Wednesday, March 13, 2019

இரு கரங்கள்

இன்றைய (14 மார்ச் 2019) நற்செய்தி (மத் 7:7-12)

இரு கரங்கள்

இன்றைய நற்செய்தி வாசகமும் (காண். மத் 7:7-12) முதல் வாசகமும் (காண். எஸ்தர் 4:17), 'இறைவனின் அருள்வளமும் மனிதரின் விடாமுயற்சியும் இணையும்போது அற்புதங்கள் நடக்கும்' என்பதை நமக்குச் சொல்கின்றன.

எஸ்தர் அரசி தன் இனத்தார் சார்பாக அரசனிடம் முறையிடப் புறப்படமுன் அவர் செபிக்கும் செபத்தை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். ஆக, இஸ்ரயேல் மக்கள் அரசனின் பார்வையில் தயை பெறுவதற்கு, இறைவனின் அருள்வளமும் எஸ்தரின் உழைப்பு அல்லது விடாமுயற்சியும் இணைந்து தேவைப்படுகிறது.

'நீங்கள் கேட்கும் முன்பே உங்கள் தேவையை கடவுள் அறிந்திருக்கிறார்' என்று இரண்டு நாள்களுக்கு முன் கேட்ட வாசகப் பகுதியில் சொல்லும் இயேசு, இன்று, 'கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்' என்கிறார். மேலும், 'கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்' என்றும் கூறுகின்றனர்.

'கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்' - என்று மூன்று செயல்களைச் செய்யச் சொல்கின்றார் இயேசு. கேட்பதில் நாம் வாயைப் பயன்படுத்துகின்றோம். தேடுவதில் கண்களையும், தட்டுவதில் கைகளையும் பயன்படுத்துகின்றோம். நம் ஐம்புலன்களில் நாம் முயற்சி எடுத்துப் பயன்படுத்த வேண்டிய புலன்கள் இம்மூன்றுதாம். காதுகள் கேட்பதற்கும், மூக்கு நுகர்வதற்கும் நம் முயற்சி தேவையில்லை. நாம் விரும்பாமலே பல சப்தங்களைக் கேட்கவும், பலவற்றை நுகரவும் முடியும்.

ஆக, முயற்சி எடுத்துச் செய்ய வேண்டியவற்றை முயற்சி எடுத்துத்தான் செய்ய வேண்டும் என்று சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

மேலும், கேட்காமல் ஒன்று நம் கையில் கொடுக்கப்படும்போதும், தேடாமலேயே ஒன்று கிடைக்கும்போதும், தட்டாமலேயே நமக்குக் கதவுகள் திறக்கப்படும்போதும் நாம் அவற்றில் எதையும் இரசிப்பதில்லை. மாறாக, இந்த மூன்று நிலைகளில் நம்முடைய 'லிமினாலிட்டை' (அதாவது, வரையறையை) நாம் உணரும்போது, அதன் வலியும், அதன் இன்பமும் தெரிகிறது.

நாம் ஒன்றைப் பெறுவதற்கு வலிந்து போரிடும்போதுதான் அதன் இனிமையை நம்மால் அனுபவிக்க முடிகிறது.

இன்றைய வாசகங்கள் வைக்கும் பாடங்கள் இரண்டு:

1. நம் வரையறை தரும் வலியை உணர்வது.

2. அந்த வலியை எதிர்த்து விடாமுயற்சியோடு உழைப்பது.

வலியும் விடாமுயற்சியும் அப்புறத்திலிருந்து இறைவனின் கரத்தை நம்மிடம் கொண்டு வந்து நீட்டும். இரு கைகள் இணையப் பயணம் இனிதாகும்.

2 comments:

  1. "வலியும்,விடாமுயற்சியும் அப்புறத்திலிருந்து இறைவனின் கரத்தை நம்மிடம் கொண்டு வந்து நீட்டும். அப்படி நீட்டும் போது இரு கைகள் இணையப் பயணம் இனிதாகும்". அருமை.இறைவனின் அருள் வளமும்,மனிதனின் விடா முயற்சியும் இணையும் போது அற்புதங்கள் நடக்கும்..அதுவும் நாம் நம் தேவை என்ன எனக்கேட்கும் முன்னே இவை நடந்தால்...?!.அவற்றிற்கு என்ன பெயர்? தந்தை ஒரு புதிய பெயரைக்கண்டு பிடிக்க வேண்டும். இறைவனை நோக்கிச் செல்லும் பயணத்தில் ,நான் எடுக்கும் விடாமுயற்சியில் என் ஐம்புலன்களை எவ்வாறு பயன் படுத்துகிறேன்....?? நல்லதொரு தேடலுக்கு வழிவகுத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. " இணைந்த கரங்கள்"...இதில் எந்தக்கரம் யாருடையது எனும் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாதிருப்பது இப்படத்தின் தனிச்சிறப்பு.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete