Monday, August 6, 2018

மனவேதனை

நாளைய (7 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 15:1-2,10-14)

மனவேதனை

நாளைய நற்செய்தி வாசகத்தில், 'உம் சீடர் மூதாதையர் மரபை மீறுவதேன்?' என்ற பரிசேயர்களின் கேள்விக்கு, 'உள்ளே-வெளியே தீட்டு' பற்றிப் பேசி அவர்களின் வாயடைக்கின்றார் இயேசு. இயேசுவின் இவ்வார்த்தைகளைக் கேட்டு பரிசேயர் மனவேதனை அடைகின்றனர். இதை உணர்ந்த சீடர்கள் இயேசுவிடம், 'பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா?' எனக் கேட்கின்றனர். 'ஓ...அப்படியா...ஐ ஆம் வெரி ஸாரி' என்று சொல்லாத இயேசு, 'அவர்கள் குருட்டுவழிகாட்டிகள்' என இன்னும் சாடுகின்றார். எனக்கென்னவோ பரிசேயர்களின் மேல் உள்ள கோபத்தைத் தூண்டிவிடவே சீடர்கள் இப்படிச் சொன்னார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

'நான் என்ன பேசுகிறேன் என்பதற்கு நான் பொறுப்பு. ஆனால் நீ என்ன புரிந்துகொள்கிறாய் என்பதற்கு நான் பொறுப்பல்ல' என்று சொல்கிறார் பெர்னார்ட் ஷா அல்லது சர்ச்சில் அல்லது சே குவேரா அல்லது ஏதோ ஒரு அறிஞர்!

'காயம்பட்ட உணர்வு' என்;பதன் வீரியமான உணர்வே 'மனவேதனை.'

உதாரணத்திற்கு, நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது எனக்கு முன்னால் இருக்கும் ஒருவர், 'டேய்...இவ்வளவு சாப்பிடுற...குறைத்து சாப்பிடுடா' என்று என்னிடம் சொல்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரின் வார்த்தையால் நான் காயப்படுகிறேன். அது காயம். அது ஒரு உடனடி உணர்வு. ஆனால், அந்த நிகழ்வை நான் இரவில் தூங்குமுன் படுத்துக்கொண்டு அசைபோட்டுக்கொண்டு, 'இவன் இப்படிப் பேசிவிட்டானே' என்று நினைத்து கோபம் அல்லது வெறுப்பு அல்லது பயம் கொள்வது 'மனவேதனை.' காயம் கூடக்கூட மனவேதனை கூடுகிறது. பரிசேயர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு இந்த அளவிற்கு மனவேதனை அடைந்திருப்பார்களா என்பது தெரியவில்லை. ஏனெனில் பரிசேயர்கள் இயல்பாகவே யாருடைய வார்த்தைகளையும் கண்டுகொள்ளாதவர்கள். எல்லா வார்த்தைகளுக்கும் தாங்களே பொறுப்பு என எண்ணியவர்கள். ஆக, அவர்கள் எளிதாகக் காயப்படவும் மாட்டார்கள். மனவேதனை அடையவும் மாட்டார்கள். சீடர்களின் வேலைதான் இது. அவர்களைப் பற்றி இயேசுவிடம் போட்டுக்கொடுத்து அவரை இன்னும் கொஞ்சம் திட்ட வைக்கின்றனர். இது அதிகாரம் உள்ள இடங்களில் அடிக்கடி நடக்கும். ஆயருக்கு ஒரு குருவானவரை அல்லது ஒரு பங்குத்தந்தைக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்று மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால் அவரைப் பற்றி ஏதாவது சொல்லி இன்னும் கொஞ்சம் திட்ட வைத்து அதில் இன்புறுவார்கள். சீடர்கள் இப்படி ஒரு காரணத்திற்காகச் செய்திருந்தார்கள் என்றால் அவர்களைப் பார்த்து நாம் பரிதாபம்தான் படவேண்டும்.

'நான் அனுமதித்தால் ஒழிய யாரும் என்னைக் காயப்படுத்த முடியாது' என்பதுதான் நிதர்சனமான உண்மை. பரிசேயர்கள் தங்கள் மூதாதையர் மரபில் தெளிவாக இருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் செய்வது, சொல்வது எல்லாம் சரிதான். ஆக, இன்னொருவர் மாற்றிச் சொன்னார் என்பதற்காக அவர்கள் காயப்படவில்லை. தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளவும் இல்லை.

இந்த உணர்வுநிலையில் நாம் இதை நிறுத்திக்கொள்வோம்:

இன்று யாருடைய சொற்களும், செயல்களும் என்னைக் காயப்படுத்த, எனக்கு மனவேதனை தர நான் அனுமதிக்க மாட்டேன் என முடிவெடுப்போம்.

1 comment:

  1. ' நான் அனுமதித்தால் ஒழிய யாரும் என்னைக் காயப்படுத்த முடியாது.' கேட்மதற்கும்,வாசிப்பதற்கும் நல்ல விஷயமே. ஆனால் இது எப்போதும்,எல்லோருக்கும் சாத்தியமா? சந்தேகமே! பரிசேயர்கள் தங்கள் மூதாதையர் மரபில் தெளிவாக இருந்தார்கள் என்று சொல்லும்போதே அது அவர்கள் உடலோடு,உதிரத்தோடு கலந்திருந்தது; (Genetic) என்று புரிகிறது.ஆனால் எதிராளியின் சோக்க்கதையைக் கேட்ட மாத்திரத்திலேயே கண்கள் பனிக்கும் மென்மையான நம் மக்களுக்கு இது சாத்தியமே இல்லை." யாரும்,யாரின் செயலும் என்னைக்,காயப்படுத்த முடியாது" என்று சொல்ல ஒரு முரட்டு தைரியம் வேண்டும்.ஆனால் அப்படிப்பேசுபவர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? கொஞ்சம் தள்ளி நின்று தானே! ஆனாலும் தந்தையின் எண்ணப்படி " இன்று யாருடைய சொற்களும்,செயல்களும் என்னைக்காயப்படுத்த,எனக்கு மனவேதனை தர நான் அனுமதிக்க மாட்டேன் என முடிவெடுப்போம்" .... நல்ல விஷயம் தானே! முயற்சி செய்து தான் பார்ப்போமே! ஆனால் ஒன்று...அடுத்தவரின் காயத்தின் பின்னனி நாமாக இல்லாமல் இருப்பது நம் கையில் தான் உள்ளது. அதைச் செய்வதில் எந்தத் தயக்கமும் வேண்டாமே! கொஞ்சம் யோசிக்க வைக்கும் விஷயமெனினும் ' முயன்றுதான் பார்ப்போமே!' என்று சிந்திக்க வைக்கும் தந்தைக்கு வாழ்த்துக்கள்!! நன்றிகள்!!!

    ReplyDelete