Friday, March 9, 2018

ஏற்புடையவராய்!

நாளைய (10 மார்ச் 2018) நற்செய்தி (லூக் 18:9-14)

ஏற்புடையவராய்!

நாளைய நற்செய்தி வாசகத்திற்கு இயேசு ஒரு முன்னுரை கொடுக்கின்றார்: 'தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு கூறிய உவமை.' இதற்கு முந்தைய உவமையிலும் இரண்டு கதைமாந்தர்கள் (நேர்மையற்ற நடுவன் - கைம்பெண்). இன்றைய உவமையிலும் இரண்டு கதைமாந்தர்கள் (பரிசேயர் - வரிதண்டுபவர்). முந்தைய கதைமாந்தர்கள் வீட்டில் சந்தித்துக் கொண்டனர். இன்றைய கதைமாந்தர்கள் கோவிலில் நின்றுகொண்டிருக்கின்றனர்.

இயேசுவின் சமகாலத்துச் சமுதாயத்தில் பரிசேயர்கள் அவர்களின் தவமுயற்சிகளுக்காக அதிகமாக பாராட்டப்பெற்றவர்கள். கோவிலுக்கு வரும் பரிசேயர் கடவுளின் முன்னிலையில் நிற்கின்றார். 'நின்றுகொண்டு பேசுவது' என்பது மரியாதையைக் குறிக்கிறது. நின்றதோடு மட்டுமல்லாமல் இறைவேண்டல் செய்கின்றார் பரிசேயர். அவரின் இறைவேண்டல் மூன்று சொற்றொடர்களாக இருக்கின்றது:

அ. நான் அவன்-அவள்-அது போல் இல்லாததற்காக நன்றி கூறுகின்றேன்.
ஆ. வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறேன்.
இ. என் வருவாயில் பத்தில் ஒரு பங்கைக் கொடுக்கிறேன்.

பரிசேயர் சொல்லும் நன்றி எதிர்மறையாகவும், ஒப்பீடு நிறைந்ததாகவும் இருக்கிறது. அதாவது, மற்றவர்களுக்கு எதிர்மறையான உருவத்தைக் கொடுத்து தான் நேர்முகமாக ஒளிர நினைப்பது. அதாவது, நான் வெள்ளை என்று காட்டுவதற்கு அடுத்தவர்களை கறுப்பாக்கிவிடுவது. 'கொள்ளையர் போலவும், நேர்மையற்றோர், விபச்சாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ, இந்த வரிதண்டுபவரைப் போலவோ' என சொல்கின்றார். 'கொள்ளையர்' என்பவர் 'அடுத்தவருடையவதும் தன்னுடையது' என நினைப்பவர்கள். 'நேர்மையற்றோர்' என்பவர் 'இரண்டு அளவுகோல்களை வைத்திருப்பவர்'. 'விபச்சாரர்' என்பவர் 'பிரமாணிக்கம் தவறுபவர்கள்.' 'வரிதண்டுபவர்கள்' என்பவர் 'மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்.' 'நான் அவர்களைப் போல இல்லாததற்காக நன்றி சொல்கிறேன்' என்று பரிசேயர் சொல்வது அந்த மனிதர்களைவிட தான் மேன்மையானவர் என்றும், இந்த மேன்மையான நிலையை தானே தன் நற்செயல்களால் சம்பாதித்துக் கொண்டதாகவும் பெருமைப்பட்டுக்கொள்கின்றார். தனக்குப் பின்னால் நிற்கும் வரிதண்டுபவரையும் அவர் பார்க்கின்றார் என்றால், அவரின் செபம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவே இருந்திருக்கிறது. 'என்னை மற்றவர்கள் பார்க்கிறார்களா? அடுத்தவர்கள் என்னை எப்படிப் பார்க்கிறார்கள்?' என்ற நிலையில்தான் அவரின் மனநிலை இருக்கின்றது.

இதே நேரத்தில் கோவிலுக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் வரிதண்டுபவர் கடவுளை ஏறெடுக்கவும் துணியாமல், 'கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்!' என்கின்றார்.

இரண்டாம் கதைமாந்தரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்புகிறார் என முடிக்கின்றார் இயேசு.

அதாவது, நான் மற்ற மனிதர்களுக்கு ஏற்புடையவராக இருப்பதை விட, கடவுளுக்கு ஏற்புடையவராக இருக்கின்றேனா என்பதுதான் உவமை முன் வைக்கும் கேள்வி.

மனிதர்களுக்கு முன் ஏற்புடையவராக நற்செயல்கள் நிறையச் செய்ய அவசியம்.

ஆனால், கடவுள்முன் ஏற்புடையவராக ஒருவர் தன்னையே அறிந்தால் போதுமானது. தன்னையே அறிந்து கொண்ட ஒருவர், தன்னறிவு என்னும் ஞானம் பெற்ற ஒருவர் எந்நேரமும் தன் மதிப்பீடுகளிலும், நற்செயல்களிலும் பெருமை கொள்ள மாட்டார். மாறாக, தன்னையும், தன் இருப்பையும் கடவுளின் கொடை என்றே உணர்வார்.

ஆக, ஒருவர் நேர்மையாளர் என்பது அவரின் நற்செயல்களில் அல்ல. மாறாக, அவர் கடவுளுக்கு ஏற்புடையவரா என்பதில்தான் அடங்கியிருக்கிறது.

அப்படி என்றால், நாம் நற்செயல்கள் செய்யத் தேவையில்லையா? நல்லவராக இருக்கத் தேவையில்லையா?

நற்செயல்கள் செய்யலாம். நல்லவராக இருக்கலாம். ஆனால், அந்த நன்மைத்தனம் அடுத்தவர்களை அளக்கும் அளவுகோல்களாக மாறிவிடக் கூடாது.

2 comments:

  1. Yesu super .Take care. Good night

    ReplyDelete
  2. எதிர்மறையாகவும்,ஒப்பீடு நிறைந்ததாகவும் இருக்கும் செபத்துக்கு சொந்தக்காரரான பரிசேயன்; மற்றும் கண்களை ஏறெடுத்தும் பர்க்க இயலாமல் " ஆண்டவரே! பாவியான என் மீது இரங்கும்" என்று கூனிக்குறுகி நிற்கும் வரிதண்டுபவன்....இவர்களில் நான் யாரென என்னைக்கேட்க வைக்கும் ஒரு பதிவு.நான் யாருக்கு ஏற்புடையவராக இருக்கிறேன்... இறைவனுக்கா? மனிதருக்கா? நான் என்னையே கேட்க வேண்டிய அடுத்த கேள்வி. நாம் நல்லவராயிருப்பினும்,நற்செயல்கள் செய்திடினும் அது அடுத்தவர்களை அளக்கும் அளவுகோலாக மாறிவிடக்கூடாது.... இந்த எண்ணம் ஒன்றே போதும் நம்மை இறைவனுக்கு ஏற்புடையவராக்க! தவக்காலத்தை அர்த்தமுள்ளதாக்கும் ஒரு பதிவு. தந்தையை மனதார வாழ்த்துகிறேன்!!!

    ReplyDelete