Tuesday, August 14, 2018

விண்ணேற்பும் விடுதலையும்

'மனிதன் கட்டின்மையோடு பிறக்கிறான். பிறந்தவுடன் எல்லாக் கட்டுக்களுக்கும் ஆளாகிறான்' என்று 'சமூக ஒப்பந்தம்' என்னும் தன் நூலைத் தொடங்குகிறார் ரூசோ. மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தை இந்தச் சமூகத்திற்கு விற்றுத்தான் தங்கள் வாழ்வை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பது இவரின் எண்ணம்.

நான் பிறந்தவுடன் - என் குடும்பம், என் நாடு, என் மொழி, என் சமயம், என் இனம், என் கலாச்சாரம், என் உணவுப் பழக்கம், என் ஆதார், என் கடவுச்சீட்டு, என் பான் எண், என் வாகன எண், என் ஓட்டுரிம எண் என என்னைக் கேட்காமலே நான் கட்டுக்களால் கட்டப்படுகிறேன். நான் விரும்பியும் இந்தக் கட்டுக்களை என்னால் உடைக்க முடியாது. உடைக்க நினைத்தாலும் நான் ஒரு கட்டிலிருந்து இன்னொரு கட்டிற்கு மாற்றப்படுவேன். 'இந்தியன்' என்ற என் தேசிய அடையாளம் பிடிக்கவில்லை என்று நான் இத்தாலியில் குடியேறினால் நான் 'இத்தாலியன்' என்ற கட்டைக் கட்டியாக வேண்டும். கட்டின்மை சாத்தியமே அன்று.

அப்படி என்றால், கட்டுக்களோடு இருக்கும், இயங்கும், இறக்கும் எனக்கு கட்டின்மையே கிடையாதா?

உண்டு. கட்டுக்களுக்குள் கட்டின்மை.

அதாவது, நான் ஒரு மாடு என வைத்துக்கொள்வோம். அந்த மாட்டை ஒரு கயிறு கட்டி கம்பத்தோடு இணைத்திருக்கிறது. அந்தக் கயிறு தரும் கட்டின்மைக்குள் நான் இரை தேடிக்கொள்ளலாம். இன்பம் தேடிக்கொள்ளலாம். அவ்வளவுதான்.

ஆனால், இந்தக் கட்டிற்கு நான் என்னையே சரணாகதி ஆக்க வேண்டும்.

நாளை நாம் கொண்டாடுகின்ற விண்ணேற்படைந்த அன்னை மரியாள் சொல்லும் வாழ்க்கைப் பாடமும் இதுதான்.

நாசரேத்தில் பிறந்தவர், யூதர், பெண், திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றவர் என இவருக்கு நிறைய கட்டுக்கள் இருந்தாலும், அந்தக் கட்டுக்களுக்குள் இறைத்திட்டத்திற்கு - கட்டுக்கள் இல்லாதவர்க்கு - 'ஆம்' என்று சொன்னதால் கட்டுக்களை வென்றவர் ஆகிறார். பாவம் இல்லாத அவருடைய உடலை இறப்பும் தன் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை.

ஆங்கிலேயரிடமிருந்து 72 ஆண்டுகளுக்கு முன் நாம் கட்டின்மை அடைந்தோம். ஆனால், இன்று நான் என்னையே அநீதி என்னும் கட்டுக்களுக்குக் கையளிக்காமல், இக்கட்டின்மை தரும் வாய்ப்பைப் பயன்படுத்தி என் கட்டுக்களை நீக்கி, பிறர் கட்டுக்களைகத் தளர்த்த உதவினால், என் விடுதலையும் விண்ணேற்பே.

அனைவருக்கும் விடுதலை மற்றும் விண்ணேற்பு பெருவிழா வாழ்த்துக்கள்.

2 comments:

  1. நான் அடிக்கடி எண்ணுவதுண்டு.தந்தை 'கட்டின்மை' ,'கட்டின்மை' என்று ஒரு வார்த்தையை உபயோகப்படுத்துகிறாரே...அதன் அர்த்தம் தான் என்னவென்று.இன்றுதான் புரிந்தது.. இந்த வார்த்தையின் முழு அர்த்தமும்."நசரேத்தில் பிறந்த மரியாளுக்கு திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றவர்" என்ற கட்டுக்கள் இருந்தாலும்,அந்தக்கட்டுகளுக்குள்- இறைத்திட்டத்திற்கு கட்டுக்கள் இல்லாதவர்க்கு- 'ஆம் ' என்று சொன்னதால் கட்டுக்களை வென்றவர் ஆகிறார்.....பாவம் எனும் கட்டு இல்லாததால், இறப்பு எனும் கட்டும் இல்லை.சரியான விளக்கம்...அதனால் சரியான புரிதல்.ஆனால் நமக்கு இருக்கின்றன எண்ணிலடங்கா கட்டுக்கள்.... ஜாதி,மதம், நிறம்,இல்லாமை,அறியாமை, அடக்குமுறை,ஒடுக்குமுறை போன்றவை.ஆங்கிலேயன் கொடுத்தது சுதந்திரமல்ல... என்று இந்தக் கட்டுக்கள் எனும் கூண்டிலிருந்து வண்ணத்துப்பூச்சிகளாய் வட்டமடிக்கிறோமோ அதுவே உண்மையான விண்ணேற்பு மட்டுமல்ல.... விடுதலையும் கூட.காலத்திற்கேற்ற ...நேரத்திற்கேற்ற பள்ளிகளில் சுதந்திரத் தினத்திற்கென்று தரும் ஒரு இனிப்பு போன்றது இன்றையைப்பதிவு. சுவைப்போம்...விண்ணேற்பின் காற்றை..விடுதலையின் காற்றை சுவாசிப்போம்.
    தந்தைக்கும்,மற்றும் அனைவருக்கும் இரட்டைத் திருவிழா வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. விடுதலை மற்றும் விண்ணேற்பு பெருவிழா வாழ்த்துக்கள்.

    ReplyDelete