Friday, August 17, 2018

அவர்களை அதட்டினர்

நாளைய (18 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 19:13-15)

அவர்களை அதட்டினர்

நாளைய நற்செய்தி வாசகத்தில் சிறு குழந்தைகளைத் தொட்டு இயேசு ஆசி வழங்கும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

அப்படி வரும் குழந்தைகளை சீடர்கள் அதட்டுகின்றனர்.

சீடர்கள் சிறுகுழந்தைகளை அதட்டியது ஏன்?

சின்ன வயசுல நாங்க இருந்த வீட்டிற்கு அருகில் பால்ராஜ் நாயக்கர் வீடு இருந்தது. அவருடைய ஒரே மகன் விஜய் ஆனந்த் என்னுடன் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். அவர்கள் வீட்டில் நிறைய சொத்துக்கள் இருந்ததால் அப்பையனை ராஜாக்கண்ணு என்றே அழைத்தார்கள். இன்றும் நான் ராஜாக்கண்ணு என்றே அவரை அழைக்கிறேன். விடுமுறை நாள்களில் நான் அங்கு சென்று படிப்பேன். ராஜாக்கண்ணுக்கு ஆங்கிலமும், கணிதமும் சொல்லிக் கொடுப்பேன். ராஜாக்கண்ணு பயன்படுத்தி காதறுந்த பள்ளிப் பைகளைத்தான் நான் மூன்று வருடங்கள் ஊக்கு மாட்டி பயன்படுத்தினேன். என்னுடன் கடற்கரை என்ற பையனும் எப்போவாவது ராஜாக்கண்ணு வீட்டிற்கு படிக்க வருவார். ஒருநாள் வயல்காட்டு பிரச்சினையில் கடற்கரை அம்மாவுக்கும், ராஜாக்கண்ணு அப்பாவுக்கும் சண்டை வந்துவிட்டது. இது எங்களுக்குத் தெரியாது. வழக்கம்போல நாங்கள் மாலையில் ராஜாக்கண்ணு வீட்டிற்குப் படிக்கப்போக, ராஜாக்கண்ணுவின் பாட்டி என்னை மட்டும் அனுமதித்துவிட்டு, கடற்கரையை அதட்டி வெளியே அனுப்பிவிட்டார். அவருடைய அதட்டுலுக்குக் காரணம் பின்தான் தெரிந்தது. ஆக, அம்மாவின் சண்டைக்கு மகன் அதட்டப்பட்டார். தாயின் சண்டைக்கு குழந்தை அதட்டப்பட்டது.

இதுதான் இன்றைய நற்செய்தியிலும் நடக்கிறது என நினைக்கிறேன். பெரியவர்கள் தங்களுக்குள் உள்ள கோபத்தை வடித்துவிடும் வாய்க்கால்கள்தாம் குழந்தைகள். சீடர்களுக்கும் அந்த ஊர் பெரியவர்களுக்கும் உள்ள பிரச்சினையை அல்லது சண்டையினால் வந்த கோபத்தை குழந்தைகள் மேல் காட்டியிருக்கலாம்.

மேலும், குழந்தைகள் நம்மைத் திருப்பி அடிக்க முடியாது என்ற காரணத்திற்காகத்தான் நாம் பல நேரங்களில் அவர்களை அடிக்கிறோம். இல்லையா?

அலுவலகத்தில் உள்ள கோபத்தை தந்தை அம்மாவிடம் காட்டுவார். அம்மா அந்தக் கோபத்தை குழந்தையிடம் காட்டுவார். குழந்தை அந்தக் கோபத்தை பொம்மையிடம் காட்டும். இவ்வாறாக, அதட்டுதல் அல்லது கோபித்தல் எப்போதும் மேலிருந்து கீழ்நோக்கியே பயணம் செய்கிறது.

நிற்க.

இப்படி பயணம் செய்யாமல் அவரவருக்குரியரை அவரவருக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது நாளைய முதல் வாசகம் (எசே 18:1-10,13,30-32). நாளைய முதல்வாசகத்தில் வரும் சொலவடை நமக்கு மிகவும் பரிச்சயமானது:

'புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்'

இதையொத்து தமிழ்மரபில், 'தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல நெறி கட்டுமாம்' என்ற சொலவடை உண்டு.

அவரவர் செய்த நன்மையும், தீமையும் அவரவருக்கே என்பதும், ஒருவரின் செயலுக்கு மற்றவரைக் காரணம் சொல்லக்கூடாது என்பதும் இச்சொலவடைகளின் பொருள்.

நான் எல்லீஸ் நகரில் அருள்பணியாளராக இருந்தபோது, 'குடும்பத்தின் பாவமும் சாபமும் நீங்க' என்ற திருப்பலி கருத்து ஒன்று வந்தது. திருப்பலி முடிவில் அதைக் கொடுத்தவர் என்னிடம் வந்து, 'நம் பெற்றோர்கள், பெற்றோர்கள் செய்த நன்மை, தீமை தலைமுறை தலைமுறையாய் நம்மைப் பாதிக்கும்' என்றார். இதையே நாம் இந்து மரபில் 'கர்மா' அல்லது 'வினைப்பயன்' என்கிறோம்.

விவிலியத்தில் இதற்கு ஏற்புடைய மற்றும் மாறான கருத்து உள்ளது.

தொநூ 12ல் ஆபிரகாமிற்கு ஆசீ வழங்கும் கடவுள், 'உன்னில் உன் தலைமுறை அனைத்தும் ஆசி பெறும்' என்கிறார். ஆக, ஆபிரகாம் தன் நம்பிக்கையின் வழியாக தேடிய புண்ணியம் வாழையடி வாழையாக அவருடைய எல்லாத் தலைமுறைகளுக்கும் கிடைக்கும். இது ஏற்புடைய பதில்.

ஆனால், நாளைய முதல் வாசகத்தில் எதிர்மறையான பதிலைப் பார்க்கிறோம்: 'பெற்றோர் நல்லது செய்தால் அவர்களின் பலன் அவர்களுக்கு. பிள்ளைகள் கெட்டது செய்தால் அவர்களின் தண்டனை அவர்களுக்கே.' முன்னவர்களின் நற்செயல்கள் பின்னவர்களின் பாவத்திற்குக் கழுவாய் ஆக முடியாது. அவரவர் அவரவருக்குரிய பரிசையும், தண்டனையும் பெற வேண்டும்.

இவற்றில் எதை நாம் ஏற்றுக்கொள்வது?

வினைப்பயனைப் பொறுத்த வரையில் அது ஒரு ஸ்கூட்டர் போல. ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு வந்து ஒரு கட்டத்தில் என்ஜின் ஆஃப் செய்தால், அது தொடர்ந்து கொஞ்ச தூரம் ஓடும். என் அப்பா ஓட்டிய ஸ்கூட்டர் அவரின் இறப்பில் ஆஃப் செய்யப்படுகிறது என்றால், அது கொஞ்ச தூரம் என்னில் தொடர்ந்து ஓடும். அப்புறம் நின்றுவிடும். பின் நான்தான் அதை மறுபடி ஸ்டார்ட் செய்து ஓட்ட வேண்டும். என் இறப்பில் என்ஜின் நிற்கும். ஆனாலும் வண்டி கொஞ்ச தூரம் ஓடும்.

ஆனால், அந்த ஓட்டம் யாருக்கு?

2 comments:

  1. நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது ஸ்டீல் பேனா என்று ஒன்றைப் பார்த்திருக்கிறேன்.எழுத்த்தெரியாதவர்கள் கூட வெறும் மையைத்தொட்டு கையின் அழுத்தம் அத்தனையையும் கொடுத்து காகிதத்தில் ஏதோ கிறுக்குவார்களாம்.தங்கள் மனத்தில் இருந்த அத்தனையையும் கொட்டிவிட்ட நிம்மதி அவர்களுக்கு.அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நான் தந்தையின் உருவில் பார்க்கிறேன்.தான் பார்த்தது,கேட்டது,அனுபவித்தது.....அத்தனையையும் கொட்டித் தான் சமைக்கும் பதிவிற்கு சுவை சேர்க்கிறார்; உயிரோட்டம் கொடுக்கிறார்.அப்படிப்பட்ட பதிவு ஒன்றுதான் இன்றையதும்.தனது இளம் பிராயத்து நண்பர்களிடம் கொண்ட நட்பிலிருந்து...எல்லிஸ் நகரில் அருட்பணியாளரான அவரிடம் யாரோ கொடுத்த பூசைக்கருத்திலிருந்து ஒன்றையும் விட்டுவைக்கவில்லை.எல்லாவற்றிலும் ஏதோ நேற்று நடந்தது போல அத்தனை அழுத்தம். " முன்னவர்கள் செய்த நற்செயல்கள்
    பின்னவர்களின் பாவத்திற்கு கழுவாயாக முடியாது; அவரவர் அவரவருக்குரிய பரிசையும்,தண்டனையையும் பெற வேண்டும்." ஒத்துக் கொள்ள மனம் கொஞ்சம் சண்டித்தனம் செய்கிறது.ஏனெனில் "ஆபிரகாமிற்கு இறைவன் வழங்கிய ஆசீர் இன்று வரை..ஏன் இன்னும் வருங்காலங்களுக்கும் பாயும்" என்று நம்பும் தலைமுறையினர் நாம்.வினைப்பயனைப் பொறுத்த வரையில் அது ஒரு ஸ்கூட்டர்; அப்பா ஓட்டிய ஸ்கூட்டர் அவர் இறப்பிற்குப்பின்னும் அவர் மகனில் கொஞ்சம் ஓடும் என்பதெல்லாம் சரியே! ஆனாலும் "என் இறப்பில் என்ஜின் நிற்கும்....ஆனால் அந்த ஓட்டம் யாருக்கு?"
    மனத்தைத் துளைக்கும் வரிகள்...ஆனாலும் நெஞ்சத்தில் ஊசியாக இறக்கிய ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete
  2. தந்தையே,வணக்கம்.வாழ்க நலம்.

    நீங்கள்தான் உங்களை அருள் பணியாளர் என்கிறீர்கள்.பிலோமினா ஆரோக்கியசாமி அவர்கள் இரண்டு முறை தந்தை என்று அழைத்திருக்கிறார்.நானும் மகனை ஒத்த உங்களை தந்தை என்றுதான் அழைக்கிறேன்.தம்மினும் தம் மக்கள் அறிவார்ந்த பக்திச் செறிவில் பயணிக்கும் போது மகிழ்கிறேன்....எனவே நீங்கள் ஓட்டிய பைக் எங்களைப் போன்ற பலரால் ஓடும்.பலருக்கும் உங்கள் ஆசியில் பலனும் கிட்டும்.ஒருவேளை-ஒருவேளை தான் - சாபம் பெற்றால் நீங்கள் குரு என்பதால் உங்களையே சாரும் என்று நம்புகிறேன்.ஆதலின்,மன்னிப்புக் கூட பரிகாரம் செய்யும் போதுதான் குற்ற உணர்ச்சி முற்றாக மறையும்.(இதில் திரு அவைக் கோட்பாட்டை தொடர்பு படுத்த வேண்டாம்).
    வாழ்வியல் சவால்களைச் சந்திக்கும் உங்கள் மறையுரையின் மாபெரும் சுவைஞன் நான்.ஒருவேளை நீங்கள் எழுதுவது உங்களுக்கு மறந்து விட்டால் நான் நினைவு படுத்துவேன்!!!

    நூலாகப் பதிப்பியுங்கள்.செபியுங்கள் தொடர்ந்து....மரியே வாழ்க!

    ReplyDelete