நாளைய (12 மார்ச் 2018) நற்செய்தி (யோவான் 4:43-54)உம் மகன் பிழைத்துக்கொள்வான்
நாளைய நற்செய்தியில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் அரும அடையாளத்தை வாசிக்கின்றோம். அரச அலுவலரின் மகன் ஒருவன் நலம் பெறுகிறார்.
'ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்!' என்று இயேசுவை அவசரப்படுத்துகிறார் அலுவலர்.
ஒருவேளை தன் மகன் இறந்துபோய்விட்டால் இந்த போதகரால் அவருக்கு உயிர் தர முடியாதோ என்ற தயக்கம் வந்துவிட்டது அலுவலருக்கு.
'உம் மகன் பிழைத்துக்கொள்வான்' என்று சொல்லி அவரை அனுப்புகின்றார் இயேசு.
இவரும் நம்பி புறப்பட்டுச் செல்கின்றார். போகின்ற வழியிலேயே இவர்களது பணியாள்கள் வீட்டின் அந்தப்பக்கம் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இக்கால கட்டத்தில் என்றால் ஒரு ஃபோன் செய்து விசாரித்திருப்பார் அல்லது வீடியோ அழைப்பு செய்து தன் மகனைக் கண்டிருப்பார் அலுவலர்.
அவர்கள் சொன்ன செய்தி இயேசுவின் வார்த்தைகளுக்குச் சான்று பகர்வனவாக இருக்கின்றன.
இந்தச் செய்தியைக் கொண்டு வந்த பணியாளர்களுக்கு இயேசுவைப் பற்றியோ, அலுவலர் இயேசுவைக் கேட்டுக்கொண்டது பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பையனின் அருகில் அமர்ந்து காவல் காத்தவர்கள் பையனின் உடலில் நடக்கும் மாற்றங்களை அருகில் இருந்து கவனித்துக்கொண்டுதால் அவர்கள் உடனடியாக பறப்பட்டு தம் தலைவரிடம் வருகின்றனர். இங்கே அலுவலரின் நம்பிக்கை பணியாளர்களைச் சந்திப்பதில் நிறைவு பெறுகிறது. ஏனெனில் அவர்களின் சொற்களுக்குப்பின்னே அவனது நம்பிக்கை நிறைவு பெறுகிறது.
இங்கே அறிகுறி எப்படி நடக்கிறது என்றால் வார்த்தையில்தான்.
இயேசுவின் வார்த்தை செயலாக அங்கெ செல்ல நொடிப்பொழுது போதும்.
ஆனால், பணியாளர்களின் வார்த்தை அலுவலரை எட்ட ஒரு நாள் தேவைப்படுகிறது.
அவரின் வார்த்தையின் ஆற்றலே இயேசுவின் இரண்டாம் அரும் அடையாளம்.
" இயேசுவின் வார்த்தை செயலாக அங்கே செல்ல நொடிப்பொழுது போதும்; ஆனால் பணியாளர்களின் வார்த்தை அலுவலர்களை எட்ட ஒரு நாள் தேவைப்படுகிறது".... இதுதான் விண்ணுக்கும்,மண்ணுக்குமுள்ள தூரம்.இயேசு வாழ்ந்த காலம் போன்று இப்பொழுதெல்லாம் நம்மால் அருள் அடையாளங்களைப் பார்க்க இயலவில்லையே! ஏன்? எனும் கேள்வி என்னுள் அடிக்கடி எழுவதுண்டு. அப்பொழுதெல்லாம் " கண்டு விசுவசிப்பவரை விடக் காணாமல் விசுவசிப்பவரே மேலானவர்" எனும் வார்த்தைகள் அந்தக் கேள்விக்குப் பதிலாய் அமைவதுமுண்டு. "நம்புகிறவர்களை மட்டுமே இறைவனின் ஆற்றல் சென்றடைகிறது".... நம்புவோம்; அதிசயங்கள் காண்போம். வாரத்தின் முதல்நாள் நம்பிக்கையின் விதைகளைத்தூவிய தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!
ReplyDelete