Wednesday, July 10, 2019

என்னை அனுப்பினார்

இன்றைய (11 ஜூன் 2019) முதல் வாசகம் (தொநூ 44:18-21, 23-29, 45:1-5)

என்னை அனுப்பினார்

இன்றைய முதல் வாசகத்தில் எகிப்தின் ஆளுநராக இருக்கின்ற யோசேப்பு தன்னை சகோதரர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். யூதா தன்னுடைய சகோதரர்கள் சார்பாக பகிர்ந்து பேசும் நிகழ்வில் மூச்சுக்கு மூச்சு, 'உம் பணியாளர்கள்' என்றும், 'உம் அடியார்கள்' என்றும், 'என் தலைவர்' என்றும் குறிப்பிடுகின்றார். தன்னை அடக்கிக்கொள்ள முடியாத யோசேப்பு கூக்குரலிட்டு அழுது தன்னை வெளிப்படுத்துகின்றார்.

யோசேப்பின் இறுதி வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை.

'நீங்கள் என்னை விற்றீர்கள் ... ஆனால் ஆண்டவர் என்னை அனுப்பினார்'

நீங்கள் நான் அழிந்து போக வேண்டும் என்று என்னை விற்றீர்கள்.

ஆனால், ஆண்டவர் உங்கள் உயிரைக் காக்குமாறு என்னை அனுப்பினார்.

என்ன ஒரு மிகச் சிறப்பான புரிதல்? என்ன ஒரு தாராள உள்ளம்?

இதையே மேலாண்மையியலில் புள்ளிகளை இணைத்தல் என்று சொல்கிறார்கள். வாழ்க்கையில் அன்றாட நிகழ்வுகள் ஏதோ தற்செயல் நிகழ்வுகள் போல நடந்தேறுகின்றன. ஆனால், உண்மையில் அவை எல்லாம் ஒன்றோடொன்று ஒட்டி நிற்கும் புள்ளிகள்.

நாம் சந்திக்கும் நபர்கள், செய்யும் செயல்கள் எவையும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல(ர்). இவை எல்லாவற்றிற்குமான நோக்கத்தை கடவுள் அறிந்திருக்கிறார்.

புள்ளிகளை இணைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

அ. அடுத்தவர் நமக்கு இழைத்த தீங்க பொருள்படுத்தக் கூடாது - யோசேப்பு தன் சகோதரர்கள் தனக்குச் செய்தது குறித்து முறையீடு செய்யவில்லை. தான் பட்ட கஷ்டங்களை அவர்களிடம் சொல்லவில்லை. தான் முன்னேறிய பாதை குறித்து பெருமை பாராட்டவில்லை. இப்போது அவர்களை அவர் அன்பு செய்கிறார். எப்படி? அவர்கள் தனக்கு நல்லது செய்தார்கள் என்பதற்காக அல்ல. மாறாக, நல்லது செய்யாவிட்டாலும் அவர்களை அன்பு செய்கிறார். இதையே பவுலடியாரும், 'அன்பு தீங்கு நினையாது' என்கிறார்.

ஆ. வாழ்க்கையை பெரிய வட்டமாகப் பார்க்கிறார்

'உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா' என்றால், உள்ளம் பெரிதானால் உலகம் பெரிதாகும். யோசேப்பின் உலகம் பெரிய உலகமாக இருந்தது. ஆகையால், சின்னக் கோடுகளை அவர் பொருள்படுத்தவில்லை.

இ. நேர்முகமாக செயலாற்றுவது

'நீ எனக்கு இப்படிச் செய்ததற்கு நான் உனக்கு இப்படிச் செய்வேன்' என்று வன்மம் பாராட்டாமல், நீ எனக்கு தீங்கு செய்தாலும் நான் உனக்கு நன்மை செய்வேன் என்று அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையானதைச் செய்ய முன்வருகிறார் யோசேப்பு.


2 comments:

  1. யோசேப்பைப் போல எந்நிலையிலும் வளர்ச்சிக்கு தேவையானதையே செய்ய முன்வருவோம்.
    " அவர்கள் என்னை விற்றார்கள்;
    ஆண்டவர் என்னை அனுப்பினார்."

    ReplyDelete
  2. பல சமயங்களில் நாம் அனுபவித்திருப்போம்....நம் சிந்தனையில் இல்லாத ஒரு மனிதரைப்பார்ப்பதும்,எந்த திட்டமும் இல்லாமல் ஒரு இடத்தைச் சென்றடைவதும்,செய்ய நினைத்ததை செய்ய இயலாமல் போவதும்,நினையாத ஒன்றை செய்து முடிப்பதும்.....நம்மை மீறி நடக்கும் செயல்களாகத் தோன்றலாம்.ஆனால் எந்த விஷயமுமே நம் வாழ்வில் தற்செயலாக நடப்பதில்லை. யாரோ ஒருவர் நமக்காகப் புள்ளிகள் வைத்து,அழகான கோலத்தையும் போட்டு விடுகிறார். “இறைவன்” என்று ஒருவர் இடும் பெயரை இல்லை..இல்லை அது மேலாண்மை என்று தந்தை போன்றவர்கள் சொல்லலாம்.எப்படியோ நல்லது நடக்கிறது யோசேப்பின் வாழ்வில் அவருக்கும்,அவரது சகோதரருக்கும் நடந்த நல்லவைகள் போல.யோசேப்பின் வாயினின்று உதிரும் ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு வாழ்க்கைப்பாடமாக அமைந்திடின்..... நம்மைச்சுற்றிய உலகம் எப்படி இருந்திடினும் அன்பை மட்டுமே மையமாக்க் கொண்ட ஒரு உலகத்தை நம்மால் அமைக்க முடிந்தால்!...சிறிய பெரிய மேடு பள்ளங்களைப் பொருட்படுத்தாத ஒரு உலகத்தை நமதாக்கினால்!.....யோசேப்பு போல தனக்குத் தீங்கிழைத்தவர்களுக்கும் அன்பை பரிசாகத் தந்தால்!...... நாம் புள்ளிகளை இணைத்தவர்கள் மட்டுமின்றி,அழகான கோலத்தைப் போட்டவர்களும் ஆவோம். எந்த சலனமுமின்றி ஓடும் நீரோடையில் கால் நனைத்த உணர்வைத் தந்த யோசேப்பு குறித்த விஷயங்களுக்கும்,அதை சாத்தியமாக்கிய தந்தைக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete