Sunday, July 7, 2019

இரவைக் கழிப்பதற்காக

இன்றைய (8 ஜூலை 2019) முதல் வாசகம் (தொநூ 28:10-22)

இரவைக் கழிப்பதற்காக

'இரவைக் கழிப்பது' ஒரு பெரிய கொடுமை. எப்போது?

இறந்தவர் வீட்டில் இறந்தவரின் உடலை வைத்துக்கொண்டு உறவினர்கள் அமர்ந்திருக்கும்போது.

நமக்கு நெருக்கமானவருக்கு உடல்நலம் இல்லாமல் போய் அவரோடு இரவில் உடனிருக்கும்போது.

உடல்நலம் சரியில்லை. மருத்துவமனைக்குப் போகப் பணமில்லை. காலையில் அரசு மருத்துவமனைக்குப் போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கும்போது.

நாம் வீட்டிற்குப் போக வேகமாக ஓடி வந்து கடைசிப் பேருந்தும் சென்றுவிட, இரவில் எங்கும் தங்க வழியின்றி காலை முதல் பஸ் வரும் வரை பேருந்து நிலையத்தின் நாற்காலியில் கொசு, சாக்கடை நாற்றம், தூசி, கையில் பை, தூங்கியும் தூங்காமல் விழிப்பு என்ற நிலையில் இருக்கும் போது.

நாம் விரும்புகிறோமோ விரும்பவில்லையோ சில நேரங்களில் இரவைக் கழிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் யாக்கோபு தன்னுடைய அண்ணனின் ஆசியை வாங்கிவிட்டு, அவன் கோபத்திலிருந்து தப்பி ஓடுகிறான். குற்றம் செய்பவர் மனது அமைதி கொள்ளாது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அம்மா, அப்பா, அண்ணன் என்று இருந்தவனின் வாழ்க்கை ஒரு மாலையில் மாறிவிடுகிறது.

இரவில் தனியாக இருக்கிறான்.

யாக்கோபு இங்கே மட்டும்தான் தன் வாழ்விலேயே தனியாக இருக்கின்றார்.

ரெபேக்காவின் வயிற்றில் ஏசாவோடு இருந்தார். வீட்டில் பெற்றோருடனும் அண்ணுனுடனும் இருந்தார். லாபான் வீட்டில் மாமாவோடும் இராக்கேலோடும் இருந்தார். கானான் திரும்பும்போது தன் மனைவியர் மற்றும் வேலைக்காரர்களோடு இருந்தார்.

அவர் தனியாக இருக்கும் இந்த இரவு மூன்று நிலைகளில் கொடுமையாக இருக்கிறது:

அ. தனிமை. இவர் தன்னுடைய இத்தனிமையில் தன் தாயை நிச்சயம் கடிந்திருப்பார். 'நான் அவசரப்பட்டிருக்கக் கூடாது,' 'அண்ணனுக்குரிய ஆசியை எடுத்திருக்கக்கூடாது' என நிறைய குற்ற உணர்வு கொண்டிருப்பார். நம்மால் ஒருபோதும் தனியாக இருக்க முடியாது. ஏனெனில், தனியாக இருக்கும்போது நம்முடைய பயம், கோபம், குற்றவுணர்வு, தாழ்வு மனப்பான்மை வேகமாக மேலோங்கி வரும். ஆக, இவற்றின் சத்தங்களை மறைக்க நாம் டிவி, ஃபோன் போன்றவற்றின் சத்தங்களைக் கூட்டிவிடுகிறோம்.

ஆ. கதிரவன் மறைந்துவிட்டான். இருட்டு. ஒன்றும் செய்ய முடியாத, எந்தப் பாதை எங்கு போகும் என்று தெரியாத, யார் எதிரில் இருக்கிறார், காலுக்குக் கீழ் என்ன கிடக்கும் என்று தெரியாத அளவுக்கு இருட்டு. இதே வெளி இருட்டுத்தான் அவரின் உள்ளத்திலும் இருந்திருக்கும். திக்குத் தெரியாமல் நிற்கிறார். இனி வீட்டுக்குத் திரும்புவோமா? அண்ணனை எப்படி எதிர்கொள்வது என்று நிறைய கேள்விகள் அவரில் எழுந்திருக்கும்.

இ. தலைக்கு வைக்க கல்

கல்லைத் தலைக்கு வைத்துக்கொண்டு தூங்குகிறார். சில இல்லங்களில் தலையணை கல் போன்று இருக்கும். தலையணை இல்லாத நேரங்களில் கைகளை சிலர் தலையணையாக்கிக் கொள்வர். கட்டில், மெத்தை, தலையணை என்று முந்தைய இரவு தூங்கிய யாக்கோபுக்கு இன்று கல்தான் கிடைத்திருக்கிறது. கல்லைத் தலைக்கு வைத்தால் ரொம்ப அழுத்தம். அசௌகரியம் தரும். அதையும் மீறி அவர் தூங்கியிருக்கிறார் என்றால் அந்த அளவிற்கு அவருடைய மனம் பாரமாக இருந்திருக்கிறது. மன பாரம் அதிகமாக இருக்கும் நம்மை அறியாமலேயே நாம் நிறைய தூங்குவோம்.

'தனிமை,' 'இருள்,' 'கல் தலையணை' என்று இந்த மூன்று எதிர்மறை எதார்த்தங்களில்தான் அழகான ஒன்று யாக்கோபுக்கு நடந்தேறுகிறது.

கனவு காண்கிறார். கனவில் வானதூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறார்கள். 'நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உனக்குத் தருவேன்' என வாக்களிக்கிறார்.

நாம் அமெரிக்க ஏர்போர்ட்டில் ஃப்ளைட்டுக்காக காத்திருந்து தூங்கிவிட, கனவில் ஆண்டவர், 'நீ தூங்கும் இந்த இடத்தை நான் உனக்குத் தருவேன்' என்று கனவில் சொன்னால் மனம் எப்படி குதிக்கும்?

கடவுள் மூன்று எதிர்மறை எதார்த்தங்களுக்கு எதிராக மூன்று நேர்முகமான எதார்த்தங்களை வாக்களிக்கின்றார்:

அ. உனக்கு நான் இந்த நிலத்தைத் தருவேன்.

ஆ. உனக்கு நான் ஆசி வழங்குவேன்.

இ. நீ எங்கு சென்றாலும் நான் உன்னோடு இருப்பேன்.

யாக்கோபும் அந்த இடத்தில் கடவுளின் பிரசன்னத்தைக் கண்டுகொள்கிறார்.

ஆக, என் வாழ்வின் இருட்டான நேரத்தில், தனிமையான நேரத்தில், கல் தலையணைத் தூக்க நேரத்தில் கடவுள் மிகப் பெரிய ஆசிகளை வழங்குகிறார்.

அவருடைய பெயர் போற்றப்பெருவதாக!


1 comment:

  1. வாழ்வின் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் ஒரு பதிவு.” தனிமை”....அதுவும் இருளின் பயத்தில்,தமையனின் ஆசீரை அபகரித்து விட்டக் குற்றவுணர்ச்சியோடு.....யாக்கோபுக்கு அந்த இரவு எப்படி இருந்திருக்கும் என ஊகிக்க முடிகிறது.என்னதான் எதிர்மறை உணர்வுகள் நம்மை அலைக்கழித்தாலும் “அவரையே” நம்பியிருப்போருக்கு அவரின் பிரசன்னம் தொடர்ந்து வரும் என்பதற்கு யாக்கோபின் அன்றைய இரவு ஒரு உதாரணம்.ஒருவர் தங்குமிடத்தை அவருக்குச் சொந்தமானதாக்குவதற்கும், நமது வாழ்வின் இருட்டான,தனிமைமிகு நேரங்களில் அவருடைய ஆசியையும்,உடனிருப்பையும் ஒருசேர உரிமை கொண்டாடுவதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் அவரது ஆசிகளை வேண்டி நிற்பதே! கேட்டதும் கொடுக்கும் தேவனவர்.கண்டிப்பாகப் போற்றப்பட வேண்டிய பெயர்தான் அவருடையது!
    தந்தைக்கு! தங்களின் அமெரிக்கக் கனவு நனவாக வாழ்த்துகிறேன்!!!

    ReplyDelete