Tuesday, July 9, 2019

யோசேப்பிடம் செல்லுங்கள்

இன்றைய (10 ஜூலை 2019) முதல் வாசகம்

யோசேப்பிடம் செல்லுங்கள்

தன்னுடைய சகோதரர்களால் விற்கப்பட்டு எகிப்துக்குச் சென்ற யோசேப்பு எகிப்தின் ஆளுநராக மாறுகின்றார். எகிப்தையும் அதன் சுற்றுப்புற நாடுகளையும் பஞ்சத்திலிருந்து காப்பாற்றுகின்றார். தன் அண்ணன்களுக்குச் சோறு தூக்கிச் சென்றவர் இரண்டு நாடுகளுக்குச் சோறிடும் அளவுக்கு உயர்கின்றார்.

யோசேப்பு கதையை வாசிக்கும்போதெல்லாம் என்னில் ஒரு கேள்வி எழுவதுண்டு. போத்திபாரின் மனைவி இவர்மேல் காமம் கொண்டு, 'என்னோடு படு! என்னோடு படு!' என்று சொன்னபோது, இவர் அவளுடன் படுத்திருக்கலாமே? அப்படிச் செய்திருந்தால் ஒருவேளை அவளுடைய நன்மதிப்பைப் பெற்று, அல்லது அவள் வழியாக கணவனின் நன்மதிப்பைப் பெற்று, அக்கணவன் வழியாக பாரவோனின் நன்மதிப்பைப் பெற்று ஆளுநர் ஆயிருக்கலாமே? யோசேப்பு ஏன் அந்த வழியைத் தேர்ந்துகொள்ளவில்லை? 

அதற்கான விடையை வாட்ஸ்ஆப்பில் என்னுடைய நண்பர் தனா இட்டிருந்த ஸ்டேட்டஸ் ஒன்றில் கண்டேன்: 'இளைஞனே, பாவம் என்பது நீ மனிதர்களைப் பொருள்களாக நடத்துவதுதான். உன்னையும் பொருளாக நடத்துவதுதான். உன்னையே பொருளாக மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிப்பதும் பாவம் தான். இதுதான் பாவம்.' 

யோசேப்பின் சகோதரர்கள் அவரை மிதியானியர்களிடம் விற்றபோது, அவரை ஒரு 'பொருளாக' ஆக்குகின்றனர். போத்திபாரின் மனைவி, 'என்னோடு இரு!' என்று யோசேப்பைக் கேட்டபோது, யோசேப்பு அவள் தன்னைப் பொருளாக்கிக்கொள்வதை மறுக்கின்றார். தான் ஒரு உடலின்பப் பொருளாக மாற்றப்படுவதை யோசேப்பு விரும்பவில்லை. அதன் விளைவு என்னவாக இருந்தாலும் பரவாயில்லை எனத் துணிகின்றார்.

நிற்க.

இன்றைய முதல் வாசகம் நம்முடைய வாழ்க்கை மேலாண்மைக்கான இரண்டு பாடங்களைக் கற்பிக்கின்றன.

அ. யோசேப்பு போல வாழ்வது

அப்படின்னா எப்படி? அடுத்தவர்கள் என்னைப் பொருளாக மாற்றிவிட்டார்களே என்று கவலைப்படவில்லை யோசேப்பு. 'அடுத்த என்ன?' என யோசிக்கிறார். புரியாத மொழி, விரும்பாத உணவு, முன்பின் தெரியாத நபர்கள், புதிய மண்வாசனை. தனக்கு முன் இரு வழிகள்: ஒன்று, பலிகடாவாக அழுதுகொண்டே இறந்து போவதா? அல்லது இரண்டு, தலைவனாக இருந்து வாழ்வதா? இரண்டாம் வழியைத் தெரிந்துகொள்கிறார். மற்றவர்களுக்குத் தலைவனாக இருக்க வேண்டும் என்றால் தனக்குத் தானே தலைவனாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கின்றார். தன்னுடைய இன்பம், தன்னுடைய உடனடி இன்பம், தன் சார்ந்த அனைத்தையும் ஆளுகின்றார். தன் வரையறையை உணர்கின்றார். தவறு செய்ய வாய்ப்புக் கிடைத்தாலும் தன் வாழ்க்கை தன் கையில் என்பதை அறிந்து உறுதியாக இருக்கின்றார். முடிவு, ஆளுநராக உயர்த்தப்படுகின்றார். 'யோசேப்பிடம் செல்லுங்கள். அவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்' என பாரவோன் மக்களை அவரிடம் அனுப்பும் அளவிற்கு அவர் நம்பிக்கைக்குரியவராக இருக்கின்றார்.

ஆக, யோசேப்பு போல வாழ்பவர்கள் தலைவர்களாக இருப்பர். நான் என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் என்னுடைய கன்ட்ரோல் எடுத்து வாழ்கிறேனா? அல்லது என்னுடைய கழுத்தின் கயிற்றை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு அவருடைய இரக்கத்தில் வாழ்கிறேனா? அவர் சிரித்தால் நான் சிரிப்பேன், அவர் அழுதால் நான் அழுவேன் என்று என்னுடைய புறச்சூழலில் என் வாழ்க்கையைக் கட்டுகிறேனா?

ஆ. அண்ணன்கள் போல வாழ்வது

யோசேப்பின் சகோதரர்களையும் பஞ்சம் விட்டுவைக்கவில்லை. பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிலும் பஞ்சம். எகிப்தை நோக்கி வருகிறார்கள். யோசேப்பு அவர்களைக் கண்டுகொள்கிறார். அவர்களால் யோசேப்பைக் கண்டுகொள்ள முடியவில்லை. யோசேப்பின் சகோதரர்கள், 'நமக்குத் துன்பம் ஏற்படக் காரணம் நாம் செய்த தவறே' என்றும், 'அவனது இரத்தம் நம்மிடம் ஈடு கேட்கிறது' என்றும் தங்களுடைய நிலைக்குத் தங்களுடைய இறந்தகாலத்தையும், தங்களுடைய விதியையும் காரணம் காட்டுகின்றனர். இதுதான் 'பலிகடா மனநிலை'. இந்த மனநிலையில் குற்றவுணர்வும் பயமும் மேலோங்கி இருக்கும்.

ஆங்கிலத் திரைப்படம் ஒன்றில், 'குற்றவுணர்வு என்பது அடிமைகளின் உணர்வு' என்று ஒரு வரி வரும். தங்கள் வாழ்விற்குத் தாங்களே தலைவர்கள் என நினைப்பவர்கள் ஒருபோதும் குற்றவுணர்வு கொள்ள மாட்டார்கள். ஏனெனில், தாங்கள் செய்த தவற்றிலிருந்தும் பாடம் கற்க அவர்கள் முயல்வார்கள். அல்லது தங்கள் தவற்றைத் தாங்களே சரி செய்ய முன்வருவார்கள். குற்றவுணர்வு கொண்டிருப்பவர்கள் அந்த உணர்விலேயே இருப்பதால் பொறுப்புணர்வை மறந்துவிடுவார்கள்.

இறுதியாக,

ஓர் உருவகம். 

வாழ்க்கை என்ற பால் அடுப்பில் இருக்கும்போது கொட்டிவிடுகிறது. 

கொட்டிய பாலை அப்படியே வழித்தெடுத்து இடத்தைக் கழுவி புதிய அடுப்பை பற்ற வைத்து புதிய பாலை ஊற்றுகிறார் யோசேப்பு.

கொட்டிய பாலை அப்படியே வைத்துக்கொண்டு, அதையே மிதித்து தங்கள் கால்களையும் இடங்களையம் அழுக்காக்கிக்கொண்டு, 'நீதான் கொட்டினாய்!' 'நான்தான் கொட்டினேன்!' 'அடுப்பு அதிகமாக எரிந்தது!' 'கல் சருக்கி பால் கொட்டியது!' என்று வெறும் பானையை வைத்து நிற்கிறார்கள் அண்ணன்கள்.

பால் உள்ளவரிடம்தானே ஊர் செல்லும்.

'யோசேப்பிடம் செல்லுங்கள்! அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்!'

நிற்க.

இன்று என் அப்பாவின் நினைவுநாள். இன்றோடு பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன.  அவருடைய பால் பாத்திரம் நிறையப் பொழுதுகள் கவிழ்ந்து விழுந்தன. ஆனால், அவர் தன்னுடைய வாழ்வில் அவர் எப்போதும் புதிய பாலை காய்ச்சிக்கொண்டிருப்பவராகவே இருந்தார். சில நேரங்களில் வெறும் பாத்திரத்தைக் காய்ச்ச வேண்டிய நிலை வந்தாலும் பாத்திரத்தைச் சூடாக வைத்திருப்பதில் உறுதியாக இருந்தார். அவர் எந்த நிலையிலும் தன்னை மற்றவர்கள் பொருளாக்கிக்கொள்ள அனுமதிக்கவில்லை. தானும் தன்னைப் பொருள் என்று கருதவும் இல்லை.

இப்பதிவு அவருக்கு அர்ப்பணம்.

3 comments:

  1. ஒரு பாசமிகு தந்தையின் நினைவு நாளன்று அவரைப்பற்றிய எண்ண அலைகளை அசைபோடும் ஒரு நேசமிகு தனயனின் அர்ப்பணம் தான் இன்றைய பதிவிற்கு உந்துதல்.ஆண்டுகள் பதினான்கு உருண்டோடினும் தன் தந்தை பற்றிய பசுமையான எண்ணங்களை ஊடு பயிராக விதைக்கிறார் இந்தப் பதிவில், இந்த பாசமகன்.
    திரு. கருணாநிதி அவர்களின் ஆன்மா இறைவனில் அமைதி கொள்வதாக!

    “ யோசேப்பிடம் செல்லுங்கள்!” தந்தையின் signature sentence என்று சொல்லுமளவுக்கு பரிட்சயமாகிப்போன வார்த்தைகள்.நம்மில் பலருக்கு நம் வாழ்வின்
    பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால் நாம் ஒரு பொருளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொழுதுகள் வேதனை தரும் நிழற்படமாக நம் கண்முன்னே நிழலாடும். அப்படிப்பட்ட
    நேரங்களை நம் வாழ்வில் தவிர்க்கவும்,ஒருவேளை மீண்டும் வந்தால் அதை மேற்கொள்ளவும் சில வழிமுறைகளைப் பழைய ஏற்பாட்டின் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து நமக்குப்பாடமாகத் தருகிறார் தந்தை.தன்னை ஒரு” பொருளாக” பயன்படுத்திய மக்கள் முன்னே கண்களைக்கசக்கிக்கொண்டு நில்லாமல் அதையே தனக்கு ஒரு பாடமாக எடுத்து “ “அடுத்து என்ன?” என்று யோசித்து தன்னை ஒரு தலைவனாக உயர்த்திக்காட்டிய யோசேப்பு நமக்கு ஒரு திசைகாட்டும் கருவி.அதே சமயம் தங்களின் சகோதரனுக்குத் தீங்கிழைத்த யோசேப்பின் சகோதர்ர்களையும் நமக்குப் பாடமாக முன் வைக்கிறார் தந்தை.ஒருவர் செய்த குற்றத்திலிருந்து பாடம் கற்று முன்னேற வேண்டுமேயொழிய அக்குற்றமே நம்மை முன்னேற விடாமல் தடுக்கும் ஒரு தடைக்கல்லாக,ஒரு பலிகடா மனநிலையாக அமைந்துவிடக்கூடாது என்கிறார்.’பால்’ பற்றிய உருவகம் அருமை!இதைத்தன் தந்தையின் வாழ்க்கையோடு இணைத்திருக்கும் விதம் அதைவிட அருமை.” பல பொழுதுகள் பால் பாத்திரம் ..............தானும் தனனைப் பொருள் என்று கருதவுமில்லை.” அருமையான தந்தைக்குப் பெருமை சேர்க்கும் மகன்.இத்தகைய அப்பாக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆனால் அத்தனை பேரும் தங்கள் தனயன்களால் பெருமையடைவதில்லை என்பதே கசப்பான உண்மை.கண்களையும்,மனத்தையும் ஒரு சேரக் கசிய வைத்த ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்! வாழ்த்துக்கள்!! பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. I still remember - in a blog you spoke about your first airline trip.

    ReplyDelete