Wednesday, July 3, 2019

சமூகப் பொறுப்புணர்வு

இன்றைய (4 ஜூலை 2019) நற்செய்தி (மத் 9:1-8)

சமூகப் பொறுப்புணர்வு

'இன்னைக்கு யாரு சார் யாரையும் பத்தி கவலைப்படுறா?' என்ற புலம்பல், கேள்வி, விரக்திஉணர்வு நம் காதுகளில் அடிக்கடி விழுகிறது.

தங்களைப் பற்றியே கவலைப்பட நேரம் இல்லாத மனிதர்களுக்கு மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட நேரம் எங்கிருந்து வரும்?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி இயேசுவிடம் தூக்கிக்கொண்டு வருகின்றனர். இயேசு குணமாக்குவதைக் கண்டு சிலர் முணுமுணுக்கின்றனர். சமூகத்தின் இரண்டு வகை மனிதர்களை இங்கே பார்க்கிறோம். தூக்கி வந்த மனிதர்கள் தங்களுடைய சக உதரன் (சகோதரன்) மேல் உள்ள பொறுப்புணர்வைக் காட்டுகின்றனர். முணுமுணுத்தவர்கள் தங்களுடைய பொறுப்புணர்வை மறந்ததோடல்லாமல், ஒட்டுமொத்த நிகழ்வின்மேல் காழ்ப்புணர்வு அல்லது கசப்புணர்வு காட்டுகின்றனர்.

முடக்குவாதமுற்றவருக்கு நலம் தந்த இயேசு, அவரிடம், 'உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு போ' என்கிறார்.

இது அவர் கொள்ள வேண்டிய பொறுப்புணர்வை அவருக்கு நினைவூட்டுவதாக இருக்கிறது. நலமில்லாத இருக்கும்போது அடுத்தவர் உன்மேல் பொறுப்புணர்வு காட்டுவர். நலமாயிருக்கும் நீ உனக்கு நீயே பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று இயேசு சொல்வதுபோல இருக்கிறது. ஆக, நான் அடுத்தவர்மேல் காட்ட வேண்டிய பொறுப்புணர்வையும், என்மேல் கொள்ள வேண்டிய பொறுப்புணர்வையும் ஒருசேரச் சொல்லிவிடுகிறார் இயேசு.

முணுமுணுக்கும் ஒருவர் தன் பொறுப்பைத் தட்டிக்கழிப்பார். அல்லது வேண்டா வெறுப்பாக நிறைவேற்றுவார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 22:1-19), தன் அன்பு மகன், தன் ஒரே மகன் ஈசாக்கை ஆபிரகாம் பலியிடத் துணிகின்றார். அவரிடம் எந்தவொரு முணுமுணுப்போ, வெறுப்போ இல்லை. மாறாக, 'இதோ! தருகிறேன்!' என்று கடவுளுக்குத் தான் கொடுத்த வார்த்தைகளுக்கு பொறுப்பேற்கின்றார் ஆபிரகாம். தனக்கு இழப்பு என்றாலும் அதை ஏற்கத் துணிகின்றார்.

பொறுப்புணர்வைச் செயல்படுத்த நாம் நிறையவற்றை இழக்க வேண்டும். முடக்குவாதமுற்றவரைத் தூக்கிக்கொண்டு வந்தவர்கள் தங்களுடைய நேரம், ஆற்றல், முதன்மையானவை அனைத்தையும் இழக்கின்றனர். ஆனால், இந்த இழப்பால் ஒருவர் நலம் பெறுகிறார்.

ஆபிரகாமும் தன் மகனைப் பலியிடுவதற்காகத் தூக்கிவந்தார். கடவுளின் உடனிருப்பால் தன் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டு இல்லம் செல்கின்றார்.

ஆக, இரண்டு கேள்விகள்:

(அ) இன்று நான் யாருடைய கட்டிலையாவது சுமக்க முன்வருகிறேனா?

(ஆ) என் கட்டிலை நான் சுமக்க மறுக்கிறேனா?


2 comments:

  1. “ பொறுப்புணர்வு” எனும் வார்த்தை “ கட்டில்” எனும் சொல்லோடு( பொருளோடு) உருவகப்படுத்தப்படுகிறது. என் கட்டிலை நான் சுமக்கவும்,எனக்கடுத்திருப்பவரின் கட்டிலை சுமக்கவும்...இரு வகையிலுமே எனக்கு பொறுப்பு உள்ளது என்பதை ஒருவர் உணரும்போது மட்டுமே அதை செயல் வடிவமாக்க இயலும்.இப்படிப் பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல், அதைத் தோள்மேல் சும்ப்பவர்களுக்குப் பலனும் இரட்டிப்பாகிறது என்பதைச் சொல்ல வருகிறது இன்றையப்பதிவு.” உன் கட்,டிலைத் தூக்கிக்கொண்டு போ” எனும் இயேசுவின் வார்த்தைகளைத் தந்தை “ நலமில்லாது இருக்கும் போது அடுத்தவர் உன்மீது பொறுப்பு காட்டுவர்; நலமாயிருக்கும் உனக்கு நீயே பொறுப்புணர்வு காட்ட வேண்டும்” எனும் அர்த்தமுள்ள வார்த்தைகளாகத் தந்தை மொழிபெயர்த்துள்ளது அழகு.இழக்கத் துணிந்த ஒருவரால் மட்டுமே பொறுப்புணர்வோடு இருக்க முடியும் எனபதற்கு அபிரகாம் எடுத்துக்காட்டு. தந்தையின் முதல் கேள்விக்கு நம் பதில் “ ஆம்” எனவும்,இரண்டாவது கேள்விக்கு “ இல்லை” எனவும் இருப்பின் நாமும் கூட சமூகப் பொறுப்புணர்வு உள்ளவர்களே!
    தான் வாழும் சமூகத்தின் மீது தனக்கிருக்கும் அக்கறையையும்,பொறுப்புணர்வையும் காட்டும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete