.
வியாழன், 28 செப்டம்பர் 2023
பொதுக்காலம் 25-ஆம் வாரத்தின் வியாழன்
ஆகாய் 1:1-8. லூக்கா 9:7-9.
ஏரோது குழப்பமுற்றார்!
'நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் கேள்வியுற்று மனம் குழம்பினான்' என்னும் வாக்கியத்தோடு தொடங்குகிறது இன்றைய நற்செய்தி வாசகம். புதிய ஏற்பாட்டில் நாம் ஐந்து ஏரோதுக்களைக் காண்கிறோம். (அ) பெரிய ஏரோது – குழந்தை இயேசுவைக் கொல்லத் தேடியவர் இவர். (ஆ) ஏரோது அர்க்கெலா – திருக்குடும்பம் எகிப்திலிருந்து திரும்பியபோது யூதேயாவை ஆட்சி செய்தவர். (இ) ஏரோது அந்திபா – திருமுழுக்கு யோவானைக் கொலை செய்தவர். (ஈ) ஏரோது பிலிப்பு - இவருடைய மனைவியைத்தான் ஏரோது அந்திபா தன் மனைவியாகக் கொண்டார். (உ) ஏரோது அக்ரிப்பா – பெரிய ஏரோதுவின் பேரனான இவரையே பவுல் சந்திக்கிறார்.
இன்றைய நற்செய்தியில் நாம் காண்பவர் ஏரோது அந்திபா ஆவார்.
இயேசுவைப் பற்றிக் கேள்விப்படுகிற ஏரோது, 'யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ?' எனக் குழப்பமுற்று அவரைக் காண வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார்.
யோவானின் தலை வெட்டப்படும் நிகழ்வு இயேசுவுக்காகக் காத்திருக்கிற மரண தண்டனையையும் இங்கே வாசகருக்கு நினைவுபடுத்துகிறது.
கேள்விப்படுதல், குழப்பமுறுதல், வாய்ப்பு தேடுதல் என்று மூன்று செயல்கள் இங்கே குறிப்பிடப்படுவதைக் காண்கிறோம்.
இயேசுவின் போதனைகளும் வல்ல செயல்களும் மக்களுடைய பேசு பொருளாக மாறுகின்றன. அவை ஆளுநரின் காதுகளை எட்டுகின்றன. இயேசு சாதாரண மக்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பேசுபொருளாக மாறுகிறார். இயேசுவைப் பற்றி மக்கள் வேறு வேறு கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கிறார்கள். அவர் மெசியாவாகவோ அல்லது இறைவாக்கினராகவோ இருக்கலாம் என நினைக்கிறார்கள்.
ஏரோது தேடிய வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. இயேசுவைக் காண்கிறார் அவர். தான் திருமுழுக்கு யோவானுக்குச் செய்தது போலவே இயேசுவுக்கும் செய்கிறார். அவரை இறப்புக்குக் கையளிக்கிறார்.
முதல் வாசகத்தில், தமக்கு ஆலயம் கட்டுமாறு ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் ஆகாய் வழியாகச் செய்தி அனுப்புகிறார். முந்தைய மாட்சியைவிட பிந்தைய மாட்சி மேன்மையானதாக இருக்கும் என்கிறார் ஆண்டவர்.
இறைவார்த்தையைக் கேட்கும்போது நாம் குழப்பம் அடைகிறோம்? குழப்பம் சில நேரங்களில் நம்மை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்கிறது. சில நேரங்களில் நம் உள்ளத்தைக் கடினமாக்குகிறது.
புதன், 27 செப்டம்பர் 2023
பொதுக்காலம் 25-ஆம் வாரத்தின் புதன்
எஸ்ரா 9:5-9. லூக்கா 9:1-6.
அவர்களை அனுப்பினார்
இன்றைய நற்செய்தி வாசகம் 'அதிகாரம்,' 'அறிவுரை,' 'அறிக்கை' என்னும் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. தம் பன்னிருவரையும் தம்மிடம் அழைக்கிற இயேசு பேய்கள் மற்றும் பிணிகள்மேல் தமக்கு உள்ள அதிகாரத்தை அவர்களுக்கும் அளிக்கிறார். இவ்வாறாக, அவர்களைத் தம் பணியின் பங்காளர்களாக மாற்றுகிறார். நற்செய்தி அறிவிக்குமாறு அவர்களை அனுப்புகிறார். அழைக்கப்படுபவர் அனைவருமே அனுப்பப்படுவர். அழைத்தலும் அனுப்பப்படுதலும் பணிவாழ்வு என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள் என உணர்த்துகிறார் இயேசு.
இரண்டாவதாக, அறிவுரைப் பகுதி. பணம் மறுப்பு, ஒரே அங்கி, வரவேற்கப்படுகிற இடத்தில் குடியிருப்பு, நிராகரிப்பை ஏற்றுக்கொள்தல் என்று அறிவுரை வழங்குகிறார் இயேசு. அனுப்பப்படுகிறவர் தன் வசதி வாய்ப்புகளைப் பற்றிய கவலையை விடுக்க வேண்டும், கடவுள் நம்மைப் பராமரிப்பவர் என்பதை உணர வேண்டும், மற்றவர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்வதன் வழியாக அவர்கள்மேல் சார்புநிலையை உருவாக்கிக் கொண்டாட வேண்டும், தங்களைச் சுற்றியிருக்கும் சூழல்கள் தங்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்தாதவாறு தற்காத்துக்கொள்ள வேண்டும், எந்த நேரத்தில் வெளியேறுவது என்பதை அறிந்தவர்களாக இருத்தல் வேண்டும் என்பது இயேசுவுடைய அறிவுரையின் உட்கூறுகள் ஆகும்.
மூன்றாவதாக, அனுப்பப்பட்ட பன்னிருவரும் ஊர் ஊராகச் சென்று நற்செய்தியை அறிவித்து உடல்நலமற்றவர்களுக்கு நலம் தருகிறார்கள். அதாவது, இயேசு தந்த அதிகாரமும், அறிவுரையும் உடனடியாகச் செயல்படுத்தப்படுகிறது.
திருமுழுக்கின் வழியாக நாமும் இயேசுவின் சீடர்கள் வட்டத்துக்குள் நுழைகிறோம். இயேசுவின் நற்செய்தி அறிவிப்பு, பேய்கள் ஓட்டுதல், நலம் தருதல் என்னும் பணிகளில் நமக்கும் பங்கு உண்டு. தீய ஆவிகள்மேலும் நோய்கள்மேலும் நமக்கும் அதிகாரம் உண்டு. இவற்றை நாம் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். பயன்படுத்தப்படாத எதுவும் அழிந்துபோகும் என்பது பரிணாமக்கொள்கையின் கூறு. நாம் பெற்றிருக்கிற கொடைகள் பற்றிய அக்கறை நமக்கு வேண்டும்.
இரண்டாவதாக, சிறுநுகர் வாழ்வு மற்றும் கடவுளின் பராமரிப்பின்மேல் நம்பிக்கை. இன்று பல இடங்களில் சிறுநுகர் வாழ்வு வாழ வேண்டுமென்று அறிவுரை வழங்கப்படுகிறது. உலகம் முன்மொழியும் சிறுநுகர் வாழ்வு பொருளாதாரம் சார்ந்ததாக, தற்சார்பை மையப்படுத்தி இருக்கிறது. ஆனால், இயேசு முன்மொழியும் வாழ்வு கடவுளையும் ஒருவர் மற்றவரையும் நாம் சார்ந்த சிறுநுகர் வாழ்வாக இருக்கிறது.
மூன்றாவதாக, நற்செய்தி அறிவிப்பு என்பது சான்றுவாழ்வு என மலர வேண்டும்.
முதல் வாசகத்தில், புதிய ஆலயத்தில் மக்கள் நடுவே நிற்கிற எஸ்ரா அவர்களுக்காக இறைவேண்டல் செய்கிறார். கடவுள் தங்களை அடிமைத்தனத்திற்குக் கையளித்தும், அடிமைகளாகவே ஆக்கிவிடவில்லை எனக் கடவுளின் கருணையைப் புகழ்கிறார். வாழ்வின் நிகழ்வுகளைப் பின்நோக்கிப் பார்க்கும்போது கடவுளின் கருணையே நம்மை ஆண்டுநடத்தி வந்ததை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.