Wednesday, March 6, 2019

வாழ்வை இழந்தால்

இன்றைய (7 மார்ச் 2019) நற்செய்தி (லூக் 9:22-25)

வாழ்வை இழந்தால்

தவக்காலத்தில் நுழைந்துள்ள நமக்கு இயேசுவின் பாடுகள் முன்னறிவிப்பு இன்றைய நற்செய்தி வாசகமாகத் தரப்பட்டுள்ளது. மானிட மகன் 'பலவாறு துன்பப்படவம்,' 'உதறித் தள்ளப்படவும்,' 'கொலைசெய்யப்படவும்,' 'உயிருடன் எழுப்பப்படவும்' வேண்டும் என்று நான்கு வினைச்சொற்களைப் பயன்படுத்துகிறார் இயேசு. முதல் வினைச்சொல் தவிர்த்து மற்ற மூன்று வினைச்சொற்களும் செயப்பாட்டுவினையில் இருக்கின்றன. ஆக, இயேசுவின் மேல் இவை அனைத்தும் செய்யப்படுகின்றன.

ஒருவர் செயப்பாட்டுவினைக்குத் தள்ளப்படுவதே அவர் அனுபவிக்கும் பெரிய வலி. எடுத்துக்காட்டாக, 'தினமும் நான் நடக்கிறேன்'. இதில், நானே எல்லாமாக இருக்கிறேன். ஆனால், நான் கீழே விழுந்து கால்களை உடைத்துக்கொள்ளும்போது, 'தினமும் நான் நடக்கவைக்கப்படுகிறேன்'. அதாவது, மற்றவரின் துணையோடு நான் நடக்கிறேன். இங்கே நடப்பவர் அவராகவும், நடத்தப்படுபவர் நானாகவும் ஆகிறேன். இங்கே, நான் என் பாதையையும், நேரத்தையும் நிர்ணயிக்க முடியாது. நான் மற்றவரின் இரக்கத்தில் இருப்பேன்.

ஆக, மற்றவரின் இரக்கத்தில் இருப்பதுதான் ஒருவர் அனுபவிக்கும் பெரிய வலி.

இதுதான் இயேசு முன்வைக்கும் சிலுவை.

பல நேரங்களில் வாழ்வின் மாஸ்டர் அல்லது மிஸ்ட்ரஸ் என நம்மையே எண்ணிக்கொள்கிறோம். வாழ்க்கை எப்போதும் நம்மை இந்த நிலையில் வைத்திருப்பதில்லை. நம்முடைய தன்னலத்தாலும் இயற்கையாலும் நடைபெறும் நிகழ்வுகளால் வாழ்க்கை நிகழ்வுகள் தலைகீழாகின்றன. அந்த நிகழ்வுகள் எதிர்பாராத சிலுவைகளாக நம்மிடம் வருகின்றன.

இயேசு தன்னைப் பின்பற்றுகிறவர்கள், தன்னலம் துறக்கவும், சிலுவை தூக்கவும், தொடர்ந்து பின்பற்றவும் வேண்டும் என்கிறார். இம்மூன்றும் அடுத்தடுத்து நிகழக்கூடியவை.

'ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே (ஆன்மாவை) இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?' - எனக் கேட்கிறார் இயேசு. அதாவது, நாம் வைத்திருக்கும் எதுவும் நமக்கு வாழ்வைத் தருவதில்லை. ஆக, அவற்றை இழக்கக் கற்றுக்கொள்ளும்போதுதான் நாம் வாழ்வைக் கற்றுக்கொள்கிறோம்.

இதையே இன்றைய முதல் வாசகம் (காண். இச 30:15-20), 'வாழ்வையும் சாவையும்' 'ஆசியையும் சாபத்தையும்' உன்முன் வைக்கிறேன் எனவும், 'வாழ்வைத் தேர்ந்துகொள்' எனவும் அறிவுறுத்துகிறது. இயேசு தன் வாழ்வை சாவின் வழியாகத் தேர்ந்துகொண்டார். அடுத்தவரின் சாபத்தை நம் ஆசியாக மாற்றினார்.

வாழ்வும், சாவும் நம்முன் நிற்கின்றன.

நாம் செய்யும் தெரிவே நம் வாழ்வை நிர்ணயிக்கிறது.

இயேசுவின் தெரிவு தெளிவாக இருந்தது. அத்தெரிவில் இயேசு உறுதியாகவும் இருந்தார்.

ஆக, தெரிவில் தெளிவும், தெரிவில் உறுதியோம் வேண்டுவோம் இன்று.


2 comments:

  1. Yes....Two roads diverged in a yellow wood
    And sorry I couldn't travel both..
    I chose the less traveled by
    And that has made all the difference..
    வாழ்வும், சாவும்... நம் முன்...
    இயேசுவைப் போன்று, தெரிவில், தெளிவும், உறுதியும் பெற, இறையை இறைஞ்சுவோம்...🙏

    ReplyDelete
  2. " மற்றவரின் இரக்கத்தில் இருப்பதுதான் ஒருவர் அனுபவிக்கும் பெரிய வலி"என்பதும், "ஒருவர் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டாலும்,ஆன்மாவை இழப்பாரெனில் என்ன பயன்?" போன்ற வரிகளும் அடிக்கடி நம் செவிகளில் விழுந்திடினும் அவை நம்மை அச்சுறுத்துவதில்லை.ஆனால் இன்றைய முதல் வாசகம் கூறும் வரிகள்.. "ஆசியையும்,சாபத்தையும் உன் முன் வைக்கிறேன்.வாழ்வை/ ஆசியைத் தெரிந்து கொள்." இல்லையேல்..... அச்சுறுத்தும் வார்த்தைகள். அச்சுறுத்திடினும் வழிமாறிச் செல்லும் இன்றைய இளைஞர்களை நெறிப்படுத்தக் கூடிய வரிகள் இவை என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. இயேசுவின் தெரிவில் தெளிவும்,உறுதியும் இருந்தது என்கிறார் தந்தை.அதே தெளிவும்,உறுதியும் என் தெரிவிலும் இருக்க வழி சொல்லும் தந்தைக்கு என் நன்றியும்....பாராட்டும்....

    ReplyDelete