Wednesday, July 24, 2019

புனித யாக்கோபு

இன்றைய (25 ஜூலை 2019) திருநாள்

புனித யாக்கோபு

இன்று திருத்தூதரான புனித யாக்கோபுவின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் இயேசுவுக்கு மிக நெருக்கமான முதல் வட்டத்தில் இருந்த மூன்று திருத்தூதர்களில் - பேதுரு, யாக்கோபு, யோவான் - ஒருவர் இவர். இயேசுவுக்கு உறவினர். செபதேயுவின் மூத்த மகன். 'என்னைப் பின்பற்றி வாருங்கள்!' என்று சொன்னவுடன், வலைகளையும், படகுகளையும், படகுகளோடு தந்தையையும் வேலையாள்களையும் விட்டுவிட்டு வந்தவர்.

இயேசுவுக்கு வலப்புறம் அல்லது இடப்புறம் அமர விரும்பியவர்.

இந்த நிகழ்வைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம்.

'நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்களும் குடிக்க முடியுமா?' என்று இயேசு கேட்க, 'முடியும்' என்று சொன்னதோடு குடித்தும் காட்டியவர்.

ஸ்பெயின், போர்ச்சுகல், மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகவும் அதிகமாக வணக்கம் பெறுபவர். எருசலேம் திருஅவையின் தலைவர். தொடக்கத்திருச்சபையின் விருத்தசேதன பிரச்சினையை மிக அழகாகக் கையாண்டு தீர்வு கண்டவர்.

இயேசுவின் அருகில் ஆசை கொண்டதால் மற்ற பத்துப்பேரின் கோபத்திற்கு ஆளானவர்.

இவர் கேட்டது சரியா அல்லது தவறா என்று தெரியவில்லை. ஆனால், இயேசுவின் அருகில் அமர நினைப்பது சரியே!

Monday, July 22, 2019

புனித மகதலா மரியா

இன்றைய (22 ஜூலை 2019) திருநாள்

புனித மகதலா மரியா

'குறைவாக மன்னிப்பு பெறுபவர் குறைவாக அன்பு செய்கிறார். அதிகமாக மன்னிப்பு பெறுபவர் அதிகமாக அன்பு செய்கிறார். அல்லது அதிகமாக அன்பு செய்கிறவர் அதிகமாக அன்பு செய்யப்படுகின்றார்' - மகதலா நாட்டு மரியாவைப் பற்றி இயேசு சீமோன் என்னும் பரிசேயரிடம் (காண். லூக் 7:36-50) கூறும் மொழிகள் இவை.

'என் உயிர்க்குயிரான அன்பரை நீங்களேனும் கண்டீர்களா?' என்று தெருக்களிலும் நாற்சந்திகளிலும் தேடி அலையும் ஒரு இளவல் (காண். இபா 3:1-4) தன்னுடைய ஆண்டவரைக் கண்டுகொள்கிறாள்.

இயேசுவை அடக்கம் செய்த கல்லறைக்கு ஓடிச் சென்ற மகதலாம மரியா முன்பின் தெரியாத இரு ஆடவரிடம், 'என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர். அவரை எங்கே வைத்தனரோ தெரியவில்லை' என்கிறார்.

இவரின் இவ்வார்த்தைகள் ஆண்டவரைக் காணோம் என்ற பதற்றத்தையும், அந்த இடம் தெரிந்தால் தானே அவரை எடுத்துக்கொள்ள நினைக்கும் பேரார்வத்தையும் ஒருசேரக் குறிக்கின்றது. இப்போது அங்கே மூன்றாவது ஆடவர் ஒருவர் வருகிறார். அவரைத் தோட்டக்கரார் என நினைக்கிறார். ஆனால், 'மரியா' என்றவுடன், 'ரபூனி' ('என் போதகரே') எனப் பற்றிக்கொள்கின்றார் இயேசுவை.

'என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே' என்று சொல்லும் அளவுக்கு இயேசுவைப் பற்றிக்கொள்கின்றார் மரியா. நாம் யாரையாவது ரொம்ப அன்பு செய்கிறோம் என்றால் அவரை அப்படியே சின்ன உருவமாக்கி வாய்க்குள் போட்டு மென்று தின்று நம்முடையவராக்கிக்கொள்ள வேண்டும் என்று நம் மனம் துடிக்கும். அப்படித்தான் துடிக்கின்றது மகதலா மரியாவின் மனம்.

'என் ஆண்டவரைக் காணோம்' என்றவள், 'நான் ஆண்டவரைக் கண்டேன்' எனச் சீடர்களிடம் அறிவிக்க ஓடுகின்றாள்.

இதுதான் உயிர்ப்பு அனுபவம்.

ஏன் அவள், 'என் ஆண்டவர்' என்று சொல்லவில்லை?

'இயேசு எனக்கு வேண்டாம்' என்று நினைத்துவிட்டாளா?

அல்லது 'உயிர்த்த இயேசு எனக்கு வேண்டாம்' என்று நினைத்தாளா?

தன் இயேசுவை அவள் தியாகம் செய்தாளா?

'இனி என் இயேசு எல்லாருக்கும் பொதுவானவர்' என்று விட்டுவிட்டாளா?

அன்பின் இயல்பு இதுதான் என நினைக்கிறேன்.

அன்பு என்பது ஜென் அனுபவம் போன்றது என நினைக்கிறேன்.

ஜென் அனுபவத்திற்குள் நுழையுமுன் மலைகள் மலைகள் போலவும், ஆறுகள் ஆறுகள் போலும், கடல் கடல் போலவும் தோன்றும். ஜென் அனுபவத்திற்குள் இருக்கும்போது மலைகள் ஆறுகள் போலவும், ஆறுகள் கடல் போலவும், கடல் மலை போலவும் தோன்றும். ஜென் அனுபவம் முடிந்தவடன் மறுபடியும் மலைகள் மலைகள் போலவும், ஆறுகள் ஆறுகள் போலவும், கடல் கடல் போலவும் தோன்றும்.

'ஆண்டவர்' என்று நினைத்தாள்.

'என் ஆண்டவர்' என்று அன்பு செய்தாள்.

'ஆண்டவர்' என்று அறிவிக்க ஓடினாள்.

மகதலா மரியா!

Saturday, July 20, 2019

மாவு புளிக்கவில்லை

இன்றைய (20 ஜூலை 2019) முதல் வாசகம் (விப 12:37-42)

மாவு புளிக்கவில்லை

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நிகழ்வை வாசிக்கின்றோம்.

எத்தனை பேர் புறப்பட்டுச் சென்றார்கள் என்று பதிவு செய்கின்ற ஆசிரியர் இரண்டு வார்த்தைகளைக் பயன்படுத்தி இப்பயணத்தின் வேகத்தையும் அவசரத்தையும் காட்டுகின்றார்:

அ. 'மாவு இன்னும் புளிக்காமல் இருந்தது'

ஆ. 'ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே'

நம் ஊர்களில் இன்னும் புளிக்காரம் இரவிலேயே கலக்கப்படுகிறது. விடியும்போது புளித்த மாவு தயாராகிவிடுகிறது. மாவு புளிக்க நேரம் இல்லை.
இரவோடு இரவாக மக்கள் புறப்பட்டுச் செல்கிறார்கள். அந்த இரவில் இறைவன் அவர்களோடு விழித்திருக்கிறார்.

இன்று இறைவன் தருகின்ற செய்தி இதுதான்.

நம்முடைய மாவு புளிக்க முடியாமல் இருக்கும் அளவுக்கு நாம் அவசரமாக ஓடிக்கொண்டு இருக்கலாம். பல வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம். சோர்ந்து போய் இருக்கலாம். இந்த நேரங்களில் இறைவன் நம்மோடு விழித்திருக்கிறார். இறைவனின் இயல்பே விழித்திருப்பதுதான். ஆனால், நாம் கொஞ்சம் கண்களைக் கசக்கி அவரின் உடனிருப்பைக் கண்டுகொள்ள நம்மை அழைக்கிறார்.

மற்றொரு பக்கம். நாம் விட்டுப் புறப்பட வேண்டிய எகிப்து என்னும் எதிரியை உடனே விட்டுவிடத் தயாராக இருத்தல் அவசியம். விடிந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவது தவறு.

Wednesday, July 17, 2019

பாலும் தேனும்

இன்றைய (18 ஜூலை 2019) முதல் வாசகம் (விப 3:13-20)

பாலும் தேனும்

இன்றைய முதல் வாசகம் நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. எரியும் முட்புதரிலிருந்து மோசேயை அழைக்கின்ற கடவுள் அவரை எகிப்துக்கு அனுப்புகின்றார். மோசேயின் தலைமையில் இஸ்ரயேல் மக்களை பாலும் தேனும் பொழியும் நாட்டுக்கு அழைத்துச் செல்வதாக வாக்களிக்கின்றார். மேலும், கடவுள் தன் பெயரை மோசேக்கு வெளிப்படுத்துகின்றார்.

பாலும் தேனும் பொழியும் நாடு!

மோசேயால் இதை எப்படி நம்ப முடிந்தது?

தன்னுடைய வாழ்நாளில் தான் கண்ட எகிப்து நாட்டோடுதான் அதைத் தொடர்புபடுத்திப் பார்த்திருப்பார். இல்லையா? நம்முடைய பார்வை எல்லாம் பெரும்பாலும் ஒன்றை ஒன்று தொடர்புபடுத்திப் புரிந்துகொள்வதாகவே இருக்கிறது. 'பஸ் வருகிறது' என்றால், 'பஸ்' என்ற ஒன்று நம் மூளையில் உருவமாக இருக்கிறது. வரப்போகிற பஸ்ஸை நம்முடைய மூளை அந்த உருவத்தோடு தொடர்புபடுத்திப்பார்க்கிறது.

'பாலும் தேனும் பொழியும் நாடு' என்பதைக் கடவுள் சொன்னபோது மோசே எந்த உருவத்தோடு அதை ஒப்பிட்டுப் பார்த்தார்?

முழுமையான செழுமை என்பதையே பாலும் தேனும் என்ற உருவகம் குறிக்கிறது.

குறைவின்றி இருக்கும் நாடு இறைவன் வாக்களிக்கும் நாடு.

குறைவின்றி இருக்கும் நாடு என்பது நாம் அடைய வேண்டிய இலக்காக இருக்க வேண்டும்.

இன்றைய நாளிலிருந்து இங்கு எங்களுடைய தலைமைத்துவப் பயிற்சி தொடங்கியது. எதிலும் சமரசம் செய்துகொள்ளாத தலைமைத்துவம், தலைவர்களை உருவாக்கும் தலைமைத்துவம் என்று அறிமுக உரைகள் இருந்தன.

'தலைவர் என்பவர் முதலில் தன்னுடைய உரிமையாளர். அவருக்குத் தன்னைப் பற்றிய எல்லாம் தெரியும். இவர் அனைத்தையும் தன்னகத்தே எடுத்துக்கொள்வார். இவரை மற்றவர்கள் பின்பற்றுமாறு இவர் அனைத்தின்மேலும் உரிமை கொண்டாடுவார்.'

மோசே இப்படிப்பட்ட தலைவராகத்தான் இருந்தார். ஆகையால்தான், தனக்கு வாய் திக்கும் என்பதையும், தன்னுடைய குறைகள் எவை என்னவென்பதையும் அறிந்திருந்தார்.

தன்மேல் உரிமை கொண்டிருக்கிற தலைவருக்கு தனக்கு வாக்களிக்கப்படும் அனைத்தும் தனக்குரியதாகத் தெரியும்.

தான் காணாத ஒன்றைக் கனவு கண்டு அக்கனவு நோக்கி மற்றவர்களை அழைத்துச் செல்பவர் தலைவர். மோசே நல்ல தலைவர். ஆகையால்தான், தான் கண்டிராத பாலும் தேனும் பொழியும் நாட்டை நோக்கி மற்றவர்களை அழைத்துச் செல்கின்றார்.

Tuesday, July 16, 2019

அப்பக்கமாகச் செல்வேன்

இன்றைய (17 ஜூலை 2019) முதல் வாசகம் (விப 3:1-6, 9-12)

அப்பக்கமாகச் செல்வேன்

பாரவோனின் அரண்மனையில் இளவரசர்களோடு இணைந்து நகரங்களைத் திட்டமிட்டுக் கட்டிக்கொண்டிருந்த மோசேயின் வாழ்க்கை ஓரிரவில் மாறிப்போகின்றது. தன் இனத்தானுக்கு நல்லது செய்யப்போய் அது அவருக்கே ஆபத்தாக முடிகிறது. தன் நிலையை நொந்துகொண்டு, தனக்குத் தெரியாத ஒருவரின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மோசேயைத் தேடி வருகிறார் கடவுள்.

'ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்தக் காட்சியைக் காண அப்பக்கமாய்ச் செல்வேன்!' என விரைகிறார் மோசே.

தனக்கு வித்தியாசமாகத் தெரிகிற அனைத்தின்மேலும் கண்களைப் பதிக்கின்றார் மோசே.

இதுவே இவருக்கு வெளிப்பாடாக அமைகிறது.

ஒன்றுமே செய்யாத மனது, அல்லது ஒரு வேலையும் இல்லாத மூளைதான் எல்லாவற்றையும் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும். தேர்வறையில் இது அடிக்கடி நடக்கும். விடை தெரிந்த மாணவர்கள் வினாக்களுக்கு விடைகள் எழுதிக்கொண்டிருப்பார்கள். விடை தெரியாதவர்கள்தாம் பேனா மூடி, பேனா, ஸ்கேல் என எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்துகொண்டு அவற்றில் இருக்கும் எழுத்துக்களை வாசித்துக்கொண்டிருப்பர்.

மோசேயின் கண்கள் முன் ஆடுகள் இருந்தாலும் அவருடைய மனம் ஏனோ அதில் இலயிக்கவில்லை.

தனக்குப் பிடிக்காத அல்லது தனக்குத் தெரியாத ஒரு வேலையை உடனடியாக விடத் தயாராக இருக்கின்றார்.

'சாதரணவைகளுக்காக அல்லது சாதாரணவைகளில் ஒருபோதும் இலயித்துவிடாதே' ('don't settle down for the ordinary') என்பார்கள். மோசே கண்களை உயர்த்திப் பார்க்கின்றார். கடவுளையே காண்கின்றார்.

இன்று நான் மேய்த்துக்கொண்டிருக்கும் ஆடுகள் எவை? அவற்றின் மேலிருந்து என் கண்களை உயர்த்த நான் தயாரா?

Monday, July 15, 2019

நீராட வந்தவள்

இன்றைய (16 ஜூலை 2019) முதல் வாசகம் (விப 2:1-15)

நீராட வந்தவள்

விவிலியத்தில் நிறைய வியப்புக் கதைகள் உள்ளன. வயதானவர்களுக்கு குழந்தை பிறக்கும், கன்னிப் பெண்ணுக்கு குழந்தை வாக்களிக்கப்பெறும், நானூறு ஆண்டுகளாக அடிமை வேலை செய்தவர்கள் எகிப்திய பாரவோனையும் அவனுடைய படைகளையும் கடலில் ஆழ்த்துவர், சுற்றி வந்தே எரிக்கோவின் மதில்களை உடைப்பர், இளைஞன் ஒருவன் ஒரு கவனைக் கொண்டு பெரிய பிலிஸ்திய வீரனை வீழ்த்துவான். இப்படி நிறைய.

இன்றைய முதல் வாசகத்தில் நீராட வந்த பாரவோனின் மகள் ஒரு குழந்தையைக் கண்டெடுக்கிறாள்.

'எபிரேயக் குழந்தை அது' என்று தெரிந்தும் அதை வளர்க்கின்றாள்.

வாசகத்தின் இறுதியில், எபிரேயன் ஒருவன் மோசேiயைக் கண்டுகொள்ள மறுக்கின்றான்.

எபிரேயர் அல்லாத ஒருத்தியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மோசே,

எபிரேயர் ஆன தன் இனத்தாருள் ஒருவரால் எகிப்தைவிட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகிறார்.

முதலாவது, ஆச்சர்யம்.

இரண்டாவது, அதிர்ச்சி.

ஆச்சர்யமும் அதிர்ச்சியும் திடீரென நடப்பவைதாம்.

ஆச்சர்யம் நேர்முக விளைவை ஏற்படுத்துகிறது.

அதிர்ச்சி எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது.

ஆற்றில் இடப்பட்ட மோசேக்கு பாரவோனின் அரண்மனை வளர்ப்பும் தேவைப்பட்டது. பாலைவன அனுபவமும் தேவைப்பட்டது.

அரண்மனையில் தன் மாற்று அன்னையின் அரவணைப்பைக் கண்டார்.

பாலைவனத்தில் தன் இறைவனையே கண்டார்.

ஆக, ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும் இறைவனின் செயல்களே.

இரண்டும் நமக்குத் தேவை.

Thursday, July 11, 2019

சாகத் தயார்

இன்றைய (12 ஜூலை 2019) முதல் வாசகம் (தொநூ 46:1-7, 28-30)

சாகத் தயார்

நமக்கு மிகவும் பிடித்த ஒருவர் திடீரென வெளிநாடு அல்லது வெளி மாநிலம் போய்விட்டார் என வைத்துக்கொள்வோம். அவரை நாம் மீண்டும் காணும்போது அப்படியே ஓடிப்போய் அவரை இறுகப் பற்றிக்கொள்வோம். கொஞ்ச நாள் மறைந்திருந்து பின் காணும்போதே இவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால், இறந்துவிட்டார் என்று சொல்லப்பட்ட ஒருவர் மீண்டும் கிடைத்தால் அது எவ்வளவு பெரிய மகிழ்ச்சியைத் தரும்!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 10:16-23), இயேசு தன் சீடர்களிடம், 'ஓநாய்களிடையே ஆடுகள் போல அனுப்புகிறேன். பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப் போல கபடற்றவர்களாகவும் இருங்கள்' என்று சொல்லி அனுப்புகிறார்.

யோசேப்பின் எகிப்து வாழ்வு ஓநாய்களிடையே ஆடு போல இருந்தாலும், அவர் முன்மதி உடையவராக, கபடற்றவராக இருக்கிறார். அதனால்தான், ஆளுநராக மாறுகின்றார். அதனால்தான் தன்னுடைய சகோதரர்களை மன்னிக்கின்றார்.

'நான் உங்களுக்குத் தீங்கிழையேன்' என்று சொல்கின்ற யோசேப்பு அதை உண்மையாக்கும் பொருட்டு, தன்னுடைய தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களை எகிப்திற்கு வந்து குடியேற அழைக்கின்றார். அவர்களும் புறப்பட்டு வருகின்றார்கள். வருகின்ற வழியில் ஆண்டவராகிய கடவுள் யாக்கோபுக்குத் தோன்றி அவருக்கு ஊக்கம் ஊட்டுகின்றார்.

யாக்கோபு யோசேப்பைச் சந்திக்கும்போது, 'இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடுதான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்' என்கிறார்.

யாக்கோபு தன் வாழ்வின் நிறைவைத் தன் மகனில் காண்கின்றார்.

ஏறக்குறைய இதே வார்த்தைகளைத்தான் சிமியோன் குழந்தை இயேசுவைப் பார்க்கும்போதும் சொல்கின்றார்.

வாழ்வில் நிறைவு காணுதல் என்பது மிகப் பெரிய கொடை.

'நான் சாகத் தயார்' என்று சொல்வதற்கு இன்னும் நிறைய துணிச்சல் தேவை.

தன் வாழ்வின் இலக்கு தெளிவாக இருக்கும் ஒருவரே இப்படிக் கூற முடியும்.

இன்றைய பதிலுரைப் பாடல் நாம் எப்படி இலக்குடன் வாழ வேண்டும் என்று சொல்கின்றது:

'ஆண்டவரை நம்பு. நலமானதைச் செய். நாட்டிலேயே குடியிரு. நம்பத்தக்கவராய் வாழ். ஆண்டவரில் மகிழ்ச்சி கொள். உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.'

Wednesday, July 10, 2019

என்னை அனுப்பினார்

இன்றைய (11 ஜூன் 2019) முதல் வாசகம் (தொநூ 44:18-21, 23-29, 45:1-5)

என்னை அனுப்பினார்

இன்றைய முதல் வாசகத்தில் எகிப்தின் ஆளுநராக இருக்கின்ற யோசேப்பு தன்னை சகோதரர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். யூதா தன்னுடைய சகோதரர்கள் சார்பாக பகிர்ந்து பேசும் நிகழ்வில் மூச்சுக்கு மூச்சு, 'உம் பணியாளர்கள்' என்றும், 'உம் அடியார்கள்' என்றும், 'என் தலைவர்' என்றும் குறிப்பிடுகின்றார். தன்னை அடக்கிக்கொள்ள முடியாத யோசேப்பு கூக்குரலிட்டு அழுது தன்னை வெளிப்படுத்துகின்றார்.

யோசேப்பின் இறுதி வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை.

'நீங்கள் என்னை விற்றீர்கள் ... ஆனால் ஆண்டவர் என்னை அனுப்பினார்'

நீங்கள் நான் அழிந்து போக வேண்டும் என்று என்னை விற்றீர்கள்.

ஆனால், ஆண்டவர் உங்கள் உயிரைக் காக்குமாறு என்னை அனுப்பினார்.

என்ன ஒரு மிகச் சிறப்பான புரிதல்? என்ன ஒரு தாராள உள்ளம்?

இதையே மேலாண்மையியலில் புள்ளிகளை இணைத்தல் என்று சொல்கிறார்கள். வாழ்க்கையில் அன்றாட நிகழ்வுகள் ஏதோ தற்செயல் நிகழ்வுகள் போல நடந்தேறுகின்றன. ஆனால், உண்மையில் அவை எல்லாம் ஒன்றோடொன்று ஒட்டி நிற்கும் புள்ளிகள்.

நாம் சந்திக்கும் நபர்கள், செய்யும் செயல்கள் எவையும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல(ர்). இவை எல்லாவற்றிற்குமான நோக்கத்தை கடவுள் அறிந்திருக்கிறார்.

புள்ளிகளை இணைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

அ. அடுத்தவர் நமக்கு இழைத்த தீங்க பொருள்படுத்தக் கூடாது - யோசேப்பு தன் சகோதரர்கள் தனக்குச் செய்தது குறித்து முறையீடு செய்யவில்லை. தான் பட்ட கஷ்டங்களை அவர்களிடம் சொல்லவில்லை. தான் முன்னேறிய பாதை குறித்து பெருமை பாராட்டவில்லை. இப்போது அவர்களை அவர் அன்பு செய்கிறார். எப்படி? அவர்கள் தனக்கு நல்லது செய்தார்கள் என்பதற்காக அல்ல. மாறாக, நல்லது செய்யாவிட்டாலும் அவர்களை அன்பு செய்கிறார். இதையே பவுலடியாரும், 'அன்பு தீங்கு நினையாது' என்கிறார்.

ஆ. வாழ்க்கையை பெரிய வட்டமாகப் பார்க்கிறார்

'உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா' என்றால், உள்ளம் பெரிதானால் உலகம் பெரிதாகும். யோசேப்பின் உலகம் பெரிய உலகமாக இருந்தது. ஆகையால், சின்னக் கோடுகளை அவர் பொருள்படுத்தவில்லை.

இ. நேர்முகமாக செயலாற்றுவது

'நீ எனக்கு இப்படிச் செய்ததற்கு நான் உனக்கு இப்படிச் செய்வேன்' என்று வன்மம் பாராட்டாமல், நீ எனக்கு தீங்கு செய்தாலும் நான் உனக்கு நன்மை செய்வேன் என்று அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையானதைச் செய்ய முன்வருகிறார் யோசேப்பு.


Tuesday, July 9, 2019

யோசேப்பிடம் செல்லுங்கள்

இன்றைய (10 ஜூலை 2019) முதல் வாசகம்

யோசேப்பிடம் செல்லுங்கள்

தன்னுடைய சகோதரர்களால் விற்கப்பட்டு எகிப்துக்குச் சென்ற யோசேப்பு எகிப்தின் ஆளுநராக மாறுகின்றார். எகிப்தையும் அதன் சுற்றுப்புற நாடுகளையும் பஞ்சத்திலிருந்து காப்பாற்றுகின்றார். தன் அண்ணன்களுக்குச் சோறு தூக்கிச் சென்றவர் இரண்டு நாடுகளுக்குச் சோறிடும் அளவுக்கு உயர்கின்றார்.

யோசேப்பு கதையை வாசிக்கும்போதெல்லாம் என்னில் ஒரு கேள்வி எழுவதுண்டு. போத்திபாரின் மனைவி இவர்மேல் காமம் கொண்டு, 'என்னோடு படு! என்னோடு படு!' என்று சொன்னபோது, இவர் அவளுடன் படுத்திருக்கலாமே? அப்படிச் செய்திருந்தால் ஒருவேளை அவளுடைய நன்மதிப்பைப் பெற்று, அல்லது அவள் வழியாக கணவனின் நன்மதிப்பைப் பெற்று, அக்கணவன் வழியாக பாரவோனின் நன்மதிப்பைப் பெற்று ஆளுநர் ஆயிருக்கலாமே? யோசேப்பு ஏன் அந்த வழியைத் தேர்ந்துகொள்ளவில்லை? 

அதற்கான விடையை வாட்ஸ்ஆப்பில் என்னுடைய நண்பர் தனா இட்டிருந்த ஸ்டேட்டஸ் ஒன்றில் கண்டேன்: 'இளைஞனே, பாவம் என்பது நீ மனிதர்களைப் பொருள்களாக நடத்துவதுதான். உன்னையும் பொருளாக நடத்துவதுதான். உன்னையே பொருளாக மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிப்பதும் பாவம் தான். இதுதான் பாவம்.' 

யோசேப்பின் சகோதரர்கள் அவரை மிதியானியர்களிடம் விற்றபோது, அவரை ஒரு 'பொருளாக' ஆக்குகின்றனர். போத்திபாரின் மனைவி, 'என்னோடு இரு!' என்று யோசேப்பைக் கேட்டபோது, யோசேப்பு அவள் தன்னைப் பொருளாக்கிக்கொள்வதை மறுக்கின்றார். தான் ஒரு உடலின்பப் பொருளாக மாற்றப்படுவதை யோசேப்பு விரும்பவில்லை. அதன் விளைவு என்னவாக இருந்தாலும் பரவாயில்லை எனத் துணிகின்றார்.

நிற்க.

இன்றைய முதல் வாசகம் நம்முடைய வாழ்க்கை மேலாண்மைக்கான இரண்டு பாடங்களைக் கற்பிக்கின்றன.

அ. யோசேப்பு போல வாழ்வது

அப்படின்னா எப்படி? அடுத்தவர்கள் என்னைப் பொருளாக மாற்றிவிட்டார்களே என்று கவலைப்படவில்லை யோசேப்பு. 'அடுத்த என்ன?' என யோசிக்கிறார். புரியாத மொழி, விரும்பாத உணவு, முன்பின் தெரியாத நபர்கள், புதிய மண்வாசனை. தனக்கு முன் இரு வழிகள்: ஒன்று, பலிகடாவாக அழுதுகொண்டே இறந்து போவதா? அல்லது இரண்டு, தலைவனாக இருந்து வாழ்வதா? இரண்டாம் வழியைத் தெரிந்துகொள்கிறார். மற்றவர்களுக்குத் தலைவனாக இருக்க வேண்டும் என்றால் தனக்குத் தானே தலைவனாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கின்றார். தன்னுடைய இன்பம், தன்னுடைய உடனடி இன்பம், தன் சார்ந்த அனைத்தையும் ஆளுகின்றார். தன் வரையறையை உணர்கின்றார். தவறு செய்ய வாய்ப்புக் கிடைத்தாலும் தன் வாழ்க்கை தன் கையில் என்பதை அறிந்து உறுதியாக இருக்கின்றார். முடிவு, ஆளுநராக உயர்த்தப்படுகின்றார். 'யோசேப்பிடம் செல்லுங்கள். அவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்' என பாரவோன் மக்களை அவரிடம் அனுப்பும் அளவிற்கு அவர் நம்பிக்கைக்குரியவராக இருக்கின்றார்.

ஆக, யோசேப்பு போல வாழ்பவர்கள் தலைவர்களாக இருப்பர். நான் என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் என்னுடைய கன்ட்ரோல் எடுத்து வாழ்கிறேனா? அல்லது என்னுடைய கழுத்தின் கயிற்றை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு அவருடைய இரக்கத்தில் வாழ்கிறேனா? அவர் சிரித்தால் நான் சிரிப்பேன், அவர் அழுதால் நான் அழுவேன் என்று என்னுடைய புறச்சூழலில் என் வாழ்க்கையைக் கட்டுகிறேனா?

ஆ. அண்ணன்கள் போல வாழ்வது

யோசேப்பின் சகோதரர்களையும் பஞ்சம் விட்டுவைக்கவில்லை. பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிலும் பஞ்சம். எகிப்தை நோக்கி வருகிறார்கள். யோசேப்பு அவர்களைக் கண்டுகொள்கிறார். அவர்களால் யோசேப்பைக் கண்டுகொள்ள முடியவில்லை. யோசேப்பின் சகோதரர்கள், 'நமக்குத் துன்பம் ஏற்படக் காரணம் நாம் செய்த தவறே' என்றும், 'அவனது இரத்தம் நம்மிடம் ஈடு கேட்கிறது' என்றும் தங்களுடைய நிலைக்குத் தங்களுடைய இறந்தகாலத்தையும், தங்களுடைய விதியையும் காரணம் காட்டுகின்றனர். இதுதான் 'பலிகடா மனநிலை'. இந்த மனநிலையில் குற்றவுணர்வும் பயமும் மேலோங்கி இருக்கும்.

ஆங்கிலத் திரைப்படம் ஒன்றில், 'குற்றவுணர்வு என்பது அடிமைகளின் உணர்வு' என்று ஒரு வரி வரும். தங்கள் வாழ்விற்குத் தாங்களே தலைவர்கள் என நினைப்பவர்கள் ஒருபோதும் குற்றவுணர்வு கொள்ள மாட்டார்கள். ஏனெனில், தாங்கள் செய்த தவற்றிலிருந்தும் பாடம் கற்க அவர்கள் முயல்வார்கள். அல்லது தங்கள் தவற்றைத் தாங்களே சரி செய்ய முன்வருவார்கள். குற்றவுணர்வு கொண்டிருப்பவர்கள் அந்த உணர்விலேயே இருப்பதால் பொறுப்புணர்வை மறந்துவிடுவார்கள்.

இறுதியாக,

ஓர் உருவகம். 

வாழ்க்கை என்ற பால் அடுப்பில் இருக்கும்போது கொட்டிவிடுகிறது. 

கொட்டிய பாலை அப்படியே வழித்தெடுத்து இடத்தைக் கழுவி புதிய அடுப்பை பற்ற வைத்து புதிய பாலை ஊற்றுகிறார் யோசேப்பு.

கொட்டிய பாலை அப்படியே வைத்துக்கொண்டு, அதையே மிதித்து தங்கள் கால்களையும் இடங்களையம் அழுக்காக்கிக்கொண்டு, 'நீதான் கொட்டினாய்!' 'நான்தான் கொட்டினேன்!' 'அடுப்பு அதிகமாக எரிந்தது!' 'கல் சருக்கி பால் கொட்டியது!' என்று வெறும் பானையை வைத்து நிற்கிறார்கள் அண்ணன்கள்.

பால் உள்ளவரிடம்தானே ஊர் செல்லும்.

'யோசேப்பிடம் செல்லுங்கள்! அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்!'

நிற்க.

இன்று என் அப்பாவின் நினைவுநாள். இன்றோடு பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன.  அவருடைய பால் பாத்திரம் நிறையப் பொழுதுகள் கவிழ்ந்து விழுந்தன. ஆனால், அவர் தன்னுடைய வாழ்வில் அவர் எப்போதும் புதிய பாலை காய்ச்சிக்கொண்டிருப்பவராகவே இருந்தார். சில நேரங்களில் வெறும் பாத்திரத்தைக் காய்ச்ச வேண்டிய நிலை வந்தாலும் பாத்திரத்தைச் சூடாக வைத்திருப்பதில் உறுதியாக இருந்தார். அவர் எந்த நிலையிலும் தன்னை மற்றவர்கள் பொருளாக்கிக்கொள்ள அனுமதிக்கவில்லை. தானும் தன்னைப் பொருள் என்று கருதவும் இல்லை.

இப்பதிவு அவருக்கு அர்ப்பணம்.

Monday, July 8, 2019

உம்மைப் போகிவிடேன்

இன்றைய (10 ஜூலை 2019) முதல் வாசகம் (தொநூ 32:22-32)

உம்மைப் போகிவிடேன்

'நான் உம்மைப் போகவிடேன்!' என்று உங்களிடம் யாராவது சொல்லியிருக்கிறார்களா?

'என் வீட்டில் உணவருந்தாமல் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

'நீ என்னோடு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்காமல் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

'நீ என்னைக் குணப்படுத்தாமல் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

'நீ இந்தப் பத்திரத்தில் கையெழுத்து போடாமல் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

'நீ வழக்கைத் திரும்பப் பெறாமால் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

'நீ என் வண்டியை இடிச்சதுக்கு ஈடு தராமல் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

- இப்படியாக அன்பு, நட்பு, பிளவு, விரிசல், பிரச்சினை வரை, 'நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்' என்று நான் மற்றவரிடமும், மற்றவர்கள் நம்மிடமும் என வார்த்தைப் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் யாக்கோபு, தன்னுடன் மற்போர் செய்த ஆடவரிடம், 'நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்!' என்கிறார்.

இந்த நிகழ்வின் பின்புலம் என்ன?

தன் சகோதரன் ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமையையும், ஆசீரையும் வாங்கிக்கொண்டு, தன் மாமா லாபானிடம் தப்பி ஓடுகின்றார் யாக்கோபு. அங்கே லாபானால் ஏமாற்றப்படுகிற யாக்கோபு அங்கிருந்து தப்பி மீண்டும் தன் ஊர் திரும்புகின்றார். திரும்பும் வழியில் இவர் தன் சகோதரன் ஏசாவை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். தன் சகோதரனை ஏமாற்ற இன்னொரு வழியைக் கண்டுபிடிக்கலாமே! என்ற எண்ணத்தில் யாக்கோபு இருக்கும்போதுதான், பெயர் தெரியாத ஆ(ண்)டவரோடு மற்போர் நிகழ்கிறது.

இது யாக்கோபின் உள்ளத்திலிருந்து ஒரு போர் என்று இதைச் சொல்லலாம்.

'ஏமாற்றுவதா? வேண்டாமா?' என்று மனத்திற்குள் போராடி, 'ஏமாற்றுவதில்லை. சகோதரனை நேருக்கு நேர் எதிர்கொள்வோம்' என்று முடிவெடுக்கிறார் யாக்கோபு. ஆகையால்தான், 'யாக்கோபு' (ஏமாற்றுபவன்) என்ற பெயர் மாற்றப்பட்டு, 'இஸ்ரயேல்' (போரிடுபவன்) என்ற பெயர் அவருக்கு வழங்கப்படுகிறது.

நிகழ்வின் இறுதியில் யாக்கோபு நொண்டி நொண்டி நடக்கிறார்.

அதாவது, தனக்கு எல்லா நேரமும் வெற்றி கிடைக்க வேண்டும், தனக்கே எல்லாம் வேண்டும், தன்னைத் தவிர இவ்வுலகில் யாரும் சிறந்தவர் இல்லை என்ற நிலையிலிருந்து இறங்கி, தன்னுடைய வலுவின்மையை முதன்முதலாக ஏற்றுக்கொள்கிறார் யாக்கோபு.

இங்கே மனம் மாறுகின்ற யாக்கோபு துணிவுடன் ஏசாவை எதிர்கொள்கிறார்.

இந்த வாழ்க்கை மாற்றம் தான் இவர் பெற்ற ஆசி.

ஆகையால், 'நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய நான் உம்மைப் போகவிடேன்' என அடம் பிடிக்கிறார் யாக்கோபு.

நம் மனத்திலும் சில போராட்டங்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக, எனக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். என்னுடைய இந்தப் பழக்கத்திற்கு நானே நியாயம் கற்பிப்பேன். 'யார்தான் குடிக்கல?' 'நான் மட்டும்தான் தப்ப செய்றேனா?' 'அடுத்தவரை ஏமாற்றி வாங்கிய பணத்திலா குடிக்கிறேன். என் பணத்தில்தானே குடிக்கிறேன்!' 'நான் குடித்துவிட்டு சண்டையா போடுறேன்' என்றெல்லாம் நிறையக் கேள்விகள் கேட்பேன். 'நான் விட்டுவிட நினைக்கும் ஒன்றின் மேல் இன்னும் என் மனம் சென்றால் அங்கேயேதான் நான் இருக்கிறேன்' என்பது செல்டிக் ஞானம். 'விட்டுவிட்டால் என்ன ஆகும்?' 'விடாவிட்டால் என்ன?' என்ற கேள்விகளும் என் மனத்தில் பெரிய போராட்டத்தை ஏற்படுத்தும். 'விட்டுவிடலாம்' என்பதற்கு என் மூளை நூறு பதில்கள் தரும். 'விட்டுவிட வேண்டாம்' என்பதற்கும் நூறு பதில்கள் தரும். இப்படிப்பட்ட நேரத்தில்தான் நான் கடவுளிடம், 'நீர் எனக்கு ஆசி வழங்கினாலன்றி நான் உம்மைப் போகவிடேன்!' என்று அடம் பிடிக்க வேண்டும்.

இந்த நேரத்தில், 'கடவுள் இருக்கிறாரா?' என்று கேட்டு மூளை இன்னும் என்னைக் குழப்பிவிடும்.

யாக்கோபின் போராட்டங்கள் போல நம் வாழ்வின் போராட்டங்கள் எளிதாய் இருப்பதில்லை.

இந்த இழுபறி நிலையைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 9:32-38) பார்க்கிறோம். 'ஆயர் இல்லா ஆடுகள் போல மக்கள் அலைக்கழிக்கப்பட்டதைக் கண்டு அவர்கள் மேல் பரிவு கொள்கிறார்' இயேசு.

அலைக்கழிக்கப்பட்டு, 'ஏமாற்றவா?' 'வேண்டாமா' என்ற போராடிய யாக்கோபு வெல்கிறார்.

நொண்டி நொண்டி நடத்தல் கூட, 'இனி ஏமாற்றக் கூடாது' என்பதற்கான வெளிப்புற அடையாளமாக, நினைவூட்டலாக அவருக்கு மாறியிருக்கலாம்.

Sunday, July 7, 2019

இரவைக் கழிப்பதற்காக

இன்றைய (8 ஜூலை 2019) முதல் வாசகம் (தொநூ 28:10-22)

இரவைக் கழிப்பதற்காக

'இரவைக் கழிப்பது' ஒரு பெரிய கொடுமை. எப்போது?

இறந்தவர் வீட்டில் இறந்தவரின் உடலை வைத்துக்கொண்டு உறவினர்கள் அமர்ந்திருக்கும்போது.

நமக்கு நெருக்கமானவருக்கு உடல்நலம் இல்லாமல் போய் அவரோடு இரவில் உடனிருக்கும்போது.

உடல்நலம் சரியில்லை. மருத்துவமனைக்குப் போகப் பணமில்லை. காலையில் அரசு மருத்துவமனைக்குப் போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கும்போது.

நாம் வீட்டிற்குப் போக வேகமாக ஓடி வந்து கடைசிப் பேருந்தும் சென்றுவிட, இரவில் எங்கும் தங்க வழியின்றி காலை முதல் பஸ் வரும் வரை பேருந்து நிலையத்தின் நாற்காலியில் கொசு, சாக்கடை நாற்றம், தூசி, கையில் பை, தூங்கியும் தூங்காமல் விழிப்பு என்ற நிலையில் இருக்கும் போது.

நாம் விரும்புகிறோமோ விரும்பவில்லையோ சில நேரங்களில் இரவைக் கழிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் யாக்கோபு தன்னுடைய அண்ணனின் ஆசியை வாங்கிவிட்டு, அவன் கோபத்திலிருந்து தப்பி ஓடுகிறான். குற்றம் செய்பவர் மனது அமைதி கொள்ளாது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அம்மா, அப்பா, அண்ணன் என்று இருந்தவனின் வாழ்க்கை ஒரு மாலையில் மாறிவிடுகிறது.

இரவில் தனியாக இருக்கிறான்.

யாக்கோபு இங்கே மட்டும்தான் தன் வாழ்விலேயே தனியாக இருக்கின்றார்.

ரெபேக்காவின் வயிற்றில் ஏசாவோடு இருந்தார். வீட்டில் பெற்றோருடனும் அண்ணுனுடனும் இருந்தார். லாபான் வீட்டில் மாமாவோடும் இராக்கேலோடும் இருந்தார். கானான் திரும்பும்போது தன் மனைவியர் மற்றும் வேலைக்காரர்களோடு இருந்தார்.

அவர் தனியாக இருக்கும் இந்த இரவு மூன்று நிலைகளில் கொடுமையாக இருக்கிறது:

அ. தனிமை. இவர் தன்னுடைய இத்தனிமையில் தன் தாயை நிச்சயம் கடிந்திருப்பார். 'நான் அவசரப்பட்டிருக்கக் கூடாது,' 'அண்ணனுக்குரிய ஆசியை எடுத்திருக்கக்கூடாது' என நிறைய குற்ற உணர்வு கொண்டிருப்பார். நம்மால் ஒருபோதும் தனியாக இருக்க முடியாது. ஏனெனில், தனியாக இருக்கும்போது நம்முடைய பயம், கோபம், குற்றவுணர்வு, தாழ்வு மனப்பான்மை வேகமாக மேலோங்கி வரும். ஆக, இவற்றின் சத்தங்களை மறைக்க நாம் டிவி, ஃபோன் போன்றவற்றின் சத்தங்களைக் கூட்டிவிடுகிறோம்.

ஆ. கதிரவன் மறைந்துவிட்டான். இருட்டு. ஒன்றும் செய்ய முடியாத, எந்தப் பாதை எங்கு போகும் என்று தெரியாத, யார் எதிரில் இருக்கிறார், காலுக்குக் கீழ் என்ன கிடக்கும் என்று தெரியாத அளவுக்கு இருட்டு. இதே வெளி இருட்டுத்தான் அவரின் உள்ளத்திலும் இருந்திருக்கும். திக்குத் தெரியாமல் நிற்கிறார். இனி வீட்டுக்குத் திரும்புவோமா? அண்ணனை எப்படி எதிர்கொள்வது என்று நிறைய கேள்விகள் அவரில் எழுந்திருக்கும்.

இ. தலைக்கு வைக்க கல்

கல்லைத் தலைக்கு வைத்துக்கொண்டு தூங்குகிறார். சில இல்லங்களில் தலையணை கல் போன்று இருக்கும். தலையணை இல்லாத நேரங்களில் கைகளை சிலர் தலையணையாக்கிக் கொள்வர். கட்டில், மெத்தை, தலையணை என்று முந்தைய இரவு தூங்கிய யாக்கோபுக்கு இன்று கல்தான் கிடைத்திருக்கிறது. கல்லைத் தலைக்கு வைத்தால் ரொம்ப அழுத்தம். அசௌகரியம் தரும். அதையும் மீறி அவர் தூங்கியிருக்கிறார் என்றால் அந்த அளவிற்கு அவருடைய மனம் பாரமாக இருந்திருக்கிறது. மன பாரம் அதிகமாக இருக்கும் நம்மை அறியாமலேயே நாம் நிறைய தூங்குவோம்.

'தனிமை,' 'இருள்,' 'கல் தலையணை' என்று இந்த மூன்று எதிர்மறை எதார்த்தங்களில்தான் அழகான ஒன்று யாக்கோபுக்கு நடந்தேறுகிறது.

கனவு காண்கிறார். கனவில் வானதூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறார்கள். 'நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உனக்குத் தருவேன்' என வாக்களிக்கிறார்.

நாம் அமெரிக்க ஏர்போர்ட்டில் ஃப்ளைட்டுக்காக காத்திருந்து தூங்கிவிட, கனவில் ஆண்டவர், 'நீ தூங்கும் இந்த இடத்தை நான் உனக்குத் தருவேன்' என்று கனவில் சொன்னால் மனம் எப்படி குதிக்கும்?

கடவுள் மூன்று எதிர்மறை எதார்த்தங்களுக்கு எதிராக மூன்று நேர்முகமான எதார்த்தங்களை வாக்களிக்கின்றார்:

அ. உனக்கு நான் இந்த நிலத்தைத் தருவேன்.

ஆ. உனக்கு நான் ஆசி வழங்குவேன்.

இ. நீ எங்கு சென்றாலும் நான் உன்னோடு இருப்பேன்.

யாக்கோபும் அந்த இடத்தில் கடவுளின் பிரசன்னத்தைக் கண்டுகொள்கிறார்.

ஆக, என் வாழ்வின் இருட்டான நேரத்தில், தனிமையான நேரத்தில், கல் தலையணைத் தூக்க நேரத்தில் கடவுள் மிகப் பெரிய ஆசிகளை வழங்குகிறார்.

அவருடைய பெயர் போற்றப்பெருவதாக!


Friday, July 5, 2019

ஒரே ஆசிதான் இருந்ததா?

இன்றைய (6 ஜூலை 2019) முதல் வாசகம் (தொநூ 27:1-5, 15-29)

ஒரே ஆசிதான் இருந்ததா?

கடந்த புதன் கிழமை எங்கள் குருமடத்தின் பேராசிரியர்களுக்கு மாத ஒடுக்கம் வழிநடத்த வந்த அருள்தந்தை ஜோ ஆண்டனி, சேச, அவர்கள் 'ஆசீரும், சாபமும்' பற்றித் தன்னுடைய சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

'நான் என்னுடைய மாணவர்களுக்கு ஆசீராக இருக்கிறேனா?'

'நான் என்னுடைய உடன் அருள்பணியாளர்களுக்கு ஆசீராக இருக்கிறேனா?'

'நான் என் நண்பர்கள், உறவினர்களுக்கு ஆசீராக இருக்கிறேனா?'

'நானே ஆசீர்பெற்றவனாக இருக்கிறேனா?'

'என்னுடைய பிரசன்னம் மற்றவர்களுக்கு ஆசீர் அளிப்பதாக இருக்கிறதா?'
அல்லது இதற்கு மாறாக, நான் சாபமாக, சபிக்கப்பட்டவனாக இருக்கிறேனா?

இந்தக் கேள்விகளின் பின்புலத்தில்தான் சிந்தனை இருந்தது.

எதற்காக 'ஆசீர்' தேவை?

அ. ஆசீர் நம்முடைய எதிர்நோக்கை நீட்டிக்கிறது.

ஆ. ஆசீர் நமக்கு நேர்முகமான ஆற்றலைத் தருகின்றது.

இ. ஆசீர் அன்பைக் கூட்டுகிறது.

இதற்கு மாறாக,

ஒருவர் தனக்கு ஏற்பட்ட அநீதியின் காரணத்தால் மற்றவருக்கு வழங்கும் சாபம், அல்லது ஆற்றல் இல்லாத ஒருவர் ஆற்றல் பெற்ற ஒருவர்மேல் தன் இயலாமையில் ஏவும் சாபம் அடுத்தவரை அழித்துவிடும் அளவுக்குச் செல்கிறது.

அன்பு ஒன்றே சாபத்தை நீக்கும் ஆற்றல் கொண்டது - தவளையும் இளவரசியும் கதையில் வருவது போல.

நிற்க.

இன்றைய முதல் வாசகத்தில் ஏசா தன் தந்தை ஈசாக்கிடம் மிகவும் சோகமான கேள்வி ஒன்றைக் கேட்கின்றார்: 'அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா?' 'எனக்கும் ஆசி வழங்க வேண்டும் அப்பா' என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுகிறான்.

தன் தம்பி தனக்கு இழைத்த துரோகம், அதற்கு உடந்தையான தாய், அவசரப்பட்ட அப்பா என எல்லார்மேலும் இந்த ஏழை அண்ணனுக்கு கோபம் வந்திருக்கும்.

இந்த அண்ணன்கள் பல நேரங்களில் பாவம். தங்களுக்குரியவற்றைத் தம்பிகள் தட்டிப் பறிக்கும்போது கையறுநிலையில் புலம்புவார்கள் - ஊதாரி மைந்தன் எடுத்துக்காட்டில் வரும் அண்ணன் போல.

ஏசாவின் கேள்வியில் ஏமாற்றப்பட்டதன் வலி நிறையவே தெரிகிறது.

ஆனால், கதையின் இறுதியில் ஏசாவே யாக்கோபுக்கு ஆசியாக மாறுகின்றார் - தன்னுடைய பெருந்தன்மையால்.


Thursday, July 4, 2019

பின்பற்றி வா

இன்றைய (5 ஜூலை 2019) நற்செய்தி (மத் 9:9-13)

பின்பற்றி வா

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருத்தூதர் மத்தேயுவின் அழைப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். சுங்கச்சாவடியில் அமர்ந்திருக்கும் அவரைக் கண்ட இயேசு, 'என்னைப் பின்பற்றி வா!' என அழைக்க, அவரும் உடனே எழுந்து இயேசுவைப் பின்பற்றுகிறார்.

'நீ தயாராக இருக்கும்போது போதகர் வருவார்!' என்று ஜென் புத்தமதத்தில் ஒரு சொலவடை உண்டு. போதகர்களை, ஆசிரியர்களை யாரும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. நம்முடைய தயார்நிலையே போதகரை நம் அருகில் கொண்டுவந்து சேர்க்கும். மத்தேயு தயாராக இருந்ததால்தான் அவரால் உடனே எழுந்து சென்று இயேசுவைப் பின்பற்ற முடிந்தது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 23:1-4, 19, 24:1-8, 62-67) ஈசாக்கிற்குப் பெண் பார்க்கும் நிகழ்வை வாசிக்கிறோம். நிகழ்வின் இறுதியில், ஈசாக்கு தற்செயலாக வயல்புறம் செல்கிறார். அப்போது ரெபேக்காவை அழைத்துக்கொண்டு வரும் ஒட்டகக்கூட்டத்தைப் பார்க்கிறார்.

மத்தேயு-இயேசு நிகழ்வு, ரெபேக்கா-ஈசாக்கு நிகழ்வுகளிலும் என இரண்டு நிகழ்வுகளிலும் நாம் பார்ப்பது 'ஈர்ப்பு விதியைத்தான்.' 'நான் தயாராக இருக்கும்போது என் போதகர் வருவார்.'

ஈர்ப்பு விதி என்றால் என்ன?

ஒரு காந்தம் இரும்பை தன்னத்தே இழுக்க வேண்டும் என்றால், அது காந்த ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். அந்த ஆற்றலை அது பெற்றிருக்கும்போது அதன் அருகில் இருக்கின்ற இரும்புத் துகள்களை அது இழுத்துக்கொள்கிறது. வெறும் இரும்பு காந்த ஆற்றல் பெறும்போது அது மற்ற இரும்புத் துகள்களைத் தன்னிடம் ஈர்த்துக்கொள்கிறது.

பணம், வெற்றி, புகழ் எல்லாம் ஈர்ப்பு விதியின்படி வருபவைதாம். பணமுள்ள ஒருவரிடமே பணம் சேருவது ஏன்? வெற்றி பெறுகின்ற ஒருவரே வெற்றி பெறுவது ஏன்? நண்பர்கள் அதிகம் இருக்கிற ஒருவரையே நாடிப் பலர் செல்லக் காரணம் என்ன?

ஒரு முறை அவர் தயாராக இருந்துவிட்டால் அதுவே ஒரு தொடர் செயலாக மாறிவிடும்.

ஆக, இன்று என் தலைவர் என்னிடம் வர நான் தயாரா?

அவரை நான் என்னிடம் ஈர்க்கத் தகுதி பெற்றுள்ளேனா?

Wednesday, July 3, 2019

சமூகப் பொறுப்புணர்வு

இன்றைய (4 ஜூலை 2019) நற்செய்தி (மத் 9:1-8)

சமூகப் பொறுப்புணர்வு

'இன்னைக்கு யாரு சார் யாரையும் பத்தி கவலைப்படுறா?' என்ற புலம்பல், கேள்வி, விரக்திஉணர்வு நம் காதுகளில் அடிக்கடி விழுகிறது.

தங்களைப் பற்றியே கவலைப்பட நேரம் இல்லாத மனிதர்களுக்கு மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட நேரம் எங்கிருந்து வரும்?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி இயேசுவிடம் தூக்கிக்கொண்டு வருகின்றனர். இயேசு குணமாக்குவதைக் கண்டு சிலர் முணுமுணுக்கின்றனர். சமூகத்தின் இரண்டு வகை மனிதர்களை இங்கே பார்க்கிறோம். தூக்கி வந்த மனிதர்கள் தங்களுடைய சக உதரன் (சகோதரன்) மேல் உள்ள பொறுப்புணர்வைக் காட்டுகின்றனர். முணுமுணுத்தவர்கள் தங்களுடைய பொறுப்புணர்வை மறந்ததோடல்லாமல், ஒட்டுமொத்த நிகழ்வின்மேல் காழ்ப்புணர்வு அல்லது கசப்புணர்வு காட்டுகின்றனர்.

முடக்குவாதமுற்றவருக்கு நலம் தந்த இயேசு, அவரிடம், 'உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு போ' என்கிறார்.

இது அவர் கொள்ள வேண்டிய பொறுப்புணர்வை அவருக்கு நினைவூட்டுவதாக இருக்கிறது. நலமில்லாத இருக்கும்போது அடுத்தவர் உன்மேல் பொறுப்புணர்வு காட்டுவர். நலமாயிருக்கும் நீ உனக்கு நீயே பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று இயேசு சொல்வதுபோல இருக்கிறது. ஆக, நான் அடுத்தவர்மேல் காட்ட வேண்டிய பொறுப்புணர்வையும், என்மேல் கொள்ள வேண்டிய பொறுப்புணர்வையும் ஒருசேரச் சொல்லிவிடுகிறார் இயேசு.

முணுமுணுக்கும் ஒருவர் தன் பொறுப்பைத் தட்டிக்கழிப்பார். அல்லது வேண்டா வெறுப்பாக நிறைவேற்றுவார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 22:1-19), தன் அன்பு மகன், தன் ஒரே மகன் ஈசாக்கை ஆபிரகாம் பலியிடத் துணிகின்றார். அவரிடம் எந்தவொரு முணுமுணுப்போ, வெறுப்போ இல்லை. மாறாக, 'இதோ! தருகிறேன்!' என்று கடவுளுக்குத் தான் கொடுத்த வார்த்தைகளுக்கு பொறுப்பேற்கின்றார் ஆபிரகாம். தனக்கு இழப்பு என்றாலும் அதை ஏற்கத் துணிகின்றார்.

பொறுப்புணர்வைச் செயல்படுத்த நாம் நிறையவற்றை இழக்க வேண்டும். முடக்குவாதமுற்றவரைத் தூக்கிக்கொண்டு வந்தவர்கள் தங்களுடைய நேரம், ஆற்றல், முதன்மையானவை அனைத்தையும் இழக்கின்றனர். ஆனால், இந்த இழப்பால் ஒருவர் நலம் பெறுகிறார்.

ஆபிரகாமும் தன் மகனைப் பலியிடுவதற்காகத் தூக்கிவந்தார். கடவுளின் உடனிருப்பால் தன் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டு இல்லம் செல்கின்றார்.

ஆக, இரண்டு கேள்விகள்:

(அ) இன்று நான் யாருடைய கட்டிலையாவது சுமக்க முன்வருகிறேனா?

(ஆ) என் கட்டிலை நான் சுமக்க மறுக்கிறேனா?


Tuesday, July 2, 2019

திருத்தூதர் தோமா

இன்றைய (3 ஜூலை 2019) திருநாள்

திருத்தூதர் தோமா

இன்று திருத்தூதர் தோமாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இயேசுவின் சமகாலத்தவர் ஒருவர், இயேசுவோடு வாழ்ந்த, பணி செய்த, அவரின் விலாவிலேயே கையிடும் பேறு பெற்ற தோமா நாம் வாழும் இந்தத் தமிழ் மண்ணில் வந்து நின்றார் என்று நினைக்கும்போதே ஆச்சர்யமாக இருக்கிறது.

எருசலேமுக்கும் கோழிக்கோட்டிற்குமான தூரத்தை அவர் கடந்த விதம், மேற்கொண்ட பயணம், பயணத்தில் சந்தித்த சவால், புதிய வாழ்விடம், புதிய கலாச்சாரம், மொழி, உணவுப்பழக்கவழக்கம், மனித உருவம் என அனைத்துமே புதிதாய் அவருக்கு இருக்க, இந்தப் புதிய இடத்தில் அவர் காலூன்றி நற்செய்தி அறிவித்ததும் ஆச்சர்யமாக இருக்கிறது.

'திதிம்' என்பது இவருடைய பெயர். 'திதிம்' என்றால் 'இரட்டை' என்பது பொருள். வாழ்வின் எதார்த்தங்கள் எல்லாமே இரட்டையில்தான் இருக்கின்றன: ஆண்-பெண், பகல்-இரவு, நன்மை-தீமை, ஒளி-இருள், பிறப்பு-இறப்பு, மகிழ்ச்சி-துன்பம். தோமாவிடமும் இந்த இரட்டைத்தன்மை இருந்தது. ஒரு கட்டத்தில் 'வாருங்கள், நாமும் சென்று அவரோடு இறப்போம்' என்கிறார். மறு கட்டத்தில் நம்புவதற்கே தயக்கம் காட்டுகிறார். ஆனால், இந்த இரண்டையும் ஒன்றோடொன்று சமரசம் செய்து கொள்ளாமல் அப்படியே எடுத்துக்கொள்கின்றார்.

நாம் பல நேரங்களில் இரட்டைத்தன்மையை ஒற்றைத்தன்மையாக்க முயற்சி செய்கின்றோம். அது தவறு என்றே நான் சொல்வேன். பிறப்பு மட்டுமே இருக்க முடியுமா? இறப்பு என்ற அதன் அடுத்த பக்கமும் அவசியம்தானே. இரட்டைத்தன்மையை ஒன்றாக்க முயலும்போதுதான் விரக்தி வந்துவிடுகிறது. 'நன்மை,' 'ஒளி,' 'மகிழ்ச்சி' ஆகியவை மட்டுமே சரி என நினைத்து மற்றதை விடுவதால் நாம் அடுத்ததை விரும்பத்தகாதது ஆக்கிவிடுகிறோம்.

திதிம் நம்மிலும் ஒருவர்.

ஐயம் கொண்ட இவரின் மற்றொரு குணம் சரணாகதி.

இரண்டும் அவசியம்தான் இறை-மனித உறவில்.

Monday, July 1, 2019

சாகப்போகிறோம்

இன்றைய (2 ஜூலை 2019) நற்செய்தி (மத் 8:23-27)

சாகப்போகிறோம்

'பதற்றம்' - இது இன்றை நம்மில் பலரைப் பீடித்திருக்கும் ஒரு நோய். இந்த நோயின் தாயின் பெயர் 'அவசரம்.' 'அவசரம்' என்ற உணர்வு மூளை சார்ந்ததா அல்லது உடல் சார்ந்ததா? என்று பார்த்தால், உடல் உபாதை அல்லது உடல் பசி நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் 'அவசரம்' என்பது உள்ளம் சார்ந்ததே. 'பதற்றம்' என்பது மூளைக்கும் உடலுக்கும் நடுவில் உள்ள இடைவெளி. எடுத்துக்காட்டாக, நான் 11 மணிக்கு ஒரு கருத்தரங்கத்தில் பேச வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். 10 மணிக்கே எனக்கு பதற்றமாக இருக்கிறது என்றால் என்ன அர்த்தம். என்னுடைய மூளை 11 மணிக்குப் போய்விட்டது. உடல் 10 மணியில் இருக்கிறது. மூளை உடலைப் பார்த்து, 'வா ... வா ... சீக்கிரம் பேசு' என்று அவசரப்படுத்தும். ஆனால், உடலால் 10 மணியிலிருந்து 11 மணிக்கு தாவ முடியாது. அது ஒவ்வொரு நொடியாகத்தான் நகரும். தன்னால் தாவ முடியவில்லையே என்று சொல்லும் கையறுநிலைதான் பதற்றம்.

சீடர்களும் இயேசுவும் படகில் இருக்கிறார்கள். அவர்கள் இருந்த கடல் திபேரியாக் கடல். அலைகள் இல்லாத, அல்லது சிற்றலைகள் எழுகின்ற கடவுள் அது. சீடர்கள் பெரும்பாலானவர்கள் மீனவர்கள், மீன்பிடித் தொழில் செய்தவர்கள். கடலின் அலைகளை எதிர்கொள்ளும் திறன் பெற்றவர்கள். படகில் உள்ள ஒரு விதிவிலக்கு இயேசு. இவர் தச்சர். தண்ணீரின் ஓட்டம், அலைகளின் தாக்கம் தச்சனுக்குத் தெரியாது. ஆனாலும், தச்சன் தூங்குகிறார். மீனவர்கள் அலறுகிறார்கள்.

சீடர்களின் அலறலுக்குக் காரணம் அவர்களின் பதற்றம்.

அவர்களுடைய மூளை சாவுக்கு அருகில் சென்றுவிட்டது. உடல் படகில் இருக்கிறது. இரண்டிற்குமான இடைவெளியைச் சரிசெய்ய முடியாமால், 'ஆண்டவரே, காப்பாற்றும், சாகப்போகிறோம்' என அலறி, தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்புகின்றனர்.

அலைகள் அடிக்கின்ற நேரத்திலேயே, 'சாகப்போகிறோம்' என்ற குரல் எழுப்புவது சீடர்களின் முதிர்ச்சியின்மையையும் காட்டுகின்றது. சீடர்கள் தங்களுடைய அதீத எண்ண ஓட்டங்களால் நடக்கவிருப்பதை மிகைப்படுத்துகிறார்கள்.

ஆனால், இயேசு மிகவும் சாதாரணமாக அல்லது இயல்பாக இருக்கிறார். 'என்னப்பா ஆச்சு! ஏன் சத்தம் போடுறீங்க?' என்று எதார்த்தமாகக் கேட்கிறார். 'நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?' எனக் கடிந்துகொள்கின்றார்.

'அவசரம்,' 'அச்சம்,' 'பதற்றம்,' 'சாவு பற்றிய பயம்,' 'நம்பிக்கையின்மை' - இவை சீடர்களின் உணர்வுகள்.

'அமைதி' - இது மட்டுமே இயேசுவின் உணர்வு.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 19:15-29) சோதோம் நகரிலிருந்து லோத்தையும் அவரின் குடும்பத்தையும் வெளியேற்றிவிட்டு, ஆண்டவராகிய கடவுள் அந்நகரின்மேல் நெருப்பும் கந்தகமும் பொழியச் செய்கின்றார். 'திரும்பிப் பார்க்காதே' என்று ஆண்டவர் கட்டளையிட்டும், லோத்தின் மனைவி திரும்பிப் பார்க்கிறாள். உப்புச்சிலையாக மாறுகிறாள்.

ஏன் அவள் திரும்பினாள்?

'ஆர்வத்தினாலா,' 'உண்மையாகவே அழிகிறதா என்று பார்க்கவா,' 'தனக்குப் பின் யாராவது வருகிறாரா?' என்ற அக்கறையினாலா?

தெரியவில்லை.

ஆனால், நகரை விட்டு ஓடும் அவசரம், பதற்றம் அவளைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கலாம். பதற்றத்தில் நாம் அடிக்கடி திரும்பியும் பார்ப்போம் - உடலால் உள்ளத்தால். சீடர்களும் கரைக்குத் திரும்பலாமா என்று திரும்பிப் பார்த்திருப்பார்கள்.

அவசரம், பதற்றம், அச்சம், திரும்பிப் பார்த்தல் ஆகியவற்றை விடுத்து அமைதி மட்டும் பெற்றால் எத்துணை நலம்!