Friday, March 29, 2019

ஏற்புடையவராகி

இன்றைய (30 மார்ச் 2019) நற்செய்தி (லூக் 18:9-14)

பாஸ்கா திருவிழிப்பு நிகழ்வில் புதிய பாஸ்கா திரி ஏற்றப்படும் போது, அருள்பணியாளர் ஒரு செபம் சொல்வார்: 'காலங்கள் அவருடையன. யுகங்களும் அவருடையன.'

நம்முடைய இருப்பு என்பது இடம் மற்றும் காலத்தைக் கொண்டு அறியப்படுகிறது. எடுத்துக்காட்டாக, நான் திருச்சியில் இருந்துகொண்டு 29ஆம் தேதி மதியம் 2 மணிக்கு இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதில், 'இடம்' என்பது என்னுடையது. 'காலம்' என்பது அவருடையது. எப்படி? நான் திருச்சியில், திண்டுக்கல்லில், மதுரையில், உரோமையில் என எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், 29ஆம் தேதி மதியம் 2 மணிக்கு இருப்பது என்பது என் கையில் இல்லை. ஆகையால் தான், காலத்தை நாம் அவருடையவது என்கிறோம்.

ஆக, வாழ்க்கையை இரண்டு நிலைகளில் நம்மால் வாழ முடியும். ஒன்று, இடத்தை மையப்படுத்தி வாழ்வது - அதாவது, எல்லாமே என் கையில்தான் உள்ளது என நினைத்து வாழ்வது. இரண்டு, காலத்தை மையப்படுத்தி வாழ்வது - அதாவது, எல்லாமே அவரின் கையில்தான் உள்ளது என நினைத்து வாழ்வது. முதல் வகை வாழ்தலில் நிறைய சோர்வும், விரக்தியும், ஒப்பீடும் இருக்கும். இரண்டாம் வகை வாழ்வில் நிறைய சுதந்திரமும், மகிழ்ச்சியும், ஏற்றுக்கொள்தலும் இருக்கும்.

இன்றைய நற்செய்தியில், 'தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து' இயேசு ஓர் உவமையைச் சொல்கிறார். ஒரு கோவில். ஒரு பரிசேயர். ஒரு வரிதண்டுபவர். இருவருமே கோவிலுக்கு இறைவேண்டல் செய்யச் செல்கின்றனர். பரிசேயரின் செபம் தன்மையம் கொண்டதாகவும், வரிதண்டுபவரின் செபம் இறைமையம் கொண்டதாகவும் இருக்கின்றது. பரிசேயர் தான் செய்துவரும் அனைத்து பக்தி முயற்சிகளையும் பட்டியலிடுகின்றார். வரிதண்டுபவரோ, வானத்தை அண்ணாந்து பார்க்கவும் துணியாமல், 'கடவுளே, பாவி என்மேல் இரக்கம் வையும்' என்று மிகச் சுருக்கமாகச் செபிக்கிறார்.

இது ஏறக்குறைய நல்ல கள்வனின் செபம் போல இருக்கிறது: 'நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவுகூறும்!'

அவ்வளவுதான். ஒரே முறை கேட்டார்கள். ஒரே முறை தேடினார்கள். ஒரே முறை தட்டினார்கள். பெற்றக்கொண்டர்கள்.

வரிதண்டுபவர் 'காலத்தை' மையமாக வைத்து வாழ்ந்தார். தன் இருப்பு, இயக்கம் அனைத்தும் கடவுளால்தான் என்று உணர்ந்தார். ஆனால், பரிசேயரோ, தன் 'இடத்தை' மையமாக வைத்து வாழ்கிறார். தன் இருப்பு, இயக்கம் அனைத்தும் தன்னால்தான் என்று நினைக்கிறார். தன் பக்தி முயற்சிகளால் கடவுளின் கொடைகளை 'வாங்கிவிட' முடியும் என நினைக்கிறார்.

இன்று நாம் நம் வாழ்வை எப்படி வாழ்கிறோம்?

பரிசேயர் போலவா? அல்லது வரிதண்டுபவர் போலவா?

பரிசேயர் தன் செயல்களைப் பட்டியலிட, வரிதண்டுபவரோ இறைவனின் இரக்கத்தைப் பட்டியல் இடுகின்றார்.

தன் செயல்களைப் பற்றிப் பட்டியலிடுபவர் தன்னை மட்டுமே நேர்மையாளராகவும், கடின உழைப்பாளியாகவும் நினைத்துக்கொள்வார். இறைவனின் இரக்கத்தை நினைப்பவர் வாழ்வைக் கொண்டாடுவார். அவருக்கு யாரையும் இம்ப்ரஸ் செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது. அவர் தன்னையும், பிறரையும், கடவுளையும் இம்ப்ரஸ் செய்ய விரும்பமாட்டார்.

இப்படி யாரையும் இம்ப்ரஸ் செய்யாமல் இருப்பதே ஏற்புடைய நிலை.


Thursday, March 28, 2019

தொலைவில் இல்லை

இன்றைய (29 மார்ச் 2019) நற்செய்தி (மாற் 12:28ஆ-34)

தொலைவில் இல்லை

'என்லைட்டன்மென்ட்' என்று சொல்லப்படக்கூடிய காலம் அறிவியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானது. மறுமலர்ச்சிக் காலத்தில் மதம் அல்லது நம்பிக்கை சார்ந்தவை சற்றே தளர்ந்து அறிவியல் மற்றும் அறிவுக்கு வழிகோலின. ஏறக்குறைய 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய இக்காலம் இன்றும் தொடர்கிறது.

இதன் தொடக்கத்திற்கு வித்திட்ட பலருள் ஒருவர் பிரான்சிஸ் பேகன் என்பவர். 'அறிவே ஆற்றல்' என்ற சொற்கோவை கொண்டு நம்பிக்கையிலிருந்து அறிவிற்கு இட்டுச்சென்றார். இது இன்றுக்கு கேள்விக்குட்படுத்தப்பட்டாலும் இதில் உண்மை இருக்கிறது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக, சர்க்கரை நோய் உள்ளவர் சர்க்கரை சாப்பிடக்கூடாது என்பது அறிவு. ஆனால், அந்த அறிவு மட்டுமே அவரை நோயிலிருந்து காப்பாற்றிவிடுமா? இல்லை. அறிவிற்கு அடுத்த செயல் அவசியம். ஆக, அறிவு ஆற்றல் தந்தாலும் தொடர் செயல் அவசியம்.

இதையே கீழைத்தேய மதங்களான இந்து மதம், சமணம், புத்தம் ஆகியவை வலியுறுத்துகின்றன. ஒருவரின் 'அறியாமையே' அவரை 'மாயா' ('மாயை')வில் இடுகிறது என்பது இம்மதங்களின் போதனை. ஆக, அறியாமையிலிருந்து விடுதலை பெறுவதையே மனித வாழ்வின் இலக்காக இவை முன்வைக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வருகிறார். இவர் அறிஞர். மறைநூலை அறிந்தவர். 'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?' என்று இயேசுவிடம் கேட்கின்றார். இது, 'விடைக்காக கேட்கப்பட்ட கேள்வி' அல்ல. மாறாக, 'அடுத்தவருக்கு விடை தெரியுமா எனக் கேட்கப்பட்ட கேள்வி.' இயேசுவும், முதல் ஏற்பாட்டில் மேன்மையாக விளங்கிய 'இறையன்பு' (இச 6:4), 'பிறரன்பு' (லேவி 19:28) ஆகிய கட்டளைகளை மேற்கோள் காட்டுகின்றார்.

இயேசு சொல்லும்போது, 'முதல் கட்டளை,' 'இரண்டாம் கட்டளை' என வரிசைப்படுத்துகிறார்.

இந்த விடையை அப்படியே திரும்பச் சொல்லும் மறைநூல் அறிஞர், 'நன்று போதகரே ... கடவுள் ஒருவரே. அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை ... அவரிடம் அன்பு செலுத்துவதும் தன்னிடம் அன்பு கொள்வதுபோல அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது' என்கிறார்.

இவரின் இந்தப் பதிலைக் கண்டு, 'நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்கிறார் இயேசு.

ஏன்?

ஏனெனில், இவர் இரண்டு கட்டளைகளையும் ஒரே தளத்தில் வைத்தார். மேலும், கட்டளைகளைக் கடைப்பிடிப்பது பலிகள் செலுத்துவதைவிட மேலானது என்று கண்டுகொண்டார்.

இதுதான் அறிவு. இந்த அறிவுதான் இறையாட்சியின் அருகில் இவரை வரவைக்கின்றது.

ஆக, அறிதல் வந்தவுடன் ஞானத்திற்கான பயணம் தொடங்குகிறது.

இதையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஒசே 14:1-9), 'ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை உணர்ந்துகொள்ளட்டும். பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்துகொள்ளட்டும். ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை. நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள். மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்' என்று சொல்லி, ஆண்டவரின் நெறிகளை அறிதல் அவசியம் என்று சொல்கிறது.

அறிதல் எப்படி?

பவுலடியார் மிக அழகான ஃபார்முலாவைத் தருகின்றார்:

'அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்' (2 தெச 5:21).

அறிபவர் எவரும் இறையாட்சியினின்று தொலையில் இல்லை.

Wednesday, March 27, 2019

வலியவரைக் கட்டுவது

இன்றைய (28 மார்ச் 2019) நற்செய்தி (லூக் 11:14-23)

வலியவரைக் கட்டுவது

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்ட, கூட்டத்தினர் வியந்து, 'பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே பேயை ஓட்டுகிறார்' என்று குற்றம் சுமத்துகின்றனர்.

பாவம் இந்த மக்கள்! தம் சகோதரர் ஒருவரிடமிருந்து பேய் அகன்றதைக் குறித்து அக்களிக்காமல், அல்லது பேச்சற்ற ஒருவர் பேசும் கொடையைப் பெற்றதைப் பற்றிக் கொண்டாடாமல், இயேசுவுக்கு இந்த ஆற்றல் பேயிடமிருந்தே வந்தது என்று அவரைக் குற்றம் சுமத்தும் நோக்குடன் இருக்கிறார்கள். ஆக, 'பேய்தான் பேயை விரட்டியது. இயேசுவுக்கு ஆற்றல் கிடையாது' என்றும், 'பேய்களின் தலைவன் இயேசுவில் இருக்கும்போது இயேசுவும் பேய்தான்' என்றும் மக்களிடம் மறைமுகமாகச் சொல்கின்றனர் இந்தச் சிறிய உள்ளம் கொண்ட மக்கள்.

சில நேரங்களில் நாமும் நம்முன் நடக்கும் நற்செயல்களைக் கொண்டாடாமல் அவற்றின் நதிமூலம் ரிசிமூலம் பார்த்துக்கொண்டு பரிதாபமாக நிற்கிறோம்.
இயேசு அவர்களுக்கு விளக்கம் தருவதற்காக உருவகம் ஒன்றைக் கையாளுகின்றார்: 'வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாய் இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்த அவரை வென்றால் அவர் நம்பி இருந்த எல்லா படைக்கலங்களையும் பறித்துக்கொண்டு கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்!'

இவ்வுருவகத்தை இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம்.

முதலில், 'வலியவர்' என்பவர் 'பேய்.' இவரை வெல்வதற்கு 'மிகுந்த வலிமையுடையவர்' தேவை. அவர்தான் இயேசு. இயேசு பேச்சிழந்தவரைக் குணமாக்கும்போது, மிகுந்த வலிமையுடைய அவர் முன் வலியவர் என்னும் பேய் நிற்க முடியாமல், தன் படைக்கலங்களையும் கொள்ளைப் பொருளையும் அப்படியே போட்டுவிட்டு ஓடுகிறது.

இரண்டாவதாக, நாம் ஒவ்வொருவருமே வலியவர். நம்முடைய உடைமைகள் என்பவை நம்முடைய முதன்மைகள், நம்முடைய மதிப்பீடுகள், நம்முடைய பண்புநலன்கள். இவற்றை எப்பாடு பட்டாவது காத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக, நம்மைவிட வலிமையுடையவர் உருவாகாத வண்ணம், அப்படி உருவாகும்போது அவரைவிட வலிமைபெறும் நிலைக்கு நாமும் உயர வேண்டும். அப்படி இல்லாதபோல நாம் அனைத்தையும் இழந்துவிட வாய்ப்பிருக்கிறது. மேலும், இயேசுவின் சமகாலத்தவர் வலிமையுடைய பேய் பக்கம் இருந்தார்களே தவிர, மிகந்த வலிமையுடைய இயேசுவின் பக்கம் இருக்கவில்லை. ஆகையால் அவர்களும் சிதறடிக்கப்படுகிறார்கள்.

தவக்காலத்தில் பல முயற்சிகள் செய்து நம் தீய இயல்புகளை வென்றெடுக்கிறோம்.

தீமைகள் குறைய தீமைகளைக் குறைப்பது மட்டும் வழி அல்ல. நன்மைகளைக் கூட்டுவதும் வழியே. ஏனெனில், படைக்கலங்கள் கூடக் கூட எதிரிக்கு பயம் வந்துவிடும். படைக்கலங்கள் அழிக்கப்பட்டால் நாமும் அழிந்துபோவோம்.

ஆக, இன்று நான் யார் பக்கம்? வலியவர் பக்கமா? அல்லது வலிமைமிகுந்தவர் பக்கமா?

என்னுடைய வலிமையை அழிக்கக்கூடிய வலிமைமிகுந்த இயல்பு எது? அதை எதிர்கொள்ள நான் என்ன செய்கிறேன்?

Tuesday, March 26, 2019

திருச்சட்டம்

இன்றைய (27 மார்ச் 2019) நற்செய்தி (மத் 5:17-19)

திருச்சட்டம் நிறைவேற்றுதல்

இன்றைய முதல் வாசகத்தில் (காண். இச 4:1,5-9) மோசே இஸ்ரயேல் மக்கள் திருச்சட்டத்தை அன்பு செய்வதன் அவசியத்தை அறிவுரையாகத் தருகின்றார். மோசேயைப் பொறுத்தவரையில் திருச்சட்டம் என்பது இஸ்ரயேல் மக்களின் வாழ்வியல் அடையாளம். ஏனெனில், இறைவனே தேர்ந்துகொண்டு, இறைவனே தமக்குரியவர்களாகக் கொண்டாடி, இறைவனே உரிமைச்சொத்தாக்கிக் கொண்ட ஒரே இனம் இஸ்ரயேல் இனமே.

இங்கே, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை என்பது இஸ்ரயேல் மக்களின் பிறப்புரிமையாக மாறிவிடுகிறது. இதில் பிரச்சினை என்னவென்றால், இப்படிப்பட்ட புரிதலில் இறைவன் ஒரு இனத்திற்கு மட்டும் சொந்தமாதாக இருக்கும்.

இயேசு இந்தப் புரிதலை மாற்றுகின்றார். அதாவது, திருச்சட்டத்தைக் கையில் வைத்திருப்பதில் அல்ல, மாறாக, அதை நிறைவேற்றுவதில்தான் உரிமைநிலை இருக்கிறது என்கிறார் இயேசு.

திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து அதைக் கற்பிப்பதில் அடங்கியுள்ளது.

ஆக, விண்ணரசில் சிறியவராவதும் பெரியவராதும் நம் கைளில்தான் இருக்கிறது!

Monday, March 25, 2019

டோமினோ விளைவு

இன்றைய (25 மார்ச் 2019) நற்செய்தி (மத் 18:21-35)

டோமினோ விளைவு

'அபூர்வ சகோதரர்கள்' (1989) திரைப்படத்தில் குட்டைக் கமல் பழிதீர்க்கும் விதமாக ஒவ்வொரு எதிரியையும் ஒவ்வொரு விதமாகக் கொலை செய்வார். ஒற்றைக் கோலிக்குண்டை உருட்டிவிட்டு, அது அடுத்தடுத்த பொருள்களைத் தட்டி, இறுதியில் ஒரு அம்பு எய்யப்பட்டு எதிரி ஒருவர் கொல்லப்படுவார். தொடக்கம் என்னவோ ஒரு சிறு கோலிக்குண்டுதான். ஆனால், அது அடுத்தடுத்த பொருள்களை இயக்கும்போது அது பெரிய செயலைச் செய்ய வல்லது.

இதை 'டோமினோ விளைவு' (domino effect) அல்லது 'தொடர் வினை' (chain reaction) அல்லது 'தொடர் விளைவு' என அழைக்கிறோம். நிறைய இடங்களில் விளையாட்டுச் சீட்டு அட்டைகளை வைத்து இந்த விளையாட்டு விளையாடப்படும்.

இப்படிப்பட்ட ஒன்றைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்களுக்குக் கற்றுத் தருகின்றார். 'என் சகோதரன் எனக்கு எதிராகப் பாவம் செய்தால் எத்தனை முறைய மன்னிக்க வேண்டும்?' எனக் கேட்கிற பேதுருவுக்குப் பதில் சொல்கின்ற இயேசு, 'ஏழுமுறை அல்லது எழுபது முறை ஏழு முறை' என்கிறார். மேலும், மன்னிக்க மறுத்த பணியாள் ஒருவன் எடுத்துக்காட்டையும் முன்வைக்கின்றார்.

எடுத்துக்காட்டிலிருந்து தொடங்குவோம்.

பணியாளன் ஒருவன் தன் அரசனால் தன்னுடைய ஏறக்குயை 510 கோடி ரூபாய்க் கடன் மன்னிக்கப்படுகிறார். ஆனால், அந்தப் பணியாளனால் தன் சக பணியாளின் வெறும் 10 ஆயிரம் ரூபாய்க் கடனை மன்னிக்க மறுக்கின்றான். நிறைய வைத்திருந்த அரசனுக்கு மன்னிப்பது எளிதாகவும், ஒன்றுமே இல்லாத பணியாளனுக்கு அவ்வாறு செய்வது கடினமாக இருந்ததோ?

இயேசு சொல்கின்ற டோமினோ விளைவு என்னவென்றால், அரசனிடமிருந்து மன்னிப்பைப் பெற்ற பணியாளன் தன் சகப் பணியாளனை மன்னிக்க வேண்டும். அவன் தனக்குக் கீழ் இருப்பவனை, அவன் இன்னும் தனக்குக் கீழ் ... என்று அடுத்தடுத்து மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டும். விளையாட்டில் ஒரு அட்டை தடைபடும்போது ஒட்டுமொத்த விளையாட்டும் பாதியிலேயே முடிந்துவிடுகிறது.

ஆக, முதல் பாடம், கடவுளிடமிருந்து அன்றாடம் மன்னிப்பு பெறுகின்ற நாம், அதை நமக்குக் கீழ், நமக்குக் கீழ் என்று கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இரண்டாவது பாடம், 70 முறை 7 முறை. இந்தச் சொல்லாடலுக்கு நிறைய பொருள் தரப்படுகிறது. தொநூ 4:24ல் லாமேக்கு என்பவர் 70 முறை 7 முறை எனப் பழிதீர்க்கிறார். இந்த நிகழ்வின் பின்புலத்தில் பழிதீர்ப்பதற்கு எதிர்ப்பதமாக இயேசு மன்னிப்பை முன்வைக்கிறார் என்று சொல்லலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில், ஒரு செயல் தொடர் பழக்கமாக மாறும் வரை செய்ய வேண்டும் என்ற பொருளில்தான் இச்சொல்லாடல் பயன்படுத்தப்படுவதாக நினைக்கிறேன். இன்றைய உளவியலில் 21 நாள்கள் (அதாவது, மூன்று 7 நாள்கள்) ஒரு செயலைச் செய்யும்போது அது நம் பழக்கமாகிவிடுகிறது என்கிறார்கள். அதாவது, 21 நாள்கள் நான் காலை 5 மணிக்கு எழுந்தால், 22ஆம் நாள் எந்தவொரு எழுப்பியும் இல்லாமல் நான் 5 மணிக்கு எழுந்துவிடுவேன். இயேசுவின் சமகாலத்தில் இதைப்போன்ற ஒரு புரிதல் இருந்திருக்கலாம். ஆக, 70 முறை 7 முறை செய்யும்போது மன்னிப்பு பல் தேய்ப்பது போன்ற ஒரு தொடர் பழக்கமாக மாறிவிடுகிறது. தொடர்பழக்கமாக ஒரு செயல் மாறிவிட்டால் அது நம் இயல்பாகவே மாறிவிடுகிறது. இந்தவொரு பயிற்சியைத்தான் இயேசு தருகின்றார். மன்னிப்பதை நம் பழக்கமாக்கிக் கொள்வது.

மூன்றாவதாக, மன்னிப்பது மன்னிப்பவருக்கு நல்லது. ஏனெனில், மன்னிக்க மறுக்கும் ஒருவர் தன் நிகழ்காலத்தில் வாழாமல் இறந்த காலத்தில் வாழ்கிறார். எந்நேரமும் அதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார். இறந்த காலம் என்பது நம் மனத்தின் ஒரு அழுகிய பகுதி. அதை நாம் அப்படியே வைத்துக்கொண்டிருக்கும்போது அது துர்நாற்றத்தைத் தருவதோடு, நல்ல பகுதிகளையும் அழிக்கத் தொடங்கிவிடுகிறது.

மேற்காணும், இரண்டு காரணங்களுக்காக இல்லை என்றாலும், இறுதியான மூன்றாவது காரணத்திற்காக மன்னிக்கத் தொடங்கினால் மனது நலமாகும்!


Sunday, March 24, 2019

மங்கள வார்த்தை

இன்றைய (25 மார்ச் 2019) திருநாள்

இன்று 'மங்கள வார்த்தை திருநாள்' என்றழைக்கப்படும் 'ஆண்டவரின் பிறப்பு முன்னறிவிப்பு' பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய திருநாள் நமக்கு மூன்று 'உ'க்களை முன்வைக்கின்றன: (அ) உடல், (ஆ) உடனிருப்பு, மற்றும் (இ) உறுதி.

(அ) உடல்

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 10:4-10) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசுவைத் தனிப்பெரும் தலைவராக முன்வைத்தபின், இயேசுவின் பலியை மற்ற எல்லா தலைமைக்குருக்களின் பலிகளைவிட மேன்மையானதாகவும் நிறைவானதாகவும் காட்டுகின்றார். மற்ற தலைமைக்குருக்களின் பலிகளில், 'பலி செலுத்தபவர் வேறு,' 'பலி வேறு' என்ற இரட்டைத்தன்மை இருந்தது. ஆனால், இயேசுவின் பலியில் அப்படி அல்ல. அவரில் பலியும், பலி செலுத்துபவரும் ஒன்றாகவே இருக்கின்றன. திருப்பாடல் 40ஐ மேற்கோள் காட்டுகின்ற ஆசிரியர், 'எனக்கொரு உடலைத் தந்தீர். உம் திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன்!' என்று முன்வந்து தன் உடலையே பலியாகக் கையளிக்கிறார் இயேசு. இவ்வாறாக, 'உடல் இல்லாமல் பலியும் மீட்பும் இல்லை' என உணர்த்துகிறார் இயேசு. மனித உலகிற்குள் நுழைய விரும்பிய கடவுள் உடலின் வழியாக மனித உலகிற்குள் நுழைகின்றார். இவ்வாறு உடலைப் புனிதப்படுத்துகின்றார். உடலை இறைவனுக்குப் பலியாக்குவதன் வழியாக உடலை இறைவனுக்குரிய பொருளாக அர்ப்பணிக்கிறார் இயேசு. 'வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார்' என்று வார்த்தை மனித உடல் ஏற்கிறார். இறைவன் மனுஉரு ஏற்க மரியாள் தன் உடலில் இடம் கொடுக்கிறார்.

(ஆ) உடனிருப்பு

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 7:10-14, 8:10) ஆகாசு இறைவனுக்கு ஆண்டவராகிய கடவுள் அடையாளம் ஒன்றைத் தருகிறார்: 'இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார் ... அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர். 'இம்மானுவேல்' என்றால் 'கடவுள் நம்மோடு' என்பது பொருள்.' அசீரியப் படையெடுப்பை எதிர்கொள்ள எகிப்தின் உதவியை நாடுவதா அல்லது வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்த ஆகாசுக்கு இறைவன் தன் உடனிருப்பைத் தருகின்றார். மனுக்குலத்திற்குள் தன் மனுவுருவாதல் வழியாக நுழைந்த வார்த்தையாகிய இறைவன் நமக்குத் தருவதும் உடனிருப்பே.

(இ) உறுதி

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:26-38), 'நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்று வாக்குறுதி கொடுக்கின்றார். இதுதான் மரியாவின் மிஷன் ஸ்டேட்மன்ட். தன் வாழ்க்கை முழுவதையும் இதற்காகவே வாழுகின்றார். இத்தாழ்ச்சியில் அடிமைத்தனம் இல்லை. மாறாக, முழு விடுதலை இருக்கின்றது. ஏனெனில், இனி எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொள்வார். இறைத்திருவுளம் ஏற்றலில் உள்ள நன்மை இதுதான். அது நம்மை முழுமையான விடுதலைக்கு இட்டுச் செல்கிறது.

இறைவன் கபிரியேல் வழியாக மரியாளுக்குச் சொன்ன வார்த்த எந்த அளவிற்கு மங்களமோ, அதே அளவிற்கு மங்களம் மரியாளின் 'ஆம்' என்ற வார்த்தையும்.

இந்த ஒற்றை 'ஆம்' என்ற சொல்தான் விண்ணையும் மண்ணையும் இணைத்தது.

Friday, March 22, 2019

தந்தை அவரைக் கண்டு

இன்றைய (23 மார்ச் 2019) நற்செய்தி (லூக் 15:1-3,11-32)

தந்தை அவரைக் கண்டு

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஒரு தந்தையும் இரு மகனும் என்னும் இயேசுவின் உவமையை வாசிக்கின்றோம். லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படும் இந்த எடுத்துக்காட்டு உலக இலக்கியச் சிறுகதைகளிலும் முக்கிய இடத்தை வைக்கின்றது. இயேசுவின் கதைகளில் இறுதியில் ஒரு திருப்பம் இருக்கும். இங்கே திருப்பம் என்னவென்றால், தூரத்தில் இருக்கின்ற இளைய மகன் வீடு திரும்புகின்றான். வீட்டிற்குள்ளேயே இருக்கின்ற மூத்த மகன் வீடு திரும்ப மறுக்கின்றான்.

இவ்விரண்டு கதைமாந்தர்களுக்கு நடுவில் வீட்டிற்கும் வெளியிலும் வந்து சென்று கொண்டிருப்பவர் தந்தைதான்.

இளைய மகன் திரும்பிய நேரம் தந்தை அங்கு இருந்தார்.

இந்தக் கதையின் தந்தை அப்படித்தான் இருக்கிறார். இளைய மகன் வீட்டைவிட்டுப் புறப்பட்ட நாளிலிருந்து இவனுக்காக ஊருக்கு வெளியில் நிற்கின்றார். தன் மகன் திரும்ப வருவான் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார் அவர். வருகின்ற அவர் எல்லாவற்றையும் இழந்து வரும்போது ஊர் கேலி பேசிவிடக்கூடாது என்பதற்காக, அவனை அப்படியே அள்ளித் தோள்மேல் வைத்துக்கொள்ள விழைந்து ஊருக்கு வெளியே நிற்கின்றார் அப்பா.

இப்படி ஊருக்கு வெளியே தினமும் நிற்கின்ற அப்பாவைப் பார்த்து மூத்தமகன் கண்டிப்பாக கேலி செய்திருப்பான். 'அவன் போய்ட்டான். அவ்வளவுதான். பணத்தோடு போன அவன் திருடர் கையில் அகப்பட்டிருக்கலாம். அல்லது அவர்கள் அவனைக் கொலை செய்திருக்கலாம். இனி நான் மட்டும்தான் உங்களுக்கு. வாங்க! நம் வேலையைப் பார்ப்போம். அவனால் வந்த குடும்ப பொருளாதார இழப்பை ஈடு செய்வோம்' என்றெல்லாம்கூட சொல்லியிருப்பான். ஆனால், அந்த அப்பா பொருளாதாரம் தெரியாத அப்பாவியாகத்தான் இருக்கிறார். ஆகையால்தான் வயல்வெளியில் நின்றுகொண்டிருக்கிறார் இவர்.

எந்நேரமும் இரக்கத்தோடு காத்திருக்கும் தயார்நிலை.

தன் மகன் ஏற்படுத்திய பொருள்செலவைப் பெரிதாக எண்ணாத தயார்நிலை.

தன் மகனைத் தீர்ப்பிடாத தயார்நிலை.

தன் பெயரை ஊரார் முன் கெடுத்தாலும் அதை மனதில் வைத்துக்கொள்ளாத தயார்நிலை.

தன் மகன் சேறு, சகதி, அழுக்கோடு வந்தாலும் அவன்மேல் போர்த்துவதற்கு முதல்தரமான ஆடை என்னும் தயார்நிலை.

கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடி என்று அனைத்தும் அவனுக்காக தயார்நிலையில்.

இந்தத் தந்தை தன் மகனை எல்லாவற்றையும் எல்லாரையும்விட மேன்மையாகக் கருதினார் - அவன் எப்படி இருந்தாலும். ஆக, இளைய மகனுடைய தவறு இவரின் நல்ல குணத்தை மாற்றவும் இல்லை. மூத்த மகனுடைய பிடிவாதம் இவரின் தாராள குணத்தைச் சமரசம் செய்யவும் இல்லை.

இந்தத் தந்தையின் மனநிலை நமக்கு இருந்தால் எத்துணை நலம்!


Thursday, March 21, 2019

தமக்குச் சேர வேண்டிய

இன்றைய (22 மார்ச் 2019) நற்செய்தி (மத் 21:33-43,45-46)

தமக்குச் சேர வேண்டிய

1961ஆம் ஆண்டு வெளிவந்த 'பாலும் பழமும்' திரைப்படத்தின், 'போனால் போகட்டும் போடா' பாடலில், கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அழகான வரி ஒன்றை எழுதுகின்றார்: 'இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை இல்லை என்றால் அவன் விடுவானா?'

இது மிகவும் சாதாரண வாழ்வியல் நிகழ்வு. இரவல் கொடுத்தல் திரும்பப் பெறுதல் என்னும் நிகழ்வை இறைவனுக்குப் பொருத்தி, மனித உயிர் என்பது கடவுள் மனிதனுக்கு இரவலாகத் தந்தது என்றும், இறப்பின் போது இரவல் தந்தவன் அதைத் திரும்ப எடுத்துக்கொள்கிறான் என்பதும் கவிஞரின் கருத்து. மேலும், தொடர்ந்து, 'உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா? கூக்குரலாலே கிடைக்காது - இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது' என உயிரின் திரும்பாநிலையைப் பதிவு செய்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஒப்பந்தம் அல்லது குத்தகைக்கு இரவல் தந்திருக்கும் ஒரு திராட்சைத் தோட்ட உரிமையாளர், பணியாளர்களால் ஏமாற்றப்படுவதையும், பணியாளர்கள் உரிமையாளரின் மகனையே கொன்றழிப்பதையும் பார்க்கின்றோம்.

இவ்வுவமையின் தொடக்கத்திலும் இறுதியிலும் வரும் சொல்லாடல் முக்கியத்துவம் பெறுகிறது: 'தமக்குச் சேர வேண்டிய பழங்களைத் தரக் கூடிய!'

'தமக்குச் சேர வேண்டிய பழங்களைத் தருமாறு' ஆட்களை அனுப்பி பணியாளர்களை வேண்டிக்கொள்கிறார் தலைவர். ஆனால், அவருக்கு உரியதை அவர்கள் கொடுக்க மறுத்ததோடு அவருக்கு உரியதையும், உரியவர்களையும், உரிய மகனையும் தவறாகக் கையாளுகிறார்கள். இறுதியில், தலைவர் இவர்களை அடித்துவிரட்டி, தமக்குச் சேர வேண்டிய பழங்களைத் தருகின்ற வேறொரு குழுவிடம் தோட்டத்தை ஒப்படைக்கின்றார். இவ்வுவமையைக் கேட்கின்ற தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் இந்நிகழ்வு தங்களைக் குறித்துச் சொல்லப்பட்டதை உணர்ந்து இயேசுவைப் பிடிக்க வழிதேடுகின்றனர்.

'ஒருவருக்கு உரியதை அவருக்குக் கொடுப்பதுதான்' நீதி என்கிறது அறநெறி.

திராட்சைத் தோட்ட உரிமையாளர்கள் ஏன் நீதியோடு செயல்பட மறுத்தார்கள்?

அ. திராட்சைத் தோட்ட உரிமையாளரின் நற்குணத்தை அவரின் பலவீனம் என எண்ணிக்கொண்டார்கள். ஏனெனில், குத்தகைக்கு நிலம் கொடுக்கப்படும்போது வழக்கமாக வெறும் நிலம் மட்டுமே கொடுக்கப்படும். சில இடங்களில் கிணறும் சேர்த்துக்கொடுக்கப்படும். ஆனால், நம் கதையில் வரும் உரிமையாளர் - அவர்தான் கடவுள் - ரொம்ப நல்லவராக இருக்கிறார். இவரே திராட்சைத் தோட்டம் போட்டு, வேலி அடைத்து, பிழிவுக்குழி வெட்டி, காவல் மாடமும் கட்டி அதைக் குத்தகைக்கு விடுகிறார். இந்த நன்மைத்தனத்தை அவர்கள் அவரின் பலவீனமாக எடுத்துக்கொள்கின்றனர்.

ஆ. பேராசை கொண்டனர். 'எனக்குரியதும் எனக்கு, உனக்குரியதும் எனக்கு' என்ற திருட்டு மனநிலை கொள்கின்றனர் இவர்கள். 'எனக்குரியது எனக்கு. உனக்குரியது உனக்கு' என்ற நீதியிலிருந்து பிறழ்கின்றனர்.

இ. பொறாமை கொள்கின்றனர். 'என்னிடம் இல்லாதது உன்னிடம் இருக்கிறது' என்ற உணர்வில், 'இவனைக் கொன்றால் சொத்து நம்முடையதாகும்' என்று நினைக்கின்றனர். ஏறக்குறைய இப்படிப்பட்ட பொறாமை நிகழ்வை - யோசேப்பு மிதியானியரிடம் விற்கப்பட்ட நிகழ்வை - இன்றைய முதல் வாசகம் பதிவு செய்கிறது. பொறாமை அடுத்தவரையும் அழித்து அதைக்கொண்டிருப்பவரையும் அழித்துவிடும் என்பதற்கு இன்றைய நற்செய்தி நல்ல எடுத்துக்காட்டு.

இன்று நான் கடவுளுக்குரிய கனிகளை கடவுளுக்குக் கொடுக்கிறேனா? என் வாழ்வை கனிதரும் நிலையில் வாழ்கின்றேனா?

அவரின் இரக்கத்தை, நற்குணத்தை அவரின் பலவீனம் என நினைத்து சோம்பியிருக்கிறேனா?

'எனக்குரியதும் எனக்கு, உனக்குரியதும் எனக்கு' என்று நான் திருட்டு அல்லது பேராசை உணர்வு கொள்கிறேனா? என்னுடைய பணம் மற்றும் பொருள்சார் பரிவர்த்தனைகள் பேராசையால் உந்தப்படுகின்றனவா?

'என்னிடம் இல்லாதது அவனிடம் அல்லது அவளிடம் இருக்கிறது' என்று நான் அடுத்தவரை என் தோட்டத்திலிருந்து வெளியேற்றிக் கொன்று போட நினைத்த தருணங்கள் எவை?

கனிகள் தர நாம் மறுக்கும்போது, கனிகள் தருகின்ற வேறொருவருக்கு நம் கொடைகள் மாற்றப்படும். பயன்படுத்தாத எதுவும் பாழடைந்து போகும்.

Wednesday, March 20, 2019

பெரும் பிளவு

இன்றைய (21 மார்ச் 2019) நற்செய்தி (லூக் 16:19-31)

பெரும் பிளவு

இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'செல்வந்தரும் லாசரும்' எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம். இது ஒரு எடுத்துக்காட்டாகவும் அதே நேரத்தில் எதார்த்த நிகழ்வாகவும் இருக்கிறது. இந்நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது.

இந்நிகழ்வில் நிறையப் புரட்டிப்போடுதல்கள் இருக்கின்றன:

1. எல்லாருக்கும் அறிமுகமான செல்வருக்குப் பெயர் இல்லை. நாய்கள் வந்து நக்கும் ஏழைக்கு 'லாசர்' என்ற பெயர் இருக்கிறது.

2. இலாசர் இவ்வுலகில் வாழ்ந்தபோது அவரைக் குனிந்து பார்க்காத செல்வர், இறந்தபின் அவரை அண்ணாந்து பார்க்கிறார்.

3. வீட்டு வாயிலில் கிடந்த ஏழை ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகிறார். விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து மேசையில் அமர்ந்து விருந்துண்டவர் பாதாளத்தில் ஒரு சொட்டுவிரல் தண்ணீருக்காக ஏங்கித் தவிக்கிறார்.

இந்நிகழ்வு 'நரகம்' இருப்பதற்கு என்பதற்காக எழுதப்பட்ட நிகழ்வு அல்ல. மாறாக, நம் நிலை தலைகீழாகப் புரட்டப்படலாம் என்ற எச்சரிக்கை தருவதற்காக எழுதப்படுகிறது.

இயேசு இந்நிகழ்வைப் பரிசேயரை நோக்கிச் சொல்கிறார். ஏனெனில், பரிசேயர்கள் தங்கள் சமகாலத்து ஏழைகளையும், நோயுற்றவர்களையும் சபிக்கப்பட்டவர்களாகப் பார்த்தனர். நாய்கள் வந்து புண்களை நக்குவது உச்சகட்ட சாபத்தைக் குறிக்கிறது. ஆனால், இப்படி அவர்கள் எண்ணிய ஏழை இலாசரை ஆபிரகாம் மடியில் இளைப்பாறுபவராகச் சொல்கிறார் பரிசேயர். இதைக் கேட்ட பரிசேயர்கள் கண்டிப்பாக வெட்கம் அடைந்திருப்பார்கள் அல்லது இயேசுவின்மேல் கோபப்பட்டிருப்பார்கள்.

செல்வராய் இருப்பது தவறா?

செல்வர் ஒரு தவறும் செய்யவில்லையே! அவருடைய சொத்து, அவருடைய ஆடை, அவருடைய விருந்து, அவருடைய நண்பர்கள், அவருடைய வீடு, அவருடைய சகோதரர்கள். இப்படி அவருடையதை வைத்து வாழ்ந்தார். இல்லையா? இவர் யாரையும் கொள்ளையடிக்கவில்லை. யாரிடமும் கையூட்டு வாங்கவில்லை. இலாசரைக் கூட தன் வீட்டு வாசலை விட்டு வெளியே விரட்டவில்லை.

இவர் செய்த தவறு என்ன?
ஒன்றே ஒன்றுதான்: இவர் குனிந்து பார்க்கவில்லை. அதாவது, இலாசரைக் கண்டுகொள்ளவில்லை.

ஆக, கெட்டது செய்வது மட்டும் குற்றமில்லை. நன்மை செய்யத் தவறுவதும் குற்றமே.

இதைத்தான், ஆபிரகாம், 'எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு உள்ளது' என்கிறார். இந்தப் பிளவு இடம் சார்ந்த பிளவு அல்ல. மாறாக, உணர்வு சார்ந்த பிளவு. அதாவது, செல்வம் ஒருவரைத் தன்னை நோக்கியே பார்க்க வைக்கும். ஆனால், ஏழ்மை இயல்பாகவே ஒரு சார்புநிலையை உருவாக்கி மனத்தை அடுத்தவரின் மேலும் இறைவனின் மேலும் திருப்பும். இந்தப் பிளவை ஒருவர் இவ்வுலகத்தில் சரிசெய்ய வேண்டுமே தவிர, மறு உலகில் அல்ல. ஏனெனில், மறு உலகில் வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன.

பிளவைச் சரி செய்யும்போது கிடைக்கும் பரிசு மிகவும் பெரியதாக இருக்கிறது: 'ஆபிரகாமின் மடி'

மடியில் அமர்வது என்பது ஒருவர்மேல் உரிமை கொண்டாடுவது. மதிப்பிற்குரியது என நாம் கருதும் ஒன்றையே நாம் மடியில் வைத்துக்கொள்கிறோம். ஆக, மதிப்பற்றது என்று இவ்வுலகம் கருதுவது மதிப்புக்குரியதாக அவ்வுலகில் மாறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வைக்குப் பாடங்கள் எவை?

1. குனிந்து பார்ப்பது - அதாவது, எனக்கு அடுத்திருப்பவர்மேல் பொறுப்புணர்வு கொள்வது.

2. வேகமாக மறையும் விருந்தில் அல்லது வேகமாக நைந்து போகும் ஆடையில் நம்பிக்கை வைக்காமல் ஆண்டவரின் மேல் நம்பிக்கை வைப்பது (காண். முதல் வாசகம்)

3. இறப்புக்குப் பின் உள்ள வாழ்வு பற்றிக் கவலைப்படுவதைவிட இறப்புக்கு முன் உள்ள வாழ்வை முழுமையாக வாழ்வது. இறைவனுக்கும் நமக்கும் உள்ள பிளவை இங்கேயே சரிசெய்துகொள்வது. ஏனெனில், உலகில் அன்றி வேறெங்கும் மீட்பு இல்லை.

Tuesday, March 19, 2019

உங்களுக்குத் தெரியவில்லை

இன்றைய (20 மார்ச் 2019) நற்செய்தி (மத் 20:17-28)

உங்களுக்குத் தெரியவில்லை

இயேசு தன் பாடுகளை இரண்டாம் முறை அறிவிக்கும் நிகழ்வில் செபதேயுவின் மக்கள் அல்லது செபுதேயுவின் மனைவி இயேசுவிடம் வைக்கும் கோரிக்கை பற்றி வாசிக்கின்றோம். மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் செபுதேயுவின் மக்கள் கேட்டதாகப் பதிவு செய்ய, மத்தேயு மட்டும் சீடர்களைக் காப்பாற்றி, செபுதேயுவின் மனைவி கேட்டதாகப் பதிவு செய்கிறார். ஆனால், இயேசுவின் பதில் என்னவோ செபதேயுவின் மக்களை நோக்கியே எல்லா நற்செய்திகளிலும் இருக்கிறது.

'நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை' என்கிறார் இயேசு.

எப்படி ஒரு ஜென் போதகர் தன் சீடர்களை அறியாமையிலிருந்து அறிவுக்கு, மடமையிலிருந்து ஞானத்திற்கு அழைத்துச் செல்வாரோ அவ்வாறே இயேசுவும் தன் சீடர்களை ஞானத்திற்கு அழைத்துச் செல்கிறார். அவர்கள் இப்படிக் கேட்பதற்குக் காரணம் அவர்களின் அறியாமைதான் என அவர்களுக்கு நினைவூட்டுகிறார். ஏனெனில், இயேசுவின் முன்னறிவிப்பை, குறிப்பாக, 'மானிட மகன் ... மூன்றாம் நாள் ... எழுப்பப்படுதல்' போன்ற வார்த்தைகளைத் தவறாகப் புரிந்திருக்கலாம். அல்லது, இயேசுவை இவ்வுலக அரச மெசியாவாகத் தவறாகப் புரிந்திருக்கலாம். எப்படியோ அவர்கள் தங்களின் அறியாமையிலும் புரிந்துகொள்ளாத நிலையிலும் இருக்கின்றனர்.

அறியாமை அல்லது புரிந்துகொள்ளாமைக்கு எதிராக வழக்கமாக இரண்டு உணர்வுகள் எழும்: ஒன்று, கோபம். இன்னொன்று, இரக்கம்.

மற்றவரின் அறியாமையைக் கண்டு கோபம் வந்தால் அது சீடர்கள் மனநிலை. மற்ற 10 சீடர்களும் யோவான் மற்றும் யாக்கோபின் மேல் கோபம் கொள்கின்றனர். இவர்கள் கோபம் பொறாமையால்கூட இருக்கலாம். 'ஏன்டா, நாங்களே சும்மாயிருக்கிறோம். உங்களுக்கென்ன அரியணை!' என்ற ரீதியில்கூட இருந்திருக்கலாம். ஆனால், பல நேரங்களில் மற்றவர்கள் நம்மைப் புரிந்துகொள்ள முடியாதபோது அல்லது அவர்களின் அறியாமையை விட்டு வெளியே வர மறுக்கும்போது அல்லது தவறாகப் புரிந்துகொள்ளும்போது அவர்கள்மேல் கோபம் வருவது முதல் நிலை.

ஆனால், இயேசுவின் மனநிலை இரண்டாம் மனநிலையாக இருக்கிறது. சீடர்கள் மற்றும் அவர்களின் அம்மாவின் கோரிக்கையைக் கேட்ட இயேசு கண்டிப்பாக சிரித்திருப்பார். 'என்னப்பா! எவ்வளவு சொல்லியும் உங்களுக்குப் புரியவில்லையே!' என்று இரக்கப்பட்டிருப்பார். இயேசுவின் இரக்கம் கடிந்துகொள்ளாத இரக்கமாக இருக்கிறது. அவர்களின் அறியாமையை அப்படியே ஏற்றுக்கொண்டு அவர்களை ஞானத்திற்கும் அறிவிற்கும் அழைத்துச் செல்கிறார் - ஒரு குழந்தையை அதன் தந்தை ஏற்றுக்கொள்வதுபோல.

இயேசுவின் அறிவுரை மூன்று நிலைகளில் இருக்கிறது:

அ. ஒருவர் மற்றவரை அடக்கி ஆளுதல் கூடாது - ஆக, அதிகாரம் என்பது அடக்கி ஆளுதலில் இல்லை. தன் சிலுவை அரியணை என்பது அடக்கி ஆளுதலில் இல்லை. தன்னை அடக்குபவன்தான் அரசனே தவிர, பிறரை அடக்குபவன் அல்ல. ஆக, ஒருவர் தன்னுள் எழுகின்ற 'அதிகாரம்' என்ற எண்ணத்தை அடக்கினாலே பாதிப் பிரச்சினை முடிந்துவிடும்.

ஆ. எப்படி இருக்க வேண்டும்? பெரியவர் தொண்டராக வேண்டும். முதன்மையாய் இருப்பவுர் பணியாளராக இருக்க வேண்டும். இதைச் செய்ய நிறைய துணிச்சல் வேண்டும். யார் ஒருவர் தன் அடையாளத்தை இழக்க முன்வருகிறாரோ அவரை இப்படி இருக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு வகுப்பறையில் ஒரு ஆசிரியர் தன் ஆசிரியர் நிலையிலிருந்து இறங்கி மாணவர் நிலைக்கு வருதல் மிகவும் கடினம். அவர் மாணவரைப் போல தரையில் அமர வேண்டும். அவர்களின் மொழியைப் பேச வேண்டும். அவர்கள் கேலி பேசினாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். மேலும், தானே முதலில் மாணவராக இருந்து இவற்றை எல்லாம் கற்றக்கொள்ள வேண்டும். அடையாளங்கள் அகற்றுதலும், அடுத்தவரின் பாதம் அமர்தலும் இதில் அடங்கும்.

இ. மானிட மகனை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் - மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்காகவும், தன்னை முழுமையாக இழப்பதற்காகவும் வந்ததுபோல, ஒருவர் மற்றவருக்கு தொண்டு ஆற்றவும், தங்களையே இழக்கவும் தயாராக இருக்கவும் வேண்டும் என்கிறார் இயேசு.

நான் இயேசுவைப் பற்றிக் கொள்ளும் அறியாமை என்ன? அந்த அறியாமையில்தான் என்னுடைய விண்ணப்பங்கள் இருக்கின்றனவா? இன்று அவர் என்னை ஞானத்திற்கு அழைக்கும்போது என் மனநிலை என்ன?

Monday, March 18, 2019

வளன்

இன்றைய (19 மார்ச் 2019) திருநாள்

வளன்

இன்று நம் தாய்த்திருஅவை 'புனித வளனார் - புனித கன்னி மரியாவின் துணைவர்' திருநாளைக் கொண்டாடுகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 1:16,18-21,24) புனித மத்தேயு பதிவு செய்யும் நிகழ்வில் உள்ள யோசேப்பு பற்றிய சில குறிப்புக்களைச் சிந்திப்போம்.

1. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு

'யோசேப்பு' பற்றிய முதல் செய்தியைத் தரும் மத்தேயு, அவரை, 'யாக்கோபின் மகன்,' 'மரியாவின் கணவர்' என்ற இரு நிலைகளில் அறிமுகம் செய்கிறார். இங்கே, 'மகன்' என்பது யோசேப்பின் 'வேர் பதித்தலையும்,' 'கணவர்' என்பது அவரின் 'விழுது பரப்புதலையும்' குறிக்கிறது. மனித வாழ்வு ஒரு குடும்பத்தில் தொடங்கி மற்றொரு குடும்பத்தில் தொடர்கிறது. இதை ஆதாம் நிகழ்வில்கூட பார்க்கிறோம். ஆதாம் மண் என்ற வேரில் தொடங்கி தன் விலா எலும்பு என்னும் ஏவாளில் தன் வாழ்வைத் தொடர்கிறார். இவ்வாறாக, திருமண உறவு என்பதில் அடங்கியுள்ள மாண்பை அழகுற உரைக்கிறார் மத்தேயு. மணத்துறவு கொண்டவர்கள் இதை எப்படிப் புரிந்துகொள்வது. இவர்களுக்கு இவர்களுடைய உறவு தங்களுடைய குடும்பத்தில் தொடங்கி ஒட்டுமொத்த இறையாட்சிக் குடும்பத்தை நோக்கி நீள்கிறது. அவ்வளவுதான். ஆக, மணத்துறவு மேற்கொண்டவர் உறவை மறுப்பவராக அல்லாமல் உறவை அதிகரித்துக்கொள்ளவே மணத்துறவு மேற்கொள்கிறார்.

2. மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம்

யூதர்களின் முறைமைப்படி முதலில் ஒப்பந்தம் நடந்து, சில மாதங்கள் கழித்தே திருமணம் நடக்கும். இது குஞ்சுபொறிக் காலம் போல. அதாவது, ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும், தொடர்ந்து முன்னெடுக்கப்போகும் வாழ்க்கையைத் திட்டமிடவும் எடுக்கும் காலம் இது.

3. மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது

யோசேப்பு இதை எப்படி அறிந்தார் என்பது நமக்குத் தெரியவில்லை. மரியாளே சொல்லியிருக்கலாம். அல்லது மரியாளின் பெற்றோர் வழியாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், இங்கே தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்பவராக இருக்கிறார் யோசேப்பு. இது ஒரு முக்கியமான குணம். இந்தக் குணம் எல்லாருக்கும் வராது. தன்னிலே அமைதியாய் இருப்பவர், தன்னை முழுமையாக அறிந்தவர் மட்டுமே தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருப்பார். மேலும், இப்படிப்பட்ட நபர் தன்னை மற்ற எல்லாரோடும் இணைந்த ஒருவராகவும் பார்ப்பார்.

4. யோசேப்பு நேர்மையாளர்

'நேர்மை' என்பதற்கு இங்கே கிரேக்கத்தில் 'டிகாயுசுனே' என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள், தன்னை நேர் கோட்டில் வைத்துக்கொள்வது. இங்கே 'நேர்மையாளர்' என்று அறிமுகம் செய்வதன் வழியாக, இவர் ஒரு ஸ்ட்ரிக்ட் பேர்வழி. அடுத்த என்ன செய்வாரோ? என்ற எதிர்பார்ப்பை வாசகரின் மனத்தில் விதைக்கிறார் மத்தேயு. கொஞ்ச நேரத்தில், இவரின் நேர்மையாளர் நிலை என்பது சட்டம் சார்ந்தது அல்ல. மாறாக, இரக்கம் சார்ந்தது என்று நாம் அறிகின்றோம். இயேசுவுக்கு இதே இரக்க குணம் வருவதற்கு யோசேப்பின் இக்குணம் காரணமாக இருக்கலாம்.

5. மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டிருந்தார்

தன்னைவிட பிறரை மையமாக வைத்து - மரியாளை மையமாக வைத்து - முடிவெடுக்கிறார் யோசேப்பு. உறவு நிலைகளை முறித்துக்கொள்ளும்போது பல நேரங்களில் நாம் நம்மை மட்டுமே முன்வைத்து முடிவெடுக்கிறோம். ஆனால், உறவில் அடுத்தவரும் இருக்கிறார் என்பதை மனத்தில் வைப்பது மிக அவசியம்.

6. சிந்தித்துக்கொண்டிருக்கும்போது

மிகுதியான சிந்தனை, மிகுதியான களைப்பைத் தரும். பிரச்சினைகள் பற்றி மனம் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது பலருக்குத் தூக்கம் வருவதில்லை. ஆனால், யோசேப்பு தூங்கிவிடுகிறார். இதுவும் அவரின் ஆழ்மன அமைதியைக் காட்டுகிறது. என்ன நேர்ந்தாலும் சஞ்சலப்படாத ஒரு பக்குவம் இது.

7. தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து மனைவியை ஏற்றுக்கொண்டார்

கனவு என்பது இறைவெளிப்பாட்டு ஊடகம் என்பதை யோசேப்பு அறிந்தவராக இருக்கிறார். தன் மூதாதையர்கள் ஆபிரகாம், யாக்கோபு, யோசேப்பு போன்றவர்களைக் கனவுகளின் வழியாகவே கடவுள் வழிநடத்தினார் என்பதை உணர்ந்திருந்தார் யோசேப்பு. ஆகையால்தான், கனவில் இறைத்திருவுளம் காண்கிறார்.

ஒருமுறை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்த யோசேப்பு தன் முடிவிலிருந்து பின்வாங்கவே இல்லை. நல்லவற்றிக்காகவும், மற்றவர்களுக்காகவும் தன் வாக்குறுதிகளை மாற்றிக்கொள்ளவும், தன் திட்டத்தை மாற்றிக்கொள்ளவும் தயங்கவில்லை யோசேப்பு.

'எல்லாம் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும்' என்பது யோசேப்பின் கொள்கை அல்ல.

அந்த நொடி மரியாவை ஏற்றுக்கொண்ட யோசேப்பு, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார். பெத்லகேம், எகிப்து, நாசரேத், எருசலேம் என இவர் ஓடுகின்றார். ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு நிகழ்விலும் இறைத்திருவுளம் அறிகிறார்.

எனினும், எல்லாவற்றிலும் மௌனம் காக்கிறார்.

மௌனத்தைப் புரிந்துகொள்பவர்களே வார்த்தைகளையும் புரிந்துகொள்ள முடியும்.


Sunday, March 17, 2019

இரக்கமுள்ளவர்களாக

இன்றைய (18 மார்ச் 2019) நற்செய்தி (லூக் 6:36-38)

இரக்கமுள்ளவர்களாக

மத்தேயு நற்செய்தியில், 'உங்கள் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்' என்று இயேசு மலைப்பொழிவில் சொல்வதை, லூக்கா, 'உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்' என்று பதிவு செய்கிறார்.

மத்தேயுவின் வார்த்தைகளைவிட லூக்காவின் வார்த்தைகள் ரொம்ப ப்ராக்டிகலாக இருக்கின்றன.

இரக்கமாய் இருங்கள் என்று சொல்வதைவிட, 'இரக்கமாகவே இருங்கள்' என்று சொல்வதுபோல இருக்கிறது.

கடவுளின் இரக்கமாக இருக்கிறார். அதே போல நீங்களும் இரக்கமாக இருங்கள்.

'நான் சிறிய வயதாக இருக்கும்போது அறிவாளிகளை அதிகம் விரும்பினேன். ஆனால், எனக்கு வயது கூடக்கூட இரக்கமுள்ளவர்களையே அதிகம் விரும்புகிறேன்' என்கிறார் ஆங்கிலக் கவிஞர் ஒருவர்.

இரக்கம் என்ற வார்த்தையை அடிநாதமாக வைத்துக்கொண்டு வாழ அழைக்கிறார் இயேசு.

இரக்கம் என்றவுடன் வழக்கமாக நாம் தவக்காலத்தில் செய்யும் தன்னிரக்கம் அல்லது கழிவிரக்கம் அல்லது சுயஇரக்கம் என்று நினைப்பது தவறு. தன்னிரக்கம் பல நேரங்களில் நம்மை நம்முடைய கடந்தகாலக் காயங்களோடு கட்டிவிடும். ஆனால், பிறர்மேல் காட்டும் இரக்கம் நம் அளவைகளையும் பெரிதாக்கும்.
எதையும் யாரையும் தீர்ப்பிட வேண்டாம் என்கிறார் இயேசு.

இதையே ஜே.கே. என அழைக்கப்படும் ஜித்து கிறிஷ்ணமூர்த்தி, 'observation without evaluation is the highest form of intelligence' என்கிறார். அதாவது, தீர்ப்பிடாத பார்வை நம் மனத்தின் மகிழ்ச்சியைக் கூட்டும்.

ஆக, இரண்டு விடயங்கள்:

அ. இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்வது

ஆ. இருப்பதை இருப்பதுபோல அப்படியே பார்ப்பது - எந்தவொரு evaluation இன்றி.

Friday, March 15, 2019

உயர்வுள்ளல்

இன்றைய (16 மார்ச் 2019) நற்செய்தி (மத் 5:43-48)

உயர்வுள்ளல்

'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்,' 'வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது யர்வு' என்பவை பொய்யாப் புலவரின் மொழிகள்.

'வானத்தைக் குறி வை. நட்சத்திரத்தையாவது நீ அடைவாய்' என்பது ஆங்கிலப் பழமொழி.

ஆக, இலக்கு நிர்ணயிக்கும்போதே அது உயர்ந்த இலக்காக இருக்க வேண்டும்.

சொந்த வீடு வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பவர் ஒரு சிறிய வீட்டைப் பற்றி எண்ணாமல், பெரிய பண்ணைவுPடு போன்ற ஒன்றைக் கற்பனை செய்ய வேண்டும். கற்பனை செய்வதில் ஏன் கஞ்சத்தனம்? 5 ஏக்கர் வேண்டும் என்பதற்குப் பதிலாக 500 ஏக்கர் என்று கனவு கண்டால் நல்லதுதானே!

இன்று இயேசு தன் மலைப்பொழிவில் சீடர்களின் இலக்காக 'விண்ணகத் தந்தையை' வைக்கிறார். அதாவது, 'நீங்க ஏன் சாதாரண மனிதர்கள் போல, அல்லது பிற இனத்தவர் போல இருக்கிறீர்கள். நீங்க கடவுளைப் போல இருங்க!' என்கிறார்.

கடவுளைப் போல பரந்த உள்ளம், அவரைப் போன்ற பாரபட்சமற்ற நிலை, அவரைப் போன்ற தாராள மனம் - இவை எல்லாம் இருந்தால் நாம் பலவற்றைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. குறிப்பாக, நம்மால் மாற்ற இயலாது பற்றி நாம் கவலைப்படமாட்டோம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். இச 26:16-19), இஸ்ரயேல் மக்களின் அடையாளத்தை நிர்ணயிக்கிறார் மோசே: 'உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய்!'

ஆக, நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்குத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அரச மகனாகப் பிறந்த ஒருவன் அரச நிலையைப் பற்றி எண்ண வேண்டுமே தவிர, ஆண்டி நிலையைப் பற்றி எண்ணக்கூடாது.

இவ்வாறாக, உயர்ந்த இலக்கு, தகுதிக்கேற்ற நடத்தை, பரந்த உள்ளம், பாரபட்சம் காட்டாத மனம் இருந்தால் நாம் பேறுபெற்றவர்களே!

Thursday, March 14, 2019

விரைவாக

இன்றைய (15 மார்ச் 2019) நற்செய்தி (மத் 5:20-26)

விரைவாக

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் மலைப்பொழிவு (மத் 5-7) பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 'கொலை செய்யாதே' என்ற முதல் ஏற்பாட்டுக் கட்டளைக்கு விளக்கவுரை தரும் இயேசு, கொலை செய்வது என்பது வெறும் வெளிப்புறச் செயல்தான். ஆனால், அது உள்புறம் கோபமாக வேரூன்றியிருக்கும் என்று சொல்லி அதை அகற்றக் கட்டளையிடுகின்றார். மருத்துவர்களில் இரண்டு வகை உண்டு. சில மருத்துவர்கள் நோயின் அறிகுறிகளை மட்டும் குணப்படுத்துவார்கள். சில மருத்துவர்கள்தாம் நோயைக் குணப்படுத்துவார்கள். முதல் வகை மருத்துவத்தில் உடனடி ரிசல்ட் கிடைக்கும். மேலும், இம்மருத்துவம் எளிதானது. ஆனால், இரண்டாம் வகை மருத்துவத்தில் அதிக நாள் எடுக்கும். மருத்துவம் கடினமானது. ஆனால் பலன் நீடித்தது. இயேசு, இரண்டாம் வகை மருத்துவத்திற்கான அழைப்பை விடுக்கிறார்.

ஆக, கொலை செய்வதை விட, அதைத் தூண்டும் கோபத்தை அடக்கி ஆளக் கற்றுக்கொடுக்கின்றார்.

இரண்டாவதாக, மனத்தாங்கலோடு பலி வேண்டவே வேண்டாம்.

இங்கே, வெளிப்புறத்தில் பலி செலுத்திக் கடவுளோடு ஒப்புரவாகிவிட்டு, உள்புறத்தில் ஒருவர் மற்றவர்மேல் வைத்திருக்கும் வன்மம் வேண்டாம் என்கிறார் இயேசு.

மூன்றாவதாக, விரைவில் செயல்படுதல். எப்போது?

எதிரியோடு வழக்காடும்போது வழியில் விரைவில் சமரசம் செய்துகொள்வது அவசியம். அதாவது, பிரச்சினை பெரியதாகி அதை தீர்ப்பதைவிட, பிரச்சினையே இல்லாமல் பார்த்துக்கொள்ள அழைக்கிறார் இயேசு. நேரம் கூடக்கூட செயலின் தன்மை பெரிதாகும் என்பதால் உடனே செய்ய அழைக்கிறார் இயேசு.

இன்றைய முதல் வாசகம் (காண். எசே 18:21-28), தீயவருக்கும் நல்லவருக்குமான வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டி நல்லவராக வாழ அழைக்கிறது நம்மை.

இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 130) மிகவும் முக்கியமான பாடல். திருப்பாடல் ஆசிரியர் ஆண்டவரின் நன்மைத்தனத்தைப் புகழ்ந்தவராய், 'நீர் எம் குற்றங்களை நினைவில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்?' எனக் கேட்கிறார். அவர் நம் குற்றங்களை நினைவில்கொள்ளாத போது, நாம் மற்றவரின் குற்றங்களை ஏன் நினைவில் கொள்ள வேண்டும்?

மன்னிக்க மறுக்கும் மனம் மற்றவர்களின் குற்றத்திற்காக தன்னைத் தானே தண்டித்துக்கொள்கிறது.

Wednesday, March 13, 2019

இரு கரங்கள்

இன்றைய (14 மார்ச் 2019) நற்செய்தி (மத் 7:7-12)

இரு கரங்கள்

இன்றைய நற்செய்தி வாசகமும் (காண். மத் 7:7-12) முதல் வாசகமும் (காண். எஸ்தர் 4:17), 'இறைவனின் அருள்வளமும் மனிதரின் விடாமுயற்சியும் இணையும்போது அற்புதங்கள் நடக்கும்' என்பதை நமக்குச் சொல்கின்றன.

எஸ்தர் அரசி தன் இனத்தார் சார்பாக அரசனிடம் முறையிடப் புறப்படமுன் அவர் செபிக்கும் செபத்தை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். ஆக, இஸ்ரயேல் மக்கள் அரசனின் பார்வையில் தயை பெறுவதற்கு, இறைவனின் அருள்வளமும் எஸ்தரின் உழைப்பு அல்லது விடாமுயற்சியும் இணைந்து தேவைப்படுகிறது.

'நீங்கள் கேட்கும் முன்பே உங்கள் தேவையை கடவுள் அறிந்திருக்கிறார்' என்று இரண்டு நாள்களுக்கு முன் கேட்ட வாசகப் பகுதியில் சொல்லும் இயேசு, இன்று, 'கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்' என்கிறார். மேலும், 'கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்' என்றும் கூறுகின்றனர்.

'கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்' - என்று மூன்று செயல்களைச் செய்யச் சொல்கின்றார் இயேசு. கேட்பதில் நாம் வாயைப் பயன்படுத்துகின்றோம். தேடுவதில் கண்களையும், தட்டுவதில் கைகளையும் பயன்படுத்துகின்றோம். நம் ஐம்புலன்களில் நாம் முயற்சி எடுத்துப் பயன்படுத்த வேண்டிய புலன்கள் இம்மூன்றுதாம். காதுகள் கேட்பதற்கும், மூக்கு நுகர்வதற்கும் நம் முயற்சி தேவையில்லை. நாம் விரும்பாமலே பல சப்தங்களைக் கேட்கவும், பலவற்றை நுகரவும் முடியும்.

ஆக, முயற்சி எடுத்துச் செய்ய வேண்டியவற்றை முயற்சி எடுத்துத்தான் செய்ய வேண்டும் என்று சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

மேலும், கேட்காமல் ஒன்று நம் கையில் கொடுக்கப்படும்போதும், தேடாமலேயே ஒன்று கிடைக்கும்போதும், தட்டாமலேயே நமக்குக் கதவுகள் திறக்கப்படும்போதும் நாம் அவற்றில் எதையும் இரசிப்பதில்லை. மாறாக, இந்த மூன்று நிலைகளில் நம்முடைய 'லிமினாலிட்டை' (அதாவது, வரையறையை) நாம் உணரும்போது, அதன் வலியும், அதன் இன்பமும் தெரிகிறது.

நாம் ஒன்றைப் பெறுவதற்கு வலிந்து போரிடும்போதுதான் அதன் இனிமையை நம்மால் அனுபவிக்க முடிகிறது.

இன்றைய வாசகங்கள் வைக்கும் பாடங்கள் இரண்டு:

1. நம் வரையறை தரும் வலியை உணர்வது.

2. அந்த வலியை எதிர்த்து விடாமுயற்சியோடு உழைப்பது.

வலியும் விடாமுயற்சியும் அப்புறத்திலிருந்து இறைவனின் கரத்தை நம்மிடம் கொண்டு வந்து நீட்டும். இரு கைகள் இணையப் பயணம் இனிதாகும்.

Tuesday, March 12, 2019

யோனாவின் அடையாளம்

இன்றைய (13 மார்ச் 2019) நற்செய்தி (லூக் 11:29-32)

யோனாவின் அடையாளம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னுடைய பணியின் அடையாளமாக யோனாவை முன்வைக்கிறார்: 'யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்.'

இன்றைய முதல் வாசகம் (காண். யோனா 3:1-10) யோனாவின் பணியை மிகச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. இறைவாக்கினர் யோனா ஒரு வித்தியாசமான நபர். அவருக்கு இறைவாக்குப் பணிசெய்யப் பிடிக்கவில்லை. ஆகையால் அவர் இறைவனிடமிருந்து தப்பி ஓடுகிறார். ஆனாலும், கடலில் தூக்கி எறியப்பட்டு மீனின் வயிற்றில் வாழ்கிறார். பின் நினிவே நகரில் ஏனோ தானோவென்று இறைவாக்குரைக்கிறார்.

மூன்று நாள்கள் நடந்து கடக்கக் கூடிய நினிவே நகரத்துக்குள் சென்று, 'இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்' என்று ஒரே மூச்சில் இறைவாக்குரைத்து முடிக்கிறார். அவருடைய பேச்சைக் கேட்டு அரசன் முதல் கால்நடைகள் வரை நோன்பிருக்கின்றன. கடவுளும் நினிவே நகரைத் தண்டியாமல் விடுகின்றார்.

ஏனோதானோ என்று செய்யப்பட்ட யோனாவின் பணியே இவ்வளவு மாற்றத்தைக் கொணர்ந்தது என்றால், தன் பணி எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற எண்ணத்தில்தான், 'இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!' என்கிறார்.

யோனா இறைத்திருவுளத்திலிருந்து தப்பி ஓடினார் - இயேசு இறைத்திருவுளம் நிறைவேற்றினார்!
யோனா அவசர அவசரமாக இறைவாக்குரைத்தார் - இயேசுவின் பணி மிக மெதுவாக நடந்தேறுகிறது!
யோனா போதிக்க மட்டுமே செய்தார் - இயேசுவோ தன் போதனையோடு வல்ல செயல்களும் ஆற்றினார்!

யோனாவைவிடப் பெரியவர் இயேசு!

ஆனால், மனமாற்றத்தில் நினிவே மக்களை விட நாம் பெரியவர்களா? என்றால், அதுதான் இல்லை.

'நாளை பார்த்துக்கொள்ளலாம்' என்ற மனநிலை நம் மனமாற்றத்தைத் தள்ளிப்போடுகின்றது.

Monday, March 11, 2019

மிகுதியான சொற்கள்

இன்றைய (12 மார்ச் 2019) நற்செய்தி (மத் 6:7-15)

மிகுதியான சொற்கள்

ஷேக்ஸ்பியர் எழுதிய ஹேம்லட் நாடகத்தின் (கட்டம் 2, காட்சி 2) ஒரு காட்சியில் பொலோனியுஸ் ஹேம்லட்டைப் பார்த்து, 'நீங்கள் என்ன வாசிக்கிறீர்கள், அரசே?' என்று கேட்பார். அதற்கு, ஹேம்லட், 'சொற்கள், சொற்கள், சொற்கள்' என்பார்.

மிகுதியான சொற்கள் பயன்படுத்துவது பற்றி ஞான இலக்கியங்கள் மிகவே எச்சரிக்கின்றன.

எடுத்துக்காட்டாக,

'ஞானியரின் வாய்மொழி அவருக்குப் பெருமை தேடித் தரும்.
மூடரோ தம் வாயால் கெடுவார்.
அவரது பேச்சு மடமையில் தொடங்கும்.
முழு பைத்தியத்தில் போய் முடியும்.
மூடர் வளவளவென்று பேச்சை வளர்ப்பார்.
என்ன பேசப் போகின்றார் என்பது எவருக்கும் தெரியாது.
அதற்குப் பின் என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல இயலாது.' (சஉ 10:12-14)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, இறைவேண்டலில் மிகுதியான சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றார். மேலும், சீடர்களின் இறைவேண்டல் எப்படி இருக்க வேண்டும் என்றும் கற்றுத் தருகின்றார். இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல் அதிகமாக செயல் வார்த்தைகளைக் கொண்டிருக்கின்றன. ஆக, இந்த இறைவேண்டலைச் செய்பவர் தான் சொல்வதைச் செயல்களால் வடிக்க வேண்டும்.

'மாற்றத்தை ஏற்படுத்தாத எந்த வார்த்தையும் வீண்' என்கிறார் சே குவேரா.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 55:10-11), ஆண்டவராகிய கடவுளின் வார்த்தையின் ஆற்றலை விளக்குகின்றார் எசாயா. மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வந்தால் மண்ணுலகில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் காய்ந்து போகாது. இறைவார்த்தையும் அப்படியே என்கிறார் இறைவாக்கினர்.

இன்று அளவுக்கு அதிகமான சொற்களால் நாம் சூழப்பட்டிருக்கிறோம். மிகுதியாகச் சொற்களைப் பேசுகிறோம். செய்தித்தாள், இணையம், அலைபேசி, தொலைக்காட்சி, சினிமா என எங்கும் சொற்கள். நாம் கேட்கும் இவ்வளவு சொற்களும் நம்மில் மாற்றத்தை ஏற்படுத்துவது இல்லை. நாம் பேசும் சொற்களும் அப்படியே பல நேரங்களில் மற்றவர்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.

ஆக, ஒன்றே சொல்வதும், அதை நன்றே சொல்வதும், அதையே இறைவேண்டல் என வாழ்வதும் இனிது என்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

Sunday, March 10, 2019

சிறிய வழிகள்

இன்றைய (11 மார்ச் 2019) நற்செய்தி (மத் 25:31-46)

சிறிய வழிகள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறுதித்தீர்ப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். என் சிறுவயதில் நான் அடிக்கடி வாசித்து இரசித்த, வியந்த, பயந்த விவிலியப் பகுதி இது. இந்த நிகழ்வை கற்பனை செய்து பார்க்கும்போது வியப்பாக இருக்கும். உலகில் உள்ள எல்லாரையும் - உலகம் தொடக்கமுதல் இன்று வரை - ஒரே தளத்தில் கூட்ட வேண்டும். இரண்டாகப் பிரிக்க வேண்டும். அவர்கள் அனைவருக்கும் கேட்கும்படி அரசர் பேச வேண்டும்.

இந்த நிகழ்வு சொல்வது ஒரே செய்திதான்:

மானிட மகனின் மாட்சியில் வலப்பக்கம் நிற்பதற்கு பெரிய தகுதிகள் எவற்றையும் இயேசு நிர்ணயிக்கவில்லை:

திருச்சட்டத்தை மனப்பாடம் செய்ய வேண்டும், பத்துக் கட்டளைகள் கடைப்பிடிக்க வேண்டும், இறையியல், விவிலியம் படிக்க வேண்டும், மெய்யியலில் தெளிவு வேண்டும், இந்த வேலை செய்ய வேண்டும், அந்த வேலை செய்ய வேண்டும், இவ்வளவு படித்திருக்க வேண்டும், இவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும், இவ்வளவு கையிருப்பு வேண்டும், இன்னென்ன பொருள்கள் வைத்திருக்க வேண்டும் - இப்படி எதுவும் இல்லை தகுதிகள் லிஸ்டில்.

இறையாட்சிக்குள் நுழைவதற்கான வழிகள் எல்லாமே சிறிய வழிகள்.

சிறிய வழிகள் வழியாக, சிறியவர்களுக்குச் சிறியவர்களாக மாறினால் போதும் - வலப்பக்கம் நின்றுவிடலாம்.

மேலும், இந்நிகழ்வில் ஆண்டவரே, அரசரே தன்னை சிறியவர்களோடு ஒன்றிணைத்துக்கொள்கிறார்.

1. பசித்தோருக்கு உணவு
2. தாகமுள்ளோருக்கு தண்ணீர்
3. அந்நியருக்கு வரவேற்பு
4. ஆடை இல்லாதவருக்கு ஆடை
5. நோயுற்றோரைச் சந்தித்தல்
6. சிறையிலிருப்போரைச் சந்தித்தல்

வெறும் ஆறு நிகழ்வுகள். ஆறும் சின்னஞ்சிறு நிகழ்வுகள். கையில் கொஞ்சம் பணமும், இருக்க ஒரு சிறிய வீடும், கொஞ்ச நேரமும் இருந்தால் இந்த ஆறையும் செய்து முடித்துவிடலாம்.

ஆனால், இதைச் செய்வதற்குக் கடினமாக இருக்கக் காரணம் என்னவென்றால், நாம் சிறியவர்களாக மாற மறுப்பதும், சிறியவர்களில் அவரைக் காண மறுப்பதும், சிறிய வழிகளைத் தேர்ந்தெடுக்க மறப்பதும்தான்.

மேலும், இவற்றைச் செய்வதால் இறையாட்சியை உரிமையாக்கிக்கொள்ள முடியும் என்ற நிலையிலும் செய்யக்கூடாது. ஏனெனில், அப்படிப்பட்ட ஒரு மனநிலையில் நாம் இவர்களைப் 'பயன்படுத்தி' நம் இறையாட்சியைச் சம்பாதிக்க விரும்புவோம். ஒரு மனிதர் தன் சக மனிதரைப் பயன்படுத்துவது இன்னும் ஆபத்தானது.

மேலும், பசி, தாகம், அந்நியம், நிர்வாணம், நோய், தனிமை ஆகியவற்றை மானுடத்தின் முகத்திலிருந்து அகற்றுவதும் அவசியம்.

இவை அனைத்தையும் ஒற்றை வரியில் சொல்லிவிடுகிறது இன்றைய முதல் வாசகம் (காண். லேவி 19:1-2, 11-18): 'உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!'

என்னை நான் அன்பு செய்வது மிக எளிது என்றால், அடுத்திருப்பவரை அன்பு செய்வதும் அப்படித்தானே!

சிறிய வழிகள், எளிய செயல்கள் - இறையாட்சியின் சாவிகள்


Friday, March 8, 2019

பணிமாற்றம்

இன்றைய (9 மார்ச் 2019) நற்செய்தி (லூக் 5:27-32)

பணிமாற்றம்

மனமாற்றம் பற்றி நாம் பேசத் தொடங்கும் தவக்காலத்தின் முதல் சில நாள்களில் ஒன்றான இன்று, 'பணிமாற்றம்' என்பது 'வாழ்க்கை மாற்றம்' என்றும், அதுவே 'மனமாற்றம்' என்றும் முன்வைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

சுங்கச்சாவடியில் வரி தண்டுபவராய் இருந்த லேவி என்பவரை இயேசு, 'என்னைப் பின்பற்றி வா!' என்று அழைக்கிறார். அவரும் அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றிச் செல்கின்றார்.

வரி தண்டுபவர்கள் வழக்கமாக நிறையக் கேள்வி கேட்பார்கள். அடுத்தவர்களிடமிருந்து எதையாவது பெற்றுவிட வேண்டும் என்றே முயற்சி செய்வார்கள். அதுவும், இயேசுவின் சமகாலத்தில் உரோமைப் பேரரசு வரி வாங்குவதில் மிகவும் மெனக்கெடுவதாய் இருந்தது. அதிக பணம் புழங்கும் ஒரு இடம் இன்பதால் இவ்வேளைக்கு நிறைய போட்டிகளும் இருந்திருக்கும். இருந்தாலும், தன் இருக்கையையும், தன் வரவையும், தன் அலுவலக நட்பு வட்டாரத்தையும் இழந்துவிட்டு, ஒரு நாடோடி போதகரைப் பின்பற்றிச் செல்கின்றார் லேவி.

அப்படி என்றால், இவருக்கு இந்த வேலை திருப்தி தரவில்லையா?

மற்றவர்கள் லேவி என்ற மத்தேயுவிடம் காணாத ஒன்றை இயேசு அவரிடம் கண்டார். அதுவே மத்தேயுவை இயேசு நோக்கி அழைத்திருக்கும்.

வரிதண்டும் தொழில் யூதர்களைப் பொறுத்தவரையில் ஒரு தீய தொழில். ஏனெனில், சொந்த மக்களிடமே வரி வசூல் செய்து உரோமைக்கு கொடுக்க வேண்டியிருந்ததால் யூதர்கள் வரிதண்டுபவர்களை அதிகம் வெறுத்தனர். மேலும், வரி வசூலிப்பதற்காகச் சில நேரங்களில் வரிதண்டுபவர்கள் வன்முறை வழிகளையும் கையாண்டனர். இப்படியாக, பாவியாக, அழுக்கானவராக, தீய தொழில் செய்பவராக இருந்தவரை கோவில் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில், மக்களால் ரபி ('போதகர்') என அழைக்கப்பட்ட இயேசு அவரை அழைத்தது, அவருக்கு தன்மதிப்பை உயர்த்தியிருக்கும். உடனே புறப்பட்டிருப்பார். ஆக, மற்றவர்கள் மத்தேயுவைப் பாவியாகக் காண, இயேசு அவரை ஒரு திருத்தூதராகக் காண்கின்றார். நாம் பார்க்கும் பார்வை அடுத்தவரின் வாழ்வுப் பாதையை மாற்றிவிடும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

அந்த நாள் இரவே மத்தேயு தன் வீட்டில் அனைவருக்கும் விருந்து கொடுக்கின்றார். 'இதுதான் நான்! இவர்கள்தாம் என் நண்பர்கள்!' என்று இயேசுவுக்குத் தன்னையே திறந்து காட்டுகின்றார் மத்தேயு.

இந்நிகழ்வு நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

அ. நம் வாழ்வைப் புரட்டிப்போடும் அவர் எந்நேரமும் நம்மைத் தேடி வரலாம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்நேரம் அவரைக் கண்டுகொள்வதே.

ஆ. அவரைப் பின்பற்றுவது தொடக்கத்தில் இழப்பாகத் தெரிந்தாலும், அவர் நம்மைப் பற்றி வைத்திருக்கும் பார்வை நம் தன்மதிப்பை உயர்த்தும்.

இ. அவராக நுழைந்து நம் வாழ்வின் நுகத்தை அகற்றும்போது, அவர் தன் நுகத்தை நம்மேல் சுமத்துகிறார். இதையே இன்றைய முதல் வாசகமும் (காண். எசா 58:9-14), 'உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றும்போது ... நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போலவும் வற்றாத நீரூற்று போலவும் இருப்பாய்' என்கிறது.

வரலாற்று இயேசு பற்றிய ஆய்வில் முக்கியமாகப் பேசப்படும் அறிஞர் ஆல்பர்ட் ஸ்வைஸ்டர் என்பவர். இவர் இறையியல் பயின்றவர், பின் விவிலியம் பயின்றவர், பின் மருத்துவம் பயின்றவர். இறுதியாக, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆப்பிரிக்க பழங்குடிகள் நடுவே பணியாளராகச் சென்று அங்கேயே இறந்தவர். வாழ்க்கையின் ஒவ்வொரு பணிமாற்றத்தையும் தன் மனமாற்றமாகக் கண்டவர். லேவி என்ற மத்தேயு போல!


Thursday, March 7, 2019

நோன்பு

இன்றைய (8 மார்ச் 2019) நற்செய்தி (மத் 9:14-15)

நோன்பு

தவக்காலம் தொடங்கியதோ என்னவோ, வாட்ஸ்ஆப், டுவிட்டர், யூட்யூப் என எங்கெங்கு காணினும் சிலுவையும், சாம்பலும், சோகமான இசையும், வாடிய முகங்களும், எச்சரிக்கை வாசகங்களும் ஸ்டேட்டஸாக, கீச்சாக, காணொளியாக வலம் வருகின்றன.

அப்படி வலம் வந்த ஸ்டேட்டஸ் ஒன்றில், 'லெந்து' என்றால் 'லவ்' என்று தலைப்பிட்டு, 'இறைவேண்டல்' - 'உனக்கும் இறைவனுக்கும் உள்ள அன்பு,' 'நோன்பு' - 'உனக்கும் உனக்கும் உள்ள அன்பு,' 'தர்மம்' - 'உனக்கும் பிறருக்கும் உள்ள அன்பு,' ஆக, 'தவக்காலம்' என்றாலே 'அன்பு' என்று இருந்தது.

'நோன்பு' - 'உனக்கும் உனக்கும் உள்ள அன்பு'

இதை நான் நேற்று வாசித்தவடன் மிகவும் சரி எனப்பட்டது. ஆனால், இன்றைய நற்செய்தியும் (மத் 9:14-15), முதல் வாசகமும் (எசா 58:1-9), நோன்பின் பொருள் இது மட்டும் அல்ல என்று காட்டுகின்றன.

'நோன்பு' என்பதை பழைய தமிழில் 'விரதம்' என்கிறோம். 'விரதம்' என்ற சமஸ்கிருத வார்த்தை, 'விர்' மற்றும் 'ர்த்தா' என்ற இரண்டு வார்த்தைகளின் இணைப்பு. 'விர்' என்றால் 'விரும்புதல், ஆளுதல், தள்ளிவைத்தல், வரையறை செய்தல், தேர்ந்தெடுத்தல்' என்றும், 'ர்த்தா' என்றால் 'பிரபஞ்சத்தோடு அல்லது பிரபஞ்சத்தில் உள்ள ஒருங்கிணைவு, ஒழுங்கமைப்பு' என்றும் பொருள். ஆக, இணைத்துப் பார்க்கும்போது, ஒருவர் தன் தனிப்பட்ட முயற்சி அல்லது தெரிவின் வழியாக பிரபஞ்சத்தின் ஒழுங்கமைப்போடு தன்னை இணைத்துக்கொள்வதே விரதம். இது உணவு ஒறுத்தலாக இருக்கலாம், அல்லது செயல் மாற்றமாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, புலால் ஒறுத்தலும் விரதமே, உணவு மறுத்தலும் விரதமே, உடலுறவு மறுத்தலும் விரதமே, மது மறுத்தலும் விரதமே.

உபநிடதங்கள் 'விரதத்திற்கு' இரண்டு பொருள் தருகின்றன: ஒன்று, ஒருவர் தனிப்பட்டு, தனக்குத்தானே எடுத்துக்கொள்ளும் வாக்குறுதி விரதம். பெரும்பாலும் இது உணவு மறுக்கும் வாக்குறுதியாக இருந்தது. இரண்டு, ஒரு அறநெறி ஒழுக்கம். எடுத்துக்காட்டாக, 'பதிவிரதம்' என்பது ஒரே திருமணத்திற்குள் பிரமாணிக்கமாக இருப்பது, 'குருவிரதம்' என்பது ஆசிரியருக்கு கீழ்ப்படிவது. மேலும், நாளைப் பொறுத்து, கடவுளைப் பொறுத்து, உடல் உறுப்பைப் பொறுத்து விரதங்களில் பல வகைகள் இருக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவிடம் வருகின்ற யோவானின் சீடர்கள், 'நாங்களும் பரிசேயர்களும் அடிக்கடி நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?' என்று கேட்கின்றனர். இயேசு அவர்களுக்கு மணமகன் உருவகம் சொல்லி, 'மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய நேரம் வரும். அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்' என்கிறார்.

இங்கே, நோன்பு என்பது உண்ணாநிலை அல்ல. மாறாக, ஏதோ ஒரு வகையான ஒறுத்தல். ஆனால், யோவானின் சீடர்களும் பரிசேயர்களும் இதை வெறும் உண்ணாநிலை என்றும், தன்மையமானது என்றும் புரிந்துகொள்கின்றனர். ஆனால், இயேசு இந்த இரண்டு பொருளையும் மாற்றி, 'நோன்பு' என்பது 'மணமகனுக்கான தேடல்' என்று புதிய பொருளைத் தருகின்றார். அதாவது, நோன்பு என்பது மணமகன் மையமாக, மணமகனுக்கான எதிர்நோக்காக இருக்க வேண்டும். மேலும், மணமகன் விட்டுச்செல்லும் மகிழ்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வது, மணமகனின் விழுமியங்களை வாழ்வது என்பவையே இயேசுவைப் பொறுத்தவரையில் நோன்பு.

இதையொட்டியே, இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 28:1-9) எசாயா இறைவாக்கினர் வழியாக, ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களின் நோன்பு இருக்கும் முறையைக் கிண்டல் செய்கின்றார்: 'ஒருவன் நாணலைப் போலத் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையும் சாம்பலும் அணிவதா நோன்பு?' தொடர்ந்து, நோன்பின் புதிய வரையறையைத் தருகின்றார் கடவுள்: 'கொடுமைத் தளைகளை அவிழ்ப்பது, ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்வது, எவ்வகை நுகத்தையும் உடைப்பது, பசித்தோருக்கு உணவைப் பகிர்வது, தங்குவதற்கு இடமில்லாதவர்களுக்கு இடம் தருவது, உடையற்றோருக்கு உடை தருவது'. மேலும், இத்தகைய நோன்பு இருந்தால் மட்டுமே 'உன் வாழ்வு விடியல் போல எழும். விரைவில் வாழ்வு துளிர்க்கும். உன் மன்றாட்டு கேட்கப்படும்' என்கிறார் ஆண்டவராகிய கடவுள்.

இஸ்ரயேல் மக்கள் இருந்த நோன்பு தன்மையம் கொண்டதாகவும், எதையும் இழக்கத் தேவையில்லாததாகவும் இருந்தது. எடுத்துக்காட்டாக, புலால் மறுப்பு அல்லது உணவு மறுப்பு அவர்களுக்கு பசியைத் தந்தாலும் இப்படி மறுத்ததால் அவர்களின் பணம் சேமிக்கப்பட்டது. ஆக, நிறைய விரதம் நிறைய பணம் என்று விரதம் பொருளாதார முதலாளித்துவத்தையும் ஆதரித்தது. ஆனால், கடவுள் குறிப்பிடும் நோன்பில் எல்லாமே செலவுதான். தளைகளை அகற்ற, விடுதலை செய்ய, பசித்தோருக்கு உணவளிக்க, தங்க இடம் கொடுக்க, உடுக்க உடை கொடுக்க என்று எல்லாச் செயல்களிலும் இழப்பு காத்திருக்கிறது. ஆனால், இந்த இழப்பே அவர்களுக்கு பேறு என்கிறார் கடவுள்.

இன்று நாம், உண்ணாநோன்பு கடந்து, மொபைல் நோன்பு, இண்டர்நெட் நோன்பு, வாட்ஸ்ஆப் நோன்பு, கார்பன் நோன்பு (அதாவது, கார், பைக் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது), டிவி நோன்பு, வார்த்தை நோன்பு (பேசாமல் இருப்பது), லிஃப்ட் நோன்பு, மின்இணைப்பு நோன்பு என நிறைய நோன்புகள் இருக்கத் தொடங்குகிறோம். இவை அனைத்திலும் நோன்பு இருப்பவர் பொருளாதார நிலையில் ஒன்றையும் இழப்பதில்லை. இப்படிப்பட்ட நோன்புகளால் ஒருவருக்கு இன்னும் சர்ப்ளஸ் பணம் கிடைக்கும். ஆனால், இதை விடுத்து, முதல் வாசகம் சொல்லும் வகை நோன்பு இருந்தோமென்றால் நமக்கு வலிக்க ஆரம்பிக்கும்.

வலித்தால்தான் அது விரதம். வலித்தால்தான் அது வரம்.


Wednesday, March 6, 2019

வாழ்வை இழந்தால்

இன்றைய (7 மார்ச் 2019) நற்செய்தி (லூக் 9:22-25)

வாழ்வை இழந்தால்

தவக்காலத்தில் நுழைந்துள்ள நமக்கு இயேசுவின் பாடுகள் முன்னறிவிப்பு இன்றைய நற்செய்தி வாசகமாகத் தரப்பட்டுள்ளது. மானிட மகன் 'பலவாறு துன்பப்படவம்,' 'உதறித் தள்ளப்படவும்,' 'கொலைசெய்யப்படவும்,' 'உயிருடன் எழுப்பப்படவும்' வேண்டும் என்று நான்கு வினைச்சொற்களைப் பயன்படுத்துகிறார் இயேசு. முதல் வினைச்சொல் தவிர்த்து மற்ற மூன்று வினைச்சொற்களும் செயப்பாட்டுவினையில் இருக்கின்றன. ஆக, இயேசுவின் மேல் இவை அனைத்தும் செய்யப்படுகின்றன.

ஒருவர் செயப்பாட்டுவினைக்குத் தள்ளப்படுவதே அவர் அனுபவிக்கும் பெரிய வலி. எடுத்துக்காட்டாக, 'தினமும் நான் நடக்கிறேன்'. இதில், நானே எல்லாமாக இருக்கிறேன். ஆனால், நான் கீழே விழுந்து கால்களை உடைத்துக்கொள்ளும்போது, 'தினமும் நான் நடக்கவைக்கப்படுகிறேன்'. அதாவது, மற்றவரின் துணையோடு நான் நடக்கிறேன். இங்கே நடப்பவர் அவராகவும், நடத்தப்படுபவர் நானாகவும் ஆகிறேன். இங்கே, நான் என் பாதையையும், நேரத்தையும் நிர்ணயிக்க முடியாது. நான் மற்றவரின் இரக்கத்தில் இருப்பேன்.

ஆக, மற்றவரின் இரக்கத்தில் இருப்பதுதான் ஒருவர் அனுபவிக்கும் பெரிய வலி.

இதுதான் இயேசு முன்வைக்கும் சிலுவை.

பல நேரங்களில் வாழ்வின் மாஸ்டர் அல்லது மிஸ்ட்ரஸ் என நம்மையே எண்ணிக்கொள்கிறோம். வாழ்க்கை எப்போதும் நம்மை இந்த நிலையில் வைத்திருப்பதில்லை. நம்முடைய தன்னலத்தாலும் இயற்கையாலும் நடைபெறும் நிகழ்வுகளால் வாழ்க்கை நிகழ்வுகள் தலைகீழாகின்றன. அந்த நிகழ்வுகள் எதிர்பாராத சிலுவைகளாக நம்மிடம் வருகின்றன.

இயேசு தன்னைப் பின்பற்றுகிறவர்கள், தன்னலம் துறக்கவும், சிலுவை தூக்கவும், தொடர்ந்து பின்பற்றவும் வேண்டும் என்கிறார். இம்மூன்றும் அடுத்தடுத்து நிகழக்கூடியவை.

'ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே (ஆன்மாவை) இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?' - எனக் கேட்கிறார் இயேசு. அதாவது, நாம் வைத்திருக்கும் எதுவும் நமக்கு வாழ்வைத் தருவதில்லை. ஆக, அவற்றை இழக்கக் கற்றுக்கொள்ளும்போதுதான் நாம் வாழ்வைக் கற்றுக்கொள்கிறோம்.

இதையே இன்றைய முதல் வாசகம் (காண். இச 30:15-20), 'வாழ்வையும் சாவையும்' 'ஆசியையும் சாபத்தையும்' உன்முன் வைக்கிறேன் எனவும், 'வாழ்வைத் தேர்ந்துகொள்' எனவும் அறிவுறுத்துகிறது. இயேசு தன் வாழ்வை சாவின் வழியாகத் தேர்ந்துகொண்டார். அடுத்தவரின் சாபத்தை நம் ஆசியாக மாற்றினார்.

வாழ்வும், சாவும் நம்முன் நிற்கின்றன.

நாம் செய்யும் தெரிவே நம் வாழ்வை நிர்ணயிக்கிறது.

இயேசுவின் தெரிவு தெளிவாக இருந்தது. அத்தெரிவில் இயேசு உறுதியாகவும் இருந்தார்.

ஆக, தெரிவில் தெளிவும், தெரிவில் உறுதியோம் வேண்டுவோம் இன்று.


Tuesday, March 5, 2019

திருநீற்றுப்புதன்

இன்றைய (6 மார்ச் 2019) திருநாள்

திருநீற்றுப்புதன்

'அறத்தான் வருவதே' இன்பம் என்று, பிறரன்புச் செயல், இறைவேண்டல், நோன்பு என்று அறச்செயல்கள் பக்கம் நம் இதயத்தைத் திருப்பும் தவக்காலத்திற்குள் திருநீறு அணிந்து இன்று நாம் நுழைகின்றோம். 'உள்ளே இருப்பவர்கள் வெளியே வரட்டும்' என்று இன்றைய முதல் வாசகமும் (காண். யோவே 2:12-18), 'வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லட்டும்' என்று இன்றைய நற்செய்தி வாசகமும் (காண். மத் 6:1-6, 16-18) தவத்தின் இரண்டு பரிமாணங்களை நமக்கு எடுத்துரைக்கின்றன. தவக்காலம் என்றால் சோகம், அது பாவம் பற்றிய நினைவூட்டல், அல்லது வழிபாட்டுக் காலத்தின் ஒரு பாகம் என்ற பழைய புரிதல்களை விடுத்து, தவக்காலம் என்பது பாஸ்கா மகிழ்ச்சியின் முன்சுவை, நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி என்ற புதிய புரிதல்களோடு தவக்காலத்திற்குள் நுழைவோம்.

நாம் மேற்கொள்ளும் பயணங்களை, 'பாதை மாறும் பயணங்கள்,' 'பாதை விலகும் பயணங்கள்' என்று இரண்டாகப் பிரிக்கலாம். பாதை மாறும் பயணங்கள் இலக்கை அடைய, பாதை விலகும் பயணங்கள் இலக்கையும் அடையாமல், பயணத்தின் நேரத்தையும், பயணம் செய்பவரின் ஆற்றலையும் வீணடிக்கும். குருத்து ஞாயிறு அன்று நாம் ஆலயத்திற்குள் நுழைகையில் கைகளில் ஏந்தி, 'ஓசன்னா' என்று வெற்றி ஆர்ப்பரிப்பு செய்த குருத்தோலைகள் இன்று தங்கள் பாதையை மாற்றி சாம்பலாக, திருநீறாக நம் நெற்றியை அலங்கரிக்கின்றன. இனி சாம்பல் ஒருபோதும் குருத்தாக மாற முடியாது. எல்லாப் பயணங்களின் இறுதியும், இலக்கும் இதுவே என்று நம் வாழ்வின் இறுதியை நினைவூட்டுகின்றது குருத்தோலைகளின் இந்தப் பயணம்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு இரண்டு வகைப் பயணங்கள் பற்றிப் பேசுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில், 'நான், எனது, என் வீடு, என் வயல், என் கட்டில், என் இன்பம்' என வீட்டிற்குள் இருக்கும் பெரியவர்கள், சிறியவர்கள், முதியவர்கள், குழந்தைகள், மணமக்கள், இளம்பெண்கள் என அனைவரையும் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே வருமாறு அழைக்கின்றார் ஆண்டவராகிய கடவுள். பாலும் தேனும் பொழியும் நாட்டில் குடியிருந்த இஸ்ராயேல் மக்கள் காலப்போக்கில் தங்கள் அண்டை நாடுகள் போல தங்களுக்கென்று அரசர்களை ஏற்படுத்திக் கொண்டதோடல்லாமல், தாங்கள் இறைவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்பதை மறந்து, தங்கள் கடவுளையும் மறக்க ஆரம்பிக்கின்றனர். மேலும், தங்கள் கடவுளாகிய ஆண்டவர், 'அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர், செய்யவிரும்பும் தீங்கை மறப்பவர்' என்பதையும் மறக்கின்றனர். இந்தப் பின்புலத்தில், யோவேல் வழியாக 'உண்ணா நோன்பை' அறிவிக்கின்ற கடவுள், இந்நோண்பில் பங்கு பெறுபவர்கள் தங்கள் 'இதயங்களைக் கிழித்துக் கொள்ள' அறிவுறுத்தப்படுகின்றனர். வெறும் உடைகளைக் கிழித்துக் கொண்டு நிர்வாணமாக நோன்பு இருப்பவர்கள் வெளிப்புற சடங்காக அதை மாற்றிவிட வாய்ப்பு உண்டு. ஆனால், இதயத்தைக் கிழிக்கும் நோன்பு ஒரு பக்கம் நோன்பு இருப்பவரைக் கடவுளிடம் தன்னை விரித்துக் காட்டுவதையும், மறு பக்கம் கடவுளைத் தன்னகத்தே அனுமதிப்பதையும் குறித்துக் காட்டுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இந்தப் பாதையைத் திருப்பிப் போடுகின்றார். அறச்செயல்கள் செய்வதற்காக 'வெளியில்' நின்றவர்களை 'உள்ளே' அனுப்புகின்றார். 'எனக்கும் பிறருக்குமான அன்பைக் காட்டும்' 'தர்மம் செய்தல்' என்னை மற்றவர்கள் முன் அடையாளப்படுத்தினால் நான் அந்தச் செயலிலிருந்து அந்நியப்படுகிறேன். அதுபோலவே, 'எனக்கும் இறைவனுக்குமான அன்பைக் காட்டும்' என் 'இறைவேண்டலும்,' 'எனக்கும் எனக்குமான அன்பைக் காட்டும்' என் 'நோன்பும்' மற்றவர்களின் பார்வையால் என்னை என் செயல்களிலிருந்து அந்நியப்படுத்திவிடுகின்றன. அச்செயல்கள் மற்றவர்களின் பார்வையால் கைம்மாற்றை உடனே பெற்றுவிடுகின்றன. உடனே கைம்மாறு கிடைக்கும் எந்த உடனடிச் செயல்களாலும் பயனில்லை. ஆனால், நான் என் உள்ளறைக்குள் செல்லும்போது அது எனக்கும் என் இறைவனுக்குமே மட்டும் தெரிகிறது. இவ்வகைத் தெரிதலில் கைம்மாறு கிடைக்கக் காலம் தாழ்த்தலாம். ஆனால், இக்கைம்மாறு நிலையானது. நம்மைக் கட்டியிருக்கும் சில தீய பழக்கங்கள் உடனடி கைம்மாற்றைத் தருவதால் நாம் அவற்றைத் தொடர்ந்து நாடுகிறோம். ஆனால், உடனடியான அவை அனைத்தும் மிகச் சில மணித்துளிகளே நம்மில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், 'மறைவாய் உள்ளது' என இறைவனுக்கும் எனக்கும் தெரியும் என் உள்ளம் நீண்ட கைம்மாறு பெற உதவுகிறது. ஆக, உடனடிக் கைம்மாறுகளைக் கைவிட நாம் வெளியிலிருந்து உள்ளே பயணம் செய்வது அவசியம்.

இந்த அகநோக்குப் பயணத்தில்தான், நம் இதயம் கிழிகிறது. அந்தக் கிழிந்த உள்ளம் கடவுள் நம்மில் நுழையும் வாயிலாக மாறுகிறது. உள்நுழையும் அவர், இன்றைய திருப்பாடல் (திபா 51) ஆசிரியர் வேண்டுவது போல, நமக்கு, 'தூயதோர் உள்ளம், உறுதிதரும் ஆவி, புதுப்பிக்கும் ஆவி, மீட்பின் மகிழ்ச்சி, தன்னார்வ மனம், திறந்த இதழ்' ஆகியவற்றை வழங்குகின்றார். இந்தப் பயணத்திற்கான நாள் எது? 'இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்' என்கிறது இரண்டாம் வாசகம் (காண். 2 கொரி 5:20-6:2). உள்ளிருக்கும் நாம் வெளியே, வெளியிலிருக்கும் நாம் உள்ளே என்று நம் பாதைகள் மாறட்டும் - இன்றும் என்றும்!


Monday, March 4, 2019

இழப்பதும் பெறுவதும்

இன்றைய (5 மார்ச் 2019) நற்செய்தி (மாற் 10:28-31)

இழப்பதும் பெறுவதும்

தவக்காலம் தொடங்குவதற்கு முந்தைய நாளில் இழப்பதையும், பெற்றுக்கொள்வதையும் பற்றிப் பேசுகின்றன இன்றைய வாசகங்கள்.

நேற்றை நற்செய்தி வாசகப் பகுதியின் தொடர்ச்சியே இது. செல்வந்த இளவல் முகவாட்டத்தோடு இயேசுவிடமிருந்து விடைபெற்றதைத் தொடர்ந்து, இயேசு, 'மனிதரால் இது இயலாது. கடவுளால் இது இயலும்' என்கிறார். தொடர்ந்து, பேதுரு இயேசுவிடம், 'பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே!' என்றும், 'இதனால் எங்களுக்கு என்ன?' என்று மறைமுகமாகவும் கேட்கின்றார்.

'என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ ...' என்று ஒரு பெரிய லிஸ்ட் போடுகின்றார் இயேசு. இங்கே, 'மனைவியை' விடுவது பற்றி எந்தக் குறிப்பும் இல்லாதது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒருவேளை மனைவியை விடுவது தேவையில்லை என்று கருதப்பட்டதா, அல்லது 'நூறு மடங்கு மனைவியர் பெறுவதன்' ஆபத்து முன்னுணரப்பட்டு, அந்த வார்த்தை நீக்கப்பட்டதா என்று நமக்குத் தெரியவில்லை.

இந்த நற்செய்தியை நான் எப்படி புரிந்துகொள்கிறேன்?

'நம்மிடம் இல்லாததை இழப்பது நமக்குப் பெரிதல்ல. ஆனால், இருப்பதை இழப்பதுதான் மிகவும் கஷ்டம்.'

எடுத்துக்காட்டாக, 'நான் இயேசுவுக்காக என் வீட்டை இழக்கிறேன்' எனச் சொல்வது எனக்கு எளிது. ஏனெனில், எனக்கென்று எந்த வீடும் இல்லை. ஆனால், 'நான் இயேசுவுக்காக என் மாதச் சம்பளத்தை இழக்கிறேன்' என்று சொல்வது எனக்கு ரொம்பவே கடினம். ஏனெனில், என் சம்பளம் என் வாழ்க்கை நிலையையும், வாழ்க்கைத் தரத்தையும் நிர்ணயம் செய்கிறது.

மேலும், இங்கே, இழப்பது என்பது வெறும் இழப்பு அல்ல. இழப்பை வெறும் இழப்பாக மட்டும் பார்க்கக் கூடாது. எடுத்துக்காட்டாக, கஜா புயலில் வீடு இழந்தவர்களை அல்லது சுனாமியில் உறவுகளை இழந்தவர்களை அல்ல இயேசு குறிப்பிடுவது. மாறாக, ஒன்றை இழப்பது இயேசுவைப் பற்றிக்கொள்வதற்காக இருக்க வேண்டும். அங்குதான் பேறு இருக்கிறது. ஏனெனில், இழப்பதைவிட மிகவும் கடினமானது இயேசுவைப் பற்றிக்கொள்வது. ஏனெனில், அவரைப் பற்றிக்கொள்ள நாம் மற்ற பற்றுக்களை விட்டாக வேண்டும். மேலும், மற்ற பற்றுக்குள் தரும் உடனடி பாதுகாப்பு போல, இயேசுவைப் பற்றிக்கொள்ளும் பற்று நமக்குத் தருவதில்லை. அதைத்தான் இயேசு, 'இன்னல்கள்' எனக் குறிப்பிடுகின்றார்.

இந்தப் பின்புலத்தில், இன்றைய முதல் வாசகம் (சீஞா 25:1-12), ஆண்டவருக்குப் பலி செலுத்துவதைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. 'ஆண்டவர் திருமுன் வெறுங்கையோடு வராதே!' என எச்சரிக்கிறார் ஆசிரியர். 'பலி' என்பது செலுத்தப்பட்டவுடன் அது நம்மில் ஒரு இழப்பை ஏற்படுத்துகிறது. அந்த இழப்பில்தான் நாம் பெறுகிறோம். ஆக, ஒவ்வொன்றையும் எடுத்துப்போய் அவரின் திருமுன் இழப்பதே பலி.

வாழ்க்கையே 'இழப்பதிலும்,' 'பெறுவதிலும்' தான் இருக்கிறது.

நம் உடலின் செல்களை இழக்கின்றோம். வளர, வளர உடல் நலத்தை இழக்கின்றோம். இன்னும் வயதாக வயதாக உறவுகளை இழக்கின்றோம். ஆனால், ஒவ்வொரு இழப்பிலும் நாம் வாழ்வின் நிறைவைப் பெறுகிறோம்.

ஆக, இழத்தலும், பெறுதலும் இணைந்தவை.

இழத்தலில் இன்னல் உண்டு. அந்த இன்னல்தான் இழத்தலின் பேறு.


Sunday, March 3, 2019

ஒன்று குறைவுபடுகிறது

இன்றைய (4 மார்ச் 2019) நற்செய்தி (மாற் 10:17-27)

இன்னும் ஒன்று குறைவுபடுகிறது

இன்றைய நற்செய்தியில் இயேசுவைப் பின்பற்ற விரும்பிய ஒரு இளவலைப் பார்க்கிறோம்.

இந்த இளவலைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் எனக்கு அடிக்கடி ஒரு கேள்வி எழுவதுண்டு: இந்த இளவல்போல எத்தனையோ பேர் இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறார்கள். இப்படி விருப்பம் உள்ளவர்கள் இறப்புக்குப் பின் எங்கே போவார்கள்?

இந்த இளவல் என்னிடம் எப்போதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தக்கூடியவர். இவரை நாம் இவருடைய சூழலில் புரிந்துகொள்ள வேண்டும். இளவல்கள் எப்போதும் உடனடி விளைவுகளை விரும்புபவர்கள். எடுத்துக்காட்டாக, இன்று ஒரு பாடம் படிக்கிறார்கள் என்றால், அதற்கேற்ற வேலை நாளை கிடைக்கும் என்றால்தான் அதைப் படிப்பார்கள். மேலும், எதையும் அனுபவித்து அறிந்துகொள்ள விரும்புபவர்கள்.

இவருக்கு நிறைய சொத்துக்கள் இருந்தன. இயேசு அவற்றை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுக்கும்படியும், தன்னைப் பின்பற்றும்படியும் கூறுகின்றார். 'நான் இப்படிச் செய்தால் உடனே நிலைவாழ்வு கிடைக்குமா?' என்ற எண்ணம்தான் இவரை முகவாட்டத்தோடு அனுப்பியிருக்கலாம். ஆனால், 'முடியும்' என்றால், 'முடியும்' என்றும், 'முடியாது' என்றால் 'முடியாது' என்றும் சொல்லும் அளவுக்கு இவர் தன்னுரிமை பெற்றிருக்கின்றார். மேலும், எல்லாவற்றையும் இழந்துவிட்டு முகவாட்டமாய் இயேசுவைப் பின்பற்றவதைவிட, முகவாட்டமாய் விடைபெறுவதே சிறப்பு என நினைக்கிறார் இளவல்.

நம் வாழ்விலும் இயேசுவின் அழைப்பு முகவாட்டத்தைக் கொடுக்கலாம். இழப்போடு சேர்ந்து வரும் ஒரு உணர்வு முகவாட்டம். தன் காணிக்கை இறைவன் முன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என நினைக்கின்ற காயின் முகவாட்டத்தோடு நிற்கின்றான். தன் இழப்பை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இழப்பதற்கு நிறைய மனத்திடம் வேண்டும் என்றே நினைக்கிறேன். ஏனெனில், என் மூளை இன்று இழக்கச் சொல்லும். நாளை, 'இழக்காதே! அவனைப் பார்! இவனைப் பார்!' என்று என்னை ஒப்பீடு செய்ய அழைக்கும். என் தீர்மானங்களோடு மறுபடி சமரசம் செய்துகொள்ள என்னை அழைக்கும். ஆக, இழப்பது என்பது ஒரு நெடிய போராட்டமே.

இன்று இயேசு என்னை அன்பொழுகப் பார்த்து, 'உனக்கு இன்னும் ஒன்று குறைவுபடுகிறது' என்று எதைச் சொல்கிறார்.

இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 17:20-29) நல்லது செய்வோர் பெறுகின்ற வெகுமதி பற்றிப் பேசிவிட்டு, தொடர்ந்து, நல்லது செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை என்ற நிலையில், 'மனம் வருந்துவோரைத் தம்மிடம் ஈர்த்துக் கொள்கிறார். நம்பிக்கை இழந்தோரை ஊக்குவிக்கிறார்' என ஆறுதல் தருகின்றார்.

நற்செய்தி வாசகத்தின் இறுதியில், 'மனிதரால் இது இயலாது. கடவுளால் எல்லாம் இயலும்' என்கிறார். ஆக, இழக்க நாம் தயாராக இருக்கும்போது நாம் மனிதர்கள் என்ற நிலையில், நம் மனிதத்தின் வெறுமையையும், உடைந்த தன்மையையும் கொண்டாடக் கற்றுக்கொள்வோம். கைகளை மூடிக்கொண்டே பிறக்கும் நமக்கு விரித்துக் கொடுப்பதும், இழப்பதும் இறப்பு வரை தொடர் போராட்டமே.


Friday, March 1, 2019

சிறுபிள்ளைகள்

இன்றைய (2 மார்ச் 2019) நற்செய்தி (மாற் 10:13-16)

சிறுபிள்ளைகள்

'எல்லாரும் கடலின் கரையில் நின்று, 'எவ்வளவு தண்ணீர்த் துளிகள்!' என்று வியக்கும்போது, ஞானி, 'எத்தனை பெரிய தண்ணீர்த் துளி!' என்று வியக்கின்றான்' எனப் பதிவு செய்கிறார் கலீல் கிப்ரான்.

கடலை, 'நிறைய தண்ணீர்த் துளிகளின் தொகுப்பு' என்றும் பார்க்கலாம், 'ஒருங்கிணைந்த ஒற்றைத் தண்ணீர்த் துளி' என்றும் பார்க்கலாம். முதல் வகைப் பார்வை பிரித்துப் பார்க்கிறது. இரண்டாவது வகைப் பார்வை இணைத்துப் பார்க்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், சிறுபிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று சிலர் அவரிடம் கொண்டு வருகின்றனர். சீடர்கள் அவர்களை அதட்டுகின்றனர். ஆனால், இயேசு சீடர்கள்மேல் கோபம் கொண்டு அவர்களைக் கடிந்துகொள்கின்றார். மேலும், 'இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார்' எனவும் எச்சரிக்கின்றார்.

சீடர்கள் சிறு பிள்ளைகளை வாழ்க்கைப் பருவத்தின் சிறு துளிகள் என்று எண்ணினார்கள். ஆனால், இயேசுவோ அவர்கள் ஒவ்வொருவரிலும் மானிடத்தின் மொத்த உருவைக் கண்டார். மேலும், 'அவர்கள் எப்படி இருக்கிறார்கள்' என்பதை மையமாக வைத்து சீடர்கள் செயல்பட்டார்கள். ஆனால், 'அவர்கள் எப்படி மாறுவார்கள்' என்பதை மையமாக வைத்து இயேசு செயல்படுகின்றார். சீடர்களின் பார்வை அவர்களின் 'இருத்தலில்' இருந்தது. இயேசுவின் பார்வை குழந்தைகளின் 'மாற்றத்தில்' இருந்தது.

மரத்தின் கனியில் விதையைப் பார்த்தவர்கள் நடுவில், விதையில் மரத்தின் கனியைப் பார்க்கிறார் இயேசு.

இப்படிப் பார்க்கின்ற ஒருவரால்தான் எல்லாரையும் ஏற்றுக்கொள்ள முடியும். அதே போல, இப்படிப் பார்க்கின்ற பார்வைதான் புதுமைக்கு வழிவகுக்கும். எல்லாரும் மார்பிளைக் கற்கள் என்று பார்க்கும்போது, மைக்கேல் ஆஞ்சலோ, அவற்றில் ஒளிந்திருக்கும் 'தாவீது,' 'மோசே,' 'பியத்தா' போன்ற உருவங்களைப் பார்த்தார். மீன்பிடித்துக் கொண்டிருந்த பேதுருவில் தன் திருச்சபையின் தலைவரைப் பார்த்தார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணில் அவருடைய எதிர்காலத்தைப் பார்த்தார். துன்புறுத்தச் சென்ற சவுலில் புறவினத்தாரின் திருத்தூதரைப் பார்த்தார்.

இப்படிப் பார்ப்பவர்கள் தங்களைப் போலவே பிறரை எண்ணுவார்கள். தங்களின் நலம் போல பிறர்நலம் பேணுவார்கள்.

இன்றைய முதல் வாசகமும் (காண். சீஞா 17:1-15), சிறியவர், பெரியவர், ஆண், பெண் என அனைவரிடமும் ஒரே இறைச்சாயல் துலங்குகிறது என்றும், ஒருவரின் விருப்புரிமையே அவரின் பார்வையை கூர்மைப்படுத்தவும், விரிவாக்கவும் செய்கிறது என்றும் சொல்கிறது.

சிறிதிலும் பெரிது பார்க்கும் பார்வை இருந்தால் எத்துணை நலம்!