Wednesday, July 17, 2019

பாலும் தேனும்

இன்றைய (18 ஜூலை 2019) முதல் வாசகம் (விப 3:13-20)

பாலும் தேனும்

இன்றைய முதல் வாசகம் நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. எரியும் முட்புதரிலிருந்து மோசேயை அழைக்கின்ற கடவுள் அவரை எகிப்துக்கு அனுப்புகின்றார். மோசேயின் தலைமையில் இஸ்ரயேல் மக்களை பாலும் தேனும் பொழியும் நாட்டுக்கு அழைத்துச் செல்வதாக வாக்களிக்கின்றார். மேலும், கடவுள் தன் பெயரை மோசேக்கு வெளிப்படுத்துகின்றார்.

பாலும் தேனும் பொழியும் நாடு!

மோசேயால் இதை எப்படி நம்ப முடிந்தது?

தன்னுடைய வாழ்நாளில் தான் கண்ட எகிப்து நாட்டோடுதான் அதைத் தொடர்புபடுத்திப் பார்த்திருப்பார். இல்லையா? நம்முடைய பார்வை எல்லாம் பெரும்பாலும் ஒன்றை ஒன்று தொடர்புபடுத்திப் புரிந்துகொள்வதாகவே இருக்கிறது. 'பஸ் வருகிறது' என்றால், 'பஸ்' என்ற ஒன்று நம் மூளையில் உருவமாக இருக்கிறது. வரப்போகிற பஸ்ஸை நம்முடைய மூளை அந்த உருவத்தோடு தொடர்புபடுத்திப்பார்க்கிறது.

'பாலும் தேனும் பொழியும் நாடு' என்பதைக் கடவுள் சொன்னபோது மோசே எந்த உருவத்தோடு அதை ஒப்பிட்டுப் பார்த்தார்?

முழுமையான செழுமை என்பதையே பாலும் தேனும் என்ற உருவகம் குறிக்கிறது.

குறைவின்றி இருக்கும் நாடு இறைவன் வாக்களிக்கும் நாடு.

குறைவின்றி இருக்கும் நாடு என்பது நாம் அடைய வேண்டிய இலக்காக இருக்க வேண்டும்.

இன்றைய நாளிலிருந்து இங்கு எங்களுடைய தலைமைத்துவப் பயிற்சி தொடங்கியது. எதிலும் சமரசம் செய்துகொள்ளாத தலைமைத்துவம், தலைவர்களை உருவாக்கும் தலைமைத்துவம் என்று அறிமுக உரைகள் இருந்தன.

'தலைவர் என்பவர் முதலில் தன்னுடைய உரிமையாளர். அவருக்குத் தன்னைப் பற்றிய எல்லாம் தெரியும். இவர் அனைத்தையும் தன்னகத்தே எடுத்துக்கொள்வார். இவரை மற்றவர்கள் பின்பற்றுமாறு இவர் அனைத்தின்மேலும் உரிமை கொண்டாடுவார்.'

மோசே இப்படிப்பட்ட தலைவராகத்தான் இருந்தார். ஆகையால்தான், தனக்கு வாய் திக்கும் என்பதையும், தன்னுடைய குறைகள் எவை என்னவென்பதையும் அறிந்திருந்தார்.

தன்மேல் உரிமை கொண்டிருக்கிற தலைவருக்கு தனக்கு வாக்களிக்கப்படும் அனைத்தும் தனக்குரியதாகத் தெரியும்.

தான் காணாத ஒன்றைக் கனவு கண்டு அக்கனவு நோக்கி மற்றவர்களை அழைத்துச் செல்பவர் தலைவர். மோசே நல்ல தலைவர். ஆகையால்தான், தான் கண்டிராத பாலும் தேனும் பொழியும் நாட்டை நோக்கி மற்றவர்களை அழைத்துச் செல்கின்றார்.

1 comment:

  1. “ பாலும்,தேனும் பொழியும் நாடு.” அப்படியொரு நாடு எப்படி இருக்க முடியும்? இப்படியொரு கேள்வி எல்லார் மூளையையும் ஏதோ ஒரு காலகட்டத்தில் குடைந்திருக்கும்.” குறைவின்றி இருக்கும் நாடு”, “ இறைவன் வாக்களிக்கும் நாடு” எனும் தந்தையின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது.இப்படிப்பட்ட ஒரு செழுமையான நாட்டிற்குத் தன் மக்களை அழைத்துச்செல்லும் ஒரு தலைவனுக்கான இலக்கணத்தை வரையறுக்கிறார் தந்தை.” தான் காணாத ஒன்றைக்கனவு கண்டு அக்கனவை நோக்கி மற்றவர்களை அழைத்துச்செல்பவர் தலைவர்; மோசே நல்ல தலைவர்; ஆகையால் தான், தான் கண்டிராத பாலும்,தேனும் பொழியும் நாட்டை நோக்கி மற்றவர்களை அழைத்துச்செல்கிறார்” என்கின்றன தந்தையின் வரிகள்,தற்சமயம் ஹவாய் தீவில் தந்தை ஈடுபட்டிருக்கும் ‘ தலைமைத்துவப் பயிற்சி’ அவர் இப்படி யொரு நல்ல தலைவனாக உருமாற உதவ வேண்டுமென வாழ்த்துகிறேன்!!!

    ReplyDelete