Thursday, March 28, 2019

தொலைவில் இல்லை

இன்றைய (29 மார்ச் 2019) நற்செய்தி (மாற் 12:28ஆ-34)

தொலைவில் இல்லை

'என்லைட்டன்மென்ட்' என்று சொல்லப்படக்கூடிய காலம் அறிவியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானது. மறுமலர்ச்சிக் காலத்தில் மதம் அல்லது நம்பிக்கை சார்ந்தவை சற்றே தளர்ந்து அறிவியல் மற்றும் அறிவுக்கு வழிகோலின. ஏறக்குறைய 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய இக்காலம் இன்றும் தொடர்கிறது.

இதன் தொடக்கத்திற்கு வித்திட்ட பலருள் ஒருவர் பிரான்சிஸ் பேகன் என்பவர். 'அறிவே ஆற்றல்' என்ற சொற்கோவை கொண்டு நம்பிக்கையிலிருந்து அறிவிற்கு இட்டுச்சென்றார். இது இன்றுக்கு கேள்விக்குட்படுத்தப்பட்டாலும் இதில் உண்மை இருக்கிறது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக, சர்க்கரை நோய் உள்ளவர் சர்க்கரை சாப்பிடக்கூடாது என்பது அறிவு. ஆனால், அந்த அறிவு மட்டுமே அவரை நோயிலிருந்து காப்பாற்றிவிடுமா? இல்லை. அறிவிற்கு அடுத்த செயல் அவசியம். ஆக, அறிவு ஆற்றல் தந்தாலும் தொடர் செயல் அவசியம்.

இதையே கீழைத்தேய மதங்களான இந்து மதம், சமணம், புத்தம் ஆகியவை வலியுறுத்துகின்றன. ஒருவரின் 'அறியாமையே' அவரை 'மாயா' ('மாயை')வில் இடுகிறது என்பது இம்மதங்களின் போதனை. ஆக, அறியாமையிலிருந்து விடுதலை பெறுவதையே மனித வாழ்வின் இலக்காக இவை முன்வைக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வருகிறார். இவர் அறிஞர். மறைநூலை அறிந்தவர். 'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?' என்று இயேசுவிடம் கேட்கின்றார். இது, 'விடைக்காக கேட்கப்பட்ட கேள்வி' அல்ல. மாறாக, 'அடுத்தவருக்கு விடை தெரியுமா எனக் கேட்கப்பட்ட கேள்வி.' இயேசுவும், முதல் ஏற்பாட்டில் மேன்மையாக விளங்கிய 'இறையன்பு' (இச 6:4), 'பிறரன்பு' (லேவி 19:28) ஆகிய கட்டளைகளை மேற்கோள் காட்டுகின்றார்.

இயேசு சொல்லும்போது, 'முதல் கட்டளை,' 'இரண்டாம் கட்டளை' என வரிசைப்படுத்துகிறார்.

இந்த விடையை அப்படியே திரும்பச் சொல்லும் மறைநூல் அறிஞர், 'நன்று போதகரே ... கடவுள் ஒருவரே. அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை ... அவரிடம் அன்பு செலுத்துவதும் தன்னிடம் அன்பு கொள்வதுபோல அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது' என்கிறார்.

இவரின் இந்தப் பதிலைக் கண்டு, 'நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்கிறார் இயேசு.

ஏன்?

ஏனெனில், இவர் இரண்டு கட்டளைகளையும் ஒரே தளத்தில் வைத்தார். மேலும், கட்டளைகளைக் கடைப்பிடிப்பது பலிகள் செலுத்துவதைவிட மேலானது என்று கண்டுகொண்டார்.

இதுதான் அறிவு. இந்த அறிவுதான் இறையாட்சியின் அருகில் இவரை வரவைக்கின்றது.

ஆக, அறிதல் வந்தவுடன் ஞானத்திற்கான பயணம் தொடங்குகிறது.

இதையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஒசே 14:1-9), 'ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை உணர்ந்துகொள்ளட்டும். பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்துகொள்ளட்டும். ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை. நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள். மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்' என்று சொல்லி, ஆண்டவரின் நெறிகளை அறிதல் அவசியம் என்று சொல்கிறது.

அறிதல் எப்படி?

பவுலடியார் மிக அழகான ஃபார்முலாவைத் தருகின்றார்:

'அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்' (2 தெச 5:21).

அறிபவர் எவரும் இறையாட்சியினின்று தொலையில் இல்லை.

1 comment:

  1. "அறியாமையிலிருந்து விடுதலை பெறுவது மனித வாழ்வின் இலக்கு என்பதும், அறிதல் நம்மைத்தொட்ட பிறகு ஞானத்திற்கான பயணம் தொடருகிறது" என்பதும் இன்றையப் பதிவின் கருப்பொருள் என்று தோன்றுகிறது.ஏனெனில் இந்த 'ஞானமே' இறையன்பும்,பிறரன்பும் ஒரே தளத்தில் வைக்கப்பட வேண்டியவை என்றும்,இவற்றைக்கடைபிடிப்பது பலிகள் செலுத்துவதை விட மேலானது என்றும் இன்றைய மறைநூல் அறிஞருக்குக் கற்றுத்தந்துள்ளது. அதே ஞானம் தான் நம்மையும் "அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து,நல்லதைப்பற்றிக்கொள்ளவும்,எல்லாத் தீமைகளை விட்டு விலகவும்" நமக்குக் கற்பிக்கிறது. ஆகவே ஞானத்தைப்பற்றிக்கொள்வோம்; நமக்கும் இறையாட்சிக்கும் உள்ள தூரத்தைக் குறைப்போம். மனித மூளைக்குக் கொஞ்சம் அப்பாற்பட்ட திடப்பொருளான விஷயமெனினும் அதை சாமான்யனும் ஏற்று செரிக்கக் கூடிய அளவிற்குத் திரவமாக்கித் தந்த தந்தைக்கு என் நன்றியும்,செபங்களும்!!!

    ReplyDelete