Monday, August 20, 2018

நானே கடவுள்

நாளைய (21 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 19:23-30)

நானே கடவுள்

கடவுளைப் பற்றிய புரிதலில் கிழக்கத்தேய புரிதலுக்கும், மேற்கத்தேய புரிதலுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இதுதான்: மேற்கு ஒருபோதும் மனிதர்களைக் கடவுள் என்று சொல்வதில்லை. 'கடவுளின் பிள்ளைகள்,' 'கடவுளைப் போன்றவர்கள்' என்றெல்லாம் சொல்லுமே தவிர, 'நீங்களே கடவுள்' என்று சொல்வதில்லை. ஆனால், கிழக்கில், குறிப்பாக இந்து மரபில் உள்ள மகாவாக்யா - தத்வமசி - நீயே அது அல்லது நீயே அவர் - ஆத்மனே பிரம்மன் என்று சொல்கிறது.

'நானே கடவுள்' என்று இந்து மதத்தில் உள்ள ஒருவர் சொல்ல முடியும். ஆனால், இசுலாம், கிறிஸ்தவம், யூதம் போன்ற மதத்தில் உள்ளவர் சொன்னால் அது ஆணவம் என்று சொல்கிறது நாளைய முதல் வாசகம் (காண். எசே 28:1-10). ஆண்டவராகிய கடவுள் எசேக்கியேல் வழியாக இஸ்ராயேல் மக்களைக் கடிந்துகொள்ளும் நிகழ்வை வாசிக்கின்றோம். அங்கே, 'உன் இதயத்தின் செருக்கில், 'நானே கடவுள்' என்று சொல்கின்றாய். ஆனால், நீ கடவுளைப் போல அறிவாளியாக இருக்க எண்ணிடினும், நீ கடவுள் அல்ல' என்கிறார். ஆக, அறிவு அல்லது அறிதல் என்பதை வைத்து ஒருவரின் கடவுள் தன்மையை நிர்ணயிக்கிறது எசேக்கியேல் நூல். இதே 'நன்மை தீமை அறிதல்' பிரச்சினைதான் ஆதாம்-ஏவாள் நிகழ்விலும் நடக்கிறது. அங்கேயும் அவர்கள் கடவுளைப் போல (கடவுளாக) இருக்க முயற்சி செய்கின்றனர். நாளை என்ன நடக்கும் என்பதை மனிதர்கள் அறிய இயலாதவரை மனிதர்கள் தங்களை எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாக (கடவுளர்களாக) காட்டிக்கொள்ள முடியாது என்பது நாளைய முதல் வாசகத்தின் வாதம்.

நாளைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் ஐடியா கேட்டு வந்த செல்வந்த இளவல் சோகமாகத் தன் வழி செல்ல, இயேசு சீடரிடம் செல்வந்தர் மற்றும் செல்வம் பற்றிப் பேசுகின்றார். விண்ணரசில் நுழையக்கூடியவரைப் பற்றிய கேள்வியில், 'அப்படியானால் யார்தாம் மீட்பு பெற முடியும்?' என பேதுரு கேட்க, இயேசு, 'மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்' என்கிறார்.

இயேசு இங்கே குண்டக்க மண்டக்க பேசுவதுபோல தெரிகிறது.

யார் மீட்பு பெற முடியும்?

மனிதரால் முடியாதாம். ஆனால் கடவுள் முடியுமாம்.

'கடவுளுக்கு எதுக்கு மீட்பு?' என்பது விளங்கவில்லை!!!

ஒருவேளை இதைப் புரிந்துகொள்ள 'கடவுள்போல எண்ண வேண்டும்' என்று இயேசு சொன்னால்கூட ஏற்றுக்;கொள்ளலாம்.

தொடர்ந்து, பேதுரு, 'எங்களுக்கு என்ன கிடைக்கும்? நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டோமே!' என்று கேட்க, இயேசு, 'விட்டுவிட்ட அனைத்தையும் நூறு மடங்கு பெறுவீர்கள்' என்று சொல்கின்றார். இயேசுவின் லிஸ்டில் 'மனைவி' இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.ஆனால், பிள்ளைகளை விட்டுவிடலாம் என்கிறார்! 'மனைவி' இல்லாமல் பிள்ளைகள் எப்படி?

நிற்க.

நாளைய முதல் வாசகமும், இரண்டாம் வாசகமும் சொல்வது 'தாழ்ச்சி.' எப்படி?

எருசலேம் நகரின் ஊசியின் காது எனப்படும் இடத்தில் ஒட்டகம் நுழைய வேண்டுமெனில், அந்த ஒட்டகம் தன்னையே சுருக்கி, உருக்கி, ஊர்ந்து செல்லத் தேவையில்லை. மாறாக, ஒட்டகத்தின் மேலுள்ள சுமையை இறக்கினால்போதும். ஒட்டகம் நுழைந்துவிடும். ஆக, ஒட்டகம் வேறு. சுமை வேறு. தன்மேல் வைர மூட்டையே இருந்தாலும் அது தனதல்ல என எந்த ஒட்டகம் நினைக்கிறதோ அந்த ஒட்டகம் மட்டுமே அந்த நுழைவாயிலில் நுழைய முடியும். ஆக, அறிவு, செல்வம், இழப்பு, தியாகம் என எதனுடன் நாம் நம்மையே ஒன்றிணைத்துக்கொள்ள முடியாது. அப்படி ஒன்றிணையாமல் இருப்பது மீட்பு. எல்லா ஒன்றிப்புக்களிலிருந்து விடுபடுவதே கடவுள் நிலை. அந்த நிலையைத் தேர்ந்துகொள்பவருக்கு சுமை நீங்கும்.


1 comment:

  1. இதயத்தின் செருக்கு லூசிஃபேரை எந்த நிலைக்குத் தள்ளியது என்று எண்ணிப்பார்த்தால் " கடவுளாக ஆகவில்லை எனினும் பரவாயில்லை; நாம் இருக்குமிடத்திலேயே இருப்போம்" என்று நினைக்கத்தோன்றும்." தாழ்ச்சி" யின் மேன்மை சொல்லும் தந்தையின் வரிகள்..." பொன்,பொருள்,பதவி,பட்டம் என்று இன்ன பிற சுமைகளை எவனால் இறக்கி வைக்க முடிகிறதோ,அவனே விண்ணக வாழ்விற்குள் நுழைய முடியும்; கடவுள் நிலையை அடைய முடியும்" என்று சொல்கின்றன.இந்நாட்களில் தந்தையிடமிருந்து எண்ணற்கரிய எண்ணங்களும்,கருத்துக்களும் அருவியாய் வந்து விழுகின்றன. " பொன் வைக்குமிடத்தில் பூவையேனும் வைக்க வேண்டும்" என்பது பழமொழி. பொன்னளவு இல்லையெனினும் பூவளவாவது தந்தையின் கருத்துக்களை உள்வாங்கி பின் வாழ்வாக்கலாமே என்கிறது என் மனது. தந்தைக்கு என் வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!

    ReplyDelete