Friday, March 8, 2019

பணிமாற்றம்

இன்றைய (9 மார்ச் 2019) நற்செய்தி (லூக் 5:27-32)

பணிமாற்றம்

மனமாற்றம் பற்றி நாம் பேசத் தொடங்கும் தவக்காலத்தின் முதல் சில நாள்களில் ஒன்றான இன்று, 'பணிமாற்றம்' என்பது 'வாழ்க்கை மாற்றம்' என்றும், அதுவே 'மனமாற்றம்' என்றும் முன்வைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

சுங்கச்சாவடியில் வரி தண்டுபவராய் இருந்த லேவி என்பவரை இயேசு, 'என்னைப் பின்பற்றி வா!' என்று அழைக்கிறார். அவரும் அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றிச் செல்கின்றார்.

வரி தண்டுபவர்கள் வழக்கமாக நிறையக் கேள்வி கேட்பார்கள். அடுத்தவர்களிடமிருந்து எதையாவது பெற்றுவிட வேண்டும் என்றே முயற்சி செய்வார்கள். அதுவும், இயேசுவின் சமகாலத்தில் உரோமைப் பேரரசு வரி வாங்குவதில் மிகவும் மெனக்கெடுவதாய் இருந்தது. அதிக பணம் புழங்கும் ஒரு இடம் இன்பதால் இவ்வேளைக்கு நிறைய போட்டிகளும் இருந்திருக்கும். இருந்தாலும், தன் இருக்கையையும், தன் வரவையும், தன் அலுவலக நட்பு வட்டாரத்தையும் இழந்துவிட்டு, ஒரு நாடோடி போதகரைப் பின்பற்றிச் செல்கின்றார் லேவி.

அப்படி என்றால், இவருக்கு இந்த வேலை திருப்தி தரவில்லையா?

மற்றவர்கள் லேவி என்ற மத்தேயுவிடம் காணாத ஒன்றை இயேசு அவரிடம் கண்டார். அதுவே மத்தேயுவை இயேசு நோக்கி அழைத்திருக்கும்.

வரிதண்டும் தொழில் யூதர்களைப் பொறுத்தவரையில் ஒரு தீய தொழில். ஏனெனில், சொந்த மக்களிடமே வரி வசூல் செய்து உரோமைக்கு கொடுக்க வேண்டியிருந்ததால் யூதர்கள் வரிதண்டுபவர்களை அதிகம் வெறுத்தனர். மேலும், வரி வசூலிப்பதற்காகச் சில நேரங்களில் வரிதண்டுபவர்கள் வன்முறை வழிகளையும் கையாண்டனர். இப்படியாக, பாவியாக, அழுக்கானவராக, தீய தொழில் செய்பவராக இருந்தவரை கோவில் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில், மக்களால் ரபி ('போதகர்') என அழைக்கப்பட்ட இயேசு அவரை அழைத்தது, அவருக்கு தன்மதிப்பை உயர்த்தியிருக்கும். உடனே புறப்பட்டிருப்பார். ஆக, மற்றவர்கள் மத்தேயுவைப் பாவியாகக் காண, இயேசு அவரை ஒரு திருத்தூதராகக் காண்கின்றார். நாம் பார்க்கும் பார்வை அடுத்தவரின் வாழ்வுப் பாதையை மாற்றிவிடும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

அந்த நாள் இரவே மத்தேயு தன் வீட்டில் அனைவருக்கும் விருந்து கொடுக்கின்றார். 'இதுதான் நான்! இவர்கள்தாம் என் நண்பர்கள்!' என்று இயேசுவுக்குத் தன்னையே திறந்து காட்டுகின்றார் மத்தேயு.

இந்நிகழ்வு நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

அ. நம் வாழ்வைப் புரட்டிப்போடும் அவர் எந்நேரமும் நம்மைத் தேடி வரலாம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்நேரம் அவரைக் கண்டுகொள்வதே.

ஆ. அவரைப் பின்பற்றுவது தொடக்கத்தில் இழப்பாகத் தெரிந்தாலும், அவர் நம்மைப் பற்றி வைத்திருக்கும் பார்வை நம் தன்மதிப்பை உயர்த்தும்.

இ. அவராக நுழைந்து நம் வாழ்வின் நுகத்தை அகற்றும்போது, அவர் தன் நுகத்தை நம்மேல் சுமத்துகிறார். இதையே இன்றைய முதல் வாசகமும் (காண். எசா 58:9-14), 'உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றும்போது ... நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போலவும் வற்றாத நீரூற்று போலவும் இருப்பாய்' என்கிறது.

வரலாற்று இயேசு பற்றிய ஆய்வில் முக்கியமாகப் பேசப்படும் அறிஞர் ஆல்பர்ட் ஸ்வைஸ்டர் என்பவர். இவர் இறையியல் பயின்றவர், பின் விவிலியம் பயின்றவர், பின் மருத்துவம் பயின்றவர். இறுதியாக, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆப்பிரிக்க பழங்குடிகள் நடுவே பணியாளராகச் சென்று அங்கேயே இறந்தவர். வாழ்க்கையின் ஒவ்வொரு பணிமாற்றத்தையும் தன் மனமாற்றமாகக் கண்டவர். லேவி என்ற மத்தேயு போல!


2 comments:

  1. ."மற்றவர்கள் மத்தேயுவைப் பாவியாகக்காண, இயேசு அவரை ஒரு திருத்தூதராகக் காண்கிறார்"! இப்பதிவின் பின்னனியில் இழையோடும் நாதம் இதுவே என்று தோன்றுகிறது. என்னையும் கூட அவர் தேடி வரலாம். அவ்வேளையில் நான் தயாராக இருப்பேனா? கேள்வி எழுகிறதுஎன்னில்.அவரைத்தொடர்வது இழப்பாகத்தெரிந்திடினும்,நம்மைப்பற்றி அவர் வைத்திருக்கும் பார்வை நம் தன்மதிப்பை உயர்த்தும் என்பதும்,அவர் நம் நுகத்தை அகற்றித் தன் நுகத்தை சுமத்தும்போதுநாம் வற்றாத நீரூற்று போலவும்,நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போலவும் இருப்போம் என்பதும் இன்றைய காலகட்டம் நமக்கு அளிக்கும் வெகுமதிகள்.அவற்றைப் பெற்றுக்கொள்ள கரங்கள் இரண்டையும் நாம் நீட்டிக்கொடுக்கும் போதுதான் நாம் நம் வாழ்க்கையின் மாற்றங்களை மனமாற்றமாகக் கொள்ள முடியும்....ஒரு லேவி போல...ஒரு ஆல்பர்ட் ஸ்வைஸ்டர் போல.
    காலத்தின் தேவையறிந்து,கனமான விஷயங்களையும் கைக்கெட்டும் தூரத்திற்குக் கொண்டு வரும் தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete