Tuesday, August 28, 2018

ஏரோதுவின் பிறந்தநாள்

நாளைய (29 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மாற்கு 6:17-29)

ஏரோதுவின் பிறந்தநாள்

நாளை தூய திருமுழுக்கு யோவானின் பாடுகள் விழாவைக் கொண்டாடுகின்றோம்.

'அதிக வருத்தமாக இருக்கும்போது முடிவு எடுக்கக் கூடாது. அதிக மகிழ்ச்சியாக இருக்கும்போது வாக்குறுதி கொடுக்கக் கூடாது' என்பது சொலவடை.

தன் பிறந்தநாளில் ஏரோது கொடுத்த வாக்குறதியால், அவரின் பிறந்தநாள் திருமுழுக்கு யோவானின் இறந்த நாள் ஆகிறது.

மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்யும் இந்நிகழ்வில் வரும் ஏரோது என்னும் கதைமாந்தரைப் பற்றி நாம் சிந்திப்போம்.

மொத்தம் இந்த நிகழ்வில் 4 கதைமாந்தர்கள்: (அ) ஏரோது, (ஆ) பிலிப்பின் முன்னாள் மனைவியும் ஏரோதின் இன்னாள் துணைவியுமான ஏரோதியா, (இ) ஏரோதியாவின் மகள் (பிலிப்புக்குப் பிறந்தவள்) சலோமி, மற்றும் (ஈ) திருமுழுக்கு யோவான். இந்த நான்கு கதைமாந்தர்களில் 'ஏரோது' தவிர மற்ற எல்லாரும் தொடக்கத்தில் எப்படி இருந்தார்களோ, அப்படியே இருக்கின்றார்கள். ஏரோதியா காழ்ப்புணர்வோடு இருக்கிறாள். சலோமி கீழ்ப்படிதல் உணர்வோடு இருக்கிறாள். திருமுழுக்கு யோவான் நீதி உணர்வோடு இருக்கிறார்.

ஆனால், ஏரோது ஒரே நேரத்தில் நல்லவராகவும், கெட்டவராகவும் முன்வைக்கப்படுகின்றார். எப்படி?

'யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து, அஞ்சி, அவருக்கு பாதுகாப்பு அளித்தார்'

'அவர் சொல்லைக் கேட்டு குழப்பமுற்ற போதிலும் அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தார்'

'ஏரோது தன்னைவிட பெரியவர்களுக்கு விருந்து கொடுத்தார்'

'ஏரோது ஆணையிட்டுக் கூறினார்'

'ஏரோது விருந்தினார்'

'ஏரோது யோவானின் தலையைக் கொண்டுவருமாறு பணித்தார்'

ஏரோது இந்த நிகழ்வில் எல்லாரோடும் உறவாடுபவராக இருக்கிறார். ஒரே நேரத்தில் யோவான், ஏரோதியா, சலோமி, பெரியவர்கள், குடிமக்கள் என எல்லாரோடும் பேசுகிறார். அரசனாக இருப்பதன் நன்மை இதுதான்.

ஏரோது யோவானின் கொலையை தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா?

அவன் செய்த தவறு என்ன? அவரைச் சிறையில் அடைத்ததா? அல்லது அதீதமாக ஆணையிட்டதா? அல்லது வாக்குறுதியை நிறைவேற்ற நினைத்ததா?

என்னைப் பொறுத்தவரையில் அவரின் பிரச்சினை என்னவென்றால், 'அவர் எல்லாரையும் திருப்திப்படுத்த விரும்பினார்.' எல்லாரையும் திருப்திப்படுத்துவது எப்போதும் ஆபத்தே.

யோவானை திருப்திப்படுத்த அவரின் வார்த்தைக்குச் செவிமடுக்கிறார்.
ஏரோதியாவை திருப்திப்படுத்த யோவானைச் சிறையில் அடைக்கிறார்.
சலோமியை திருப்திப்படுத்த ஆணையிடுகிறார்.
விருந்தினரைத் திருப்திப்படுத்த யோவானைக் கொல்கின்றார்.

ஆனால், பாவம்...கடைசி வரை அவன் தன்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை. சில நேரங்களில் வாழ்க்கை இப்படித்தான் சோகமாக முடிந்துவிடும். நாம் காலையிலிருந்து மாலைவரை எல்லாரையும் திருப்திப்படுத்த ஓடிக்கொண்டே இருப்போம். சோர்ந்து கட்டிலில் விழும்போது, 'இன்று நான் மகிழ்ச்சியாக இருந்தேனா?' என்று நம்மையே கேட்டால், பதில், பெரும்பாலும், 'இல்லை' என்றே இருக்கும்.

அடுத்தவரைத் திருப்திப்படுத்த ஏன் இந்த ஓட்டம்?

யாவரையும் திருப்திப்படுத்த தேவையில்லை என்றும், உன் மனதுக்கு சரி என்பதை துணிந்து செய் என்றும் சொல்கிறார் யோவான்.

யாரையும் திருப்திப்படுத்த தேவையில்லாத யோவான் கொல்லப்படுகின்றார்.
எல்லாரையும் திருப்திப்படுத்த நினைத்த ஏரோதும் அத்தோடு இறந்துவிடுகின்றார்.

1 comment:

  1. சில குடும்பங்களும்,பல ஸ்தாபனங்களும் முன்னேறத் தடையாயிருப்பது சரியான நேரங்களில்,சரியான முடிவெடுக்க முடியாத குடும்ப மற்றும் ஸ்தாபனத்தின் தலைவர்கள் தான்.ஒரு முக்கியமான முடிவு எடுக்கையில் நாலுபேரைக் கலந்தாலோசிப்பது அவசியமே எனினும், முடிவு என்னவோ தலைவருடையதாகவே இருக்கவேண்டும் சுற்றியிருப்பவர்களின் அதிருப்தியையும் மீறி. இன்றையப் பதிவில் வரும் ஏரோது செய்ய மறந்தது இதுதான்.அவன் சலோமிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்ததில் தப்பில்லை தான்.ஆனால் யாருக்காக யாரைப்பலியிடுவது என்பதில் ஒரு வரைமுறை வேண்டாமா? எல்லோரையும் திருப்தி படுத்த எண்ணி ஒரு நீதிமானின் உயிரை மட்டுமன்றித் தன் உயிரையும் காவு கொடுத்த ஏரோது நமக்கு ஒரு பாடமாக அமைவாராக! யோசித்து முடிவெடுப்போம்; எடுத்த முடிவில் உறுதி காப்போம்.ஏரோதைப் பல பரிணாமங்களில் அலசி ஆராய்ந்து, கொடுத்த ஒரு நல்ல பதிவிற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete