Monday, March 4, 2019

இழப்பதும் பெறுவதும்

இன்றைய (5 மார்ச் 2019) நற்செய்தி (மாற் 10:28-31)

இழப்பதும் பெறுவதும்

தவக்காலம் தொடங்குவதற்கு முந்தைய நாளில் இழப்பதையும், பெற்றுக்கொள்வதையும் பற்றிப் பேசுகின்றன இன்றைய வாசகங்கள்.

நேற்றை நற்செய்தி வாசகப் பகுதியின் தொடர்ச்சியே இது. செல்வந்த இளவல் முகவாட்டத்தோடு இயேசுவிடமிருந்து விடைபெற்றதைத் தொடர்ந்து, இயேசு, 'மனிதரால் இது இயலாது. கடவுளால் இது இயலும்' என்கிறார். தொடர்ந்து, பேதுரு இயேசுவிடம், 'பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே!' என்றும், 'இதனால் எங்களுக்கு என்ன?' என்று மறைமுகமாகவும் கேட்கின்றார்.

'என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ ...' என்று ஒரு பெரிய லிஸ்ட் போடுகின்றார் இயேசு. இங்கே, 'மனைவியை' விடுவது பற்றி எந்தக் குறிப்பும் இல்லாதது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒருவேளை மனைவியை விடுவது தேவையில்லை என்று கருதப்பட்டதா, அல்லது 'நூறு மடங்கு மனைவியர் பெறுவதன்' ஆபத்து முன்னுணரப்பட்டு, அந்த வார்த்தை நீக்கப்பட்டதா என்று நமக்குத் தெரியவில்லை.

இந்த நற்செய்தியை நான் எப்படி புரிந்துகொள்கிறேன்?

'நம்மிடம் இல்லாததை இழப்பது நமக்குப் பெரிதல்ல. ஆனால், இருப்பதை இழப்பதுதான் மிகவும் கஷ்டம்.'

எடுத்துக்காட்டாக, 'நான் இயேசுவுக்காக என் வீட்டை இழக்கிறேன்' எனச் சொல்வது எனக்கு எளிது. ஏனெனில், எனக்கென்று எந்த வீடும் இல்லை. ஆனால், 'நான் இயேசுவுக்காக என் மாதச் சம்பளத்தை இழக்கிறேன்' என்று சொல்வது எனக்கு ரொம்பவே கடினம். ஏனெனில், என் சம்பளம் என் வாழ்க்கை நிலையையும், வாழ்க்கைத் தரத்தையும் நிர்ணயம் செய்கிறது.

மேலும், இங்கே, இழப்பது என்பது வெறும் இழப்பு அல்ல. இழப்பை வெறும் இழப்பாக மட்டும் பார்க்கக் கூடாது. எடுத்துக்காட்டாக, கஜா புயலில் வீடு இழந்தவர்களை அல்லது சுனாமியில் உறவுகளை இழந்தவர்களை அல்ல இயேசு குறிப்பிடுவது. மாறாக, ஒன்றை இழப்பது இயேசுவைப் பற்றிக்கொள்வதற்காக இருக்க வேண்டும். அங்குதான் பேறு இருக்கிறது. ஏனெனில், இழப்பதைவிட மிகவும் கடினமானது இயேசுவைப் பற்றிக்கொள்வது. ஏனெனில், அவரைப் பற்றிக்கொள்ள நாம் மற்ற பற்றுக்களை விட்டாக வேண்டும். மேலும், மற்ற பற்றுக்குள் தரும் உடனடி பாதுகாப்பு போல, இயேசுவைப் பற்றிக்கொள்ளும் பற்று நமக்குத் தருவதில்லை. அதைத்தான் இயேசு, 'இன்னல்கள்' எனக் குறிப்பிடுகின்றார்.

இந்தப் பின்புலத்தில், இன்றைய முதல் வாசகம் (சீஞா 25:1-12), ஆண்டவருக்குப் பலி செலுத்துவதைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. 'ஆண்டவர் திருமுன் வெறுங்கையோடு வராதே!' என எச்சரிக்கிறார் ஆசிரியர். 'பலி' என்பது செலுத்தப்பட்டவுடன் அது நம்மில் ஒரு இழப்பை ஏற்படுத்துகிறது. அந்த இழப்பில்தான் நாம் பெறுகிறோம். ஆக, ஒவ்வொன்றையும் எடுத்துப்போய் அவரின் திருமுன் இழப்பதே பலி.

வாழ்க்கையே 'இழப்பதிலும்,' 'பெறுவதிலும்' தான் இருக்கிறது.

நம் உடலின் செல்களை இழக்கின்றோம். வளர, வளர உடல் நலத்தை இழக்கின்றோம். இன்னும் வயதாக வயதாக உறவுகளை இழக்கின்றோம். ஆனால், ஒவ்வொரு இழப்பிலும் நாம் வாழ்வின் நிறைவைப் பெறுகிறோம்.

ஆக, இழத்தலும், பெறுதலும் இணைந்தவை.

இழத்தலில் இன்னல் உண்டு. அந்த இன்னல்தான் இழத்தலின் பேறு.


4 comments:

  1. "நம்மிடம் இல்லாததை இழப்பது நமக்குப் பெரிதல்ல...ஆனால் இருப்பதை இழப்பதுதான் மிகவும் கஷ்டம்."... அருமை."பலி நம்மில் ஏற்படுத்தும் இழப்பில் தான் நாம் பெறுகிறோம்"......வாழ்க்கையே " இழப்பதிலும்", " பெறுவதிலும்" தான் இருக்கிறது; ஒவ்வொரு இழப்பிலும் வாழ்வின் நிறைவைப்பெறுகிறோம்;" இழத்தலும் பெறுதலும் இணைந்தவை.", இழத்தல் தான் இன்னலின் பேறு"..... விவிலியத்திற்குள் தந்தை தன்னையே புதைத்து அள்ளி வழங்கும் முத்துக்களாகப் பார்க்கிறேன் இன்றையப் பதிவின் கருத்துக்களை.என் வாழ்க்கையில் வரும்இழப்புகளுக்காக நன்றி சொல்கிறேன்.

    இத்தனை சீரியஸான விஷயங்களைத் தரும் தந்தைதான் இதையும் தருகிறார்....
    "நற்செய்தியில் மனைவியை விடுவது பற்றி இயேசு ஒன்றும் கூறாததற்குக் காரணம்..."மனைவியை விடுவது தேவையில்லை எனக்கருதப்பட்டதா? அல்லது நூறு மடங்கு மனைவியர் பெறுவது ஆபத்து என முன்னுணரப்பட்டதா" இது தந்தையின் சந்தேகம்.எத்தனை சீரியஸான விஷயமெனினும் அதைக்கொஞ்சம் மசாலா கலந்து தரும்போழுது ஏற்பதற்கு எளிதாகி விடுகிறது என்றே தோணுகிறது.இது நகைச்சுவையா...இல்லையா? தந்தைக்கே வெளிச்சம்.ஆனாலும் இரசிக்கும் படி இருக்கிறது. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. மனைவி பற்றி சொல்ல வருவது நகைச்சுவையுடன் கூடிய ஓர் விவிலியப் பொருள்கோள் முறையின் விளைவாக நான் கருதுகிறேன்... நன்றி அருள்பணியாளரே...
    தேவ அழைத்தல் பற்றி பேசும் போது இந்த விவிலியப் பகுதியின் இழத்தல், பற்றுதல் குறித்து அதிகமான அழுத்தம் தரப்பட வேண்டும்....அது உண்மையான, அர்ப்பணமிக்க இறைபணியாளர்களை திருச்சபைக்கும் பெற்றுத்தரும்.... நன்றி...

    ReplyDelete