Sunday, August 26, 2018

வழிகாட்டிகள்

நாளைய (27 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (2 தெச 1:1-5,11-12)

வழிகாட்டிகள்

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர்களின் வெளிவேடத்தைக் கண்டிக்கிறார்.

'விண்ணக வாயிலுக்குள் ... நீங்கள் நுழைவதில்லை. நுழைவோரையும் விடுவதில்லை.'

- இப்படித்தான் இயேசு அவர்களை சாடுகின்றார்.

நாளை தூய மோனிக்காவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இவரின் மகன்தான் தூய அகுஸ்தினார்.

மோனிக்காவின் வாழ்வில் மேற்காணும் வார்த்தைகள் மிகவும் மாறுபடுகின்றன:

'நான் நுழையாவிட்டாலும் பரவாயில்லை. என் மகன் விண்ணக வாயிலுக்குள் நுழைந்தால் போதும்.'

ஆக, தன் மகன் அகுஸ்தினாருக்கு வழிகாட்டியாக இருந்தவர் தூய மோனிக்கா.

இயேசு பரிசேயர்களை இரண்டு நிலைகளில் சாடுகின்றார்:

அ. 'சமயத்திற்கு விரட்டி விரட்டி ஆள் சேர்க்கிறார்கள். ஆனால், ஆள்கள் சேர்ந்தவுடன் அவர்களைக் கண்டுகொள்வதில்லை'

- இவ்வாறாக, தாங்கள் தேடிச் சென்றவர்களை பாதியில் விட்டுவிடுகின்றனர். மீதி வழி செல்ல மறுத்துவிடுகின்றனர்.

ஆ. 'குருட்டு வழிகாட்டிகளாக இருக்கின்றனர்'

- அதாவது, தங்களுக்கே சரியான போதனை தெரியாத நிலையில், தவறான போதனையால் மற்றவர்களை வழிநடத்தி வழிபிறழச் செய்கின்றனர்.

நாளைய நாயகி தூய மோனிக்கா மேற்காணும் பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் முற்றிலும் எதிர்மாறாக இருக்கிறார்.

ஏனெனில், அவர் தன் மகனைப் பாதி வழியில் விடாமல், இறுதிவரை - அவர் மனமாற்றம் அடையும் வரை - அவருடன் பயணம் செய்கிறார்.

மேலும், தன் மகன் மேனிக்கிய சித்தாந்தத்தில் மூழ்கி தவறான வழியில் சென்றபோது, உண்மையான தன் மறையின் பக்கம் அவரைத் திருப்புகின்றார்.

ஆக, மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர் போல படித்தவராக மோனிக்கா இல்லை என்றாலும், மிகச் சாதாரணமான தன் நிலையில் சரியானதைச் செய்கிறார் இவர்.

இதையே நாளைய முதல் வாசகத்தில் தூய பவுல் தெசலோனிக்கிய நகருக்குத் தான் எழுதும் திருமடலில், அவர்களின் சின்னஞ்சிறு செயல்களைப் பாராட்டுகின்றார்.

ஆக, சின்னஞ்சிறிய நிகழ்வுகளில், சின்னஞ்சிறு அக்கறைகளில், சின்னஞ்சிறு கண்ணீர்த்துளிகளில்தாம் வாழ்வின் பெரியவை அடங்கியிருக்கின்றன.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் தூய மோனிக்கா.

மிக மோசமான உதாரணம், மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும்.


1 comment:

  1. "தூய மோனிக்கா"... தன் கண்ணீராலேயே காவியம் படைத்தவர்; அன்னையருக்கெல்லாம் பாதுகாவலி என்றால் மிகையில்லை; தங்களைச் சார்ந்தவர்களைப் பாதிவழியில் தவிக்கவிடும் மாந்தர் மத்தியில்" தன் மகன் ஒரு நாள் மாறுவான்" எனும் நம்பிக்கையிலேயே மீதி நாட்களைக் கழித்தவர். என் நெஞ்சுக்கு மிக,மிக நெருக்கமானவர்.அழகாகச் சொல்கிறார் தந்தை..." சின்னஞ்சிறிய நிகழ்வுகளில்,சின்னஞ்சிறு அக்கறைகளில்,சின்னஞ்சிறு கண்ணீர்த்துளிகளில்தாம் வாழ்வின் பெரியவை அடங்கியிருக்கின்றன"... என்று.தன்னைச் சிறியவளாக நினைத்து வாழ்ந்த தாய் மோனிக்காவும்,தான் இறைவனிடமிருந்து தள்ளியிருப்பதாகச் சொல்லிச்சொல்லியே இறைவனுக்கு மிக நெருக்கமாகிப் போன புனித அகுஸ்தினாரும் நாம் நிமிர்ந்து பார்க்க வேண்டிய துருவ நட்சத்திரங்கள்.அழகான கவிதை படைத்த தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete